புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்பட்ட ஆரம்பகால கிறிஸ்தவர்கள், நற்செய்தியை எங்கும் பரப்புவதற்குத் தங்களால் ஆன அனைத்தையும் செய்ய கடினமாய் உழைத்தார்கள். (அப். 1:8; கொலோ. 1:23) “கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்” என்ற பொருளில், 2007 ஊழிய ஆண்டில் நடக்கவிருக்கும் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி, அவர்களுடைய சிறந்த முன்மாதிரியைப் பின்பற்ற நமக்கு உதவும்.—அப். 18:5, NW.
கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் குறிப்பிடுகையில் தாவீது ராஜா இவ்வாறு சொன்னார்: “கர்த்தருடைய சாட்சி [அதாவது, நினைப்பூட்டுதல்] சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” (சங். 19:7) 2007 விசேஷ மாநாட்டு தினத்திற்காக கவனமாய் தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி, ‘சீர்திருத்தலுக்கு’ வேதவசனங்கள் எந்தளவு பயனுள்ளவையாய் இருக்கின்றன என்பதை வலியுறுத்திக் காட்டும். அதோடு, அவசர உணர்வோடு பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தவும் நம்மை ஊக்குவிக்கும். (2 தீ. 3:16, 17) நம் அன்றாட வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் நாம் எவ்வாறு இடறுகுழிகளைத் தவிர்த்து, பயனடையலாம் என்பதை இந்தப் புதிய நிகழ்ச்சி விளக்கும். அதோடு, இளைஞர்களும் புதியவர்களும் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு, கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுவதில் நமக்குத் துணைபுரியும்.
நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது அங்கிருக்க முயற்சி எடுங்கள், கூர்ந்து கவனம் செலுத்துங்கள். நீங்கள் கடைப்பிடிக்க விரும்பும் விஷயங்களைக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். பெற்றுக்கொள்ளும் அறிவுரைகளுக்கும் நினைப்பூட்டுதல்களுக்கும் போற்றுதல் காட்டுங்கள், அவற்றை எப்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம் என்பதைக் குறித்து சிந்தியுங்கள்.
இந்த விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி, கடவுளுடைய வார்த்தையிடம் நம் போற்றுதலை அதிகரிக்கச் செய்யும், பக்திவைராக்கியத்துடன் ராஜ்ய நற்செய்தியைத் தொடர்ந்து முழுமூச்சாய் பிரசங்கிக்க நமக்கு நினைப்பூட்டும், மற்றவர்களும் அதேபோல் செய்வதற்கு நாம் எப்படி உதவலாம் என காட்டும். ஆகவே, இத்தகைய மாநாடு மூலம் யெகோவா தரும் எந்த ஆன்மீக வழிநடத்துதலையும் அறிவுரைகளையும் தவறவிடாதிருக்க தீர்மானமாய் இருப்போமாக!—ஏசா. 30:20ஆ, 21.