“எதிரிகளை கண்டு துளியும் பயப்படாமல் இருக்கிறீர்கள்”
1 பிலிப்பியர் 1:28–ல் (NW) காணப்படும் இந்த வார்த்தைகளை பவுல் எழுதுகையில், பிலிப்பி பட்டணத்தில் சந்தித்த எதிர்ப்பு அவருடைய நினைவுக்கு வந்திருக்கலாம். (அப். 16:19–24) எனினும், எதிரிகளுக்குப் பயந்துகொண்டு அவர் நற்செய்தியை மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்துவிடவில்லை. அவருடைய முன்மாதிரி இன்று நமக்கு உதவும்.
2 ஊழியத்தின்போது கலக கும்பல் நம்மை சூழ்ந்துகொண்டால் என்ன செய்ய வேண்டும்? எதிர்ப்பவர்கள் நம்மை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றால் என்ன செய்ய வேண்டும்? வேறுபட்ட இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் நமக்கு உதவும் சில பைபிள் நியமங்களை இப்போது பார்க்கலாம்.
3 கலக கும்பல் சூழ்ந்துகொள்கையில்: முடிந்தவரை கும்பல் சேர்வதற்கு முன்பு அந்தப் பகுதியை விட்டு வெளியேற முயற்சி செய்யுங்கள். (அப். 14:6) உங்களைப் போக விடாமல் தடுத்தால் மொபைல் ஃபோனில் போலீஸாரைத் தொடர்புகொள்ளுங்கள். நெகேமியாவைப் போல் யெகோவாவிடம் உடனடியாக ஜெபம் செய்யுங்கள். (நெ. 2:4) அந்தக் கும்பலிடமோ அதன் தலைவரிடமோ சமாதானமாகப் பேசி, அவர்களுக்கும் கடவுள் பக்தி இருப்பதை ஒத்துக்கொண்டு, சூழ்நிலையை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஒரு சமயம் வன்முறைமிக்க கும்பலிடம் பவுல் மாட்டிக்கொண்டபோது இதைத்தான் செய்தார்.—அப். 21:27–22:30.
4 உங்களைப் பயமுறுத்தினாலோ அடித்தாலோ என்ன செய்வீர்கள்? தற்காப்பு முறைகளைக் கையாளுவது சரியா? இது அவரவருடைய சொந்த விருப்பம். “குழப்பம் நிறைந்த உலகில் குற்றச்செயல்களைச் சமாளித்தல்” (மே 1, 1991, [ஆங்கிலம்] காவற்கோபுரம் பக்கங்கள் 4-7), “தற்காப்பை நான் கற்றுக்கொள்ள வேண்டுமா?” (செப்டம்பர் 22, 1995, விழித்தெழு! பக்கங்கள் 12-14) போன்ற கட்டுரைகளில் இது சம்பந்தமாக உங்களுக்கு உதவும் பைபிள் நியமங்களைக் காண்பீர்கள். இந்தக் கட்டுரைகளை நீங்கள் ஏன் முன்னதாகவே படித்துப் பார்க்கக்கூடாது?
5 காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கையில்: உங்களுடைய மத நம்பிக்கைகளை மற்றவர்களிடம் அமைதியாகப் பகிர்ந்துகொள்வதால் நீங்கள் சட்டத்தை மீறுவதில்லை. இது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிற சட்டப்பூர்வ உரிமை. போலீஸார் உங்களிடம் ஊழியத்தைப்பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் மரியாதையோடு அவர்களுக்குப் பதில் சொல்லுங்கள். அதோடு, பைபிள் விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வதற்கு சம்பளம் எதுவும் நமக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பதையும் விளக்குங்கள். பொருளையோ பணத்தையோ கொடுத்து நாம் மற்றவர்களை மதம் மாற்றுவதில்லை என்பதையும் விளக்குங்கள்.
6 போலீஸார் நம்மை மோசமாக நடத்தினால் நமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருப்பதை சாதுரியமாக சொல்லுங்கள். தேவைப்பட்டால் அவர்களுடைய உயர் அதிகாரிகளிடம் முறையிடுங்கள். (ரோ. 13:3, 4; பிர. 5:8) யெகோவா உங்களுடன் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பதட்டப்படாதிருங்கள்.—லூக். 12:11, 12.
7 போலீஸார் உங்களை எதிலாவது கையெழுத்திட சொன்னால் அதிலுள்ள தகவல் முழுவதையும் கவனமாக வாசித்துவிட்டு அது சரியாக இருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள். ‘என்னுடைய மத நம்பிக்கைகளைப்பற்றி இனிமேல் யாரிடமும் பேசமாட்டேன்’ என்பதுபோல் ஓர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் கையெழுத்துப் போடாதீர்கள். உங்கள்மீது குற்றம் பதிவு செய்யப்பட்டால், நீங்கள் என்ன தவறு செய்ததாக சொல்லப்படுகிறது என்றும் சட்டத்தில் எந்தப் பிரிவின்கீழ் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். எதிர்ப்பவர்கள் உங்களை மோசமாக நடத்தினால் அவர்களைப் பற்றி புகார் கொடுக்க உங்களுக்கு உரிமை இருப்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லுங்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டிருந்தால் மருத்துவரிடமோ மருத்துவமனைக்கோ அழைத்துச் சொல்லும்படி போலீஸாரை வற்புறுத்துங்கள்.
8 யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்: நம்மை அதிகாரிகள் முன் கொண்டுபோய் நிறுத்தலாம் அல்லது நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள். (மத். 10:17, 18) எதிர்ப்பை சந்தித்தால் பயந்துவிடாதீர்கள், உங்கள் ஜெபத்தை யெகோவா கேட்பார் என்ற நம்பிக்கையோடு பலத்திற்காக அவரிடம் ஜெபம் செய்யுங்கள். அதோடு, ‘எல்லாப் பக்தியோடும் . . . கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணுவதற்கு’ அதிகாரிகள் நம்மை அனுமதிக்கவும் ஜெபம் செய்யுங்கள். (1 தீ. 2:1, 2) ஊழியத்தில் நாம் யெகோவாவைப் பற்றி தொடர்ந்து பேசி வருகையில் எதிர்ப்பை சந்தித்தால் யெகோவா நமக்குப் பலத்தை தருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.