மாவட்ட மாநாடுகள்—சத்தியத்திற்கு வலிமைமிக்க அத்தாட்சிகள்!
1. பண்டிகை சமயங்களில் இஸ்ரவேலர் என்ன முக்கியமான ஆன்மீகச் சத்தியங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தார்கள், கலந்துபேசினார்கள்?
1 பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகப் பூர்வ இஸ்ரவேலர் வருடத்திற்கு மூன்று முறை எருசலேமில் கூடிவந்தார்கள். ஆண்கள் மட்டுமே அவற்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்தபோதிலும், அநேகர் குடும்பம் குடும்பமாக அங்கு பயணித்தார்கள். (உபா. 16:15, 16) அச்சமயங்களில், முக்கியமான ஆன்மீகச் சத்தியங்களைப் பற்றி அவர்கள் ஆழ்ந்து சிந்தித்தார்கள், கலந்துபேசினார்கள். அந்தச் சத்தியங்களில் சில யாவை? யெகோவா தாராள குணம் படைத்தவர், அன்புக் கொடையாளர், அருமையாக வழிநடத்துபவர், கண்மணிபோல் பாதுகாப்பவர் போன்ற சத்தியங்களாகும். (உபா. 15:4, 5; 32:9, 10) இஸ்ரவேலர் யெகோவாவின் பெயரைத் தாங்கிய மக்கள் என்பதால், அவருடைய நீதிநெறிகளை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டுமென அந்தப் பண்டிகை சமயங்களில் நினைப்பூட்டப்பட்டார்கள். (உபா. 7:6, 11) இன்று நம்முடைய வருடாந்தர மாவட்ட மாநாட்டு சமயங்களிலும் அவ்வாறே நாம் நினைப்பூட்டப்படுகிறோம்.
2. மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிகள் சத்தியத்தை எப்படித் தெளிவாக விளக்குகின்றன?
2 மாநாட்டு நிகழ்ச்சிகள் சத்தியத்தைத் தெளிவாக்குகின்றன: முக்கியமான பைபிள் சத்தியங்களைத் தெளிவாக விளக்குகிற பேச்சுகள், நாடகங்கள், நடிப்புகள், பேட்டிகள் ஆகியவை மாவட்ட மாநாடுகளில் இடம்பெறுகின்றன; அவற்றை நாம் கண்டு, கேட்டு மகிழ்கிறோம். (யோவா. 17:17) வரவிருக்கும் மாநாட்டிற்காக ஏற்கெனவே நிறைய வேலைகள் செய்யப்பட்டுவிட்டன. உலகளவில் உள்ள தேவைகளை அடிப்படையாக வைத்து யெகோவாவின் அமைப்பு அந்த நிகழ்ச்சியைத் தயாரித்திருக்கிறது. (மத். 24:45-47) அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க, பேச்சுகளைக் கேட்க ஆர்வமாக இருக்கிறீர்களா?
3. நிகழ்ச்சியிலிருந்து நன்மை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
3 மூன்று நாட்களுமே மாநாட்டில் கலந்துகொண்டு கூர்ந்த கவனம் செலுத்தினால்தான் நாம் முழு நன்மை அடைவோம். வேலையிலிருந்து விடுப்பு எடுப்பது பற்றி நீங்கள் இன்னும் உங்கள் முதலாளியிடம் பேசவில்லை என்றால், இப்போதே பேசுங்கள். மாநாட்டுச் சமயத்தில் இரவு நன்கு தூங்கி ஓய்வெடுங்கள், அப்போதுதான் மறுநாள் நிகழ்ச்சியின்போது விழிப்பாய் இருக்க முடியும். நன்கு கவனம் செலுத்துவதற்கு பேச்சாளரையே பார்ப்பதும் சுருக்கமான குறிப்புகளை எடுப்பதும் உதவுகிறதென அநேகர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். உங்கள் செல்போன் அல்லது பேஜர் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ இடைஞ்சலாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நிகழ்ச்சியின்போது பேசாதீர்கள், மெசேஜ் அனுப்பாதீர்கள், சாப்பிடாதீர்கள், குடிக்காதீர்கள்.
4. மாநாட்டிலிருந்து நன்மை அடைய பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் எப்படி உதவலாம்?
4 ஓய்வு வருடங்களில், கூடாரப் பண்டிகை சமயத்தின்போது திருச்சட்டம் வாசிக்கப்படுவதைக் கேட்பதற்காக இஸ்ரவேலர் குடும்பமாக, தங்கள் ‘பிள்ளைகளோடு’ ஒன்றுகூடினார்கள்; பிள்ளைகள் ‘கேட்டு, கற்றுக்கொள்ள’ வேண்டும் என்பதற்காக அவ்வாறு ஒன்றுகூடினார்கள். (உபா. 31:12) மாநாடுகளில் எல்லாரும் குடும்பம் குடும்பமாக உட்கார்ந்திருப்பதையும், பிள்ளைகள் தூங்காமல் கூர்ந்த கவனம் செலுத்துவதையும் பார்ப்பது எவ்வளவாய் ஊக்கமூட்டுகிறது! நீங்கள் மிகவும் ரசித்த விஷயங்களை, எழுதிய குறிப்புகளை அன்று மாலையே குடும்பமாகக் கலந்தாலோசிக்கலாம், அல்லவா? “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என்பதால், மதிய இடைவேளையின்போதும் ஓட்டலில் இருக்கும்போதும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை, பருவ வயது பிள்ளைகளைக்கூட, அவர்களுடைய ‘இஷ்டத்திற்கு விடக் கூடாது;’ அவர்கள்மேல் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.—நீதி. 22:15; 29:15.
5. ஓட்டலில் தங்கியிருக்கும்போது நம்முடைய நன்னடத்தை சத்தியத்தை எப்படி அலங்கரிக்கும்?
5 நம்முடைய நன்னடத்தை சத்தியத்தை அலங்கரிக்கிறது: மாநாடு நடக்கும் நகரத்தில் இருக்கும்போது நம்முடைய நன்னடத்தையினால் சத்தியத்தை நாம் அலங்கரிக்கலாம். (தீத். 2:10) ஓட்டல் விதிமுறைகளை நாம் கடைப்பிடிப்பதையும், அங்கு வேலை செய்பவர்களிடம் பொறுமையாக, இனிமையாக நடந்துகொள்வதையும் ஓட்டல் ஊழியர்கள் கவனிக்கிறார்கள். (கொலோ. 4:6) சென்ற வருடம், கிளை அலுவலகப் பிரதிநிதிகள் ஓர் ஓட்டல் மேனேஜரிடம் பேசியபோது அவர் இப்படிச் சொன்னார்: “உங்க ஆளுங்க ரொம்ப நல்லவங்க, தாராளமா அவங்களுக்கு ரூம்ஸ் தருவோம். எங்க ஓட்டல்ல வேலை செய்யறவங்ககிட்ட அவங்க எப்பவும் அன்பா, மரியாதையா நடந்துக்கிறாங்க, ஓட்டல் விதிமுறைகளையும் மீறாம நடந்துக்கிறாங்க.”
6. மாநாடு நடக்கும் நகரத்தில் இருக்கும்போது, உடை உடுத்தும் விஷயத்தில் நாம் எப்படிச் சத்தியத்தை அலங்கரிக்கலாம்?
6 நாம் அணிந்திருக்கும் பேட்ஜ் கார்டு, மாநாட்டை விளம்பரப்படுத்துவதோடு மாநாட்டிற்கு வந்திருக்கிற மற்ற சாட்சிகளுக்கும் நம்மை அடையாளம் காட்டுகிறது. வெளியாட்களுக்கும் ஒரு சாட்சியாக அமைகிறது. எப்படி? பேட்ஜ் அணிந்திருப்பவர்கள் உலக பாணியில் கவர்ச்சிகரமாக உடை அணியாமல் நேர்த்தியாக, அடக்கமாக உடை அணிந்திருப்பதை அவர்கள் கவனிப்பார்கள். (1 தீ. 2:9, 10) எனவே, ஓட்டலுக்குள் நுழையும் சமயத்திலிருந்து மாநாடு நடக்கும் நகரத்தில் இருக்கும்வரை நாம் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குட்டை பேன்ட்டையோ டி-ஷர்ட்டுகளையோ அணிந்தால் கண்ணியமாக இருக்காது. திறந்தவெளி மன்றத்தில் மாநாடு நடந்தால்கூட நாம் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்பும்கூட நாம் மாநாட்டுப் பிரதிநிதிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. சாப்பிடுவதற்கு வெளியே செல்லும்போதுகூட அடக்கமான உடை உடுத்துவது முக்கியம்.
7. மாநாட்டின்போது கிறிஸ்தவ ஒற்றுமையை அனுபவிக்க ஒரு வழி என்ன?
7 இஸ்ரவேலர், ஒவ்வொரு வருடமும் பண்டிகை சமயத்தில் உலகத்தின் எல்லாப் பாகத்திலிருந்தும் வந்திருந்த சக வணக்கத்தாரோடு ஊக்கமூட்டும் தோழமையை அனுபவித்தார்கள். இதனால் அவர்களிடையே ஒற்றுமை மேலோங்கியது. (அப். 2:1, 5) மாவட்ட மாநாடுகள், சகோதர அன்பைக் காட்டுவதற்குச் சிறந்த வாய்ப்பளிக்கின்றன. இந்த இனிமையான கூட்டுறவு மற்றவர்களைக் கவருகிறது. (சங். 133:1) எனவே, மதிய உணவு இடைவேளையின்போது மன்றத்தைவிட்டு வெளியே செல்வதற்குப் பதிலாக எளிய உணவைக் கையோடு எடுத்து வருவது நல்லது. அப்படிச் செய்தால் அருகில் உட்கார்ந்திருப்பவர்களோடு பேசிப் பழக அதிக நேரம் கிடைக்கும்.
8. வாலண்டியராகச் சேவை செய்வதற்கு என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?
8 மாநாடுகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் நடப்பதைப் பார்த்து வெளியாட்கள் வியப்படைகிறார்கள். அதுவும் மாநாட்டு வேலைகளையெல்லாம் சாட்சிகளே செய்கிறார்கள் என்பதை அறிந்து இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள். மாநாட்டு வேலைகளுக்காக உங்களையே ‘மனப்பூர்வமாய்’ அளிக்க முடியுமா? (சங். 110:3) பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்காகக் குடும்பத்திலுள்ள எல்லாருமே அநேக சமயங்களில் வாலண்டியர் சேவை செய்கிறார்கள். நீங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர் என்றால், மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவதற்கு வாலண்டியர் சேவை நல்ல வாய்ப்பளிக்கும். ஒரு சகோதரி சொன்னார்: “என் குடும்பத்தாரையும், ஒருசில நண்பர்களையும் தவிர எனக்கு யாரையும் தெரியாது. ஆனால், வாலண்டியராகச் சேவை செய்தபோது நிறையச் சகோதர சகோதரிகளோடு பழக வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப ஜாலியாக இருந்தது.” வாலண்டியர் சேவையில் நிறையப் பேருடன் பழக வாய்ப்பு கிடைப்பதால் நமக்கு அளவில்லா சந்தோஷம் கிடைக்கிறது. (2 கொ. 6:12, 13) நீங்கள் இதுவரை வாலண்டியராகச் சேவை செய்ததில்லை என்றால் உங்கள் மூப்பர்களிடம் கேட்கலாமே.
9. மாநாட்டிற்கு வர மற்றவர்களை நாம் எப்படி அழைப்போம்?
9 சத்தியத்தைக் கேட்க மற்றவர்களை அழையுங்கள்: இதற்குமுன் செய்ததுபோல் இந்த முறையும் மாநாட்டிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே நாம் அழைப்பிதழ்களைக் கொடுப்போம். சபைகள் முடிந்தவரை பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழைக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். (“அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) மீதமுள்ள அழைப்பிதழ்களை மாநாட்டிற்கு எடுத்து வர வேண்டும். மாநாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் சாட்சிகள் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க இதைப் பயன்படுத்துவார்கள்.
10. ஒவ்வொரு வருடமும் மாநாட்டு அழைப்பிதழ்களைக் கொடுப்பதால் நல்ல பலன்கள் கிடைத்திருப்பதற்குச் சில அனுபவங்களைச் சொல்லுங்கள்.
10 ஒவ்வொரு வருடமும் மாநாட்டு அழைப்பிதழ்களைக் கொடுப்பதால் ஏதாவது பலன் கிடைத்திருக்கிறதா? ஒரு மாநாட்டில் ஒரு தம்பதிக்கு இருக்கைகளைத் தேடிக்கொடுக்க அட்டன்டன்ட் சகோதரர் உதவினார். அவர்களுக்கு அழைப்பிதழ் கிடைத்தபோது அது “பார்க்க ஆர்வமூட்டுவதாக இருந்ததால்” மாநாட்டிற்கு வந்ததாகச் சொன்னார்கள்; கார் ஓட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர் தூரம் வந்திருந்தார்கள்! இன்னொரு அனுபவம்: ஒரு சகோதரி வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது ஒருவரிடம் அழைப்பிதழைக் கொடுத்தார். அவருக்கு மாநாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்ததுபோல் தெரிந்ததால் அதைப் பற்றி அவருக்கு விளக்கினார். சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சகோதரி அந்த நபரையும் அவருடைய நண்பரையும் மாநாட்டில் பார்த்தார், புதிதாக வெளியிடப்பட்ட பிரசுரம் அவர்கள் கையில் இருந்தது!
11. வருடந்தோறும் நடக்கிற மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்வது ஏன் முக்கியம்?
11 பூர்வ இஸ்ரவேலர் யெகோவாவை ‘உத்தமமும் உண்மையுமாய்ச் சேவிக்க’ அவர் செய்த அன்பான ஏற்பாடுதான் பண்டிகைகள். (யோசு. 24:14) இன்று நாம் ஒவ்வொரு வருடமும் மாநாட்டில் கலந்துகொள்வது ‘தொடர்ந்து சத்தியத்தில் நடக்க’ நமக்கு உதவுகிறது. இது வணக்கத்தின் முக்கியப் பாகமாக இருக்கிறது. (3 யோ. 3) சத்தியத்தை நேசிக்கிற ஒவ்வொருவரும் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அதிலிருந்து முழுமையாகப் பயனடையவும் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பாராக!
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
மாநாடு நடக்கும் நகரத்தில் இருக்கும்போது நம் நன்னடத்தையினால் சத்தியத்தை அலங்கரிக்கலாம்
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
மாநாட்டிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே நாம் அழைப்பிதழ்களைக் கொடுப்போம்
[பக்கம் 3-6-ன் சிறு பெட்டி]
2012 மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
◼ நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். காலை 8:00 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப இசை துவங்கப் போவதாக அறிவிக்கப்படும்போது நாம் எல்லாரும் நம்முடைய இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்; கண்ணியமான விதத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக இது உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 4:55 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 3:40 மணிக்கும் நிகழ்ச்சிகள் முடிவடையும்.
◼ வாகனம் நிறுத்துமிடம்: சில மாநாட்டு வளாகங்களில் வாகனம் நிறுத்துமிடத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பு நம் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படலாம். அப்போது, முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த இடம் அளிக்கப்படும். பொதுவாக வாகனங்களை நிறுத்துவதற்குக் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்பதால் ஒரு காரில் பலர் ஒன்றாகச் சேர்ந்து வருவதற்குக் கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும்.
◼ இருக்கைகளைப் பிடித்து வைப்பது: உங்களுடைய காரில் பயணிப்பவர்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தாருக்கு அல்லது தற்போது உங்களுடன் பைபிளைப் படித்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கைகளைப் பிடித்து வைக்கலாம்.—1 கொ. 13:5.
◼ மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே செல்லாதபடிக்குத் தயவுசெய்து மதிய உணவை எடுத்து வாருங்கள். உங்கள் இருக்கைக்கு அடியில் வைக்க முடிந்த சிறிய டிபன் பாக்ஸ் அல்லது சிறிய பையை எடுத்து வரலாம். பெரிய டிபன் கேரியர்கள், கண்ணாடிப் பாத்திரங்கள் ஆகியவை மாநாட்டு மன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
◼ நன்கொடைகள்: மாநாட்டு மன்றத்திலுள்ள நன்கொடைப் பெட்டிகளில் உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் போடுவதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நம் நன்றியுணர்வைக் காட்டலாம். மாநாட்டில் நன்கொடையாகக் காசோலைகளைக் கொடுப்பதாக இருந்தால், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயருக்குக் கொடுக்க வேண்டும்.
◼ விபத்துகளும் அவசர நிலைகளும்: மாநாட்டு வளாகத்தில் மருத்துவ ரீதியாக அவசர உதவி தேவைப்படும்போது அருகிலுள்ள அட்டென்டண்டிடம் தயவுசெய்து சொல்லுங்கள்; அவர் உடனடியாக முதலுதவி இலாகாவிடம் சொல்லுவார்; அப்போதுதான், வளாகத்தில் முதலுதவி அளிக்கத் தகுதி பெற்றிருப்பவரால், சூழ்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தீர்மானித்து உதவி அளிக்க முடியும். தேவைப்பட்டால் 999 என்ற எண்ணுக்கு அவர் தொடர்புகொள்வார். அதன் மூலம் அவசர அழைப்பு எண்ணிற்கு நிறையப் பேர் போன் செய்வதைத் தவிர்க்க முடியும்.
◼ மருத்துவ உதவி: நீங்கள் ஏதாவது மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருந்தால், உங்களுக்குத் தேவையானவற்றைத் தயவுசெய்து கையோடு எடுத்துவாருங்கள். மாநாட்டு மன்றத்தில் அவை உங்களுக்குக் கிடைக்காது. சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ஊசிகளை மற்ற குப்பைகளோடு சேர்த்து மாநாட்டு மன்றங்களிலும் ஓட்டல்களிலும் போடக்கூடாது. அதைத் தனியாக அப்புறப்படுத்த வேண்டும்.
◼ காலணிகள்: பொருத்தமற்ற காலணிகள் அணிவதால் ஒவ்வொரு வருடமும் நிறையப் பேருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே, உங்களுடைய கால்களுக்குப் பொருந்தும் நேர்த்தியான காலணிகளை அணிவது மிகவும் நல்லது; இது படிக்கட்டுகள், இரும்பு சட்டங்கள் போன்றவற்றின் மீது நடக்கும்போது தடுக்கி விழுந்துவிடாதிருக்க உதவும்.
◼ காதுகேளாதோருக்கு: சில இடங்களில் நிகழ்ச்சிகள் சைகை மொழியிலும் வழங்கப்படும்.
◼ ஞானஸ்நானம்: ஞானஸ்நானம் பெறவிருப்பவர்கள் சனிக்கிழமை காலை கொடுக்கப்படும் ஞானஸ்நான பேச்சுக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உட்கார வேண்டும். ஒவ்வொருவரும் டவலும், பொருத்தமான மாற்று உடையும் கொண்டுவர வேண்டும். ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்காக மேடையின் முன்னால் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். இதில் மாற்றம் இருந்தால் முன்னதாகவே அறிவிக்கப்படும்; இதைப் பற்றி அட்டன்டண்டுகளிடமும் தகவல் இலாகாவிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
◼ சென்ட்டுகள்: பெரும்பாலான மாநாடுகள் நாலாபக்கமும் மூடியிருக்கும் அரங்குகளில் நடைபெறுகின்றன. அவற்றில் செயற்கை முறை காற்றுப்போக்கு வசதிகளே உள்ளன. எனவே, சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாதபடி, நறுமணப் பொருள்களையோ வாசனைத் தைலங்களையோ சென்ட்டுகளையோ நாம் அளவாகப் பயன்படுத்துவது தயவான செயலாகும்.—1 கொ.10:24.
◼ ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) படிவங்கள்: மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் பலனாக ஆர்வம் காட்டிய நபரை நாம் சந்தித்திருந்தால், ப்ளீஸ் ஃபாலோ அப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். பிரஸ்தாபிகள் இந்தப் படிவங்களில் ஒன்றிரண்டை மாநாட்டுக்கு எடுத்துவர வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாநாட்டு புத்தக இலாகாவில் கொடுக்கலாம் அல்லது உங்களுடைய சபை செயலரிடம் பின்னர் கொடுக்கலாம்.—மே 2011 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐப் பாருங்கள்.
◼ உணவகங்கள்: உணவகங்களில் உங்கள் நல்நடத்தை மூலம் யெகோவாவின் பெயருக்கு மகிமை சேருங்கள். டிப்ஸ் கொடுப்பது வழக்கம் என்றால் டிப்ஸ் கொடுங்கள்.
◼ தங்கும் ஓட்டல்கள்:
(1) தயவுசெய்து தேவைக்கு அதிகமான அறைகளை முன்பதிவு செய்யாதீர்கள். அனுமதிக்கப்படுவதற்கும் அதிகமானோரை உங்கள் அறையில் தங்க வைக்காதீர்கள்.
(2) நீங்கள் பதிவு செய்திருக்கும் அறையை அநாவசியமாக ரத்து செய்யாதீர்கள்; அப்படி ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உடனடியாக அதன் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள்.—மத். 5:37.
(3) ஓட்டலில் ரிஜிஸ்டர் செய்யும்போது நீங்கள் ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்டைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்து வைத்துக்கொள்வது பொதுவான வழக்கமாகும். இது, தங்கும் அறைக்கான மொத்த வாடகைக்காகவும், தெரியாத்தனமாக நீங்கள் ஏதாவது சேதம் ஏற்படுத்தினால் அதற்காகவும் எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் அங்கிருந்து சென்ற பிறகு கொஞ்ச நாட்களுக்கு, அதாவது உங்களுடைய அக்கவுண்ட் செட்டில் ஆகும்வரை, அந்தத் தொகையை உங்களால் பயன்படுத்த முடியாது.
(4) லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை உடனடி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக அவற்றைத் திருப்பிக்கொடுங்கள்.
(5) டிப்ஸ் கொடுப்பது அவரவருடைய விருப்பம் என்றாலும், ஓட்டலில் சௌகரியமாகத் தங்க உதவுகிற பணியாளர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது அன்பான செயலாகும்.
(6) சமைப்பதற்கு அனுமதியில்லாத அறைகளில் சமைக்காதீர்கள்.
(7) ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காப்பி அல்லது ஐஸ் போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.
(8) ஓட்டல் பணியாளர்களிடம் எல்லாச் சமயத்திலும் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களை வெளிக்காட்டுங்கள். அவர்கள் எத்தனையோ பேரைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நாம் கனிவாக, பொறுமையாக, நியாயமாக நடந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார்கள்.
(9) ஓட்டல் வளாகத்திலுள்ள நீச்சல் குளம், வரவேற்பு அறை, உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் இருக்கும்போது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
(10) சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியல்களில் அறை வாடகையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்பட்ட ஒருநாள் வாடகையாகும். நீங்கள் கேட்காத அல்லது பயன்படுத்தாத பொருள்களுக்கென கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறை வசதி இலாகாவுடன் தொடர்புகொள்ளுங்கள்.
(11) உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், மாநாட்டு வளாகத்தில் இருக்கும்போதே அறை வசதி இலாகாவிடம் மறக்காமல் தெரிவியுங்கள். அப்போதுதான் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
◼ வாலண்டியர் சேவை: வாலண்டியர் சேவையில் ஈடுபட யாருக்காவது விருப்பமிருந்தால், மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளும்கூட தங்களுடைய பெற்றோர் அல்லது பொறுப்புள்ள ஒருவரின் மேற்பார்வையில் சேவை செய்யலாம்.
[பக்கம் 6-ன் பெட்டி]
அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம்?
பிராந்தியம் முழுவதிலும் அழைப்பிதழைக் கொடுக்க வேண்டியிருப்பதால், நாம் சுருக்கமாகப் பேசலாம். ஒருவேளை இப்படிச் சொல்லலாம்: “வணக்கம். உலகம் முழுக்க இந்த அழைப்பிதழைக் கொடுக்க நாங்கள் முயற்சி எடுத்துவருகிறோம். உங்களுக்கும் இதைக் கொடுக்கிறோம். கூடுதலான விவரங்களை இதில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.” உற்சாகமாகப் பேசுங்கள். வார இறுதி நாட்களில் இந்த அழைப்பிதழைக் கொடுக்கும்போது, வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் பத்திரிகைகளையும் சேர்த்துக் கொடுங்கள்!