வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகள்
“பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்று இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?—யோவான் 3:13.
இயேசு அப்பொழுது பூமியில்தான் இருந்தார், பரலோகத்திற்கு ஏறிப்போகவில்லை, அதாவது திரும்பிப் போகவில்லை. என்றாலும், இயேசுவையும், அவர் எந்தச் சூழ்நிலையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதையும் பற்றி நாம் அறிந்திருக்கும் விஷயங்களை வைத்து அவர் சொல்லவந்த குறிப்பை நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசு ‘பரலோகத்திலிருந்து இறங்கினார்’ என்பது, அதற்கு முன்னால் தமது பிதாவோடு ஆவி மண்டலத்தில் வாழ்ந்ததையும், குறித்த காலத்தில் அவரது உயிர் மரியாளின் கருப்பைக்கு மாற்றப்பட்டு இறுதியில் அவர் மனிதனாகப் பிறந்ததையும் காட்டுகிறது. (லூக்கா 1:30-35; கலாத்தியர் 4:5; எபிரெயர் 2:9, 14, 17) அவருடைய இறப்புக்குப் பிறகு ஓர் ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்பட்டு, யெகோவாவிடம் திரும்பச் செல்லவிருந்தார். அதனால்தான் இறப்பதற்கு சற்று முன்பு அவரால் இப்படி ஜெபம் செய்ய முடிந்தது: “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.”—யோவான் 17:5; ரோமர் 6:4, 9; எபிரெயர் 9:24; 1 பேதுரு 3:18.
பரிசேயராகவும் இஸ்ரவேலில் போதகராகவும் இருந்த நிக்கொதேமுவிடம் இயேசு பேசிய சமயத்தில் அவர் இன்னும் பரலோகத்திற்கு திரும்பிப் போகவில்லை. அதுவரை வேறெந்த மனிதரும் இறந்து ஆவி மண்டலத்திற்கு, அதாவது பரலோகத்துக்கு ஏறிப்போகவில்லை. முழுக்காட்டுபவனாகிய யோவான் கடவுளின் தீர்க்கதரிசியாக தன்னிகரற்று விளங்கியதாக இயேசுவே குறிப்பிட்டார்; ஆனாலும், “பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று” அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 11:11) மேலும், விசுவாசமுள்ள தாவீதும் இறந்து, கல்லறையிலே இருந்ததாகவும், இன்னும் பரலோகத்திற்குப் போகவில்லை என்றும் அப்போஸ்தலனாகிய பேதுரு விளக்கினார். (அப்போஸ்தலர் 2:29, 34) இயேசுவுக்கு முன்னால் இறந்துபோன தாவீதும், முழுக்காட்டுபவனாகிய யோவானும், மற்ற விசுவாசமுள்ள மனிதர்களும் பரலோகத்திற்குப் போகாததற்குக் காரணம் இருந்தது. மனிதர்கள் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதற்கான வழியை இயேசு திறப்பதற்கு முன்னே அவர்கள் இறந்துபோனார்கள். ஒரு முன்னோடியைப் போல, பரலோகத்திற்குச் செல்ல “புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை” இயேசு திறந்து வைத்தார் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—எபிரெயர் 6:19, 20; 9:24; 10:19, 20.
இயேசு அப்போது மரணமடைந்து உயிர்த்தெழுப்பப்படவில்லை என்பதால், “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்று நிக்கொதேமுவிடம் சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்? (யோவான் 3:13) இப்பொழுது, நிக்கொதேமுவிடம் இயேசு பேசிக்கொண்டிருந்த சூழமைவைப் பார்க்கலாம்.
அந்த யூத அதிகாரி இரவிலே இயேசுவினிடத்தில் வந்தான்; அப்போது இயேசு, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். (யோவான் 3:3) அதற்கு நிக்கொதேமு, ‘அது எப்படி ஆகும்? ஒரு மனிதன் இரண்டாம் தரம் பிறக்கக் கூடுமோ?’ என்று கேட்டான். கடவுளுடைய அரசாங்கத்தின் பாகமாயிருப்பது பற்றிய இந்த தெய்வீக போதனையை அவன் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை. இதைப் பற்றி அவன் தெரிந்து கொள்ள ஏதாவது வழியிருந்ததா? மற்ற மனிதர்களிடமிருந்து அறிந்துகொள்ள வழியே இருக்கவில்லை; வேறெந்த மனிதனும் பரலோகத்திற்குப் போகாததால், அந்த அரசாங்கத்திற்குள் செல்வதைப் பற்றி விளக்கும் நிலையில் எவரும் இல்லை. நிக்கொதேமுவுக்கும் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க இயேசுவால் மட்டுமே முடிந்தது, ஏனெனில் அவர் ஒருவரே பரலோகத்திலிருந்து இறங்கினவர். ஆகவே, இது போன்ற விஷயங்களை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க அவருக்கு மட்டுமே தகுதியிருந்தது.
இந்த வசனத்தின் பேரில் நாம் சிந்தித்த இந்தக் கேள்வி கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது சம்பந்தமாக ஒரு முக்கிய குறிப்பை தெளிவாக்குகிறது. அதாவது, ஒரு வசனத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக அதைக் குறைகூறுவது சரியல்ல. பைபிள், ஓரிடத்தில் என்ன சொல்கிறது என்று பார்க்கும்போது, மற்ற வசனங்களையும், அவைகளுக்கு இடையே உள்ள பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். மேலுமாக, சூழமைவைக் கவனிப்பது, அதாவது சந்தர்ப்ப சூழ்நிலை அல்லது பேசப்பட்ட விஷயத்தைக் கவனிப்பது, புரியாத வசனங்களுக்கும் சரியான, நியாயமான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உதவும்.