நம் கடவுளுடைய வீட்டை அசட்டை செய்யக் கூடாது
1 ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படி . . . , ஜனத்தைக் கூட்டு.’ (உபா. 31:12, 13) பூர்வ இஸ்ரவேல் தேசத்தாருக்கு கொடுக்கப்பட்ட இந்தப் புத்திமதி, இன்றைக்கும்கூட யெகோவாவின் உண்மை வணக்கத்தார் அனைவருக்கும் பொருந்துகிறது; ஏனென்றால் தவறாமல் ஒன்றுகூடி வரும்படி, எபிரெயர் 10:25-ல் கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை கூறினார். எனவே கூட்டங்கள் நம்முடைய வணக்கத்தின் இன்றியமையாத பாகமாய் இருக்கின்றன. தெளிவாகவே, இப்படி ஒன்றுகூடி வருவதன் நோக்கமானது, செவிகொடுத்து கேட்டு கற்றுக்கொள்வதற்கும் யெகோவாவால் போதிக்கப்படுவதற்குமாகும். (ஏசா. 54:13) இப்படிப்பட்ட கூட்டங்கள், பூர்வ இஸ்ரவேலில் இருந்தது போலவே, சந்தோஷத்திற்குரிய சமயங்களாக இருக்கின்றன; தாவீதுக்கு இருந்தது போன்ற ஒரு பிரதிபலிப்பை நமக்குள் உருவாக்குகின்றன, அவர் எழுதினார்: “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.” (சங். 122:1) யெகோவாவின் வீட்டிற்கான நெகேமியாவின் பக்தி வைராக்கியம், அவரை இவ்வாறு சொல்லும்படி செய்தது: “எங்கள் கடவுளுடைய வீட்டை நாங்கள் அசட்டை செய்யக்கூடாது.”—நெகே. 10:39, NW.
2 சிலசமயங்களில் கட்டடக் கலையில் மிகவும் கவரத்தக்கவையாக இருக்கிற கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைப் போலில்லாமல், வணக்கத்திற்காக யெகோவாவின் சாட்சிகள் கூடுகிற இடங்கள் எளிமையாகவும் அதேசமயத்தில் உற்சாகமளிப்பதாகவும் கனிவான இடங்களாகவும் இருக்கின்றன; இவை ராஜ்ய மன்றங்கள் என்று அறியப்படுகின்றன. தெளிவாகவே, இந்தப் பெயர் முதலாவதாக 1935-ல், சங்கத்தின் அப்போதைய பிரெஸிடெண்டாக இருந்த ஜே. எஃப். ரதர்ஃபர்டு என்பவரால் பயன்படுத்தப்பட்டது; அவர் ஹவாய் நாட்டிற்குப் போய் அங்குக் கூட்டத்திற்கான ஒரு இடத்தை கட்டுவதற்காக ஏற்பாடு செய்த சமயத்தில் இவ்வாறு பயன்படுத்தினார். அந்தப் பெயரே இந்நாள் வரையாக பூமியெங்கும் நிலைத்திருக்கலாயிற்று. ராஜ்ய மன்றம் என்பதை 1961 உவெப்ஸ்டர்ஸ் அனப்ரிட்ஜ்டு டிக்ஷ்னரி இவ்வாறு வரையறுக்கிறது: “உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள் கூடும் இடம், அங்கு மத ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.” வணக்கத்திற்கான இடமாகிய ராஜ்ய மன்றம், மற்றவர்களைக் கவருவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பகட்டான கட்டடமாக இருக்கக் கூடாது. அதன் கட்டடக் கலை இடத்திற்கு இடம் மாறுபடுகிறபோதிலும், அது தவறாமல் இயங்க வேண்டுமென்பதே அதன் நோக்கம்.—அப். 17:24.
ஒவ்வொரு சபையும் ஒரு சொந்த ராஜ்ய மன்றத்தை வைத்திருக்க வேண்டுமா?
3 ஓர் உள்ளூர் சபை சொந்தமாக ஒரு ராஜ்ய மன்றத்தை வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை சங்கம் தீர்மானிப்பதில்லை. இது உள்ளூர் சபையால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம். சில சபைகள் தங்களுடைய சொந்த மன்றங்களைக் கட்டியிருக்கின்றனர்; மற்ற சபைகள் தங்களுடைய கூட்டங்களை நடத்துவதற்கு கட்டடங்களை வாடகைக்கு வைத்திருக்கின்றனர். எப்படியிருந்தபோதிலும், கூட்டம் நடைபெறும் இடம் கண்ணியமாகவும், சுத்தமாகவும், யெகோவாவின் வணக்கத்திற்குரிய உயர்ந்த தராதரங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பது இன்றியமையாதது. பயன்படுத்தும்போது அது குறிப்பிடத்தக்க வகையில் இதமான சூழ்நிலையை கொண்டிருக்க வேண்டும். ராஜ்ய மன்றங்களில் நடைபெறும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கூட்டத்திற்கு யூனியன் மெத்தடிஸ்ட் ஊழியர் ஒருவர் வந்திருந்தார், அவர் சொன்னார்: “இந்த ஆட்களிடம் ஓர் உள்ளப்பூர்வமான அக்கறை இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இவர்களால் நாங்கள் ஒருவித அழுத்தத்தில் இருப்பதாகவும்கூட ஒருபோதும் உணரவில்லை. எங்களுக்கு ஓய்வு கிடைத்த நாளில் நாங்கள் சந்தித்த மற்ற 20 சபைகள் எதிலும் இருந்ததைவிட இவர்களிடமிருந்து உண்மையான வரவேற்பை நாங்கள் பெற்றோம். கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு இவர்கள் ஆழ்ந்த அக்கறை எடுத்துக்கொண்டது போலவே, ஒருவருக்கொருவரும் அயலகத்தாருடனும் உண்மையிலேயே ஆழ்ந்த அக்கறைகொள்கிற, கனிவான புன்சிரிப்புடைய, அமைதலான ஆட்களடங்கிய ஒரு சபை இங்குதான் இருந்தது.”
4 அநேக சபைகளுடைய நிதிநிலை தங்களுடைய சொந்த மன்றத்தைக் கொண்டிருப்பதைப் பற்றி தற்சமயம் யோசித்துப்பார்க்க அவர்களை அனுமதிப்பதில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதோடு, ஒரு மன்றத்தை விலைக்கு வாங்குவதைவிட அல்லது கட்டுவதைவிட வாடகைக்கு எடுப்பதே சில இடங்களில் அதிக வசதியாக இருக்கிறது. என்றபோதிலும், அநேக சபைகள் நிலத்தை வாங்கி, தங்களுடைய தேவைகளுக்குப் பொருந்தும் விதத்தில் சொந்த ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கு தெரிவுசெய்திருக்கின்றன. அல்லது ஒரு கட்டடத்தை வாங்கி அதை புதுப்பித்திருக்கின்றன. ஒவ்வொரு சபையும் அதன் சொந்த ராஜ்ய மன்றத்தை கொண்டிருந்தால், திட்டவட்டமான அனுகூலங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இரண்டு சபைகள் தங்களுடைய சொந்த ராஜ்ய மன்றங்களைக் கட்டினார்கள், முதலாம் ஆண்டு முடிவதற்குள் அந்தச் சபைகள் வெவ்வேறு நேரங்களில் இரண்டு கூட்டங்களை நடத்தவேண்டிய அளவுக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது என்பதாக கேரளாவிலுள்ள வட்டாரக் கண்காணி ஒருவர் அறிக்கை செய்கிறார். ராஜ்ய மன்ற திட்டத்தை பண சம்பந்தமாக ஆதரிப்பதை மட்டுமல்லாமல், அதைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும்—அதை சுத்தமாக வைத்து, வருபவர்களுக்கு ஏற்கத்தக்கதாகவும் நல்லநிலையிலும் வைப்பதற்கும்—தங்களுடைய சேவையை மனமுவந்தளிப்பதையும் ஒரு சிலாக்கியமாக கருதவேண்டும். ராஜ்ய மன்றத்தின் உட்புறமும் வெளிப்புறமும், யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் தகுந்த விதத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.
5 ஒரு சபை அதன் சொந்த ராஜ்ய மன்றத்தைக் கொண்டிருப்பதற்கான நிலையில் இருப்பதாக உணர்ந்தால் என்ன செய்வது? இந்த விஷயம் உள்ளூர் சகோதரர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். சொத்து வாங்கும்போதும் வரைபடம் போடும்போதும் ஒரு மன்றத்தைக் கட்டும்போதும் பின்பற்றுவதற்கு சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அநேக விதிமுறைகள் இருக்கின்றன; அவற்றை ஒழுங்கான ரீதியில் பின்பற்ற வேண்டும். முதற்படியானது, சபையினரிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்காக இந்தத் தீர்மானத்தை சபையானது அவர்கள் முன்வைக்க வேண்டும்; பின்பு கூடுதலான வழிநடத்துதலுக்காக சங்கத்தின் ராஜ்ய மன்ற இலாகாவுடன் (Kingdom Hall Desk) தொடர்பு வைத்துக்கொள்வதாகும். சபையானது சொத்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு அநேக முன்னெச்சரிக்கைளை எடுத்துக்கொள்ள வேண்டும். மண்டல வாரியாக பிரிப்பதைப் பற்றிய விதிமுறைகள் (Zoning regulations), கட்டட சம்பந்தமான சட்டத் தொகுப்புகள், மத நோக்கங்களுக்காக கட்டுவதற்கு அனுமதி பெறுதல் ஆகியவை சரிபார்க்க வேண்டிய முன்னேற்பாட்டு விஷயங்களாகும்.
மண்டல கட்டடக் குழுவின் பங்கு
6 ராஜ்ய மன்றங்கள் கட்டுவது சம்பந்தமான விஷயங்களில் உதவியையும் வழிநடத்துதலையும் கொடுப்பதற்கு தகுதிவாய்ந்த ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் அடங்கிய மண்டல கட்டடக் குழு (Regional Building Committee [RBC]) ஒன்றை சங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. ஐந்து அங்கத்தினர்களைக் கொண்ட இந்தக் குழு, உங்கள் வட்டாரத்திற்குப் பொருத்தமான ராஜ்ய மன்றங்களை வாங்குவதன் அல்லது கட்டுவதன் பேரில் வழிநடத்துதல்களைக் கொடுக்கும்; இந்தக் காரியத்தில் சபைக்கு நிதி கிடைக்கக்கூடிய மூலங்களையும் தேவைப்படும் தொகையையும் குழுவானது கவனத்தில் எடுத்துக்கொள்ளும். மண்டல கட்டடக் குழு, உள்ளூர் ராஜ்ய மன்ற கட்டடக் குழுவை மாற்றீடு செய்யாது, ஆனால் கட்டட திட்டத்தில் உதவிசெய்யும். சொத்தை வாங்குவதற்கு முன்பாகவே, உள்ளூர் கட்டடக் குழுவானது ஆலோசனைகளுக்காக RBC-யை கலந்துபேசுவது உசிதமானது. தேவைப்படும் செலவைக் கணக்கிடுதல், கட்டுமானம் போன்ற பல்வேறு அம்சங்களில் நிபுணத்துவத்துவமுடைய திறமைபெற்ற ஆண்களால் ஆனது RBC; எனவே இப்படிப்பட்ட செயல்களில் அவர்களுடைய உதவி மதிப்புமிக்கதாய் இருக்கும்.
7 முன்கூட்டியே திட்டமிடுவதைத் தேவைப்படுத்துகிற முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால், ராஜ்ய மன்றத்தின் அளவாகும்—அதன் வரைபடமும் இருக்கைகளின் கொள்ளளவுமாகும். எளிய ஆனால் நடைமுறையான வரைபடம் மிகச் சிறந்தது. RBC-யிடம் இப்படிப்பட்ட அநேக வரைபடங்கள் உள்ளன, ஆனால் அடிப்படையில் மூன்று வகையான இருக்கை தேவைகளுக்கு வரைபடம் அளிக்கிறது: 100, 150, 250 பேருக்கு. மன்றத்தின் தளப்பரப்பு ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, அதாவது அமர்த்தப்படும் ஆட்களின் எண்ணிக்கையை 1.8 சதுர மீட்டரால் பெருக்கிக்கொள்ளுங்கள். உதாரணமாக, 100 பேர் கொண்ட ஒரு மன்றத்தை கட்ட விரும்பினால், 180 சதுர மீட்டர் தேவைப்படுகிறது. கழிவறைகள், பத்திரிகை மற்றும் பிரசுரத்திற்கான கெளண்டர்கள், இரண்டாவது பள்ளி ஒன்று போன்ற மற்ற தேவைகளுக்கான இடத்தையும் இது உட்படுத்தும். இப்படிப்பட்ட கணக்கிடுதலும் திட்டமிடுதலும் ராஜ்ய மன்றத்தை செளகரியமாக, இட நெருக்கடி இல்லாமல் இருக்கும்படி செய்யும். பொருத்தமான ஒரு மேடை, ஒலிபெருக்கி கருவிகள் வைப்பதற்கான இடம், விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவை பொருத்துவதற்கான இடங்கள், மற்ற மின்சார சம்பந்தப்பட்ட விபரங்கள், ஜெனரேட்டர் அறை, குழாய் வசதிகள், கழிவுநீர் முறை ஆகியவற்றின்பேரிலும்கூட ஆலோசனைகள் வழங்க மண்டல கட்டடக் குழு தகுதிவாய்ந்தது.
8 சில சந்தர்ப்பங்களில், ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கும் மேலான சபைகள் பயன்படுத்தலாம்; இது, மன்றத்தை அதிக முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி செய்கிறது, மேலும் பணசம்பந்தமான பாரம் நிறைய பேர்மீது வருகிறது. இரண்டு அல்லது அதற்கும் அதிகமான சபைகளுக்கிடையே இப்படிப்பட்ட ஒத்துழைப்பு, கட்டட திட்டத்தின் பணசம்பந்தமான விஷயத்தை சமாளிப்பதை கணிசமான அளவில் அதிகரிக்கிறது. என்றபோதிலும், முன்பணம் மற்றும் இதர ஏற்பாடுகள் சம்பந்தப்பட்டவற்றை பொறுத்தளவில் அந்தச் சபைகளில் ஒரேவொரு சபையுடன் மட்டுமே சங்கம் தொடர்புகொள்கிறது. சபைகள் தங்களுடைய கூட்டங்களை எப்பொழுது நடத்தும் என்பது பற்றிய விபரங்கள், பங்குகொள்ளும் சபைகளின் மூப்பர் குழுவால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ராஜ்ய மன்றத்திற்கு பண உதவி அளித்தல்
9 ராஜ்ய மன்றத்திற்காக நிலம் வாங்க சங்கம் பணம் தருவதில்லை என்பது கவனத்தில் வைக்கவேண்டிய குறிப்பாகும். இருப்பினும், அரிய சந்தர்ப்பங்களில், நகரத்தில் உள்ள ஒரே மன்றத்தை ஒருவேளை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சபைகள் பகிர்ந்துகொள்ளும்போது, அங்கே வேலை நன்கு முன்னேறிக்கொண்டிருந்தால், நிலத்திற்காக பண உதவியை சங்கம் அளித்திருக்கிறது. யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்கள் 2 கொரிந்தியர் 8:13-15-ல் பவுல் உற்சாகப்படுத்திய அதே மனப்பான்மையைத் தொடர்ந்து காட்டுவார்கள், அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.” புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டுவதில் உதவுவதற்காக நமது நேரத்தையும் வளங்களையும் கொடுப்பதே யெகோவாவை கனம்பண்ணுவதற்கான ஒரு நல்ல வழி.—நீதி. 3:9.
10 சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பு, தாராளமாக நன்கொடை தேவைப்பட்ட ஒரு சூழ்நிலைமையைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். யெகோவா தம் வணக்கத்தில் பயன்படுத்துவதற்கென்று ஒரு வாசஸ்தலம் (tabernacle) அல்லது “ஆசரிப்புக் கூடாரம்” ஒன்றை கட்ட மோசேக்கு கட்டளை கொடுத்தார். தெய்வீக ஏவுதலால் கொடுக்கப்பட்ட அந்த மாதிரிப் படத்திற்கு ஏற்ப கட்டவேண்டுமென்றால், அதற்கு பல்வேறு விலையுயர்ந்த பொருட்கள் தேவைப்பட்டன. யெகோவா கட்டளையிட்டார்: “உங்களுக்கு உண்டானதினாலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்.” (யாத். 35:4-9) ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? அந்தப் பதிவு நமக்குச் சொல்வதாவது: “பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.” இவ்வாறு மனமுவந்து தந்த நன்கொடை மெல்ல மெல்ல அவ்வளவு அதிகமாக சேர்ந்துவிட்டதால், அது ‘வேண்டியதற்கு அதிகமாக’ இருந்தது. (யாத். 35:22-29; 36:3-5) ஆக, அந்த மக்கள் எத்தகைய ஒரு தன்னலமற்ற, தாராளமான மனப்பான்மையை காண்பித்தார்கள்!
11 தாராளமாக நன்கொடை அளிப்பதற்கு அதைப்போன்ற ஓர் அழைப்பு மறுபடியும் சுமார் 500 வருடங்களுக்கு பிறகு இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. எருசலேமில் யெகோவாவுக்கென்று ஒரு நிரந்தரமான வீட்டை கட்டவேண்டும் என்று தாவீது விரும்பினார், அது அவருடைய குமாரனாகிய சாலொமோன் மூலம் நிறைவேற்றப்படவிருந்தது. தேவைப்பட்ட பொருட்களின் ஒரு பெரும் பகுதியை தாவீதே சேகரித்து, நன்கொடையாக அளித்துவிட்டார். ‘யெகோவாவுக்கு வெகுமதியைக்’ கொண்டு வாருங்கள் என்ற அழைப்பை தாவீது விடுத்தபோது, மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். அதன் விளைவு? “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.” (1 நா. 22:14; 29:3-9) அவர்கள் அளித்த வெள்ளி மற்றும் தங்கத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 லட்ச கோடி ரூபாய் இருக்கும்!—2 நா. 5:1.
12 நவீன காலங்களிலும்கூட உலகின் வெவ்வேறு பாகங்களில் இருக்கும் நம் சகோதரர்கள் அதைப்போன்ற ஒரு மனப்பான்மையை வெளிக்காட்டுகிறார்கள். நம் உன்னதப் பேரரசர் கர்த்தராகிய யெகோவாவை வழிபட ஒரு கட்டடத்தை கட்டவேண்டும் என்ற விருப்பம் தெளிவாக இருந்திருக்கிறது என அறிவது என்னே அதிக உற்சாகம் அளிப்பதாக உள்ளது. இது நம் சகோதரர்கள் ‘முழு இருதயத்தோடும், மனப்பூர்வமாயும்’ அளிப்பதை காட்டிடும் குதூகலம் தரும் அனுபவங்களிலிருந்து தெள்ளத் தெளிவாக உள்ளது. உதாரணத்திற்கு, போலந்தின் சில பகுதிகளில், கொஞ்ச காலம் போனதும் அவர்களால் ஒரு ராஜ்ய மன்றத்தை கட்ட முடியும்படி, சகோதரர்கள் பணத்திற்காக வயல்களை குத்தகைக்கு எடுத்து, பயிர் செய்து, உற்பத்தியான பொருட்களை விற்கிறார்கள், அல்லது பெரி பழங்களைப் பொறுக்குகிறார்கள். அத்தகைய கட்டட திட்டங்களுக்காக சிலர் பணம் கொடுத்துள்ளனர், மற்றவர்கள் நகைகளையும் சொத்துகளையும் கொடுத்துள்ளனர். அத்தகைய கட்டட திட்டங்களுக்காக தங்களுடைய போற்றுதலை பல சின்னஞ் சிறுவர்களும் தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் கொஞ்சம் பணத்தையும் சங்கத்திற்கு அனுப்புவதன் மூலம் தெரிவிக்கிறார்கள். இந்தத் தொகை உலகத்தின் பார்வையில் சிறிய தொகையாக இருக்கலாம், ஆனால் யெகோவாவின் பார்வையில் பெரும் மதிப்புள்ளது.
13 பொருள் சம்பந்தமாக உதவியளிப்பது வேதப்பூர்வமானதுதான். “நன்கொடை” என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வார்த்தையின் அர்த்தம் “பரிசுத்தமான பங்கு.” (யாத். 25;2, NW ரெஃபரன்ஸ் பைபிள், அடிக்குறிப்பு.) ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக தங்கள் நேரத்தையும், சக்தியையும், பொருள் சம்பந்தமான உடைமைகளையும் கிறிஸ்தவர்கள் நன்கொடையாக அளிக்க சரியாகவே விரும்புகிறார்கள். சபை ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்ட திட்டமிடும்போது, அந்தத் திட்டத்திற்காக சிலரால் தனிப்பட்ட விதத்தில் உடனடியாக நன்கொடை அளிக்க அல்லது அவர்களுக்கு அப்போது தேவைப்படாத நிதிகளை கடனாக கொடுக்க முடியலாம். கூடுதலாக, ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை எல்லாரும் தீர்மானம் செய்யலாம். இது தசமபாகமும் அல்ல, எந்தவொரு கட்டாயமும் அல்ல, முழுக்க முழுக்க தானாகவே மனமுவந்து அளிப்பதாகவே இருக்கிறது. இருப்பினும் இதன்சம்பந்தமாக சபை மூப்பர்கள் ஒருவேளை சபை உறுப்பினர்களை அணுகி கேட்கலாம், இது திட்டங்கள் போட மூப்பர்களுக்கு உதவியாக இருக்கும். கையெழுத்துப்போடாத வெறும் தாளில், தொகையை மாத்திரம் எழுதிக்கொடுப்பது, திட்டங்கள் போட போதுமானது.
14 ராஜ்ய மன்றம் கட்டுவதற்காக தயார்-நிதிகளை சேகரிக்கும் ஒரு நடைமுறையான வழி, ‘கட்டட நிதி’ என்று எழுதி ஒட்டவைத்த ஒரு நன்கொடைப் பெட்டியை வைத்துவிட்டு, இந்தக் குறிக்கோளுக்காக சகோதரர்களை நன்கொடை அளிக்கும்படி உற்சாகப்படுத்துவதாகும். அத்தகையை ஒரு பெட்டியை வைக்கும்படி ஆகஸ்ட், 1995-ல் இந்தியாவிலுள்ள அனைத்து சபைகளையும் சங்கம் கேட்டுக்கொண்டது. ஏற்கெனவே சொந்தமாக ராஜ்ய மன்றத்தை வைத்திருக்கும், அதற்கான பணத்தையெல்லாம் செலுத்திவிட்டிருக்கும் சபைகள், அல்லது ராஜ்ய மன்றம் கட்டும் திட்டத்தில் தற்போது உட்பட்டில்லாத, சமீப எதிர்காலத்தில் அத்தகைய ஒரு திட்டத்தை அமல்படுத்த நினைக்காதிருக்கும் சபைகள், இந்தப் பெட்டியில் கிடைக்கும் எல்லா பணத்தையும் ஒவ்வொரு மாதமும் சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதிகள் “தேசிய ராஜ்ய மன்ற நிதி” (‘National Kingdom Hall Fund’) என்று குறித்து வைக்கப்படும். இந்த NKHF ஒரு ‘சுழலும் நிதி’ ஆகும், ராஜ்ய மன்ற கட்டட திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க இதிலிருந்து நாட்டில் உள்ள எல்லா சபைகளுக்கும் முன்பணம் வழங்கப்படும். இவை அனைத்தும் திரும்பவும் செலுத்தவேண்டிய முன்பணங்களாகும், அவற்றோடுகூட பணத்தை கையாளுவதில் உட்பட்டிருக்கும் செலவை பூர்த்திசெய்ய மூன்று சதவிகிதம் கட்டணம் (surcharge) வசூலிக்கப்படும் மற்றும் இவ்வாறு திரும்பவும் செலுத்தப்படும் முன்பணங்கள் இன்னும் மற்ற மன்றங்களைக் கட்ட நிதி உதவியளிக்க உதவுகின்றன. உள்ளூர் சபை செலவுகளுக்காக வழக்கமாக கொடுக்கும் நன்கொடையைத் தவிர, இந்த நிதிக்காக தங்கள் திராணிக்கும், தங்கள் விருப்பதிற்கும் ஏற்ப ஒரு தொகையை தொடர்ந்து வைத்துவிடும்படி அனைவரையும் உற்சாகப்படுத்தலாம். (1 கொரிந்தியர் 16:1-4-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர் டெட்டுல்லியன் எழுதினார்: “ஒவ்வொரு நபரும் மாதத்திற்கு ஒருமுறை கொஞ்சம் கணிசமான பணத்தைக் கொண்டுவருகிறார் அல்லது எப்போதெல்லாம் அவர் விரும்புகிறாரோ அப்போதெல்லாம் கொண்டுவருகிறார், அதுவும் அவர் விரும்பினால் மற்றும் அவரால் முடிந்தால் மாத்திரமே, எவரும் கட்டாயப்படுத்தப்படவில்லை; அது தானாகவே முன்வந்து அளிக்கப்படும் காணிக்கை.” நன்கொடைகளை கட்டாயமாக கேட்டு, காணிக்கை தட்டை வலம்வரவிடும் இன்றைய பல மதங்களைப்போல் அல்லாமல், கிறிஸ்தவ சபையில் பொருள் சம்பந்தமான எல்லா காணிக்கைகளும் இதயத்திலிருந்து, தாமே முன்வந்து தரப்படுபவை.—2 கொ. 9:7.
15 கட்டடத்திற்கான திட்டங்கள் சபை மூப்பர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், RBC கொடுத்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்திய பிறகு, மறுபடியும் மண்டல கட்டடக் குழுவின் உதவியோடு கட்டட திட்டத்திற்கு ஆகும் முழு செலவையும் கணக்கிட வேண்டும். இதற்குள்ளாக எவ்வளவு பணம் தன்னிடம் உள்ளது என்பதும் சபைக்கு தெரிய வரும். இந்தக் கட்டத்தில், அத்தகைய முன்பணம் அவசியம் என்றால் மாத்திரம், சபையானது முன்பணத்திற்காக சங்கத்திடம் விண்ணப்பிக்கலாம். அத்தகைய முன்பணத்தை அளிக்கலாமா அளிக்க வேண்டாமா என்று அந்த விண்ணப்பத்தை சங்கம் கவனமாக ஆராய்ந்து, முடிவெடுக்கும். அந்த முன்பணம் பத்து வருடங்களில் மாத தவணைகளாக திருப்பி செலுத்தப்படும். அத்தகைய முன்பணத்திற்காக விண்ணப்பிப்பதற்குமுன், சகோதரர்கள் ஆற அமர உட்கார்ந்து, உட்பட்டிருக்கும் செலவை, துல்லியமாகவும், யதார்த்தமாகவும் கணக்கிட வேண்டியது அவசியம், அதே கட்டட திட்டத்திற்காக மேற்கொண்டு முன்பணம் கேட்பதை தவிர்ப்பதற்காகவே அவ்வாறு செய்ய வேண்டும். (லூக். 14:28, 30) ஒரு ராஜ்ய மன்றமாக மாற்றி கட்டுவதற்காக ஒரு ஃபிளாட்டை (flat) அல்லது மற்றொரு கட்டடத்தை வாங்க முன்பணத்திற்காக அனுப்பப்படும் விண்ணப்பங்களும்கூட வரவேற்கப்படும், ஆனால் திட்டமானது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
ராஜ்ய மன்ற உதவி ஏற்பாடு
16 உங்களுக்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஒரு ராஜ்ய மன்றம் இருந்து, கட்டடத்தை அல்லது இடம் பெயர்க்கத்தக்க விலையுயர்ந்த பொருட்களை (movable valuables) பாதுகாக்க நீங்கள் விரும்பினால், ராஜ்ய மன்ற உதவி ஏற்பாட்டை (Kingdom Hall Assistance Arrangement [KHAA]) சங்கம் வைத்திருக்கிறது. இதைப் பற்றிய விபரங்கள் அனைத்து சபைகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. திருட்டும் மற்ற நாசவேலைகளும் அதிகரித்துள்ள நாம் வாழ்ந்து வரும் இக்கட்டான காலங்களைப் பார்க்கையில் இது மிகவும் பயனுள்ள ஒரு ஏற்பாடாகும். சங்கத்தால் தீர்மானிக்கப்படுகிற ஒரு சிறுதொகையை ஒவ்வொரு வருடமும் செலுத்துவதன் மூலம், சொத்துக்கு அல்லது விலைமதிப்புமிக்க பொருட்களுக்கு ஏற்படும் இழப்புகளை மீண்டும் பெறுவதற்கு உதவிபெறும் நிலையில் சபையை வைக்கிறது. இதன்மூலம் ஒலிபெருக்கி சாதனங்கள், ஃபர்னிச்சர் போன்ற விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாக்கலாம். இது ஓர் அன்பான ஏற்பாடு, அதனால் எல்லா சபைகளும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
17 கொடுக்கும் மனப்பான்மை யெகோவாவிடமிருந்து வருகிறது. தம்முடைய பூமிக்குரிய பிள்ளைகளுக்கு அளிக்கும் நன்மையான எந்த ஈவுக்கும் பூரணமான எந்த வரத்திற்கும் அவரே உன்னத வள்ளலாக இருக்கிறார். (யாக். 1:17) அவர் நமக்கு கொடுத்திருக்கிற வியக்கத்தக்க காரியங்களுக்கு நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்? “கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” என்று சொன்னபோது சங்கீதக்காரன் இந்தக் கேள்வியை எழுப்பினார். (சங். 116:12) யெகோவா நமக்கு செய்திருக்கிற அன்பான தயவுக்காகவும் நித்திய ஜீவனுக்கான எதிர்பார்ப்புக்காகவும் நாம் அவருக்கு என்ன கொடுக்க முடியும்? பதிலை சங்கீதக்காரனே சொன்னார்: “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுவேன் [“யெகோவாவின் நாமத்தில் கூப்பிடுவேன்,” NW]. நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்[துவேன்].” (சங். 116:13, 17) யெகோவாவுடைய நாமத்தில் கூப்பிடுகையில் நம்முடைய அசைக்கமுடியாத பற்றுறுதியை காண்பித்து, நம்முடைய பிராந்தியத்தில் தூய்மையான வணக்கத்தை முன்னேற்றுவிப்பதே யெகோவாவுக்கு நாம் அளிக்கக்கூடிய மிக அருமையான பரிசு. நம்முடைய சொந்த ராஜ்ய மன்றத்தை கொண்டிருப்பதே நாம் இதைச் செய்வதற்கு மிகச் சிறந்த வழி; “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடே கூடப் போவோம்” என்று சொல்லிக்கொண்டு மக்கள் அங்கு வருவார்கள்.—சக. 8:23.
[பக்கம் 6-ன் பெட்டி]
ஒரு ராஜ்ய மன்றம் கட்ட நன்கொடை அளிப்பதற்கு உங்கள் இருதயம் உங்களைத் தூண்டுகிறதா?
ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு உங்களுடைய போற்றுதலையும் விருப்பத்தையும் காண்பிக்க அநேக வழிகள் இருக்கின்றன. இத்தகைய திட்டங்களுக்கு நிதி உதவியளிக்க தேசிய ராஜ்ய மன்ற நிதியை சங்கம் வைத்திருக்கிறது. பின்வரும் வழிகளில் நீங்கள் உதவலாம்:
1 வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளை நேரடியாக உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டிக்கு அனுப்பலாம். நகைகளை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களையும்கூட நன்கொடையாக கொடுக்கலாம். இவை தேசிய ராஜ்ய மன்ற நிதிக்கு கொடுக்கப்படும் நிபந்தனையில்லாத வெகுமதி என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதத்தை இந்த நன்கொடைகளோடு சேர்த்து அனுப்ப வேண்டும்.
2 நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: நன்கொடையாளரின் மரணம் வரையாக உவாட்ச் டவர் சொஸைட்டியின் ட்ரஸ்டில் வைத்துக்கொள்ளும்படி பணத்தைக் கொடுக்கலாம்; சொந்த தேவைக்கு பணம் தேவைப்பட்டால், நன்கொடையாளருக்கு இந்தப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு இதைக் கொடுக்கலாம். இந்தப் பணம், மேற்குறிப்பிடப்பட்ட நிதிக்கு என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
3 வங்கி கணக்குகள்: வங்கி கணக்குகள், வைப்புத் தொகை சான்றிதழ்கள் அல்லது தனிநபரின் ஓய்வுபெறுகையில் கிடைக்கும் தொகை சம்பந்தமான கணக்குகள் (retirement accounts) ஆகியவற்றை, உள்ளூர் வங்கியின் நிபந்தனைகளுக்கேற்ப, ட்ரஸ்டில் வைக்கலாம் அல்லது மரணம் நேரிடுகையில் உவாட்ச் டவர் சொஸைட்டி இதைப் பெற்றுக்கொள்ளும்படி செய்யலாம். இந்தப் பணம், மேற்குறிப்பிடப்பட்ட நிதிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை குறிப்பிடுங்கள். இத்தகைய எந்த ஏற்பாடுகளையும் சங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
4 இருப்புகளும் பங்கு பத்திரங்களும் (Stocks and Shares): இருப்புகளும் பங்கு பத்திரங்களும் நிபந்தனையற்ற ஒரு வெகுமதியாகவோ அல்லது அந்த வருமானத்தை தொடர்ந்து நன்கொடையாளருக்குக் கொடுக்கப்படும்படியான ஏற்பாட்டின் கீழோ உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம். அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஒருவேளை ராஜ்ய மன்ற நன்கொடைக்காக சங்கம் வைத்துக்கொள்ளும்படி திட்டவட்டமாய் குறிப்பிட வேண்டும்.
5 நிலபுலமும் கட்டடங்களும் (Real Estate): விற்கப்படக்கூடிய நிலபுலமும் கட்டடங்களும் நிபந்தனையற்ற ஒரு வெகுமதியாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம் அல்லது நன்கொடையாளர் தமது வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கக்கூடிய உடைமையாக, அவர் அல்லது அவளுடைய வாழ்நாளில் தொடர்ந்து அதில் வசிக்கும் ஏற்பாட்டோடு இது செய்யப்படலாம். எந்த நிலபுலங்களையும் கட்டடங்களையும் பத்திரமிட்டு சங்கத்திற்கு மாற்றுவதற்கு முன்பு ஒருவர் சங்கத்தோடு தொடர்புகொள்ள வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் பணத்தை ராஜ்ய மன்ற நிதிக்கு பயன்படுத்துவதற்கு என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
6 உயில்களும் ட்ரஸ்ட்களும்: சட்டப்பூர்வமாய் நிறைவேற்றப்பட்ட ஓர் உயில் மூலம் சொத்தை அல்லது பணத்தை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கலாம், அல்லது ஒரு ட்ரஸ்ட் ஒப்பந்தத்தில் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக (beneficiary) பெயரிடலாம். ஒரு மத அமைப்புக்கு பயன்தரும் ஒரு ட்ரஸ்ட்டுக்கு, வரிச் சலுகைகள் சில கிடைக்கலாம். உயில் அல்லது ட்ரஸ்ட் ஒப்பந்தத்தின் ஒரு நகலை சங்கத்திற்கு அனுப்ப வேண்டும், அந்த உயில் அல்லது ட்ரஸ்ட் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தொகை ராஜ்ய மன்ற நிதிக்கு என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இப்படிப்பட்ட விஷயங்கள் சம்பந்தமாக கூடுதலான தகவலுக்காக, Watch Tower Bible and Tract Society of India, H-58 Old Khandala Road, Lonavla 410 401, MAH., INDIA என்ற முகவரிக்கு எழுதுங்கள்.