பைபிள் படிப்பு வேண்டுமா? இதோ ஐந்து வழிகள்...
1. பைபிள் படிப்பை ஆரம்பிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும், ஏன்?
1 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பது உங்களுக்குக் குதிரைக் கொம்பாக இருக்கிறதா? தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்காக விடாமுயற்சி செய்பவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். (கலா. 6:9) பைபிள் படிப்பை ஆரம்பிக்க இதோ ஐந்து வழிகள்:
2. எப்படி நேரடியாகக் கேட்டு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்?
2 நேரடியாகக் கேளுங்கள்: நாம் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஊழியத்தில் கொடுப்பது நிறைய பேருக்குத் தெரியும். ஆனால், பைபிள் படிப்பு நடத்துகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாதிருக்கலாம். அதனால், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ‘பைபிள் படிப்பு வேண்டுமா’ என்று நேரடியாகவே ஏன் கேட்க கூடாது? மறுசந்திப்பு செய்யும்போதுகூட அப்படிக் கேட்கலாம். ஒருவேளை அவர்கள் மறுத்துவிட்டால், தொடர்ந்து அவர்களுக்கு பத்திரிகைகளை கொடுத்து அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்கலாம். ஒரு சகோதரர் பல வருடங்களாக ஒரு தம்பதிக்கு மாதாமாதம் பத்திரிகைகளைக் கொடுத்து வந்தார். ஒருசமயம் பத்திரிகைகளை கொடுத்துவிட்டு கிளம்பும்போது அவருக்கு ஒரு யோசனை உதித்தது. அவர்களிடம் திரும்பி: “உங்களுக்கு பைபிளைப் படிக்க ஆசையா?” என்று கேட்டார். அவர்கள் உடனே ஒத்துக்கொள்வார்கள் என அவர் எதிர்பார்க்கவே இல்லை. இப்போது அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்கள்.
3. கூட்டத்திற்கு வருபவர்கள் எல்லாருக்கும் ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது என்று நாமாகவே முடிவு பண்ணலாமா? விளக்குங்கள்.
3 கூட்டத்திற்கு வருபவர்கள்: ஆர்வம் காட்டுகிறவர்கள் கூட்டத்திற்கு வரும்போது அவர்கள் எல்லாருக்கும் ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். ஒரு சகோதரர் சொல்கிறார்: “ஆர்வம் காட்டினவங்க கூட்டத்துக்கு வந்தப்போ நானே போய் பேசி அவங்களுக்கு பைபிள் படிப்பு வேணுமான்னு கேட்பேன். என்கிட்ட இருக்கிற பைபிள் படிப்புகள்ல பாதி பேருக்கு இப்படித்தான் பைபிள் படிப்பு ஆரம்பிச்சேன்.” ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கேளுங்கள்: ஒரு பெண் 15 வருடங்களாக கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தார். அவருடைய மகள்கள் ஞானஸ்நானம் எடுத்தவர்கள். அந்தப் பெண் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர். எப்போதும் கூட்டம் ஆரம்பிக்கப்போகும் நேரத்தில்தான் வருவார், கூட்டம் முடிந்தவுடன் போய்விடுவார். ஒருநாள் அந்த பெண்ணிடம் பைபிள் படிப்பு வேண்டுமா என்று அந்தச் சகோதரி கேட்டார். அவர் உடனே ஒத்துக்கொண்டார். சீக்கிரமே பிரஸ்தாபியானார். அந்த சகோதரி இப்படி எழுதினார்: “இந்தக் கேள்விய நான் 15 வருஷத்துக்கு முன்னாடியே கேட்டிருக்கனும், தப்பு பண்ணிட்டேன்.”
4. பைபிள் படிப்பு ஆரம்பிக்க மற்றொரு வழி என்ன?
4 மற்றவர்களிடம் கேளுங்கள்: ஒரு சகோதரி மற்றவர்களோடு சேர்ந்து அவர்களுடைய பைபிள் படிப்புகளுக்குப் போக விரும்புவார். படிப்பு முடிந்த பிறகு, படிப்பு எடுப்பவரின் அனுமதியோடு வீட்டுக்காரரிடம், ‘பைபிள் படிக்க ஆசைப்படும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்பார். நீங்களும், மறுசந்திப்பில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுக்கும்போது, “இந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்பும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கலாம். சிலசமயம், பிரஸ்தாபிகள் அல்லது பயனியர்கள் சிலர் ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு பைபிள் படிப்பு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். அவர்களுக்கு பைபிள் படிப்பு கிடைத்தால் உங்களுக்குத் தரும்படி சொல்லி வையுங்கள்.
5. பிரஸ்தாபிகள் யாருக்காவது சத்தியத்தில் இல்லாத துணை இருந்தால் அவர்களிடம் பைபிள் படிப்பைப் பற்றி கேட்பது ஏன் சிறந்தது?
5 சத்தியத்தில் இல்லாத துணை: உங்களுடைய சபையில் இருக்கும் பிரஸ்தாபிகள் யாருக்காவது சத்தியத்தில் இல்லாத துணை இருக்கிறார்களா? அவர்கள் தங்கள் துணையிடம் பைபிளைப் பற்றி பேச தயங்கலாம். வேறு யாராவது பேசினால் நன்றாக கேட்கலாம். அப்படிப்பட்டவர்களிடம், ‘பைபிளைப் படிக்க விரும்புகிறீர்களா’ என்று நீங்கள் போய் கேட்கலாம். ஆனால், அவரிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பதென சத்தியத்திலுள்ள அவரது துணையிடம் கேட்டுவிட்டு பேசுவது நல்லது.
6. பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யும்போது ஜெபம் செய்வது ஏன் ரொம்ப முக்கியம்?
6 ஜெபம்: ஜெபத்தைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். (யாக். 5:16) யெகோவாவின் சித்தத்தின்படி ஜெபித்தால் அவர் கண்டிப்பாகக் கேட்பார். (1 யோ. 5:14) எப்போதுமே பிஸியாக இருந்த ஒரு சகோதரர் பைபிள் படிப்பு வேண்டும் என்று ஜெபிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருடைய மனைவி, தன் கணவரால் பைபிள் மாணாக்கருக்காக நேரம் செலவிட முடியுமா என்று யோசித்தார். குறிப்பாக, மாணாக்கர் ஏதாவது பிரச்சினையில் இருக்கும்போது. அதனால், தன் கணவனுக்கு பைபிள் படிப்பு கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்கும்போது இந்த விஷயத்தையும் யெகோவாவிடம் தெரிவித்தார். இரண்டு வாரத்திற்குள் அவர்களுடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. சபையில் இருந்த பயனியர் ஒருவர் தனக்குக் கிடைத்த பைபிள் படிப்பை இந்தச் சகோதரருக்குக் கொடுத்தார். அந்த மனைவி எழுதுகிறார்: “பைபிள் படிப்பெல்லாம் என்னால எடுக்க முடியாதுனு பயப்படுறவங்களுக்கு நான் சொல்றது என்னன்னா, இந்த விஷயத்துக்காக குறிப்பிட்டு ஜெபம் செய்யுங்க, அதவும் தொடர்ந்து செய்யுங்க. எங்க ஜெபத்துக்கு பதில் கிடைச்சதனால நாங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோம் தெரியுமா!” விடாமல் முயற்சி செய்தால் நீங்களும் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம். “வாழ்வுக்கு வழிநடத்தும் வாசல்” வழியாக மற்றவர்களைக் கூட்டிச் சென்று வானளவு சந்தோஷத்தைக் காணலாம்!—மத். 7:13, 14.