உங்கள் சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்குங்கள்
‘உங்கள் விசுவாசத்தோடே சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்குங்கள்.’—2 பேதுரு 1:5-7, NW.
1, 2. (அ) நாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்த தேசங்களில் யெகோவாவின் சாட்சிகளுக்கு 1930-களின் ஆரம்பத்தில் என்ன நடந்தது, ஏன்? (ஆ) இந்தச் சித்திரவதைக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படிப் பிரதிபலித்தனர்?
இது 20-ம் நூற்றாண்டு வரலாற்றின் ஓர் இருண்ட காலம். 1930-களில் ஆரம்பித்து, நாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்த தேசங்களில் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் அநியாயமாக சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதை முகாம்களில் போடப்பட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் நடுநிலைமையை வகிக்க தைரியமாகத் தீர்மானம் எடுத்தனர்; ஹிட்லரை வணங்க (ஹெய்ல் ஹிட்லர் சொல்ல) மறுத்தனர். அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? “பைபிள் மாணாக்கர்களைப்போல [யெகோவாவின் சாட்சிகள்] வேறு எந்தக் கைதிகளின் தொகுதியும் SS-படைவீரர் தொகுப்பின் கொடுமைக்கு அந்தளவிற்கு ஆளாகவில்லை. இது சரீரப்பிரகாரமான மற்றும் மன சம்பந்தமான சித்திரவதைகளின் முடிவில்லா தொடர்ச்சியினால் குறிக்கப்படும் ஒரு கொடுமைப்படுத்துதலாக இருந்தது. சித்திரவதைகள் எப்படிப்பட்டவையாய் இருந்தன என்பதை உலகத்திலுள்ள எந்த மொழியும் விளக்கமுடியாது.”—கார்ல் உவிட்டிக் முன்னாள் ஜெர்மன் அரசாங்க அதிகாரி.
2 சாட்சிகள் எப்படிப் பிரதிபலித்தனர்? டாக்டர் கிறிஸ்டின் E. கிங் என்பவர், நாசி அரசாங்கமும் புதிய மதங்களும்: ஒத்துவராமையைப் பற்றிய ஐந்து வழக்கு ஆய்வுகள் (The Nazi State and the New Religions: Five Case Studies in Non-Conformity) என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “சாட்சிகளுக்கு எதிராக மட்டுமே [மற்ற மத தொகுதிகளிடமிருந்து மாறுபட்டதாக] அரசாங்கம் வெற்றியடைய முடியவில்லை.” ஆம், யெகோவாவின் சாட்சிகளில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு மரணம்வரை சகித்திருப்பதை இது அர்த்தப்படுத்தினாலும் அவர்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாகத் தங்கள் நிலையை உறுதியாகக் காத்துக்கொண்டனர்.
3. கடுமையான சோதனைகளைச் சகித்திருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன உதவிசெய்திருக்கிறது?
3 நாசி ஜெர்மனியில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் அப்படிப்பட்ட சோதனைகளைச் சகித்திருப்பதற்கு என்ன உதவிசெய்திருக்கிறது? அவர்களுடைய பரலோக தந்தை, அவர்களின் தேவபக்திக்காக அவர்கள் சகித்திருப்பதற்கு உதவிசெய்திருக்கிறார். ‘யெகோவா தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும் அறிந்திருக்கிறார்’ என்று அப்போஸ்தலன் பேதுரு விளக்குகிறார். (2 பேதுரு 2:9, NW) இதே கடிதத்தின் ஆரம்பத்தில், கிறிஸ்தவர்களுக்கு பேதுரு இவ்வாறு புத்திசொல்லியிருந்தார்: ‘உங்கள் விசுவாசத்தோடே சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்குங்கள்.’ (2 பேதுரு 1:5-7, NW) எனவே சகிப்புத்தன்மை தேவபக்தியோடு நெருங்கியத் தொடர்புடையதாக இருக்கிறது. உண்மையில், முடிவுவரை சகித்திருப்பதற்கு, நாம் ‘தேவபக்தியை அடையும்படி நாடவேண்டும்,’ மேலும் அதைச் செயலில் வெளிக்காட்டவேண்டும். (1 தீமோத்தேயு 6:11) ஆனால் குறிப்பாக தேவபக்தி என்றால் என்ன?
தேவபக்தி என்றால் என்ன
4, 5. தேவபக்தி என்றால் என்ன?
4 “தேவபக்தி” என்பதன் கிரேக்க பெயர்ச்சொல் யுசெபியா (eu·seʹbei·a) சொல்லர்த்தமாக “நேர்த்தியான-பயபக்தி” என்று மொழிபெயர்க்கப்படலாம்.a (2 பேதுரு 1:6, கிங்டம் இன்டர்லீனியர்) இது கடவுளைக்குறித்து அனலான, இருதயப்பூர்வமான உணர்ச்சியைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. W. E. வைன் பிரகாரம், பெயரடை யுசெபியா சொல்லர்த்தமாக “நேர்த்தியான-பயபக்திக்குரிய” என்பதை அர்த்தப்படுத்தி, “கடவுளின்மீதான பரிசுத்த பயபக்தியினால் உந்துவிக்கப்படும் சக்தியைக்” குறிக்கிறது; இது பக்தியுள்ள செயல்களில் வெளிக்காட்டப்படுகிறது.”—2 பேதுரு 2:9, Int.
5 எனவே, “தேவபக்தி” என்ற வார்த்தை, யெகோவாவுக்குப் பயபக்தியை அல்லது பக்திச்செயலைக் குறிக்கிறது; இது அவருக்குப் பிரியமாய் இருக்கும் காரியத்தைச் செய்ய நம்மை உந்துவிக்கிறது. இது கடினமான சோதனையை எதிர்ப்படும்போதுங்கூட காண்பிக்கப்படுகிறது; ஏனென்றால் நாம் கடவுளுக்கு இருதயப்பூர்வமாக அன்புகாட்டுகிறோம். நாம் நம்முடைய வாழ்க்கையை நடத்தும் முறை, யெகோவாவிடம் ஒரு பற்றுமாறாத, தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. உண்மைக் கிறிஸ்தவர்கள் ‘முழு தேவபக்தியோடு கலகமில்லாமல் அமைதலுள்ள வாழ்க்கை’ வாழ ஜெபிக்கும்படி தூண்டப்படுகின்றனர். (1 தீமோத்தேயு 2:1, 2) சொற்களஞ்சிய ஆசிரியர்கள், J. P. லோ மற்றும் E. A. நைட என்பவர்கள் சொல்கிறப்பிரகாரம், “பல மொழிகளில் 1 தீமோ 2:2-ல் உள்ள [யுசெபியா], ‘நாம் எப்படி வாழவேண்டுமென்று கடவுள் உண்டாக்கினாரோ அப்படி வாழ்வது,’ அல்லது ‘நாம் எப்படி வாழவேண்டும் என்று கடவுள் நம்மிடத்தில் சொல்லியிருக்கிறாரோ அப்படி வாழ்வது’ என்று பொருத்தமாக மொழிபெயர்க்கப்படலாம்.”
6. சகிப்புத்தன்மைக்கும் தேவபக்திக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
6 சகிப்புத்தன்மைக்கும் தேவபக்திக்கும் இடையேயுள்ள தொடர்பை நாம் மேம்பட்டவகையில் இப்பொழுது போற்றுவோம். ஏனென்றால் நாம் எவ்வாறு தேவபக்தியோடு வாழவேண்டுமென்று கடவுள் நம்மை உண்டாக்கினாரோ அவ்வாறு வாழ்கையில் நாம் உலகத்தின் வெறுப்பைச் சம்பாதிக்கிறோம், இது விசுவாச சோதனைகளை எப்போதும் கொண்டுவருகிறது. (2 தீமோத்தேயு 3:12) ஆனால் நம் பரலோக தந்தையிடம் நம்முடைய தனிப்பட்ட உறவிற்காக அது இல்லையென்றால், அப்படிப்பட்ட சோதனைகளைச் சகிப்பதற்கு நாம் எவ்விதத்திலும் உந்துவிக்கப்படமாட்டோம். மேலுமாக, யெகோவா அப்படிப்பட்ட இருதயப்பூர்வமான பக்திவெளிப்பாட்டிற்கு பிரதிபலிக்கிறார். தங்களுடைய பக்தியின் காரணமாக, எல்லா வகையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவரைச் சந்தோஷப்படுத்த கடுமையாக முயற்சிசெய்பவர்களை அவர் பரலோகத்திலிருந்து கண்ணோட்டமிட்டுப் பார்ப்பது அவருக்கு எப்பேர்ப்பட்ட உணர்வைக் கொடுக்கும் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அவர் “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க” தீர்மானித்திருக்கிறார் என்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லையே!
7. தேவபக்தி ஏன் வளர்க்கப்படவேண்டும்?
7 எனினும், நாம் தேவபக்தியோடு பிறப்பதில்லை, அல்லது தேவபக்தியுள்ள பெற்றோரிடமிருந்து அது எதேச்சையாக அடையப்படுவதும் கிடையாது. (ஆதியாகமம் 8:21) இதற்கு மாறாக, அது வளர்க்கப்படவேண்டும். (1 தீமோத்தேயு 4:7, 10) நம் சகிப்புத்தன்மைக்கும், நம் விசுவாசத்திற்கும் தேவபக்தியைக் கூட்டி வழங்க நாம் உழைக்கவேண்டும். இது, பேதுரு சொல்கிறபிரகாரம், ‘உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியையும்’ தேவைப்படுத்துகிறது. (2 பேதுரு 1:5, NW) பின்பு எப்படித்தான் தேவபக்தியை முயன்றுபெறுவது?
தேவபக்தியை நாம் முயன்றுபெறுவது எப்படி?
8. அப்போஸ்தலன் பேதுருவின்படி, தேவபக்தியை முயன்றுபெறுவதற்கான வழி என்ன?
8 அப்போஸ்தலன் பேதுரு தேவபக்தியை முயன்றுபெறுவதற்கான வழியை விளக்கினார். அவர் சொன்னார்: “கடவுளையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற திருத்தமான அறிவினால் உங்களுக்குத் தகுதியற்ற தயவும் சமாதானமும் பெருகக்கடவது. தம்முடைய மகிமையினாலும் நற்பண்பினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற திருத்தமான அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தாராளமாய்த் தந்தருளியிருக்கிறது.” (2 பேதுரு 1:2, 3, NW) எனவே நம் விசுவாசத்தோடேயும் சகிப்புத்தன்மையோடேயும் தேவபக்தியைக் கூட்டி வழங்க, நாம் யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான, அதாவது முழுமையான, அல்லது நிறைவான, அறிவில் வளரவேண்டும்.
9. கடவுளைப் பற்றியும் கிறிஸ்துவைப் பற்றியும் திருத்தமான அறிவைப் பெற்றிருப்பது, வெறுமனே அவர்கள் யார் என்பதை அறிவதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது என்பதை எப்படி விளக்கலாம்?
9 கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெறுவது என்பது எதைக் குறிக்கிறது? இது வெறுமனே அவர்கள் யார் என்பதை அறிவதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. உதாரணமாக: உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும், ஒருவேளை அவரைப் பெயர் சொல்லியும் வாழ்த்தலாம். ஆனால் அவருக்கு ஒரு பெரிய எண்ணிக்கையான பணத்தைக் கடனாகக் கொடுப்பீர்களா? அவர் எப்படிப்பட்டவர் என்பதை உண்மையாகவே அறிந்திருந்தால் தவிர நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். (நீதிமொழிகள் 11:15-ஐ ஒப்பிடுங்கள்.) இதைப்போலவே, யெகோவாவையும் இயேசுவையும் திருத்தமாக, அல்லது முழுமையாக அறிவது என்பது, அவர்கள் இருக்கிறார்களென்று வெறுமனே நம்புவதையும் அவர்களுடைய பெயர்களை அறிந்திருப்பதையும்விட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. மரணம் வரையுங்கூட அவர்களின் நிமித்தம் சோதனைகளைச் சகித்திருக்க மனமுவந்து இருப்பதற்கு, அவர்களை அன்னியோன்னியமாக உண்மையில் அறிந்துகொள்ளவேண்டும். (யோவான் 17:3) இது எதை உட்படுத்துகிறது?
10. யெகோவா மற்றும் இயேசுவைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றிருப்பது, என்ன இரண்டு காரியங்களை உட்படுத்துகிறது, ஏன்?
10 யெகோவா மற்றும் இயேசுவைப் பற்றிய திருத்தமான, அல்லது நிறைவான அறிவைப் பெற்றிருப்பது, இரண்டு காரியங்களை உட்படுத்துகிறது: (1) அவர்களை நபர்களாக—அவர்களுடைய குணங்கள், உணர்ச்சிகள், வழிகள்—ஆகியவற்றை அறிந்துகொள்வது மேலும் (2) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுதல். தேவபக்தியானது, யெகோவா தேவனிடம் இருதயப்பூர்வமான, தனிப்பட்ட நெருக்கமான உறவை உட்படுத்துகிறது; நாம் நம்முடைய வாழ்க்கையை வாழும் முறையில் அது வெளிப்படுத்தப்படுகிறது. எனவே, இதை முயன்றுபெறுவதற்கு, நாம் யெகோவாவைத் தனிப்பட்ட வகையில் அறியவேண்டும்; மேலும் மனித வரம்பிற்கு எட்டின அளவிற்கு, அவருடைய சித்தத்தையும் வழிகளையும் முற்றிலும் அறிந்தவர்களாக இருக்கவேண்டும். யெகோவாவினுடைய சாயலில் நாம் படைக்கப்பட்டிருப்பதால், அவரை உண்மையில் அறிவதற்கு, அப்படிப்பட்ட அறிவை நாம் பயன்படுத்தி, அவரைப்போலவே இருப்பதற்கு கடும் முயற்சிசெய்யவேண்டும். (ஆதியாகமம் 1:26-28; கொலோசெயர் 3:10) இயேசு தாம் சொன்னவற்றிலும் செய்தவற்றிலும் யெகோவாவைப் பரிபூரணமாகப் பின்பற்றியதால், இயேசுவைத் திருத்தமாக அறிவது தேவபக்தியை வளர்ப்பதற்கு ஒரு மதிப்புமிக்க உதவியாக இருக்கிறது.—எபிரெயர் 1:3.
11. (அ) கடவுள் மற்றும் கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவை நாம் எப்படிப் பெறலாம்? (ஆ) நாம் வாசிப்பதைத் தியானஞ்செய்து பார்ப்பது ஏன் முக்கியமானது?
11 இருந்தபோதிலும், கடவுள் மற்றும் கிறிஸ்துவைப் பற்றிய அப்படிப்பட்ட திருத்தமான அறிவை நாம் எப்படிப் பெறலாம்? பைபிளையும் பைபிள் அடிப்படையிலுள்ள பிரசுரங்களையும் தெளிவாகப் படிப்பதன்மூலம்.b எனினும், நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பு, தேவபக்தியை நாம் பெறுவதில் விளைவடையப்போகிறது என்றால், நாம் அதைத் தியானிப்பதற்கு, அதாவது நாம் வாசிப்பதைப் பிரதிபலிக்கவும், அல்லது எண்ணிப்பார்க்கவும் நேரம் எடுத்துக்கொள்வது அவசியமாயிருக்கிறது. (யோசுவா 1:8-ஐ ஒப்பிடவும்.) இது ஏன் முக்கியம்? தேவபக்தி என்பது, கடவுளைப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு குதூகலமான, இருதயப்பூர்வமான உணர்ச்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். வேதாகமத்தில், தியானித்தல் அடிக்கடி அடையாள இருதயத்தோடு—உள்ளான மனுஷனோடு—சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 19:14; 49:3; நீதிமொழிகள் 15:28) நாம் வாசிக்கும் காரியங்களின்பேரில் போற்றுதல் மனப்பான்மையோடு பிரதிபலிக்கும்போது, அது நம் உள்ளான மனுஷனுக்குள் வடிந்துசென்று, நம்முடைய உணர்ச்சிகளைத் தூண்டி, உணர்ச்சிவேகத்தை இயக்குவித்து, சிந்தனையைச் செல்வாக்கு செலுத்துகிறது. அப்போதுதான், படிப்பு யெகோவாவிடமுள்ள நம்முடைய தனிப்பட்ட உறவைப் பலப்படுத்தும்; சவாலாக இருக்கும் சூழ்நிலைகளுக்கும் கஷ்டமான சோதனைகளுக்கும் மத்தியிலும், கடவுளைப் பிரியப்படுத்தும் வழியில் வாழ்வதற்கு நம்மைத் தூண்டும்.
வீட்டில் தேவபக்தியை அப்பியாசித்தல்
12. (அ) பவுலின் பிரகாரம், ஒரு கிறிஸ்தவர் தேவபக்தியை எப்படி வீட்டில் அப்பியாசிக்கலாம்? (ஆ) முதிர்வயதாகும் பெற்றோரை ஏன் உண்மைக் கிறிஸ்தவர்கள் கவனிக்கின்றனர்?
12 முதலில் தேவபக்தி வீட்டில் அப்பியாசிக்கப்படவேண்டும். அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார்: “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 5:4) முதிர்வயதாகும் பெற்றோரைக் கவனித்தல், பவுல் சொல்கிறபிரகாரம், தேவபக்தியின் ஒரு வெளிப்பாடாகும். உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட கவனித்தலைச் செய்வதற்கு காரணம் வெறுமனே கடமையுணர்ச்சி மட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோரை அவர்கள் நேசிப்பதினால் ஆகும். இதற்கும்மேலாக, ஒருவர் தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதில் யெகோவா கொடுக்கும் முக்கியத்துவத்தையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். தேவையிருக்கும்போது பெற்றோருக்கு உதவிசெய்ய மறுப்பது, ‘கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிப்பதற்கு’ சமம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.—1 தீமோத்தேயு 5:8.
13. தேவபக்தியை வீட்டில் அப்பியாசிப்பது ஏன் உண்மையான சவாலாக இருக்கலாம், ஆனால் ஒருவரின் பெற்றோரைக் கவனிப்பதால் என்ன திருப்தி கிடைக்கிறது?
13 தேவபக்தியை வீட்டில் அப்பியாசிப்பது எப்போதும் எளிதான காரியமல்ல என்பது ஒத்துக்கொள்ளப்படத்தக்கதே. அதிகமான தொலைவினால் குடும்ப அங்கத்தினர்கள் பிரிக்கப்பட்டிருக்கலாம். வளர்ந்த பிள்ளைகள் தங்களுடைய சொந்த குடும்பங்களைக் கவனித்துக்கொண்டிருக்கலாம், பொருளாதார கஷ்டத்தில் இருக்கலாம். ஒரு பெற்றோருக்குத் தேவைப்படும் கவனிப்பின் வகை அல்லது அளவு, கவனிப்பவர்களின் உடல், மனம், உணர்ச்சி சார்ந்த ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இருந்தாலும், ஒருவருடைய பெற்றோரைக் கவனிப்பது அவருக்கு “பதில் நன்மைகளை” செய்வதற்கு சமமாயிருப்பதோடு, அது ‘பரலோகத்திலும் பூமியிலுமுள்ள ஒவ்வொரு குடும்பமும் தன் பெயருக்காகக் கடன்பட்டிருக்கிற’ ஒருவரை மகிழ்விக்கிறதாகவும் இருக்கிறது என்பதை அறிவதில் உண்மையான திருப்தி இருக்கக்கூடும்.—எபேசியர் 3:14, 15, NW.
14, 15. பெற்றோரைக் கவனித்துக்கொள்வதில் பிள்ளைகளின் பங்கைப் பற்றி ஒரு தேவபக்திக்குரிய கவனிப்பின் உதாரணத்தைச் சொல்லுங்கள்.
14 உண்மையில் மனதைத் தொடும் ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஈலிஸ்-ம் அவருடைய ஐந்து சகோதர சகோதரிகளும் வீட்டிலிருந்த அவர்களுடைய அப்பாவைக் கவனித்துக்கொள்வதில் அதிக கஷ்டத்தை எதிர்ப்பட்டனர். “என் அப்பா, 1986-ல் வலிப்பினால் பாதிக்கப்பட்டார், இது அவரை முழுவதுமாக முடமாக்கியது,” என்று ஈலிஸ் விளக்குகிறார். ஆறு பிள்ளைகளும் தகப்பனின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் பகிர்ந்துகொள்கின்றனர்; அவரைக் குளிப்பாட்டுவதிலிருந்து, அவருக்குப் படுக்கைப் புண் வந்துவிடாதபடி அவர் அடிக்கடி தன்னுடைய படுக்கைநிலையை மாற்றிக்கொள்கிறாரா என்று நிச்சயப்படுத்திக்கொள்வது போன்ற தகப்பனின் வித்தியாசமான தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் ஆறு பிள்ளைகளும் பங்குபெறுகின்றனர். “நாங்கள் அவருக்காக வாசிக்கிறோம், அவரிடம் பேசுகிறோம், அவர் இசையைக் கேட்கச் செய்கிறோம். அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்கிறாரா என்பது எங்களுக்கு நிச்சயமாயில்லை, ஆனால் அவர் அனைத்தையும் புரிந்துகொள்கிறார் என்பதைப்போல், நாங்கள் அவரைக் கவனிக்கிறோம்.”
15 பிள்ளைகள் ஏன் தங்கள் அப்பாவை இவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள்? ஈலிஸ் தொடர்கிறார்: “எங்கள் அம்மா 1964-ல் இறந்தபின், அப்பா தனியாகவே எங்களை வளர்த்தார். அந்தச் சமயத்தில், எங்கள் வயது 5-லிருந்து 14 வரையாக இருந்தது. அப்போது, அவர் எங்களுக்கு உதவியாகப் பாடுபட்டார்; இப்போது நாங்கள் அவருக்காக இங்கு இருக்கிறோம்.” நிஜமாகவே இப்படிப்பட்ட கவனிப்பைக் கொடுப்பது எளிதான காரியமல்ல. பிள்ளைகளும் சில சமயங்களில் சோர்வடைந்து விடுகிறார்கள். “ஆனால் எங்கள் அப்பாவின் நிலை, ஒரு தற்காலிகமான பிரச்னையே என்பதை நாங்கள் உணர்கிறோம்,” என்று சொல்கிறார் ஈலிஸ். “எங்கள் அப்பா நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் சமயத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம், அப்போது எங்கள் அம்மாவோடு நாங்கள் மறுபடியும் சேர்ந்துகொள்வோம்.” (ஏசாயா 33:24; யோவான் 5:28, 29) ஒரு பெற்றோரின்மீதான இப்படிப்பட்ட மனப்பூர்வமான கவனிப்பு பிள்ளைகள் தங்கள் பெற்றோரைக் கனப்படுத்தவேண்டும் என்று கட்டளையிடுகிறவரின் இருதயத்திற்கு நிச்சயமாகவே புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்குமே!c—எபேசியர் 6:1, 2.
தேவபக்தியும் ஊழியமும்
16. நாம் ஊழியத்தில் என்ன செய்கிறோம் என்பதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கவேண்டும்?
16 இயேசுவின் அழைப்பாகிய ‘அவரைத் தொடர்ந்து பின்பற்றுவதை’ நாம் ஏற்கும்போது, நாம் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து, சீஷர்களை உருவாக்கவேண்டும் என்ற தெய்வீக கட்டளையின்கீழ் வருகிறோம். (மத்தேயு 16:24; 24:14; 28:19, 20) இந்தக் “கடைசிநாட்களில்” ஊழியத்தில் பங்குவகிப்பது தெளிவாகவே ஒரு கிறிஸ்தவப் பொறுப்பாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1) ஆனாலும், பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்குமான நம்முடைய நோக்கம், வெறுமனே கடமை அல்லது வேலை என்ற உணர்வைவிட அதிகத்தை உட்படுத்தவேண்டும். யெகோவாவிடம் ஓர் ஆழமான அன்புதானே நாம் ஊழியத்தில் என்ன செய்கிறோம் மற்றும் எவ்வளவு செய்கிறோம் என்பதற்கான முக்கிய காரணமாக இருக்கவேண்டும். இயேசு சொன்னார்: “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.” (மத்தேயு 12:34) ஆம், நம் இருதயம் யெகோவாமேல் உள்ள அன்பினால் நிறைந்து வழியும்போது, நாம் அவரைப் பற்றி மற்றவர்களிடம் சாட்சிகொடுக்க தூண்டப்படுவதாக உணர்கிறோம். கடவுளுக்கு அன்புகாட்டுவதே நம்முடைய நோக்கமாக இருக்கும்போது, நம் ஊழியம் நம்முடைய தேவபக்தியின் அர்த்தமுள்ள வெளிக்காட்டாக இருக்கிறது.
17. ஊழியத்தைப் பற்றிய சரியான நோக்குநிலையை நாம் எப்படி வளர்க்கலாம்?
17 ஊழியத்தைப் பற்றிய சரியான நோக்குநிலையை நாம் வளர்ப்பது எப்படி? யெகோவாவுக்கு அன்புகாட்டுவதற்காக, அவர் நமக்குக் கொடுத்த மூன்று காரணங்களின்பேரில் போற்றுதல் மனப்பான்மையோடு பிரதிபலியுங்கள். (1) யெகோவா நமக்கு ஏற்கெனவே என்ன செய்தாரோ அதற்காக அவர்மீது அன்புகாட்டுகிறோம். கிரயபலியை ஏற்பாடு செய்ததைவிட அதிகமான அன்பை அவர் காண்பித்திருக்கமுடியாது. (மத்தேயு 20:28; யோவான் 15:13) (2) யெகோவா நமக்கு இப்போது என்ன செய்கிறாரோ அதற்காக அவர்மீது அன்புகாட்டுகிறோம். நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிற யெகோவாவிடம் பேச்சு சுயாதீனத்தை நாம் கொண்டிருக்கிறோம். (சங்கீதம் 65:2; எபிரெயர் 4:14-16) நாம் ராஜ்ய அக்கறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், நாம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை அனுபவிக்கிறோம். (மத்தேயு 6:25-33) நாம் ஒழுங்காக ஆவிக்குரிய உணவளிக்கப்படுகிறோம்; இது நாம் எதிர்ப்படும் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது. (மத்தேயு 24:45) மேலும் நாம் உலகளாவிய கிறிஸ்தவச் சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களாக இருக்கிறோம்; இது உண்மையில் மீதி உலகத்திலிருந்து நம்மை பிரித்து வைக்கிறது. (1 பேதுரு 2:17) (3) யெகோவா நமக்கு இனிமேல் என்ன செய்யப்போகிறாரோ அதற்காகவும் அவர்மீது நாம் அன்புகாட்டுகிறோம். அவருடைய அன்பின் காரணமாக, நாம் “உண்மை ஜீவனைப் பற்றிக்கொண்டு” இருக்கிறோம்—வருங்காலத்தில் நித்திய ஜீவன். (1 தீமோத்தேயு 6:12, 19, NW) நம் சார்பில் யெகோவாவின் அன்பை நாம் சிந்திக்கையில், மற்றவர்களிடம் அவரைப் பற்றியும் அவருடைய அருமையான நோக்கங்களைப் பற்றியும் சொல்வதில் மனமுவந்த பங்கைக் கொண்டிருக்கும்படி நம்முடைய இருதயங்கள் நம்மைத் தூண்டும்! மற்றவர்கள் நமக்கு நாம் ஊழியத்தில் என்ன செய்யவேண்டும் அல்லது எவ்வளவு செய்யவேண்டும் என்று சொல்ல தேவையிருக்காது. நாம் முடிந்ததைச் செய்யும்படி நம் இருதயங்கள் நம்மைத் தூண்டும்.
18, 19. ஊழியத்தில் பங்குபெறுவதற்காக என்ன தடங்கலை ஒரு சகோதரி மேற்கொண்டார்?
18 சவால்விடும் சூழ்நிலைகளிலுங்கூட, தேவபக்தியினால் தூண்டப்பட்ட இருதயம் பேசும்படி உந்துவிக்கும். (எரேமியா 20:9-ஐ ஒப்பிடுங்கள்.) அதிக கூச்ச சுபாவமுள்ள கிறிஸ்தவப் பெண்ணாகிய ஸ்டெல்லாவின் விஷயத்தில் இது எடுத்துக்காட்டப்படுகிறது. அவள் முதன்முதலாகப் பைபிள் படிக்க ஆரம்பித்தபோது, அவள் நினைத்தாள், ‘நான் ஒருபோதும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யமுடியாது!’ அவள் விளக்குகிறாள்: “நான் எப்போதும் அமைதலாய் இருந்தேன். நான் உரையாடலை ஆரம்பிப்பதற்காக ஒருபோதும் மற்றவர்களை அணுக முடியாது.” அவள் தொடர்ந்து படித்தபோது, யெகோவாமீது அவளுடைய அன்பு அதிகரித்தது; அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் ஓர் அனலான ஆசையை அவள் வளர்த்தாள். “எனக்குப் பைபிள் சொல்லிக் கொடுத்தவரிடத்தில் நான் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது, ‘நான் எவ்வளவோ பேசத் துடிக்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லையே, இது உண்மையில் என்னைத் தொந்தரவு செய்கிறது.’ அவள் சொன்னதை நான் என்றைக்கும் மறக்கப்போவதில்லை: ‘ஸ்டெல்லா, நீ பேச விரும்புகிறாயே அதைக்குறித்து நன்றியுள்ளவளாய் இரு.’”
19 ஸ்டெல்லா சீக்கிரத்தில் அடுத்த வீட்டுக்காரப் பெண்ணிடம் பேச ஆரம்பித்தாள். பின்பு அவள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு படியை எடுத்தாள்—முதன்முதலாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொண்டாள். (அப்போஸ்தலர் 20:20, 21) அவள் நினைவிற்கு வருகிறது: “நான் பிரசங்கத்தை எழுதி வைத்துக்கொண்டேன். அதை எனக்கு முன்பாகவே நான் பிடித்திருந்தபோதிலும், என் குறிப்புத்தாளைப் பார்க்க எனக்கு அதிக பயமாய் இருந்தது!” இப்போது, 35 வருடங்கள் கழிந்தபின்பு, ஸ்டெல்லா இன்னும் கூச்ச சுபாவம் உடையவளாகத்தான் இருக்கிறாள். எனினும், அவளுக்கு வெளி ஊழியம் ரொம்பப் பிடிக்கும், அதில் அர்த்தமுள்ள பங்கைத் தொடர்ந்து வகித்து வருகிறாள்.
20. துன்புறுத்தலோ சிறைவாசமோகூட ஒப்புக்கொடுக்கப்பட்ட யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளின் வாய்களை அடைக்கமுடியாது என்று என்ன உதாரணம் காட்டுகிறது?
20 துன்புறுத்தலோ சிறைவாசமோகூட ஒப்புக்கொடுக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் வாய்களை அடைக்கமுடியாது. ஜெர்மனியின் எர்ன்ஸ்ட் மற்றும் ஹில்டிகார்ட் சலிகர் என்பவர்களின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்களுடைய விசுவாசத்தினால், நாசி சித்திரவதை முகாம்களிலும், கம்யூனிஸ்ட் சிறைச்சாலைகளிலும் இருவரும் மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட வருடங்களைக் கழித்தனர். சிறையிலுங்கூட மற்ற கைதிகளுக்குப் பிரசங்கஞ்செய்வதில் விடாப்பிடியாய் இருந்தனர். ஹில்டிகார்ட் ஞாபகத்திற்கு வந்தது: “விசேஷித்த வகையில் ஆபத்தானவளாக என்னை கைதி அதிகாரிகள் அடையாளப்படுத்தினர், ஏனென்றால், ஒரு பெண் பாதுகாப்பாளர் சொன்னப்பிரகாரம், நான் பைபிளைப் பற்றி நாள் முழுவதும் பேசினேனாம். எனவே, தனிச்சுரங்க அறையில் என்னைப் போட்டனர்.” இவர்கள் இறுதியில் விடுதலையளிக்கப்பட்டபோது, சகோதரர் மற்றும் சகோதரி சலிகர், கிறிஸ்தவ ஊழியத்திற்காகத் தங்களுடைய முழுநேரத்தையும் ஒதுக்கினர். சகோதரர் சலிகர் 1985-லும், அவருடைய மனைவி 1992-லும் மரிக்கும்வரை அவர்களிருவரும் உண்மையாகச் சேவித்தனர்.
21. நம் சகிப்புத்தன்மையோடே தேவபக்தியை கூட்டி வழங்க நாம் என்ன செய்யவேண்டும்?
21 நாம் மும்முரமாகக் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன்மூலமும், படிப்பதைப் போற்றுதலோடு தியானிப்பதற்கு நேரத்தை எடுப்பதன்மூலமும், நாம் யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவில் வளர்பவர்களாக இருப்போம். இது, காலப்போக்கில், தேவபக்தி என்ற அருமையான குணத்தை நாம் முழுமையான அளவில் பெறுவதற்கு உதவிசெய்யும். தேவபக்தியில்லாமல், கிறிஸ்தவர்களாக நமக்கு வரும் சோதனைகளைச் சகிப்பதற்கு வேறுவழி ஏதுமில்லை. எனவே, நாம் ‘நம்முடைய விசுவாசத்தோடே சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்குவதை,’ தொடர்ந்து செய்வதன்மூலம் அப்போஸ்தலன் பேதுருவின் ஆலோசனையைப் பின்பற்றுவோமாக.—2 பேதுரு 1:5-7, NW.
[அடிக்குறிப்புகள்]
a யுசெபியாவைப் பற்றி, உவில்லியம் பார்க்லே குறிப்பிடுகிறார்: “இந்த வார்த்தையின் செப்- (seb-) என்ற [மூலப்] பகுதியே பயபக்தி அல்லது வணக்கம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. நேர்த்தியான என்பதற்கான கிரேக்க வார்த்தை யு (Eu) ஆகும்; எனவே, யுசெபியா என்பது மிகச் சரியாகவும் நேர்த்தியானதாகவும் கொடுக்கப்படும் வணக்கம், பயபக்தி.”—புதிய ஏற்பாடு வார்த்தைகள்.
b கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நம்முடைய அறிவை அதிகரிப்பதற்கு எப்படிப் படிப்பது என்ற ஒரு கலந்தாலோசிப்பிற்கு காவற்கோபுரம் ஆகஸ்ட் 15, 1993, பக்கங்கள் 12-17-ஐப் பார்க்கவும்.
c முதிர்வயதான பெற்றோரிடமாகத் தேவபக்தியாய் எப்படி நடப்பது என்பதைப் பற்றிய முழு கலந்தாலோசிப்பிற்கு டிசம்பர் 1, 1987-ன் காவற்கோபுரம் காண்க.
உங்கள் பதில் என்ன?
◻ தேவபக்தி என்றால் என்ன?
◻ சகிப்புத்தன்மைக்கும் தேவபக்திக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
◻ தேவபக்தியை முயன்றுபெறுவதற்கான வழி என்ன?
◻ வீட்டில் ஒரு கிறிஸ்தவர் எப்படித் தேவபக்தியை அப்பியாசிக்கலாம்?
◻ நாம் ஊழியத்தில் என்ன செய்கிறோம் என்பதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கவேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
ரேவன்ஸ்பர்க்-லிருந்த நாசி சித்திரவதை முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் சகிப்புத்தன்மையையும் தேவபக்தியையும் காண்பித்தனர்