திறமையாக கற்றுக்கொடுங்கள்—முக்கிய விஷயங்களை அழுத்தி சொல்லுங்கள்
1 ‘நீங்கள் போதகர்களாக இருக்க வேண்டும்’ என்று எபிரெயர்களிடம் பவுல் சொன்னார். (எபி. 5:12) இன்று நாமும் திறமையான போதகர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், இயேசு கொடுத்த கற்பிக்கிற வேலை சீக்கிரத்தில் முடியப்போகிறது. திறமையாக கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால் முதலில் சொல்லித்தர வேண்டிய விஷயங்களை நாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு புத்தகத்தில் இருந்து கற்றுக்கொடுக்கும்போது அதில் இருக்கிற எல்லா பாராவையும் எல்லா அதிகாரத்தையும் அந்த முழு புத்தகத்தையும் நன்றாக புரிந்திருக்க வேண்டும்.
2 முழு புத்தகத்திலும் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள அந்த புத்தகத்தின் தலைப்பு நமக்கு உதவும். ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் புத்தகத்தின் தலைப்போடு சம்பந்தப்பட்டிருக்கும். அதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மோடு பைபிள் படிக்கிறவர்களுக்கும் அதை புரியவைக்க வேண்டும். உதாரணத்திற்கு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் “சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழி” என்ற அதிகாரம் இருக்கிறது. சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை புரிந்துகொள்ள இந்த அதிகாரம் உதவும்.
3 ஒரு அதிகாரத்தில் இருக்கிற முக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ள அதன் உபதலைப்புகள் நமக்கு உதவும். ஒவ்வொரு பாராவிலும் இருக்கிற முக்கிய குறிப்புகள் அந்த அதிகாரத்தின் தலைப்போடு சம்பந்தப்பட்டிருக்கும். அந்த குறிப்புகளை கண்டுபிடியுங்கள். உங்களோடு பைபிள் படிக்கிறவருக்கு அந்த குறிப்புகளை புரிய வையுங்கள்.
4 கேள்விக்கான பதில் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தையிலேயே இருக்கும். உங்களோடு பைபிள் படிக்கிறவரிடம், அந்த வார்த்தைகளை மட்டும் குறித்து வைக்க சொல்லுங்கள். இப்படி செய்தால் அவரால் உடனே பதில் சொல்ல முடியும். எது முக்கிய குறிப்பு என்பதை அவரால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், குறித்து வைத்ததை அப்படியே வாசிக்காமல், மனதிலிருந்து சொல்ல சொல்லுங்கள்.
5 சிலசமயம் பாராவிலோ வசனத்திலோ முக்கிய வார்த்தைகளை தடித்த எழுத்தில் கொடுத்திருப்பார்கள். முக்கிய குறிப்புகள் எதுவென்று புரிந்துகொள்ள அந்த தடித்த எழுத்துகள் உதவும். உங்களோடு பைபிள் படிக்கிறவர்களும் அந்த குறிப்புகளை புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள். அப்போதுதான், அவரால் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் நம்பிக்கையோடு சொல்ல முடியும்.
6 காவற்கோபுரம் நடத்தும்போதும், சபை பைபிள் படிப்பு நடத்தும்போதும், பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும்போதும், பைபிள் படிப்பு எடுக்கும்போதும் முக்கிய குறிப்புகளை அழுத்தி சொல்ல வேண்டும். ‘எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள், அவர்களுக்குக் கற்பியுங்கள்’ என்று இயேசு சொன்னார். (மத். 28:19, 20) முக்கிய விஷயங்களை அழுத்தி சொன்னால், நம்மால் திறமையாக கற்றுக்கொடுக்க முடியும்.