உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • bh அதி. 19 பக். 184-193
  • கடவுளுடைய அன்பிலே நிலைத்திருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய அன்பிலே நிலைத்திருங்கள்
  • பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய அன்பைப் புரிந்துகொண்டு அதைப் பிரதிபலியுங்கள்
  • யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கி வாருங்கள்
  • கடவுளை வணங்குவதில் மகிழ்ச்சி காணுங்கள்
  • “உண்மையான வாழ்வை” அடைய முயலுங்கள்
  • எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருங்கள்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • உங்களை நேசிக்கிற கடவுளை நேசியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • ‘யெகோவாமீது அன்பு காட்டுங்கள்’
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • அன்பிலே வளருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
bh அதி. 19 பக். 184-193

அதிகாரம் பத்தொன்பது

கடவுளுடைய அன்பிலே நிலைத்திருங்கள்

  • கடவுளிடம் அன்பு செலுத்துவது என்றால் என்ன?

  • கடவுளுடைய அன்பிலே நாம் எப்படி நிலைத்திருக்கலாம்?

  • தம்முடைய அன்பிலே நிலைத்திருப்பவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிப்பார்?

ஒருவர் புயல் அடிக்கும்போது பாதுகாப்பான இடத்தை தேடுகிறார்

புயல்காற்றைப் போன்ற கொந்தளிப்பான இந்தக் காலங்களில், யெகோவாவை உங்கள் அடைக்கலமாக ஆக்கிக்கொள்வீர்களா?

1, 2. இன்று நமக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிற ஓர் இடத்தைப் போல் இருப்பது யார்?

புயலடிக்கும் காலத்திலே நீங்கள் ஒரு சாலையில் நடந்துசென்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். வானம் இருண்டு வருகிறது. மின்னல் அடிக்கிறது, இடி இடிக்கிறது, பிறகு சோவென்று மழை கொட்டுகிறது. புகலிடம் தேடி நீங்கள் ஓட்டம் பிடிக்கிறீர்கள். அப்போது, பாதுகாப்பான ஓர் இடத்தை அந்தச் சாலையோரத்தில் பார்க்கிறீர்கள். அது உறுதியான கட்டிடமாக இருக்கிறது, ஈரமில்லாமல் காய்ந்து இருக்கிறது, கைநீட்டி வரவேற்பது போலவும் இருக்கிறது. அடைக்கலம் தருகிற அந்த இடத்தைக் கண்டு எவ்வளவாய் நிம்மதி அடைவீர்கள்!

2 புயல்காற்றைப் போன்ற கொந்தளிப்பான காலங்களில் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். உலக நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. என்றாலும், நமக்கு எந்தவொரு நிரந்தர பாதிப்பும் ஏற்பட்டு விடாதபடி அடைக்கலம் தந்து பாதுகாக்கிற ஓர் இடம் இருக்கிறது. அது எது? பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைக் கவனியுங்கள்: ‘நான் யெகோவாவை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.’—சங்கீதம் 91:2.

3. யெகோவாவை எவ்வாறு நம்முடைய அடைக்கலமாக ஆக்கிக்கொள்ளலாம்?

3 சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்! சர்வலோகப் பேரரசரும் சிருஷ்டிகருமான யெகோவா நம்மைப் பாதுகாக்கிற ஓர் அடைக்கலமாக இருக்க முடியும். நமக்குத் தீங்கு விளைவிக்கும் எவரைக் காட்டிலும் அல்லது எதைக் காட்டிலும் அவர் மிக மிக சக்தி வாய்ந்தவராய் இருப்பதால், கண்டிப்பாக அவரால் நமக்குப் பாதுகாப்பளிக்க முடியும். அப்படியே நமக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலும்கூட, அதன் மோசமான பாதிப்புகளையெல்லாம் அவரால் மாற்றிவிட முடியும். அப்படியானால், யெகோவாவை எவ்வாறு நம்முடைய அடைக்கலமாக நாம் ஆக்கிக்கொள்ளலாம்? அவரை நாம் நம்ப வேண்டும். அதோடு, ‘அவருடைய அன்பிலே நிலைத்திருக்கவும்’ வேண்டும் என்று அவரது வார்த்தை நமக்குச் சொல்கிறது. (யூதா 21, NW) ஆம், நம்முடைய பரலோகத் தகப்பனோடு நமக்குள்ள அன்பான பந்தத்தைக் கட்டிக்காத்து, அவருடைய அன்பிலே நிலைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்வோமானால், அவர் நமக்கு அடைக்கலமாக இருப்பார் என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம். ஆனால், அத்தகைய பந்தத்தை நாம் எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது?

கடவுளுடைய அன்பைப் புரிந்துகொண்டு அதைப் பிரதிபலியுங்கள்

4, 5. யெகோவா தம் அன்பை வெளிக்காட்டியுள்ள சில வழிகள் யாவை?

4 கடவுளுடைய அன்பிலே நிலைத்திருப்பதற்கு, அவர் நம்மீது எந்தெந்த வழிகளில் அன்பு செலுத்தியிருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்புத்தகத்தின் உதவியுடன் நீங்கள் கற்றிருக்கும் பைபிள் போதனைகள் சிலவற்றைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிருஷ்டிகராய், யெகோவா நமக்கு இந்தப் பூமியை ஓர் அழகிய வீடாகக் கொடுத்திருக்கிறார். அதில் ஏராளமான உணவுப் பொருட்களையும், தண்ணீரையும், இயற்கை வளங்களையும், வியப்பூட்டும் மிருகங்களையும், எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளையும் நிரப்பியிருக்கிறார். பைபிளின் நூலாசிரியராக, அதில் தமது பெயரையும் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, தம்முடைய நேச மகனான இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பி, நமக்காகப் பாடுபட்டு மரிக்க அனுமதித்ததைப் பற்றியும் அதில் வெளிப்படுத்தியிருக்கிறார். (யோவான் 3:16) மீட்கும்பொருளாகிய அந்தப் பரிசு நமக்கு எதை அளிக்கிறது? மகத்தான ஓர் எதிர்கால நம்பிக்கையை அளிக்கிறது.

5 அந்த எதிர்கால நம்பிக்கை, கடவுள் செய்துள்ள வேறொரு ஏற்பாட்டின் மீதும் சார்ந்திருக்கிறது. பரலோக அரசாங்கம் ஒன்றை, அதாவது மேசியானிய ராஜ்யம் ஒன்றை, யெகோவா நிறுவியிருக்கிறார். கூடிய விரைவில் அது எல்லாத் துன்பங்களுக்கும் முடிவுகட்டி, இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றும். ஆஹா, அது எவ்வளவு அருமையாக இருக்கும்! சமாதானமாயும் சந்தோஷமாயும் என்றென்றைக்கும் அதில் நாம் வாழலாம். (சங்கீதம் 37:29) இதெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போதே மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதற்கான வழிநடத்துதலைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஜெபம் என்ற பரிசையும் நமக்குக் கொடுத்திருக்கிறார், இதன் மூலம் எந்தத் தடையுமில்லாமல் எந்த நேரத்திலும் நாம் அவரிடம் பேச முடியும். தனி நபராக உங்கள் மீதும் பொதுவாக எல்லா மனிதர்கள் மீதும் யெகோவா தம் அன்பை வெளிக்காட்டியுள்ள வழிகளில் இவை சில மட்டுமே.

6. யெகோவா உங்கள் மீது காட்டியுள்ள அன்புக்குப் பிரதிபலனாக நீங்கள் என்ன செய்யலாம்?

6 நீங்கள் சிந்திக்க வேண்டிய முக்கிய கேள்வி, ‘யெகோவாவின் அன்புக்குப் பிரதிபலனாக நான் என்ன செய்வேன்?’ என்பதே. “யெகோவாவின் அன்புக்குப் பிரதிபலனாக நான் அவரிடம் அன்பு காட்ட வேண்டும்” என அநேகர் சொல்வார்கள். நீங்களும் அப்படித்தான் உணருகிறீர்களா? “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்பதே எல்லாக் கட்டளைகளையும்விட மிகப் பெரிய கட்டளை என இயேசு சொன்னார். (மத்தேயு 22:37) யெகோவா தேவனிடம் அன்பு காட்ட நிச்சயமாகவே உங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் அன்புகூருவதற்கு அத்தகைய அன்பு இருப்பதாக உணர்வது மட்டுமே போதுமானதா?

ஆப்பிள் விதை

7. கடவுள் மீது அன்பு இருக்கிறதென சொல்வதற்கு, அதைப் பற்றிய உணர்வு மட்டுமே இருந்தால் போதுமா? விளக்கவும்.

7 பைபிளில் விளக்கப்பட்டுள்ளபடி, கடவுள் மீதான அன்பு வெறும் ஓர் உணர்வல்ல, அதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. யெகோவாவிடம் அன்பு காட்ட வேண்டுமென்ற உணர்வு அவசியம்தான் என்றாலும், அவர் மீதுள்ள உண்மையான அன்புக்கு அத்தகைய உணர்வு ஓர் ஆரம்பம் மட்டுமே. ஆப்பிள் மரம் ஒன்று வளருவதற்கு ஓர் ஆப்பிள் விதை அவசியம். ஆனால், ஆப்பிள் சாப்பிட வேண்டும் போல் இருக்கையில், யாராவது ஒருவர் உங்களுக்கு ஓர் ஆப்பிள் விதையை மட்டுமே கொடுத்தால் உங்களுக்குச் சந்தோஷமாக இருக்குமா? நிச்சயம் இருக்காது! அதுபோல, யெகோவா தேவனிடம் அன்பு காட்ட வேண்டுமென்ற உணர்வு மட்டும் இருந்தால் போதாது, அது ஓர் ஆரம்பமே. பைபிள் இவ்வாறு கற்பிக்கிறது: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) கடவுள் மீது நமக்குள்ள அன்பு உண்மையானதாக இருந்தால், அது நல்ல கனிகளைக் கொடுக்க வேண்டும். அத்தகைய அன்பைச் செயல்களில் காண்பிக்க வேண்டும்.—மத்தேயு 7:16-20.

8, 9. கடவுளுக்கு நம்முடைய அன்பையும் நன்றியையும் எப்படிக் காண்பிக்கலாம்?

8 கடவுள் மீது நமக்கு அன்பு இருப்பதை அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கையிலும் அவருடைய நியமங்களைப் பின்பற்றுகையிலும் காண்பிக்கிறோம். அவ்வாறு செய்வது கடினமான காரியமல்ல. ஏனெனில் அவருடைய சட்டங்கள் பாரமானவை அல்ல, மாறாக இனிமையான, சந்தோஷமான, திருப்தியான வாழ்க்கை வாழ்வதற்கென்றே அவை வகுக்கப்பட்டுள்ளன. (ஏசாயா 48:17, 18) நம் பரலோகத் தந்தையான யெகோவாவுடைய வழிநடத்துதலுக்கு இசைவாக வாழ்வதன் மூலம், அவர் நமக்குச் செய்துள்ள எல்லாக் காரியங்களுக்கும் நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருப்பதைக் காண்பிக்கிறோம். வருத்தகரமாக, இன்று வெகு சிலரே அப்படிப்பட்ட நன்றியைக் காண்பிக்கிறார்கள். இயேசு பூமியிலிருந்தபோது வாழ்ந்த சில நன்றிகெட்ட ஆட்களைப் போல் இருக்க நாம் விரும்ப மாட்டோம். அவர் பத்து குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார், ஆனால் அவர்களில் ஒருவன் மட்டுமே அவருக்கு நன்றிசொல்ல திரும்பி வந்தான். (லூக்கா 17:12-17) நன்றியுள்ள அந்த ஆளைப் போல் இருக்கவே நாம் நிச்சயம் விரும்புவோம், நன்றிகெட்ட அந்த ஒன்பது பேரைப் போல் அல்ல!

9 அப்படியானால், நாம் கடைப்பிடிக்க வேண்டிய யெகோவாவின் கட்டளைகள் யாவை? அவருடைய அநேக கட்டளைகளைக் குறித்து இந்தப் புத்தகத்தில் நாம் கலந்தாலோசித்திருக்கிறோம், ஆனால் இப்போது சிலவற்றை திரும்ப நம் நினைவுக்குக் கொண்டு வரலாம். கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது அவருடைய அன்பிலே நிலைத்திருக்க நமக்கு உதவும்.

யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கி வாருங்கள்

10. யெகோவா தேவனைப் பற்றிய அறிவை எடுத்துக்கொண்டே இருப்பது ஏன் முக்கியமென்று விளக்குங்கள்.

10 யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கான மிக முக்கிய படி அவரைப் பற்றிக் கற்றுக்கொள்வதாகும். அதை விடாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும். நடுநடுங்க வைக்கும் ஓர் இரவில் நீங்கள் வெளியே குளிர்காய்ந்து கொண்டிருக்கும்போது, அந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து போவதற்கு விடுவீர்களா? நிச்சயம் விடமாட்டீர்கள். அந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதற்கு அதில் எரிபொருளைச் சேர்த்துக்கொண்டேதான் இருப்பீர்கள். ஒருவேளை உங்கள் உயிரே அதன் மீது சார்ந்திருக்கலாம்! நெருப்பு தொடர்ந்து எரிவதற்கு எப்படி விறகு உதவுகிறதோ, அப்படியே யெகோவா மீதான நம் அன்பு பலமாகக் கொழுந்துவிட்டு எரிவதற்கு ‘தேவனை அறியும் அறிவு’ உதவுகிறது.—நீதிமொழிகள் 2:1-5.

நெருப்பு மூட்டி குளிர் காய்கிறார், அதில் இன்னும் விறகு போடுகிறார்

நெருப்பு அணையாதிருப்பதற்கு எரிபொருள் தேவைப்படுவது போல், யெகோவா மீது உங்களுக்குள்ள அன்பு அணையாதிருப்பதற்கு ‘எரிபொருள்’ தேவை

11. இயேசு கற்பித்த விஷயம் அவருடைய சீஷர்களை எப்படி உணர வைத்தது?

11 யெகோவா மீதும் அவருடைய அருமையான சத்திய வார்த்தை மீதும் உள்ள அன்பைத் தம்முடைய சீஷர்கள் அணையாமல் கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டுமென இயேசு விரும்பினார். உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, எபிரெய வசனங்களில் தம்மைக் குறித்து சொல்லப்பட்டிருந்த சில தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றம் அடைந்ததைப் பற்றி தம் சீஷர்கள் இருவருக்கு இயேசு கற்பித்தார். அப்போது அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று பிற்பாடு அவர்கள் சொன்னார்கள்.—லூக்கா 24:32.

12, 13. (அ) இன்று பெரும்பாலோர் மத்தியில், கடவுள் மீதும் பைபிள் மீதுமான அன்புக்கு என்ன ஆகியிருக்கிறது? (ஆ) நம்முடைய அன்பு தணிந்துபோய் விடாதபடி நாம் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

12 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை முதன்முதலில் நீங்கள் தெரிந்துகொண்டபோது, மகிழ்ச்சி, ஆர்வம், கடவுள் மீதுள்ள அன்பு ஆகியவற்றால் உங்கள் இருதயம் கொழுந்துவிட்டு எரிவது போல் இருந்ததா? ஆம், சந்தேகமில்லாமல் அப்படித்தான் இருந்திருக்கும். அநேகர் அவ்வாறே உணர்ந்திருக்கிறார்கள். அந்தப் பலமான அன்பைத் தொடர்ந்து எரியவிடுவதும், அதை அதிகமதிகமாக வளர்ப்பதுமே இப்போது நமக்குள்ள சவால். ஏனெனில் “அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:12) இன்றைய உலகின் அத்தகைய பாணியைப் பின்பற்ற நாம் விரும்புவதில்லை. அப்படியானால், யெகோவா மீதும் பைபிள் சத்தியங்கள் மீதும் உங்களுக்குள்ள அன்பு தணிந்துபோய் விடாதபடி நீங்கள் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

13 யெகோவா தேவனைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் தொடர்ந்து அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள். (யோவான் 17:3, NW) கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் கற்றுவருகிற விஷயங்களைக் குறித்து தியானியுங்கள், அதாவது ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்; அப்படிச் சிந்தித்துப் பார்ப்பதற்காக உங்களை நீங்களே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா தேவனைப் பற்றி இது எனக்கு என்ன கற்பிக்கிறது? முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும் நான் அவரை நேசிக்க இது எனக்கு வேறென்ன காரணத்தை அளிக்கிறது?’ (1 தீமோத்தேயு 4:15) இவ்வாறு தியானிப்பது யெகோவா மீது உங்களுக்குள்ள அன்பைத் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியச் செய்யும்.

14. யெகோவா மீதுள்ள நம் அன்பைத் தழைத்தோங்கச் செய்ய ஜெபம் எப்படி நமக்கு உதவும்?

14 யெகோவா மீதுள்ள உங்கள் அன்பைத் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியச் செய்வதற்கு மற்றொரு வழி அவரிடம் தவறாமல் ஜெபிப்பதாகும். (1 தெசலோனிக்கேயர் 5:17) ஜெபம் என்பது கடவுள் கொடுத்துள்ள அருமையான ஒரு பரிசு என்பதை இப்புத்தகத்திலுள்ள 17-ம் அதிகாரத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டோம். தவறாமல் பேசுவதும், மனம்விட்டுப் பேசுவதும் மனிதர்களிடையே உள்ள பந்தத்தை எப்படித் தழைத்தோங்கச் செய்கிறதோ, அப்படியே யெகோவாவிடம் தவறாமல் பேசுவது அவரோடுள்ள நம் பந்தத்தைத் தழைத்தோங்கச் செய்கிறது. நம்முடைய ஜெபங்கள் அர்த்தமற்ற சடங்காய் ஆகிவிடாதபடி, அதாவது எந்த உணர்ச்சியோ அர்த்தமோ இல்லாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப ஒப்பிப்பதைப் போல ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்வது மிக முக்கியமாகும். பாசமும் நேசமுமிக்க அப்பாவிடம் ஒரு பிள்ளை பேசுவதைப் போல் நாம் யெகோவாவிடம் பேச வேண்டும். மரியாதையோடு பேச வேண்டும், அதேசமயத்தில் மனந்திறந்தும், நேர்மையோடும், இருதயத்திலிருந்தும் பேச வேண்டும். (சங்கீதம் 62:8) ஆம், தனிப்பட்ட பைபிள் படிப்பும், இருதயப்பூர்வமான ஜெபமும் நம்முடைய வணக்கத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன, கடவுளுடைய அன்பிலே நிலைத்திருக்க அவை நமக்கு உதவுகின்றன.

கடவுளை வணங்குவதில் மகிழ்ச்சி காணுங்கள்

15, 16. ராஜ்ய பிரசங்க வேலையை ஒரு பாக்கியமாகவும் பொக்கிஷமாகவும் நாம் ஏன் சரியாகவே கருதலாம்?

15 கடவுளை வணங்குவதில் தனிப்பட்ட பைபிள் படிப்பும் ஜெபமும் உட்பட்டுள்ளன, இவை நாம் தனிமையில் செய்கிற அம்சங்களாகும். ஆனால் நாம் வெளியரங்கமாகச் செய்கிற மற்றொரு அம்சத்தைப் பற்றி, அதாவது நம்முடைய நம்பிக்கைகளைப் பிறரிடம் சொல்வதைப் பற்றி இப்போது சிந்தித்துப் பார்க்கலாம். பைபிள் சத்தியங்கள் சிலவற்றைக் குறித்து நீங்கள் ஏற்கெனவே மற்றவர்களிடம் பேச ஆரம்பித்திருக்கிறீர்களா? அப்படியானால், அரும்பெரும் ஒரு பாக்கியத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். (லூக்கா 1:74, NW) யெகோவா தேவனைப் பற்றிக் கற்றுக்கொண்ட சத்தியங்களை நாம் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, மெய்க் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான ஒரு வேலையை, அதாவது ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை, நாம் செய்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.—மத்தேயு 24:14; 28:19, 20.

16 அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய ஊழியத்தை விலையேறப்பெற்றதாகக் கருதினார், அதை ஒரு பொக்கிஷம் என்று அழைத்தார். (2 கொரிந்தியர் 4:7) யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி ஜனங்களிடம் பேசுவதுதான் எல்லா வேலைகளையும்விட மிகச் சிறந்த வேலையாகும். ஆம், மிகச் சிறந்த எஜமானருக்காகச் செய்யப்படுகிற, மிகச் சிறந்த நன்மைகளைத் தருகிற வேலையாகும். இந்த வேலையில் நீங்கள் பங்குகொள்ளும்போது நல்மனமுள்ள ஆட்கள் நம் பரலோகத் தகப்பனிடம் நெருங்கி வருவதற்கும் நித்திய ஜீவனுக்கான பாதையிலே நடப்பதற்கும் உதவி செய்கிறீர்கள்! இதைவிட வேறு எந்த வேலை அதிக திருப்தியளிக்க முடியும்? அதுமட்டுமல்ல, யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் பற்றி சாட்சி கொடுப்பது உங்களுடைய விசுவாசத்தை அதிகரிப்பதோடு, அவர் மீது உங்களுக்குள்ள அன்பையும் பலப்படுத்தும். இந்த வேலைக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா பெரிதும் போற்றுகிறார். (எபிரெயர் 6:10) இவ்வேலையில் மும்முரமாய் ஈடுபடுவது கடவுளுடைய அன்பிலே நிலைத்திருக்க உங்களுக்கு உதவும்.—1 கொரிந்தியர் 15:58.

17. கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடுவது இன்று ஏன் அவசரம்?

17 ராஜ்ய பிரசங்க வேலை மிக அவசரமாகச் செய்யப்பட வேண்டிய வேலை என்பதை நாம் ஞாபகத்தில் வைப்பது முக்கியம். ‘திருவசனத்தை [“அவசர உணர்வுடன்,” NW] பிரசங்கம் பண்ணும்படி’ பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 4:2) இதை ஏன் இன்று இந்தளவு அவசர உணர்வுடன் செய்ய வேண்டும்? “கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச் சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (செப்பனியா 1:14) ஆம், யெகோவா இந்த முழு பொல்லாத உலகத்திற்கும் முடிவைக் கொண்டு வருவதற்கான சமயம் விரைந்து வந்துகொண்டிருக்கிறது. ஜனங்களுக்கு எச்சரிப்பு கொடுத்தாக வேண்டும்! யெகோவாவைத் தங்கள் பேரரசராகத் தேர்ந்தெடுப்பதற்கான சமயம் இதுவே என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த முடிவு ‘தாமதிக்கப் போவதில்லை.’—ஆபகூக் 2:3.

18. மெய்க் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யாவரறிய நாம் ஏன் யெகோவாவை வணங்க வேண்டும்?

18 மெய்க் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யாவரறிய நாம் யெகோவாவை வணங்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அதனால்தான் அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) சக விசுவாசிகளோடு கிறிஸ்தவக் கூட்டங்களில் நாம் கூடிவரும்போது, நேசத்திற்குரிய நம்முடைய கடவுளைத் துதிப்பதற்கும் வணங்குவதற்கும் அருமையான ஒரு வாய்ப்பைப் பெறுகிறோம். அதுமட்டுமல்ல, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, பலப்படுத்துகிறோம்.

19. கிறிஸ்தவ சபையில் அன்பின் கட்டுகளைப் பலப்படுத்த நாம் என்ன முயற்சி எடுக்கலாம்?

19 யெகோவாவை வணங்குகிற மற்றவர்களோடு நாம் சகவாசம் வைத்துக்கொள்ளும்போது, சபையில் அன்பின் கட்டையும் நட்பின் பிணைப்பையும் நாம் பலப்படுத்துகிறோம். நம்மிடமுள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்க்கிற யெகோவாவைப் போல நாமும் ஒருவரிலொருவர் நல்ல குணங்களையே பார்ப்பது முக்கியம். உங்கள் சக வணக்கத்தாரிடம் பரிபூரணத்தை எதிர்பார்க்காதீர்கள். ஆன்மீக வளர்ச்சியில் எல்லாருமே வெவ்வேறு கட்டங்களில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் எல்லாருமே தவறுகள் செய்பவர்கள்தான் என்பதையும் நினைவில் வையுங்கள். (கொலோசெயர் 3:13) யெகோவா மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர்களோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அப்படிச் செய்யும்போது ஆன்மீக ரீதியில் நீங்களே உங்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆம், சபையிலுள்ள உங்கள் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து யெகோவாவை வணங்குவது கடவுளுடைய அன்பிலே நிலைத்திருக்க உங்களுக்கு உதவும். இப்படித் தம்மை உண்மையோடு வணங்கி, தம்முடைய அன்பிலே நிலைத்திருப்பவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிக்கிறார்?

“உண்மையான வாழ்வை” அடைய முயலுங்கள்

20, 21. ‘உண்மையான வாழ்வு’ என்பது என்ன, அது ஏன் ஓர் அருமையான எதிர்பார்ப்பு?

20 யெகோவா தம்முடைய உத்தம ஊழியர்களுக்கு ஒரு வாழ்வைப் பரிசாகத் தரப் போகிறார்; ஆனால் எத்தகைய வாழ்வை? சரி, இப்போது நாம் உண்மையிலேயே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோமா? அதிலென்ன சந்தேகம் என்று நம்மில் பெரும்பாலோர் சொல்வோம். உண்மைதான், நாம் சுவாசிக்கிறோம், சாப்பிடுகிறோம், குடிக்கிறோம். அப்படியானால் நிச்சயமாகவே நாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டுமா, நாம் குஷியாக இருக்கையில், “இது அல்லவா உண்மையான வாழ்வு!” என்றுகூட நாம் சொல்லலாம். ஆனால், முக்கியமான ஓர் அர்த்தத்தில் இன்றுள்ள எந்த மனிதனும் உண்மையில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டில்லை என்றே பைபிள் குறிப்பிடுகிறது.

பூஞ்சோலை பூமியில் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்

“உண்மையான வாழ்வை” நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென யெகோவா விரும்புகிறார். நீங்கள் பெற்றுக்கொள்வீர்களா?

21 “உண்மையான வாழ்வை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. (1 தீமோத்தேயு 6:19, NW) “உண்மையான வாழ்வை” நாம் எதிர்காலத்தில்தான் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதை இவ்வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆம், நாம் பரிபூரணமாக ஆகும்போதுதான் முழுமையான அர்த்தத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருப்போம், ஏனென்றால், நாம் எவ்விதத்தில் வாழ வேண்டுமென ஆதியிலே கடவுள் நினைத்தாரோ அவ்விதத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம். பரதீஸ் பூமியில் அவ்வாறு நாம் பூரண ஆரோக்கியத்துடனும், சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் வாழும்போதுதான் “உண்மையான வாழ்வை,” அதாவது நித்திய வாழ்வை, அனுபவிப்போம். (1 தீமோத்தேயு 6:12, NW) இது ஓர் அருமையான எதிர்பார்ப்பு, அல்லவா?

22. நீங்கள் எப்படி ‘உண்மையான வாழ்வை உறுதியாகப் பற்றிக்கொள்ளலாம்’?

22 நாம் எப்படி ‘உண்மையான வாழ்வை உறுதியாகப் பற்றிக்கொள்ளலாம்’? அதே விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, ‘நன்மை செய்யும்படியும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகும்படியும்’ கிறிஸ்தவர்களைப் பவுல் ஊக்குவித்தார். (1 தீமோத்தேயு 6:18) அப்படியானால், அந்த வாழ்வு நமக்குக் கிடைக்குமா, கிடைக்காதா என்பது பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொண்டுள்ள சத்தியங்களை எந்தளவு பின்பற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. ஆனால் நற்காரியங்கள் செய்வதன் மூலம் நாம் “உண்மையான வாழ்வை” சம்பாதித்துக் கொள்கிறோம் என்றா பவுல் இங்கே அர்த்தப்படுத்தினார்? இல்லை, கடவுளுடைய ‘கிருபையை,’ அதாவது தகுதியற்ற தயவை, நாம் பெற்றுக்கொள்வதைப் பொறுத்தே உண்மையில் அத்தகைய மகத்தான எதிர்பார்ப்பு இருக்கிறது. (ரோமர் 5:15) ஆனால், விசுவாசத்துடன் தம்மை சேவிப்பவர்களை ஆசீர்வதிப்பதில் யெகோவா மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். “உண்மையான வாழ்வை” நீங்கள் அனுபவிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அத்தகைய சந்தோஷமும், சமாதானமுமான நித்திய வாழ்வு கடவுளுடைய அன்பிலே நிலைத்திருக்கிறவர்களுக்குக் கிடைக்கப் போகிறது.

23. கடவுளுடைய அன்பிலே நிலைத்திருப்பது ஏன் அவசியம்?

23 நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘பைபிளில் கடவுள் சொல்லியிருக்கிற விதமாக நான் அவரை வணங்கி வருகிறேனா?’ அனுதினமும் அப்படிச் செய்து வந்தால், நாம் சரியான பாதையில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம். அதோடு, யெகோவா நம் அடைக்கலமாக இருக்கிறார் என்பதிலும் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். இந்தப் பழைய உலகின் தொல்லை மிகுந்த கடைசி நாட்களின்போது அவர் தம்முடைய உத்தம ஜனங்களுக்குப் பாதுகாப்பளிப்பார். அதோடு, சீக்கிரத்தில் வரவிருக்கிற மகத்தான புதிய உலகிற்குள் பத்திரமாக நம்மை அழைத்துச் செல்வார். அப்போது நாம் எவ்வளவாய் பூரிப்படைவோம்! கடைசி நாட்களில் நாம் சரியான தீர்மானங்களை எடுத்திருந்ததை எண்ணி எவ்வளவாய் மகிழ்ச்சி அடைவோம்! இத்தகைய சரியான தீர்மானங்களை இப்போது நீங்கள் எடுத்தால், யெகோவாவின் ஆதி நோக்கத்தின்படியே “உண்மையான வாழ்வை” நித்திய நித்திய காலத்திற்கும் அனுபவிப்பீர்கள்!

பைபிள் கற்பிப்பவை

  • கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் அவருடைய நியமங்களைப் பின்பற்றுவதன் மூலமும் கடவுள் மீது நமக்குள்ள உண்மையான அன்பைக் காண்பிக்கிறோம்.—1 யோவான் 5:3.

  • யெகோவாவின் வார்த்தையைப் படிப்பது, இருதயப்பூர்வமாக அவரிடம் ஜெபிப்பது, அவரைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுத்தருவது, கிறிஸ்தவக் கூட்டங்களில் அவரை வணங்குவது ஆகியவை அவருடைய அன்பிலே நிலைத்திருக்க நமக்கு உதவும்.—மத்தேயு 24:14; 28:19, 20; யோவான் 17:3; 1 தெசலோனிக்கேயர் 5:17; எபிரெயர் 10:24, 25.

  • கடவுளுடைய அன்பிலே நிலைத்திருப்பவர்கள் “உண்மையான வாழ்வை” அனுபவித்து மகிழுவார்கள்.—1 தீமோத்தேயு 6:12, 19, NW; யூதா 21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்