உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 3/15 பக். 10-14
  • “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வைராக்கியமுள்ள ஆரம்ப கால சுவிசேஷகர்கள்
  • இன்றைய வைராக்கியமுள்ள சுவிசேஷகர்கள்
  • வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சாட்சி கொடுத்தல்
  • ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்?
  • சுவிசேஷ ஊழியம் நமக்குப் பயனளிக்கிறது
  • பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்
  • எல்லா மெய் கிறிஸ்தவர்களும் சுவிசேஷகர்களாக இருக்க வேண்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • யெகோவாவின் சாட்சிகள்—உண்மையான சுவிசேஷகர்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • நற்செய்தியாளராக உங்கள் வேலையை நிறைவேற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 3/15 பக். 10-14

“சுவிசேஷகனுடைய வேலையைச் செய்”

“எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, . . . சுவிசேஷகனுடைய வேலையைச் செய்.”​—⁠2 தீமோத்தேயு 4:5.

1. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு என்ன பொறுப்பை கொடுத்தார்?

யெகோவாவின் பெயரும் நோக்கங்களும் பூமியெங்கும் அறிவிக்கப்படுகின்றன. ஏனெனில் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஜனங்கள், இயேசு கிறிஸ்து தம் சீஷர்களுக்குக் கொடுத்த பொறுப்பை முக்கியமானதாக கருதுகிறார்கள். அவர் கொடுத்த பொறுப்பு இதுவே: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”​—⁠மத்தேயு 28:19, 20.

2. என்ன அறிவுரையை கண்காணியாகிய தீமோத்தேயு பெற்றார், கிறிஸ்தவ கண்காணிகள் ஊழியத்தை நிறைவேற்றுதற்கான ஒரு வழி எது?

2 இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்கள் அந்தப் பொறுப்பை முக்கியமானதாக கருதினார்கள். உதாரணத்திற்கு, சக கிறிஸ்தவ கண்காணியாகிய தீமோத்தேயுவை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஊக்குவித்தார்: “சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை [“முழுமையாய்,” NW] நிறைவேற்று.” (2 தீமோத்தேயு 4:5) இன்று, கண்காணிகள் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு வழி என்னவென்றால் வைராக்கியமான ராஜ்ய அறிவிப்பாளர்களாக வெளி ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வதே. உதாரணத்திற்கு சபை புத்தகப் படிப்பு கண்காணியை எடுத்துக்கொள்ளலாம்; பிரசங்க ஊழியத்தை முன்நின்று வழிநடத்தி மற்றவர்களை பயிற்றுவிக்கும் அருமையான சிலாக்கியம் அவருக்கு இருக்கிறது. பவுலும்கூட நற்செய்தியை அறிவிக்கும் தன் தனிப்பட்ட பொறுப்பை நிறைவேற்றினார்; அதோடு, ஊழியத்திற்காக மற்றவர்களையும் பயிற்றுவித்தார்.​—⁠அப்போஸ்தலர் 20:20; 1 கொரிந்தியர் 9:16, 17.

வைராக்கியமுள்ள ஆரம்ப கால சுவிசேஷகர்கள்

3, 4. சுவிசேஷகராக என்ன அனுபவங்களை பிலிப்பு பெற்றார்?

3 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் வைராக்கியமுள்ள சுவிசேஷகர்கள் என பெயரெடுத்தார்கள். சுவிசேஷகராகிய பிலிப்புவைக் குறித்து சற்று சிந்தியுங்கள். ‘பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்ற ஏழு பேரில்’ அவரும் ஒருவர்; கிரேக்க மொழியும் எபிரெய மொழியும் பேசிய எருசலேமிலிருந்த கிறிஸ்தவ விதவைகளுக்கு பாகுபாடின்றி அன்றாடம் உணவை விநியோகிப்பதற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். (அப்போஸ்தலர் 6:1-6) அந்த விசேஷ வேலை முடிவுற்ற பிறகு, அப்போஸ்தலர்கள் தவிர மற்ற எல்லாரும் துன்புறுத்தல் காரணமாக நாலா புறமும் சிதறிப்போனார்கள், பிலிப்புவோ சமாரியாவுக்கு சென்றார். அங்கு அவர் நற்செய்தியை அறிவித்து வந்தார்; பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிசாசுகளைத் துரத்தினார், முடமானவர்களையும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சுகப்படுத்தினார். சமாரியர்களில் அநேகர் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றார்கள். எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்கள் இதைக் கேள்விப்பட்டபோது, புதிதாக முழுக்காட்டப்பட்ட விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக அப்போஸ்தலர்களாகிய பேதுருவையும் யோவானையும் சமாரியாவுக்கு அனுப்பினார்கள்.​—⁠அப்போஸ்தலர் 8:4-17.

4 அடுத்ததாக, காசாவுக்கு செல்லும் பாதையில் எத்தியோப்பிய மந்திரியை சந்திக்கும்படி கடவுளுடைய ஆவி பிலிப்புவை வழிநடத்தியது. ஏசாயா தீர்க்கதரிசனத்தை அவருக்கு பிலிப்பு தெளிவாக விளக்கிய பிறகு, “எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரி”யாக இருந்த அவர் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து முழுக்காட்டுதல் பெற்றார். (அப்போஸ்தலர் 8:26-38) அதன் பிறகு ஆசோத்திற்கும் செசரியாவுக்கும் பிலிப்பு சென்றபோது வழியிலுள்ள ‘சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டு வந்தார்.’ (அப்போஸ்தலர் 8:39, 40) சுவிசேஷ வேலை செய்வதில் அவர் எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்!

5. பிலிப்புவின் நான்கு குமாரத்திகள் முக்கியமாக எதற்குப் பெயர் பெற்றிருந்தார்கள்?

5 சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் செசரியாவில் பிலிப்பு மும்முரமாக ஊழியம் செய்து வந்தார். பவுலும் லூக்காவும் அவருடைய வீட்டில் தங்கிய சமயத்தில் ‘தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவருக்கு இருந்தார்கள்.’ (அப்போஸ்தலர் 21:8-10) அவர்கள் உண்மையிலேயே ஆவிக்குரிய ரீதியில் சிறந்த பயிற்றுவிப்பைப் பெற்றிருந்தார்கள், ஊழியத்தில் வைராக்கியத்தோடு ஈடுபட்டார்கள், தீர்க்கதரிசனம் சொல்லும் சிலாக்கியத்தையும்கூட பெற்றிருந்தார்கள். நம் நாளிலும்கூட பெற்றோர்கள் வைராக்கியமாக ஊழியத்தில் ஈடுபடும்போது, அவர்களுடைய மகன்களும் மகள்களும் சுவிசேஷ ஊழியத்தை வாழ்க்கைப் பணியாக ஏற்றுக்கொள்ளும்படி உந்துவிக்கப்படுகிறார்கள்.

இன்றைய வைராக்கியமுள்ள சுவிசேஷகர்கள்

6. முதல் நூற்றாண்டு சுவிசேஷகர்கள் பெற்ற வெற்றி என்ன?

6 நம் நாளையும் முடிவின் காலத்தையும் சுட்டிக் காட்டுகிற முக்கியமான தீர்க்கதரிசனத்தை இயேசு கிறிஸ்து உரைத்தபோது, “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்” என அறிவித்தார். (மாற்கு 13:10) ஆகவே “பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்” நற்செய்தி பிரசங்கிக்கப்பட்ட பிறகு முடிவு வரும். (மத்தேயு 24:14) பவுலும் முதல் நூற்றாண்டிலிருந்த மற்ற சுவிசேஷகர்களும் நற்செய்தியை அறிவித்ததால் அநேகர் விசுவாசிகளாக ஆனார்கள், ரோம பேரரசெங்கும் பல இடங்களில் சபைகள் உருவாயின. இந்த சபைகளில் சேவிக்கும்படி நியமிக்கப்பட்ட மூப்பர்கள் சபையிலிருந்த மற்ற சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து சுவிசேஷ வேலையில் பங்குகொண்டு எங்கும் பிரசங்கித்தார்கள். ஆகவே யெகோவாவின் வசனம் தொடர்ந்து விருத்தியடைந்து மேற்கொண்டது; இன்றும் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளுடைய சுவிசேஷ வேலையால் அதேபோன்ற அதிகரிப்பு ஏற்படுகிறது. (அப்போஸ்தலர் 19:20) யெகோவாவை சந்தோஷத்துடன் துதிக்கும் இவர்களில் ஒருவராக நீங்களும் நிலைநிற்கை எடுத்திருக்கிறீர்களா?

7. இன்று ராஜ்ய அறிவிப்பாளர்கள் என்ன செய்கிறார்கள்?

7 இன்றுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களில் அநேகர் சுவிசேஷ வேலையை அதிகளவில் செய்வதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் மிஷனரிகளாக ஆகியிருக்கிறார்கள், லட்சக்கணக்கானோர் ஒழுங்கான பயனியர்களாக, துணை பயனியர்களாக முழுநேர சுவிசேஷ வேலையில் பங்குகொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் வைராக்கியமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளாக எப்பேர்ப்பட்ட வேலையை செய்கிறார்கள்! கிறிஸ்தவ சுவிசேஷகர்களாக யெகோவாவின் ஜனங்கள் எல்லாரும் தோளோடு தோள் சேர்ந்து அவருக்கு சேவை செய்கையில் அபரிமிதமான ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறார்கள்.​—⁠செப்பனியா 3:9.

8. அடையாளம் போடும் என்ன வேலை இப்போது நடைபெறுகிறது, இதை யார் செய்கிறார்கள்?

8 உலகெங்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் உத்தரவாதத்தை இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். அதிகரித்து வரும் கிறிஸ்துவின் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தோர் இந்த சுவிசேஷ வேலையில் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். (யோவான் 10:16) உயிர்காக்கும் இந்த வேலை, இப்போது நடக்கிற சகல அருவருப்பான காரியங்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடுவதற்கு ஒப்பாயிருப்பதாக தீர்க்கதரிசன ரீதியில் பேசப்படுகிறது. அதன்பின் சீக்கிரத்தில், துன்மார்க்கர் அழிக்கப்படுவார்கள். இதற்கிடையில், உயிர்காக்கும் சத்தியத்தை பூமியின் குடிகளுக்கு எடுத்துச் செல்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!​—⁠எசேக்கியேல் 9:4-6, 11.

9. ஊழியத்தில் புதியவர்களுக்கு எப்படி உதவலாம்?

9 சுவிசேஷ வேலையை நாம் சில காலமாக செய்து வந்திருக்கிறோம் என்றால் சபையிலுள்ள புதியவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் நம்மால் உதவ முடியும். சில சமயங்களில் அவர்களை நம்முடன் ஊழியத்திற்கு அழைத்துச் செல்லலாம். ஆவிக்குரிய விதத்தில் உடன் விசுவாசிகளை உந்துவிப்பதற்கு மூப்பர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் சுவிசேஷ வேலையில் வைராக்கியமுள்ளவர்களாகவும் பலன்தருகிறவர்களாகவும் இருப்பதற்கு பணிவான கண்காணிகள் எடுக்கும் கடும் முயற்சிகள் அதிக உதவி அளிக்கும்.

வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சாட்சி கொடுத்தல்

10. கிறிஸ்துவும் அவருடைய ஆரம்ப கால சீஷர்களும் ஊழியத்தில் என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்கள்?

10 சுவிசேஷகராக இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு அருமையான முன்மாதிரி வைத்தார். அவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் சேர்ந்து செய்த ஊழியத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம் பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.” (லூக்கா 8:1) அப்போஸ்தலர்கள் தாங்களாகவே செய்த ஊழியத்தைக் குறித்து என்ன சொல்லலாம்? பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட பிறகு, அவர்கள் “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.”​—⁠அப்போஸ்தலர் 5:42.

11. அப்போஸ்தலர் 20:20, 21-⁠ன்படி அப்போஸ்தலன் பவுல் தன் ஊழியத்தில் என்ன செய்தார்?

11 அப்போஸ்தலன் பவுல் வைராக்கியத்துடன் சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார், அதனால்தான் “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல் பகிரங்கமாகவும் வீடுவீடாகவும் உங்களுக்கு உபதேசித்து அறிவித்தேன்” என எபேசுவிலிருந்த கிறிஸ்தவ மூப்பர்களிடம் அவரால் சொல்ல முடிந்தது. இப்படி பவுல் ‘வீடுவீடாக உபதேசித்தது,’ சக வணக்கத்தாரின் வீடுகளுக்கு சென்று அவர் மேய்ப்பு சந்திப்பு செய்ததையா அர்த்தப்படுத்தியது? இல்லை, “கடவுளிடம் மனந்திரும்புவதைப் பற்றியும் நமது ஆண்டவராகிய இயேசுவில் விசுவாசம் வைப்பதைப் பற்றியும் நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் திடச்சாட்சி கூறினேன்” என அவர் தொடர்ந்து விளக்கினார். (அப்போஸ்தலர் 20:20, 21, தி.மொ.) பொதுவாக, யெகோவாவுக்குத் தங்களை ஏற்கெனவே ஒப்புக்கொடுத்தவர்களுக்கு “கடவுளிடம் மனந்திரும்புவதைப் பற்றியும் நமது ஆண்டவராகிய இயேசுவில் விசுவாசம் வைப்பதைப் பற்றியும்” போதிக்க அவசியமில்லை. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மனந்திரும்புதலையும் விசுவாசம் வைப்பதையும் பற்றி அவிசுவாசிகளுக்கு பவுல் போதித்தபோது எபேசுவிலிருந்த கிறிஸ்தவ மூப்பர்களும் உடன் இருந்ததால் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். இவ்வாறு செய்ததன் மூலம் இயேசு ஏற்படுத்தி வைத்த முறையை பவுல் பின்பற்றினார்.

12, 13. பிலிப்பியர் 1:7-⁠க்கு இசைய பிரசங்கிக்கும் தங்கள் உரிமை சம்பந்தமாக யெகோவாவின் ஜனங்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

12 வீட்டுக்கு வீடு ஊழியம் சவாலாக இருக்கலாம். உதாரணமாக, பைபிள் செய்தியை சொல்ல நாம் வீடுகளுக்கு செல்கையில் சிலர் நம்மீது கோபப்படலாம். அப்படி அவர்களை கோபப்படுத்த வேண்டுமென்பது நம் விருப்பமல்ல. ஆனாலும், வீட்டுக்கு வீடு ஊழியம் வேதப்பூர்வமானது. அதோடு கடவுள் மீதும் அயலார் மீதுமுள்ள அன்பினால் தூண்டப்பட்டே நாம் இந்த ஊழியத்தில் ஈடுபடுகிறோம். (மாற்கு 12:28-31) வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதற்கு நமக்கிருக்கும் உரிமைக்காக ‘வாதாடி, அதை சட்டப்படி நிலைநாட்ட’ பல நீதிமன்றங்களில் நாம் வழக்கு தொடுத்திருக்கிறோம்; இதில் ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றமும் உட்படும். (பிலிப்பியர் 1:7, NW) இந்த நீதிமன்றம் கிட்டத்தட்ட எல்லா வழக்குகளிலும் நம் சார்பில் தீர்ப்பளித்திருக்கிறது. பின்வரும் தீர்ப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

13 “சுவிசேஷ வேலையில் மத துண்டுப்பிரதிகளை விநியோகிப்பது மிஷனரிகள் செய்து வந்த பழமையான முறையாகும்; இது அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே செய்யப்பட்டு வரும் முறையாகும். இது ஆண்டாண்டு காலமாய் பல்வேறு மத இயக்கங்கள் கையாண்ட திறம்பட்ட முறையாகவும் இருந்திருக்கிறது. பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த கால்போர்ட்டர்கள் இன்றும் இந்த முறையில்தான் சுவிசேஷ ஊழியத்தை பெரிய அளவில் செய்கிறார்கள்; அவர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளில் சுவிசேஷத்தை அறிவிக்கிறார்கள்; அவ்வீட்டாரை தனிப்பட்ட விதத்தில் போய் சந்தித்து தங்கள் மத கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்களாக ஆக்க முயலுகிறார்கள். . . . [ஐக்கிய மாகாணங்களின் அரசமைப்புச் சட்டத்தில்] செய்யப்பட்ட முதல் திருத்தத்தின்படி, சர்ச்சுகளின் வணக்கமுறையும் பிரசங்கங்களும் பெறும் அதேயளவு முக்கியத்துவத்தை இந்த விதமான மத சம்பந்தப்பட்ட வேலையும் பெறுகிறது.”​—⁠மார்டக் Vs. பென்ஸில்வேனியா, 1943.

ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்?

14. நம் ஊழியம் படிப்படியாக என்ன முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்?

14 வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதற்கு அநேக காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்காரரையும் முதன்முறையாக சந்திக்கையில் பைபிள் சத்திய விதையை விதைக்க நாம் முயலுகிறோம். மறுசந்திப்புகள் செய்கையில் நீர்ப்பாய்ச்ச முயலுகிறோம். இதனால் அவர் படிப்படியாக நல்ல முன்னேற்றம் செய்யலாம்; இதைக் குறித்தே, “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே [“தொடர்ந்து,” NW] விளையச் செய்தார்” என பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 3:6) எனவே யெகோவா ‘விளையச் செய்வார்’ என்ற நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து ‘நட்டு, நீர்ப் பாய்ச்சுவோமாக.’

15, 16. நாம் ஏன் திரும்பத் திரும்ப வீடுகளுக்குச் சென்று ஆட்களை சந்திக்கிறோம்?

15 உயிர்கள் ஆபத்தில் இருப்பதால் நாம் சுவிசேஷ வேலை செய்கிறோம். பிரசங்கிப்பதன் மூலம் நம்மை மட்டுமல்ல, நாம் சொல்லும் செய்தியைக் கேட்பவர்களையும் காப்பாற்ற முடியும். (1 தீமோத்தேயு 4:16) ஒருவருடைய உயிர் ஆபத்தில் இருப்பதை நாம் அறிகையில் ஏதோ அரைகுறை மனதுடன் ஒரேவொரு தடவை மட்டுமே அவருக்கு உதவ முயற்சி செய்வோமா? நிச்சயமாக இல்லை! அதேபோல் ஜனங்கள் இரட்சிப்பை அடைவதற்காகவே நாம் ஆட்களை திரும்பத் திரும்ப அவர்களுடைய வீடுகளில் சந்தித்து சுவிசேஷத்தை அறிவிக்கிறோம். சூழ்நிலைகள் தொடர்ந்து மாறுகின்றன. பைபிள் செய்தியைக் கேட்க நேரமில்லை என்று சொன்ன ஒருவர், அடுத்த முறை அதை கேட்கலாம். அல்லது வீட்டிலுள்ள வேறொரு நபரை நாம் சந்திக்க நேரிடலாம், அது பைபிள் கலந்தாலோசிப்புக்கு வழிநடத்தலாம்.

16 சூழ்நிலைகள் மட்டுமல்ல, வீட்டுக்காரர்களின் மனநிலையும் மாறலாம். உதாரணமாக, பாசத்துக்குரியவரை பறிகொடுத்த துக்கத்தில் இருக்கும் ஒருவர் ராஜ்ய செய்தியை காதுகொடுத்துக் கேட்கலாம். அவருக்கு ஆறுதல் அளிக்கவும், ஆவிக்குரிய தேவைகளை உணர்த்தவும், அத்தேவைகளை பூர்த்தி செய்யும் வழியை காட்டவும் நாம் விரும்புகிறோம்.​—⁠மத்தேயு 5:3, 4.

17. நாம் பிரசங்க வேலை செய்வதற்கு முக்கிய காரணம் என்ன?

17 யெகோவாவின் பெயரை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டுமென்ற ஆசையே வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அல்லது வேறு விதமான கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் பங்கெடுப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. (யாத்திராகமம் 9:16; சங்கீதம் 83:17) சத்தியத்தையும் நீதியையும் நேசிக்கும் ஆட்கள் யெகோவாவைத் துதிப்பதற்கு நம் சுவிசேஷ வேலையின் மூலம் அவர்களுக்கு உதவுவது எவ்வளவு திருப்தி அளிக்கிறது! “வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது” என சங்கீதக்காரன் பாடினார்.​—⁠சங்கீதம் 148:12, 13.

சுவிசேஷ ஊழியம் நமக்குப் பயனளிக்கிறது

18. சுவிசேஷ வேலை செய்வதிலிருந்து நாம் எப்படி பயனடையலாம்?

18 சுவிசேஷகரின் வேலையை செய்வது பல்வேறு வழிகளில் தனிப்பட்ட விதமாக நமக்கு பயனளிக்கிறது. நற்செய்தியை அறிவிக்க வீட்டுக்கு வீடு செல்லுகையில், முக்கியமாய் ஆட்கள் நம்மிடம் அன்பற்ற விதத்தில் நடந்துகொள்கையில், மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள அது நமக்கு வாய்ப்பளிக்கிறது. பலன்தரும் சுவிசேஷகராக இருப்பதற்கு நாம் பவுலைப் போல் இருக்க வேண்டும்; ‘எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு அவர் எல்லாருக்கும் எல்லாமானார்.’ (1 கொரிந்தியர் 9:19-23) ஊழியத்தில் நாம் பெறும் அனுபவம் சாதுரியமாக நடந்துகொள்ள நமக்கு உதவுகிறது. யெகோவாவை சார்ந்திருப்பதன் மூலமும் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து உபயோகிப்பதன் மூலமும் பவுலின் பின்வரும் புத்திமதியை நாம் பின்பற்றுவோம்: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”​—⁠கொலோசெயர் 4:6.

19. சுவிசேஷகர்களுக்கு பரிசுத்த ஆவி எப்படி உதவுகிறது?

19 சுவிசேஷ வேலை கடவுளுடைய பரிசுத்த ஆவியை சார்ந்திருக்கவும் நம்மை தூண்டுகிறது. (சகரியா 4:6) அதன் விளைவாக, ஆவியின் கனி, அதாவது “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவை நம் ஊழியத்தில் தெள்ளத் தெளிவாக தெரிய ஆரம்பிக்கின்றன. (கலாத்தியர் 5:22, 23) இவை நாம் ஜனங்களிடம் நடந்துகொள்ளும் விதத்தையே மாற்றுகின்றன; எப்படியெனில், ஆவியின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிவது நற்செய்தியை அறிவிக்கையில் அன்பு காட்டுவதற்கு, சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் இருப்பதற்கு, நீடிய பொறுமையோடும் தயவோடும் நடந்துகொள்வதற்கு, நற்குணத்தையும் விசுவாசத்தையும் காட்டுவதற்கு, சாந்தத்தையும் இச்சையடக்கத்தையும் வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது.

20, 21. சுவிசேஷகர்களாக நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதால் கிடைக்கும் சில ஆசீர்வாதங்களும் நன்மைகளும் யாவை?

20 அதிக அனுதாபமிக்கவர்களாக ஆவது சுவிசேஷகர்களாக நாம் பெறும் மற்றொரு ஆசீர்வாதமாகும். வியாதி, வேலையில்லா திண்டாட்டம், அன்றாட பிரச்சினைகள் போன்றவற்றைக் குறித்து ஜனங்கள் பேசும்போது ஏதோ ஆலோசகர்களைப் போல் நாம் நடந்துகொள்ளாமல் வேதவசனங்களிலிருந்து உற்சாகத்தையும் ஆறுதலையும் அளிக்கிறோம். ஆவிக்குரிய விதத்தில் குருடராக்கப்பட்டிருந்தாலும் நீதியை நேசிப்பவர்களாக தோன்றுகிறவர்கள் மீது அக்கறை காட்டுகிறோம். (2 கொரிந்தியர் 4:4) “நித்திய ஜீவனுக்கான சரியான மனச்சாய்வு உடையவர்களுக்கு” ஆவிக்குரிய உதவியளிப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!​—⁠அப்போஸ்தலர் 13:48, NW.

21 தவறாமல் சுவிசேஷ ஊழியத்தில் பங்குகொள்வது ஆவிக்குரிய காரியங்கள் மீது நம் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. (லூக்கா 11:34) அது உண்மையிலேயே பயனுள்ளது, இல்லாவிட்டால் இவ்வுலகில் சர்வசாதாரணமாக காணப்படும் பொருளாதார காரியங்களிடம் நாம் ஈர்க்கப்பட்டுவிடுவோம். “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என அப்போஸ்தலன் யோவான் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். (1 யோவான் 2:15-17) சுவிசேஷகர்களாக, கர்த்தருடைய வேலையில் அதிகத்தை செய்வதற்காக நம்மை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வது உலகத்தை நேசிக்காதிருக்க நமக்கு உதவும்.​—⁠1 கொரிந்தியர் 15:58.

பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்

22, 23. (அ) கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் என்ன பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்? (ஆ) அடுத்த கட்டுரை நமக்கு எப்படி உதவும்?

22 ராஜ்ய பிரசங்க வேலையை வைராக்கியத்துடன் செய்வது நித்திய நன்மைகளைத் தருகிறது. இதை இயேசு வலியுறுத்திக் காட்டினார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”​—⁠மத்தேயு 6:19-21.

23 சர்வலோக கர்த்தராகிய யெகோவாவுக்கு சாட்சிகளாக இருப்பதைவிட ஒப்பற்ற சிலாக்கியம் வேறெதுவும் இருக்க முடியாது என்பதை உணர்ந்து, பரலோகத்திலே பொக்கிஷங்களை தொடர்ந்து சேர்த்து வைப்போமாக. (ஏசாயா 43:10-12) கடவுளுடைய ஊழியர்களாக நம் பொறுப்பை நிறைவேற்றுகையில் கடவுளுக்கு நீண்ட காலம் சேவை செய்து தற்போது 90 வயதுக்கு மேல் ஆகியிருக்கும் ஒரு கிறிஸ்தவ பெண்மணியைப் போல் நாமும் உணருவோம்; அவர் இவ்வாறு சொன்னார்: “இத்தனை வருஷங்களாக, என் குறைபாடுகளின் மத்தியிலும் என்னை ஏற்றுக்கொண்ட யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன், அவரே என் அன்புள்ள தகப்பனாக என்றும் இருக்க வேண்டுமென உருக்கமாக வேண்டுகிறேன்.” கடவுளோடுள்ள உறவை அதேபோல் நாம் அருமையாக கருதினால் நிச்சயமாகவே சுவிசேஷகருடைய வேலையை முற்றும் முழுமையாய் செய்பவர்களாக இருப்போம். நாம் எப்படி நம் ஊழியத்தை முழுமையாக செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்ள அடுத்த கட்டுரை நமக்கு உதவும்.

நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

• நாம் ஏன் சுவிசேஷகருடைய வேலையை செய்ய வேண்டும்?

• ஆரம்ப காலத்திலும் இன்றும் சுவிசேஷகர்கள் செய்யும் வேலையைக் குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்?

• நாம் ஏன் வீட்டுக்கு வீடு சாட்சி கொடுக்கிறோம்?

• சுவிசேஷகருடைய வேலையை செய்வதால் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் எப்படி பயனடைகிறீர்கள்?

[பக்கம் 10-ன் படங்கள்]

பிலிப்புவையும் அவருடைய குமாரத்திகளையும் போன்ற சந்தோஷமுள்ள சுவிசேஷகர்கள் இன்றும் இருக்கிறார்கள்

[பக்கம் 14-ன் படம்]

மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது தனிப்பட்ட விதத்தில் நீங்கள் எப்படி பயனடைகிறீர்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்