தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள் —பாரபட்சமின்றி பிரசங்கிப்பதன் மூலம்
1 வானத்தின் மத்தியில் பறக்கும் ஒரு தேவதூதன் “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” நித்திய சுவிசேஷத்தை அறிவிப்பதை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். (வெளி. 14:6) பாரபட்சமின்றி பிரசங்கிப்பதில் அந்தத் தேவதூதனின் முன்மாதிரியை நாம் பின்பற்றுகிறோமா? பாரபட்சமாக நடந்துகொள்ளும் மனப்போக்கு நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கலாம். ஜனங்களிடம் நமக்குள்ள மனப்பான்மை, நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கிக்கும் விதத்தைப் பாதிக்கலாம். எனவே, வித்தியாசப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு நாம் பிரசங்கிக்கையில் அவர்களிடம் உண்மையான அன்பையும் அக்கறையையும் காட்ட வேண்டும்.
2 உங்கள் பிராந்தியம் எத்தகையது? உங்கள் பிராந்தியத்தில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்களா? பிறமொழி பேசும் ஆட்கள் எல்லாரும் ஒரே இடத்தில் குடியேறியிருக்கிறார்களா? நீங்களாகவே முன்வந்து அத்தகையவர்களைப் போய் சந்தியுங்கள், அவர்களுக்கு வணக்கம் சொல்லுங்கள், அவர்களை நன்கு அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு என்னென்ன தேவைகள், கவலைகள், விருப்புவெறுப்புகள், பயங்கள், தப்பெண்ணங்கள் உள்ளன? அதற்கேற்ப ராஜ்ய செய்தியை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். (1 கொ. 9:19-23) அப்போஸ்தலன் பவுலைப் போல, நம் பிராந்தியத்தில் உள்ள அயல்நாட்டவர்கள், வித்தியாசப்பட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள், பிறமொழி பேசுபவர்கள், பெரும் பணக்காரர்கள் என யாராக இருந்தாலும் எல்லாரிடமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது நம்மீது விழுந்த கடமையென நினைக்க வேண்டும்.—ரோ. 1:14.
3 எனினும், பிறமொழி பேசுபவர்களிடம் நீங்கள் எப்படிச் சாட்சி கொடுக்கலாம்? சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தை நன்கு பயன்படுத்துங்கள். உங்கள் பிராந்தியத்தில் பொதுவாகப் பேசப்படும் மொழிகளில் சில துண்டுப்பிரதிகளையும் சிற்றேடுகளையும்கூட நீங்கள் எடுத்துச் செல்லலாம். (ஜூலை 2003 நம் ராஜ்ய ஊழியத்தில், பக். 8, பாரா. 2-3-ஐக் காண்க.) அதோடு, சில பிரஸ்தாபிகள் பிறமொழிகளில் வணக்கம் சொல்லவும், எளிய முறையில் நற்செய்தியைச் சொல்லவும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். தங்கள் தாய்மொழியில் பேச யாராவது ஓரளவு முயற்சி செய்யும்போது பெரும்பாலும் ஆட்கள் நெகிழ்ந்துபோகிறார்கள்; இது நற்செய்தியிடம் அவர்களைக் கவர்ந்திழுக்கலாம்.
4 யெகோவாவைப் பின்பற்றுங்கள்: பல்வேறு பின்னணியைச் சேர்ந்த ஆட்களைப் போய் சந்திக்க முயற்சி செய்யும்போது, பாரபட்சமற்ற யெகோவா தேவனை நாம் பின்பற்றுகிறோம்; ஏனெனில் அவர் ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.’—1 தீ. 2:3, 4.