உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 17-19
  • சத்தாய்ப்பதில் என்ன தவறு?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சத்தாய்ப்பதில் என்ன தவறு?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சத்தாய்ப்பது என்றால் என்ன?
  • சத்தாய்க்கும்படி தூண்டுவது
  • வாழ்நாள் பூராவும் தொடரும் பின்விளைவுகள்
  • எப்படி மாறுவது
  • ஸ்கூலில் யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் என்ன செய்யலாம்?
    இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்
  • என் பிள்ளைக்கு யாராவது தொல்லை கொடுத்தால் என்ன செய்வது?
    குடும்ப ஸ்பெஷல்
  • பள்ளியில் வீம்புக்காரர்களைக்குறித்து நான் என்ன செய்யக்கூடும்?
    விழித்தெழு!—1990
  • வம்பிழுக்கிறவர்களை சமாளிக்க யெகோவாவை நம்பியிருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 17-19

இளைஞர் கேட்கின்றர்.

சத்தாய்ப்பதில் என்ன தவறு?

‘அட! நான் சும்மா விளையாட்டுக்குத்தான் செஞ்சேன். அதை போய் யாராவது பெருசுப்படுத்துவாங்களா? அதவுமில்லாமே, ரானுக்குதானே செஞ்சேன், அவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.’

உங்களுடைய சகாக்கள் அநேகரைக் காட்டிலும் நீங்கள் உருவத்திலும் பலத்திலும் உருண்டு திரண்டு இருக்கலாம். அல்லது மகா புத்திசாலியாக, குத்தலாய் பேசுவதில் வல்லவனாக, முரடனாகவும்கூட இருக்கலாம். என்னவிருந்தாலும் சரி, மற்றவர்களை நடுங்கவைப்பது, கேலிசெய்வது அல்லது இக்கட்டில் மாட்டிவிட்டு சிரிப்பது போன்றவை உங்களுக்கு கைவந்த கலைகளாக இருக்கலாம்.

மற்றவர்களை சத்தாய்ப்பதன் (bullying) மூலம் நீங்கள் உங்களுடைய நண்பர்களை சிரிக்கவைக்கிறீர்கள் என்றாலும், அது சாதாரண விஷயம் அல்ல. சொல்லப்போனால், சத்தாய்ப்புக்கு பலியாகும் ஆட்கள், எதிர்பார்த்திராத அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். “சத்தாய்க்கப்படும் ஆட்களில் 90 சதவிகிதத்தினர், வகுப்பில் தரமான மார்க்குகள் வாங்குவதில் குறைதல், கவலை அதிகரிப்பு, நண்பர்களை அல்லது சமூக கூட்டுறவுகளை இழந்துவிடுதல் போன்ற பாதிப்புகளால் கஷ்டப்பட்டார்கள் என்று கூறியதை” ஐ.மா.-வில் பள்ளிப் பருவ இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு கண்டுபிடித்தது. ஜப்பானில் 13 வயது சிறுவன் ஒருவன், “தான் மூன்று வருடங்களாக சத்தாய்க்கப்பட்டதை விவரமாக எழுதிவைத்துவிட்டு, தூக்கில் தொங்கினான்.” a

சத்தாய்ப்பவராக ஒருவரை ஆக்குவது எது? நீங்களும் அப்படிப்பட்ட ஒருவராக இருப்பீர்களானால், எப்படி நீங்கள் மாறலாம்?

சத்தாய்ப்பது என்றால் என்ன?

நோவாவின் நாளில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முன்பு வாழ்ந்திருந்த சத்தாய்ப்பவர்களைப் பற்றி பைபிள் கூறுகிறது. அவர்கள் நெஃபிலிம்கள் என்று அழைக்கப்பட்டார்கள். நெஃபிலிம் என்பதன் அர்த்தம் “மற்றவர்களை வீழ்த்தி சாய்ப்பவர்கள்.” அவர்களது அராஜகத்தின்போது, “பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.”—ஆதியாகமம் 6:4, 11.

இருப்பினும், நீங்கள் சத்தாய்ப்பவராக ஆகவேண்டுமென்றால் ஒருவரை ஏளனமாக அடிக்கவேண்டும் அல்லது முரட்டுத்தனமாக நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. மற்றவர்களை, விசேஷமாக பலவீனரை அல்லது மென்மையானவரை கொடூரமான முறையிலோ துன்பம்தரும் விதத்திலோ நடத்தும் எவரும் சத்தாய்ப்பவரே. (பிரசங்கி 4:1-ஐ ஒப்பிடுக.) சத்தாய்ப்பவர்கள் மற்றவர்களை மிரட்டவும், நடுங்கவைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சிப்பார்கள். ஆனால், அவர்களில் அநேகர் வாயாலேயே காரியத்தை சாதிக்கிறார்கள், அவர்களது கைகள் பேசுவது கொஞ்சமே. பார்க்கப்போனால், இந்தமாதிரியான உணர்ச்சிப்பூர்வ கொடுமைப்படுத்துதலே அடிக்கடி நடக்கிறது. இவ்வாறாக, அவமதிப்பது, குத்தலாக பேசுவது, கேலியாக பெயர் வைத்து அழைப்பது ஆகியவையும் இதில் உள்ளடங்கியிருக்கலாம்.

சில நேரங்களில், சத்தாய்ப்பது தந்திரமாகவும் செய்யப்படலாம். உதாரணமாக, லிசாவுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்க்கலாம். b அவள் தன் தோழியர் கூட்டத்தோடே வளர்ந்தாள். ஆனால் அவளுக்கு 15 வயதானபோது நிலைமைகள் தலைகீழாக மாறத்துவங்கின. லிசா பேரழகியாக தோன்றினாள், பிறரது கவனமெல்லாம் அவள்பக்கம் அதிகமாக திரும்பின. அவள் விளக்குகிறாள்: “என் தோழிகள் என்னை ஒதுக்கித்தள்ளினார்கள். மறைமுகமாக, என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொன்னார்கள். சிலநேரங்களில் என் மூஞ்சியில் அடிச்ச மாதிரி பேசினார்கள்.” அவளைப் பற்றி பொய்யையெல்லாம் பரப்பி, அவளுடைய நற்பெயரை கெடுக்க முயன்றார்கள். ஆம், பொறாமையின் காரணமாக, கொஞ்சமும் உணர்ச்சியே இல்லாமல், கொடூரமான முறையில் அவளை சத்தாய்த்தார்கள்.

சத்தாய்க்கும்படி தூண்டுவது

முரட்டுத்தனமான நடத்தை பெரும்பாலும் ஒருவருடைய குடும்ப சூழலுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. “என்னுடைய அப்பா முரடராக இருந்தார். ஆகவே நானும் முரடனாக இருந்தேன்” என்கிறான் ஸ்காட் என்ற இளைஞன். ஏரனுக்கும் வீட்டுச் சூழல் சரியில்லை. அவன் இவ்வாறு நினைவுகூருகிறான்: “மற்றவர்கள் என் குடும்ப நிலைமையை—வித்தியாசமான என் குடும்பத்தை—பற்றி தெரிந்துவைத்திருந்தார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். ஆட்கள் என்மீது அனுதாபப்படுவதை நான் விரும்பவில்லை.” ஆகவே, ஏரன் விளையாட்டுக்களில் பங்குபெற்றால் அவற்றில் தான் ஜெயித்தே தீரவேண்டும் என்ற வெறி அவனுக்கு இருந்தது. ஆனால், ஜெயிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவன், தோல்வியுற்ற எதிர் அணியினரை பலவந்தமாக கேவலப்படுத்துவான்.

மறுபட்சத்தில், கடவுள் பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டவன் பெரன்ட். ஆனாலும் அவன் இவ்வாறு ஒத்துக்கொள்கிறான்: “நான் மற்றவர்களை சிரிக்கவைத்தேன். ஆனால் சிலநேரங்களில் எனக்கே தெரியாமல் வரம்புமீறிபோய்விடுவதால் எவருடைய மனதையாவது புண்படுத்திவிடுவேன்.” குதூகலமாக இருக்கவேண்டும், தன்பக்கமாக மற்றவர்களின் கவனத்தைத் திருப்பவேண்டும் என்று பெரன்டுக்கு இருந்த ஆசை, மற்றவர்களது உணர்ச்சிகளை புண்படுத்தும்படி செய்தது.—நீதிமொழிகள் 12:18.

வேறு சில இளைஞர்கள்மீது, டெலிவிஷன் செல்வாக்குச் செலுத்துவதுபோல் தோன்றுகிறது. குற்றச்செயலை சித்தரிக்கும் நாடகங்கள், ‘முரட்டுக் காளைகளை’ ஒரேயடியாக தூக்கிவைத்து கொண்டாடுகின்றன. அதேநேரத்தில் தயவாக நடந்துகொள்வதை ஆண்மையற்ற செயலாக தோன்றும்படி செய்கின்றன. புகழ்பெற்ற நகைச்சுவைகள் குத்தலும் நக்கலும் நிறைந்து இருக்கின்றன. விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் சண்டைகளையும், காதுகொடுத்து கேட்கமுடியாத பேச்சுக்களையும் செய்தித்தாள் அறிக்கைகள் அடிக்கடி பெரிதுப்படுத்தி காட்டுகின்றன. நாம் மற்றவர்களை நடத்தும் விதத்தில் நம்முடைய நண்பர்களும்கூட செல்வாக்குச் செலுத்துகிறார்கள். நம் நண்பர்கள் சத்தாய்ப்பவர்களாக இருந்தால், நம்மை எங்கே சத்தாய்க்கப்போகிறார்கள் என்று பயந்தே, நாமும் ஒரே குட்டைக்குள் ஊறின மட்டைபோல் மாறிவிடுவோம்.

உங்களுடைய நிலைமை என்னவாக இருந்தாலும், ஒருவேளை சத்தாய்க்கும் கலைகளில் புகுந்துவிளையாடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு இரையாகும் ஆட்கள் மாத்திரம் அல்ல பாதிக்கப்படுவது.

வாழ்நாள் பூராவும் தொடரும் பின்விளைவுகள்

ஸைக்காலஜி டுடே என்ற பத்திரிகை அறிவிக்கிறது: “சத்தாய்ப்பது பிள்ளைப்பருவத்தில் ஆரம்பமாகியிருக்கலாம், ஆனால் பெரியவராக வளர்ந்தாலும் கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது.” “இரண்டாம் கிரேடில் படிக்கும்போதே சத்தாய்ப்பவர்கள் என்று பெயரெடுத்த பையன்களின் 65 சதவிகிதத்தினர், அவர்களுக்கு 24 வயதாவதற்குள் பெரும் கேடிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர்” என்பதை கண்டுபிடித்தது த டாலாஸ் மார்னிங் நியூஸ் நடத்திய ஓர் ஆய்வு அறிக்கை.

உண்மைதான், சத்தாய்க்கும் எல்லாரும் குற்றவாளிகளாக ஆவதில்லை. ஆனால் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொண்டால், பிற்பட்டு அது உங்களது வாழ்க்கையில் உண்மையிலேயே பிரச்சினைகளை உருவாக்கலாம். கூடவே ஒட்டிக்கொண்டுவரும் இப்பழக்கம் உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் நுழைந்து, உங்கள் துணைவருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தீராத மன உளைச்சல் தருவதில் விளைவடையும். மற்றவர்களிடம் நல்லவிதமாக ஒத்துப்போகும் ஆட்களையே வேலையில் வைத்துக்கொள்ள முதலாளிகள் விரும்புவதால், உங்களுக்கு வரும் வேலைவாய்ப்புகளும் பறிபோகும். அவ்வாறே கிறிஸ்தவ சபையிலும், மேற்கொண்டு எவ்வித சிலாக்கியங்களும் கிடைக்காதபடி இது முட்டுக்கட்டையாக வந்துநிற்கும். “ஒரு மூப்பராக சேவிப்பதற்கான தகுதியை என்றாவது ஒருநாள் அடையவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், நான் எதையாவது குத்தலாக சொல்லிவிடுவேன் என்று நினைத்து, ஆட்கள் தங்கள் பிரச்சினைகளுடன் என்னிடம் மனமார அணுகமாட்டார்கள் என்பதை உணர்ந்துகொள்ள என் அப்பா எனக்கு உதவினார்” என்று கூறுகிறார் பெரன்ட்.—தீத்து 1:7.

எப்படி மாறுவது

எப்போதுமே நாம் செய்யும் தவறுகள் நம் கண்களுக்கு தெளிவாக தெரியாது. ‘அவன் அக்கிரமம் அருவருப்பென்று காணப்படுமளவும் அது அவன் பார்வையில் இன்பமாய்த் தோன்றும்’ அளவுக்கும்கூட ஒருவர் நடந்துகொள்வார் என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (சங்கீதம் 36:2, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆகவே, உங்கள் குறைகளை சுட்டிக்காட்டும்படி உங்கள் பெற்றோரை, நம்பிக்கையான நண்பரை அல்லது முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவரை நீங்கள் கேட்கலாம். உண்மையை ஜீரணிப்பது ஒருவேளை உங்களுக்குக் கடினமாக இருக்கும்; ஆனால், நீங்கள் செய்யவேண்டிய மாற்றங்களைச் செய்ய அதுவே ஏற்ற உதவியாக இருப்பதை நீங்கள் உணருவீர்கள். (நீதிமொழிகள் 20:30) “ஆலோசனையை கவனமாக கேட்டதுதான் எனக்கு பேருதவியாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். நான் எங்குத் தவறுகிறேன் என்பதை உண்மையான நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். எப்போதும் என் குறைகளைப் பற்றியே கேட்டுக்கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லைதான், ஆனால் அது எனக்கு உண்மையிலேயே தேவைப்பட்டது” என்று கூறுகிறான் ஏரன்.

அப்படியென்றால், உங்களுடைய ஆளுமையை முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்பதா இதன் அர்த்தம்? இல்லை, அநேகமாக உங்களுடைய சிந்தனையையும் உங்களுடைய சில நடவடிக்கைகளையும் சற்றே மாற்றியமைத்தால் போதுமானது. (2 கொரிந்தியர் 13:11) உதாரணத்திற்கு, உங்களது திடகாத்திரமான உருவம், பலம் அல்லது புத்திக்கூர்மை ஆகியவற்றின் காரணமாக என்னைப்போல யாரிருக்க முடியும் என்ற நினைப்பு இதுவரையாக உங்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால், ‘மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணி’ நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (பிலிப்பியர் 2:3) மற்றவர்கள் எப்படிப்பட்ட உருவத்தை அல்லது பலத்தை பெற்றிருந்தாலும் வியந்து போற்றத்தக்க பண்புகளோடு திகழுகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

முரட்டுத்தனம் அல்லது அடக்கி ஆளும் மனோபாவத்தையும் உங்களிடத்திலிருந்து நீக்கவேண்டிய அவசியம் இருக்கலாம். “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்ற ஆலோசனைக்கு ஏற்ப நடந்துகொள்ள நீங்கள் முயற்சிசெய்யுங்கள். (பிலிப்பியர் 2:4) நீங்கள் உங்களது கருத்தைத் தெரிவிக்கவேண்டுமென்றால், அதனை அவதூறாக, புண்படுத்தும் விதமாக அல்லது அவமரியாதையாக பேசாதீர்கள்.—எபேசியர் 4:31.

ஒருவேளை சத்தாய்க்கவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு அடிக்கடி வருமென்றால், அவ்விதம் செய்த நெஃபிலிம்களை கடவுள் அழித்துவிட்டதை மறந்துவிடாதீர்கள். (ஆதியாகமம் 6:4-7; 7:11, 12, 22) பல நூற்றாண்டுகளுக்குப்பின்பு, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் நாட்களில், திக்கற்றவர்களை ‘தள்ளிய’ மற்றும் ‘முட்டிய’ குற்றம் செய்தவர்கள்மேல் கடவுள் தமது பெரும் வெறுப்பை ஊற்றினார். (எசேக்கியேல் 34:21) சத்தாய்ப்பதை யெகோவா வெறுக்கிறார் என்பதே ஒருவருக்கு தேவையான மாற்றங்களை செய்துகொள்ள சக்திவாய்ந்த தூண்டுதலாக இருக்கும் அல்லவா!

பைபிள் நியமங்களை ஜெபசிந்தையோடு தியானிக்கவும் அது உதவுகிறது. பொன்விதி இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) எவரையாவது பயமுறுத்தவேண்டும் என்ற ஆசை தலைதூக்கும்போது, உங்களை நீங்களே இவ்வாறு கேளுங்கள்: ‘என்னை யாராவது சத்தாய்க்கவும், பயமுறுத்தவும், அல்லது இழிவாக நடத்தவும் நான் விரும்புவேனா? அப்படியென்றால், நான் ஏன் மற்றவர்களை அவ்விதம் நடத்தவேண்டும்?’ பைபிள் நமக்கு இவ்வாறு இருக்கும்படி கட்டளையிடுகிறது: ‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருங்கள்.’ (எபேசியர் 4:32) இவ்விஷயத்தில் இயேசு ஒரு பரிபூரண முன்மாதிரியை வைத்தார். அவர் மற்ற மனிதர்களைக் காட்டிலும் மேன்மையுள்ளவராக இருந்தபோதிலும், அவர் ஒவ்வொருவரையும் தயவோடும், புரிந்துகொள்ளுதலோடும் மரியாதையோடும் நடத்தினார். (மத்தேயு 11:28-30) உங்களைக்காட்டிலும் பலவீனமாய் இருக்கும் ஒருவரை அல்லது உங்களைப் பார்த்தால் பயந்துநடுங்கும் ஒருவரை சந்திக்கும்போது இயேசு எவ்வாறு நடத்தினாரோ அதேபோல் நடத்த முயற்சிசெய்யுங்கள்.

ஒருவேளை வீட்டில் உங்களை நடத்தும்விதம் உங்களுக்கு கோபத்தை உண்டாக்கி, நீங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதற்கு காரணமாக இருந்தால் அப்போது என்ன? சில சந்தர்ப்பங்களில் கோபப்பட்டால் தவறொன்றுமில்லை என்று நியாயம் காட்டப்படலாம். (பிரசங்கி 7:7-ஐ ஒப்பிடுக.) இருந்தாலும்கூட அவ்வாறு செய்யக்கூடாது என்று நீதிமானாகிய யோபு எச்சரிக்கப்பட்டதை பைபிள் நமக்குச் சொல்கிறது: “கோபம் உங்களை வஞ்சனையான [செயல்களுக்கு] . . . இழுத்துச்செல்லாதபடி கவனமாய் இருக்கவும் . . . தீமையான செயலிடமாக திரும்பாதபடி நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.” (யோபு 36:18, 21, NW) நீங்கள் மோசமாக நடத்தப்படுகிறீர்கள் என்பதற்காக மற்றவர்களை மோசமாக நடத்த உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தப் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் பேச முயலுவதே, அவற்றை தீர்ப்பதற்கான ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் பயங்கரமான கொடுமைக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்றால், மேற்கொண்டும் உங்களுக்கு துன்பம் நேராமல் இருக்க குடும்பத்திற்கு வெளியே இருந்து உங்களுக்கு உதவி தேவைப்படலாம்.

மாறுவது அவ்வளவு சுலபம் அல்ல என்றாலும் மாற முடியும். பெரன்ட் சொல்கிறார்: “இதற்காக நான் தினமும் ஜெபம் செய்கிறேன். சில நல்ல மாற்றங்களை செய்துகொள்ள யெகோவா எனக்கு உதவியுள்ளார்.” மற்றவர்களை நடத்தும் விதத்தில் நீங்களும்கூட மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். அப்படி செய்யும்போது, ஆட்கள் உங்களை இன்னும் அதிகமாக விரும்புவதை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். சத்தாய்ப்பவர்களைக் கண்டு ஆட்கள் பயப்படலாம், ஆனால் எவரும் அவர்களை விரும்புவதில்லை என்பது நினைவிருக்கட்டும்.

[அடிக்குறிப்புகள்]

a சத்தாய்ப்புக்கு இரையாகும் ஆட்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி என்ற கலந்தாலோசிப்புக்கு, எமது ஆகஸ்ட் 8, 1989 ஆங்கில இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . பள்ளியில் சத்தாய்க்கப்படுவதைப் பற்றி நான் என்ன செய்யலாம்?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

“சத்தாய்ப்பது பிள்ளைப்பருவத்தில் ஆரம்பமாகியிருக்கலாம், ஆனால் பெரியவராக வளர்ந்தாலும் கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது”

[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]

வார்த்தையால் வசைபாடுவதும் ஒருவித சத்தாய்ப்புதான்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்