நம் வெப்சைட்டை பயன்படுத்தி பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
1. நம்முடைய வெப்சைட்டில் உள்ள “சில்ட்ரன்” என்ற பகுதியின் நோக்கம் என்ன?
1 எல்லா வயதினருக்கும் ஆர்வமூட்டும் விதத்தில் நம்முடைய jw.org வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. “சில்ட்ரன்” என்ற தலைப்பில் (பைபிள் டீச்சிங்ஸ் > சில்ட்ரன் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள்) இருக்கும் பகுதி பிள்ளைகள் தங்கள் பெற்றோரோடும் யெகோவாவோடும் நெருங்கி வர உதவும். (உபா. 6:6, 7) இந்தப் பகுதியைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்?
2. உங்கள் பிள்ளைகளுடைய வயதுக்கேற்ப விஷயங்களை எப்படித் தேர்ந்தெடுத்து கற்றுக்கொடுக்கலாம்?
2 வளைந்துகொடுங்கள்: ஒவ்வொரு பிள்ளையின் தேவையும் வித்தியாசப்படும். (1 கொ. 13:11) அப்படியென்றால், உங்கள் பிள்ளைகளுடைய வயதுக்கேற்ப விஷயங்களை எப்படித் தேர்ந்தெடுத்து கற்றுக்கொடுக்கலாம்? இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் பிள்ளைகளுடைய ஆர்வத்தை தூண்டும் விஷயங்கள் என்ன? எந்தளவு புரிந்துகொள்வார்கள்? எவ்வளவு நேரம் அவர்களால் கவனிக்க முடியும்?’ மூன்று அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள பிள்ளைகளோடு “மை பைபிள் லெசன்ஸ்” என்ற பகுதியில் வரும் கதைகளை சொல்லிக்கொடுங்கள். சில குடும்பங்களில் “டீச் யுவர் சில்ட்ரன்” என்ற பகுதியைப் படித்து மகிழ்கிறார்கள்.
3. “ஃபேமிலி வொர்ஷிப் ப்ராஜக்ட்ஸ்” கீழ் இருக்கும் ‘ஸ்டோரீஸ்’ மற்றும் ‘ஆக்டிவிட்டீஸ்’ பகுதிகளை பெற்றோர் எப்படிச் சிறந்த விதத்தில் கையாளலாம்?
3 குடும்ப வழிபாடு புராஜக்ட்: குடும்பத் தலைவர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் விதத்தில் இந்த புராஜக்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ‘ஸ்டோரீஸ்’ மற்றும் ‘ஆக்டிவிட்டீஸ்’ என்ற பகுதிகளை எப்படிப் பயன்படுத்துவது என தெரிந்துகொள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்து “பேரன்ட்ஸ் கைடு”-ஐ படியுங்கள். ஒவ்வொரு புராஜக்ட் செய்யும் முன்னும் அதைப் படித்துப் பாருங்கள். “பிச்சர் ஆக்டிவிட்டி”-ஐ சின்னப் பிள்ளைகளுக்கும், வளர்ந்த பிள்ளைகளுக்கு “ஸ்டடி ஆக்டிவிட்டி” பகுதியையும் எப்படிப் பயன்படுத்துவது எனச் சொல்லிக்கொடுங்கள். ஒரு புராஜக்டில் உள்ள எல்லா விஷயங்களும் பைபிளில் ஏதாவது ஒரு கதையோடு அல்லது பாடத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும். அதனால், எல்லா வயதைச் சேர்ந்த பிள்ளைகளாலும் குடும்ப வழிபாட்டில் பங்குகொள்ள முடியும்.
4. ‘யெகோவாவின் நண்பன் ஆகு’ என்ற பகுதியில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறுகின்றன?
4 யெகோவாவின் நண்பராக உதவுங்கள்: நம் வெப்சைட்டில் உள்ள வீடியோக்கள், பாடல்கள், மற்றும் ‘ஆக்டிவிட்டீஸ்’ பகுதி பிள்ளைகளுடைய மனதில் கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் பதிய வைக்க பெற்றோருக்கு உதவும். (உபா. 31:12) ஒவ்வொரு கார்ட்டூன் படமும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. ‘கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்’ போன்ற பயிற்சிகள் அந்தப் பாடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பிள்ளைகளுக்குப் பாடல்கள் பாட பிடிக்கும்; படித்தவற்றை மனதில் பதியவைக்கவும் பாடல்கள் உதவும். அதனால் ராஜ்ய பாடல்களும் பிள்ளைகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட புதிய பாடல்களும் தவறாமல் வெப்சைட்டில் இடம்பெறும்.
5. பெற்றோர் ஏன் பிள்ளைகளுக்கு சத்தியத்தை போதிக்க யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும்?
5 பெற்றோர்களே நீங்கள் சிறந்த அப்பாக்களாகவும் அம்மாக்களாகவும் இருக்கவேண்டுமென யெகோவா விரும்புகிறார். ஆகவே பிள்ளைகளுக்கு சத்தியத்தைப் போதிக்க அவரிடம் உதவி கேளுங்கள். (நியா. 13:8) யெகோவாவின் உதவியோடு உங்கள் பிள்ளைகளுக்கு ‘ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசு மீதுள்ள விசுவாசத்தின் மூலம் . . . மீட்புக்கு வழிநடத்த’ முடியும்.—2 தீ. 3:15; நீதி. 4:1-4.