“எப்படி பதில் அளிப்பீர்கள்?”
1 நீங்கள் கடவுளுடைய வார்த்தையை நேசிக்கிறீர்கள், ஆனால் பைபிள் பதிவுகளைப் பற்றிய விவரங்களை அல்லது குறிப்பிட்ட விவரங்கள் எந்த வசனங்களில் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்வது கடினமாக இருக்கிறதா? உங்கள் பிள்ளைகள் பைபிளின் அடிப்படை உண்மைகளையும் போதனைகளையும் தெளிவாகக் கிரகித்துக்கொள்ள வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா? ஒவ்வொரு மாதமும் வெளிவரும் விழித்தெழு!-வில் பக்கம் 31-ல் வருகிற “எப்படி பதில் அளிப்பீர்கள்?” என்ற பகுதி, இளையோர் முதியோர் என இரு தரப்பினருக்கும் கடவுளுடைய வார்த்தையில் நன்கு பரிச்சயமாவதற்கு உதவும்.—அப். 17:11.
2 இந்தப் பகுதியை நீங்கள் எவ்வாறு நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்? ஜனவரி 2006, விழுத்தெழு! இதழ் பின்வரும் ஆலோசணைகளைக் கொடுத்தது: “31-ம் பக்கத்திற்கு சற்று உங்களுடைய பார்வையைச் செலுத்துங்கள். அந்தப் பக்கத்திலுள்ள சில பகுதிகள் சிறுவர்களுக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்; பிற பகுதிகளோ நன்கு தேர்ச்சிபெற்ற பைபிள் மாணாக்கருடைய நினைவாற்றலை தீட்டும். “சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?” என்ற பகுதி, பைபிள் கதாபாத்திரங்களில் வருபவர்கள் எப்பொழுது வாழ்ந்தார்கள், முக்கிய சம்பவங்கள் எப்பொழுது நிகழ்ந்தன என்பவற்றைக் காட்டும் கால அட்டவணையைத் தயாரிக்க உங்களுக்கு உதவும். பெரும்பாலான கேள்விகளுக்குரிய பதில்கள் அதே இதழில் வேறொரு பக்கத்தில் தலைகீழாக அச்சிடப்பட்டிருக்கும். “இந்த இதழிலிருந்து” என்ற பகுதிக்குரிய பதில்கள் இந்தப் பத்திரிகையிலேயே காணப்படும். பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சற்று ஆராய்ச்சி செய்து, கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளலாமே! குடும்பமாக அல்லது தொகுதியாக பைபிள் உரையாடல்களை நடத்துவதற்கு “எப்படி பதில் அளிப்பீர்கள்?” என்ற புதிய அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.”
3 உண்மையில், குடும்பப் படிப்புக்கு ஆதாரமாக, பெரும்பாலான குடும்பங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஒரு தாய் இவ்வாறு எழுதுகிறார்: “என்னுடைய கணவரும் நானும் குடும்பப் படிப்பை, எங்களுடைய மூன்று வயது மகளுக்கு உயிரோட்டமுள்ளதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் ஆக்குவதற்கு “பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?” என்ற பகுதியையும் சேர்த்துக்கொள்வது நல்ல யோசனையாக இருக்குமென நினைத்தோம். அவள் தன்னுடைய சொந்த விழித்தெழு! பிரதியை ஆர்வமாக எடுத்துத் தான் தேடுவதைக் கண்டுபிடிக்கும்வரை ஒவ்வொரு பக்கமாகத் திருப்புகிறதைக் கவனிக்கையில் மிகவும் சந்தோஷமாயிருக்கும்.” பிரேசிலில் இருக்கிற ஒரு தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய ஏழு வயது மகனும் நானும் விழித்தெழு!-வில் உள்ள இந்த அம்சத்தை மிகவும் விரும்புகிறோம். கவனம் செலுத்தவும் வேத வசனங்களைக் கண்டுபிடிக்கவும் படங்களை ரசிக்கவும் தேதிகளைப் புரிந்துகொள்ளவும் அது மோய்ஸெஸுக்கு உதவியிருக்கிறது.” எட்டு வயதான ஆஷ்லீ இவ்வாறு எழுதுகிறார்: “விழித்தெழு!-வின் பின்னால் உள்ள ‘எப்படி பதில் அளிப்பீர்கள்?’ அம்சத்திற்காக நன்றி. பைபிளைப்பற்றி அதிலிருந்து நிறையவே கற்றுக்கொள்கிறேன்.”
4 “எப்படி பதில் அளிப்பீர்கள்?” அம்சத்தை உங்களுடைய குடும்பப் படிப்பின் ஒரு பாகமாக எப்போதாவது, நீங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது? மிகவும் சிக்கலான சில கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிக்க நீங்கள் இன்டெக்ஸை அல்லது உவாட்ச்டவர் லைப்ரரி சிடி-ரோமைப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்கையில், எப்படி ஆராய்ச்சி செய்ய வேண்டுமென உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பீர்கள். பெரிய பிள்ளைகள் உங்களுக்கு இருந்தால், குடும்பப் படிப்பிற்கு முன்னால், “நான் யார்?” “சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?” போன்றவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடிக்கும் சவாலை ஏன் அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது? படிக்கும்போது, அவர்களுடைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்தவற்றைச் சொல்லலாம். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதிக்க இந்தப் பக்கத்தைத் திறமையாகப் பயன்படுத்துவது ஒரு வழியாகும்; இதன்மூலம் சிறுவயது முதல் “பரிசுத்த வேத எழுத்துக்களை” அறிந்துகொள்ள உதவுகிறார்கள்.—2 தீ. 3:15; உபா. 6:7.
[கேள்விகள்]
1. நம்மில் அநேகர் என்ன சவால்களைச் சந்திக்கிறோம்?
2. “எப்படி பதில் அளிப்பீர்கள்?” அம்சத்தின் பல்வேறு பகுதிகளை எவ்வாறு பயன்படுத்த முடியும்?
3. பல குடும்பங்கள் இந்த அம்சத்திலிருந்து எவ்வாறு பயனடைந்திருக்கின்றன, எந்தப் பகுதியை நீங்கள் அதிகமாக விரும்புகிறீர்கள்?
4. குடும்பங்கள், இந்த அம்சத்தைத் தங்களுடைய குடும்பப் படிப்பின் ஒரு பாகமாக எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம்?