இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
1 சீஷராக்கும் வேலையில் நாம் பங்குகொள்ளும்போது நம் முன்மாதிரி நம்மை கவனிப்பவர்களைப் பெருமளவு பாதிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இயேசு சொல்லாலும் செயலாலும் போதித்தார். அவரைக் கவனித்தவர்கள் அவருடைய பக்திவைராக்கியத்தையும், ஜனங்களிடம் அவர் காட்டிய அன்பையும், தம்முடைய பிதாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் அவர் ஆர்வத்தோடு கவனத்தை ஒருமுகப்படுத்தியதையும், தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அவருக்கிருந்த உறுதியையும் பார்த்தார்கள்.—1 பே. 2:21.
2 வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது: இயேசுவின் விஷயத்தில் இருந்ததைப்போலவே, நம் முன்மாதிரி நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்கிறவர்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் நாம் பங்குகொள்வதை புதிய பிரஸ்தாபிகளும் அதிக அனுபவமில்லாத பிரஸ்தாபிகளும் பார்க்கும்போது தங்களுடைய ஊழியத்தின் தரத்தை எண்ணிப்பார்ப்பார்கள். நம் சந்தோஷத்தையும் மற்றவர்களிடம் நாம் காட்டும் உண்மையான அக்கறையையும் அவர்கள் கவனிக்கும்போது தாங்களும் ஊழியத்தில் அத்தகைய குணங்களை வெளிக்காட்டுவது எந்தளவு முக்கியமென நினைப்பூட்டப்படுவார்கள். பைபிள் வசனங்களை ஊக்கமாய் நாம் பயன்படுத்துவதையும் மறுசந்திப்பு செய்வதையும் பைபிள் படிப்புகளை நடத்துவதையும் அவர்கள் கவனிக்கும்போது அவர்களும் அவற்றையே செய்ய தூண்டுதல் பெறுவார்கள்.
3 பைபிள் படிப்புகளை நடத்தும்போது: பைபிள் மாணாக்கர்கள் நம்முடைய நடத்தையை முக்கியமாய் கவனிப்பார்கள். உதாரணத்திற்கு, வசனங்களை பைபிளைத் திறந்து பார்ப்பது, முக்கியக் குறிப்புகளைக் கோடிடுவது போன்று படிப்புக்குத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நாம் விளக்கினாலும்கூட, நாம் அப்படி தயாரித்திருக்கிறோமா என்று கவனிப்பார்கள். (ரோ. 2:21) அவர்களோடு படிப்பதற்கு ஒதுக்கியுள்ள நேரத்திற்குத் தாமதிக்காமல் நாம் போனால், முடிந்தவரை பைபிள் படிப்பின்போது மற்ற வேலைகள் குறுக்கிடாதபடி அவர்களும் பார்த்துக்கொள்வார்கள். ஊழியத்திற்காக நாம் தியாகங்கள் செய்ய தயாராயிருப்பதையும், விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதையும்கூட அவர்கள் கவனிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இயேசுவின் முன்மாதிரியை முடிந்தவரை பின்பற்ற முயற்சி செய்கிறவர்களிடம் பைபிள் படிக்கிற மாணாக்கர்கள், பொதுவாகவே ஊக்கமாகவும் பயன்தரும் விதத்திலும் பிரசங்கிப்பவர்களாய் ஆகியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
4 கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது: சபை கூட்டங்களில் தங்கள் முன்மாதிரியின்மூலம் போதிக்கிற பொறுப்பும்கூட, கிறிஸ்தவ சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாயிருப்போர் கூட்டங்களுக்கு வர ஆரம்பிக்கையில், அங்கிருப்பவர்களின் நல்ல முன்மாதிரியைப் பார்த்துப் பயன் அடைகிறார்கள். சகோதரர்கள் மத்தியில் நிலவும் அன்பையும், கிறிஸ்தவ ஐக்கியத்தையும், அடக்கமான ஆடை அலங்காரத்தையும் தோற்றத்தையும் அவர்கள் கவனிப்பார்கள். (சங். 133:1) சபை கூட்டங்களுக்கு நாம் தவறாமல் வருவதையும் பதில் சொல்வதன்மூலம் நம் விசுவாசத்தை வாயினால் அறிக்கையிடுவதையும் அவர்கள் கவனிப்பார்கள். நம்முடைய கூட்டங்களுக்கு புதிதாக வந்த நபர், சிறுமி ஒருத்தி பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வசனத்தைப் பார்க்க சட்டென தன்னுடைய பைபிளைத் திருப்பியதையும், அந்த வசனம் வாசிக்கப்பட்டபோது கூர்ந்து கவனித்ததையும் பார்த்தார். அவளுடைய முன்மாதிரி அந்தளவு அவரைக் கவர்ந்ததால், தனக்கும் பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.
5 ஒவ்வொருவரும் வைக்கிற நல்ல முன்மாதிரியைப் பார்த்து பின்பற்றும்படி நம்மை பைபிள் ஊக்கப்படுத்துகிறது. (பிலி. 3:17; எபி. 13:7) எனவே, இயேசுவின் முன்மாதிரியை முடிந்தவரை நாம் பின்பற்றினால் அதை மற்றவர்கள் கவனிப்பார்கள்; அதனால் அவர்களும் சாதகமான விதத்தில் செயல்பட தூண்டப்படலாம் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். இதை உணர்ந்தவர்களாக, “உன்னைக் குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு” என 1 தீமோத்தேயு 4:16-ல் காணப்படுகிற வார்த்தைகளை இருதயத்தில் வைப்போமாக.
[கேள்விகள்]
1. இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
2. நம் முன்மாதிரி நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்கிறவர்கள்மீது என்னென்ன வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்?
3. நம் முன்மாதிரி பைபிள் மாணாக்கர்களுக்கு எப்படிப் போதிக்கலாம், அவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
4. சபை கூட்டங்களில் நாம் கலந்துகொள்ளும்போது நம் முன்மாதிரி என்ன கற்பிக்கிறது?
5. நம்முடைய முன்மாதிரியின் மதிப்பை நாம் ஏன் குறைவாய் எடைபோட்டுவிடக் கூடாது?