ஊழியத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்
1 ஊழியத்தில் இயேசு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். கடவுள் மீதும் மனிதர் மீதும் தமக்கு இருந்த அன்பை பல சந்தர்ப்பங்களில் அநேக வழிகளில் வெளிக்காட்டினார். பணிவான மக்களுக்கு சத்தியத்தைப் போதித்தார். நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் துன்ப துயரத்தில் வாடி வதங்கியவர்களிடமும் கருணை காட்டினார்.—மத். 9:35.
2 இயேசுவின் முன்மாதிரியும் போதனைகளும்: இயேசு அரசியலிலோ சமூக சேவையிலோ ஈடுபட்டு கவனத்தைச் சிதறவிடவில்லை. நல்நோக்கமுடைய எந்தவொரு வேலையும், தம்முடைய ஊழியத்திற்குத் தடையாக இருக்கும்படியோ அதை ஓரங்கட்டிவிடும்படியோ அவர் அனுமதிக்கவில்லை. (லூக். 8:1) கடவுளுடைய ராஜ்யமே மனிதர்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வளிக்க முடியும் என்ற நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் குறியாக இருந்தார். இயேசுவிடம் மகத்தான வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதைச் செய்வதற்கோ குறுகிய காலமே இருந்தது. கப்பர்நகூம் மக்கள் இன்னும் கொஞ்ச நாள் இயேசு தங்களுடன் இருக்க வேண்டுமென கேட்டபோது அவர் தம் சீஷர்களிடம், “அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன்” என்று சொன்னார்.—மாற். 1:38.
3 தம் சீஷர்களுக்குப் பயிற்சி அளித்த பிறகு இயேசு பின்வரும் குறிப்பிட்ட அறிவுரைகளை அளித்து அவர்களை அனுப்பினார்: “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.” (மத். 10:7) ராஜ்ய காரியங்களுக்கே தங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென தம் சீஷர்களுக்கு அவர் போதித்தார். (மத். 6:33) தம் சீஷர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தாம் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு தெளிவாகச் சொன்னார். அவர் சொன்னதாவது: ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.’—மத். 28:19.
4 ராஜ்யத்தின் முக்கியத்துவம்: இயேசு தம் ஊழியத்தில் முக்கியமாக கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி பேசினார். அதைப் பற்றியே பேசும்படி தம் சீஷர்களையும் உந்துவித்தார். மனிதனின் பிரச்சினைகளை மனிதனால் தீர்க்க முடியாது. (எரே. 10:23) கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தி மனிதனின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வளிக்கும். (மத். 6:9, 10) “செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற” மக்களுக்கு ராஜ்யம் பற்றிய சத்தியங்களைப் போதிப்பது, இன்று அவர்கள் சந்தோஷமாக, வெற்றிகரமாக வாழ உதவி செய்வதோடு, நிச்சயமான எதிர்கால நம்பிக்கையையும் அளிக்கும்.—எசே. 9:4.
5 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதில் இயேசு இன்றும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார், நமக்குப் பக்கபலமாக இருப்பதாகவும் உறுதியளிக்கிறார். (மத். 28:20) நாம் செய்கிற ஊழியம் எந்தளவுக்கு இயேசுவின் ஊழியத்தைப் போல் இருக்கிறது? (1 பே. 2:21) முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கடைசி நாட்களின்போது, ஊழியத்தில் இயேசு வைத்த முன்மாதிரியை நம்மால் முடிந்தளவு முழுமையாகப் பின்பற்றுவோமாக!