அவர்கள் இளம் செம்மறியாடுகளைப் பரிவுடன் மேய்க்கின்றனர்
வீட்டில் வாழும் விலங்குகளில் வீட்டில் வளர்க்கப்படும் செம்மறியாடுகளைப்போல அமைதியானவை வேறெதுவும் இல்லை. அநேக விலங்குகள் உணவுதேடி அலையவும், தங்களை உணவாக உட்கொள்ள வரும் பிராணிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும் தேவையான பலத்தையும் இயல்புணர்ச்சியையும் உடையதாக இருக்கின்றன, ஆனால் செம்மறி ஆடோ வித்தியாசமாக இருக்கிறது. இது தன்னைக் கொன்றுதின்கிறவற்றால் தாக்கப்படலாம்; தற்காப்புக்கு மிகச் சிறிதளவே திறமையுடையதாக இருக்கிறது. மேய்ப்பன் இல்லாமல், ஓர் ஆடு பயந்தும், ஆதரவற்றும் இருக்கிறது. மந்தையிலிருந்து விலகிப்போனால், எளிதில் காணாமல் போய்விடுகிறது. எனவே, சுலபமாக வழிநடத்தப்படும் செம்மறியாடுகள் தங்களுடைய மேய்ப்பனோடு ஒரு நெருங்கிய பற்றுதலைக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களைக் கொண்டிருக்கின்றன. அவனில்லையென்றால், அவை தப்பிப்பிழைப்பது அதிகக் கடினம். இந்தக் குணங்களின் காரணமாகவே, அப்பாவிகளை, கொடுமைப்படுத்தப்படுபவர்களை, பாதுகாப்பற்றவர்களை அடையாள அர்த்தத்தில் குறிப்பதற்காகச் செம்மறியாடுகள் என்று பைபிள் பயன்படுத்துகிறது.
நிச்சயமாகவே ஒரு மேய்ப்பனின் வெகுமதிகள் கடின முயற்சியினால் பெறப்படுகின்றன. அவனுடைய வாழ்க்கை எளிதான ஒன்றல்ல. அவன் வெப்பத்திற்கும் குளிருக்கும் ஆளாகிறான்; தூக்கமற்ற இரவுகளைக் கடக்கவேண்டியதிருக்கிறது. அவன் அடிக்கடி தன் சொந்த உயிரையும் பணயம் வைத்து கொன்றுதின்பவற்றிலிருந்து மந்தையைப் பாதுகாக்கவேண்டும். எனவே ஒரு மேய்ப்பன் மந்தையை ஒன்றாகக் கூட்டி வைக்கவேண்டும்; அவனுடைய அதிக நேரம் வழிதவறிப்போன அல்லது காணாமற்போன ஆடுகளைத் தேடுவதிலேயே போய்விடும். நோய்வாய்ப்பட்டதையும், காயப்பட்டதையும் அவன் பராமரிக்கவேண்டும். வலுக்குறைந்த அல்லது சோர்வுற்ற ஆட்டுக்குட்டிகளைச் சுமந்து செல்லவேண்டும். போதுமான அளவு உணவும், தண்ணீரும் கிடைக்கிறதா என்று எப்போதும் அக்கறை செலுத்தவேண்டும். மந்தையைப் பாதுகாப்பதற்காக வயல்வெளிகளில் ஒரு மேய்ப்பன் இராத்தங்குவது பொதுவான காரியமாக இருக்கிறது. எனவே, தைரியசாலியாகவும், ஊக்கந்தளராது உழைப்பவனாகவும், திறமையுடையவனாகவும் இருக்கும் ஒரு மனிதனின் சேவைகளைத் தேவைப்படுத்தும் ஒரு கடுமையான வாழ்க்கையாக மேய்த்தல் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுடைய கவனிப்பில் விடப்பட்டுள்ள மந்தைக்கு அவன் உண்மையான அக்கறையைச் செலுத்தக்கூடிய திறமையுடையவனாகவும் இருக்கவேண்டும்.
கடவுளுடைய மந்தையை மேய்த்தல்
பைபிள் கடவுளுடைய மக்களை எளிதில் வழிநடத்தப்படுகிற செம்மறியாடுகள் என்றும், அவர்களைக் கவனிப்பவர்களை மேய்ப்பர்கள் என்றும் குறிப்பிடுகிறது. யெகோவா தாமே ‘உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவர்.’ (1 பேதுரு 2:25) ஆடுகள் பரிவுடன் நடத்தப்படவேண்டும் என்று ‘நல்ல மேய்ப்பர்’ இயேசு கிறிஸ்து விரும்புவதை அப்போஸ்தலன் பேதுருவிடம் பின்வருமாறு அவர் சொன்னபோது வெளிக்காட்டினார்: ‘என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக.’ (யோவான் 10:11; 21:15-17) கிறிஸ்தவக் கண்காணிகள் ‘கடவுளுடைய சபையை மேய்ப்பதற்கு’ முக்கிய பொறுப்புடையவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28) மேலும் ஆவிக்குரிய மேய்ப்பர்களாக அவர்களுடைய வேலை, சொல்லர்த்தமான நல்ல மேய்ப்பனுடைய குணங்களைத் தேவைப்படுத்துகிறது—தைரியம், ஊக்கந்தளராமை, திறமை, மிக முக்கியமாக மந்தையின் நலத்திற்கு இருதயப்பூர்வமான அக்கறை.
கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலின் காலத்தில், யெகோவாவின் மக்களின் தேவைகளைக் கவனிக்கும்படி மேய்ப்பர்களாக நியமிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் அவர்களுடைய கடமைகளைச் செய்ய தவறினர். கடவுளுடைய மந்தை கடுந்துன்பத்தை அனுபவித்தது, மந்தையின் பெரும்பாகத்தினர் உண்மை வணக்கத்தை கைவிட்டனர். (எசேக்கியேல் 34:1-10) இன்று, கிறிஸ்தவ மண்டலத்தின் குருவர்க்கம் கிறிஸ்தவச் சபை என்று உரிமைபாராட்டும் சபையின் மேய்ப்பர்களாகத் தங்களை வர்ணித்துக்கொள்கிறார்கள். ஆனால் அதன் ஆவிக்குரிய நோய்வாய்ப்பட்ட நிலை, இயேசு பூமியில் இருந்தபோது, மக்களை கைவிட்டுவிட்டு, துர்ப்பிரயோகம் செய்த பொல்லாத வஞ்சகர்கள் போல குருவர்க்கம் இருப்பதை இது நிரூபிக்கிறது. கிறிஸ்தவ மண்டலத்தின் மதத் தலைவர்கள் ‘ஆடுகளுக்காகக் கவலைப்படாத,’ “கூலியாள்” போன்று இருக்கிறார்கள். (யோவான் 10:12, 13) அவர்கள் எவ்வகையிலும் கடவுளுடைய மந்தையை மேய்க்க விருப்பமுள்ளவர்களாக, திறமையுடையவர்களாக, அல்லது தகுதியுடையவர்களாக இல்லை.
உண்மையில் கவனிக்கும் மேய்ப்பர்கள்
யெகோவாவின் மந்தையை மேய்ப்பவர்கள் அனைவருக்கும் இயேசு பரிபூரண மாதிரியை வைத்தார். ஒவ்வொரு வழியிலும் அவர் அன்போடும், தயவோடும், பரிவோடும், உதவியாகவும் அவருடைய சீஷர்களுக்கு இருந்தார். தேவையில் இருந்தவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முன்வந்து செயல்பட்டார். இயேசு அதிகவேலையாகவும், அடிக்கடி களைத்தும் இருந்தபோதிலும் எப்போதும் அவர்களின் பிரச்னைகளுக்குச் செவிசாய்ப்பதற்கும் அவர்களுக்கு உற்சாகமளிப்பதற்கும் நேரமெடுத்துக்கொண்டார். அவர்களுக்காக தம்முடைய ஆத்துமாவை விரும்பி ஒப்புக்கொடுத்தது அன்பின் இறுதியான வெளிப்பாடாக இருந்தது.—யோவான் 15:13.
மந்தையைக் குறித்த இந்தப் பொறுப்பை இன்று, நியமிக்கப்பட்ட எல்லா சபை மூப்பர்களும், உதவி ஊழியர்களும் பகிர்ந்துகொள்கின்றனர். எனவே, மற்றொரு நாட்டிலிருக்கும் பொருளாதார வசதிகளை எளிதில் பெறும் வாய்ப்புகளும்கூட இந்தப் பொறுப்புள்ளவர்களில் பெரிய எண்ணிக்கையினரை அந்த நாட்டிற்கு போகும்படி தூண்டுவதில்லை; இதனால் அவர்கள் போதுமான உதவியும் மேற்பார்வையும் இன்றி சபைகளை விட்டுப்போவதில்லை. “கையாளுவதற்கு கடினமான பொல்லாத காலங்களில்” வாழ்வதால், மந்தைக்கு உற்சாகமும் வழிநடத்துதலும் தேவைப்படுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5, NW) “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்” திரிகிறவனாகிய சாத்தானுக்குச் சிலர் இரையாகக்கூடிய எப்போதும் இருக்கும் ஓர் அபாயம் இருக்கிறது. (1 பேதுரு 5:8) இப்போது இதுவரைக்கும் இருந்திராதளவில், கிறிஸ்தவ மேய்ப்பர்கள் ‘ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லவும், திடனற்றவர்களைத் தேற்றவும், பலவீனரைத் தாங்கவும்,’ செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) தடுமாறுகிறவர்களை மந்தையிலிருந்து வெளியே போய்விடாதபடி தடுப்பதற்கு எப்போதும் விழிப்புநிலை அவசியம்.—1 தீமோத்தேயு 4:1.
ஆடுக்கு எப்போது உதவி தேவை என்பதை மேய்ப்பன் எப்படித் தீர்மானிப்பது? வெளிப்படையாகத் தெரியக்கூடிய அடையாளங்களில் சில, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வரத் தவறுவது, வெளி ஊழியத்தில் ஓர் ஒழுங்கற்ற பங்கெடுப்பு, மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது. ஆடுகளின் நோக்குநிலையை மற்றும் அவர்களுடைய உரையாடல்களின் போக்கை உற்றுகவனிப்பதன்மூலமும் பலவீனங்கள் கண்டுபிடிக்கப்படலாம். அவர்கள் மற்றவர்களைக் குறித்து குறைகாண்பவர்களாக, ஒருவேளை மனக்கசப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். அவர்களுடைய உரையாடல்கள் ஆவிக்குரிய இலக்குகளுக்குப் பதிலாக, அளவுக்கதிகமாகப் பொருளாதார நாட்டங்களின்பேரில் இருக்கலாம். பொதுவான உற்சாகமின்மை, நம்பிக்கையின்மை, சந்தோஷமின்மை ஆகியவை அவர்களுடைய விசுவாசம் பலவீனமடைந்துவிட்டது என்பதை அர்த்தப்படுத்தலாம். சோர்வுற்ற முகத்தோற்றம், எதிர்க்கும் உறவினர்களால் அல்லது உலகப்பிரகாரமான நண்பர்களால் அழுத்தப்படுகிறார்கள் என்பதற்கு ஓர் அறிகுறியாக இருக்கக்கூடும். மேய்ப்பன் இந்த அறிகுறிகளை கண்டுகொள்வதன்மூலம் என்ன வகையான உதவி தேவை என்பதைத் தீர்மானிக்க முயற்சிசெய்யலாம்.
ஓர் உடன் விசுவாசிக்கு உதவிசெய்ய விஜயம்செய்யும்போது, கிறிஸ்தவ மேய்ப்பர்கள் அவர்களுடைய முக்கியமான நோக்கத்தை மனதில் வைக்கவேண்டும். அது வெறுமனே அற்ப காரியங்களைக் குறித்துப் பேசப்படும் ஒரு சாதாரண விஜயம் அல்ல. அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சகோதரர்களைச் சந்தித்ததற்கான நோக்கம், ‘அவர்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை அவர்களுக்குக் கொடுப்பதும், அவர்களோடேகூட தானும் ஆறுதலடைவதும்’ ஆக இருந்தது. (ரோமர் 1:10, 11) இதை நிறைவேற்றுவதற்கு முன்தயாரிப்பு அவசியம்.
முதலாவதாக, தனிப்பட்ட நபரை ஆய்வுசெய்யுங்கள்; அவருடைய ஆவிக்குரிய நிலை என்ன என்பதைத் தீர்மானியுங்கள். இதைத் தீர்மானித்தப்பிறகு, எப்படிப்பட்ட வழிநடத்துதல், உற்சாகம், அல்லது ஆலோசனை அதிகப் பிரயோஜனமானதாக இருக்கும் என்பதைப்பற்றி சிறிது யோசித்துப்பாருங்கள். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள்தானே தகவலின் மூல ஆதாரமாக இருக்கவேண்டும், ஏனென்றால் அது ‘வல்லமை உள்ளதாய்’ இருக்கிறது. (எபிரெயர் 4:12) விசேஷித்த பிரச்னைகளை எதிர்ப்படும் ஆடுகளின் பிரத்யேகமான தேவைகளைக் குறித்து கலந்தாராயும் கட்டுரைகளுக்காக காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை நோக்கலாம். கிளர்ச்சியூட்டுகிற, புத்துயிரளிக்கும் அனுபவங்களை இயர்புக் ஆப் ஜெஹோவாஸ் உவிட்னஸஸ் புத்தகத்தில் கண்டுபிடிக்கலாம். நோக்கம் என்னவென்றால், ‘பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி’ ஆவிக்குரிய ஒன்றைக் கொடுப்பதாகும்.—ரோமர் 15:2.
பக்திவிருத்திக்கேதுவாக இருக்கிற மேய்த்தல்
சொல்லர்த்தமான செம்மறியாடுகளின் மந்தையையுடைய மேய்ப்பன், அவை பாதுகாப்பிற்காகவும் பராமரிப்பிற்காகவும் தன்னைச் சார்ந்திருக்கின்றன என்று அறிந்திருக்கிறான். மிகப் பொதுவான இன்னல்கள், வழிதவறிப்போனதால், சுகவீனமடைந்ததால், சோர்வினால், காயப்பட்டதால், கொன்றுதின்பவைகளால் வருகின்றன. இதைப்போலவே, ஆவிக்குரிய மேய்ப்பன் இப்படிப்பட்ட இன்னல்களைப் புரிந்துகொண்டு, மந்தையின் செழுமைக்கு பயமுறுத்துதலைக் கொண்டுவருபவற்றை கையாளவேண்டும். சில தனிப்பட்ட பிரச்னைகளும், ஆவிக்குரிய வகையில் பக்திவிருத்திக்கேதுவாக என்ன குறிப்புகள் சொல்லப்படலாம் என்பதைப் பற்றிய சில யோசனைகளும் பின்னால் கொடுக்கப்படுகின்றன.
(1) விழிப்பாயிராத ஆடுகளைப்போல, சில கிறிஸ்தவர்கள் கடவுளுடைய மந்தையிலிருந்து வழிதவறிப் போகின்றனர்; ஏனென்றால் தீங்கற்றதுபோல் மற்றும் இன்பந்தருவதுபோல் தோன்றுகிற கவர்ச்சிகளினால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். பொருள், பொழுதுபோக்கு, அல்லது களியாட்டங்கள் போன்றவற்றோடு தொடர்புடைய இலக்குகளைத் தேடியலைவதினால், அவர்கள் கவனமிழந்து, இழுக்கப்பட்டுப் போய்விடலாம். (எபிரெயர் 2:1) அப்படிப்பட்ட தனிப்பட்டவர்களுக்குக் காலத்தின் அவசரத்தன்மையையும், யெகோவாவின் அமைப்போடு நெருங்கியிருப்பதற்கான தேவையையும், வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளை முதலில் வைப்பதன் முக்கியத்துவத்தையும் ஞாபகப்படுத்தலாம். (மத்தேயு 6:25-33; லூக்கா 21:34-36; 1 தீமோத்தேயு 6:8-10) உதவியாக இருக்கும் ஆலோசனை, காவற்கோபுரம் ஏப்ரல் 1, 1985, பக்கங்கள் 8-11-ல் உள்ள “உங்கள் சமநிலையை காத்துக்கொள்ளுங்கள்—எப்படி?” என்ற கட்டுரையில் காணலாம்.
(2) சுகவீனமடைந்திருக்கும் ஆடுகளுக்கு மேய்ப்பன் சிகிச்சைக் கொடுக்கவேண்டும். இதைப்போலவே, வாழ்க்கையின் எதிர்மறையான அம்சங்களால் ஆவிக்குரிய வகையில் சுகவீனமாயிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய மேய்ப்பர்கள் உதவிசெய்யவேண்டும். (யாக்கோபு 5:14, 15) அவர்கள் ஒருவேளை வேலையில்லாதிருக்கலாம், ஒருவேளை வினைமையான உடல்நல கோளாறு உடையவராக இருக்கக்கூடும், அல்லது அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிக்கிறவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்ட நபர்கள் ஆவிக்குரிய உணவிற்கு அல்லது கடவுளுடைய மக்களோடு கூட்டுறவுகொள்வதற்கு சிறிதளவே பசிதாகமுடைவர்களாக இருப்பார்கள். இதன்விளைவாக, தனியாகப் பிரிதலும் உற்சாகமின்மையும் ஏற்படுகிறது. அவர்கள்மீது யெகோவா அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்றும் கஷ்டமான காலங்களைச் சமாளிக்க உதவிசெய்கிறார் என்றும் அவர்கள் உறுதிசொல்லப்படவேண்டிய தேவையிருக்கிறது. (சங்கீதம் 55:22; மத்தேயு 18:12-14; 2 கொரிந்தியர் 4:16-18; 1 பேதுரு 1:6, 7; 5:6, 7) காவற்கோபுரம் மார்ச் 1, 1982, பக்கங்கள் 21-25-ல் காணப்படும் “ஒரு கிறிஸ்தவனாக நேராக முன்னால் நோக்கியிருங்கள்” என்ற கட்டுரையையும் மறுபார்வையிடுவது உதவியாக இருக்கக்கூடும்.
(3) சோர்வடைந்துபோகும் ஆடுகளைக் குறித்து விழிப்புள்ளவனாக மேய்ப்பன் இருக்கவேண்டியதிருக்கிறது. சிலர் பல வருடங்களை யெகோவாவின் சேவையில் உண்மையோடு சகித்திருக்கின்றனர். அவர்கள் பல பரீட்சைகள் மற்றும் சோதனைகளினூடே போராடி வந்திருக்கின்றனர். இப்பொழுது நன்றாகச் செய்வதில் சோர்வடைந்தவர்களாக இருப்பதற்குரிய அடையாளங்களை அவர்கள் காண்பிக்கிறார்கள், தீவிரமான பிரசங்கவேலை தேவையா என்பதைப் பற்றியும் சந்தேகங்களை எழுப்பக்கூடும். அவர்களுடைய ஆவிக்கு உயிரூட்டுதல் தேவையாக இருக்கிறது; இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, கடவுளுக்கு முழு இருதய சேவையைச் செய்வதன்மூலம் வரும் சந்தோஷங்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் அவர்களுடைய போற்றுதலைப் புதுப்பிக்கவேண்டும். (கலாத்தியர் 6:9, 10; எபிரெயர் 12:1-3) யெகோவா அவர்களுடைய உண்மைமாறாத சேவையைப் போற்றுகிறார்; அவருடைய துதியில் விளைவடையப்போகும் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அவர் அவர்களைப் பலப்படுத்த முடியும் என்பதைக் காண அவர்கள் உதவப்படலாம். (ஏசாயா 40:29, 30; எபிரெயர் 6:10-12) தி உவாட்ச்டவர் ஜூலை 15, 1988 பக்கங்கள் 9-14-ல் வந்துள்ள “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக,” என்ற கட்டுரையிலிருந்து குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வது பிரயோஜனமானதாக இருக்கக்கூடும்.
(4) காயமடையும் ஆடுகளைப்போல, சில கிறிஸ்தவர்கள் அவமதிப்பான நடத்தை என்று தங்கள் மனதால் உணர்ந்த ஒன்றினால் புண்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனாலும், நாம் மற்றவர்களை மன்னிக்கிறவர்களாய் இருந்தால், பரலோகப் பிதா நமக்குத் தேவையான மன்னிப்பை அருளுவார். (கொலோசெயர் 3:12-14; 1 பேதுரு 4:8) சில சகோதரர்களோ சகோதரிகளோ தாங்கள் அநீதியானது என்று உணர்ந்த ஆலோசனையை அல்லது சிட்சையைப் பெற்றிருக்கலாம். ஆனாலும், நாமனைவருமே ஆவிக்குரிய ஆலோசனையினாலும், சிட்சையினாலும் பயனடைய முடியும்; மேலும் யெகோவா தாம் அன்புசெலுத்துகிறவர்களைச் சிட்சிக்கிறார் என்று அறிவது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. (எபிரெயர் 12:4-11) அவர்கள் தகுதியுடையவர்களாக இருப்பதாக நினைக்கும் ஊழியச் சிலாக்கியங்கள் தரப்படாததால், மற்றவர்கள் தங்களுக்கும் சபைக்கும் இடையே ஒருவிதப் பிளவை உண்டாக்குவதற்கு மனக்கசப்பை அனுமதித்திருக்கின்றனர். ஆனால் நாம் யெகோவாவின் அமைப்பிலிருந்து பிரிந்து செல்கிறோமென்றால், ரட்சிப்படையவும் உண்மையான சந்தோஷத்தைப் பெறும்படியும் போவதற்கு நமக்கு வேறு எந்த இடமும் இருக்கப்போவதில்லை. (யோவான் 6:66-69-ஐ ஒப்பிடுங்கள்.) இதன் சம்பந்தமான உதவியளிக்கும் குறிப்புகள், “நம்முடைய கிறிஸ்தவ ஒருமையைக் காத்துக்கொள்தல்,” என்ற கட்டுரையில், தி உவாட்ச்டவர் ஆகஸ்ட் 15, 1988, பக்கங்கள் 28-30-ல் காணலாம்.
(5) ஆடுகள் கொன்றுதின்பவைகளிடமிருந்து காக்கப்படவேண்டும். இதைப்போலவே, விசுவாசத்தில் இல்லாத உறவினர்கள் அல்லது உடன் வேலையாட்கள் போன்றவர்களால் சிலர் எதிர்க்கப்படலாம், மிரட்டப்படலாம். கடவுளுக்குச் செய்யும் அவர்களுடைய சேவையைக் கட்டுப்படுத்த அல்லது கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதைத் தடுத்துநிறுத்த அழுத்தங்கள் வருகையில் அவர்களுடைய உத்தமத்தன்மை தாக்குதலின் கீழ் வரக்கூடும். இருந்தாலும், எதிர்ப்பு எதிர்பார்க்கப்படவேண்டியதே என்றும், அது நாம் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாய் இருப்பதற்கான சான்றுகளில் ஒன்று என்றும் அதை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவிசெய்யப்படுகையில் அவர்கள் பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். (மத்தேயு 5:11, 12; 10:32-39; 24:9; 2 தீமோத்தேயு 3:12) அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், யெகோவா ஒருபோதும் அவர்களைக் கைவிடுவதில்லை, அவர்களுடைய சகிப்புத்தன்மைக்குப் பலனளிப்பார் என்பதைச் சுட்டிக்காட்டுவது பிரயோஜனமாய் இருக்கலாம். (2 கொரிந்தியர் 4:7-9; யாக்கோபு 1:2-4, 12; 1 பேதுரு 5:8-10) “துன்புறுத்துதலின் மத்தியில் சந்தோஷத்தோடு சகித்திருத்தல்” என்று தலைப்பிடப்பட்ட தி உவாட்ச்டவர் ஏப்ரல் 15, 1982, பக்கங்கள் 21-7-ல் உள்ள கட்டுரை கூடுதலான உற்சாகத்தைக் கொடுக்கும்.
மேய்ப்பர்களே —உங்களுடைய பொறுப்பை நிறைவேற்றுங்கள்
கடவுளுடைய மந்தையின் தேவைகள் அதிகம், நியாயமான கவனிப்பு கஷ்டமான வேலையாக இருக்கிறது. எனவே, கிறிஸ்தவ மேய்ப்பர்கள் பரிவோடு, உண்மையில் அக்கறை கொண்டவர்களாகவும், உதவியாக இருப்பதற்கு ஆர்வமுடையவர்களாகவும் இருக்கவேண்டும். பொறுமை மற்றும் பகுத்துணர்வு முக்கியமானவை. சிலருக்குப் புத்திமதியும் எச்சரிப்பும் தேவையாய் இருக்கிறது, மற்றவர்கள் உற்சாகத்தினால் அதிகப் பயனைப் பெறுகிறார்கள். சிலருடைய காரியங்களில் சில தனிப்பட்ட விஜயங்கள் போதுமானதாக இருக்கும். மற்றவர்களுக்கோ ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பு அவசியமாய் ஒருவேளை இருக்கலாம். எதுவாயினும் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஆவிக்குரிய பக்திவிருத்திக்கேதுவான வழிநடத்துதலை அல்லது அன்பான ஆலோசனையைக் கொடுப்பதுதான்; இது தனிப்பட்டவரை நல்ல படிப்பு பழக்கங்களை ஆரம்பிக்கவும், சபைக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து ஒழுங்காக வரவும், கிறிஸ்தவ ஊழியத்தில் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருப்பதற்கும் தூண்டிவிடும். உடன் விசுவாசிகளுக்கு உதவிசெய்யும் பிரதான வழிகள் இவை; யெகோவாவின் பரிசுத்த ஆவி தாராளமாகச் செயல்படுவதற்கு ஒரு வழியை ஆயத்தம்பண்ண இவை அவர்களுக்கு உதவுகின்றன.
இப்படிப்பட்ட உதவியைக் கொடுக்கிற மேய்ப்பர்கள் கடவுளுடைய மந்தையின் சார்பாக அதிக மதிப்புமிக்க சேவையைச் செய்கின்றனர். (தி உவாட்ச்டவர் நவம்பர் 15, 1985, பக்கங்கள் 23-7-ஐப் பார்க்கவும்.) ஆவிக்குரிய மேய்ப்பர்கள் செய்வது, மந்தையினால் மிக அதிகமாகப் போற்றப்படுகிறது. இப்படிப்பட்ட உதவியைப் பெற்றபின், ஒரு குடும்பத் தலைவர் சொன்னார்: ‘நாங்கள் 22 வருடங்களாகச் சத்தியத்தில் இருந்துவந்தப் பிறகு, உலகத்திற்குள் பொருளாசையினால் இழுக்கப்பட்டோம். அடிக்கடி கூட்டங்களுக்கு வர விரும்பினோம், ஆனால் அதைச் செய்வதில் நாங்கள் வெற்றியடையவில்லை. நாங்கள் சாத்தானின் ஒழுங்குமுறையிலும் சரியாகப் பொருந்தவில்லை; எனவே, நாங்கள் முற்றிலும் தொடர்பற்றவர்களாக, தனிப்பட்டுப்போனோம். இது எங்களை ஏமாற்றமும், சோர்வும் அடையும்படி செய்தது. எங்களுக்கு உற்சாகமான வார்த்தைகள் தேவைப்பட்டன. ஒரு மூப்பர் எங்களைச் சந்திக்க வந்தபோது, எங்களுடைய வீட்டில் ஒரு பைபிள் படிப்பிற்காகச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டோம். இன்று நாங்களனைவரும் யெகோவாவின் பாதுகாப்பான அமைப்பிற்குள் மீண்டும் வந்துவிட்டிருக்கிறோம். நான் உணரும் சந்தோஷத்தை என்னால் சொல்லமுடியவில்லை!’
நம்முடைய வழிதவறிய அல்லது உற்சாகமிழந்த சகோதரர்களும் சகோதரிகளும் ஆவிக்குரிய வகையில் புதுப்பிக்கப்பட்டு, புத்துணர்வூட்டப்படும்போது, அது அதிகச் சந்தோஷத்திற்கு காரணமாக இருக்கிறது. (லூக்கா 15:4-7) யெகோவாவின் மக்களைப் பற்றிய அவருடைய நோக்கம், “தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய்” அவர்கள் ஒன்றுபட்டிருக்கும்போது நிறைவேற்றமடைகிறது. (மீகா 2:12) இந்தப் பாதுகாப்பான புகலிடத்தில், நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் உதவியோடு, அவர்கள் ‘தங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் காண்கின்றனர்.’ (மத்தேயு 11:28-30) ஐக்கியப்பட்ட உலகளாவிய மந்தை வழிநடத்துதல், ஆறுதல், பாதுகாப்பு ஆகியவற்றை, அபரிமிதமான ஆவிக்குரிய உணவோடு பெறுகிறது.
இந்த மேய்க்கும் செயலின்மூலமாக இன்று, யெகோவா தம்முடைய பூர்வீக வாக்குறுதிக்கு இணக்கமாக ஓர் அன்பான வேலையை செய்துமுடிக்கப் பெற்றவராக இருப்பார்: “நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். . . . அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணுவேன். . . . அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன். . . . நான் காணாமற்போனதைத் தேடி, . . . எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்.” (எசேக்கியேல் 34:11-16) யெகோவா நம்முடைய மேய்ப்பர் என்று அறிவதில் என்னே ஆறுதல் இருக்கிறது!—சங்கீதம் 23:1-4.
கடவுளுடைய மந்தையை மேய்ப்பதற்கான தெய்வீக ஏற்பாடுகளின் காரணமாக, யெகோவாவின் ஊழியர்களாகத் தாவீதின் உணர்வுகளில் நாம் பங்குகொள்ளலாம், அவர் சொன்னார்: “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” (சங்கீதம் 4:8) ஆம், யெகோவாவின் மக்கள் அவருடைய அன்பான கவனிப்பில் பாதுகாப்பாய் உணர்கிறார்கள்; மேலும் கிறிஸ்தவ மூப்பர்கள் பரிவோடு இளம் ஆடுகளை மேய்ப்பதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.