சிறியோர் பெரியோருக்கெல்லாம் ஒரு முன்மாதிரி
கடவுளுடன் அவர் ஓர் இனிய, நெருங்கிய நட்பு வைத்திருந்தார். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கென்றே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் “மெய்க் கடவுளோடு நடந்தார்”; அதனால் ஆசீர்வாதமும் பெற்றார். அவர் யார் தெரியுமா? அவர்தான் நோவா. சிறியோர் பெரியோருக்கெல்லாம் அவர் ஒரு முன்மாதிரி. (ஆதி. 6:9, NW) நோவா—கடவுளோடு நடந்தார் என்ற வீடியோவை நீங்கள் பார்த்தால், அவர் எப்படி வாழ்ந்தார், அவர் ஏன் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறத் தகுதியுள்ளவராய் இருந்தார், நீங்கள் அவருடைய சிறந்த குணங்களை எப்படிப் பின்பற்றலாம் என்பதையெல்லாம் புரிந்துகொள்வீர்கள்.
நோவா வீடியோவின் டிவிடி பதிப்பில் மற்றொரு அம்சமும் உள்ளது; அதுதான், “வீடியோ வினாடிவினா.” இந்த வீடியோவைப் பாருங்கள்; பின்பு, வினாடிவினாவிற்குப் பதில் சொல்லுங்கள்: (1) சில தூதர்கள் என்ன கெட்ட காரியத்தைச் செய்தார்கள், நெஃபிலிம்கள் யார்? (ஆதி. 6:1, 2, 4) (2) ஜனங்கள் ஏன் அவ்வளவு கெட்டவர்களாக மாறினார்கள், அந்தப் பொல்லாத ஜனங்களைப் பற்றி யெகோவா தேவன் என்ன நினைத்தார்? (ஆதி. 6:4-6) (3) நோவா எப்படி வித்தியாசப்பட்டவராக இருந்தார்? (ஆதி. 6:22) (4) பொல்லாதவர்கள் எப்படி அழிக்கப்பட்டார்கள்? (ஆதி. 6:17) (5) அந்தப் பேழை எவ்வளவு பெரியது? (ஆதி. 6:15) (6) வேறு என்ன வேலையையும் நோவா செய்தார், ஜனங்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? (மத். 24:38, 39; 2 பே. 2:5) (7) ஒவ்வொரு வகையிலும் எத்தனை விலங்குகள் பேழைக்குள் இருந்தன? (ஆதி. 7:2, 3, 8, 9) (8) எத்தனை நாட்களுக்கு மழை பெய்தது, எத்தனை நாட்களுக்கு பூமி வெள்ளக்காடாக இருந்தது? (ஆதி. 7:11, 12; 8:3, 4) (9) நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஏன் தப்பிப்பிழைத்தார்கள்? (ஆதி. 6:18, 22; 7:5) (10) பேழை எங்கு தங்கியது? (ஆதி. 8:4) (11) பேழையை விட்டு வெளியே வருவதில் ஆபத்து எதுவுமில்லையென நோவா எப்படித் தெரிந்துகொண்டார்? (ஆதி. 8:6-12) (12) பேழையை விட்டு வெளியே வந்ததும் நோவா என்ன செய்தார்? (ஆதி. 8:20-22) (13) வானவில் எதற்கு அடையாளம்? (ஆதி. 9:8-16) (14) ‘கடவுளோடு நடப்பது’ என்றால் என்ன? (ஆதி. 6:9, NW, 22; 7:5) (15) பரதீஸில் நோவாவைப் பார்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (மத். 28:19, 20; 1 பே. 2:21)
யெகோவாவுக்கு உண்மையோடு, கீழ்ப்படிந்து நடந்த நோவாவைப் பற்றிய பைபிள் கதையை வீடியோவில் பார்த்த பின்பு, நீங்களும் ‘கடவுளோடு நடப்பதற்கு’ என்ன செய்ய வேண்டுமெனத் தெரிந்துகொண்டீர்கள்? நம் நாளிலும் யெகோவா தம்முடைய ஜனங்களை நிச்சயம் காப்பாற்றுவார் என்பதைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?—ஆதி. 7:1; நீதி. 10:16; எபி. 11:7; 2 பே. 2:9.