வெளி ஊழியத் தொகுதியிலிருந்து எப்படிப் பயனடையலாம்?
1. சபை புத்தக படிப்பு தொகுதியில் கிடைத்த என்ன நன்மைகள் வெளி ஊழியத் தொகுதியிலிருந்தும் கிடைக்கும்?
1 சபை புத்தக படிப்பு இப்போது இல்லையே என்று நீங்கள் ஏங்குகிறீர்களா? அது சிறிய தொகுதியாக இருந்ததால் எல்லாரோடும் பழக வாய்ப்பு கிடைத்தது. இந்த நல்ல நட்பு விசுவாசத்தில் உறுதியாக இருக்க உதவியது. (நீதி. 18:24) புத்தக படிப்பு கண்காணிக்கு தொகுதியிலிருந்த ஒவ்வொருவருடைய சூழ்நிலையையும் நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது. அவரவருக்கு ஏற்றார்போல் உற்சாகத்தையும் அளிக்க முடிந்தது. (நீதி. 27:23; 1 பே. 5:2, 3) இதையெல்லாம் நாம் இப்போதும் அனுபவிக்கலாம். எப்படி? வெளி ஊழியத் தொகுதியிலிருந்து.
2. வெளி ஊழியத் தொகுதியிலுள்ளவர்களோடு நண்பர்களாக நீங்கள் எப்படி முதல்படி எடுக்கலாம்?
2 நீங்களே முதல்படி எடுங்கள்: சபை புத்தக படிப்பு தொகுதியைப் போலவே வெளி ஊழியத் தொகுதியும் சிறியதாக இருக்கிறது. “தோளோடு தோள் சேர்ந்து” மற்றவர்களுடன் ஊழியம் செய்யும்போது அவர்களோடு நல்ல நட்பு மலரும். (பிலி. 1:27) உங்கள் தொகுதியில் இருக்கும் எல்லாரோடும் ஊழியம் செய்திருக்கிறீர்களா? இந்த விஷயத்தில் உங்கள் ‘இதயக் கதவை அகலத் திறக்க’ முடியுமா? (2 கொ. 6:13) அவ்வப்போது உங்கள் வெளி ஊழியத் தொகுதியிலுள்ள ஒருவரை குடும்ப வழிபாட்டுக்கு அல்லது உங்களோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு அழைக்கலாம். சில சபைகளில், வேறு சபையிலிருந்து பேச்சுக்கொடுக்க வரும் சகோதரரை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வெளி ஊழியத் தொகுதி உபசரிக்கிறது. ஒருவேளை பேச்சாளரால் வரமுடியாவிட்டாலும், திட்டம்போட்டபடி தொகுதிகள் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக சேர்ந்து சாப்பிட்டு சகோதர அன்பை அனுபவிக்கிறார்கள்.
3. வெளி ஊழியத் தொகுதியில் மூப்பர்களின் கவனிப்பை என்னென்ன விதங்களில் பெறலாம்?
3 இப்போது சபையார் வாரத்தில் இருமுறை மட்டுமே ஒன்று கூடுவதால் மூப்பர்களின் தனிப்பட்ட கவனிப்பு குறைந்துவிடும் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தி ஊழியத்தில் பயிற்சி அளிப்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தொகுதி கண்காணிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் தொகுதி கண்காணி உங்களோடு சேர்ந்து இதுவரை ஊழியம் செய்யவில்லை என்றால், ‘என்னோடு சேர்ந்து ஊழியம் செய்கிறீர்களா’ என்று ஏன் கேட்க கூடாது? அதோடு, ஊழியக் கண்காணி மாதத்தில் ஒரு சனி-ஞாயிறு, ஒரு தொகுதியோடு சேர்ந்து ஊழியம் செய்வார். சிறிய சபையாக இருந்தால் ஒருசில தொகுதிகளே இருக்கும்; எனவே, அவர் ஒவ்வொரு தொகுதியையும் வருடத்தில் இருமுறை சந்திக்கலாம். ஊழியக் கண்காணி உங்கள் தொகுதியைச் சந்திக்க வரும்போது ஊழியத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.
4. (அ) வெளி ஊழியக் கூட்டத்தை எப்படி ஒழுங்கமைக்கலாம்? (ஆ) வெளி ஊழியக் கூட்டத்தை உங்கள் வீட்டில் நடத்துவதைப் பற்றி ஏன் யோசிக்க வேண்டும்?
4 வார இறுதி நாட்களில் வெளி ஊழியக் கூட்டத்திற்கு ஒவ்வொரு தொகுதியும் தனித்தனியாக கூடுவது நல்லது. கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பல இடங்களில் ஊழியத்திற்காகக் கூடும்போது, பிரஸ்தாபிகளால் வெளி ஊழியக் கூட்டம் நடக்கும் இடத்திற்கும் பிராந்தியத்திற்கும் சுலபமாக செல்ல முடியும். பிரஸ்தாபிகளைப் பிரித்துவிடவும் அவர்கள் தாமதிக்காமல் பிராந்தியத்திற்குச் செல்லவும் வசதியாக இருக்கும். இப்படிக் கூடும்போது, தொகுதி கண்காணியால் ஊழியம் செய்பவர்கள்மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள்ள முடியும். என்றாலும், சில சூழ்நிலைமைகளில் இரண்டு மூன்று தொகுதிகள் சேர்ந்து ஊழியம் செய்யலாம். மாதத்தின் முதல் சனிக்கிழமையோ காவற்கோபுர படிப்பிற்கு பிறகோ முழு சபையும் வெளி ஊழியக் கூட்டத்திற்காகக் கூடும்போது ஒவ்வொரு தொகுதியும் தனித்தனியாக உட்காரலாம். அப்போது, ஊழியக்கூட்டம் முடிந்த பிறகு தொகுதி கண்காணி தன்னுடைய தொகுதியிலுள்ளவர்களை சீக்கிரமாக பிரித்துவிட்டு பிறகு ஜெபத்தோடு கூட்டத்தை முடிக்க முடியும்.—“உங்கள் வீட்டில் வெளி ஊழியக் கூட்டம் நடத்த முடியுமா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.
5. சபை புத்தக படிப்பு ஏற்பாடு முடிவுக்கு வந்தாலும் நாம் எதைக் குறித்து நம்பிக்கையாக இருக்கலாம்?
5 சபை புத்தக படிப்பு ஏற்பாடு முடிவுக்கு வந்தாலும், யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய நமக்கு எது தேவையோ அதை நிச்சயம் அவர் கொடுத்துக்கொண்டிருக்கிறார். (எபி. 13:20, 21) யெகோவா நம்மை கவனித்துக்கொள்வதால் நமக்கு எந்த குறையும் இருக்காது. (சங். 23:1) வெளி ஊழியத் தொகுதியின் மூலமாக நமக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. நாம் முதல்படி எடுத்து ‘ஏராளமாக விதைத்தால் ஏராளமாக அறுவடை செய்வோம்.’—2 கொ. 9:6.
[பக்கம் 6-ன் பெட்டி]
உங்கள் வீட்டில் வெளி ஊழியக் கூட்டம் நடத்த முடியுமா?
வீடுகள் அதிகம் இல்லாததால் சில சபைகள் ஒன்று சேர்ந்து ஒரே வீட்டில் கூடுகிறார்கள். வெளி ஊழியக் கூட்டம் சபையின் ஏற்பாடு என்பதால் உங்கள் வீட்டில் இந்த கூட்டங்களை நடத்துவது பெரும் பாக்கியமே. ஆனால், வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தும் அளவுக்கு உங்கள் வீடு வசதியாக இல்லை என்று தயங்காதீர்கள். உங்கள் விருப்பத்தை மூப்பர்களிடம் சொல்லுங்கள். உங்கள் வீடு இருக்கும் பகுதியையும் மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு மூப்பர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதோடு சபை புத்தக படிப்பு நடத்துவதற்கு எந்தெந்த விஷயங்களை மூப்பர்கள் கவனத்தில் கொண்டார்களோ அதன் அடிப்படையிலும் தேர்ந்தெடுப்பார்கள்.