தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்துங்கள்!
பேதுருவின் இரண்டாவது நிருபத்திலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை அல்லது செய்தியானது ஓர் இருட்டான இடத்தில் பிரகாசிக்கும் ஒரு விளக்கைப் போலிருக்கிறது. மெய் கிறிஸ்தவர்கள் அதற்கு கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. விசுவாச துரோகத்தை வளர்ப்பதற்குப் பொய் போதகர்கள் முயன்று கொண்டிருக்கையில், அது எளிதாக இல்லை. ஆனால் தெய்வீக உதவியுடன் அது செய்யப்பட முடியும். மேலும், வெகு வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கும் யெகோவாவின் நாளை நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமானால், உறுதியாய் நாம் கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்ற வேண்டும்.
அப்போஸ்தலனாகிய பேதுருவின் இரண்டாவது ஏவப்பட்ட நிருபம், நாம் தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்த நமக்கு உதவி செய்ய முடியும். பேதுரு இந்த நிருபத்தை சுமார் பொ. ச. 64-ம் ஆண்டில் பாபிலோனிலிருந்து எழுதியிருக்கலாம். தன் கடிதத்தில் அவர் கடவுளுடைய சத்தியத்தை ஆதரித்து அதன் சார்பாக பேசுகிறார், திருடனைப் போல் வரும் யெகோவாவின் நாளைப் பற்றி உடன் விசுவாசிகளை எச்சரிக்கிறார், அதோடு சட்டத்தை மதிக்காத மக்களின் தவறினால் வழி தப்பிப் போகாமலிருக்க வாசகர்களுக்கு உதவுகிறார். யெகோவாவின் நாள் நம் மேல் வந்தே விட்டது போலிருப்பதால், பேதுருவின் ஏவப்பட்ட வார்த்தைகளிலிருந்து நாம் பெருத்த அளவில் பயனடைய முடியும்.
தீர்க்கதரிசன வார்த்தையின் மேல் நம்பிக்கை
கிறிஸ்தவர்களாக நாம் தெய்வீக குணாதிசயங்களை வெளிக்காட்டுவதற்குப் பிரயாசப்பட வேண்டும். மேலும், தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கட்டாயமாகக் கவனம் செலுத்த வேண்டும். (1:1-21) செயலற்றவர்களாகவோ கனியற்றவர்களாகவோ ஆகிவிடுவதைத் தவிர்ப்பதற்கு நாம் நம் “விசுவாசத்தோடே ஒழுக்கத்தையும், அறிவையும், இச்சை அடக்கத்தையும், சகிப்புத்தன்மையையும், தேவ பக்தியையும், சகோதர சிநேகத்தையும், அன்பையும்” கூட்டி வழங்க வேண்டியவர்களாயிருக்கிறோம். பேதுரு இயேசு மறுரூபமானதைப் பார்த்து, அந்தச் சமயத்தில் கிறிஸ்துவைப் பற்றி தேவன் பேசியதைக் கேட்டபோது தீர்க்கதரிசன வசனம் மேலும் அதிக உறுதியானது. (மாற்கு 9:1-8) அந்தத் தெய்வீக ஏவப்பட்ட வசனத்திற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.
விசுவாச துரோகிகளுக்கு எதிராகக் காத்துக்கொள்ளுங்கள்
தேவனுடைய தீர்க்கதரிசன வசனத்திற்குக் கண்டிப்பான கவனம் செலுத்துவதன் மூலம், விசுவாசத் துரோகிகளுக்கு எதிராகவும், இன்னும் மற்ற ஒழுக்கயீனமான ஆட்களிடமிருந்தும் நாம் நம்மைக் காத்துக்கொள்ளலாம். (2:1-22) பொய் போதகர்கள் சபையினுள் ஊடுருவி விடுவார்கள் என்று பேதுரு எச்சரித்தார். இருப்பினும், யெகோவா கீழ்ப்படியாத தேவதூதர்களின் மேலும், நோவாவின் நாளைய தேவபயமற்ற உலகத்தின் மேலும், சோதோம், கொமோரா பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினதுபோல், இந்த விசுவாச துரோகிகளுக்கு எதிராக தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவார். பொய் போதகர்கள் கடவுளால் அளிக்கப்பட்ட அதிகாரத்தை அவமதித்து, தவறான காரியங்களில் பலவீனரைத் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி வசீகரித்து இணங்கப்பண்ணுகிறார்கள். அப்படிப்பட்ட விசுவாச துரோகிகள் “நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.”
யெகோவாவின் நாள் வந்துகொண்டிருக்கிறது!
இந்தக் கடைசி நாட்களில் தீர்க்கதரிசன வசனத்திற்கு செவி கொடுப்பவர்களாக, நாம் இயேசுவின் பிரசன்னத்தைப் பற்றிய செய்தியைப் பரிகசிப்பவர்களால் பாதிக்கப்படும்படிக்கு நம்மை அனுமதித்துவிடக்கூடாது. (3:1-18) அவர்கள் இந்தக் காரிய ஒழுங்கு முறையை அழித்துப்போட நோக்கம் கொண்டிருக்கும் கடவுள் ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த உலகத்தை அழித்துவிட்டார் என்பதை மறந்துவிடுகிறார்கள். யெகோவாவின் பொறுமையை அவர் தாமதிக்கிறார் என்று கருதிவிடக்கூடாது; ஏனென்றால், ஜனங்கள் மனந்திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ‘யெகோவாவின் நாளில்’ இந்த ஒழுங்குமுறை அழிக்கப்பட்டு, அதனிடத்தை “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும், புதிய பூமியும்” எடுத்துக்கொள்ளும். ஆகவே, “கறையற்றவர்களாகவும், பிழையற்றவர்களாகவும் சமாதானத்தோடும்” இருப்பதற்கு நம்மால் ஆனதையெல்லாம் நாம் செய்ய வேண்டும். பொய் போதகர்களால் வழி தவறிச் செல்வதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவிலே நாம் வளருவோமாக.
பேதுருவின் வார்த்தைகளை நம் இருதயத்தில் ஏற்றுக்கொள்வோமாக. பொய் போதகர்களுக்கு எதிராக எச்சரிப்போடு இருப்பதில் தவறாதிருங்கள். யெகோவாவின் நாள் வெகு சீக்கிரத்தில் வர இருக்கிறது என்று அறிந்திருப்பவர்களாக வாழுங்கள். மேலும் எப்பொழுதும், கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்துங்கள். (w91 3/15)
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
டார்டரஸ்ஸிற்குள் தள்ளிப்போடப்படுதல்: “பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி டார்ட்ரஸ்ஸிலே தள்ளி நியாயத் தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக” யெகோவா ஒப்புக்கொடுத்தார். (2 பேதுரு 2:4) சிறிய பொய் கடவுட்களும், இன்னும் ‘க்ரோனஸ் மற்றும் டைடான்’ ஆவிகளும் சிறைவைக்கப்பட்டிருந்த ‘ஹோமர்’ என்பவரின் ‘இலியட்’டில் விவரிக்கப்பட்டிருக்கிற, புராணத்தைச் சேர்ந்த பூமிக்கடியிலிருக்கும் ஓர் இடமாக ‘டார்டரஸ்’ஸாக இது இல்லை. பைபிளின் ‘டார்டரஸ்’ நோவாவின் நாளில் கீழ்ப்படியாத தேவ தூதர்களை தேவன் தள்ளிவிட்ட, இழிவான சிறையைப் போன்ற ஒரு நிலைமையாக இருக்கிறது. (ஆதியாகமம் 6:1-8; 1 பேதுரு 3:19, 20; யூதா 6) “அடர்த்தியான அந்தகாரம்” என்பது, அவர்கள் கடவுளுடைய குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, ஆவிக்குரிய வெளிச்சம் துண்டிக்கப்பட்டதினால் விளைவடைகிறது. அவருடைய சாதகமற்ற தண்டனைத் தீர்ப்பிற்காக வைத்து வைக்கப்பட்டவர்களாக அவர்கள் இருண்ட எதிர்நோக்கை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். சாத்தானும் அவனுடைய பேய்களும், கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி ஆரம்பிப்பதற்கு முன் பாதாளத்தில் அடைக்கப்படும் அனுபவத்திற்கு முன்னோடியாக ‘டார்டரஸ்’ இருக்கிறது. இயேசுவின் ஆயிர வருட ஆட்சிக்குப் பிறகு அவர்களுடைய அழிவு சம்பவிக்கும்.—மத்தேயு 25:41; வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10, 14.
[படம்]
ஜியஸ் தாழ்வான கடவுட்களை டார்டரஸ்ஸிற்குள் தள்ளிப்போட்டார்
[படத்திற்கான நன்றி]
National Archaeological Museum, Athens, Greece