யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
“[யெகோவாவை, NW] பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்.”—யாத்திராகமம் 15:1.
1. யெகோவாவின் என்ன குணங்களும் தன்மைகளும் அவரைத் துதிப்பதற்கான காரணத்தை நமக்குக் கொடுக்கின்றன?
யெகோவாவை அல்லது யாவைத் துதிக்கும்படியான கட்டளையை சங்கீதம் 150 பதின்மூன்று தடவைகள் கொடுக்கிறது. கடைசி வசனம் அறிவிக்கிறது: “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.” யெகோவாவின் சாட்சிகளாக, யெகோவா நம் துதிக்குத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று நமக்குத் தெரியும். அவரே சர்வலோக பேரரசர், மகா உன்னதமானவர், நித்தியத்தின் ராஜா, நம் சிருஷ்டிகர், நம் கொடையாளர். அவர் பல வழிகளில் ஈடிணையற்றவர், தனித்தன்மை வாய்ந்தவர், ஒப்பற்றவர், நிகரற்றவர். அவர் எல்லாம் அறிந்தவராக, எல்லாம் வல்லவராக, நியாயத்தில் முழுநிறைவானவராக, அன்பே உருவானவராக இருக்கிறார். மற்ற எல்லாருக்கும் மேலாக அவர் நல்லவர்; அவர் உண்மைதவறாதவர். (லூக்கா 18:19; வெளிப்படுத்துதல் 15:3, 4) அவர் நம்முடைய துதிக்குத் தகுதியுள்ளவராக இருக்கிறாரா? மிக நிச்சயமாகவே!
2. யெகோவாவுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்கு நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
2 யெகோவா நம்முடைய வணக்கத்திற்கும் துதிக்கும் மட்டுமல்லாமல், அவர் நமக்குச் செய்திருக்கும் எல்லாவற்றிற்காகவும் நன்றியுணர்வையும் நன்றிதெரிவிப்பையும் பெற தகுதியுள்ளவராக இருக்கிறார். அவரே ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ தருகிறவர். (யாக்கோபு 1:17) அவரே எல்லா உயிருக்கும் ஊற்றாக, ஊற்றுமூலமாக இருக்கிறார். (சங்கீதம் 36:9) மனித குலத்தின் அங்கத்தினராக நாம் அனுபவிக்கும் எல்லா காரியங்களும் அவரிடமிருந்து வருகிறவை, ஏனென்றால் அவரே நம் மகத்தான சிருஷ்டிகர். (ஏசாயா 42:5) அவருடைய ஆவி, அவருடைய அமைப்பு, மற்றும் அவருடைய வார்த்தையின்மூலமாக வரும் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறவரும் அவரே. அவர் தம்முடைய குமாரனை நம் மீட்பின் கிரயமாகக் கொடுத்ததன் அடிப்படையில் பாவங்களுக்கு மன்னிப்பை நாம் உடையவர்களாய் இருக்கிறோம். (யோவான் 3:16) ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ உடைய ராஜ்ய நம்பிக்கையை நாம் கொண்டிருக்கிறோம். (2 பேதுரு 3:13) நாம் உடன் கிறிஸ்தவர்களுடன் நல்ல கூட்டுறவைக் கொண்டிருக்கிறோம். (ரோமர் 1:10, 11) அவருடைய சாட்சிகளாக இருக்கும் மதிப்பும் ஆசீர்வாதங்களும் நமக்கு இருக்கிறது. (ஏசாயா 43:10-12) மேலும் ஜெபமாகிய அருமையான சிலாக்கியம் நமக்கு இருக்கிறது. (மத்தேயு 6:9-13) உண்மையாகவே, யெகோவாவுக்கு நன்றி சொல்வதற்கு நமக்கு அநேக காரணங்கள் இருக்கின்றன!
நாம் யெகோவாவைத் துதிப்பதற்கான வழிகள்
3. என்ன பல்வேறு வழிகளில் நாம் யெகோவாவுக்குத் துதிசெலுத்தி அவருக்கு நம் நன்றியுணர்வை வெளிக்காட்ட முடியும்?
3 யெகோவாவின் பற்றுமிக்க ஊழியர்களாக, நாம் எப்படி அவருக்குத் துதி செலுத்தி நம் நன்றியுணர்வை வெளிக்காட்ட முடியும்? நாம் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்கெடுப்பதன்மூலம் அவ்வாறு செய்யலாம்—வீட்டுக்கு வீடு சாட்சிகொடுத்தல், மறுசந்திப்புகளைச் செய்தல், பைபிள் படிப்புகளை நடத்துதல், தெரு ஊழியத்தில் ஈடுபடுதல். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் சாட்சிபகர்வதன் மூலமும் நாம் அவரைத் துதிக்கலாம். மேலுமாக, நம்முடைய நேர்மையான நடத்தையாலும், சுத்தமான மற்றும் அடக்கமான விதத்தில் உடை உடுத்தி, சிகை அலங்காரம் செய்வதன்மூலம்கூட நாம் யெகோவாவைத் துதிக்கலாம். இந்த அம்சங்களில் சிறந்து விளங்குவதற்காக யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி பாராட்டப்பட்டிருக்கின்றனர். மேலுமாக, நாம் யெகோவாவைத் துதித்து ஜெபத்தின் மூலமாக அவருக்கு நன்றி சொல்லலாம்.—1 நாளாகமம் 29:10-13-ஐ பார்க்கவும்.
4. நம்முடைய அன்பான பரலோக தகப்பனைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று எது?
4 கூடுதலாக, நம்முடைய அன்பான பரலோக தகப்பனைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று என்னவென்றால் அவரையும் அவருடைய நற்குணங்களையும் இனிய ராஜ்ய பாடல்கள்மூலம் புகழ்வதாகும். மிகவும் இனிய இசைக்கருவி மனித குரலே என்று அநேக பாடகர்களும் இசையமைப்பாளர்களும் ஒத்துக்கொள்கின்றனர். சாஸ்திரிய சங்கீத வித்துவான்கள் இசைநாடகங்களை எழுத விரும்பினர், ஏனென்றால் மனித குரல் பாடலில் எழுப்பப்படுவதைக் கேட்பதில், அவ்வளவு திருப்தி கிடைக்கிறது.
5. நாம் என்ன காரணங்களுக்காக நம்முடைய ராஜ்ய பாட்டுகளைப் பாடுவதைக் கருத்தூன்றியதாக எடுத்துக்கொள்ளவேண்டும்?
5 மனிதர் பாடுவதை, விசேஷமாக அவர்கள் துதிக்கும், நன்றிதெரிவிக்கும் பாடல்களைப் பாடும்போது யெகோவா எவ்வளவாக அனுபவிப்பார்! அப்படியானால் நிச்சயமாகவே, நாம் பல்வேறு கூட்டங்களுக்குக் கூடிவருகையில்—சபை கூட்டங்களில், வட்டார அசெம்பிளிகளில், விசேஷ அசெம்பிளி தினங்களில், மாவட்ட மாநாடுகளில், சர்வதேச மாநாடுகளில்—ராஜ்ய பாடல்களைப் பாடுவதைக் கவனமாகக் கருத்தில் கொள்ளவேண்டும். நம்முடைய பாட்டுப் புத்தகம் உண்மையில் மகிழ்விக்கும் இனிய பாடல்களால் நிரம்பி இருக்கிறது; அவற்றின் இனிமை அடிக்கடி வெளி ஆட்களால் மெச்சப்பட்டிருக்கிறது. நாம் எவ்வளவு அதிகமாக ராஜ்ய பாடல்களைப் பாடும் உணர்வில் மூழ்குகிறோமோ அவ்வளவு அதிகமாக மற்றவர்களுக்கு இன்பமளித்து நாமும் பயனடைகிறோம்.
பைபிள் காலங்களில் யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுவது
6. சிவந்த சமுத்திரத்தில் தப்புவிக்கப்பட்டதற்காக இஸ்ரவேலர் எவ்வாறு போற்றுதலை வெளிக்காட்டினர்?
6 சிவந்த சமுத்திரத்தில் பார்வோனுடைய படையிடமிருந்து தப்புவிக்கப்பட்டது குறித்து, மோசேயும் மற்ற இஸ்ரவேலரும் வெற்றிகளிப்புடன் பாடியதாகக் கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லுகிறது. அவர்களுடைய பாடல் இந்த வார்த்தைகளுடன் தொடங்கியது: “[யெகோவாவை, NW] பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், [அவரைப் புகழுவேன், NW].” (யாத்திராகமம் 15:1, 2) இஸ்ரவேலருடைய அற்புதகரமான விடுவிப்பிற்குப்பின் அவர்கள் எவ்வளவு பூரிப்புடனும் களிப்புடனும் அந்த வார்த்தைகளைப் பாடியிருக்கவேண்டும்!
7. இஸ்ரவேலர் யெகோவாவைப் பாடல் மூலமாக துதித்ததைப்பற்றிய வேறெந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை எபிரெய வேத எழுத்துக்கள் பதிவு செய்திருக்கின்றன?
7 தாவீது தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தபோது, பாடுவதன்மூலமும் இசைக்கருவிகளை இசைப்பதன்மூலமும் யெகோவா துதிக்கப்பட்டார் என்று 1 நாளாகமம் 16:1, 4-36-ல் நாம் வாசிக்கிறோம். அது உண்மையிலே ஒரு சந்தோஷகரமான நிகழ்ச்சியாக இருந்தது. சாலொமோன் ராஜா எருசலேமில் ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தபோது, வாத்திய இசையுடன் சேர்ந்து யெகோவாவுக்குத் துதி பாடுதலும் இருந்தது. நாம் 2 நாளாகமம் 5:13, 14-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.” அது எதைக் காண்பிக்கிறது? அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட மேகத்தால் குறித்துக்காட்டப்பட்டது போல, யெகோவா இந்த இனிமையான துதிக்குச் செவிகொடுத்தார் என்பதையும் அதனால் மகிழ்ச்சி அடைந்தார் என்பதையும் காண்பிக்கிறது. பின்னர், நெகேமியாவின் நாட்களில் எருசலேம் மதில்களின் பிரதிஷ்டையின்போது, இரு தொகுதிகள் பாட்டு பாடினர்.—நெகேமியா 12:27-42.
8. இஸ்ரவேலர் பாடுவதைக் கருத்தூன்றியதாக எடுத்துக்கொண்டார்கள் என்பதை எது காண்பிக்கிறது?
8 உண்மையில், 4,000 லேவியர்கள் இசைப்பணிக்காக ஒதுக்கி வைக்கப்படும் அளவிற்கு, பாடுவது ஆலயத்தில் வணக்கத்தின் முக்கியமான ஒரு பாகமாக இருந்தது. (1 நாளாகமம் 23:4, 5) இவர்கள் பாடகர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். இசை, விசேஷமாக பாடகர்கள், வணக்கத்தில் ஒரு முக்கிய பாகத்தை வகித்தனர்; நியாயப்பிரமாணத்தின் அதிமுக்கியமான காரியங்களைப் புகட்டவேண்டும் என்பதற்காகவே அல்ல, ஆனால் வணக்கத்திற்குச் சரியான உணர்வைக் கொடுப்பதற்காகவே. இஸ்ரவேலர் யெகோவாவை ஊக்கத்துடன் வணங்க அது உதவியது. இந்த அம்சத்திற்கென்று கொடுக்கப்பட்ட தயாரிப்பையும் விவரமான கவனிப்பையும் கவனியுங்கள்: “கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.” (1 நாளாகமம் 25:7) அவர்கள் யெகோவாவுக்குத் துதி பாடுவதை எவ்வளவு கருத்தூன்றியதாக எடுத்துக்கொண்டார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் பாடலில் பயிற்சிபெற்றவர்களாகவும் நிபுணர்களாகவும் இருந்தார்கள்!
9. கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் பாடுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது?
9 நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டிற்கு வருகையில், எதைக் காண்கிறோம்? இயேசு, தாம் காட்டிக்கொடுக்கப்படப்போகிற இரவன்று, அநேக பாரமான காரியங்களைத் தம் மனதில் கொண்டிருந்தபோதிலும், பஸ்கா கொண்டாட்டத்தை நிறைவுசெய்யும்போதும் தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை நிறுவும்போதும் யெகோவாவுக்குத் துதி பாடுவதன் அவசியத்தை உணர்ந்தார். (மத்தேயு 26:30) மேலும், பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, “நடுராத்திரியிலே . . . ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்,” என்று நாம் வாசிக்கிறோம்.—அப்போஸ்தலர் 16:25.
துதிகளைப் பாடுவது—நம்முடைய வணக்கத்தின் ஒரு முக்கிய பாகம்
10. கடவுளை பாடல் மூலமாகத் துதிப்பதுபற்றி அவருடைய வார்த்தை என்ன கட்டளைகளைக் கொடுக்கிறது?
10 ராஜ்ய பாடல்களைப் பாடுதல் உங்களுடைய இருதயப்பூர்வமான கவனத்தைச் செலுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்பதாக நீங்கள் ஒருவேளை நினைக்கிறீர்களா? அப்படியானால், யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் துதிகளைப் பாடுவதன்பேரில் வைத்திருக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக, நீங்கள் இந்தக் காரியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? ஏன், யெகோவாவைத் துதித்து, அவருக்குத் துதிகளைப் பாடுவதற்கான கட்டளைகளால் கடவுளுடைய வார்த்தை நிரம்பியிருக்கிறதே! உதாரணமாக, ஏசாயா 42:10-ல் நாம் வாசிக்கிறோம்: “சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.”—சங்கீதம் 96:1; 98:1-ஐயும் பார்க்கவும்.
11. பாடுவதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுறுத்தலைக் கொடுத்தார்?
11 பாடுவது நம்முடைய உணர்வுகளுக்குத் தெம்பளிக்கும் என்று அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார்; ஆகவே அவர் இந்த விஷயத்தைக் குறித்து இருமுறை நமக்கு அறிவுறுத்தினார். நாம் எபேசியர் 5:18, 19,-ல் (NW) வாசிக்கிறோம்: “தொடர்ந்து ஆவியினால் நிறைந்திருங்கள்; சங்கீதங்கள், கடவுளுக்குத் துதிகள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவற்றால் ஒருவருக்கொருவர் உரையாடி, உங்கள் இருதயங்களில் யெகோவாவுக்கு இசையோடு பாடிக்கொண்டும் இருங்கள்.” மேலும் கொலோசெயர் 3:16-ல் (NW) நாம் வாசிக்கிறோம்: “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் நிறைவளத்துடன் வாசமாயிருப்பதாக; சங்கீதங்கள், கடவுளுக்குத் துதிகள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவற்றால் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, யெகோவாவுக்கு உங்கள் இருதயங்களில் பாடிக்கொண்டு இருங்கள்.”
12. நம்முடைய பாடல்கள் ஒருவருக்கொருவர் போதிப்பதற்கும் புத்திசொல்வதற்கும் உதவிசெய்வது பற்றிய என்ன உதாரணங்களை நாம் கொண்டிருக்கிறோம்?
12 ‘சங்கீதங்கள், கடவுளுக்குத் துதிகள், ஆவிக்குரிய பாடல்கள், உங்கள் இருதயங்களில் இசை பாடுதல்,’ என்று பவுல் குறிப்பிடுகையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடுவதற்கு மீண்டும் மீண்டுமான மேற்கோள்களைக் காட்டுவதைக் கவனியுங்கள். மேலும், இந்த வழியின்மூலமாக நாம் “ஒருவருக்கொருவர் போதித்து, புத்திசொல்லிக்கொண்டு” இருக்கமுடியும் என்ற முன்னுரையுடன் கொலோசெயருக்கான தன் குறிப்புகளைக் கூறுகிறார். பின்வரும் நம்முடைய பாட்டுகளின் தலைப்புகள்தாமே காண்பிக்கிறபடி, நாம் அதை நிச்சயமாகவே செய்கிறோம்—“சிருஷ்டி யாவும் யெகோவாவைத் துதி!” (எண் 5), “உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் இருங்கள்!” (எண் 10), “ராஜ்ய நம்பிக்கைக்காக மகிழ்வோம்!” (எண் 16), “அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்!” (எண் 27), “நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!” (எண் 100) ஆகியவை ஒருசில உதாரணங்களே.
13. நம்முடைய வணக்கத்தின் பாகமாக, பாடுதலின் முக்கியத்துவத்தை ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ எப்படி காண்பித்திருக்கிறது?
13 இந்தக் கட்டளைகளுக்கு இசைவாக, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,’ நம்முடைய கூட்டங்கள்—சபைக் கூட்டங்கள், வட்டார அசெம்பிளிகள், விசேஷ அசெம்பிளி தினங்கள், மாவட்ட மாநாடுகள், சர்வதேச மாநாடுகள் ஆகியவை—ராஜ்ய பாட்டுகள் பாடுவதுடன் துவங்கப்பட்டு நிறைவுசெய்யப்படும்படியாக ஏற்பாடு செய்திருக்கிறது. (மத்தேயு 24:45) இதோடுகூட, இந்தக் கூட்டங்களில் மற்ற சமயங்களிலும் பாடல்கள் பாடப்படும்படியாக திட்டமிடப்பட்டிருக்கின்றன. நம்முடைய கூட்டங்கள் பொதுவாக ஒரு ராஜ்ய பாட்டைப் பாடுவதுடன் தொடங்குவதால், நம்முடைய வணக்கத்தின் அந்தப் பாகத்திலும் பங்கெடுக்கும்படி போதியளவு சீக்கிரமாக, சரியான நேரத்திற்கு வந்துசேரும்படி நாம் பார்த்துக்கொள்ளவேண்டாமா? கூட்டங்கள் பாட்டுப்பாடுவதுடன் நிறைவுபெறுவதால், முடிவான பாட்டிற்கும் அடுத்து அதைத் தொடரும் ஜெபத்திற்கும் நாம் இருக்கவேண்டாமா?
14. நம்முடைய நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமான பாடல்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுபற்றி என்ன உதாரணங்களை நாம் கொண்டிருக்கிறோம்?
14 நம்முடைய கூட்டங்களிலுள்ள பாட்டுகள், நிகழ்ச்சி நிரலுக்கு இசைந்ததாக இருக்கும்படி கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உதாரணமாக, 1993-ல் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகளில், சாத்தான், இந்த உலகம், மற்றும் விழுந்துபோன மாம்சம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடும்படி கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தும் “சத்தியத்தை உனதாக்கு” என்ற பாட்டு எண் 191 பாடப்பட்டது; அது இந்த எதிரிகளைப்பற்றி கலந்தாராய்ந்த மூன்று பேச்சுக்களுக்குப் பின்பு உடனே தொடர்ந்தது. அதேவிதமாக, பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவேண்டிய பெற்றோரின் பொறுப்புகளைச் சிறப்பித்துக்காட்டும் பேச்சு கொடுக்கப்பட்டதும், பெற்றோருக்கான அறிவுரைகளடங்கிய “பிள்ளைகள்—கடவுளிடமிருந்து பெற்ற ஈவுகள்” என்ற பாட்டு எண் 164 தொடர்ந்தது. “எரேமியாவைப் போலிருங்கள்” என்ற பாட்டு எண் 70, எரேமியாவின் தீர்க்கதரிசனங்களின் அடிப்படையிலான பேச்சுக்களின் தொடருக்குமுன் பாடப்பட்டது. நம் ராஜ்ய ஊழியத்தின் பல்வேறு அம்சங்களைப்பற்றிய ஒரு தொடர்பேச்சிற்குப்பின், அதிக ஊழிய நோக்கை உடைய பாடலாகிய “எனக்குச் சித்தமுண்டு” என்ற பாட்டு எண் 156 பாடப்பட்டது. காவற்கோபுர படிப்பு, ஊழியக் கூட்டம், தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஆகியவற்றிற்கு பாடல்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் அதே கவனம் செலுத்தப்படுகிறது. எனவே, மூப்பர்கள் பொதுப் பேச்சுக்களைக் கொடுக்கும்போது, நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு பாட்டைக் குறிப்பிடும்போதும், தங்களுடைய பேச்சின் பொருளுக்கு பொருந்தக்கூடிய ஒரு பாட்டைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
15. கூட்டத்தின் அக்கிராசனர், பாடப்படப்போகும் பாடலுக்கான போற்றுதலை எவ்வாறு அதிகரிக்கக்கூடும்?
15 பாடப்போகும் பாட்டை அறிவிக்கையில், அக்கிராசனர் அந்தப் பாட்டின் தலைப்பை அல்லது பொருளைச் சொல்வதன்மூலம் அதற்கான போற்றுதலை அதிகரிக்கக்கூடும். நாம் எண்களையல்ல, ஆனால் வேதப்பூர்வ பொருள்களின்பேரில் பாடுகிறோம். மேலும், தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள வசனம் குறிப்பிடப்பட்டால், அந்தப் பாட்டிற்கு மேலுமான போற்றுதல் காண்பிக்க சபைக்கு உதவும். மேலுமாக, எல்லாரும் பாட்டின் உணர்ச்சியுடன் ஒன்றுகலந்திட வேண்டும் என்பதுபோன்ற ஒருசில குறிப்புகளும் பொருத்தமானவையாக இருக்கும்.
பாடுவதன்மூலம் யெகோவாவின் நற்குணத்திற்குப் போற்றுதல் காண்பியுங்கள்
16. நம்முடைய பாடல்களின் உணர்ச்சியுடன் நாம் எப்படி ஒன்றுகலந்துவிட முடியும்?
16 நம் ராஜ்ய பாடல்களிலுள்ள வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியவையாய் இருப்பதால், நாம் அவற்றைப் பாடும்போது அந்த வார்த்தைகளில் கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு பாட்டின் உணர்ச்சியுடன் நாம் ஒன்றுகலந்துவிட வேண்டும். ஆவியின் கனியில் ஒன்றாகிய அன்பு போன்றவற்றைப் பற்றிய சில பாடல்கள் உள்ளங்கனியவைப்பவை. (கலாத்தியர் 5:22) இவற்றை நாம் உணர்ச்சி ததும்பவும் கனிவுடனும் பாடுகிறோம். மற்றவை சந்தோஷமானவை, அவற்றை நாம் மகிழ்ச்சியுடன் பாட முயலவேண்டும். இன்னும் மற்றவை, கம்பீரமான அணிவகுப்பிற்குரிய பாடல்கள், இவை உற்சாகத்துடனும் பலமான நம்பிக்கையுடனும் பாடப்பட வேண்டும். நம்முடைய தேவராஜ்ய ஊழியப் பள்ளியில், நாம் பேச்சுக்கொடுக்கையில் கனிவையும் உணர்ச்சியையும் அவற்றோடு உற்சாகத்தையும் வெளிக்காட்டும்படி நாம் ஆலோசனை கொடுக்கப்படுகிறோம். நம் பாடல்களைப் பாடும்போது கனிவையும் உணர்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிக்காட்டுவது இன்னுமதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
17. (அ) உண்மையற்ற இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட எந்தக் கண்டனத்தீர்ப்பு நாம் பாடும் விதத்திற்கும் பொருந்திவிடாதபடி இருக்க நாம் விரும்புவோம்? (ஆ) நம் பாடல்களிலுள்ள அறிவுரையை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதன் பலன் என்ன?
17 நம்முடைய ராஜ்ய பாட்டுகளை நாம் பாடும்போது, அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக போற்றாமல் மனதை மற்ற காரியங்களில் அலைபாயவிட்டால், தங்களுடைய உதடுகளால் கடவுளைத் துதித்து தங்களுடைய இருதயங்களை அவரைவிட்டு வெகு தூரத்தில் விலக்கி வைத்திருந்ததற்காகச் சிட்சிக்கப்பட்ட அந்த உண்மையற்ற இஸ்ரவேலரைப்போல் ஒருவிதத்தில் நாமும் இருப்போம் அல்லவா? (மத்தேயு 15:8) நாம் ராஜ்ய பாடல்களைப் பாடும் விதத்தில் அந்தக் கண்டனத்தீர்ப்பு நமக்கும் பொருந்துவதற்கு விரும்புவதில்லை, விரும்புகிறோமா என்ன? நம் ராஜ்ய பாடல்களைச் சரியான போற்றுதலுடன் பாடுவதன்மூலம், நாம் நம்மை மட்டுமல்லாமல், இளைஞர் உட்பட நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் ஊக்கத்தை அளிப்போம். ஆம், நம் ராஜ்ய மன்றங்களில் பாடும் எல்லாரும், இந்தப் பாடல்கள் அறிவுறுத்துவதைக் கவனமாக எடுத்துக்கொண்டால், ஊழியத்தில் வைராக்கியமாக இருப்பதற்கும் தவறுசெய்வதற்கான கண்ணிகளைத் தவிர்ப்பதற்கும் இது ஒரு வல்லமையான உற்சாகமூட்டுதலாக இருக்கும்.
18. ராஜ்ய பாடல்களைப் பாடுதல் ஒரு குறிப்பிட்ட பெண்ணின்மீது என்ன விளைவைக் கொண்டிருந்தது?
18 நாம் ராஜ்ய பாட்டுகளைப் பாடும் விதத்தால் அடிக்கடி வெளியே உள்ளவர்கள் கவரப்படுகின்றனர். காவற்கோபுரம் ஒருமுறை இந்த விஷயத்தை வெளியிட்டது: “[நாம்] பாடும் விதம் மனிதர் யெகோவா தேவனைப் பற்றிய அறிவைப் பெற உதவலாம் என்பது 1973-ல் நியூ யார்க் நகரிலுள்ள யாங்கீ ஸ்டேடியத்தில் ‘தெய்வீக வெற்றி’ அசெம்பிளியில் முழுக்காட்டுதல் பெற்ற ஒரு பெண்ணின் அனுபவத்தின்மூலம் காண்பிக்கப்பட்டது. அவள் உள்ளூர் ராஜ்ய மன்றத்திற்கு முதல் முறையாக தானாகவே வந்து, இரண்டு கூட்டங்களுக்கும் ஆஜராகி இருந்தாள். சபை . . . ‘பரிசை நோக்கி இருங்கள்!’ என்ற பாட்டைப் பாடியபோது, அவள் அதன் வார்த்தைகளாலும் அது பாடப்பட்ட விதத்தாலும் கவரப்பட்டாள்; தான் இருக்க விரும்பிய இடம் இதுவே என்று அவள் தீர்மானித்தாள். அதற்குப்பின் அவள் சாட்சிகளில் ஒருவரை அணுகி தனக்கு பைபிள் படிப்பு எடுக்கும்படி வேண்டிக்கொண்டாள்; அப்போதிருந்து யெகோவாவின் ஒரு கிறிஸ்தவ சாட்சியாக ஆகும் வரையாக [அவள்] முன்னேறினாள்.”
19. நம்முடைய ராஜ்ய பாடல்களை இருதயப்பூர்வமாகப் பாடுவதற்கு கடைசியாக என்ன உற்சாகம் அளிக்கப்படுகிறது?
19 நம் கூட்டங்கள் பலவற்றில், வந்திருப்போர் தங்கள் உணர்ச்சிகளையும் போற்றுதலையும் வெளிக்காட்டுவதற்கு ஓரளவிற்குக் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன. ஆனால் ராஜ்ய பாடல்களை உற்சாகமாகப் பாடுவதில் சேர்ந்துகொள்வதன்மூலமாக யெகோவாவின் நற்குணத்தைப் பற்றி நாம் எவ்வாறு உணருகிறோம் என்பதை நாம் அனைவரும் வெளிக்காட்டலாம். அது மட்டுமல்லாமல், ஒன்றாகக் கூடும்போது, நாம் சந்தோஷமாக இருக்கிறோம் அல்லவா? ஆகவே நமக்குப் பாடவேண்டும்போல் தோன்றவேண்டும்! (யாக்கோபு 5:13) உண்மையில், யெகோவாவுடைய நற்குணத்தையும் அவருடைய தகுதியற்ற தயவையும் நாம் எந்த அளவிற்குப் போற்றுகிறோமோ, அந்த அளவிற்கு நாம் அவருக்கு முழு ஆத்துமாவோடு துதிகளைப் பாடுவோம்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவைத் துதிப்பதற்கு இரண்டு அடிப்படையான காரணங்கள் யாவை?
◻ என்ன பல்வேறு வழிகளில் நாம் யெகோவாவைத் துதிக்க முடியும்?
◻ யெகோவாவைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று எது?
◻ யெகோவாவைப் பாடல் மூலமாகத் துதிப்பதற்கு என்ன வேதப்பூர்வ உதாரணங்களை நாம் கொண்டிருக்கிறோம்?
◻ நாம் ராஜ்ய பாடல்களைப் பாடுவதில் எவ்வாறு சரியான போற்றுதலைக் காண்பிக்கலாம்?
[பக்கம் 11-ன் பெட்டி]
அந்தப் பாடல்களை அனுபவியுங்கள்!
புதிய பாடல்களில் பலவற்றைக் கற்றுக்கொள்வது சிலருக்குக் கொஞ்சம் கடினமாக இருந்திருப்பதாகத் தோன்றுகிறது. என்றபோதிலும், சில சபைகளுக்கு இதில் அநேக பாடல்களைப் பாடுவது மிகவும் கடினமாக இல்லை. ஒருவேளை முதலில் பழக்கமற்றதாகத் தோன்றுவதைக் கற்றுக்கொள்ள சற்று அதிக முயற்சியே தேவையானதாக இருக்கக்கூடும். அதுபோன்ற பாடல்களை நன்கு அறிந்ததும், கற்றுக்கொள்வதற்கு எந்த முயற்சியும் தேவைப்படாதவற்றைவிட அதிகமாக அவற்றை சபை போற்றுகிறது. அப்போது சபையிலுள்ள யாவரும் நம்பிக்கையுடன் பாடமுடியும். ஆம், அவர்கள் அந்தப் பாடல்களை அனுபவிக்கமுடியும்!
[பக்கம் 12-ன் பெட்டி]
சமூகக் கூட்டுறவுகளில் ராஜ்ய பாடல்களைப் பாடுங்கள்
நாம் ராஜ்ய பாடல்களைப் பாடுவது ராஜ்ய மன்றத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கவேண்டியதில்லை. பவுலும் சீலாவும் சிறையிலிருந்தபோது யெகோவாவுக்குத் துதிகளைப் பாடினார்கள். (அப்போஸ்தலர் 16:25) மேலும் சீஷனாகிய யாக்கோபு சொன்னார்: “உங்களில் எவராவது மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? அப்படிப்பட்டவர் கடவுளுக்குத் துதிகளைப் பாடட்டும்.” (யாக்கோபு 5:13, NW, அடிக்குறிப்பு.) சமூக கூட்டுறவுகளில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆகையால் ஏன் ராஜ்ய பாடல்களைப் பாடக்கூடாது? இந்தப் பாடுதல் பியானோ அல்லது கிட்டாரின் துணை இசையுடன் பாடப்பட்டால் விசேஷித்த இன்பகரமானதாக இருக்கலாம். இல்லாவிட்டால், நம் ராஜ்ய பாட்டுகளின் பியானோ டேப்புகள் இருக்கின்றன; அநேக சாட்சி குடும்பங்கள் இந்த டேப்புகளின் ஆல்பத்தைக் கொண்டிருக்கின்றன. அவை, சேர்ந்து பாடுவதற்கு நன்றாக இருப்பது மட்டுமல்லாமல், இனிய பின்னணி இசைக்கு சிறந்தவையாயும் அமைகின்றன.
[பக்கம் 8, 9-ன் படம்]
சிவந்த சமுத்திரத்தில் தப்புவிக்கப்பட்டபின், இஸ்ரவேலர் தங்கள் சந்தோஷத்தைப் பாட்டின்மூலம் வெளிக்காட்டினார்கள்
[பக்கம் 10-ன் படம்]
ஆனந்தம் பொங்க பாடுவது இன்று கிறிஸ்தவ வணக்கத்தின் பாகமாக இருக்கிறது