பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் புதிய கட்டுரை
1. பொதுமக்களுக்குக் கொடுக்கும் காவற்கோபுர பத்திரிகையில் என்ன புதிய கட்டுரை வெளிவர உள்ளது, இது எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது?
1 பொதுமக்களுக்குக் கொடுக்கும் காவற்கோபுர பத்திரிகையில் பைபிள் படிப்பை ஆரம்பிக்க உதவியாய் இருக்கும் புதிய கட்டுரை அடுத்த மாதம் முதல் வெளிவர உள்ளது. அதன் தலைப்பு: “பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.” இந்தத் தலைப்பில் தொடர்ந்து வெளிவர உள்ள கட்டுரையை நம் பிராந்தியத்திலுள்ள சிலர் விரும்பிப் படிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை; என்றாலும், வீட்டுக்காரருடன் கலந்துபேசுவதற்கு உதவும் விதத்தில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. இந்தக் கட்டுரையின் சில சிறப்பம்சங்கள் யாவை?
2 சிறப்பம்சங்கள்: இந்தக் கட்டுரையின் தலைப்பும் உபதலைப்புகளும் கேள்வி வடிவில் உள்ளன; எனவே, கலந்துபேசுகையில் அந்தக் கேள்விகளை வீட்டுக்காரரிடம் நாம் கேட்கலாம். வீட்டுக்காரர் பைபிளிலிருந்து நேரடியாக எடுத்து வாசிப்பதற்காக, முக்கிய வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாராக்கள் சிறியவையாக இருப்பதால் கதவருகில் நின்றுகொண்டே அவற்றை வீட்டுக்காரரோடு கலந்துபேசலாம். ஒவ்வொரு கட்டுரையும் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடுவதால் தேவைப்படும்போது அந்தப் புத்தகத்திலிருந்தே படிப்பைத் தொடரலாம்.
3. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இந்தக் கட்டுரையைப் பயன்படுத்தி நாம் எப்படி கதவருகில் நின்றுகொண்டே பைபிள் படிப்பு நடத்தலாம்?
3 எப்படிப் பயன்படுத்துவது: பொதுமக்களுக்கான காவற்கோபுர பத்திரிகையில் “பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகள் இருக்கும். பத்திரிகையைக் கொடுக்கும்போது ஒரு கட்டுரையிலிருந்து ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு, ஜூலை-செப்டம்பர் தேதியிட்ட பத்திரிகையில் வருகிற முதல் கட்டுரை, பைபிள் எந்தளவு மதிப்புமிக்கது என்பதை விளக்குகிறது. நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “உங்களைப் பொறுத்தவரை பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது ஒரு நல்ல புத்தகம் மட்டும்தானா, என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] இது சம்பந்தமான விளக்கத்தை அளிக்கும் ஓர் அருமையான கட்டுரை என்னிடம் இருக்கிறது.” முதல் கேள்வியைக் காட்டி, முதல் பாராவை வாசித்து, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனத்தை எடுத்துக் காட்டுங்கள். அந்தக் கேள்வியை மறுபடியும் வாசித்துவிட்டு, வீட்டுக்காரரின் கருத்தைக் கேளுங்கள். கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் எத்தனை கேள்விகளைச் சிந்திக்க முடியுமோ அத்தனை கேள்விகளைச் சிந்தியுங்கள். புறப்படுவதற்கு முன்பு, அடுத்த கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த முறை வந்து அதைப் பற்றிப் பேசுவதாகச் சொல்லுங்கள். ஒவ்வொரு வாரமும் போய் அந்தக் கட்டுரையிலுள்ள மற்ற கேள்விகளைச் சிந்தியுங்கள். அந்தக் கட்டுரையை முடித்த பின்பு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பைத் தொடங்கும்வரை அடுத்து வருகிற கட்டுரைகளைச் சிந்திக்கலாம். இல்லாவிட்டால், ஆர்வம் காட்டும் வீட்டுக்காரரை நேரடியாகவே அணுகி, பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள். பிறகு, இந்தக் கட்டுரையைப் பயன்படுத்தி படிப்பு நடத்தும் விதத்தைச் செய்து காட்டுங்கள்.
4. மறுசந்திப்பில் நாம் எப்படி இந்தக் கட்டுரையைப் பயன்படுத்தலாம்?
4 பத்திரிகை மார்க்கத்திலும் மறுசந்திப்புகளிலும்கூட இந்தப் புதிய கட்டுரையை நீங்கள் திறம்பட பயன்படுத்தலாம். நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “காவற்கோபுர பத்திரிகையில் இப்போது ஒரு புதிய கட்டுரை வெளிவர தொடங்கியுள்ளது. இதை எப்படிப் படிக்கலாமென உங்களுக்குக் காட்டுகிறேன்.” தொடர்ந்து வெளிவர உள்ள இந்தப் புதிய கட்டுரையிலிருந்து இன்னும் அநேகர், “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை” பெறுவார்கள் என உறுதியாய் நம்புகிறோம்.—1 தீ. 2:4.