உங்கள் படைப்பாளர்—அவர் எப்படிப்பட்டவர் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்
“என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்.”—யாத்திராகமம் 33:19.
1. படைப்பாளர் கனப்படுத்தப்படுவதற்கு ஏன் தகுதியானவர்?
“கர்த்தாவே [“யெகோவாவே,” NW], தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 4:11) கருத்தாழமிக்க இந்த அறிவிப்பை பதிவுசெய்தவர் பைபிளின் கடைசி புத்தகத்தின் எழுத்தாளராகிய அப்போஸ்தலன் யோவான். முந்தைய கட்டுரை உறுதிப்படுத்தியபடி, சகலத்தையும் படைத்தவரில் நம்பிக்கை வைப்பதற்கான காரணங்களையே நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அள்ளி வழங்குகின்றன.
2, 3. (அ) படைப்பாளரைப் பற்றி மக்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? (ஆ) படைப்பாளரை நேருக்கு நேர் தனிப்பட்ட விதமாக ஏன் சந்திக்க முடியாது?
2 படைப்பாளர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது எந்தளவு முக்கியமோ, அந்தளவு அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்வதும் முக்கியம். அதாவது, குணங்களாலும் செயல்களாலும் மக்களை தம்மிடம் கவர்ந்திழுக்கும் நிஜமான ஒரு நபர் என்பதை அறிந்துகொள்வதும் முக்கியம். நீங்கள் எந்தளவுக்கு அவரைப் பற்றி அறிந்திருந்தாலும் இன்னும் நன்றாக அறிந்துகொள்வது உதவியாக இருக்கும் அல்லவா? மற்ற மனிதரை நாம் நேருக்குநேர் சந்திக்கும் கருத்தில், அவரை தனிப்பட்ட விதமாக சந்திப்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை.
3 நட்சத்திரங்களைப் படைத்தவரும் யெகோவாவே. அவற்றில் சூரியனும் நடுத்தர அளவுள்ள ஒரு நட்சத்திரமே. சூரியனை நெருங்கி பார்க்க விரும்புவீர்களா? கனவிலும்கூட விரும்ப மாட்டீர்கள்! அதை பார்ப்பதையோ அதன் சுட்டுப்பொசுக்கும் கதிர்கள் தங்கள் மேனியில் படுவதையோ குறித்து மக்கள் ஜாக்கிரதையாகவே இருக்கின்றனர். அதன் மையப்பகுதியின் வெப்பநிலை 1,50,00,000 டிகிரி செல்ஸியஸ் (2,70,00,000°F.). ஒவ்வொரு வினாடியும் இந்த வெப்ப அணு உலை சுமார் 40 லட்சம் டன் நிறையை (Mass) ஆற்றலாக மாற்றுகிறது. அதில் சிறிதளவே வெப்பமாகவும் ஒளியாகவும் பூமியை வந்தடைகிறது, ஆனால் இங்குள்ள எல்லா ஜீவன்களையும் காப்பதற்கு அதுவே போதும். படைப்பாளர் எந்தளவு வல்லமைமிக்கவர் என்பதை நாம் புரிந்துகொள்ள இந்த அடிப்படை உண்மைகள் உதவும். பொருத்தமாகவே, ‘அவருடைய [படைப்பாளருடைய] மகா பெலத்தையும், அவருடைய மகா வல்லமையையும்’ பற்றி ஏசாயா எழுதினார்.—ஏசாயா 40:26.
4. யெகோவாவிடம் மோசே என்ன கேட்டார், அதற்கு யெகோவா எவ்வாறு பதிலளித்தார்?
4 இருப்பினும், பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வந்த சில மாதங்களுக்குப் பிறகு, “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என படைப்பாளரிடம் மோசே மன்றாடியது உங்களுக்குத் தெரியுமா? (யாத்திராகமம் 33:18) சூரியனைப் படைத்ததும் கடவுளே என்பதை நீங்கள் நினைவிற்கொண்டால், மோசேயிடம் அவர் ஏன் இப்படி சொன்னார் என்பதை புரிந்துகொள்ளலாம்: “நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது.” அவர் “கடந்துபோகும்போது,” சீனாய் மலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மோசே ஒளிந்துகொள்ளும்படி படைப்பாளர் அனுமதித்தார். அப்போது, கடவுளுடைய “பின்பக்கத்தை,” அதாவது படைப்பாளருடைய மகிமையின், அல்லது பிரசன்னத்தின் ஏதோ பின்னொளி மட்டுமே மோசேக்கு காண்பிக்கப்பட்டது.—யாத்திராகமம் 33:20-23; யோவான் 1:18.
5. எந்த விதத்தில் மோசேயின் வேண்டுகோளை படைப்பாளர் திருப்திப்படுத்தினார், எதை நிரூபித்தார்?
5 படைப்பாளரை நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்ற மோசேயின் ஆசை திருப்தி செய்யப்படாமல் விடப்படவில்லை. தெளிவாகவே, மோசேயை கடந்து செல்லும்போது ஒரு தேவதூதன் மூலம் கடவுள் இவ்வாறு சொன்னார்: ‘[யெகோவா] இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடுவதில்லை.’ (யாத்திராகமம் 34:6, 7) நம்முடைய படைப்பாளரை நன்கு அறிந்துகொள்வது என்பது, சரீர வடிவத்தைப் பார்ப்பதை அல்ல, அவர் எப்படிப்பட்டவர் என்பதை, அவருடைய ஆள்தன்மை மற்றும் பண்புகள் எப்படிப்பட்டது என்பதை நன்கு அறிந்துகொள்வதை உட்படுத்துகிறது என இது காட்டுகிறது.
6. நம்முடைய நோய்த் தடுப்பு முறை எந்த விதத்தில் வியக்கத்தக்க ஒன்று?
6 படைக்கப்பட்டவற்றிலிருந்து கடவுளுடைய பண்புகளை பகுத்துணர்வதே இதைச் செய்வதற்கு ஒருவழி. உங்கள் நோய்த் தடுப்பு முறையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நோய்த் தடுப்பு பற்றிய ஒரு இதழில், சயன்டிஃபிக் அமெரிக்கன் இவ்வாறு கூறியது: “பிறப்பதற்கு முன்பிருந்து இறப்புவரை, நோய்த் தடுப்பு முறை தொடர்ந்து உஷாராக செயல்படுகிறது. பல்வகை மூலக்கூறுகளும் உயிரணுக்களும், . . . ஒட்டுண்ணிகளிடமிருந்தும் நுண்ணுயிரிகளிடமிருந்தும் பாதுகாக்கின்றன. இந்தத் தடுப்பு அம்சங்கள் இன்றி மனிதர் உயிர்வாழவே முடியாது.” இத்தகைய நோய்த் தடுப்பு முறைக்கு ஊற்றுமூலம் எது? அந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை இவ்வாறு சொன்னது: “நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ்களிடமிருந்து உடலை பாதுகாக்க சாமர்த்தியமாக ஒன்றோடொன்று செயல்படுகிற இந்த வியத்தகு உயிரணுக்கள், கருத்தரிப்புக்குப் பின் சுமார் ஒன்பது வாரங்களுக்குப் பிறகு முதலில் தோன்றுகின்றன.” தன் வயிற்றில் வளர்ந்து வரும் கருவுக்கு ஓரளவு நோய்த் தடுப்பு சக்தியை கர்ப்பமான பெண் கடத்துகிறாள். பிற்பாடு, தாய்ப்பாலிலிருந்தும்கூட நோய்த் தடுப்பு செல்களையும் பயனுள்ள ரசாயனங்களையும் தன்னுடைய குழந்தைக்குத் தருகிறாள்.
7. நம்முடைய நோய்த் தடுப்பு முறையைக் குறித்து நாம் எதை சிந்தித்துப் பார்க்கலாம், இதனால் என்ன முடிவுக்கு வழிநடத்தப்படலாம்?
7 உங்களுடைய நோய்த் தடுப்பு சக்தி, நவீனகால மருத்துவம் அளிக்கும் எதையும்விட மேம்பட்டது என்ற முடிவுக்கு வர உங்களுக்கு நல்ல காரணம் இருக்கிறது. ஆகவே, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த சக்தியை அளித்தவரைப் பற்றி இது எதைக் கற்பிக்கிறது?’ ‘கருத்தரிப்புக்குப் பின் சுமார் ஒன்பது வாரங்களுக்குப் பிறகு முதலாவதாக தோன்றுகிற’ மேலும் பிறந்த குழந்தையை உடனடியாக பாதுகாப்பதற்கு தயாராகக் காத்திருக்கும் இந்த நோய்த் தடுப்பு முறை, நிச்சயமாகவே ஞானத்தையும் முன்னறிவையும் பறைசாற்றுகிறது. ஆனால், இதிலிருந்து படைப்பாளரைப் பற்றி இன்னும் அதிகம் பகுத்துணர முடியுமா? தாழ்த்தப்பட்டோருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக தங்களையே அர்ப்பணித்த ஆல்பர்ட் ஸுவிட்ஸரையும் மற்றவர்களையும் பற்றி நம்மில் பெரும்பாலானோர் என்ன முடிவுக்கு வருகிறோம்? அப்படிப்பட்டவர்கள் மனிதநேயமிக்க நல்ல பண்புள்ளவர்கள் என பொதுவாக நாம் சொல்வோம். ஒப்பிட்டு பார்க்கையில், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் ஒரேவிதமாக நோய்த் தடுப்பு முறையை அளித்த நம் படைப்பாளரைப் பற்றி என்ன முடிவுக்கு நாம் வரலாம்? தெளிவாகவே, அவர் அன்புள்ளவர், பட்சபாதமற்றவர், நியாயமுள்ளவர். படைப்பாளரைப் பற்றி மோசே கேள்விப்பட்ட வர்ணனைக்கு இது ஒத்திருக்கிறது அல்லவா?
அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்துகிறார்
8. எந்த விசேஷித்த விதத்தில் யெகோவா தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார்?
8 நம் படைப்பாளரைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கு மற்றொரு வழி இருக்கிறது—அதுதான் பைபிள். இது மிகவும் முக்கியம். ஏனெனில் அவரைப் பற்றி விஞ்ஞானமும் இந்த அண்டமும் வெளிப்படுத்த முடியாத விஷயங்கள் இருக்கின்றன. மற்ற விஷயங்களைப் பற்றியும் பைபிள் மிகத் தெளிவாக கூறுகிறது. உதாரணமாக: படைப்பாளரின் தனிப்பட்ட பெயரை விஞ்ஞானம் வெளிப்படுத்த முடியாது. படைப்பாளரின் பெயரையும் அதன் முக்கியத்துவத்தையும் பைபிள் மட்டுமே வெளிப்படுத்துகிறது. பைபிளின் எபிரெய கையெழுத்துப் பிரதிகளில் அவருடைய பெயர் சுமார் 7,000 தடவை வருகிறது. எபிரெய மொழியில் அந்தப் பெயர் நான்கு எழுத்துக்களால் எழுதப்படுகின்றன; தமிழ் மொழியில் குறிக்கப்படும் ய்ஹ்வ்ஹ் (YHWH அல்லது JHVH) என்ற நான்கு மெய்யெழுத்துக்கள் பொதுவாக யெகோவா (Jehovah) என மொழிபெயர்க்கப்படுகின்றன.—யாத்திராகமம் 3:15; 6:3.
9. படைப்பாளருடைய தனிப்பட்ட பெயர் எதை அர்த்தப்படுத்துகிறது, அதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
9 படைப்பாளரைப் பற்றி நாம் நன்கு அறிந்துகொள்ள அவர் வெறுமனே அருவமான “மூலகாரணம்” (abstract “First Cause”), அல்லது “இருக்கிறேன்” என்ற தெளிவற்ற ஒன்றல்ல என்பதை மதித்துணர வேண்டும். அதை அவருடைய தனிப்பட்ட பெயர் காட்டுகிறது. இது எபிரெய வினைவடிவம்; அதன் அர்த்தம் “ஆகு” அல்லது “நிரூபி” என்பதாகும். a (ஒப்பிடுக: ஆதியாகமம் 27:29; பிரசங்கி 11:3, NW.) “ஆகும்படி செய்கிறவர்” (“He Causes to Become”) என்பதை கடவுளுடைய பெயர் சுட்டிக்காட்டுகிறது. அவர் நோக்கமுள்ளவர், செயல்படுகிறவர் என்பதை இது வலியுறுத்துகிறது. அவருடைய பெயரை அறிந்து அதைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறவர், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற சுறுசுறுப்பாக செயல்படுகிறவர் என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ளலாம்.
10. ஆதியாகம பதிவிலிருந்து என்ன முக்கியமான உட்பார்வையை நாம் பெறலாம்?
10 பைபிளே கடவுளுடைய நோக்கங்கள் மற்றும் ஆள்தன்மையைப் பற்றிய அறிவின் ஊற்றுமூலமாக திகழ்கிறது. ஒருகாலத்தில் கடவுளோடு மனிதன் சமாதானத்துடன் வாழ்ந்து, அர்த்தமுள்ள வாழ்க்கையை நீண்டநாள் அனுபவிக்கும் எதிர்பார்ப்பு பெற்றிருந்ததைப் பற்றி ஆதியாகம பதிவு வெளிப்படுத்துகிறது. (ஆதியாகமம் 1:28; 2:7-9) தம்முடைய பெயரின் அர்த்தத்திற்கு இசைவாக செயல்பட்டு, மனிதர் நெடுநாளாக எதிர்ப்பட்டு வரும் துன்பத்தையும் தோல்வியையும் யெகோவா முடிவுக்கு கொண்டுவருவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அவர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஜடப்பொருளாலான இந்த உலகம் . . . கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகத்தான விடுதலையை ஒருநாள் பெறும் என்ற நம்பிக்கையோடே, அதன் சொந்த இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே தோல்விக்கு கீழ்ப்பட்டிருக்கிறது.”—ரோமர் 8:20, 21, த நியூ டெஸ்டமெண்ட் லெட்டர்ஸ், ஜே. டபிள்யூ. சி. வான்ட் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
11. பைபிள் விவரப் பதிவுகளை ஏன் அலசிப் பார்க்க வேண்டும், அப்படிப்பட்ட ஒன்றிலுள்ள விவரங்கள் யாவை?
11 நம்முடைய படைப்பாளரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் பைபிள் நமக்கு உதவுகிறது. பூர்வகால இஸ்ரவேலரோடு அவர் செயல்பட்ட விதங்களையும் பிரதிபலித்த விதங்களையும் வெளிப்படுத்துகிறது. எலிசாவையும் விரோதிகளாகிய சிரியர்களின் படைத்தலைவன் நாகமானையும் உட்படுத்திய ஓர் உதாரணத்தை கவனியுங்கள். இந்த விவரப் பதிவை 2 இராஜாக்கள் 5-ம் அதிகாரத்தில் நீங்கள் வாசிக்கையில், இஸ்ரவேலில் வாழ்ந்த எலிசாவின் உதவியால் நாகமானுடைய குஷ்டரோகம் குணமாகும் என சிறைக்கைதியாக இருந்த இஸ்ரவேல சிறுமி சொன்னதை நீங்கள் காண்பீர்கள். ஏதோ புதிரான சமயச்சடங்கை செய்து, தன்னுடைய கைகளை ஆட்டி குணப்படுத்துவார் என நம்பிக்கொண்டு எலிசாவிடம் நாகமான் சென்றார். ஆனால், யோர்தான் நதியில் முங்கும்படி எலிசா அவரிடம் சொன்னார். இதற்கு கீழ்ப்படியும்படி நாகமானுடைய சேவகர்கள் அவரை வருந்தி கேட்டுக்கொண்டதால் அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், எலிசா சொன்னவாறு அவர் செய்தபோது குணமடைந்தார். விலையேறப்பெற்ற அன்பளிப்புகளை நாகமான் கொடுத்தபோது எலிசா அவற்றை ஏற்க மறுத்துவிட்டார். பின்பு, எலிசாவின் ஊழியக்காரன் திருட்டுத்தனமாக நாகமானிடம் சென்று, பொய்சொல்லி விலையேறப்பெற்ற சில பொருட்களை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். அவனுடைய வஞ்சக சூழ்ச்சி அவனே குஷ்டரோகத்தால் பீடிக்கப்படுவதற்கு வழிநடத்தியது. இது, ஒரு மனுஷனை பற்றிய யதார்த்தமான, கவனத்தை ஈர்க்கும் ஒரு பதிவு—அதிலிருந்து நாம் நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
12. எலிசா மற்றும் நாகமானின் விவரப் பதிவிலிருந்து படைப்பாளரைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
12 பொதுவாகவே இன்று அநேக கலாச்சாரங்களில் ஒரு சிறுமியின் சொல்லுக்கு மதிப்பு இல்லை. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, இந்த அண்டத்தின் மகத்தான படைப்பாளர், ஒரு சிறுமிக்கு தயவுகாட்ட முடியாத அளவுக்கு மேட்டிமையான ஒருவர் அல்ல என்பதை இந்தப் பதிவு மிகவும் கவரத்தக்க விதத்தில் எடுத்துக் காட்டுகிறது. படைப்பாளர் ஓர் இனத்திற்கோ தேசத்திற்கோ மாத்திரமே தயவுகாட்டுகிறவர் அல்ல என்பதையும் இது நிரூபிக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், கடந்தகாலத்திலும் தற்காலத்திலும் “சுகமளிப்பவர்கள்” சிலர் பொதுவாக செய்வதைப் போல மந்திர ஜாலத்தைப் பயன்படுத்தும்படி மக்களிடம் எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, படைப்பாளர் வியக்கத்தக்க ஞானத்தை வெளிக்காட்டினார். குஷ்டரோகத்தை எப்படி குணமாக்குவது என்பதை அவர் அறிந்திருந்தார். மோசடி வெல்வதை அனுமதிக்காததன் மூலம் உட்பார்வையையும் நீதியையும் வெளிக்காட்டினார். இதிலும், மோசே கேள்விப்பட்ட யெகோவாவின் ஆள்தன்மையோடு இது இசைவாக இருக்கிறது அல்லவா? அந்த பைபிள் பதிவு சுருக்கமாக இருக்கிறபோதிலும், நம்முடைய படைப்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை அதிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம்.—சங்கீதம் 33:5; 37:28.
13. பைபிள் விவரப் பதிவுகளிலிருந்து நாம் எப்படி மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
13 இஸ்ரவேலரின் நன்றிகெட்ட நடத்தையையும் கடவுளுடைய செயல்களையும் பற்றிய மற்ற விவரப் பதிவுகள், யெகோவா உண்மையில் அக்கறையுள்ளவர் என்பதை நிரூபிக்கின்றன. இஸ்ரவேலர் அவரை மறுபடியும் மறுபடியுமாக பரீட்சை பார்த்து அவரை புண்படுத்தி வருத்தப்படுத்தினார்கள் என பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 78:40, 41, NW) ஆகவே, படைப்பாளருக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன; மனிதர் என்ன செய்கின்றனர் என்பதைப் பற்றியும் அவர் அக்கறைகொள்கிறார். பிரபலமானவர்களைப் பற்றிய விவரப் பதிவிலிருந்தும் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். இஸ்ரவேலின் அரசனாக இருக்கும்படி தாவீதை கடவுள் தெரிந்தெடுத்தபோது சாமுவேலிடம் இவ்வாறு கூறினார்: “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) ஆம், நாம் இருதயத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றுதான் படைப்பாளர் பார்க்கிறார், வெளித்தோற்றத்தை அல்ல. எவ்வளவு திருப்தியளிப்பதாக இருக்கிறது!
14. எபிரெய வேதாகமத்தை வாசிக்கையில், நாம் நன்றாக பயனடைய என்ன செய்யலாம்?
14 பைபிள் புத்தகங்களில் முப்பத்தி ஒன்பது புத்தகங்கள் இயேசுவின் காலத்திற்கு முன்பு எழுதப்பட்டன, அவற்றை நாம் வாசிப்பது தகுந்ததே. இது, வெறுமனே பைபிள் விவரப் பதிவுகளையோ சரித்திரத்தையோ கற்றுக்கொள்வதற்காக இருக்கக்கூடாது. நம்முடைய படைப்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் உண்மையிலேயே கற்றுக்கொள்ள விரும்பினால், நாம் அந்த விவரப் பதிவுகளை தியானிக்க வேண்டும், ‘அவருடைய ஆள்தன்மையைப் பற்றி இது எதை வெளிப்படுத்துகிறது? அவருடைய பண்புகளில் எது தெளிவாக தெரிகிறது?’ b என்பதை ஒருவேளை யோசித்துப் பார்க்கலாம். இப்படி செய்வது, பைபிள் தெய்வீக ஊற்றுமூலத்திலிருந்து வந்தது என்பதை சந்தேகவாதிகளும்கூட புரிந்துகொள்ள உதவும்; அதன்மூலம் அதன் அன்பான ஆசிரியரைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கான ஆதாரத்தை அளிக்கும்.
படைப்பாளரை அறிந்துகொள்ள பெரிய போதகர் உதவுகிறார்
15. இயேசுவின் செயல்களும் போதனைகளும் ஏன் படிப்பினை அளிப்பவையாக இருக்கின்றன?
15 படைப்பாளர் இருக்கிறார் என்பதை சந்தேகிப்பவர்கள் அல்லது கடவுளைப் பற்றிய தெளிவற்ற கருத்துடைய ஆட்கள், பைபிளைப் பற்றி மிகவும் குறைவாகவே அறிந்திருப்பார்கள் என்பது உண்மையே. மோசே என்பவர் மத்தேயுவுக்கு முன்பு வாழ்ந்தவரா அவருக்கு பின்பு வாழ்ந்தவரா என்பதைப் பற்றியும் இயேசுவின் செயல்கள் அல்லது போதனைகளைப் பற்றியும் எதுவுமே அறியாத ஆட்களை நீங்கள் சந்தித்திருக்கலாம். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம், ஏனெனில் பெரிய போதகராகிய இயேசுவிடமிருந்து படைப்பாளரைப் பற்றி ஒருவர் நிறைய கற்றுக்கொள்ள முடியும். கடவுளோடு நெருங்கிய உறவை வைத்திருப்பதால், நம்முடைய படைப்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை அவரால் வெளிப்படுத்த முடியும். (யோவான் 1:18; 2 கொரிந்தியர் 4:6; எபிரெயர் 1:3) வெளிப்படுத்தியும் இருக்கிறார். சொல்லப்போனால், அவர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.”—யோவான் 14:9.
16. சமாரியப் பெண்ணுடன் இயேசு உரையாடியது எதை விளக்கிக் காட்டுகிறது?
16 இந்த உதாரணத்தை கவனியுங்கள். ஒருசமயம் இயேசு பயணக் களைப்பாக இருந்தபோது சீகார் அருகில் ஒரு சமாரிய பெண்ணிடம் பேசினார். ‘பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டியதன்’ அவசியத்தை மையமாகக் கொண்ட ஆழமான சத்தியங்களை அவளுடன் பகிர்ந்துகொண்டார். அந்தக்கால யூதர்கள் சமாரியர்களை வெறுத்து ஒதுக்கினார்கள். எலிசாவையும் நாகமானையும் உட்படுத்திய சம்பவத்தில் நாம் கவனித்தபடி, எல்லா தேசத்தையும் சேர்ந்த உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் ஏற்றுக்கொள்ள யெகோவா தயாராக இருக்கிறார் என்பதை இயேசு காண்பித்தார். தெளிவாகவே, இன்றைய உலகில் பரவலாக காணப்படும் குறுகிய மனப்பான்மையுடைய மத பகைமைக்கு யெகோவா இடங்கொடுப்பதில்லை என்பதை இது நமக்கு நிச்சயப்படுத்த வேண்டும். இந்த உதாரணத்தில் ஒரு பெண்ணுடன், அதுவும் திருமணம் செய்யாமல் ஒரு ஆணுடன் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணுடன் பேச இயேசு மனமுள்ளவராக இருந்த உண்மையையும் நாம் கவனிக்கலாம். அவளை கண்டனம் செய்வதற்குப் பதிலாக, கண்ணியத்துடன், அவளுக்கு உண்மையிலேயே உதவும் ஒரு முறையில் இயேசு அவளை நடத்தினார். அதன்பின், மற்ற சமாரியர்கள் இயேசுவுக்கு செவிகொடுத்து இப்படி சொன்னார்கள்: “அவர் மெய்யாகவே கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்.”—யோவான் 4:2-30, 39-42; 1 இராஜாக்கள் 8:41-43; மத்தேயு 9:10-13.
17. லாசருவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவரப் பதிவு எதை சுட்டிக் காட்டுகிறது?
17 இயேசுவின் செயல்களையும் போதனைகளையும் நன்கு அறிந்துகொள்வதன் மூலம் படைப்பாளரைப் பற்றி நாம் எப்படி கற்றுக்கொள்ளலாம் என்பதை காட்டும் மற்றொரு உதாரணத்தை கவனியுங்கள். இயேசுவின் நண்பராகிய லாசரு மரித்த சமயத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மரித்தோரை உயிருக்கு கொண்டுவரும் வல்லமையை இயேசு முன்பு நிரூபித்திருந்தார். (லூக்கா 7:11-17; 8:40-56) ஆனால், லாசருவின் சகோதரியாகிய மரியாள் துக்கப்படுவதைக் கண்ட இயேசு எப்படி பிரதிபலித்தார்? இயேசு ‘ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்.’ அவர் அக்கறை இல்லாதவராகவோ விலகியோ நிற்கவில்லை; அவர் “கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:33-35) வெறுமனே உணர்ச்சியை காட்டிக்கொள்வதற்காக அப்படி செய்யவில்லை. ஒரு செயலை செய்வதற்கு—லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு—இயேசு உந்துவிக்கப்பட்டார். படைப்பாளரின் உணர்ச்சிகளையும் செயல்களையும் மதித்துணருவதற்கு அப்போஸ்தலருக்கு இது உதவியதை நீங்கள் கற்பனை செய்துபார்க்கலாம். படைப்பாளரின் ஆள்தன்மையையும் வழிகளையும் புரிந்துகொள்ள இது நமக்கும் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.
18. பைபிளை படிப்பதைப் பற்றி மக்கள் எப்படி உணர வேண்டும்?
18 பைபிளை படிப்பதற்கும் நம்முடைய படைப்பாளரைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்வதற்கும் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. பைபிள் நவீன காலத்திற்கு உதவாத புத்தகம் அல்ல. அதைப் படித்து இயேசுவின் மிக நெருங்கிய சீஷனாக மாறியவர்களில் ஒருவர்தான் யோவான். அவர் பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக . . . சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.” (1 யோவான் 5:20) ‘மெய்யான’ படைப்பாளரைப் பற்றிய அறிவை பெறுவதற்கு ‘புத்திக்கூர்மையை’ பயன்படுத்துவது ‘நித்திய ஜீவனுக்கு’ வழிநடத்தும் என்பதை கவனியுங்கள்.
அவரை அறிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவது எப்படி?
19. சந்தேகவாதிகளுக்கு உதவ என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
19 நம்மீது அக்கறையுள்ள இரக்கமுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவதற்கும் அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்வதற்கும் சிலருக்கு நிறைய அத்தாட்சி தேவைப்படுகிறது. படைப்பாளரைப் பற்றி சந்தேக மனப்பான்மையுள்ளவர்கள் அல்லது பைபிளின் கருத்தோடு ஒத்துப்போகாதவர்கள் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? யெகோவாவின் சாட்சிகளுடைய 1998/99 மாவட்ட மற்றும் சர்வதேச மாநாடுகளில், திறம்பட்ட ஒரு புதிய நூல் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. அதுதான் உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா?
20, 21. (அ) படைப்பாளர் புத்தகத்தை எவ்வாறு வெற்றிகரமாக பயன்படுத்தலாம்? (ஆ) படைப்பாளர் புத்தகம் எவ்வாறு ஏற்கெனவே திறம்பட்ட ஒன்றாக நிரூபித்திருக்கிறது என்பதற்கான அனுபவங்களை விவரியுங்கள்.
20 நம் படைப்பாளரில் உங்கள் விசுவாசத்தை அதிகரித்து அவருடைய ஆள்தன்மைகளுக்கும் வழிகளுக்குமான உங்கள் போற்றுதலை அதிகரிக்கவும் இப்பிரசுரம் உதவும் என்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது நிச்சயம் என்று நாம் ஏன் சொல்ல முடியும்? ஏனென்றால், உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற இப்புத்தகம் அப்படிப்பட்ட குறிக்கோள்களை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கிறது. “உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க உதவுவது எது?” என்பதே புத்தகம் முழுவதும் காணப்படும் முக்கிய பொருள். ஓரளவு கல்வியறிவுள்ள எவருடைய ஆவலையும் தூண்டும் விதத்தில் இது எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும் நம் அனைவருக்கும் இருக்கும் விருப்பங்களைப் பற்றியும் அது கூறுகிறது. படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை சந்தேகிக்கும் வாசகர்களுடைய மனதை கவர்ந்திழுப்பதாகவும் தூண்டுதலளிப்பதாகவும் இருக்கும் பொருளைக் காண்பீர்கள். படைப்பாளரில் வாசகர் நம்பிக்கை வைத்திருப்பதாக இப்புத்தகம் ஊகிப்பதில்லை. சமீபகால விஞ்ஞானப்பூர்வ கண்டுபிடிப்புகளும் எண்ணங்களும் இதில் உபயோகிக்கப்பட்டிருப்பதால் சந்தேகப்படுவோர் கவர்ந்திழுக்கப்படுவர். இப்படிப்பட்ட உண்மைகள் கடவுளில் நம்பிக்கையுள்ளவர்களுடைய விசுவாசத்தையும் பலப்படுத்தும்.
21 இந்தப் புதிய புத்தகத்தைப் படிக்கையில், கடவுளுடைய ஆள்தன்மையின் அம்சங்களை சிறப்பித்துக் காட்டும் முறையில் பைபிள் சரித்திரத்தைப் பற்றிய சுருக்கத்தை இதிலுள்ள சில பாகங்கள் தருவதை காண்பீர்கள். அது, கடவுளைப் பற்றி வாசகர்கள் நன்கு அறிந்துகொள்ள உதவும். தங்களுடைய விஷயத்தில் இது எவ்வளவு உண்மை என்பதை ஏற்கெனவே வாசித்தவர்கள் கூறியிருக்கிறார்கள். (பக்கங்கள் 25-6-லுள்ள இதற்கு அடுத்த கட்டுரையைக் காண்க.) இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அதுவே உங்களுடைய விஷயத்திலும் உண்மையாக இருப்பதாக. படைப்பாளரைப் பற்றி மற்றவர்கள் நன்கு அறிந்துகொள்ள இதை பயன்படுத்துங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஜெஸூட் அறிஞர் எம். ஜே. குரூன்தனேர் என்பவர் த கேத்தலிக் பிப்ளிக்கல் குவாட்டர்லி என்பதில் முதன்மை ஆசிரியராக இருந்தபோது இந்த வினை வடிவத்தைக் குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்: “அருவமான நிலையில் இருப்பதாக இது ஒருபோதும் அர்த்தமளிப்பதில்லை. ஆனால் உண்மையாகவே இருப்பதை அல்லது புலன்களுக்கு வெளிப்படுவதையே குறிக்கிறது.”
b பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பைபிள் பதிவுகளை விவரிக்கும்போது, இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதன் மூலம் பிள்ளைகளுக்கு உதவலாம். இவ்வாறாக, கடவுளைப் பற்றி இளைஞர்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும். அதோடு அவருடைய வார்த்தையை தியானிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் கவனித்தீர்களா?
◻ சீனாய் மலையில் எவ்வாறு யெகோவாவுடன் மோசே நன்கு அறிமுகமானார்?
◻ கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்வதற்கு பைபிளைப் படிப்பது ஏன் ஒரு உதவியாக இருக்கிறது?
◻ நாம் பைபிளை வாசிக்கையில், நம் படைப்பாளருடன் நெருங்கி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
◻ படைப்பாளர் புத்தகத்தை நன்கு பயன்படுத்த நீங்கள் என்ன திட்டமிட்டிருக்கிறீர்கள்?
[பக்கம் 20-ன் படம்]
நமது நோய்த் தடுப்பு முறை படைப்பாளரைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?
[பக்கம் 21-ன் படம்]
சவக் கடல் சுருளின் ஒரு பகுதி, எபிரெய நான்கெழுத்தில் கடவுளுடைய பெயர் (தடித்த எழுத்துக்களில்)
[படத்திற்கான நன்றி]
Courtesy of the Shrine of the Book, Israel Museum, Jerusalem
[பக்கம் 23-ன் படம்]
மரியாளின் துயரத்திற்கு இயேசு பிரதிபலித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?