‘நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை’ காத்துக்கொள்ளுங்கள்
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.”—வெளி. 3:11.
1, 2. யெகோவாவைப்பற்றி நீங்கள் கற்றுவந்ததுதான் சத்தியம் என்பதை மனதார ஏற்றுக்கொண்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?
கீழ்ப்படிதலுள்ள மனிதருக்கு யெகோவா அளிக்கப் போகும் அருமையான எதிர்காலத்தைப்பற்றி நீங்கள் முதன்முதலில் தெரிந்துகொண்ட சமயத்தைச் சற்று யோசித்துப் பாருங்கள். அப்போது, நீங்கள் வேறொரு மதத்தில் இருந்திருக்கலாம்; கடவுளுடைய நோக்கங்களைப்பற்றி யாராவது பைபிளிலிருந்து எடுத்துக்காட்டியபோது அல்லது புரிந்துகொள்வதற்கே கஷ்டமாக இருந்த போதனைகளைத் தெளிவாக விளக்கியபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? கடவுளைப் பற்றிய உண்மைகளே உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை என்பது ஒருவேளை உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால், உண்மையைத் தெரிந்துகொண்டதற்காக இப்போது நீங்கள் அதிக சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? ஒருவேளை, கிறிஸ்தவ பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கலாம்; யெகோவாவைப்பற்றி நீங்கள் கற்றுவந்த விஷயங்கள் முழுக்க முழுக்க உண்மை என்பதை மனதார ஏற்றுக்கொண்டு, அவற்றிற்கு இசைவாக வாழத் தீர்மானித்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?—ரோ. 12:2.
2 இதைப்பற்றி உங்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் பலரிடம் கேட்டீர்களென்றால், அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டதாகவும், யெகோவாவிடம் நெருக்கமாக உணர்ந்ததாகவும் சொல்வார்கள்; அதோடு, யெகோவா அவர்களைத் தம்வசம் இழுத்துக்கொண்டதற்காக அவருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் சொல்வார்கள். (யோவா. 6:44) இந்தச் சந்தோஷத்தால் தூண்டப்பட்டு, கிறிஸ்தவ வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் அவர்கள் ஈடுபட்டார்கள். மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியதால் தங்கள் அனுபவத்தை எல்லாரிடமும் பகிர்ந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். இதுபோன்ற அனுபவம் உங்களுக்கும் இருக்கிறதா?
3. எபேசு சபைக்கு இயேசு அறிவுரை கொடுத்தபோது அங்கு என்ன நிலைமை இருந்தது?
3 எபேசுவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையாரிடம், அவர்கள் ‘ஆதியில் கொண்டிருந்த அன்பைப்பற்றி’ இயேசு பேசினார். அவர்களிடம் அநேக நல்ல பண்புகள் இருந்தன; ஆனாலும், அவர்கள் ஆரம்பத்தில் யெகோவாவிடம் காட்டிய அன்பு படிப்படியாகக் குறைந்திருந்தது. எனவே, இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.”—வெளி. 2:2-4.
4. எபேசு சபைக்கு இயேசு கொடுத்த அறிவுரை இன்று நமக்கும் ஏன் பொருத்தமாக இருக்கிறது?
4 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் எபேசு சபைக்கும் மற்ற சபைகளுக்கும் இயேசு கொடுத்த அறிவுரை, 1914-லிருந்து சில காலம் வரையில் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் மத்தியில் நிலவிய சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருந்தது. (வெளி. 1:10) இன்றும்கூட கிறிஸ்தவர்கள் சிலர், யெகோவாமீதும் கிறிஸ்தவ போதனைகள்மீதும் ‘ஆதியில் கொண்டிருந்த அன்பை’ விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்கள் சொந்த அனுபவங்களை மனத்திரையில் ஓடவிட்டு, அவற்றைக் குறித்து ஆழ்ந்து யோசிப்பதன் மூலம் கடவுள்மீதும் கிறிஸ்தவ போதனைகள்மீதும் நீங்கள் ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பையும் ஆர்வத்தையும் எப்படி காத்துக்கொள்ளலாம், புதுப்பிக்கலாம், மேன்மேலும் அதிகரிக்கலாம் என்பதை நாம் இப்போது சிந்திப்போம்.
‘இதுதான் சத்தியம்’ என்று உங்களை நம்பவைத்தது எது?
5, 6. (அ) ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களுக்குத் தாங்களே எதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் உண்மையைத்தான் கற்பிக்கிறார்கள் என்று எதை வைத்து நீங்கள் மனதார நம்பினீர்கள்? (இ) ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பை மீண்டும் புதுப்பிக்க எது ஒருவருக்கு உதவும்?
5 யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொருவரும், “நன்மையும் பிரியமும் பூரணமுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை” முதலில் தங்களுக்குத் தாங்களே “நிச்சயப்படுத்திக்கொள்ள” வேண்டும். (ரோ. 12:1, 2; NW) பைபிள் கற்பிக்கும் விஷயங்களைக் கற்றுக்கொள்வது இதற்கு ஒரு வழி. யெகோவாவின் சாட்சிகள் உண்மையைத்தான் கற்பிக்கிறார்கள் என்பதை மனதார நம்புவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து வாசித்தது அல்லது இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டது சிலரது மனதை மாற்றியிருக்கலாம். (சங். 83:17; பிர. 9:5, 10) யெகோவாவின் மக்கள் மத்தியில் நிலவுகிற அன்பு சிலரைத் தொட்டிருக்கலாம். (யோவா. 13:34, 35) இந்த உலகின் பாகமாக இல்லாதிருப்பதன் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டது, அதாவது அரசியல் சர்ச்சைகளிலோ தேசங்களுக்கு இடையிலான போர்களிலோ உண்மை கிறிஸ்தவர்கள் பங்குகொள்ள மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டது சிலரைக் கவர்ந்திருக்கலாம்.—ஏசா. 2:4; யோவா. 6:15; 17:14-16.
6 இப்படிப்பட்ட விஷயங்களையும் இன்னும் பிற உண்மைகளையும் கற்றுக்கொண்டதே கடவுள்மீது அன்பு வைப்பதற்கு ஆரம்பத்தில் அநேகரைத் தூண்டியது. ‘இதுதான் சத்தியம்’ என்று எது உங்களை நம்ப வைத்தது என்பதைப்பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கைச் சூழல் பிறருடைய சூழலிலிருந்து வித்தியாசப்படுகிறது, உங்களுக்கென்று தனி சுபாவமும் இருக்கிறது. ஆகவே, தனி நபராக நீங்கள் ஏன் யெகோவாவை நேசிக்கிறீர்கள், அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கிறீர்கள் என்பதற்கும் மற்றவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதற்கும் வித்தியாசம் இருக்கலாம். என்றாலும், நீங்கள் முதன்முதலாக இந்த விஷயங்களைப்பற்றி கற்றுக்கொண்டபோது உங்களுக்கு நியாயமாகத் தெரிந்த காரணங்கள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. சத்தியம் மாறவே இல்லை. எனவே, அந்தச் சமயத்தில் நீங்கள் எப்படி யோசித்தீர்கள், உணர்ந்தீர்கள் என்பதை மனதில் அசைபோடுவது, சத்தியத்தின்மீது நீங்கள் ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பை மீண்டும் புதுப்பிக்க உதவியாக இருக்கும்.—சங்கீதம் 119:151, 152; 143:5-ஐ வாசியுங்கள்.
‘ஆதியில் கொண்டிருந்த அன்பை’ வளர்த்துக்கொள்ளுங்கள்
7. சத்தியத்தின்மீது ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பை நாம் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும், அதை நாம் எப்படி செய்யலாம்?
7 யெகோவாவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்து காலங்கள் கடந்திருக்கலாம். உங்கள் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். சத்தியத்தின்மீது ஆரம்பத்தில் நீங்கள் வைத்திருந்த அன்பு முக்கியம்தான் என்றாலும் போகப்போக உங்கள் விசுவாசத்தைச் சோதித்த புதுப்புது பிரச்சினைகளைச் சமாளிக்க உங்களுக்கு இன்னும் ஆழமான அன்பு தேவைப்பட்டிருக்கும். அதுபோன்ற சமயங்களில், யெகோவா உங்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. (1 கொ. 10:13) எனவே, நீங்கள் பெற்ற இப்படிப்பட்ட அனுபவங்களும் உங்களுக்கு அருமையானவை. ஆரம்பத்தில் நீங்கள் வைத்திருந்த அன்பை இன்னுமதிகமாக வளர்த்துக்கொள்வதற்கு இவை உதவியிருக்கின்றன. நன்மையும் பிரியமுமான கடவுளுடைய சித்தத்தை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு இது மற்றொரு வழியாக இருக்கிறது.—யோசு. 23:14; சங். 34:8.
8. யெகோவா தம்மைக் குறித்து மோசேயிடம் என்ன சொன்னார், யெகோவாவின் சுபாவத்தை இஸ்ரவேலர் எப்படி மிக நன்றாகத் தெரிந்துகொண்டார்கள்?
8 உதாரணத்திற்கு, எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலருடைய சூழ்நிலையைக் கவனியுங்கள். அவர்களை விடுவிப்பதைக் குறித்து யெகோவா தெரிவித்தபோது, “நான் என்னவாக ஆவேனோ, அவ்வாறே ஆவேன்,” என்று தம்மைக் குறித்து மோசேயிடம் சொன்னார். (யாத். 3:7, 8, 13, 14; NW) அதாவது, தம்முடைய மக்களை விடுவிப்பதற்காக எப்படியெல்லாம் ஆகவேண்டுமோ அப்படியெல்லாம் ஆவதாக யெகோவா சொன்னார். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களில், யெகோவா தம் சுபாவத்தின் பல்வேறு குணாம்சங்களைச் சூழ்நிலைக்கு ஏற்றபடி வெளிக்காட்டியதை இஸ்ரவேலர் கண்ணாரக் கண்டார்கள். சொல்லப்போனால், சர்வவல்லவர், நீதிபதி, தலைவர், மீட்பர், போர்வீரர், பராமரிப்பவர் என்று பல ஸ்தானங்களை அவர் ஏற்றதை அவர்கள் கண்டார்கள்.—யாத். 12:12; 13:21; 14:24-31; 16:4; நெ. 9:9-15.
9, 10. கடவுளைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள எப்படிப்பட்ட சூழ்நிலை ஒருவருக்கு உதவலாம், அவற்றை யோசித்துப் பார்ப்பது ஏன் நல்லது?
9 பண்டைய இஸ்ரவேலருடைய சூழ்நிலையிலிருந்து உங்கள் சூழ்நிலை வேறுபடுகிறது என்பது உண்மைதான். என்றாலும், கடவுள் உங்கள்மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை நிரூபித்த அனுபவங்கள் உங்களுக்கும் கிடைத்திருக்கும். இவை உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கும். ஏதாவதொரு விதத்தில் யெகோவா உங்களை பராமரிப்பவராகவோ, உங்களுக்கு ஆறுதல் அளிப்பவராகவோ போதகராகவோ இருந்திருப்பார். (ஏசாயா 30:20ஆ, 21-ஐ வாசியுங்கள்.a) அல்லது, உங்கள் ஜெபத்திற்கு தெளிவான பதில் கிடைத்ததை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஏதாவதொரு பிரச்சினையில் சிக்கித் தவிக்கையில், சக கிறிஸ்தவர் ஒருவர் உதவி செய்திருக்கலாம். அல்லது, உங்கள் சூழ்நிலைக்குப் பொருத்தமான வசனங்களை தனிப்பட்ட படிப்பில் நீங்கள் கவனித்திருக்கலாம்.
10 இப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் மற்றவர்களிடம் சொன்னால், சிலருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இல்லாதிருக்கலாம். அவற்றை அற்புதங்கள் என்று சொல்லமுடியாதுதான். ஆனால், அவை உங்களுக்கு மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், உங்கள் தேவை என்னவோ அதை யெகோவா அப்படியே பூர்த்தி செய்திருப்பார். நீங்கள் சத்தியத்திற்கு வந்ததிலிருந்து இன்றுவரை நடந்தவற்றை யோசித்துப் பாருங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் யெகோவா உங்கள்மீது தனிப்பட்ட அக்கறை காண்பித்தது நினைவுக்கு வருகிறதா? அப்படியென்றால், அச்சம்பவங்களையும் அப்போது உங்கள் மனதில் ஏற்பட்ட உணர்ச்சிகளையும் நினைத்துப் பார்ப்பது யெகோவாமீது அந்தச் சமயத்தில் உங்களுக்கு இருந்த அன்பை மீண்டும் மலரச் செய்யும். இதுபோன்ற அனுபவங்களை பொக்கிஷமாகப் போற்றுங்கள். அவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது என்பதற்கு இவை அத்தாட்சிகளாக உள்ளன. உங்களுடைய இந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை யாராலும் குலைத்துப்போட முடியாது.
சுய பரிசோதனை செய்துபாருங்கள்
11, 12. சத்தியத்தின்மீது ஒரு கிறிஸ்தவரின் அன்பு தணிந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம், இயேசு என்ன அறிவுரை கொடுத்தார்?
11 கடவுள்மீதும் சத்தியத்தின்மீதும் ஆரம்பத்தில் உங்களுக்கு இருந்த அன்பு இப்போது ஒருவேளை தணிந்திருக்கலாம். கடவுளிடம் ஏதோ மாற்றம் ஏற்பட்டதால்தான் உங்கள் அன்பு தணிந்துவிட்டது என்று நீங்கள் சொல்லமுடியாது. ஏனென்றால், யெகோவா ஒருபோதும் மாறாதவர். (மல். 3:6; யாக். 1:17) அன்று உங்கள்மீது அவருக்கிருந்த அக்கறை இன்றும் இருக்கிறது. அப்படியென்றால், நீங்கள் கடவுளோடு முன்போல் நெருக்கமாக இல்லாதிருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? ஒருவேளை உங்களுக்குத் தலைக்குமேல் பிரச்சினைகள் இருப்பது அல்லது அன்றாட கவலைகளில் நீங்கள் மூழ்கிப்போயிருப்பது அதற்குக் காரணமாக இருக்குமா? முன்பெல்லாம் இன்னும் ஊக்கமாக ஜெபம் செய்திருப்பீர்கள், மிகுந்த ஆர்வத்துடன் படித்திருப்பீர்கள், அடிக்கடி தியானித்திருப்பீர்கள். ஊழியத்தில்கூட அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டிருப்பீர்கள். கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டிருப்பீர்கள். ஆனால், இப்போது?—2 கொ. 13:5.
12 சுயபரிசோதனை செய்யும்போது இந்த விஷயங்களில் உங்களிடம் எந்த மாற்றமும் இல்லாததுபோல் தோன்றலாம். ஆனால் அப்படி ஏதாவது தெரிந்தால், அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? குடும்பத்தைக் கவனிப்பது, உங்கள் உடல்நலத்தைப் பராமரிப்பது அல்லது இதுபோன்ற வேறு நியாயமான காரணங்களால், யெகோவாவின் நாள் சமீபமாயிருப்பதைக் குறித்த உங்களுடைய அவசர உணர்வு குறைந்துவிட்டதா? இயேசு தம் அப்போஸ்தலரிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”—லூக். 21:34-36.
13. கடவுளுடைய வார்த்தையை யாக்கோபு எதற்கு ஒப்பிட்டார்?
13 கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி தங்களைத் தாங்களே நேர்மையாக சுயபரிசோதனை செய்யும்படி சக விசுவாசிகளை பைபிள் எழுத்தாளராகிய யாக்கோபு அறிவுறுத்தினார். “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்” என்று யாக்கோபு எழுதினார்.—யாக். 1:22-25.
14, 15. (அ) ஆன்மீக ரீதியில் முன்னேற பைபிள் உங்களுக்கு எப்படி உதவும்? (ஆ) என்னென்ன கேள்விகளை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்கலாம்?
14 ஒருவர் தன் தோற்றத்தைச் சரிசெய்துகொள்ள கண்ணாடியைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, ஓர் ஆண் தன் கழுத்தில் அணிந்திருக்கும் ‘டை’ கோணலாயிருந்தால் அதை நேராக்கலாம். ஒரு பெண் தன் தலைமுடி கலைந்திருந்தால் அதை சரி செய்யலாம். அதுபோலவே, நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேதவசனங்கள் நமக்கு உதவுகின்றன. பைபிள் சொல்கிறபடி நடக்கிறோமா என்று அதை வைத்து நம்மை நாமே சோதிக்கும்போது, அதை ஒரு கண்ணாடியைப்போல் பயன்படுத்துகிறோம். ஆனால், அப்படித் தெரியவருகிற குறைகளை நாம் சரிசெய்யவில்லை என்றால் அந்தக் கண்ணாடியைப் பார்ப்பதில் எவ்வித பயனும் இல்லை, அல்லவா? கடவுளுடைய ‘பூரணப்பிரமாணம்’ சொல்கிறபடி நாம் நடந்தால் ஞானமுள்ளவர்களாய் இருப்போம், அதன்படி “செய்கிறவர்களாயும்” இருப்போம். எனவே, யெகோவாமீதும் சத்தியத்தின்மீதும் ஆரம்பத்தில் வைத்திருந்த அன்பு குறைந்துவிட்டதை உணரும் எவரும் பின்வரும் கேள்விகளை சிந்திப்பது நல்லது: ‘நான் என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறேன்? அவற்றை சந்திக்கையில், முன்பு எப்படி நடந்துகொண்டேன், இப்போது எப்படி நடந்துகொள்கிறேன்? அதில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?’ இப்படி சுயபரிசோதனை செய்யும்போது குறைகள் தெரிந்தால் அவற்றை அசட்டை செய்துவிடாதீர்கள். மாற்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாகச் செய்யுங்கள்.—எபி. 12:12, 13.
15 ஆன்மீக ரீதியில் முன்னேற நம்மால் எட்டமுடிந்த இலக்குகளை வைப்பதற்கும் இவ்வாறு ஆழ்ந்து சிந்திப்பது உதவும். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் தன் சக ஊழியராகிய இளம் தீமோத்தேயுவுக்கு ஊழியத்தில் முன்னேறுவதற்கான அறிவுரையைக் கொடுத்தார். “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” என்று பவுல் உற்சாகப்படுத்தினார். நம்மால் என்ன முன்னேற்றங்களைச் செய்ய முடியும் என்பதை கடவுளுடைய வார்த்தையின் உதவியோடு நாமும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.—1 தீ. 4:15.
16. வேதவசனங்களை வைத்து உங்களையே சுயபரிசோதனை செய்கையில் எந்த ஆபத்தைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்?
16 நேர்மையாக சுயபரிசோதனை செய்து பார்த்தால் உங்களிடம் ஏதாவதொரு குறை இருப்பது தெரியவரும்தான். அது உங்களைச் சோர்வடையச் செய்யலாம், ஆனால் மனம் தளர்ந்துவிடாதீர்கள். சொல்லப்போனால், உங்கள் குறைகளைத் தெரிந்துகொண்டு அவற்றைச் சரிசெய்வதற்காகத்தானே இந்த சுயபரிசோதனையை மேற்கொண்டீர்கள். ஒரு கிறிஸ்தவர், தன் பலவீனங்களின் காரணமாக தன்னை லாயக்கற்றவராக கருதவேண்டும் என்றே சாத்தான் விரும்புகிறான். கடவுள், தம்மைச் சேவிப்பதற்காக மக்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் துச்சமாக நினைக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு கருத்து எழுப்பப்பட்டிருக்கிறது. (யோபு 15:15, 16; 22:3) ஆனால், இந்த அப்பட்டமான பொய்யை இயேசு வன்மையாக எதிர்த்தார். கடவுள் நம் ஒவ்வொருவரையும் மதிப்புள்ளவராகக் கருதுகிறார். (மத்தேயு 10:29-31-ஐ வாசியுங்கள்.) எனவே, உங்கள் பலவீனங்களைக் கண்டு சோர்ந்துபோவதற்குப் பதிலாக மனத்தாழ்மையுடன் அவற்றைச் சரிசெய்துகொள்ளத் தீர்மானமாய் இருங்கள். யெகோவாவின் உதவியுடன் அதை உங்களால் செய்ய முடியும். (2 கொ. 12:7-10) வியாதி அல்லது வயோதிபத்தின் காரணமாக உங்களால் முன்போல் செயல்பட முடியவில்லை என்றால் எட்டமுடிந்த இலக்குகளை வையுங்கள். சோர்ந்துவிடாதீர்கள், உங்கள் அன்பை தணிந்துபோகவிடாதீர்கள்.
நன்றியுடனிருக்க எத்தனை காரணங்கள்!
17, 18. ஆரம்பத்தில் நீங்கள் வைத்திருந்த அன்பை வளர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகளைப் பெறுவீர்கள்?
17 ஆரம்பத்தில் இருந்த அன்பை நீங்கள் தொடர்ந்து வளர்த்துவந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள். கடவுளைப்பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்வீர்கள். அவருடைய அன்பான வழிநடத்துதலுக்காக நன்றியுணர்வால் நிறைந்திருப்பீர்கள். (நீதிமொழிகள் 2:1-9; 3:5, 6-ஐ வாசியுங்கள்.) “அவைகளைக் [யெகோவாவின் நீதியுள்ள வழிகளைக்] கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு” என்று சங்கீதக்காரன் சொன்னார். “கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” மேலும், “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.”—சங். 19:7, 11; 119:1.
18 கடவுளுக்கு நன்றியுடனிருக்க எத்தனையோ நல்ல காரணங்கள் இருப்பதை நீங்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள். இவ்வுலகில் நடக்கும் சம்பவங்களின் காரணங்களைப் புரிந்திருக்கிறீர்கள். இன்று கடவுள் தம்முடைய மக்களை ஆன்மீக ரீதியில் பராமரிப்பதற்காகச் செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளிலிருந்தும் நீங்கள் பயனடைகிறீர்கள். யெகோவா தமது உலகளாவிய சபைக்குள் உங்களைக் கூட்டிச்சேர்த்திருப்பதற்காகவும் அவருடைய சாட்சியாக இருப்பதற்கு வாய்ப்பு அளித்திருப்பதற்காகவும் நீங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. கடவுள் உங்களை எந்தளவுக்கு ஆசீர்வதித்திருக்கிறார் என்று எண்ணிப் பாருங்கள்! அவற்றைப் பட்டியலிட்டீர்கள் என்றால் அது நீண்டுகொண்டே போகும். கடவுள் பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்களை இப்படி அடிக்கடி பட்டியலிடுவது “உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு” என்ற அறிவுரையைப் பின்பற்ற நிச்சயம் உங்களுக்கு உதவும்.—வெளி. 3:11.
19. கடவுளுடன் உங்களுக்கிருக்கும் உறவைக் காத்துக்கொள்வதற்கு அதைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதோடு வேறு என்ன செய்ய வேண்டும்?
19 வருடங்கள் கடந்து செல்கையில் உங்கள் விசுவாசம் எப்படி பலப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து ஆழ்ந்து யோசித்துப் பார்ப்பது உங்களிடம் இருப்பதைப் பற்றிக்கொண்டிருப்பதற்கு உதவும் ஒரு வழி மட்டுமே. கடவுளோடு நெருங்கிய உறவைக் காத்துக்கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய இன்னும் அநேக விஷயங்களை இந்தப் பத்திரிகை மீண்டும்மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஜெபம் செய்வது, கிறிஸ்தவ கூட்டங்களில் பங்குகொள்வது, வெளி ஊழியத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவது ஆகியவை அவற்றில் அடங்கும். ஆரம்பத்தில் நீங்கள் வைத்திருந்த அன்பைப் புதுப்பிக்கவும் மேன்மேலும் அதிகரிக்கவும் இவை உங்களுக்கு உதவும்.—எபே. 5:10; 1 பே. 3:15; யூ. 20, 21.
[அடிக்குறிப்பு]
a ஏசாயா 30:20ஆ, 21 (NW): “உங்கள் மகா போதகர் இனி ஒருபோதும் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் கண்கள் உங்கள் மகா போதகரைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”
எப்படி பதில் அளிப்பீர்கள்?
• ஆரம்பத்தில் யெகோவாவை நேசிப்பதற்குக் காரணமாக இருந்த விஷயங்களைச் சிந்திப்பது இன்றும் உங்களுக்கு எப்படி உற்சாகமளிக்கலாம்?
• இவ்வளவு காலமாக நீங்கள் பெற்ற அனுபவங்களை யோசித்துப் பார்ப்பது எதை நிச்சயப்படுத்திக்கொள்ள உங்களுக்கு உதவும்?
• கடவுள்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை ஏன் சுயபரிசோதனை செய்ய வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
சத்தியத்திடம் உங்களை ஈர்த்து, அதை உறுதியாக நம்ப வைத்தது எது?
[பக்கம் 25-ன் படம்]
நீங்கள் சரிசெய்துகொள்ள வேண்டிய விஷயங்களைக் கண்டுபிடித்தீர்களா?