‘உங்கள் சுயபுத்தியின்மேல் சாயாதீர்கள்’
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.”—நீதி. 3:5.
1, 2. (அ) நாம் என்ன சூழ்நிலைகளை எதிர்ப்படலாம்? (ஆ) வேதனையான, முக்கியத் தீர்மானங்களை எடுக்க வேண்டிய, கெட்ட ஆசைகள் தலைதூக்குகிற சூழ்நிலைகளில் நாம் யார்மீது சார்ந்திருக்க வேண்டும், ஏன்?
சிந்தியாவின்a முதலாளி ஏற்கெனவே தன் கம்பெனியின் பிரிவுகளை ஒவ்வொன்றாக மூட ஆரம்பித்திருந்தார்; பலரை வேலையிலிருந்து நீக்கியிருந்தார். அடுத்ததாகத் தன்னையும் அவர் வேலையிலிருந்து நீக்கிவிடுவார் என சிந்தியா நினைக்கிறார். வேலை பறிபோய்விட்டால் அவர் என்ன செய்வார்? செலவுகளை எப்படிச் சமாளிப்பார்? பமலா என்ற இன்னொரு கிறிஸ்தவச் சகோதரி, பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படுகிற இடத்திற்குக் குடிமாறிப் போக விரும்புகிறார், ஆனால் அவர் அப்படிப் போக வேண்டுமா? சாமுவேல் என்ற இளைஞருக்கு வேறு விதமான கவலை. சிறுவயதில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. இப்போது 20 வயதைத் தாண்டிவிட்ட அவருக்கு, மறுபடியும் அந்தப் பழக்கத்தில் ஈடுபட ஆசை வந்திருக்கிறது. அதை அவர் எப்படி விட்டொழிக்க முடியும்?
2 வேதனையான சூழ்நிலைகளில்... முக்கியத் தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில்... கெட்ட ஆசைகள் தலைதூக்கும் சூழ்நிலைகளில்... நீங்கள் யார்மீது சார்ந்திருக்கிறீர்கள்? உங்கள்மீதே சார்ந்திருக்கிறீர்களா, அல்லது யெகோவாவின்மேல் ‘உங்கள் பாரத்தை வைக்கிறீர்களா’? (சங். 55:22) “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (சங். 34:15) அப்படியென்றால், முழு இருதயத்தோடு யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பதும், நம் சுயபுத்தியின் மீது சாயாமல் இருப்பதும் எவ்வளவு முக்கியம்!—நீதி. 3:5.
3. (அ) யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பதில் எது அடங்கியிருக்கிறது? (ஆ) சிலர் ஏன் தங்கள் சுயபுத்தியின் மீது சாயலாம்?
3 முழு இருதயத்தோடு யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பதில், எல்லாவற்றையும் அவரது வழிகளின்படி... அவரது சித்தத்தின்படி... செய்வது அடங்கியிருக்கிறது. அப்படிச் செய்வதற்கு, விடாமல் அவரிடம் ஜெபிப்பதும் அவரது வழிநடத்துதலுக்காக உள்ளப்பூர்வமாய் மன்றாடுவதும் மிக முக்கியம். என்றாலும், யெகோவாவின் மீது முழுமையாகச் சார்ந்திருப்பது பலருக்கு ஒரு சவாலாக இருக்கிறது. உதாரணத்திற்கு, லின் என்ற கிறிஸ்தவச் சகோதரி இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “யெகோவாமேல் முழு நம்பிக்கை வைப்பது எனக்கு எப்போதுமே ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது.” ஏன்? “என் அப்பாவோடு எனக்கு எந்த ஒட்டுறவும் இருந்ததில்லை. என் அம்மாவும் என்னிடம் பாசம் காட்டியதில்லை, தேவையானதைக் கொடுத்ததும் இல்லை. அதனால் சீக்கிரத்தில் என்னை நானே கவனித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்” என்று அவர் சொல்கிறார். அவருடைய குடும்பப் பின்னணியின் காரணமாக, யாரையும் அவரால் முழுமையாக நம்ப முடியவில்லை. வேறு சிலர், சொந்தத் திறமையின் காரணமாக அல்லது வாழ்வில் சில விஷயங்களைச் சாதித்திருப்பதன் காரணமாக, தங்கள்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு மூப்பர் தன் அனுபவத்தின் மீது சார்ந்திருக்கலாம்; அதனால், கடவுளிடம் முதலில் ஜெபம் செய்யாமல் சபை விஷயங்களைத் தானாகவே கவனித்துக்கொள்ள ஆரம்பிக்கலாம்.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பார்ப்போம்?
4 யெகோவா என்ன எதிர்பார்க்கிறார்? நம் ஜெபத்திற்கு இசைவாக நடக்கவும் தமது சித்தத்திற்கு ஏற்ப செயல்படவும் நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், அவர்மீது பாரங்களை வைத்துவிட்டு, அதேசமயத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க நம் பங்கில் முயற்சி எடுப்பது எப்படி? தீர்மானங்கள் எடுக்கும்போது எதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? கெட்ட ஆசைகளை விட்டொழிக்கப் போராடுகையில் ஜெபம் செய்வது ஏன் முக்கியம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பைபிள் உதாரணங்களின் உதவியோடு பார்க்கலாம்.
வேதனைகளை அனுபவிக்கையில்
5, 6. அசீரிய ராஜா அச்சுறுத்தியபோது எசேக்கியா என்ன செய்தார்?
5 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘[எசேக்கியா] கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தார்.’ ஆம், அவர் ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் நம்பிக்கை வைத்தார்.’ (2 இரா. 18:5, 6) அசீரிய ராஜாவான சனகெரிப் தன் பிரதிநிதிகளான ரப்சாக்கேயையும் மற்றவர்களையும் ஒரு பெரிய படையோடு எருசலேமுக்கு அனுப்பியபோது எசேக்கியா என்ன செய்தார்? வலிமைமிக்க அந்த அசீரியப் படை ஏற்கெனவே யூதாவின் அரணான பட்டணங்கள் பலவற்றைக் கைப்பற்றியிருந்தது; அடுத்து எருசலேமைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. அதனால், எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்று இவ்வாறு ஜெபம் செய்ய ஆரம்பித்தார்: “இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும்.”—2 இரா. 19:14-19.
6 எசேக்கியா தன் ஜெபத்திற்கு இசைவாகச் செயல்பட்டார். ஜெபம் செய்ய ஆலயத்திற்குப் போவதற்கு முன்பே, ரப்சாக்கே பழித்துப்பேசும்போது பதிலுக்கு எதுவும் சொல்ல வேண்டாமென மக்களிடம் கூறினார். அதோடு, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆலோசனையைக் கேட்டு வரும்படி ஆட்களை அனுப்பினார். (2 இரா. 18:36; 19:1, 2) எசேக்கியா தான் செய்ய வேண்டியதையெல்லாம் செய்தார். யெகோவாவின் சித்தத்திற்கு முரணான ஒன்றைச் செய்து பிரச்சினையைத் தீர்க்க அவர் முயலவில்லை; ஆம், எகிப்திடமிருந்தோ அயல்நாடுகளிடமிருந்தோ உதவியை நாடவில்லை. அவர் தன் சுயபுத்தியின் மீது சாய்வதற்குப் பதிலாக யெகோவாவின் மீது நம்பிக்கை வைத்தார். சனகெரிப்பின் படைவீரர்களில் 1,85,000 பேரை யெகோவாவின் தூதர் வெட்டி வீழ்த்தினார்; அப்போது, சனகெரிப் “பிரயாணப்பட்டு,” நினிவேக்குத் திரும்பினான்.—2 இரா. 19:35, 36.
7. அன்னாளும் யோனாவும் செய்த ஜெபங்கள் நமக்கு எவ்வாறு ஆறுதல் அளிக்கின்றன?
7 லேவியரான எல்க்கானாவின் மனைவி அன்னாள் பிள்ளைப்பேறு இல்லாமல் வேதனையில் தவித்துக்கொண்டிருந்தபோது யெகோவாவின் மீது சார்ந்திருந்தார். (1 சா. 1:9-11, 18) தீர்க்கதரிசியான யோனா பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது, “என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்” என்று ஜெபம் செய்தார், அதனால் காப்பாற்றப்பட்டார். (யோனா 2:1, 2, 10) நாம் எப்பேர்ப்பட்ட பிரச்சினையில் சிக்கியிருந்தாலும், உதவிக்காக யெகோவாவிடம் ‘விண்ணப்பம்’ செய்ய முடியும் என்பதை அறிவது என்னே ஆறுதல் அளிக்கிறது!—சங்கீதம் 55:1, 16-ஐ வாசியுங்கள்.
8, 9. எசேக்கியா, அன்னாள், யோனா ஆகியோர் தங்களுடைய ஜெபங்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 எசேக்கியா, அன்னாள், யோனா ஆகியோரது உதாரணங்கள் மற்றொரு முக்கியப் பாடத்தையும் நமக்குக் கற்பிக்கின்றன; ஆம், கஷ்டமான சூழ்நிலையில் ஜெபம் செய்யும்போது எதை மறந்துவிடக் கூடாது என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றன. மூன்று பேருமே பெரிய பிரச்சினைகளைச் சந்தித்தபோது வேதனையில் துடித்தார்கள். இருந்தாலும், அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படவில்லை... தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே குறியாக இல்லை... என்பதை அவர்களது ஜெபங்கள் காட்டுகின்றன. கடவுளுடைய பெயர், அவரது வணக்கம், அவரது சித்தம் போன்ற விஷயங்களுக்குத்தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். எசேக்கியா, யெகோவாவின் பெயர்மீது குவிக்கப்பட்ட களங்கத்தைக் குறித்து வருத்தப்பட்டார். அன்னாள், சீலோவிலிருந்த ஆசரிப்புக்கூடாரத்தில் சேவை செய்ய தன் உயிருக்கு உயிரான மகனையே அர்ப்பணித்தார். அதேபோல் யோனா, “நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்” என்றார்.—யோனா 2:9.
9 ஒரு சிக்கலான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றும்படி நாம் கடவுளிடம் ஜெபம் செய்யும்போது, எதற்காக அப்படி ஜெபம் செய்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில்தான் நாம் குறியாக இருக்கிறோமா அல்லது யெகோவாவையும் அவரது நோக்கத்தையும் மனதில் வைத்திருக்கிறோமா? சில சமயங்களில் நம்முடைய பிரச்சினைகளிலேயே நாம் மூழ்கிவிடுவதால், ஆன்மீக விஷயங்களுக்குக் கவனம் செலுத்தாமல் போய்விடலாம். உதவிக்காக ஜெபம் செய்யும்போது நம் மனதில் இருக்க வேண்டியதெல்லாம், யெகோவா... அவரது பெயரைப் பரிசுத்தப்படுத்துவது... அவரது பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வது... ஆகியவையே. அப்போது, நாம் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்காவிட்டால்கூட நம்பிக்கையோடு இருக்க முடியும். அந்தச் சூழ்நிலையைச் சகிக்க நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பதன் மூலம் கடவுள் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார்.—ஏசாயா 40:29-ஐயும் பிலிப்பியர் 4:13-ஐயும் வாசியுங்கள்.
தீர்மானங்கள் எடுக்கையில்
10, 11. என்ன செய்வதென்றே தெரியாத சூழ்நிலையில் யோசபாத் என்ன செய்தார்?
10 வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களை நீங்கள் எப்படி எடுக்கிறீர்கள்? முதலில் நீங்களே ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டு, பிறகு அந்தத் தீர்மானத்தை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்கிறீர்களா? ஒரு சந்தர்ப்பத்தில் யூதாவின் ராஜா யோசபாத் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். மோவாபியரும் அம்மோனியரும் ஒன்றுதிரண்டு யூதாமீது படையெடுத்து வந்தார்கள். யூதாவோ அவர்களை எதிர்த்துப் போரிடும் நிலையில் இல்லை. அப்போது யோசபாத் என்ன செய்தார்?
11 ‘யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டார்’ என்று பைபிள் சொல்கிறது. யூதாவெங்கும் இருந்தவர்கள் விரதம் இருக்க வேண்டுமென அவர் அறிவித்தார்; பின்பு, ‘யெகோவாவிடம் சகாயந்தேட’ எல்லாரையும் ஒன்றுகூடி வரச் செய்தார். அதன்பின், யூதாவையும் எருசலேமையும் சேர்ந்த மக்கள் அனைவரின் முன்பாகவும் அவர் எழுந்து நின்று ஜெபம் செய்தார். அந்த ஜெபத்தில் கடவுளிடம் இவ்வாறு கெஞ்சினார்: “எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது.” யோசபாத்தின் ஜெபத்தை உண்மைக் கடவுள் கேட்டு, அற்புதமாகக் காப்பாற்றினார். (2 நா. 20:3-12, 17) நாம் தீர்மானங்களை எடுக்கும்போது, அதுவும் நம் ஆன்மீகத்தைப் பாதிக்கும் தீர்மானங்களை எடுக்கும்போது, சுயபுத்தியின் மீது சாயாமல் யெகோவாவின் மீது சார்ந்திருக்க வேண்டும், அல்லவா?
12, 13. தீர்மானங்கள் எடுக்கும் விஷயத்தில் தாவீது ராஜா நமக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்?
12 சில சமயங்களில் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பது நமக்குச் சுலபமாகத் தெரியலாம்; ஒருவேளை, முன் அனுபவத்தின் காரணமாக அந்தப் பிரச்சினைக்குச் சட்டென ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன செய்வது? தாவீது ராஜாவைப் பற்றிய ஒரு பதிவு இதற்குப் பதிலளிக்கிறது. அமலேக்கியர் சிக்லாக் நகரைச் சூறையாடியபோது, தாவீது மற்றும் அவருடைய ஆட்களின் மனைவிகளையும் பிள்ளைகளையும் சிறைபிடித்துச் சென்றுவிட்டார்கள். அப்போது தாவீது, “நான் கொள்ளைக் கூட்டத்தாரை பின்தொடரட்டுமா?” என்று யெகோவாவிடம் கேட்டார். அதற்கு அவர், “பின்தொடர்! நீ வெற்றி அடைவது உறுதி! சிறைப்பட்டோரை மீட்பதும் உறுதி!” என்றார். தாவீது அவ்வாறே செய்து, ‘அமலேக்கியர் கொண்டுசென்ற எல்லாவற்றையும் மீட்டார்.’—1 சா. 30:7-9, 18-20, பொது மொழிபெயர்ப்பு.
13 அமலேக்கியர் சூறையாடிச் சென்ற கொஞ்சக் காலத்திற்குப் பிறகு பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள். மறுபடியும் தாவீது யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார், தெளிவான பதிலையும் பெற்றார். “போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன்” என்று கடவுள் சொன்னார். (2 சா. 5:18, 19) அதன்பின் சீக்கிரத்திலேயே, பெலிஸ்தர் மறுபடியும் தாவீதோடு போர்செய்ய வந்தார்கள். இம்முறை அவர் என்ன செய்தார்? ‘இந்த மாதிரி சூழ்நிலையை ஏற்கெனவே இரண்டு தடவை சந்தித்துவிட்டேன். இந்தத் தடவையும் கடவுளுடைய எதிரிகளை எதிர்த்துப் போரிட வேண்டியதுதான்’ என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அப்படி நினைத்தாரா அல்லது யெகோவாவின் வழிநடத்துதலை நாடினாரா? தாவீது தன்னுடைய முன் அனுபவத்தைச் சார்ந்திருக்கவில்லை. மறுபடியும் யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்படிச் செய்ததற்காக அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! இம்முறை அவருக்குக் கிடைத்த அறிவுரை வித்தியாசமாக இருந்தது. (2 சா. 5:22, 23) நாமும், முன்பு எதிர்ப்பட்ட அதே சூழ்நிலையை அல்லது பிரச்சினையை மீண்டும் எதிர்ப்படும்போது, முன் அனுபவத்தை மட்டுமே சார்ந்திருக்காதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.—எரேமியா 10:23-ஐ வாசியுங்கள்.
14. யோசுவாவும் இஸ்ரவேல் மூப்பர்களும் கிபியோனியரை நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
14 அனுபவமிக்க மூப்பர்கள் உட்பட நாம் அனைவரும் அபூரணராக இருப்பதால், தீர்மானங்களை எடுக்கும்போது யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடத் தவறிவிடலாம்; அப்படிச் செய்யாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். மோசேக்கு அடுத்ததாகப் பொறுப்பேற்ற யோசுவாவும் இஸ்ரவேல் மூப்பர்களும் ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள். சாமர்த்தியமான கிபியோனியர் மாறுவேடம் போட்டுக்கொண்டு தொலைதூர தேசத்திலிருந்து வந்ததுபோல் காட்டிக்கொண்டார்கள். அப்போது யோசுவாவும் அந்த மூப்பர்களும் யெகோவாவிடம் ஆலோசனை கேட்பதற்குப் பதிலாக, அவர்களாகவே தீர்மானம் எடுத்து கிபியோனியரோடு சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். யெகோவா இறுதியில் அந்த ஒப்பந்தத்தை ஆதரித்தார் என்றாலும், தம் வழிநடத்துதலை அவர்கள் நாடத் தவறியதை நம் நன்மைக்கென பைபிளில் பதிவு செய்திருக்கிறார்.—யோசு. 9:3-6, 14, 15.
கெட்ட ஆசைகளை விட்டொழிக்கப் போராடுகையில்
15. கெட்ட ஆசைகளை விட்டொழிக்க ஜெபம் செய்வது ஏன் முக்கியம் என்று விளக்குங்கள்.
15 நம் உடலுறுப்புகளில் ‘பாவத்தின் சட்டம்’ இருப்பதால், பாவ இச்சைகளை எதிர்த்து நாம் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. (ரோ. 7:21-25) ஆனால், அதில் நம்மால் வெற்றி பெற முடியும். எப்படி? சோதனைக்கு இணங்கிவிடாதிருக்க ஜெபம் செய்வது அவசியம் என இயேசு தம் சீடர்களுக்குச் சொன்னார். (லூக்கா 22:40-ஐ வாசியுங்கள்.) நாம் கடவுளிடம் ஜெபம் செய்த பின்பும் கெட்ட ஆசைகளையோ எண்ணங்களையோ விட்டொழிக்க முடியாமல் போனால், இந்தச் சோதனையைச் சமாளிக்க ஞானத்தைத் தரும்படி ‘கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.’ ‘அப்படிக் கேட்கிறவர்களை அவர் கடிந்துகொள்ள மாட்டார்; எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிறார்’ என்று யாக்கோபு நமக்கு உறுதி அளிக்கிறார். (யாக். 1:5) அதோடு, “உங்களில் எவனாவது [ஆன்மீக ரீதியில்] வியாதிப்பட்டிருக்கிறானா? அப்படியானால், சபையின் மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும். அவர்கள் யெகோவாவின் பெயரில் அவனுக்கு எண்ணெய் பூசி அவனுக்காக ஜெபம் செய்யட்டும். விசுவாசத்தோடு ஏறெடுக்கப்படுகிற ஜெபம் சுகமில்லாதவனைச் சுகப்படுத்தும்” என்றும் குறிப்பிடுகிறார்.—யாக். 5:14, 15.
16, 17. கெட்ட ஆசைகளை விட்டொழிக்க முயலும்போது, எப்போது ஜெபம் செய்வது சிறந்தது?
16 கெட்ட ஆசைகளை விட்டொழிக்க ஜெபம் செய்வது முக்கியம் என்பது உண்மைதான்; ஆனால், சரியான நேரத்தில் ஜெபம் செய்யும் அவசியத்தை நாம் உணர்ந்திருக்க வேண்டும். நீதிமொழிகள் 7:6-23-ல் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வாலிபனின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மாலை மயங்கும் நேரத்தில், ஒரு வேசி வசிக்கும் தெருவில் அவன் நடந்துபோகிறான். அவளுடைய வசப்படுத்தும் வார்த்தைகளிலும் தேனொழுகும் பேச்சிலும் மயங்கிப்போய், ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோல் அவள் பின்னே செல்கிறான். முதலாவதாக இந்த வாலிபன் ஏன் அங்கே சென்றான்? அவன் ‘புத்தியீனனாக’ இருந்ததால் கெட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். (நீதி. 7:7) அவன் எப்போது ஜெபம் செய்திருந்தால் மிகப் பிரயோஜனமாக இருந்திருக்கும்? தன் ஆசைக்கு அணைபோட எந்த நேரம் அவன் ஜெபம் செய்திருந்தாலும் உதவியாக இருந்திருக்கும்தான். ஆனால், அந்தத் தெருவில் செல்லும் எண்ணம் எப்போது அவன் மனதில் உதித்ததோ அப்போதே அவன் ஜெபம் செய்திருந்தால் மிகப் பிரயோஜனமாக இருந்திருக்கும்.
17 இன்று ஒருவர் ஆபாசப் படங்களைப் பார்க்கும் ஆசையை விட்டொழிக்கப் போராடிக் கொண்டிருக்கலாம். என்றாலும், சில இன்டர்நெட் சைட்டுகளில் அப்படிப்பட்ட படங்களோ வீடியோக்களோ இருக்கின்றன என்பது தெரிந்தும் அவற்றை அலசுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, நீதிமொழிகள் 7-ஆம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள வாலிபனைப் போலவே அவர் இருப்பார், அல்லவா? இப்படிப்பட்ட பாதையில் அடியெடுத்து வைப்பது எவ்வளவு ஆபத்தானது! ஆபாசத்தைப் பார்க்கும் ஆசையை விட்டொழிக்க, ஆபாசமான இன்டர்நெட் சைட்டுகளுக்குச் செல்ல ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஒருவர் யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்.
18, 19. (அ) கெட்ட ஆசைகளை விட்டொழிப்பது ஏன் சுலபமல்ல, ஆனால் நீங்கள் எப்படி இந்தச் சவாலைச் சந்திக்கலாம்? (ஆ) உங்கள் தீர்மானம் என்ன?
18 கெட்ட ஆசைகளையோ பழக்கவழக்கங்களையோ விட்டொழிப்பது சுலபமல்ல. “பாவ இச்சை கடவுளுடைய சக்திக்கு விரோதமானது; கடவுளுடைய சக்தியோ பாவ இச்சைக்கு விரோதமானது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். ஆகவே, ‘நாம் செய்ய விரும்புகிறவற்றை நம்மால் செய்ய முடிவதில்லை.’ (கலா. 5:17) இந்தச் சவாலைச் சந்திக்க, கெட்ட எண்ணங்களோ ஆசைகளோ நம் மனதில் முதன்முதலாகத் தலைதூக்கும்போதே ஊக்கமாக ஜெபம் செய்ய வேண்டும்; அதன்பின், நம் ஜெபத்திற்கு இசைவாகச் செயல்பட வேண்டும். “மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை” என்று பைபிள் சொல்கிறது; ஆகவே, யெகோவாவின் உதவியோடு நம்மால் அவருக்கு உண்மையாக நிலைத்திருக்க முடியும்.—1 கொ. 10:13.
19 வேதனையில் இருக்கும்போது... முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது... கெட்ட ஆசைகளை விட்டொழிக்கப் போராடும்போது... நமக்கு உதவ ஜெபம் என்னும் அற்புதப் பரிசை யெகோவா அளித்திருக்கிறார். ஜெபம் செய்வதன் மூலம் நாம் அவர்மீது சார்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டலாம். மேலும், அவருடைய சக்திக்காக நாம் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்; அது நமக்குத் தேவையான வழிநடத்துதலையும் பலத்தையும் தரும். (லூக். 11:9-13) ஆக, சுயபுத்தியின் மீது சாயாமல் எப்போதும் யெகோவாவின் மீது நம்பிக்கையாய் இருப்போமாக.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
நினைவிருக்கிறதா?
• யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பது சம்பந்தமாக எசேக்கியா, அன்னாள், யோனா ஆகியோரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• தீர்மானங்கள் எடுக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தாவீது மற்றும் யோசுவாவின் உதாரணங்கள் எப்படிக் காட்டுகின்றன?
• கெட்ட ஆசைகளை விட்டொழிக்கப் போராடுகையில், எப்போது ஜெபம் செய்வது முக்கியம்?
[பக்கம் 9-ன் படம்]
கெட்ட ஆசைகளை விட்டொழிக்கப் போராடுகையில், எப்போது ஜெபம் செய்வது மிகப் பிரயோஜனமாக இருக்கும்?