எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?
1 இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? உண்மைதான், நாம் எல்லாரும் ராஜ்ய காரியங்களுக்கே முதலிடம் கொடுக்க விரும்புகிறோம். (மத். 6:33) எனினும், நம்மை நாமே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம், ‘என்னுடைய தெரிவுகள் ராஜ்ய காரியங்களுக்கு நான் முதலிடம் கொடுப்பதைக் காட்டுகின்றனவா?’ “நீங்கள் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்” என பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது. (2 கொ. 13:5, NW) ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமென்பதை நமக்கு நாமே எப்படி நிரூபித்துக்கொள்வது?
2 நம் நேரம்: முதலில், நமக்கிருக்கும் நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை ஆராய்ந்துபார்க்கலாம். (எபே. 5:15, 16) பார்ட்டிகளில் கலந்துகொள்வது, டிவி பார்ப்பது, இன்டர்நெட்டில் அலசுவது, விருப்பமான வேலைகளில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு எவ்வளவு நேரத்தை ஒவ்வொரு வாரமும் செலவிடுகிறோம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு நாம் செலவிடும் நேரத்தை எழுதிவைத்து, ஆன்மீக காரியங்களுக்குச் செலவிடும் நேரத்தோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தோமெனில் நமக்கே ஆச்சரியமாய் இருக்கும். ஆடம்பரமாய் வாழ்வதற்காக, பரிசுத்த சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘ஓவர்டைம்’ வேலை செய்கிறோமா? வாரக் கடைசியில் உல்லாசப் பயணத்திற்காக எத்தனை முறை கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் போகாமல் இருக்கிறோம்?
3 முன்னுரிமை கொடுங்கள்: நம்மில் பெரும்பாலோருக்கு, நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் செய்வதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. ஆகவே, ராஜ்ய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க நம் முன்னுரிமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, ‘மிக முக்கியமானவற்றுக்கு’ நேரம் ஒதுக்க வேண்டும். (பிலி. 1:10, NW) கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, ஊழியத்தில் ஈடுபடுவது, குடும்பத்தைக் கவனிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வது ஆகியவை அந்த மிக முக்கியமானவற்றில் உட்படுகின்றன. (சங். 1:1, 2; ரோ. 10:13, 14; 1 தீ. 5:8; எபி. 10:24, 25) மிதமாக உடற்பயிற்சி செய்வது, நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவையும் நன்மை தருபவைதான். (மாற். 6:31; 1 தீ. 4:8) ஆனாலும் இவையெல்லாம் அந்தளவுக்கு முக்கியமானவையாய் இல்லாதிருப்பதால் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
4 ஓர் இளைஞர் ராஜ்ய காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தார். எப்படியெனில் உயர்கல்வி கற்று, நல்ல வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக, முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தார். வேறொரு மொழியைக் கற்றார், தேவை அதிகமுள்ள பிராந்தியத்தில் சேவை செய்வதற்கு மாறிச் சென்றார். “இங்கே ரொம்ப திருப்தியாக இருக்கிறேன். ஊழியத்திற்குப் போவது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! என்னைப் போலவே ஒவ்வொரு இளைஞரும் ஊழியத்தில் ஈடுபட்டு, நான் அனுபவிக்கும் சந்தோஷத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். முழு ஆத்துமாவோடு யெகோவாவுக்குச் சேவை செய்வதில் கிடைக்கிற சந்தோஷம் வேறெதிலும் கிடைக்காது” என்று சொன்னார். ஆம், ராஜ்ய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பது நமக்குப் பலன் தருகிறது, அதைவிட முக்கியமாக, நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனின் இருதயத்தை மகிழ்விக்கிறது.—எபி. 6:10.