ஊழியத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருங்கள்
1. இன்னொருவரோடு சேர்ந்து ஊழியம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
1 ஒரு சமயம், இயேசு தமது 70 சீடர்களை “இரண்டிரண்டு பேராக” ஊழியத்திற்கு அனுப்பினார். (லூக். 10:1) ஏன் அவ்வாறு அனுப்பினார்? ஊழியத்தின்போது ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பதற்கும் ஊக்கமளிப்பதற்குமே. அப்படியானால், இன்னொருவரோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது நாம் எப்படி அவருக்கு ஒத்தாசையாக இருக்கலாம்?
2. நம்மோடு ஊழியம் செய்கிறவர் ஒரு வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது நாம் எப்படிக் கவனித்துக் கேட்க வேண்டும், ஏன்?
2 கவனித்துக் கேட்பதன் மூலம்: உங்களோடு ஊழியம் செய்கிறவர் ஒரு வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது அதைக் கவனித்துக் கேளுங்கள். (யாக். 1:19) அவர் ஒரு வசனத்தை வாசிக்கும்போது உங்கள் பைபிளில் எடுத்துப் பாருங்கள். அவர் பேசினாலும் சரி வீட்டுக்காரர் பேசினாலும் சரி, பேசுபவர்மீதே உங்கள் கண்கள் இருக்கட்டும். உரையாடலை நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், வீட்டுக்காரரும் கூர்ந்து கவனிக்கத் தூண்டப்படுவார்.
3. வீட்டுக்காரரிடம் இன்னொரு பிரஸ்தாபி பேசிக்கொண்டிருக்கும்போது நாம் எப்போது பேசுவது சரியானது?
3 சூழ்நிலை அறிந்து பேசுவதன் மூலம்: நாமும் இன்னொரு பிரஸ்தாபியும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் அவர் பேசும்போது தொடர்ந்து அவரையே பேச விடுவதன் மூலம் நாம் அவருக்கு மதிப்புக் காட்டுகிறோம். (ரோ. 12:10) இடையிடையே குறுக்கிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேற்கொண்டு பேச முடியாமல் அவர் திணறும்போது, அல்லது வீட்டுக்காரர் எதிர்ப்புத் தெரிவித்தாலோ கேள்வி கேட்டாலோ பதில் சொல்லத் தெரியாமல் திண்டாடும்போது, அவர் நம்மிடம் உதவி கேட்டாரென்றால், அவர் பேசிக்கொண்டிருந்த குறிப்பின் பேரிலேயே உரையாடலைத் தொடர வேண்டும்; வேறொரு விஷயத்தைப் பேச ஆரம்பிக்கக் கூடாது. (நீதி. 16:23; பிர. 3:1, 7) அப்படி அவர் உதவி கேட்கும்போது, பேசப்பட்ட விஷயத்தின் பேரில் கூடுதலான குறிப்புகளைச் சொல்லித் தெளிவாகச் சாட்சி கொடுக்க வேண்டும்.—1 கொ. 14:8.
4. ஊழியத்தில் சந்தோஷமும் வெற்றியும் காண நாம் என்ன செய்யலாம்?
4 இரண்டிரண்டு பேராக ஊழியம் செய்த அந்த 70 சீடர்களும் ‘சந்தோஷத்தோடு திரும்பி வந்தார்கள்.’ (லூக். 10:17) நம்மோடு ஊழியம் செய்பவர் வீட்டுக்காரரிடம் பேசும்போது, நாம் கவனித்துக் கேட்டோமென்றால், சூழ்நிலை அறிந்து பேசினோமென்றால், அந்தச் சீடர்களைப் போலவே நாமும் ஊழியத்தில் சந்தோஷமும் வெற்றியும் காண்போம்.