சபை புத்தகப்படிப்பு ஏற்பாடு
பகுதி 5: ஊழிய கண்காணியின் சந்திப்பு
1 ஊழிய கண்காணி ஒரு சுவிசேஷகனாகவும், போதகராகவும் இருக்க வேண்டும். சபை தனது நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் வேண்டிய உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கு உதவி செய்வதில் அவர் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார். (மாற்கு 13:10) அவர் தன் உத்தரவாதத்தைக் கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக் கொள்ளும் போதும், ஒவ்வொருவரும் ஒத்துழைக்கும் போதும் பிரஸ்தாபிகள் நற்செய்தியை அளிப்பதில் அதிகமான திறமையை வளர்த்துக் கொள்வர், பிராந்தியம் அதிக முழுமையாகவும் செய்து முடிக்கப்படும்.
2 வெளி ஊழியத்தில் அதிகமாக வேலை செய்வதற்கு ஊக்கமூட்டுவதில் ஊழிய கண்காணி ஒருமித்த கவனம் செலுத்துகிறார். இது முக்கியமாக சபை புத்தகப்படிப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக, ஊழிய கண்காணி ஒரு புத்தகப்படிப்பை நடத்துவதற்கு நியமிக்கப்படுகிறார். ஆனால், மாதத்துக்கு ஒரு முறை அவர் மற்றொரு தொகுதியை சந்திக்கையில் அவருடைய உதவியாளர் அவருக்குப் பதிலாக படிப்பு நடத்துவார்.—நம் ராஜ்ய ஊழியம் 11/81 பக். 1, 7.
3சந்திப்புக்காக தயாரித்தல்: இந்தச் சந்திப்பின் வாரத்துக்கு முன்னால் ஊழிய கண்காணி அந்தத் தொகுதியோடு கூட்டுறவு கொள்பவர்களின் சபை பிரஸ்தாபிப் பதிவு அட்டைகளைப் பார்க்க வேண்டும். அவர் புத்தக படிப்பு நடத்துபவரோடும்கூட சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அந்தத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பிரஸ்தாபிகளின் வேலைகளை விமர்சிக்க வேண்டும். ஊழியம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அல்லது பதிவு அட்டைகளின் மூலம் வெளிப்படாத தேவைகள் ஏதேனும் இருந்தால், படிப்பு நடத்துபவர் ஊழிய கண்காணியிடம் தெரிவிக்கலாம். ஊழிய கண்காணியால் கொடுக்கப்படும் ஊழிய பேச்சுக்கு 15 நிமிடங்கள் அனுமதிப்பதற்காக படிப்பு 45 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதைப் படிப்பு நடத்துபவருக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
4 ஊழியத்துக்காக அதிகமான போற்றுதலை வளர்ப்பது இந்தப் பேச்சின் நோக்கமாக இருக்கும். ஊழியத்தின் சில அம்சங்களில் பிரஸ்தாபிகளுக்கு உதவி தேவைப்படுமேயானால், ஊழிய கண்காணி முன்னேற்றத்திற்காக நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுக்க வேண்டும். அவருடைய குறிப்புகள் உடன்பாடானதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்க வேண்டும். எதிர்மறையான குறிப்புகளால் யாரையாவது உற்சாகமிழக்கவோ அல்லது சங்கடமான நிலைக்குள்ளாக்கவோ கூடாது. இது அவருடைய சந்திப்பின் நோக்கத்தைத் தோல்வியடையச் செய்யும். அனைவரும் முன்னேற்றமடைவதற்கு அவருடைய பேச்சு உற்சாகப்படுத்த வேண்டும்.
5 ஊழிய கண்காணி தன்னுடைய அட்டவணை அனுமதிக்கும் அளவுக்கு அநேக சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தனிப்பட்ட கவனத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறார். ஊழியத்தில் பல்வேறு நபர்களோடு வேலை செய்வதற்கு அவர் நேரம் குறித்துக் கொடுக்கலாம். வீட்டுக்கு வீடு வேலையில் பிரஸ்தாபிகளோடு வேலை செய்கையில் அவர்களுடைய அளிப்புகளை மேம்படுத்துவதற்கு ஓரிரண்டு உதவியளிக்கும் ஆலோசனைகளை அவர் கொடுக்கலாம். இதைக் குறைகாணும் விதத்தில் செய்யாமல், உதவி செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தோடு செய்ய வேண்டும். அவர் பிரஸ்தாபிகளோடு மறு சந்திப்புகளுக்கும், பைபிள் படிப்புகளுக்கும் செல்ல முன்வரலாம். தொகுதியில் இருக்கும் எவருக்காவது தனிப்பட்ட உதவி தேவைப்படுவதாகத் தோன்றினால், அந்த வாரத்தின் போது அவர்களுக்கு உதவி செய்ய அவர் ஒரு மேய்ப்பரின் சந்திப்பைச் செய்யக்கூடும். அதற்குப் பின்னர் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் படிப்பு நடத்துபவரிடம் தெரிவிக்கலாம். இந்த அனலான தனிப்பட்டக் கவனிப்பு, வெளி ஊழியத்தில் பின்தங்கிப்போன சிலருக்கு உற்சாகமூட்டுவதாய் இருந்திருக்கிறது.
6 ஊழியத்திற்கான கூட்டம்: அந்த வாரத்துக்குரிய வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் ஊழியகண்காணியால் நடத்தப்பட வேண்டும். வெகு சிலரே ஆஜராயிருந்தாலும், அவற்றை நேரத்துக்கு ஆரம்பிக்க வேண்டும். கூட்டம் 10-லிருந்து 15 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடாது. தின வசனத்தைச் சிந்திப்பது அவருடைய விருப்பத்துக்கு விடப்படுகிறது. அந்தத் தொகுதி வெளியே செல்வதற்கு முன்பு, தாங்கள் எங்கே, யாரோடு வேலை செய்யப் போகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். (1 கொரி. 14:33, 40) தாமதமின்றி வெளி ஊழியத்திற்குப் புறப்பட்டுச் செல்ல ஊழிய கண்காணி ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்திட வேண்டும்.
7 புத்தகப் படிப்புத் தொகுதிகளுக்கு ஊழிய கண்காணியின் ஒழுங்கான சந்திப்புகள் சபைக்கு ஓர் உண்மையான ஆசீர்வாதமாக இருக்கக்கூடும். அவர் சந்திக்கும் போது, நம்மில் ஒவ்வொருவரும் அவரோடு ஒத்துழைக்கையில், நம் ஊழியம் ஒழுங்கானதாகவும் திறம்பட்டதாகவும் இருக்கும். மேலும், அவர் தன்னுடைய வேலையிலிருந்து மகிழ்ச்சியை அடைவார். (எபி. 13:17) செம்மறியாட்டைப் போன்ற நபர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவர். கேட்கவிரும்பும் அனைவருக்கும் பிரசங்கிக்க வேண்டிய நம்முடைய பொறுப்பை நாம் நிறைவேற்றினோம் என்பதை அறியும் மகிழ்ச்சியை நாம் கொண்டிருப்போம்.—ஏசா. 61:1, 2; எசேக். 9:11; யோ. 17:26.