உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 5 பக். 24-29
  • நன்கு செவிகொடுத்துக் கேட்பவராய் இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நன்கு செவிகொடுத்துக் கேட்பவராய் இருங்கள்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • இதே தகவல்
  • ‘கேட்கும் விதத்தைக் குறித்து கவனமாக இருங்கள்’
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • அன்போடு கவனித்துக் கேட்பது ஒரு கலை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • நான் எவ்வாறு நன்றாக கவனம்செலுத்த முடியும்?
    விழித்தெழு!—1998
  • செவிகொடுத்து கேட்கும் விதத்தைக் குறித்து கவனமாயிருங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2000
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 5 பக். 24-29

படிப்பு 5

நன்கு செவிகொடுத்துக் கேட்பவராய் இருங்கள்

1 யெகோவாவின் ஊழியராக உங்கள் முன்னேற்றம், நீங்கள் எவ்வாறு செவிகொடுத்துக் கேட்கிறீர்கள் என்பதன்பேரில் கணிசமான அளவு சார்ந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதிலுமாக செவிகொடுத்துக் கேட்பது கற்றுக்கொள்வதில் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கிறது. ஆழ்ந்த கவனத்தோடு கேட்கையில் நீங்கள் செவிகொடுத்து கேட்கிறீர்கள், ஆனால் சொல்லப்படும் காரியத்தின்மீது உங்கள் கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டில்லையென்றால் பேசப்பட்ட சொற்கள் செவிடான காதுகளில்தானே விழுகின்றன. தங்கள் கவனத்தில் ஒரு பகுதியை மாத்திரமே உங்களுக்குக் கொடுத்த ஆட்களிடம் நீங்கள் பேசியிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் எத்தனை அடிக்கடி நீங்கள் சொல்வதை ஒத்துக்கொண்டிருந்தாலும், குறிப்பை உண்மையில் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதும் அதன் காரணமாக நீங்கள் சொன்னதிலிருந்து உண்மையில் பயனடைந்துகொண்டில்லை என்பதும் உங்களுக்குத் தெரிகிறது. அப்படியென்றால் எல்லா சமயங்களிலும், விசேஷமாக தெய்வீக கல்வியின் ஒரு பயிற்சியில் ஆஜராயிருக்கையில் நல்ல செவிகொடுத்துக் கேட்பவராய் இருப்பதற்கு நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்! நீதிமொழிகள் 1:5 சொல்கிறபடியே: “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்.”

2 சபை கூட்டங்கள், யெகோவாவுடைய அமைப்பின் மூலமாக நமக்கு அளிக்கப்பட்டுவரும் கல்வித்திட்டத்தின் பாகமாகும். கவனமாக செவிகொடுத்துக் கேட்பதன் மூலம், யெகோவாவுக்கும் நம்முடைய கல்விக்காக அவர் செய்திருக்கும் ஏற்பாட்டுக்கும் நாம் மரியாதை காண்பிக்கிறோம். ஆனால் கடவுள் நம்முடைய உருவமைப்பையும் சில சமயங்களில் நம் கவனத்தை அலையவிட அனுமதிக்கக்கூடிய மனச்சாய்வையும் அறிந்திருக்கிறார். ஆகவே அவர் அளிக்கும் அபரிமிதமான ஆவிக்குரிய உணவை புசிக்கும்படியாக அழைப்புவிடுக்கையில் அவர் அழுத்தமாகச் சொல்வதாவது: “நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; . . . உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்.” (ஏசா. 55:2, 3) நித்திய ஜீவனை உடையவர்களாயிருந்து அந்தப் பரிசை மற்றவர்கள் பெற உதவிசெய்ய வேண்டுமானால், நாம் கவனமாக செவிகொடுத்து கடவுளுடைய சிந்தனைகளைக் கிரகித்துக்கொள்வது அவசியமாகும்.—எபி. 1:1, 2; 2:1.

3 கவனமாக செவிகொடுத்துக் கேட்பது சரியான மனத்தாழ்மையையும்கூட காண்பிப்பதாய் இருக்கிறது. மனத்தாழ்மையாயிருக்க நம் அனைவருக்கும் நல்ல காரணமிருக்கிறது. நாம் அனைவருமே வேறு ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்; நம்மில் எவருக்கும் எல்லாம் தெரியாது. பேசுகிறவர் சரளமாக பேசுவதில் அல்லது திறமையுள்ள பேச்சாளரின் வேறு ஏதோவொரு பண்பில் குறைவுபட்டாலும்கூட, நாம் கவனம் செலுத்துவதன் மூலமும் அவர் சொல்வதற்கு பிரதிபலிப்பதன் மூலமும் உதவியையும் உற்சாகத்தையும் கொடுக்க உண்மையான மனத்தாழ்மை நம்மை வழிநடத்த வேண்டும். நமக்கு இதற்கு முன் ஒருபோதும் தோன்றியிராத ஏதோவொரு கோணத்திலோ மாறுபடும் ஏதோவொரு கருத்திலோ அவர் அணுகக்கூடும் என்பது யாருக்குத் தெரியும்? ஆவிக்குரியவகையில் பேசினால், பாலகரின் வாயிலிருந்து யெகோவா அறிவொளியை அருளிச்செய்யலாம்.—மத். 11:25.

4 மிக ஜாக்கிரதையாக கவனம்செலுத்துதல் சபை கூட்டங்களின் சம்பந்தமாக அத்தியாவசியமாகும், ஏனென்றால் கற்றுக்கொள்ளும் காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் பொருத்தி உபயோகிக்கப்பட வேண்டும். ‘திருத்தமான அறிவை’ பெறுவதன் மூலமாகவே நம்மால் புதிய ஆளுமையை தரித்துக்கொள்ள முடிகிறது. (கொலோ. 3:9, 10, NW) ஆனால் கவனமாக செவிகொடுத்துக் கேட்கவில்லையென்றால், நுணுக்கமான விவரங்களுக்கு கவனம்செலுத்த தவறுவோமென்றால், நம்முடைய வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் தேவை என்பதை நாம் முழுமையாக மதித்துணராமல் இருக்கலாம், ஆகவே நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி தடைபட்டுவிடக்கூடும். வாய்மொழி அல்லது எழுத்துமுறை மறுபார்வைகளில் சரியான பதில்களைக் கொடுக்க முடிகிறவர்களாக இருப்பதும்கூட முக்கியமாயிருக்கிறது. வாஞ்சையுடன் போற்றுகின்ற மகத்தான நம்பிக்கைக்கான காரணத்தை வெளி ஊழியத்தில் நம்மிடம் வினவுகிறவர்கள் அனைவருக்கும் கொடுக்கமுடிகிறவர்களாயிருப்பது இன்னும் எவ்வளவு அதிக முக்கியமாய் இருக்கிறது!

5 பேசப்படுவதற்கு ஜாக்கிரதையாக கவனம்செலுத்தும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக்கொள்கையில், கேட்கும் காரியங்களை நினைவில் வைக்கும் உங்கள் திறமையை முன்னேற்றுவிப்பீர்கள்.

6 எவ்விதமாக செவிகொடுப்பது. கூட்டங்களில் மற்ற காரியங்கள் நம் கவனத்தை திசைதிருப்ப அனுமதிப்பது எளிது. அந்நாளில் சம்பவித்தக் காரியங்களைக் குறித்து நாம் சிந்தனையில் ஆழ்ந்துவிடவோ அல்லது நாளை செய்யப்படவேண்டிய ஏதோவொன்றைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டோ இருக்கலாம். ஆனால் சொல்லப்படுவதை ஒருவர் கவனமாக செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டில்லையென்றால், அங்கு ஆஜராயிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆகவே சிந்தனை ஓட்டம் தடைபடாமல் காத்துக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் தன்னைத்தானே சிட்சித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. நடந்துகொண்டிருக்கும் கலந்தாலோசிப்புக்கு முழு கவனம்செலுத்தி மனதை அலைபாயவிட அனுமதிப்பதற்கு மறுக்க ஒருவர் தீர்மானமுள்ளவராய் இருக்க வேண்டும். கலந்தாலோசிக்கப்படும் தலைப்புப் பொருளுக்கு அந்நியமான எல்லா சிந்தனைகளுக்கும் மனதில் ஒரு திரைப்போட்டுவிடுவது போல இருக்க வேண்டும். அதுவே கவனத்தை ஒருமுகப்படுத்துவதாகும்.

7 மனதை அலைபாயவிடுவதற்கு அல்லது பகல்கனா காண்பதற்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு நல்ல வழி, குறிப்புகளையும் பேச்சாளர் பயன்படுத்தும் வசனங்களையும் எழுதிக்கொள்வதாகும். குறிப்புகளைச் சுருக்கமாக எழுதுங்கள், ஏனென்றால் அளவுக்கு அதிகமான குறிப்புகள் கவனத்தை சிதறடித்துவிடும், ஒருசிலதாக இருக்கையில் அது கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் உங்களுக்கு உதவக்கூடும். இந்தக் குறிப்புகள் பிற்காலத்தில் பிரயோஜனமாயிருக்கலாம். ஆனால் நீங்கள் மறுபடியும் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்தாவிட்டாலும்கூட அவை சொல்லப்படும் காரியங்கள்மீது உங்கள் கவனத்தை நிலைப்படுத்த நிச்சயமாகவே உதவிசெய்கின்றன. கலந்தாலோசிக்கப்படும் தலைப்புப் பொருளில் நீங்கள் ஆழ்ந்துபோய்விடுகிறீர்கள், இதனால் பேச்சாளரின் முக்கிய விவாதங்களை உங்களால் நுட்பமாகக் குறிப்பிடமுடியும்.

8 வழக்கமான சம்பாஷணையில், அடுத்த நபர் பேசப்படும் தலைப்புப் பொருளின்பேரில் புத்திக்கூர்மையுள்ள கேள்விகளை எழுப்புவாராகில், அவர் செவிகொடுத்துக் கேட்கிறார் என்பதற்கு அது ஒரு நல்ல அறிகுறியாகும். அதேவிதமாகவே தயாரிக்கப்பட்ட ஒரு பேச்சை கேட்டுக்கொண்டிருக்கையில், ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி, பேச்சாளர் அவற்றுக்குப் பதிலளிப்பாரா என்று கவனித்துக்கொண்டிருப்பதாக உங்களை நீங்கள் கண்டால் உங்கள் மனம் தலைப்புப் பொருள் மீதிருக்கிறது என்பதற்கு நல்ல அத்தாட்சியாக இருக்கிறது. மற்ற காரியங்களோடுகூட, அளிக்கப்படும் பொருளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

9 ஒரு சராசரி நபர் பேச்சாளர் பேசக்கூடியதைக் காட்டிலும் அதிக வேகமாக சிந்திக்கிறார். தொடர்பற்ற சிந்தனைகள் மனதிற்குள் நுழைய நேரத்தை இது அனுமதிக்கிறது. சராசரி சிந்திக்கும் வேகம் நிமிடத்துக்கு சுமார் 400 சொற்கள் என்றும் ஆனால் சராசரி பேசும் வேகம் நிமிடத்துக்கு சுமார் 125 சொற்கள் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், அளிக்கப்படும் பொருளின்பேரில் சிந்தனைச்செய்து, அதை சுருக்கமாக தொகுத்து, மறுபார்வைசெய்து, மனதில் உறுதியாக பதியவைப்போமானால் இந்தச் சிந்திக்கும் வேகத்தை நமக்கு அனுகூலமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

10 பேச்சாளர் அளிக்கும் முக்கிய குறிப்புகளைப் பெறுவதற்கு மற்றொரு உதவி சரியான உள்நோக்கத்தோடு செவிகொடுத்துக் கேட்பதாகும். பேச்சாளரின் பொருளையும் பேச்சுமுறையையும் குறைகாணும் நோக்கத்தோடு செவிகொடுப்பது நம்முடைய குறிக்கோள் கிடையாது. ஊழியப் பள்ளியில் நியமிக்கப்பட்ட கண்காணி ஆலோசனை கொடுக்கும் பொறுப்புடையவராய் இருக்கிறார். ஆகவே அது பேச்சாளர் கொடுக்கும் பயனுள்ள தகவல் என்னவாயிருப்பினும் மீதமுள்ள நம்மை அதன்மீது கவனத்தை தாராளமாக ஒருமுகப்படுத்த செய்விக்கிறது.

11 மறுபடியுமாக, பேச்சு கொடுக்கும் மாணாக்கருக்கு பள்ளி கண்காணி ஆலோசனை கொடுக்கும்போது, மற்றொரு மாணாக்கர் அளிக்கப்பட்ட ஆலோசனையை தான் ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது அரிதாகவே ஆக்கப்பூர்வமாயிருக்கிறது. ஆனால் அதே ஆலோசனை தனக்கும்கூட பொருந்துகிறதா, அதிலிருந்து தனிப்பட்டவிதமாக தான் என்ன நன்மை அடையலாம் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்வது நிச்சயமாகவே அவருக்குப் பிரயோஜனமாய் இருக்கும். இவ்விதமாக நல்ல செவிகொடுத்துக் கேட்பவராய் இருப்பதன் மூலம், அவர் தனிப்பட்டவிதமாக பேசுவதற்கு நியமிக்கப்படும் சமயங்களுக்கு மாத்திரமே முன்னேற்றஞ்செய்வதை கட்டுப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக, கொடுக்கப்படும் ஒவ்வொரு பேச்சினாலும் முன்னேறுவதற்கு உதவப்படுகிறார்.

12 இளைஞரும் இளம்பிள்ளைகளும்கூட கவனமாகச் செவிகொடுத்துக் கேட்பவராயிருக்க கற்பிக்கப்பட வேண்டும். பெற்றோரின் கவனமான பார்வையிருக்கும் ஓரிடத்தில் அவர்கள் அமர்ந்திருப்பார்களேயானால், அது உதவியாக இருக்கிறது. அவர்களால் வாசிக்க முடிவதாக இருந்தால், பயன்படுத்தப்படும் பிரசுரத்தின் பிரதியை சொந்தமாக கொண்டிருப்பது அவர்களுக்கு உற்சாகமளிப்பதாயிருக்கும். பொதுவாக பேசுகையில், நிகழ்ச்சியோடு தொடர்பில்லாத பொருளில் நேரத்தைச் செலவிட அவர்களை அனுமதிப்பது ஞானமற்றதாயிருக்கும். செவிகொடுத்துக் கேட்பதற்கு ஒரு தூண்டுகோலாக, வீடு திரும்பியபின் கற்றுக்கொண்டவற்றை சொல்லும்படியாக கேட்கப்படுவர் என்பது அவர்களுக்குச் சொல்லப்படலாம். கூட்டத்தின்போது சொல்லப்பட்ட ஏதோவொன்றை நினைவில் வைத்திருந்தாலோ குறிப்பெடுத்திருந்தாலோ அவர்கள் கனிவோடு பாராட்டப்பட வேண்டும்.—உபா. 31:12.

13 கூட்ட நேரத்துக்கு சற்று முன்பாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தூக்கத்தை உண்டுபண்ணுவதால் அதைத் தவிர்ப்பதற்கு நாம் கவனமுள்ளவர்களாக இருந்தால், கவனத்தை ஒருமுகப்படுத்துவது அதிக எளிதாக வந்துவிடுகிறது. இது ஏனென்றால் சரீர வள ஆதாரங்கள் ஜீரணிப்பதை கவனிக்கும் சுமைக்குள்ளாவதால், சிந்தனைச் செயல்முறையை இயக்குவதற்கு குறைந்தபட்சமே மீதமிருக்கிறது. இவ்விதமாக மனதின் உணர்வுகள் மந்தமாயிருக்க, சொல்லப்படுவதற்கு பிரதிபலிப்பு அல்லது ஆழ்ந்த போற்றுதலில்லாமல் சோம்பேறித்தனமாக வெறுமனே செவிகொடுக்கும் அல்லது மொத்தமாக தூங்கிவிடும் ஆபத்து இருக்கிறது.

14 ஒருவேளை இன்னும் அதிக முக்கியமானது, அளிக்கப்படும் போதனைகளுக்கு ஒழுங்காக ஆஜராயிருப்பதற்கு உங்கள் விவகாரங்களை அட்டவணையிடுவதாகும். அநேக பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புகளை தவறவிட்டு பின்னர் தாங்களாகவே பொருளை மறுபார்வைசெய்ய முயற்சிசெய்கின்றனர். ஆனால் நீங்கள் கேட்காத போதனையிலிருந்து பயனடையமாட்டீர்கள். குடும்பத்தினரோ நண்பர்களோ கூட்டங்களில் ஆஜராயிருப்பதிலிருந்து உங்களைத் தடைசெய்ய அனுமதியாதீர்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து அளிக்கப்படும் சத்தியங்களை உயிர்-காக்கும் ஒழுங்குமுறையோடு கேட்பதற்கு ஆஜராயிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.

15 உங்கள் செவிகொடுத்துக் கேட்கும் திறமையை பரிசோதித்தல். நாம் ஒவ்வொரு வாரமும் சபை கூட்டங்களில் ஐந்து மணிநேரங்கள் செலவழிக்கிறோம். அந்த நேரத்தில் பெரும்பகுதியில் செவிகொடுத்துக் கேட்பதன் மூலம் கற்றுக்கொள்ள நமக்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் தனிப்பட்டவராக கூடியவரை மிகச் சிறந்த விதமாக அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்கிறீர்களா? ஒவ்வொரு வாரமும் பொதுப் பேச்சாளர் சிந்திக்கும் நேர்த்தியான பொருளை எந்த அளவு நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும் ஆஜராயிருந்த பின்பு, ஒவ்வொரு பேச்சின் முக்கிய கருத்தையும் உங்களுடைய சொந்த வார்த்தைகளில் உங்களால் சொல்லமுடியுமா, அல்லது சில சமயங்களில் நிகழ்ச்சிநிரலில் பங்குகொண்டது யார் என்பதைக்கூட உங்களால் நினைவுகூர முடியாதிருப்பதை நீங்கள் காண்கிறீர்களா? கவனத்தை ஒருமுகப்படுத்த அதிகமாக முயற்சி எடுப்பதன் மூலம் ஒருவேளை குறிப்புகளை எடுப்பதன் மூலமும்கூட அதிக முழுமையாக நீங்கள் பயனடையக்கூடுமா? முயற்சித்துப் பாருங்கள். பின்னர் கூட்டங்களுக்குப் பிறகு, மற்றவர்களோடு கலந்துபேசுகையில் முக்கிய கருத்துக்களை மறுபார்வை செய்யுங்கள்.

16 நம்முடைய பல்வேறு வாராந்தர கூட்டங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு சபையார் குறிப்புச்சொல்லும்படி அழைக்கப்படுகின்றனர். அந்தக் குறிப்புகள் அடிக்கடி பல மணிநேர தனிப்பட்ட படிப்பையும் பல ஆண்டு அனுபவத்தையும் பிரதிபலிக்கின்றன. மற்றவர்கள் குறிப்புகள் சொல்கையில், அவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை நீங்கள் உண்மையில் செவிகொடுத்துக் கேட்கிறீர்களா? சொல்லிமுடித்தப் பின்பு, அவர்கள் சொன்னவற்றை சுருக்கமாக உங்களுடைய சொந்த வார்த்தைகளில் திரும்பச் சொல்லமுடிகிற வகையில் போதிய அளவு கவனத்துடன் செவிகொடுத்துக் கேட்கிறீர்களா? அதையே செய்ய முயற்சித்துப் பாருங்கள், நீங்கள் உண்மையில் எந்தளவு கேட்கிறீர்கள் என்பதைக் குறித்து மகிழ்ந்துபோவீர்கள்.

17 இந்தக் கூட்டங்களில், அதிகமான வாசிப்பும்கூட செய்யப்படுகிறது. காவற்கோபுர படிப்பு மற்றும் சபை புத்தகப்படிப்பிலும் படிப்பு கட்டுரையின் பாராக்கள் வாசிக்கப்படுகின்றன. வாசிக்கப்படுவதை நீங்கள் உண்மையில் செவிகொடுத்துக் கேட்கிறீர்களா அல்லது வாசிப்பின்போது உங்கள் மனம் அலைபாய அனுமதிக்கிறீர்களா? நேரம் அனுமதியாதிருப்பதால் வாய்மொழி குறிப்புகளின் மூலம் சிந்திக்கப்படமுடியாத ஏராளமான விவரங்கள் பாராக்களில் இருக்கின்றன. அடுத்து குறிப்புச்சொல்கிறவர்கள் பிரதான குறிப்புகளை மறுபடியும் மறுபடியும் கூறுவது மனதில் பொருளை தெளிவாக பதியவைக்க உதவுகிறது. கூட்டங்களில் வாசிக்கப்படும் அனைத்தையும் உண்மையில் செவிகொடுத்துக் கேட்டால் நாம் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும்! அச்சிடப்பட்ட பொருளில் உங்கள் கண்களை ஒருமுகப்படுத்தி அதேசமயத்தில் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தால் அவ்விதமாக நீங்கள் செய்வதற்கு உதவியாக இருக்கும்.

18 ஆர்வத்துடன் செவிகொடுப்பவர்கள் பலனளிக்கப்படுகின்றனர். ஆர்வத்துடன் செவிகொடுப்பவர்கள் கற்றுக்கொள்ள அதிகமிருப்பதை உணர்ந்து முடிந்தவரை அதிகத்தைப் பெற்றுக்கொள்ள ஆவலாயிருக்கின்றனர். நீதிமொழிகள் 2:3, 4-லுள்ள ஆலோசனைக்கு அவர்கள் செவிசாய்க்கின்றனர்: “ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடு.” தேடுகையில், யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார், ஏனென்றால் அவர் வாக்களித்திருக்கிறார்: “அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். . . . நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.”—நீதி. 2:5, 9.

19 நன்கு செவிகொடுத்துக் கேட்போராய் இருப்பதற்கு நம்மைநாமே சிட்சித்துக்கொள்ள வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அது எவ்வளவு பலன்தருகிறது! நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி உடனடியாக வெளியாகிறது. நம்முடைய வாழ்க்கையில் பயனுள்ள மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மேலும் நற்செய்தியை மேடையிலிருந்தும் வெளி ஊழியத்திலும் அறிவிக்கும் நம்முடைய திறமை முன்னேறுகிறது.

20 தனிப்பட்ட படிப்புக்கான நம்முடைய நேரம் கட்டுப்படுத்தப்பட்டதாக ஒருவேளை இருந்தாலும், சபை கூட்டங்களில் அதிகமாக செவிகொடுத்துக் கேட்பதற்கு நம் அனைவருக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படியென்றால் செவிகொடுத்துக் கேட்கும் பண்பு எவ்வளவு முக்கியமானது! கேட்கும் காரியங்கள் யெகோவாவுக்கு நம்முடைய சேவையையும் நம்முடைய நித்திய ஜீவனையும் உட்படுத்துவதால் இயேசுவின் புத்திமதி எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது: “நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்”!—லூக். 8:18.

[கேள்விகள்]

1-5. செவிகொடுத்துக் கேட்பது என்பதன் பொருள் என்ன, விசேஷமாக சபை கூட்டங்களில் அது ஏன் முக்கியமாய் இருக்கிறது?

6-8. பேச்சு ஒன்று கொடுக்கப்படுகையில் உங்கள் மனம் அலைபாய்வதிலிருந்து எவ்விதமாக காத்துக்கொள்ளலாம்?

9. ஒரு பேச்சை செவிகொடுத்துக் கேட்கையில், ஒப்பிடப்படும் சிந்தனையின் அதிவேகத்தை எவ்விதமாக நல்ல அனுகூலமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்?

10, 11. சரியான உள்நோக்கம் எவ்விதமாக செவிகொடுத்துக் கேட்பதில் உதவியாக இருக்கமுடியும்?

12. என்ன விதத்தில் பிள்ளைகள் நல்ல செவிகொடுத்துக் கேட்பவராயிருக்க கற்றுக்கொள்ள முடியும்?

13, 14. சாப்பிடும் பழக்கங்கள் எவ்விதமாக நாம் செவிகொடுத்துக் கேட்பதை பாதிக்கக்கூடும்?

15, 16. எவ்விதமாக கூட்டங்களில் நம்முடைய செவிகொடுத்துக் கேட்கும் திறமையை பரிசோதித்து முன்னேற்றுவிக்கலாம் என்பதை விளக்கவும்.

17. பாராக்கள் வாசிக்கப்படுகையில் நம்முடைய கவனத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க எது உதவும்?

18-20. ஆர்வத்துடன் செவிகொடுப்பவர்கள் எவ்விதமாக பலனளிக்கப்படுகின்றனர்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்