பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கென்றே ஒரு தினம்
1 பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கென்றே மாதத்தில் ஏதாவதொரு வாரக் கடைசியில், ஒருவேளை முதல் வாரக் கடைசியில், ஒரு நாள் ஒதுக்கப்படும்; வருகிற ஜனவரியிலிருந்து இது நடைமுறைக்கு வரும். சபையிலுள்ள பிரஸ்தாபிகளின் சௌகரியத்தைப் பொறுத்து, சனி அல்லது ஞாயிறு தினம் இதற்காக ஒதுக்கப்படும். அந்தத் தினத்தில் பைபிள் படிப்புக்கு வீட்டுக்காரர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ புதிய பத்திரிகைகளையோ பிரஸ்தாபிகள் அவர்களுக்கு அளிக்கலாம். ஊழியத்தின் இந்த அம்சத்தில் எல்லா மூப்பர்களும் உதவி ஊழியர்களும் முழுமையாக ஈடுபட வேண்டும்; அதோடு, பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கப் பிரஸ்தாபிகளுக்கு உதவ வேண்டும்.
2 இதற்காக எந்த வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கலாம் என்று சபையின் ஊழியக் குழு தீர்மானிக்க வேண்டும். அந்த நாளில் வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது மற்றும் மறுசந்திப்பின்போது பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு விசேஷ முயற்சி எடுப்பதற்காகவும், அதற்கு முன்கூட்டியே தயாரிப்பதற்காகவும் அவ்வப்போது பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்பட வேண்டும்.
3 எப்படித் தயாரிப்பது: பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை ஜனவரி 2006 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலும், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் 12-வது பக்கத்திலும் நாம் பார்க்கலாம். உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பிக்க சிலர் விரும்பலாம். அதோடு, பத்திரிகையைப் பெற்றுக்கொண்டவர்களை மறுபடியும் சந்திக்கும்போது பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகள் ஆகஸ்ட் 2007 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தின் 3-வது பக்கத்தில் உள்ளன. வெளி ஊழியக் கூட்டத்தை மூப்பரோ உதவி ஊழியரோ 10 நிமிடம்முதல் 15 நிமிடம்வரை சுருக்கமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்; பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு ஓரிரு நடைமுறை ஆலோசனைகள் அப்போது கலந்தாலோசிக்கப்படும் அல்லது நடித்துக் காட்டப்படும். விவேகத்தோடும் பகுத்துணர்வோடும் வெளி ஊழியத்தில் ஈடுபடுவது சம்பந்தமாக, சமீபத்திய நம் ராஜ்ய ஊழிய இதழ்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.
4 உண்மைதான், நாம் சந்திக்கிற எல்லாரும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள், அல்லது நீண்ட காலத்திற்கு பைபிள் படிப்பைத் தொடர மாட்டார்கள். அதற்காக, பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க நம் பங்கில் முயற்சி செய்யாமல் இருந்துவிடக் கூடாது; ஏனென்றால், செம்மறியாடு போன்ற ஆட்களைத் தம்முடைய அமைப்பிற்குள் இழுத்துக்கொள்வது யெகோவாவே. (யோவா. 6:44 ) சத்திய விதைகளை விதைப்பது மட்டுமல்லாமல் அந்த விதை வேர்பிடித்தபின் நீர் பாய்ச்சி அதை வளர்ப்பதும் நம்முடைய பொறுப்பாக இருக்கிறது. அவ்வாறு வளர்ப்பதில், நல்மனமுள்ளவர்களோடு பைபிளைப் படிப்பதும் உட்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம், கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிற பாக்கியத்தை நாம் நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொள்கிறோம்.—1 கொ. 3:9.