நன்றாக பைபிள் படிப்பு எடுக்க...
1. பைபிள் படிப்பு எடுக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?
1 யெகோவா நினைத்தால்தான் ஒருவர் யெகோவாவின் சாட்சியாக ஆக முடியும். (யோவா. 6:44) இருந்தாலும், நன்றாக பைபிள் படிப்பு எடுக்க நாமும் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான், பைபிள் படிக்கிறவர்கள் யெகோவாவுடைய நண்பராக ஆக முடியும். (யாக். 4:8) அதற்கு நாம் நன்றாக தயாரிக்க வேண்டும். பைபிள் படிக்கிறவர்கள் எல்லா விஷயத்தையும் புரிந்துகொள்ளவும் முன்னேறவும் உதவி செய்ய வேண்டும். பைபிள் படிப்பு எடுக்கும்போது ஒவ்வொரு பாராவையும் வாசித்து, கேள்வியை கேட்டால் மட்டும் இதை செய்ய முடியாது.
2. பைபிள் படிக்கிறவர்கள் என்னவெல்லாம் செய்ய நாம் உதவ வேண்டும்?
2 பைபிள் படிக்கிறவர்கள் யெகோவாவுடைய நண்பராகவும் தங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கவும் ரொம்ப நாள் ஆகலாம். அதனால், நாம்தான் அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும். பைபிள் படிக்கிறவர்கள், (1) கற்றுக்கொள்கிற விஷயங்களை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்; (2) அதெல்லாம் உண்மை என்று நம்ப வேண்டும்; (3) பைபிள் சொல்வதுபோல் செய்ய வேண்டும். இதற்கு நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும்.—யோவா. 3:16; 17:3; யாக். 2:26.
3. நாம் ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?
3 மனதில் இருப்பதைக் கண்டுபிடியுங்கள்: பைபிள் படிப்பு எடுக்கும்போது நாம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கக்கூடாது, அவர்களையும் பேச வைக்க வேண்டும். அப்போதுதான், படிக்கிற விஷயங்களை அவர்கள் புரிந்துகொண்டார்களா, அதை நம்புகிறார்களா என்று தெரிந்துகொள்ள முடியும். (யாக். 1:19) பைபிள் படிப்பு எடுக்கும்போது இதையெல்லாம் யோசித்து பாருங்கள்: பைபிள் சொல்வதை அவர்கள் புரிந்துகொண்டார்களா? மனதிலிருந்து பதில் சொல்கிறார்களா? படிக்கிற விஷயங்களை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? பைபிளில் சொல்லியிருப்பது உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? (1 தெ. 2:13) கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறார்களா? (கொலோ. 3:10) இதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களிடம் கேள்விகளை கேட்க வேண்டும். அவர்கள் பதில் சொல்லும்போது நன்றாக கவனிக்க வேண்டும்.—மத். 16:13-16.
4. நம்மிடம் பைபிள் படிக்கிறவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
4 நாள்கணக்காக செய்துகொண்டிருக்கிற விஷயங்களை மாற்றிக்கொள்வது கஷ்டம்தான். (2 கொ. 10:5) நம்மிடம் பைபிள் படிக்கிறவர்கள், படிக்கிற விஷயங்களை நம்பவில்லை என்றால் என்ன செய்வது? அதன்படி வாழவில்லை என்றால் என்ன செய்வது? அவருடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய, பைபிளும் கடவுளுடைய சக்தியும் அவர்களுக்கு உதவி செய்யும். அதுவரைக்கும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். (1 கொ. 3:6, 7; எபி. 4:12) ஒரு விஷயத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் திரும்ப திரும்ப அதை பற்றியே பேசாதீர்கள். தொடர்ந்து படிப்பு நடத்துங்கள், போகப்போக அவரே புரிந்துகொள்வார்.