சனி, ஜூலை 26
அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.—எபே. 5:1.
யெகோவாமேல் இருக்கும் அன்பாலும் நன்றியுணர்வாலும் அவரைப் பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்கிறோம். மக்கள் யெகோவாவிடம் நெருங்கி வரவேண்டும் என்ற ஆசையால்தான் நாம் ஊழியம் செய்கிறோம். நம்மைப் போல் அவர்களும் யெகோவாவை ஒரு பாசமான அப்பாவாக பார்க்க உதவுகிறோம். (யாக். 4:8) அதனால்தான், யெகோவாவுடைய அன்பு, நீதி, ஞானம், வல்லமை போன்ற குணங்களைப் பற்றி மக்களிடம் சந்தோஷமாகப் பேசுகிறோம். நாம் யெகோவாவைப் போலவே நடந்துகொள்வதன் மூலமும் அவரைப் புகழ்கிறோம், சந்தோஷப்படுத்துகிறோம், இந்த உலகத்தில் இருந்தும் தனியாகத் தெரிகிறோம். நாம் வித்தியாசமாக இருப்பதை மக்களும் பார்ப்பார்கள்; ஏன் அப்படி இருக்கிறோம் என்று யோசிப்பார்கள். (மத். 5:14-16) அவர்களிடம் பேசும்போது நாம் ஏன் அப்படி இருக்கிறோம் என்பதை விளக்க முடியும். இதனால் நல்ல மனதுள்ளவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வருவார்கள். இப்படியெல்லாம் நம் அப்பாவைப் புகழும்போது அவரை சந்தோஷப்படுத்துகிறோம்.—1 தீ. 2:3, 4. w24.02 10 ¶7
ஞாயிறு, ஜூலை 27
‘மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் கண்டிக்கவும் அவரால் முடியும்.’—தீத். 1:9.
முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரராக ஆக வேண்டும் என்றால், வாழ்க்கைக்குத் தேவையான சில திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்வது முக்கியம். சபையில் சில பொறுப்புகளை செய்ய அது உங்களுக்கு உதவும். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்கு உங்களுக்கு ஒரு வேலை தேவை. அதைக் கண்டுபிடிக்கவும், மற்றவர்களோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்ளவும் இந்த மாதிரியான திறமைகள் தேவை. உதாரணத்துக்கு, நன்றாக வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொள்ளுங்கள். தினமும் பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசிக்கும் ஒரு நபர் சந்தோஷமாக இருப்பார். அவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். (சங். 1:1-3) தினமும் பைபிளை வாசிக்கும்போது யெகோவா எப்படி யோசிக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். அப்போது, நாம் தெளிவாக யோசிப்போம். பைபிள் வசனங்களை எந்த சூழ்நிலையில் எப்படிப் பொருத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வோம். (நீதி. 1:3, 4) பைபிளில் இருந்து கற்றுக்கொடுக்க தெரிந்த, ஆலோசனை கொடுக்க தெரிந்த சகோதரர்களிடம்தான் சபையில் இருக்கிறவர்கள் உதவி கேட்டு வருவார்கள். உங்களுக்கு நன்றாக வாசிக்கவும் எழுதவும் தெரிந்தால், பேச்சுகளை நன்றாக தயாரித்துக் கொடுக்க முடியும், பதில்களையும் சொல்ல முடியும். இது மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும், உங்கள் விசுவாசத்தையும் பலப்படுத்தும். w23.12 26-27 ¶9-11
திங்கள், ஜூலை 28
‘உலகத்தோடு ஒன்றுபட்டிருக்கிற பிசாசைவிட உங்களோடு ஒன்றுபட்டிருக்கிற கடவுள் உயர்ந்தவராக இருக்கிறார்.’ —1 யோ. 4:4.
உங்களுக்குப் பயமாக இருக்கும்போது, சாத்தான் இல்லாத காலத்தில் யெகோவா என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதைப் பற்றி யோசியுங்கள். 2014 மண்டல மாநாட்டில் ஒரு நடிப்பு இருந்தது. அதில் ஒரு அப்பா தன் குடும்பத்தோடு 2 தீமோத்தேயு 3:1-5-ல் இருப்பதைக் கலந்துபேசுவார். புதிய உலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி அந்த வசனங்கள் சொல்லியிருந்தால், அது எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் வாசிப்பார்கள்: “புதிய உலகத்தில் மிகவும் சந்தோஷமான காலம் வரும் என்று தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் மற்றவர்களை நேசிப்பவர்களாக, ஆன்மீக காரியங்களை விரும்புகிறவர்களாக, அடக்கமுள்ளவர்களாக, மனத்தாழ்மையுள்ளவர்களாக, கடவுளைத் துதிக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிகிறவர்களாக, நன்றியுள்ளவர்களாக, உண்மையுள்ளவர்களாக, பந்தபாசமுள்ளவர்களாக, ஒத்துப்போகிறவர்களாக, மற்றவர்களைப் பற்றி எப்போதும் நல்ல விதமாக பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக, மென்மையானவர்களாக, நல்ல காரியங்களை விரும்புகிறவர்களாக, நம்பகமானவர்களாக, வளைந்துகொடுப்பவர்களாக, தலைக்கனம் இல்லாதவர்களாக, சுகபோக வாழ்க்கையை நேசிக்காமல் கடவுளை நேசிக்கிறவர்களாக, கடவுள் பக்தியுள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு நீ நெருங்கி இரு.” புதிய உலகத்தில் நம் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிக் குடும்பத்தில் இருக்கிறவர்களிடமும் சகோதர சகோதரிகளிடமும் அடிக்கடி பேசுகிறீர்களா? w24.01 6 ¶13-14