நீங்களும் போதகர் ஆகலாம்!
1 ஊழியத்தில் அதிக திருப்தி தரும் அம்சங்களில் ஒன்று, ஒருவருக்கு சத்தியத்தைக் கற்பிப்பதாகும். அவர் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பதும், உன்னதப் பேரரசரிடம் நெருங்கி வர அவருக்கு உதவுவதும் மறக்க முடியாத அனுபவம். (யாக். 4:8, NW) சத்தியத்திற்காக ஏங்கித் தவிக்கிற ஒருவருக்கு அதைக் கற்பிப்பதும், அவர் தன்னுடைய குணங்களையும் எண்ணங்களையும் நடத்தையையும் அடியோடு மாற்றிக்கொள்வதைக் கவனிப்பதும் ஒவ்வொரு ராஜ்ய பிரஸ்தாபியின் இலட்சியமாய் இருக்க வேண்டும்.—மத். 28:19, 20.
2 யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள்: பூர்வ காலங்களில் உண்மை ஊழியர்கள், கடவுள் தங்களிடம் ஒப்படைத்த வேலையைச் செய்ய தங்களுக்குத் தகுதியில்லாததைப் போல் உணர்ந்தார்கள். மோசே, எரேமியா, ஆமோஸ் போன்ற சாமானியர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்ததால், சந்தேகங்களையோ பாதுகாப்பற்ற உணர்வையோ களைந்துவிட்டு, முக்கியமான வேலையைச் செய்ய முடிந்தது. (யாத். 4:10–12; எரே. 1:6, 7; ஆமோ. 7:14, 15) அப்போஸ்தலன் பவுலும் ‘தைரியம் பெற்றார்,’ அதாவது, சொல்லர்த்தமாக ‘துணிவுடன் பேசுகிறவரானார்.’ எப்படி? “தேவனுக்குள்,” அதாவது, கடவுளிடமிருந்து அத்தகைய தைரியத்தைப் பெற்றதாக அவரே சொன்னார். (1 தெ. 2:2, NW அடிக்குறிப்பு) ஆம், பலன் தரும் பைபிள் படிப்புகளை நடத்துவதற்குத் தேவையான உதவியையும் ஞானத்தையும் பலத்தையும் யெகோவா தருவாரென நாம் எல்லாரும் நம்பிக்கையாக இருக்கலாம்.—ஏசா. 41:10; 1 கொ. 1:26, 27; 1 பே. 4:11.
3 பயிற்சியை ஏற்றுக்கொள்ளுங்கள்: நம்முடைய மகத்தான போதகரான யெகோவா தேவன் தொடர்ந்து நமக்கு பைபிள் கல்வி புகட்டுவதன் மூலம் பயிற்சி அளித்து வருகிறார்; இவ்வாறு, போதகர்களாக நாம் முழுமையாய் தேர்ச்சி பெறுவதற்கு உதவுகிறார். (ஏசா. 54:13, NW; 2 தீ. 3:16, 17) பைபிளை சரியாகப் புரிந்துகொள்வதற்கும் அதன் சத்தியங்களைக் கற்பிப்பதில் திறம்பட்டு விளங்குவதற்கும் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இந்தப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதுவே தேவராஜ்ய ஊழியப் பள்ளி மற்றும் ஊழியக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாய் இருந்தாலும், எல்லா சபை கூட்டங்களுமே கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்க நமக்குப் பயிற்சி அளிக்கின்றன.
4 கடினமான பைபிள் சத்தியங்களைக்கூட எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் கற்பிக்க அதிக முயற்சி எடுங்கள். “மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு முன்பு பேசப்போகும் பொருளை முதலில் நீங்கள் தெளிவாக புரிந்திருக்க வேண்டும்” என்று ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 227-ல் குறிப்பிடுகிறது. கூட்டங்களில் பதில் சொல்வது, முக்கியக் குறிப்புகளை நினைவில் வைத்து, தக்க சமயத்தில் அவற்றைப் பயன்படுத்த நமக்கு உதவுகிறது. எனவே, நன்கு தயாரித்து வாருங்கள்; அப்போது, உங்களாலும் கற்பிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உங்களுக்குள் துளிர்க்கும்.
5 கிறிஸ்தவர்கள் ஊழியம் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள். (லூக். 10:1) முடிந்தால், பயனியர்கள், மூப்பர்கள், பயணக் கண்காணிகள் உட்பட அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகளுடன் பைபிள் படிப்புகளுக்குச் செல்லுங்கள். பைபிள் சத்தியங்களை விளக்க, நம்முடைய பிரசுரங்களில் காணப்படும் எளிய உதாரணங்களையும் வேறு உபகரணங்களையும் அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இன்னும் நன்கு போதிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாமென அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். (நீதி. 1:5; 27:17) உங்கள் சகோதர சகோதரிகள் அளிக்கும் இத்தகைய பயிற்சிக்கு நன்றியுள்ளவர்களாய் இருங்கள்; ஏனெனில், யெகோவாவே உங்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.—2 கொ. 3:5.
6 யெகோவாமீது நம்பிக்கை வைத்து, அவர் அளிக்கும் பயிற்சியிலிருந்து பயன் அடையுங்கள். முன்னேற்றம் செய்வதற்காக எப்போதும் ஜெபம் செய்யுங்கள். (சங். 25:4, 5) உங்களைப் போலவே, கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவராய் ஆக மற்றவர்களுக்கு உதவுகையில் நீங்களும் ஆனந்தம் அடைவீர்கள்.
[கேள்விகள்]
1. ஒவ்வொரு ராஜ்ய பிரஸ்தாபிக்கும் என்ன அருமையான வாய்ப்பு இருக்கிறது?
2. சிலர் ஏன் பைபிள் படிப்பு நடத்தத் தயங்குகிறார்கள், இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க எது அவர்களுக்கு உதவும்?
3, 4. கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதில் நமக்கு என்ன பயிற்சி கிடைக்கிறது?
5. போதகர்களாக முன்னேற சபையில் வேறு என்ன பயிற்சியையும் நாம் பெறுகிறோம்?
6. கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவராய் ஆவதற்கு முக்கியமாய் என்ன செய்ய வேண்டும்?