யெகோவா செய்திருப்பதை விவரித்துக்கூறுவதுஎவ்வளவு நன்மையானது!
1 சங்கீதம் 48-ன் ஏவப்பட்ட எழுத்தாளர், ‘சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். பின்வரும் சந்ததிக்கு அவர்கள் அதை விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்’ என்று இஸ்ரவேலில் உள்ளவர்களைத் துரிதப்படுத்தினார். யெகோவாவுக்கான அன்பால் தூண்டப்பட்டவர்களாய், தேவராஜ்ய ஆட்சியினுடைய பூமிக்குரிய மையத்தின் ஒவ்வொரு விவரங்களிலும் அவர்கள் ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாய் இருப்பார்கள். யெகோவா தம்முடைய பெயரையே தரித்திருந்த நகரமாக இது இருந்ததால், இந்த விவரங்கள் எவ்வளவு அருமையானவையாக இருக்கும்! அதைப் பற்றி அவர்கள் பேசுவார்கள், விசேஷமாக அவர்கள் தங்களுடைய சொந்த இருதயங்களில் பொக்கிஷமாகப் போற்றிவந்த எல்லா காரியங்களையும் அவர்களுடைய சந்ததி கேள்விப்பட்டிருப்பதைக் குறித்து அவர்கள் நிச்சயமாயிருக்க வேண்டுமானால் பேசுவார்கள்.—சங். 48:12, 13.
2 யெகோவாவுடைய மேசியாவின் தேவராஜ்ய ஆட்சி இனிமேலும் பூமிக்குரிய சீயோனில் அல்ல, ஆனால் பரலோக எருசலேமில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற காலத்தில் நாம் இப்பொழுது வாழ்கிறோம். (எபி. 12:22) இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படுகிற யெகோவாவின் ராஜ்யம் 1914 முதற்கொண்டு ஆட்சிசெய்துவருகிறது. (வெளி. 12:10) அதனுடைய செயல்நடவடிக்கை நமக்கு மிகப் பெரிய அக்கறைக்குரியதாய் இருக்கிறது. யெகோவாவின் ஊழியர்கள் அந்த ராஜ்யத்தின் காணக்கூடிய பிரதிநிதிகளாக அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு, பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்களை வழிநடத்தியிருக்கிற முறையில் நாமும்கூட ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறோம். யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஸ்தாபிகள் (Jehovah’s Witnesses—Proclaimers of God’s Kingdom) என்ற நம்முடைய புதிய புத்தகத்தில் இதைப்பற்றிய கவர்ச்சியூட்டுகிற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த நம்முடைய “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டில் அதைப் பெறுவதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருந்தோம்!
3 செப்டம்பர் 1-க்கு முன்பாக அந்தப் புத்தகம் உலகமுழுவதும் ஏற்கெனவே 20 மொழிகளில் வெளியிடப்பட்டிருந்தன, மற்ற 13 மொழிகள் பேசுகிறவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக மொழிபெயர்ப்பதும் பிரசுரிப்பதும் முன்னேற்றத்தின்கீழ் இருந்தன. உங்களுடைய வீட்டார் ஒரு பிரதியைப் பெற்றிருப்பார்களாகில் நீங்கள் அதை வாசித்துவருகிறீர்களா? அதிலிருந்து கற்றுக்கொள்கிற காரியங்களைப் பற்றி நீங்கள் பேசிவருகிறீர்களா?
4 மாநாட்டில் கூறப்பட்டபடி, படங்களைப் பார்த்து விளக்கக் குறிப்புகளை வாசித்தப் பிறகு, அநேக சகோதர சகோதரிகள் கட்டுரையின் முக்கிய பகுதிக்குள் விரைவாக சென்றுவிட்டனர். அவர்களுடைய குறிப்புரைகள் என்னவாக இருந்திருக்கின்றன? அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
5 ஒரு சகோதரி இவ்வாறு எழுதினார்: “நான் வாங்கியிருக்கிற புத்தகத்திலேயே, நான் மறுபடியும் வாசிக்கும்படிக்கு அதை முடிப்பதற்கு வெகு ஆவலாய் இருக்கிற ஒரே புத்தகம் இதுதான். நான் இப்பொழுது 25-வது அதிகாரத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எந்தளவுக்கு வாசிக்கிறேனோ அந்தளவுக்கு அதிகமாக கண்ணீர் வருகிறது, என்னுடைய இருதயம் யெகோவாவுக்கான அன்பால் நிரப்பப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகம் அவ்வளவு உற்சாகமூட்டுவதாயும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாயும் இருக்கிறது.”
6 40 ஆண்டுகளுக்கும் மேலாக யெகோவாவை சேவித்துவருகிற ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “இந்தப் புத்தகம் எவ்வளவு கவனத்தைக் கவருவதாய் இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. இரவில் பிந்திய நேரம்வரை விழித்திருந்தும் அதிகாலையிலேயே எழுந்திருந்தும், வாசிப்பதை இரண்டு வாரத்தில் முடித்தேன். உண்மையில் இது, நான் இதுவரை வாசித்தவற்றிலேயே மிக அதிகமாக உணர்ச்சியைத் தூண்டும் புத்தகங்களில் ஒன்றாகும். இது ஆராய்ச்சியின் தலைசிறந்த ஒரு படைப்பாகவும் அதோடு உற்சாகத்திற்கான தலைசிறந்த ஒரு நூலாகவும் இருக்கிறது.”
7 வாசிப்பதில் ஓர் ஒழுங்கான திட்டம்: முழு புத்தகத்தையும் சீக்கிரத்தில் வாசித்து முடிக்கிற சிலர், அதை மீண்டும் வாசிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள், ஆனால் இந்த முறை கொஞ்சம் குறைவான வேகத்துடன்.
8 உங்களுடைய வீட்டில் ஓர் அங்கத்தினருக்குமேல் சத்தியத்தில் இருப்பார்களாகில், நீங்கள் உங்களுடைய புத்தகத்தின் பகுதிகளை உங்களுடைய குடும்பப் படிப்பில் பயன்படுத்த விரும்பலாம். மாநாட்டில் ஒரு பிரதியை வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே சில குடும்பத்தினர் அதைச் செய்வதற்கு ஆரம்பித்துவிட்டனர். காவற்கோபுர படிப்புக்காக தயார்செய்வது போன்ற மற்ற காரியங்களை ஒருபுறம் தள்ளிவிடவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் பிரஸ்தாபிகள் புத்தகத்திலிருந்து வாசிப்பதற்காகவும் அதிலிருந்து பொருளை கலந்தாலோசிப்பதற்காகவும் இன்னுமொரு 15 அல்லது 20 நிமிடங்களைப் பயன்படுத்துவதை நீங்கள் அதிகப் பயனுள்ளதாகக் காணலாம்.
9 சில குடும்பங்கள் மாலையுணவு மேஜையிலிருந்து எழும்புவதற்கு முன்பாக ஒவ்வொரு மாலையிலும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களை—ஒருவேளை ஒன்றிரண்டு உபதலைப்பை—வாசித்துவருகின்றனர். தனிப்பட்டவர்களாக அவர்கள் ஏற்கெனவே அந்தப் புத்தகத்திலுள்ள பெரும்பாலானவற்றை வாசித்திருக்கலாம், ஆனால் அந்தக் கட்டுரையை கலந்தாலோசிப்பதற்கான வாய்ப்போடுகூட மெதுவாகப் படிப்பதன்மூலம் அவர்கள் பயனடைகிறார்கள். இதைச் செய்துவருகிற சிலர் யெகோவாவை அநேக ஆண்டுகளாக சேவித்துவந்திருக்கிறார்கள். அவர்கள் வாசிக்கையில், அநேக நேசமான நினைவுகள் தூண்டப்படுகின்றன. தாங்கள் வாசித்ததைப் பற்றிய சம்பவங்களில் தங்களுடைய சொந்த பங்கை ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிக்கையில் அவர்களுடைய இருதயங்களை அது கனிவிக்கிறது.
10 உங்களுடைய வீட்டிலுள்ள சூழ்நிலைமைகளின் காரணமாக, உங்களுடைய வாசிப்பை நீங்கள் தனிமையில் செய்வதாகக் காணலாம். சங்கத்திற்கு எழுதிய ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக ஒவ்வொரு இரவும் இந்தப் புத்தகத்தைக் கொஞ்சம் வாசித்துவருகிறேன். இந்தப் புத்தகம் சத்தியத்திற்கான ஆழ்ந்த போற்றுதலையும் அன்பையும் என்னில் வளர்த்துவருகிறது, நான் யெகோவாவுடன் அதிகம் நெருங்கியிருப்பதாக உணருகிறேன், நான் அவருடைய அமைப்பில் ஒரு பாகமாக இருப்பதற்காக அதிக நன்றியுடையவளாக இருக்கிறேன். நான் வாசிக்கிற ஒவ்வொரு பக்கத்தையும் உண்மையிலேயே நினைப்பூட்டிக்கொள்கிறேன்.”
11 இந்தப் புத்தகம் பெரியதாக இருந்தபோதிலும், தனிப் பகுதிகள் அவ்வாறு இல்லை. ஆரம்பப் பகுதி ஆபேலின் நாட்களிலிருந்து 1992-ம் ஆண்டு வரையாகவுள்ள சம்பவங்களை—வெறும் 108 பக்கங்களை—வேகமாக ஆனால் உள்ளத்தைக் கவருகிற சம்பவங்களை உள்ளடக்கியதாய் இருக்கிறது. மற்ற பகுதிகள் 13-லிருந்து 150 பக்கங்களுக்குப் பரந்திருக்கின்றன. இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றும் பல அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை வேகமாகப் படிப்பதற்குப் பதிலாக, ஒரு பகுதியை, ஓர் அதிகாரத்தை, அல்லது ஒரே சமயத்தில் ஓர் உபதலைப்பை எடுத்துக்கொள்ளுங்கள்; அதை மகிழ்ந்தனுபவியுங்கள்; அதிலிருந்து மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
12 நீங்கள் வாசிப்பதைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் வாசிக்கையில் உங்களுடைய நோக்கம் என்னவாக இருக்கப்போகிறது? வெறுமனே பக்கங்களை முடிப்பது—புத்தகத்தை முடிப்பது—உங்களுடைய இலக்காக இருக்கக்கூடாது. பிரஸ்தாபிகள் புத்தகம் உங்களுடைய ஆவிக்குரிய சுதந்தரத்தின் பதிவை உள்ளடக்கியதாய் இருக்கிறது. நீங்கள் அதை நன்றாக அறிந்திருக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதில் குறிப்பாக உணர்த்திக் காட்டப்பட்டவற்றைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் பூர்வீக சாட்சிகளின் செயல்நடவடிக்கையை மறுபார்வைசெய்கையில், அவர்களுடைய விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பதை சிந்தித்துப்பாருங்கள். (எபி. 12:1, 2) பெரிய விசுவாசத்துரோகத்தின் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் வாசிக்கும்போது, உங்களுடைய சொந்த ஆவிக்குரிய தன்மையை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்தோடு, விலகிப்போனவர்களைக் கண்ணியில் அகப்படுத்திய படுகுழிகளை விசேஷமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய நவீனகால சரித்திரத்தை நீங்கள் மறுபார்வைசெய்கையில், கடவுளால் பயன்படுத்தப்பட்டவர்களின் ஆவிக்குரிய குணங்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்வது தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது என்பதை எவ்வாறு அவர்கள் நிரூபித்துக் காண்பித்தார்கள், மேலும் கடவுள் அனுமதித்திருந்த சூழ்நிலைமைகளுக்கு—அவற்றில் சில மிகக் கடினமானவை—அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள் என்பதைக் கவனித்துப் பின்பற்றுங்கள்.—எபி. 13:7.
13 நாம் இப்பொழுது அனுபவித்து மகிழுகிற பைபிளின் தெளிவான புரிந்துகொள்ளுதலுக்கு யெகோவா தம்முடைய மக்களை எவ்வாறு வழிநடத்தியிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிற விவரங்களை ஆராய்வது விசுவாசத்தைப் பலப்படுத்துவதாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அமைப்பின் வளர்ச்சியை நன்கு அறிந்தவர்களாக ஆகும்போது, யெகோவா இப்பொழுது பயன்படுத்திவருகிற காணக்கூடிய ஏற்பாட்டிற்கான உங்களுடைய போற்றுதல் வளரும். தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, எவ்வாறு நற்செய்தி பூமியின் கடைமுனை மட்டும் சென்றெட்டியிருக்கிறது என்பதை வாசிக்கையில், நீங்கள் நிச்சயமாகவே கிளர்ச்சியடைந்தவர்களாய் உணருவீர்கள். ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதற்காக வைராக்கியமாக உழைத்திருக்கிற உலகின் எல்லா பாகங்களிலுமுள்ள உண்மையுள்ளவர்களுடைய அனுபவங்களினால் உங்களுடைய இருதயம் அனலூட்டப்படும். யெகோவாவுக்கான தங்களுடைய அன்பின் காரணமாக உண்மையுள்ள சகோதர சகோதரிகள் எவ்வாறு ஏற்கெனவே சகித்திருக்கிறார்கள் என்பதை வாசிக்கையில், தனிப்பட்ட சோதனைகளை கையாளுவதற்கு நீங்கள் பலப்படுத்தப்படுவீர்கள்.
14 கட்டுரையின் ஒரு பகுதியை நீங்கள் வாசித்தப் பிறகு, அதனுடைய மதிப்பை ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிப்பதற்கும் விவரங்களை மறுபார்வை செய்வதற்கும் நேரமெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சிறு பிள்ளைகள் இருப்பார்களேயானால், படங்களை விளக்குவதிலும் காண்பிக்கப்பட்டுள்ள மக்களைப் பற்றி அவர்கள் என்ன அறிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்வதிலும் அவர்களை உட்படுத்துங்கள். நீங்கள் தனிமையாக வாசித்துக்கொண்டிருந்தாலும்கூட, என்ன கற்றுவருகிறீர்களோ அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பொருத்தமாயிருக்கையில், மறுசந்திப்புகளின்போதும் வீட்டுப் பைபிள் படிப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறபோதும் கட்டுரையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது உங்களுடைய சொந்த மனதிலும் இருதயத்திலும் பதியச்செய்யும், மேலும் அது மற்றவர்களுக்கும் நன்மையளிக்கும்.
15 விவரங்களில் அக்கறைகொள்ளுங்கள்: பிரஸ்தாபிகள் புத்தகத்தை வாசிப்பதற்கு நீங்கள் அர்ப்பணிக்கிற நேரங்கள் மகிழ்ந்தனுபவிக்கத்தக்கதாகவும் பலன்தருவதாகவும் இருக்கவேண்டும்.
16 உங்களுடைய குடும்பம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமைக்காரியாலயத்தைச் சந்திக்க நீங்கள் விரும்புவீர்களா? பிட்ஸ்பர்க் பகுதியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக சங்கத்தால் பயன்படுத்தப்பட்ட வசதிகளைப் பக்கங்கள் 208-9 காட்டுகின்றன. பின்பு புரூக்லினில் பயன்படுத்தப்பட்ட கட்டடங்களை பக்கங்கள் 216-17 உங்களுக்கு அறிமுகப்படுத்தும். பக்கங்கள் 352-6-ல் உள்ள படங்கள் இன்றுள்ள உலக தலைமைக்காரியாலயத்தைக் கற்பனைசெய்துபார்க்க உங்களுக்கு உதவிசெய்யலாம். அதிகாரங்கள் 26 மற்றும் 27 பெத்தேலில் செய்யப்படுகிற வேலையைப் பற்றிய விவரங்களைப் பூர்த்திசெய்யும், 295-8-ல் உள்ள பக்கங்கள் பெத்தேல் வாழ்க்கையைப் பற்றிய கூடுதலான தகவல்களைக் கொடுக்கின்றன.
17 நம்மில் பலர் சங்கத்தின் அநேக கிளையலுவலகங்களைச் சென்று பார்க்க முடியாதவர்களாய் இருக்கலாம். பிரஸ்தாபிகள் புத்தகத்திலுள்ள 357-401 வரையிலான பக்கங்கள் உலக சுற்றுப் பயணம் ஒன்றிற்கு உங்களை அழைத்துச் செல்லும். அதனூடே அவசரப்பட்டு செல்லவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு தேசத்திலும் சிறிது நேரம் செலவழித்து அதை அனுபவித்து மகிழுங்கள். ஒவ்வொரு இடத்தையும் கண்டுபிடிப்பதற்கு 415-17 வரையான பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு கிளையலுவலகத்தோடு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புரைகளை வாசியுங்கள். அட்டவணை மூலமாக ஒவ்வொரு தேசத்தையும் பற்றிய கவர்ச்சியூட்டும் மற்ற தகவலையும்கூட நீங்கள் காணலாம். மற்ற தேசங்களிலுள்ள உங்களுடைய ஆவிக்குரிய குடும்ப அங்கத்தினர்களை அறிந்துகொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.
18 மக்கள் ஒன்றாக கூடிவருகையில், சிலசமயங்களில் உலகப் பிரகாரமான உண்மைகளைப் பற்றிய அறிவை உட்படுத்துகிற விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். யெகோவாவின் மக்களுடைய நவீனகால சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க தேதிகளையும் சம்பவங்களையும் அறியவருவது அதிகப் பிரயோஜனமுள்ளதாய் இருக்கும் அல்லவா? இத்தகைய அநேக உண்மைகள் பிரஸ்தாபிகள் புத்தகத்தில் 718-23 வரையிலான பக்கங்களில் பட்டியலிடப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். அந்தப் பட்டியல் ஓர் அடிப்படை வரைச்சட்டத்தை அளிக்கிறது; அந்தப் புத்தகத்தின் மீதமுள்ளவற்றில் காணப்படுகிற விவரங்களை நீங்கள் அதோடு சேர்த்துக்கொள்ளக்கூடும். இவற்றை மறுபார்வை செய்வதற்கான ஓர் அடிப்படையாகப் பயன்படுத்துங்கள். குடும்பத்திலுள்ள இளைஞர் அவற்றை ஒருவேளை விரைவாக மனப்பாடம் செய்வார்கள். முதியவர்களாகிய நம்மில் சிலர் சிறிதளவு வேகம் குறைவாக செய்யலாம். ஆனால், அறிவதிலிருந்து நாம் அனைவரும் பயனடையக்கூடிய தேவராஜ்ய சரித்திரத்தின் விவரங்களாக இவை இருக்கின்றன. தேதிகளையும் அடிப்படை உண்மைகளையும் நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு, அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுங்கள். ஒவ்வொரு சம்பவத்தின் சம்பந்தமாக எத்தனை விவரங்களை நீங்கள் நினைவுகூர முடியும் என்பதைப் பாருங்கள். பின்பு, கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு சம்பவமும் கொண்டிருந்த பங்கைக் குறித்துப் பேசுங்கள். அடுத்ததாக, உங்களுடைய சொந்த வாழ்க்கையை அது எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதையும் யெகோவா செய்துவருகிறவற்றில் நீங்கள் எவ்வாறு பொருந்துகிறீர்கள் என்பதையும் கலந்துபேசுங்கள்.
19 உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பாருங்கள்: யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஸ்தாபிகள் என்பதை நீங்கள் வாசித்து கலந்துபேசுகையில், ஏசாயா 60:22-ன் மகத்தான நிறைவேற்றம் உங்களுடைய காட்சிக்கு முன்பாக வெளிப்படுத்தப்படுவதைக் காண்பீர்கள். அந்தப் புத்தகம் பக்கம் 519-ல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “‘சின்னவன் ஆயிரமாவான்’ என்ற வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றம் உண்மையில் நடந்திருக்கிறது, அபரிமிதமாக நடந்திருக்கிறது! ஒரு ‘சின்னவன்கூட’ இல்லாத 50-க்கும் மேலான நாடுகள் ஒவ்வொன்றிலும்—1919-க்கு முன்பாக யெகோவாவின் சாட்சிகளே இல்லாத இடங்களில், ஒருபோதும் பிரசங்க வேலை செய்திராத இடங்களில்—இன்று யெகோவாவைத் துதிப்பவர்கள் ஆயிரத்திற்கும் மேலானோர் இருக்கின்றனர். இந்த நாடுகள் சிலவற்றில், இப்பொழுது கடவுளுடைய ராஜ்யத்தின் வைராக்கியமான பிரசங்கிகளாக இருக்கிற ஆயிரக்கணக்கானோர், ஆம், ஒரு லட்சத்திற்கும் மேலான யெகோவாவின் சாட்சிகள் இருக்கின்றனர்! உலகமுழுவதிலுமாக, யெகோவாவின் சாட்சிகள் ‘ஒரு பலத்த தேசமாக’ ஆகியிருக்கின்றனர்—உலகத்திலுள்ள எந்தவொரு குறைந்தபட்சம் 80 சுயாட்சி தேசங்களின் தனிப்பட்ட ஜனத்தொகையைவிட அதிகமான எண்ணிக்கையில் ஓர் ஐக்கியப்பட்ட உலகளாவிய சபையாக இருக்கின்றனர்.”
20 ராஜ்ய அதிகரிப்பின் அந்த வேலை எவ்விதத்திலும் முடிவடையவில்லை. மாறாக, முன்னொருபோதும் நிகழ்ந்திராத அளவில் யெகோவா அதை துரிதப்படுத்தியிருக்கிறார். அதில் நீங்கள் எந்தளவுக்குப் பங்குகொள்வீர்கள்? உங்களுக்குத் திறந்திருக்கிற எல்லா வாய்ப்புகளையும் குறித்து நீங்கள் உண்மையில் அறிந்திருக்கிறீர்களா? மற்றவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்கையில், நம்முடைய நாளில் இயேசு கிறிஸ்து மூலமாக நம்முடைய அன்பான கடவுள் வழிநடத்திக்கொண்டிருக்கிற மகத்தான வேலையில் முழு அளவு பங்குகொள்ள உங்களையே அளிப்பதற்கு உங்களுடைய இருதயமே தூண்டுவிப்பதாக.