உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 5/1 பக். 16-21
  • பெருக விதையுங்கள் பெருக அறுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெருக விதையுங்கள் பெருக அறுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் படிப்பின் சம்பந்தமாக பெருக விதைத்தல்
  • கூட்டங்களில் ஆஜராயிருப்பதன் சம்பந்தமாக பெருக விதைத்தல்
  • நம்முடைய ஜெபங்களின் சம்பந்தமாக பெருக விதைத்தல்
  • நம்முடைய ஊழியத்தின் சம்பந்தமாக பெருக விதைத்தல்
  • குடும்ப உறவுகளின் சம்பந்தமாக பெருக அறுத்தல்
  • நன்மைகளை அறுவடை செய்கிறவராக இருங்கள்!
  • நீங்கள் பெருக விதைக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1994
  • பெருக விதைத்தால் பெருக அறுப்போம்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • நீதியை விதைத்து, கடவுளின் அன்புள்ள தயவை அறுவடை செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • பெருமளவு விதையுங்கள், ஆனால் விவேகத்தோடு
    நம் ராஜ்ய ஊழியம்—2003
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 5/1 பக். 16-21

பெருக விதையுங்கள் பெருக அறுங்கள்

சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான். பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.”—2 கொரிந்தியர் 9:6.

நம்முடைய தேவனாகிய யெகோவா “நித்தியானந்த தேவனாக” இருக்கிறார். அவர் தாராளமாக கொடுப்பவராக இருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இதை இவ்விதமாக விளக்கினார்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே சந்தோஷம்.” (1 தீமோத்தேயு 1:11; அப்போஸ்தலர் 20:35) யெகோவா தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய வார்த்தையை, பிறப்பித்தது முதற்கொண்டு இன்றுவரையாக அவர் கொடுத்திருப்பதைவிட அதிகமாக வேறு எவரும் கொடுத்ததில்லை. ஆகவே சர்வலோகம் முழுமையிலும் அவரே அதிக மகிழ்ச்சியுள்ள ஒரு நபராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகத்தின் நிழலும் இல்லை.

2 ஏறக்குறைய இதே போன்ற ஒரு நியமத்தையே 2 கொரிந்தியர் 9:6-ல் நாம் காண்கிறோம்: “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான். பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.” யெகோவா தேவன் அவருடைய சிருஷ்டிப்பு வேலையின் சம்பந்தமாக எவ்வளவு பெருக விதைத்திருக்கிறார்! லட்சக்கணக்கான ஆவி சிருஷ்டிப்புகளைப் பற்றி அவருடைய வார்த்தை சொல்லுகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 5:11) விண்மீன்களின் வானங்களில் எண்ணற்ற பால்வீதி மண்டலங்களும், ஒவ்வொன்றிலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதையுங்கூட கவனியுங்கள். இந்தப் பூமிக்கு நாம் வரும்போது, உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லையில்லா பல்வேறு மாறுபட்ட இயல்புள்ள காரியங்களை யெகோவா தேவன் படைத்திருக்கிறார்! நிச்சயமாகவே, “பூமி அவருடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 104:24) மேலுமாக அவர் நம்முடைய மனதிலும், நம்முடைய புலன்களிலும் நம்முடைய சரீரத்திலும் எத்தனைத் தாராளமாக நமக்கு அளித்திருக்கிறார்! உண்மையாகவே நாம் “அதிசயமாய் உண்டாக்கப்”பட்டிருக்கிறோம்.—சங்கீதம் 139:14.

3 யெகோவா பெருக விதைத்திருக்கிறார் என்பதைக் குறித்ததில் எந்த சந்தேகமுமில்லை. அவருடைய சிருஷ்டிப்பு வேலைகளில் மட்டுமல்லாமல், பூமிக்குரிய சிருஷ்டிகளோடு அவரின் செயல் தொடர்புகளிலுங்கூட இது இவ்விதமாகவே இருக்கிறது. ஆனால் அவர் பெருக அறுத்திருக்கிறாரா? நிச்சயமாகவே அறுத்திருக்கிறார். என்ன விதத்தில்? அன்பினால் தூண்டப்பட்டு அவரைச் சேவிக்கும் இத்தனை அநேக புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளை அவர் உடையவராக இருந்திருக்கிறார், இப்போதும் உடையவராயிருக்கிறார் மற்றும் இனிமேலும் உடையவராயிருப்பார் என்பதில்தானே. அவர்கள் இவ்விதமாகச் செய்வது, விசேஷமாக நிந்திக்கிற பிசாசு பொய்யன் என்பதை நிரூபிப்பதன் காரணமாக இது யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது.—நீதிமொழிகள் 27:11.

4 வார்த்தையில் ஆரம்பித்து, யெகோவா தேவனின் அநேக உண்மையுள்ள ஊழியர்கள் அதேவிதமாகவே பெருக விதைத்துப் பெருக அறுத்திருப்பதைப் பற்றிய ஏராளமான சான்றுகள் பைபிளில் இருக்கின்றன. அது அவ்விதமாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் யெகோவாவின் நியமங்கள் எல்லா சமயங்களிலும் எல்லாருக்கும் பெருந்துவதாக இருக்கின்றன. ஆகவே விதைத்தலைப்பற்றிய நியமம் உண்மையாக இருப்பதை உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் காணமுடியும்.

5 நாம் பெருக விதைப்பதற்குரிய காரணங்களும் முன்மாதிரிகளும் வேத வசனங்களில் ஏராளமாக இருந்தபோதிலும், அதைச் செய்வது நிச்சயமாக எளிதான காரியம் இல்லை. ஏன் இல்லை? ஏனென்றால் நாம் இவ்விதமாகச் செய்வதைத் தீவிரமாக எதிர்க்கும் மூன்று சத்துருக்கள் நமக்கிருக்கிறார்கள். முதலாவதாக, சுதந்தரிக்கப்பட்ட, நம்முடைய சொந்த, தன்னலம் நாடும் மனசாய்வு நமக்கு இருக்கிறது. ஆதியாகமம் 8:21-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.” “மனித இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்பதாகவுங்கூட கடவுளுடைய வார்த்தை நமக்குத் தெரிவிக்கிறது. (எரேமியா 17:9) இரண்டாவதாக பொல்லாங்கனுக்குள் கிடக்கும் பொல்லாத உலகிலிருந்து வரும் அழுத்தத்தோடு நாம் போராட வேண்டியதாக இருக்கிறது. (1 யோவான் 5:19) மூன்றாவதாக, நாம் விழிப்பாயிராவிட்டால், நம்மை விழுங்கிவிட பிசாசு தயாராக இருக்கிறான்.—1 பேதுரு 5:8.

6 இந்த மூன்று சத்துருக்களையும் குறித்து நீங்கள் எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாயிருக்கிறீர்களா? இந்த எதிராளிகள் இருப்பதன் காரணமாக, ‘நம் அந்திய காலத்தில் நாம் ஞானமுள்ளவர்களாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.’ (நீதிமொழிகள் 19:20) உண்மையில், நாம் முடிவில் தோல்வியடைந்துவிடாதபடிக்கு அப்போஸ்தலனாகிய பவுல் செய்தது போலவே நாம் ‘சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்த’ வேண்டும். நாம் பெருக விதைத்தால், நாம் பெருக அறுப்போம் என்ற நியமம் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் அனைவரும் ஈடுபடும் பரிசுத்த சேவையின் பல்வேறு அம்சங்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. ஆம் நாம் எங்கே பார்த்தாலும் இந்த நியமம் பொருந்துவதை நாம் காண்போம்: நம்முடைய தனிப்பட்ட படிப்பில், கூட்டங்களில் ஆஜராயிருப்பதில், நம்முடைய ஜெபங்களில், முறைப்படியாகவும் முறைப்படியாகயில்லாமலும் சாட்சி கொடுக்கையில், மற்றும் நம்முடைய குடும்ப உறவுகளில்.

பைபிள் படிப்பின் சம்பந்தமாக பெருக விதைத்தல்

7 யெகோவா தேவனுக்குக் கனிகொடுக்கும் ஊழியர்களாக இருப்பதற்கு நாம் முதலாவதாக நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பின் சம்பந்தமாக பெருக விதைக்க வேண்டும். வெறுமென பொருள் சம்பந்தமான காரியங்களால் மட்டுமே நாம் உயிர்வாழ்வதில்லை என்பதை மதித்துணருகிறவர்களாய், நாம் ஒரு ஆழ்ந்த ஆவிக்குரிய பசியார்வத்தை உடையவர்களாய் இருக்க விரும்ப வேண்டும். அன்றாட வாழ்க்கையின் எல்லா பொறுப்புகளும் நடவடிக்கைகளும் நம்மை நெருக்கிக் கொண்டிருப்பதன் காரணமாக நம்முடைய ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பதற்கு மனமார முயற்சிப்பது அவசியமாக இருக்கிறது. (மத்தேயு 13:19) சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதியபோது, கடவுளுடைய வார்த்தைக்காக கொண்டிருந்த அதே போற்றுதலை நாம் தனிப்பட்டவர்களாக கொண்டிருப்பது நமக்கு உண்மையிலேயே மேன்மையானதாக இருக்கும்: “மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறது போல நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்.”—சங்கீதம் 119:162.

8 ‘ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து . . . காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற புத்திமதிக்கு நாம் செவி கொடுப்பது சந்தேகமில்லாமல் இதில் ஒரு உதவியாக இருக்கும். (எபேசியர் 5:15, 16) இந்த விஷயத்தில் உங்களை நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளவுங்கூட விரும்பலாம். பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ஒவ்வொரு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையையும் வாசிப்பதற்கு நேரத்தை உண்டுபண்ண நான் என்னுடைய வேலைகளை அதற்கேற்ப ஒழுங்குபடுத்திக் கொள்கிறேனா? வருடாந்தர புத்தகத்தையும் மாநாடுகளில் நாம் பெற்றுக்கொள்ளும் பெரிய புத்தகங்களையும் மற்ற பிரசுரங்களையும் பற்றி என்ன? இவைகளை வாசிப்பதற்கு எப்பொழுதும் ஓரிரண்டு மணிநேரங்களைக் கண்டு பிடிப்பது நமக்கு முடியாமல் இருக்கலாம். ஆனால் விழிப்புள்ளவர்களாய் இருப்பதன் மூலம் பைபிளில் ஒரு அதிகாரத்தையோ அல்லது பத்திரிகையில் ஒரு கட்டுரையையோ வாசிப்பதற்கு அங்கும் இங்கும் சில நிமிடங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அநேக கிறிஸ்தவர்கள், ஒவ்வொரு நாளும் 10 அல்லது 15 நிமிடங்கள் முன்கூட்டியே எழுந்திருந்து, அவர்கள் அதிக விழிப்பாயிருக்கும் அந்தச் சமயத்தில் வாசிக்கிறார்கள். மற்றவர்கள் பொது போக்குவரத்தில் பிரயாணம் செய்கையில் அதிகமாக வாசிக்க முடிவதைக் காண்கிறார்கள். உங்களைப் பற்றியதென்ன?

9 இந்த வழிகளில் பெருக விதைப்பதன் மூலம் நாம் பெருக அறுப்பதையுங்கூட எதிர்பார்த்திருக்கலாம். எவ்விதமாக? நாம் பலமான விசுவாசத்தையும், பிரகாசமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் நம்பிக்கையுமான ஒரு மனநிலையையும் பெற்றுக்கொள்வோம். அதற்கும் மேலாக நாம் மற்றவர்களுக்குச் சாட்சி கொடுப்பதற்கு நல்ல விதத்தில் தயாராக இருப்போம். ஆரோக்கியமான சம்பாஷணைக்கு நம் பங்கைச் செய்து வாய்ப்பு கிடைக்கும்போது நம்முடைய சகோதரர்களுக்கு உதவியாக இருப்போம். 1 தீமோத்தேயு 4:15, 16-ல் அதன் பலன் என்னவாக இருக்கக்கூடும் என்பதைக் கவனியுங்கள்.

கூட்டங்களில் ஆஜராயிருப்பதன் சம்பந்தமாக பெருக விதைத்தல்

10 நாம் பெருக விதைத்தால் பெருக அறுப்போம் என்ற இந்த நியமம் சபை கூட்டங்களில் நாம் ஆஜராயிருப்பதிலுங்கூட பொருந்துகிறதா என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். சங்கீதக்காரன் பின்வருமாறு சொன்னபோது உணர்ந்த விதமாகவே நாமும் உணர வேண்டும்: “‘யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்’ என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.” ஆம், நம்முடைய சகோதரர்களோடு கூட்டுறவு கொள்ள நாம் கவர்ந்திழுக்கப்பட்டவர்களாக உணர வேண்டும்.—சங்கீதம் 122:1.

11 இதற்கு நம்மிடம் தேவைப்படுவது என்ன? கொஞ்சம் கடுமையான வானிலையோ அல்லது ஒரு சிறிய உடல் உபாதையோ வீட்டில் இருந்துவிடுவதற்கு ஒரு காரணமாக இருப்பதை அனுமதியாமல், ஒழுங்காகவும், உண்மையுடனும் நம்முடைய ஐந்து வாராந்தர கூட்டங்களிலும் ஆஜராயிருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. எவ்வளவு அடிக்கடி, வானிலை—உஷ்ணமோ குளிரோ, மழையோ அல்லது வறட்சியோ—கூட்டங்களில் ஆஜராயிருப்பதில் குறுக்கிடுவதை நாம் பார்க்கிறோம்? என்றபோதிலும் நாம் ஆஜராயிருக்க அதிகமான தடைகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கையில் யெகோவா நம்மீது அதிகமான ஆசீர்வாதங்களை பொழிவது நமக்குத் தெரிகிறது. கூட்டங்களுக்கு முன்பாக, உற்சாகமூட்டும் வகையில் சம்பாஷிப்பதற்காக முன்னதாகவே வந்துவிடுவதன் மூலமாகவும், அதே காரணத்துக்காக கூட்டம் முடிந்த பிறகு தங்கியிருப்பதன் மூலமாகவுங்கூட நாம் விதைக்கலாம். இந்த விஷயத்தில் தனிப்பட்டவராக நீங்கள் எவ்விதமாக இருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் பெருக விதைப்பதற்கு முயற்சிக்க வேண்டுமா? காவற்கோபுர படிப்புக்கும் மற்ற கூட்டங்களுக்கும் நன்றாக தயாரிப்பதுங்கூட இதில் உட்பட்டிருக்கிறது. ஏனென்றால் வாய்ப்புகள் கிடைக்கும்போது குறிப்புகளைச் சொல்வதன் மூலம் நாம் பெருக விதைக்கக்கூடியவர்களாக இருக்கலாம்.

12 என்ன விதங்களில் இதிலிருந்து நாம் பெருக அறுப்போம்? நாம்தாமே உற்சாகம் பெற்றவர்களாக இராமல் உற்சாகமூட்டும் ஒரு குறிப்பைச் சொல்ல முடியாது; நம்முடைய சொந்த இருதயங்கள் மகிழ்வூட்டப்படாமல் சோர்வாக இருக்கும் ஒரு ஆத்துமாவை நாம் உற்சாகப்படுத்த முடியாது. ஆம், நாம் வாய்விட்டு சொல்லும் சத்தியங்களில் நம்முடைய சொந்த விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளாமல், கூட்டங்களில் ஒரு குறிப்பைச் சொல்வதன் மூலம் நாம் நம்முடைய உள்ளத்திலிருக்கும் கருத்தைத் தெரிவிக்க முடியாது. இது எளிதாக இருக்கிறது: “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”—நீதிமொழிகள் 11:25.

நம்முடைய ஜெபங்களின் சம்பந்தமாக பெருக விதைத்தல்

13 பெருக விதைப்பதைப்பற்றிய வேத நியமம் நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களுக்குங்கூட பொருந்துவதாக இருக்கிறது. நம்முடைய ஜெபங்கள் எப்பொழுதும் ஒரே விதமாக, உயிரற்றதாக, சொன்னதையே சொல்வதாக இருக்கின்றனவா? அல்லது அவை உண்மையில் நம்முடைய இருதயத்திலிருந்து வருகின்றனவா? வெறுமென வேண்டுதல்கள் மட்டுமல்லாமல், இருதயப் பூர்வமான துதிகளும், ஸ்தோத்திரங்களும் ஒருசில சமயங்களில் விண்ணப்பங்களும் அதில் இடம் பெறுகின்றனவா? விலைமதிப்புள்ள ஜெப சிலாக்கியத்தை நாம் உண்மையில் முக்கியமானதாக கருதுகிறோமா? நம்முடைய பரம தகப்பனிடம் நம்முடைய இருதயங்களை ஊற்றுகிறோமா? அல்லது நாம் அவசரமாக ஜெபத்தை முடித்துக்கொண்டு, சில சமயங்களில் ஜெபம் செய்யக்கூட முடியாதபடி அத்தனை வேலையாக நாம் இருக்கிறோமா? இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையிலும் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையிலும் ஜெபம் முக்கியமானதாக இருந்ததை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் காண்பிக்கிறது.—லூக்கா 6:12, 13; யோவான் 17:1-26; மத்தேயு 26:36-44; பிலிப்பியர் 1:9-11; கொலோசெயர் 1:9-12.

14 நம்முடைய ஜெபங்களின் சம்பந்தமாக நாம் எந்த அளவுக்கு பெருக விதைக்கிறோமோ அந்த அளவுக்கு யெகோவா அவைகளுக்கு பதிலளிப்பதிலும் அவரோடு நாம் ஒரு நல்ல உறவைக் கொண்டிருப்பதிலும் நாம் பெருக அறுப்போம். குடும்ப ஜெபங்கள், ஜெபத்தைச் செய்கிறவரிடமாக குடும்ப அங்கத்தினர்களை நெருங்கிவரச் செய்ய உதவுகிறது. மத்தேயு 7:7-லுள்ள இயேசுவின் வார்த்தைகளையுங்கூட நாம் மனதில் கொள்வோமாக: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.”

நம்முடைய ஊழியத்தின் சம்பந்தமாக பெருக விதைத்தல்

15 ஒருவேளை வேறு எவ்விடத்தையும்விட நாம் சாட்சி கொடுப்பதன் சம்பந்தமாகவே நம்முடைய பொருள் வெகு தெளிவாக எளிதில் உணரப்படுகிறது. இதற்கு நம்மால் அதிகமான நேரத்தை ஒதுக்க முடியும்போது, அக்கறையூட்டும் அனுபவங்கள், பயனுள்ள மறுசந்திப்புகள், பலன்தரும் பைபிள் படிப்புகளின் வடிவில் நாம் அறுப்பது அதிக சாத்தியமாக இருக்கிறது. இதனால் ஜீவனுள்ள சிபாரிசு நிருபங்கள் நமக்குக் கிடைக்கின்றன.—2 கொரிந்தியர் 3:2.

16 என்றாலும் வெளி ஊழியத்தின் சம்பந்தமாக பெருக விதைப்பது, வெறுமென நாம் எவ்வளவு அதிகம் செய்கிறோம் என்பதை மட்டுமல்லாமல் அதன் தரத்தையும் பற்றிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஊழியத்தில் பங்கு கொள்ளும்போது நாம் “ஆவியிலே அனலாயிருக்க” விரும்ப வேண்டும். (ரோமர் 12:11) நாம் ஜனங்களைத் தைரியமாகவும், அனலோடும், சிநேகமான புன்சிரிப்போடும் அணுக வேண்டும். நாம் வீட்டுக்கு வீடு சென்றாலும் அல்லது தெரு ஊழியத்தில் பங்கு கொண்டாலும் இது பொருந்துகிறது. சாட்சி கொடுப்பதற்கு நம்முடைய புதிய கருவியாகிய, வேத வாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் என்ற புத்தகம் நம்முடைய மொழியில் கிடைப்பதாக இருந்தால், நாம் அதிக திறமையுள்ளவர்களாயும் அதிகமாக பலன் தருகிறவர்களாயும் இருக்கும்படி நம் அனைவருக்கும் அது உதவி செய்ய வேண்டும். ஊழியத்தில் நாம் செலவிடும் நேரத்திலும் சக்தியிலுமிருந்து நாம் பெருக அறுக்கிறவர்களாக இருப்போம்.

17 வெளி ஊழியத்தின் சம்பந்தமாக நாம் பெருக விதைப்பது, அக்கறையை நாம் காணும்போது அதைக் குறித்துக்கொள்ள நாம் கடமை உணர்வுள்ளவர்களாக இருப்பதையுங்கூட அர்த்தப்படுத்துகிறதல்லவா? மறுபடியுமாகப் போய் சந்தித்து ஒரு வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் அளவுக்கு அக்கறையை வளர்க்க வேண்டிய நம்முடைய உத்திரவாதத்தை ஏற்றுக்கொள்வது இதோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் மேலாக, அக்கினியை எதிர்த்து நிற்கும் பொருட்களால் கட்டுவதற்கு நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படியென்றால், நம்பிக்கையோடும், அதே சமயத்தில் வீட்டுக்காரரின் இடத்தில் நம்மை வைத்து, பகுத்துணர்வோடு நாம் கற்பிக்க வேண்டும் என்று அர்த்தமாகிறது. பைபிள் நியமங்களைக் குறித்து அவர்கள் எவ்விதமாக உணருகிறார்கள் என்பதை பைபிள் மாணாக்கர்களின் உள்ளத்திலிருந்து நாம் திறம்பட்ட விதத்தில் வரவழைக்க வேண்டும். இந்த விதங்களில் பெருக விதைப்பதன் மூலமாக மட்டுமே சாத்தானின் மற்றும் அவனுடைய காரிய ஒழுங்கின் கடுந்தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கு கிறிஸ்தவ ஆளுமைகளை நாம் உருவாக்க எதிர்பார்த்திருக்க முடியும்.—1 கொரிந்தியர் 3:12-15.

குடும்ப உறவுகளின் சம்பந்தமாக பெருக அறுத்தல்

18 நாம் விதைக்கும் விதமாகவே அறுப்போம் என்ற தேவராஜ்ய நியமம் அதே விதமாக குடும்ப வட்டாரத்துக்குள்ளும் பொருந்துவதாக இருக்கிறது. இங்கே லூக்கா 6:38-லுள்ள இயேசுவின் வார்த்தைகளை நாம் மனதில் வைக்கலாம்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

19 சமயோசிதமாகவும் தன்னலம் கருதாமலும் செய்யும் பாசமுள்ள செயல்களின் மூலமாக பெருக விதைப்பதற்கு கணவன்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் அநேக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 5:22-33-ல் நேர்த்தியான ஆலோசனையைக் கொடுக்கிறான். நீங்கள் எவ்விதமாக பெருக விதைக்கலாம் என்பதைக் குறித்து சிந்திக்கையில் இந்த வசனங்களை வாசித்துப் பாருங்கள். ஒரு கிறிஸ்தவ மனைவி எந்த அளவுக்கு உண்மையில் கீழ்ப்படிகிறவளாயும், ஒத்துழைக்கிறவளாயும் ஆதரிப்பவளாயும் இருக்கிறாளோ அந்த அளவுக்கு அவள் பெருக அறுப்பது சாத்தியமாக இருக்கிறது. என்ன விதங்களில்? அவளுடைய கணவனின் பாசத்தையும் போற்றுதலுள்ள உள்ளான அன்பையும் அவள் பெற்றுக்கொள்வாள். தன்னுடைய சொந்த சரீரத்தைப் போல அவளை நேசிக்க அவன் தூண்டப்படுவான். அதே விதமாகவே 1 பேதுரு 3:7 ஊக்குவிக்கும் கரிசனையையும் எபேசியர் 5:28, 29 உயர்த்திக் காண்பிக்கும் தன்னலமற்ற அன்பையும் காண்பிக்க எந்த அளவுக்கு ஒரு கிறிஸ்தவ கணவன் பிரயாசப்படுகிறானோ அந்த அளவு அவன் தன்னுடைய மனைவியின் கீழ்ப்படிதலையும் பற்று மாறாத ஆதரவையும் பெற்றுக்கொள்வதன் சம்பந்தமாக பெருக அறுக்க அவன் எதிர்பார்த்திருக்கலாம்.

20 நம்முடைய பிள்ளைகளை யெகோவாவின் சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் வளர்க்க வேண்டிய நம்முடைய உத்தரவாதத்தையுங்கூட நாம் புறக்கணித்துவிட முடியாது. (எபேசியர் 6:4) உண்மையில் இது மற்ற தேவராஜ்ய கடமைகளுக்கும் சிலாக்கியங்களுக்கும் முன்னால் வருகிறது. சில கிறிஸ்தவ பெற்றோர் இதை அசட்டை செய்திருப்பது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது. ஒரு பக்கத்தில் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் உணர்ச்சிப் பூர்வமான மற்றும் ஆவிக்குரிய நலனுக்காக தங்களுடைய விருப்பங்களையும் வசதிகளையும் தியாகம் செய்ய மனமுள்ளவர்களாய் இருந்து அவர்களோடு நியாயமான அளவு நேரத்தைச் செலவழித்து அவர்கள் மீது அன்பைப் பொழிய வேண்டும். மறுபக்கத்தில் பெற்றோர் உறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குப் பின்வரும் புத்திமதி கொடுக்கப்படுகிறது: “உன் மகனைச் சிட்சை செய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான். உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.” இந்த வழிகளில் நீங்கள் விதையுங்கள். அப்பொழுது உங்களை மதித்து உங்களுக்கு வெகு நெருங்கியவர்களாக உணரும், உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் பிள்ளைகளைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் பெருக அறுப்பது வெகுவாக சாத்தியமாக இருக்கும்.—நீதிமொழிகள் 29:17.

நன்மைகளை அறுவடை செய்கிறவராக இருங்கள்!

21 ஆகவே நாம் விதைக்கிற விதமாகவே அறுப்போம் என்ற நியமம் கிறிஸ்தவத்தின் எல்லா அம்சங்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பில் நாம் பெருக விதைத்தால், நாம் பலமான விசுவாசத்தையும், பிரகாசமான நம்பிக்கையையும், நம்முடைய ஊழியத்தில் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கும் நிலையையும் அறுவடை செய்வோம். நம்முடைய கூட்டங்களில் நாம் பெருக விதைத்தால், நம்முடைய சொந்த விசுவாசத்தை நாம் பலப்படுத்திக் கொண்டவர்களாக, மற்றவர்களின் விசுவாசத்தையும் பலப்படுத்தக்கூடியவர்களாக இருப்போம். நம்முடைய ஜெபங்களில் நாம் பெருக விதைத்தால் நம்முடைய பரலோக தகப்பனோடு ஒரு நல்ல உறவையும் நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதையும் நாம் அறுப்போம். சாட்சி கொடுக்கையில் நாம் பெருக விதைத்தால், நாம் தனிப்பட்ட விதமாக நன்மையடைவோம். நம்முடைய முயற்சிகளைக் காண்பிக்க நமக்கு சிபாரிசு நிருபங்கள் இருக்கும்.

22 அதே விதமாகவே, இந்த நியமம் குடும்ப உறவுகளிலும் பொருந்துகிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடாதிருப்போமாக. அன்புள்ள கரிசனையிலும் தன்னலமற்ற செயல்களிலும் பெருக விதைப்பதன் மூலம், கணவன்மார்களாக, மனைவிமார்களாக, பெற்றோர்களாக அல்லது பிள்ளைகளாக நாம் பயனுள்ள கூட்டுறவும் அனுபவங்களும் நிறைந்த ஒரு குடும்ப வாழ்க்கையை அறுவடை செய்ய எதிர்பார்த்திருக்கலாம். வெளியே இருக்கிறவர்களுக்குங்கூட அது ஒரு நல்ல சாட்சியாக இருந்து நம்முடைய வாழ்க்கை முறையை சிபாரிசு செய்வதாக இருக்கும்.

23 ஆகவே ஒவ்வொரு யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சியும் தன்னைத்தானே பின்வருமாறு கேட்டுக் கொள்ளட்டும்: நான் இன்னும் பெருக விதைக்க முடியுமா? 1 தெசலோனிக்கேயர் 4:1-லுள்ள பவுலின் வார்த்தைகள் வெகு பொருத்தமானவையாக இருக்கின்றன: “அன்றியும் சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்தி சொல்லுகிறோம்.” ஆம், யெகோவாவுக்கு கனமுண்டாகவும் நமக்கும் நம்முடைய சகோதரர்களுக்கும் ஆசீர்வாதமுண்டாகவும் இன்னும் அதிகமாக பெருக விதைக்க நாம் அனைவரும் முயற்சிப்போமாக. (w86 6/15)

விமர்சனத்துக்குக் குறிப்புகள்

◻ 2 கொரிந்தியர் 9:6-ல் காணப்படும் சத்தியத்துக்கு யெகோவா தேவன் எவ்விதமாக எடுத்துக்காட்டாக இருக்கிறார்?

◻ பைபிள் படிப்பு மற்றும் கிறிஸ்தவ கூட்டங்களின் சம்பந்தமாக, நாம் பெருக அறுப்பதற்கு என்ன செய்யலாம்?

◻ வெளி ஊழியத்தின் சம்பந்தமாக நீங்கள் எவ்விதமாக அதிக முழுமையாக விதைத்து அறுக்கலாம்?

◻ பெருக விதைத்துப் பெருக அறுப்பதற்கு என்ன நடைமுறையான நடவடிக்கைகள் உங்களுடைய குடும்பத்துக்கு உதவக்கூடும்?

[கேள்விகள்]

1. சர்வலோகத்திலும் யெகோவா தேவனே அதிக மகிழ்ச்சியுள்ள நபராக இருப்பது ஏன்?

2, 3. (எ) என்ன விதங்களில் கடவுள் பெருக விதைத்திருக்கிறார்? (பி) யெகோவா பெருக அறுத்திருக்கிறார் இன்னும் அறுப்பார் என்பதாக ஏன் சொல்லப்படலாம்?

4. 2 கொரிந்தியர் 9:6-லுள்ள நியமம் எவ்விதமாக நம்முடைய காலமும் உட்பட, எல்லா சமயங்களிலும் பொருந்துவதாக இருந்திருக்கிறது?

5, 6. (எ) எந்த சத்துருக்கள் நாம் பெருக விதைப்பதைக் கடினமாக்கிவிடுகின்றனர்? (பி) நாம் என்ன செய்ய மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்? நம்முடைய பரிசுத்த சேவையின் என்ன அம்சங்களில்?

7, 8. (எ) நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பின் சம்பந்தமாக பெருக விதைப்பதற்கு நமக்கு என்ன இருக்க வேண்டும்? (பி) நாம் என்ன இலக்குகளை வைக்க வேண்டும்? இவைகளை நாம் எவ்விதமாக முயன்று அடைய முடியும்?

9. நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பின் சம்பந்தமாக நாம் எவ்விதமாக பெருக அறுக்கக்கூடும்?

10. நம்முடைய கூட்டங்களின் சம்பந்தமாக நம்முடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்-

11, 12. நம்முடைய கூட்டங்களில் ஆஜராயிருப்பதன் சம்பந்தமாக, நாம் எவ்விதமாக பெருக விதைத்து, பெருக அறுக்கலாம்?

13, 14. நம்முடைய ஜெபங்களின் சம்பந்தமாக நாம் எவ்விதமாக (எ) பெருக விதைக்கலாம்? (பி) பெருக அறுக்கலாம்?

15. விசேஷமாக எங்கே பெருக விதைப்பதும் பெருக அறுப்பதும் அனுபவித்துக் களிக்கப்படலாம்?

16, 17. (எ) வெளி ஊழியத்தின் சம்பந்தமாக பெருக விதைப்பது நம்மிடம் கேட்பது என்ன? (பி) அவ்விதமாகச் செய்யும்போது என்ன பலன்களை நாம் எதிர்பார்த்திருக்கலாம்?

18. நம்முடைய குடும்ப உறவுகளின் சம்பந்தமாக நாம் என்ன புத்திமதியை மனதில் வைக்க வேண்டும்?

19. கணவன்மார்களும் மனைவிமார்களும் எவ்விதமாக பெருக விதைத்து அதன் மூலமாக நன்மையடையலாம்?

20. பிள்ளைகளை வளர்ப்பதன் சம்பந்தமாக பெருக விதைப்பது எவ்விதமாக பொருத்தப்படலாம்? என்ன விளைவுகளோடு?

21, 22. நம்முடைய பரிசுத்த சேவையிலும் நம்முடைய குடும்ப உறவுகளிலும் என்ன பல்வேறு வழிகளில் நாம் பெருக விதைத்து பெருக அறுக்கலாம்?

23. எந்த புத்திமதிக்குச் செவி கொடுப்பது நமக்கு நன்மையாக இருக்கும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்