“சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்”
1 உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் மக்களால் அனுபவித்துக்களிக்கப்படுகிற வியக்கத்தக்க ஆசீர்வாதங்களைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் அறிக்கைகளைக் கேட்டு சமீப ஆண்டுகளில் நாம் அனைவரும் களிகூர்ந்திருக்கிறோம். 26 ஆண்டுகால கொடூரமான ஒடுக்குதலுக்குப் பிறகு மலாவியில் வேலை சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஆனந்தக் கண்ணீர் விடும்படி நம்மைத் தூண்டியது. கிழக்கத்திய ஐரோப்பாவில் தேவபக்தியற்ற பொதுவுடைமைக் கொள்கையின் வீழ்ச்சியை நாம் பார்த்தபோது, விடுதலை உணர்ச்சியோடு நாம் பெருமூச்சுவிட்டோம். சொல்லர்த்தமாக ஆயிரக்கணக்கான சகோதரர்கள் அதன் ஒடுக்கியாளுகிற நுகத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் அது விளைவடைந்தது. கிரீஸில் நம்முடைய வணக்க சுயாதீனம் சவால்விடப்பட்டபோது நாம் ஆழ்ந்த அக்கறையோடு கவனித்தோம்; ஐரோப்பாவிலுள்ள உச்ச உயர் நீதிமன்றத்தில் எதிரொலிக்கிற வெற்றியை முயற்சிசெய்து பெற்றபோது நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். சத்தியத்தைத் தேடுகிறவர்களுக்காக மிகப் பேரளவான பிரசுரங்களை உற்பத்திச் செய்வதை சாத்தியமாக்கியிருக்கிற சங்கத்தினுடைய கிளையலுவலகங்களின் பெரிய அளவிலான விஸ்தரிப்பைப் பற்றிய அறிக்கைகளைக் கேட்டு நாம் களிப்படைந்தோம். உக்ரேனிலுள்ள கீவில் நடந்த மாநாட்டில் 7,400-க்கும் மேற்பட்டோர் முழுக்காட்டப்பட்டதை நாம் கேள்விப்பட்டபோது வியப்படைந்தோம். ஆம், ராஜ்ய வேலையில் உணர்ச்சியைத் தூண்டுகிற இந்த முன்னேற்றங்கள் நம்முடைய களிப்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றன!
2 களிகூருவதற்கான நம்முடைய காரணம் பெரிதாய் இருக்கிறபோதிலும், மிக அதிகமாக மகிழ்ச்சிகொள்வதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். சாதகமாயிருக்கிற தொடர்ச்சியான அறிக்கைகள், நற்செய்திக்கான எதிர்ப்பு நொறுங்கி விழுந்துகொண்டிருக்கிறது, மேலும் யெகோவாவின் சாட்சிகள் உலகமுழுவதும் அங்கீகாரத்தைப் பெற்றுவருகிறார்கள் என்ற முடிவுக்கு வரும்படி நம்மைச் செய்யக்கூடும். இப்படிப்பட்ட சிந்தனை ஏமாற்றுவதாய் இருக்கக்கூடும். சில தேசங்களில் திருப்திகரமான வெற்றிகள் சிலவற்றை நாம் முயன்று பெற்றிருக்கிறபோதிலும், நற்செய்திக்கான தடைகளைக் குறைப்பதில் ஓரளவான வெற்றியை நாம் அடைந்திருக்கிறபோதிலும், உலகத்தோடுகூடிய நம்முடைய அடிப்படை உறவு மாறாமல் நிலைத்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக, நாம் “உலகத்தின் பாகமானவர்கள் அல்ல.” அப்படியிருக்கையில், நாம் ‘சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவது’ நிச்சயம். (யோவா. 15:19, NW; மத். 24:9) இந்தக் காரிய ஒழுங்குமுறை நீடித்திருக்கும் வரையில், “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்,” என்ற அடிப்படை நியமத்தை எதுவும் மாற்றப் போவதில்லை.—2 தீ. 3:12.
3 சரித்திரத்தின் பக்கங்கள் இந்த எச்சரிப்பின் உண்மைத்தன்மைக்கு அத்தாட்சியளிக்கின்றன. கிறிஸ்தவத்தின் ஸ்தாபகராகிய இயேசு வல்லமைமிக்க ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடைய குடிமக்களுக்கும் முன்பாக அற்புதகரமான சான்றளித்தபோதிலும், அவர் அனுதின துர்ப்பிரயோகிப்பை அனுபவித்தார், மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் ஆபத்தில் எப்பொழுதும் இருந்தார். அவருடைய அப்போஸ்தலர் அநேகர் சீஷர்களாவதில் உதவியளித்து, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களை எழுதுவதில் பங்குகொண்டு, ஆவியின் அற்புதகரமான வரங்களை வெளிப்படுத்தியபோதிலும்கூட, அவர்கள் இதைப்போலவே பகைக்கப்பட்டார்கள், இழிவாக நடத்தப்பட்டார்கள். அவர்களுடைய நல்நடத்தை மற்றும் அயலாருக்கான அன்பின் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘எங்கும் விரோதமாகப் பேசப்படுகிற’ வெறுக்கத்தக்க ஒரு ‘மதப்பிரிவினராகப்’ பெரும்பாலானோரால் நோக்கப்பட்டார்கள். (அப். 28:22) யெகோவாவுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உலகளாவிய கிறிஸ்தவ சபை இன்று அற்புதகரமான முறையில் அவரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறபோதிலும், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் அனைத்து சக்திகளால் அது தொடர்ந்து எதிர்க்கப்பட்டும் தூஷிக்கப்பட்டும் வந்திருக்கிறது. எதிர்ப்பு முடிவடைவதை எதிர்பார்ப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.
4 முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீஷர்களைப் பல வழிகளில் சாத்தான் துன்புறுத்தினான். பகைமையுள்ள எதிராளிகள் அவர்களைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்து அப்பட்டமான பொய்களைச் சொன்னார்கள். (அப். 14:2) அவர்களைப் பயமுறுத்துவதற்கான முயற்சியில் கொடிய அச்சுறுத்தல்கள் இருந்தன. (அப். 4:17, 18) கோபமுள்ள கூட்டத்தினர் அவர்களை வாயடைக்க முயன்றனர். (அப். 19:29-34) சரியான எந்த முகாந்தரமுமில்லாமல் அவர்கள் சிறையிலிடப்பட்டார்கள். (அப். 12:4, 5) துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் சரீரப்பிரகாரமான வன்முறையை நாடினார்கள். (அப். 14:19) சிலருடைய விஷயங்களில் ஒரு பாவமும் அறியாதவர்கள் வேண்டுமென்றே கொலைசெய்யப்பட்டார்கள். (அப். 7:54-60) அப்போஸ்தலனாகிய பவுல் தனிப்பட்ட விதமாக இந்த வகையான எல்லா துர்ப்பிரயோகத்தையும் உண்மையிலேயே சகித்திருந்தார். (2 கொ. 11:23-27) பிரசங்க வேலையில் குறுக்கிடுவதற்கான எந்த வாய்ப்பையும் சுரண்டிக்கொள்வதற்கும் இந்த உண்மையுள்ள ஊழியர்களின்மீது துன்பத்தைச் சுமத்துவதற்கும் விரோதிகள் தீவிரித்திருந்தார்கள்.
5 சாத்தான் இன்று அதே போன்ற சூழ்ச்சிமுறைகளைப் பயன்படுத்திவருகிறான். தவறாக வழிநடத்தப்பட்ட மதப்பிரிவினர் அல்லது கருத்துவேறுபாட்டுக் குழுவினர் என்று நம்மை தவறாக வருணித்து, அப்பட்டமான பொய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சில தேசங்களில், அதிகாரிகள் நம்முடைய பிரசுரங்கள் பிளவுண்டாக்குவதாய் இருப்பதாக அறிவித்து அதைத் தடைசெய்திருக்கின்றனர். இரத்தத்தின் புனிதத்தன்மைக்கான நம்முடைய மரியாதை வெளிப்படையாக கேலிசெய்யப்பட்டு சவால்விடப்பட்டிருக்கிறது. 1940-களில், கோபமுள்ள கும்பல்கள் கொடி வணக்கப் பிரச்னையின்பேரில் சினமடைந்து நம்முடைய சகோதரர்களைத் தாக்கினர், காயங்களை ஏற்படுத்தினர், மற்றும் அவர்களுடைய உடைமைகளை அழித்தனர். நடுநிலைமை வகிப்பின்பேரில் ஆயிரக்கணக்கானோர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். சர்வாதிபத்திய தேசங்களில் நம்முடைய சகோதரர்கள் ஆட்சியை கவிழ்ப்பவர்களாய் இருப்பதாய் பொய்யாய் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றனர், அது நூற்றுக்கணக்கானோர் கொடூரமாக வதைக்கப்படுவதிலும் சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதை முகாம்களில் கொலைசெய்யப்படுவதிலும் விளைவடைந்தது. அழுத்தங்கள் தீவிரமாக இருந்திருக்கின்றன, சரியான காரணமில்லாமல் நாம் பகைக்கப்படுகிறோம் என்பதை அது தெளிவாகக் காட்டியது.—யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஸ்தாபிகள் என்ற புத்தகத்தில் அதிகாரம் 29-ஐப் பாருங்கள்.
6 எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது? யெகோவாவின் சாட்சிகள் உலகத்தின் சில பாகத்திலுள்ள அழுத்தத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு அவ்வப்பொழுது தடைகளை வெல்வதில் முன்னேற்றம் அடைந்திருக்கிறபோதிலும், மொத்தத்தில் சூழ்நிலைமை அதே போலவே தொடர்ந்திருக்கிறது. 1914-ல் பிசாசு தன்னுடைய தாழ்த்தப்பட்ட நிலைக்குச் சென்றதிலிருந்து தொடர்ந்து கோபமாக இருக்கிறான். தன்னுடைய நேரம் குறுகியதாய் இருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கிறான். மகா உபத்திரவம் நெருங்கிவருகையில் அவனுடைய சீற்றம் தீவிரமாவது நிச்சயம். சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவுக்கு எதிராக போர் செய்வதற்கு முழுமையாக அர்ப்பணித்திருக்கிறான், மேலும் கடைசிவரை போராடவும் தீர்மானமாய் இருக்கிறான். அவனும் அவனுடைய பேய்களும் தங்களுடைய கோபத்தை, “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய” பூமியிலுள்ள யெகோவாவின் மக்கள்மீது மட்டுமே வெளிக்காட்ட முடியும்.—வெளி. 12:12, 17.
7 ஆகவே எதிர்காலத்தை நோக்கியிருக்கையில், எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைக் குறித்து நாம் நடைமுறையானவர்களாய் இருக்கவேண்டும். சாத்தான் பின்வாங்கி விடுவான் அல்லது கைவிட்டு விடுவான் என்று நினைப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. இந்த உலகில் நம்மீது அவன் உட்புகுத்தியிருக்கிற பகைமையானது எந்தச் சமயத்திலும் எந்த இடத்திலும் திடீரென சீற்றமடையலாம். அநேக தேசங்களில் பிரசங்கிப்பதற்கான நம்முடைய சுதந்திரம் நீடித்த போராட்டத்திற்குப் பின்பே அடையப்பட்டிருக்கிறது. அந்தச் சுதந்திரம் எளிதில் அழியத்தக்கது, தற்போதைய பரிவிரக்கமுள்ள சில ஆட்சியாளர் அல்லது பொதுமக்களால் வரவேற்கப்படாத சட்டத்தினால் தக்கவைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. திடீர் திருப்பங்களுடன்கூடிய கிளர்ச்சிகள் ஒரே இரவிற்குள் ஏற்பட்டு, பெருங்குழப்பத்தையும் மனித உரிமைகள் வேண்டுமென்றே துர்ப்பிரயோகம் செய்யப்படுவதையும் கொண்டுவரலாம்.
8 சில தேசங்களில் நாம் அனுபவிக்கிற தற்போதைய செழுமையும் சுதந்திரமும் திடீரென முடிவுக்கு வந்து, கடந்த காலத்தில் அனுபவித்திருக்கிற அதே துர்ப்பிரயோகங்களுக்கு நம்முடைய சகோதரர்களைக் கீழ்ப்படுத்தலாம். நம்முடைய எதிராளிகள் கீழ்ப்படுத்தப்பட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, உணர்ச்சியின்மை அல்லது கவலையற்றிருத்தல் போன்ற உணர்வினால் நாம் அமைதிப்படுத்தப்படுவதற்கு நம்மை அனுமதிக்கத் துணியக்கூடாது. இந்த உலகத்தின் பகைமை எப்பொழுதும் முழுமையாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கலாம், ஆனால் அது தீவிரமாகத் தொடர்ந்திருக்கிறது. முடிவு நெருங்கிவருகையில் இந்த உலகத்தின் எதிர்ப்பு தணிந்துபோவதற்குப் பதிலாக தீவிரமே அடையும் என்று கடவுளுடைய வார்த்தையிலுள்ள அனைத்தும் காட்டுகிறது. ஆகவே, “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருப்பதை காண்பிப்பதன் மூலம் நாம் எச்சரிக்கையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். (மத். 10:16) கடைசிவரைக்கும் ‘கடினமான போராட்டம்’ நமக்கு இருக்கும், சகித்திருப்பதே நம்முடைய தப்பிப்பிழைத்தலுக்கான திறவுகோல் என்பதை நாம் உணரவேண்டும்.—யூ. 3; மத். 24:13.
9 நாம் வாழ்கிற இந்த உலகத்தின் பாகத்தில், எதிராளிகளால் காணக்கூடிய எந்தத் தடையும் இல்லாமல் ஊழியம் செழிப்படைந்து கொண்டிருக்கலாம். இது, ஆழ்ந்த அக்கறைகொள்வதற்கான எந்தவிதக் காரணமும் அங்கு இருப்பதைக் குறித்து நம்மை சந்தேகிக்கும்படிச் செய்யலாம். என்றபோதிலும், விழிப்புள்ளவர்களாய் இருப்பதற்கான அவசியம் இருக்கிறது. சூழ்நிலைமைகள் சீக்கிரத்தில் மாறிவிடலாம். எச்சரிப்பே இல்லாமல், எதிராளிகள் ஏதோவொரு பிரச்னையை தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டு, அதை நமக்கு எதிராகப் பயன்படுத்தலாம். முறையிடுவதற்கான ஏதோவொரு முகாந்திரத்திற்காக விசுவாசத்துரோகிகள் எப்பொழுதும் தேடிக்கொண்டிருக்கின்றனர். நம்முடைய ஊழியத்தால் அச்சுறுத்தப்பட்டதாக உணருகிற கோபமுள்ள குருவர்க்கத்தினர், நம்மை வெளிப்படையாக கண்டனம்செய்யலாம். நம்முடைய சமுதாயத்தில் ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கான நம்முடைய திட்டங்கள், அயலகத்தார் அனைவரையும் நிலைகுலைந்துபோகச் செய்கிற சண்டையைத் தூண்டுவிக்கலாம். உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய கூற்றுகள் அச்சில் தோன்றலாம், அது நம்மை மோசமான ஒரு நிலைமையில் வைக்கலாம். உள்ளூர் பிரமுகர்கள் நம்மை வேண்டுமென்றே தவறாக எடுத்துரைத்து, நம்முடைய அயலகத்தாரை ஊழியத்தில் சந்திக்கையில் விரோதிகளாய் இருக்கும்படி செய்விக்கலாம். நம்முடைய சொந்த குடும்பத்திலுள்ள அன்பானவர்களும்கூட, சினமடைந்தவர்களாயும் நம்மை துன்புறுத்துபவர்களாயும் ஆகலாம். ஆகையால், இந்த உலகத்தின் விரோதம் அதிகளவு உயிர்ப்புள்ளதாய் இருக்கிறது, மேலும் அது எந்தச் சமயத்திலும் மேலெழும்பலாம் என்பதை உணர்ந்தவர்களாய், நாம் எச்சரிப்பாக இருக்கவேண்டியது அவசியம்.
10 இது நம்மை எவ்வாறு பாதிக்கவேண்டும்? இதெல்லாம் எதிர்காலத்திற்கான நம்முடைய சிந்தனையையும் நோக்குநிலையையும் சரியாகவே பாதிக்கிறது. என்ன முறையில்? நாம் எதைச் சகிக்கவேண்டியிருக்கலாம் என்பதைப் பற்றி நம்மை இது கவலைகொள்ளச் செய்து, பயமடையச்செய்ய வேண்டுமா? நம்முடைய சமுதாயத்திலுள்ள சிலர் அதனால் தொந்தரவு செய்யப்படலாம் என்பதன் காரணமாக, நம்முடைய பிரசங்கவேலையில் நாம் சோர்வடைய வேண்டுமா? நாம் நியாயமற்ற விதமாக பழித்துரைக்கப்படும்போது கலக்கமடைந்தவர்களாய் உணருவதற்கு நியாயமான காரணம் இருக்கிறதா? கடினமாக நடத்தப்படுவது யெகோவாவைச் சேவிப்பதில் நம்முடைய சந்தோஷத்தைப் பறித்துக்கொள்ளும் என்பது தவிர்க்க முடியாததாய் இருக்கிறதா? பலனைக் குறித்து ஏதாவது அநிச்சயம் இருக்கிறதா? இல்லை, ஒருபோதும் இல்லை! ஏன் இல்லை?
11 நாம் அறிவிக்கிற செய்தி, நம்மிடம் இருந்தல்ல, ஆனால் யெகோவாவிடமிருந்து வருகிறது என்ற உண்மையை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. (எரே. 1:9) பின்வரும் இந்தப் புத்திமதியை நாம் செவிசாய்த்துக் கேட்கும் கடமையில் இருக்கிறோம்: ‘அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை பூமியெங்கும் ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.’ (ஏசா. 12:4, 5) ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அதாவது, ‘அவருடைய நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாக’ தம்முடைய மக்கள் மோசமாக நடத்தப்படுவதை அவர் சகித்திருக்கிறார். (யாத். 9:16) நாம் கடவுளால் கட்டளையிடப்பட்ட வேலையை செய்துகொண்டிருக்கிறோம், மேலும் தைரியமாகப் பேசுவதற்கான பலத்தைக் கொடுப்பவரும் அவரே. (அப். 4:29-31) இதுவே, பழைய ஒழுங்குமுறையின் இந்தக் கடைசி நாட்களில் செய்யப்படக்கூடிய மிக முக்கியமானதும், பயனுள்ளதும், அவசரமானதுமான வேலையாக இருக்கிறது.
12 சாத்தானுக்கும் இந்த உலகத்திற்கும் நேர் எதிரிடையாக உறுதியான நிலைநிற்கை எடுப்பதற்கு, இந்த அறிவு நமக்கு தைரியத்தைக் கொடுக்கிறது. (1 பே. 5:8, 9) யெகோவா நம்முடன் இருக்கிறார் என்பதை அறிந்திருப்பது நாம் ‘தைரியங்கொண்டு திடமனதாக’ இருக்கும்படிச் செய்கிறது; நம்மை துன்புறுத்துகிறவர்களுக்கு முன்பாக பயமடைவதற்கான எந்தக் காரணத்தையும் நீக்கிப்போடுகிறது. (உபா. 31:6, NW; எபி. 13:6) நாம் எப்பொழுதும் சாதுரியமாக இருக்க முயற்சிசெய்கிறபோதிலும், நம்முடைய வணக்கமானது சவால்விடப்படுகையில், நாம் ‘மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படியவே’ தீர்மானமுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதைத் தெளிவாக்குவோம். (அப். 5:29) நம்முடைய சார்பாக பேசுவதற்கு நியாயமான வாய்ப்பு இருக்கும்போது, நாம் அவ்விதமாகச் செய்வோம். (1 பே. 3:15) என்றபோதிலும், நம்மை அவமானப்படுத்துவதிலேயே அக்கறையாய் உள்ள கடின இருதயமுள்ள எதிராளிகளுடன் வாதாடிக்கொண்டிருப்பதில் நேரத்தைச் செலவழிக்கமாட்டோம். அவர்கள் இழித்துரைக்கும்போது அல்லது நம்மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டும்போது, கோபமடையவோ பழிக்குப்பழி வாங்கவோ முயற்சிப்பதற்குப் பதிலாக, நாம் வெறுமனே ‘அவர்களை விட்டுவிடுவோம்.’—மத். 15:14.
13 சோதனைகளின் மூலமான நம்முடைய சகிப்புத்தன்மை யெகோவாவைப் பிரியப்படுத்திக்கொண்டிருக்கிறது. (1 பே. 2:19) அந்த அங்கீகரிப்புக்காக நாம் என்ன விலையைச் செலுத்தவேண்டும்? நாம் பகைக்கப்பட்டு எதிர்க்கப்படுவதன் காரணமாக சந்தோஷமில்லாமல் சேவிப்பதற்கு நம்மை நாம் விட்டுக்கொடுத்துவிட வேண்டுமா? நிச்சயமாகவே இல்லை! யெகோவா நம்முடைய கீழ்ப்படிதலுக்கு ‘சந்தோஷத்தையும் சமாதானத்தையும்’ பலனாக அளிப்பதாய் வாக்குறுதியளிக்கிறார். (ரோ. 15:13) கடுமையான துன்புறுத்தலை எதிர்ப்படுகையில், “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்” காரணமாக இயேசு மகிழ்ச்சியுடன் நிலைத்திருந்தார். (எபி. 12:2) அதுவே நம்மைக் குறித்ததிலும் உண்மையாய் இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய சகிப்புத்தன்மைக்கான பலன் அவ்வளவு பெரிது, தாங்கமுடியாத சோதனைகளை அனுபவித்தாலும், ‘சந்தோஷப்பட்டு களிகூருவதற்கு’ நாம் உந்துவிக்கப்படுகிறோம். (மத். 5:11, 12) தீங்குவரும் நாளிலும்கூட, இந்தச் சந்தோஷம்தானே, ராஜ்ய செய்தியின் ஆதரவாக யெகோவாவுக்குத் துதியையும் கனத்தையும் கொடுப்பதற்குக் காரணமாயிருக்கிறது.
14 முடிவான விளைவைக் குறித்ததில் கவலையுள்ளவர்களாகவோ உறுதியற்றவர்களாகவோ இருப்பதற்கான காரணத்தை அளிக்கிற அநிச்சயம் ஏதாவது இருக்கிறதா? இல்லை, யெகோவாவின் அமைப்புக்கும் சாத்தானுடைய உலகத்துக்கும் இடையேயுள்ள போராட்டத்தின் விளைவு வெகு நாட்களுக்கு முன்பாகவே தீர்மானிக்கப்பட்டது. (1 யோ. 2:15-17) எதிர்ப்பின் தீவிரத்தையோ பரிமாணத்தையோ பொருட்படுத்தாமல், யெகோவா நமக்கு வெற்றியை தருவார். (ஏசா. 54:17; ரோ. 8:31, 37) நாம் முழுமையாகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டாலும்கூட, பரிசைப் பெறுவதிலிருந்து எதுவும் நம்மை தடுக்கமுடியாது. நாம் ‘எவற்றைக்குறித்தும் கவலைப்படுவதற்கு’ எந்தவிதக் காரணமும் இல்லை, ஏனென்றால் நம்முடைய விண்ணப்பங்களுக்குப் பிரதிபலனாக யெகோவா நமக்கு சமாதானத்தை அளித்திருக்கிறார்.—பிலி. 4:6, 7.
15 ஆகையால், நம்முடைய சகோதரர்கள் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாக்கப்பட்டதை அல்லது கடந்த காலத்தில் அவர்கள் தடைசெய்யப்பட்ட இடங்களில் பிரசங்கிப்பதற்கு விடுதலை அளிக்கப்பட்டதைப் பற்றிய அறிக்கைகளை நாம் கேட்கிற ஒவ்வொரு சமயத்திலும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துகிறோம். ஆயிரக்கணக்கான உண்மையுள்ள மக்கள் ராஜ்ய செய்தியோடு தொடர்புகொள்ளும்படி வருவதற்கு மாறிக்கொண்டுவருகிற சூழ்நிலைமைகள் புதிய வாய்ப்புகளைத் திறந்துவைக்கையில் நாம் களிகூருகிறோம். பகைமையுள்ள எதிராளிகள் உடனான சண்டைகளில் யெகோவா நமக்கு வெற்றியை அளிக்கத் தெரிவுசெய்கையில், நாம் உண்மையியேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருடைய உண்மை வணக்கத்தின் வீட்டை உயர்த்துவதற்கும் சகல தேசங்களிலுமுள்ள “விரும்பப்பட்டவர்” நுழைவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதற்கும் எந்தவிதமான வழி அவசியமாய் இருந்தாலும்சரி, அவர் ஆசீர்வதித்து செழிக்கச்செய்வார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.—ஆகா. 2:7; ஏசா. 2:2-4.
16 அதேசமயத்தில், நம்முடைய சத்துருவாகிய சாத்தான் மிகவும் வல்லமை வாய்ந்தவனாக இருக்கிறான் என்பதையும் முடிவு வரையிலும் நம்மை தீவிரமாக எதிர்க்கப்போகிறான் என்பதையும் நாம் முழுமையாக அறிந்தவர்களாக இருக்கிறோம். அவனுடைய தாக்குதல்கள் வெளிப்படையானவையாகவும் படுமோசமானவையாகவும் இருக்கலாம், அல்லது தந்திரமானவையாகவும் வஞ்சிப்பவையாகவும் இருக்கலாம். கடந்த காலத்தில் சமாதானமே என்று அறிந்திருக்கிற இடங்களில் துன்புறுத்தல் திடீரென சீற்றமடையலாம். நம்மை நியாயமற்றவிதமாக ஒடுக்குவதற்கான முயற்சிகளில், பொல்லாத எதிராளிகள் கொடூரமானவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் ‘தேவனோடே போர்செய்கிறவர்கள்’ என்பதும் அவர்களை அவர் நிர்மூலமாக்குவார் என்பதும் இப்படிப்பட்ட அனைவருக்கும் காலப்போக்கில் தெளிவாகும். (அப். 5:38, 39; 2 தெ. 1:6-8, 10) இதற்கிடையில், நாம் எதைச் சகித்திருக்க வேண்டும் என்பதைப் பொருட்படுத்தாமல், பற்றுறுதியுடன் யெகோவாவை சேவித்து ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதில் உறுதியுடன் நிலைத்திருக்கத் தீர்மானமுள்ளவர்களாய் இருக்கிறோம். ‘அங்கீகரிக்கப்பட்டவர்களாக ஆகும்போது நாம் ஜீவ கிரீடத்தைப் பெறுவோம்’ என்பதை அறிந்தவர்களாய், நாமே பூமியில் அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்.—யாக். 1:12.