உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be பக். 9-பக். 12 பாரா. 5
  • கடவுளுடைய வார்த்தையில் இன்பம் காணுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய வார்த்தையில் இன்பம் காணுங்கள்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா பேசுவதை கேளுங்கள்
  • தினந்தோறும் பைபிளை வாசியுங்கள்
  • கடவுளுடைய வார்த்தையை முழுமையாக வாசியுங்கள்
  • தினந்தோறும் பைபிளை வாசிப்பதிலிருந்து பயனடைதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • சிரத்தையோடு வாசியுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • பைபிள் வாசிப்பீர்—இன்பம் காண்பீர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be பக். 9-பக். 12 பாரா. 5

கடவுளுடைய வார்த்தையில் இன்பம் காணுங்கள்

“யெகோவாவின் வேதத்தில் இன்பம் காணும்” மனிதன் சந்தோஷமுள்ளவன். அப்படிப்பட்டவன் கடவுளுடைய வார்த்தையை “இரவும் பகலும் தாழ்ந்த குரலில்” வாசிக்கிறான். (சங். 1:1, 2, NW) நீங்கள் அவ்வாறு இன்பம் காண்கிறீர்களா? கடவுளுடைய வார்த்தையிலிருந்து இன்னுமதிக மகிழ்ச்சியை எப்படி பெறலாம்?

யெகோவா பேசுவதை கேளுங்கள்

வார்த்தைகளை வெறுமனே வாசிக்காதீர்கள். வாசிப்பவற்றை மனத்திரையில் பாருங்கள். மேற்கோளை வாசிக்கும்போது, சம்பந்தப்பட்ட நபரின் குரலை கற்பனையில் கேளுங்கள். பைபிளின் ஆரம்ப அதிகாரங்களை வாசிக்கையில், மனிதனுக்காக பூமி எவ்வாறு தயார்படுத்தப்படுகிறது என யெகோவாவே படிப்படியாக வெளிப்படுத்துவதைக் கேளுங்கள். முதல் மனிதனை படைப்பதற்கான நேரம் வந்துவிட்டதென கைதேர்ந்த வேலையாளாகிய தமது குமாரனிடம் அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். இக்காட்சியை கற்பனை செய்து பாருங்கள்: ஆதாமும் ஏவாளும் கலகம் செய்கிறார்கள், கடவுள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கிறார், அதன்பின் அவர்களை பரதீஸிலிருந்து வெளியேற்றுகிறார். (ஆதியாகமம், அதி. 1-3) இயேசு கிறிஸ்துவை கடவுளுடைய நேசகுமாரன் என்றும், அவருக்குப் பிரியமானவர் என்றும், மனிதவர்க்கத்திற்காக தம் உயிரைக் கொடுக்க அவரால் அனுப்பப்பட்டவர் என்றும் வானத்திலிருந்து ஒரு குரல் அறிவிப்பதை வாசிக்கையில் பிரமிப்படையுங்கள். (மத். 3:16, 17) “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என யெகோவா சொல்வதைக் கேட்கும் அப்போஸ்தலனாகிய யோவானின் உணர்ச்சிகளை சற்று உணர்ந்து பாருங்கள். (வெளி. 21:5) நிச்சயமாகவே, இந்த விதத்தில் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது இனிய அனுபவம்!

கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவை தொடர்ந்து வாசியுங்கள்; அப்போது, யெகோவா மாட்சிமை பொருந்தியவர், பிரமிக்கத்தக்கவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். யெகோவா நம்மை நேசிக்கிறார், நம்மை இரக்கத்தோடு நடத்துகிறார், அவரது சித்தத்தை செய்ய தொடர்ந்து பணிவோடு முயற்சி செய்யும்போது உதவியளிக்கிறார், நாம் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றி காண வழிகாட்டுகிறார் என்பதையெல்லாம் அறிகையில் அவரிடம் சுண்டி இழுக்கப்படுவீர்கள்.—யோசு. 1:8; சங். 8:1; ஏசா. 41:10.

பைபிளை வாசிக்க எவ்வளவு அதிக நேரம் செலவழிக்கிறீர்களோ அவ்வளவு அதிக திருப்தியையும் பெறுவீர்கள்; ஏனெனில் உங்களைப் பற்றிய கடவுளுடைய சித்தத்தை அதிகமதிகமாக தெரிந்துகொள்வீர்கள். அதுமட்டுமல்ல, இன்னும் பல காரணங்களாலும் இன்பம் பெறுவீர்கள். நீங்கள் வாசிக்கும் விஷயங்கள் பிரச்சினைகளை ஞானமாக சமாளிக்க உதவும்போது, சங்கீதக்காரனைப் போல் நீங்களும் இப்படி சொல்வீர்கள்: “உமது நினைப்பூட்டுதல்கள் அருமையானவை. அதனால்தான் என் ஆத்துமா அவற்றை கடைப்பிடிக்கிறது.” (சங். 119:129, NW) உங்கள் சிந்தனைகளையும் விருப்பங்களையும் தெய்வீக சித்தத்திற்கு இசைவாக பக்குவப்படுத்த உதவும் நியமங்களை பைபிளிலிருந்து பகுத்தறியும்போதும் நீங்கள் சந்தோஷமடைவீர்கள்.—ஏசா. 55:8, 9.

பைபிள், சரியான ஒழுக்க பாதையை நமக்கு காட்டி, அதில் நம்மை வழிநடத்தி, தீங்கிலிருந்து பாதுகாக்கிறது. பைபிளை வாசிக்கையில், அபூரண மனித ஆசைகளுக்கு நாம் இடங்கொடுத்துவிட்டால் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்த தகப்பனாக யெகோவா இருப்பதை புரிந்துகொள்கிறோம். அவரது உயர்ந்த ஒழுக்க தராதரங்களை அசட்டை செய்வதன் பயங்கர விளைவுகளால் நாம் துன்பப்படுவதை அவர் விரும்புவதில்லை. நம்மீது அவருக்கு கரிசனை உண்டு; நாம் மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்ந்து சந்தோஷம் காண வேண்டுமென அவர் விரும்புகிறார். அப்படிப்பட்டவர் நம் கடவுளாகவும் பரலோக தகப்பனாகவும் இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம் என்பதை இன்னுமதிகமாக புரிந்து போற்றுவதற்கு அவரது வார்த்தையை வாசிப்பது உதவியாயிருக்கும்.

தினந்தோறும் பைபிளை வாசியுங்கள்

கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிப்பவர் “செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்” என சங்கீதக்காரன் சொன்னார். (திருப்பா. [சங்கீதம்] 1:3, பொது மொழிபெயர்ப்பு) ஆம், நம் அபூரணம், சாத்தானது பொல்லாத உலகம், நம்மை விழுங்க பிசாசானவன் எடுக்கும் முயற்சிகள் ஆகிய எல்லாவற்றின் மத்தியிலும், யெகோவாவுடனான உறவு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் நம்மால் வெற்றி பெற முடியும்; ஆனால் அவரது வார்த்தையை தவறாமல் படித்து வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது மட்டுமே.

இந்த உலகத்தினால் நமக்கு பல பிரச்சினைகள் ஏற்படுவதால், படைப்பாளரின் சிந்தனையை கிரகிக்க தினமும் ஒருசில நிமிடம் எடுத்துக்கொண்டாலும் தெம்படைவோம். விசுவாசத்தின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட சிலருக்கு, செய்தித்தாள் கட்டுரைகளில் அங்குமிங்கும் மேற்கோள் காட்டப்பட்டிருந்த ஒருசில வசனங்கள்தான் கைவசம் இருந்தன. இந்த வசனங்களை வெட்டி வைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்து, தியானித்தனர். யெகோவா அவர்கள் முயற்சிகளை ஆசீர்வதித்தார், ஏனெனில் அவருடைய வார்த்தையிலிருந்து அறிவைப் பெற அந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய முடிந்ததோ அதை அவர்கள் செய்தனர். (மத். 5:3, NW) நம்மில் பெரும்பாலோருக்கோ அதிக சுதந்திரம் இருக்கிறது. நாள்தோறும் ஒரு பைபிள் வசனத்தை அவசர அவசரமாக வாசித்துவிட்டாலே ஏதோ அற்புத பலன் கிடைக்கும் என நினைப்பது தவறு. ஆனால் தினமும் பைபிளின் ஒரு பகுதியை வாசிப்பதையும் தியானிப்பதையும் கடைப்பிடிப்பதையும் முதல் இடத்தில் வைத்தால் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைப்பது நிச்சயம்.

எதார்த்தமாக பார்த்தால், நாம் எவ்வளவுதான் சிறந்த திட்டங்கள் போட்டாலும் அவை கைகூடாமல் போகலாம். அப்படிப்பட்ட சமயத்தில், அத்தியாவசியமான காரியத்திற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, வேண்டுமென்றே ஓரிரு நாட்களுக்கு நாம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதில்லை. அதுபோல், வாழ்க்கையில் என்ன நடந்தாலும்சரி, சத்தியமென்னும் தண்ணீரை அருந்தி புத்துணர்ச்சி பெற கொஞ்ச நேரத்தை ஒதுக்கத்தான் வேண்டும்.—அப். 17:11.

கடவுளுடைய வார்த்தையை முழுமையாக வாசியுங்கள்

முழு பைபிளையும் நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரை முழுவதும் வாசிப்பதை நினைத்து சிலர் மலைத்துப் போயிருக்கின்றனர். ஆகவே முழு பைபிளையும் வாசிக்க விரும்பிய அநேகர் முதலில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை வாசிக்க துவங்கினர். ஏன்? ஏனெனில், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்பிய அவர்களால், அந்த பைபிள் புத்தகங்கள் தங்கள் வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகின்றன என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடிந்திருக்கலாம். அல்லது ஒருவேளை, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சிறியது என்பதால்—பைபிளில் கால் பகுதிக்கும் சற்று அதிகம்தான் என்பதால்—சீக்கிரம் வாசித்து முடித்துவிடலாம் என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அந்த 27 புத்தகங்களை வாசித்த பிற்பாடு, அவர்கள் எபிரெய வேதாகமத்தின் 39 புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து மகிழ்ச்சி கண்டனர். எபிரெய வேதாகமத்தை வாசித்து முடிக்கும் சமயத்திற்குள், தவறாமல் பைபிள் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. ஆகவே இரண்டாம் முறையாக கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை வாசிக்க துவங்கினர், அதிலிருந்து பைபிள் வாசிப்பை நிறுத்தவே இல்லை. நீங்களும் அதேபோல் கடவுளுடைய வார்த்தையை தினமும் வாசிப்பதை வாழ்நாள் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

வாசிக்கத் தெரியாத எவரேனும் உங்கள் குடும்பத்திலோ சபையிலோ இருக்கிறாரா? அவருக்கு பைபிளை தவறாமல் வாசித்துக் காட்ட ஏன் முன்வரக்கூடாது? இதனால் உங்களுக்கும் பயனுண்டு; கேட்பதை சிந்தித்துப் பார்த்து வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது அவருக்கும் பயனுண்டு.—வெளி. 1:3.

காலப்போக்கில், பைபிளை வாசிக்கும்போது விசேஷித்த விதத்தில் ஆராய்ச்சிகள் செய்ய நீங்கள் விரும்பலாம். பைபிளின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே உள்ள சம்பந்தத்தை இன்னுமதிகமாக புரிந்துகொள்ள இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் சில உதவலாம். உங்கள் பைபிளில் ஓரக்குறிப்புகள் இருந்தால், சரித்திர விவரங்களையும் ஒத்த பதிவுகளையும் காண அவை உங்களுக்கு உதவலாம். பல்வேறு சங்கீதங்களும் இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களின் கடிதங்களும் என்னென்ன சூழ்நிலைகளில் எழுதப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ளவும் அவை உதவலாம். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள், இடங்கள், பண்புகள் ஆகியவற்றின்பேரில் திரளான பின்னணித் தகவலை வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகம் அளிக்கிறது. அப்புத்தகத்தில், பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களையும், ஒரே காலப்பகுதியில் வாழ்ந்த ராஜாக்களையும் தீர்க்கதரிசிகளையும், அநேக பைபிள் சம்பவங்களுக்கான தோராயமான தேதிகளையும் பற்றிய அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கற்ற விஷயங்களை நீங்கள் தியானிக்கும்போது, கடவுளின் மக்கள் எதிர்ப்பட்ட சில நிலைமைகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்வீர்கள். யெகோவா ஏன் தமது மக்களை அவ்விதமாக கையாண்டார் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள். அரசாங்கங்கள், மக்கள், தனிநபர்கள் ஆகியோரது செயல்களை யெகோவா எவ்வாறு மதிப்பிடுகிறார் என்பதை காண்பீர்கள். இது, அவருடைய சிந்தனையை ஆழமாக புரிந்துகொள்ள உதவும்.

சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களை கற்பனை செய்து பார்க்கும்போது பைபிள் சரித்திரம் இன்னும் சுவாரஸ்யமாகும். பைபிள் நாடுகளின் வரைபடங்கள் அவற்றின் இயற்கை அமைப்பையும் வெவ்வேறு பகுதிகளுக்கிடையே இருக்கும் தூரத்தையும் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, இஸ்ரவேலர் செங்கடலை தோராயமாக எவ்விடத்தில் கடந்தனர்? வாக்குப்பண்ணப்பட்ட தேசம் எவ்வளவு பெரியதாக இருந்தது? பூமியில் ஊழியம் செய்கையில் இயேசு எவ்வளவு தூரம் நடந்து சென்றார்? அப்போஸ்தலனாகிய பவுல், மிஷனரி பயணங்களின்போது எப்படிப்பட்ட காட்சிகளை பார்த்தார்? வரைபடங்களும் நிலயியல் விளக்கங்களும் அநேக நுணுக்க விவரங்களைத் தந்து உங்கள் வாசிப்பிற்கு உயிரூட்டும். பைபிள் நாடுகளின் வரைபடங்களை எங்கே காணலாம்? அவற்றில் சில, பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளில் காணப்படுகின்றன. உட்பார்வை புத்தகத்தில் சுமார் 70 வரைபடங்கள் உள்ளன; முதல் தொகுதியின் முடிவில் வரைபட இன்டெக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற வரைபடங்களை கண்டுபிடிக்க உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ்-ஐ பயன்படுத்துங்கள். இவை எதுவும் இல்லை என்றால், காவற்கோபுர பத்திரிகையில் வெளிவரும் வரைபடங்களை பைபிள் வாசிப்பின்போது பயன்படுத்துங்கள்.

“உமது சிந்தனைகள் எத்தனை அருமையானவை! தேவனே, அவற்றின் தொகை எத்தனை பெரிது!” என தாவீது ராஜா யெகோவாவை துதித்ததாக எபிரெய வேதாகமம் சொல்கிறது. (சங். 139:17, NW) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், யெகோவாவைத் துதித்ததற்கான காரணத்தை அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.” (2 கொ. 4:6, பொ.மொ.) தாவீதும் பவுலும் வாழ்ந்த காலங்களுக்கு இடையே பல நூற்றாண்டு கால வித்தியாசம் இருந்தது; ஆனாலும் இருவருமே கடவுளுடைய வார்த்தையில் இன்பம் கண்டார்கள். யெகோவா தமது ஏவப்பட்ட வார்த்தையில் உங்களுக்காக பதிவு செய்திருக்கும் விஷயங்கள் அனைத்தையும் வாசிக்க நேரமெடுத்தால் நீங்களும் அவ்விதமாகவே இன்பம் காணலாம்.

தினசரி பைபிள் வாசிப்பில் வெற்றி காண

தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அளிக்கப்படும் கல்வியின் பெரும்பகுதி பைபிள் வாசிப்பை மையமாக கொண்டது. அதில் பங்குகொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு வாரமும் தனிப்பட்ட விதமாக வாசிப்பதற்காகவும் பள்ளியில் கலந்தாலோசிப்பதற்காகவும் பைபிளின் ஒரு சிறிய பகுதி ஒதுக்கப்படுகிறது. இந்த அட்டவணையைப் பின்பற்றினால் படிப்படியாக முழு பைபிளையும் படித்து விடலாம்.

தினசரி பைபிள் வாசிப்பை உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சமாக்குவதற்கு, தவறாமல் நேரத்தை ஒதுக்குங்கள். அதிகாலை, நண்பகல், மாலை, இரவு படுப்பதற்கு முன் என எந்த நேரமாகவும் அது இருக்கலாம். தினமும் நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஒருசில வசனங்களை வாசிப்பது, தவறாமல் படிக்கும் பழக்கத்தை உண்டுபண்ணாது.

நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால், குடும்பத்தார் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, நல்ல பைபிள் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள். குடும்பமாக சேர்ந்து பைபிளை வாசிப்பதும், தனிப்பட்ட விதமாக பைபிளை வாசிக்க அவர்களுக்கு தூண்டுகோலாக அமையும்.

தினமும் பைபிளை வாசிப்பதற்கு சுயகட்டுப்பாடு தேவை. அதற்கான ஆசை பிறப்பிலேயே வந்துவிடுவதில்லை. கடவுளுடைய வார்த்தையின்மீது நீங்கள் “வாஞ்சையை வளர்த்துக்கொள்ள” வேண்டும். (1 பே. 2:2, NW) வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளும்போது உங்கள் ஆவிக்குரிய பசி அதிகரிக்கும். அப்போது, யெகோவா நமக்காக அளித்திருக்கும் ஆன்மீக பொக்கிஷங்களை இன்னும் ஆழமாக புரிந்துகொள்வதற்காகவும் போற்றுவதற்காகவும் விசேஷ ஆராய்ச்சிகள் செய்து மேன்மேலும் படிக்க விரும்புவீர்கள்.

பைபிளை வாசிக்கும்போது, வாசிக்கும் விஷயத்தின் அர்த்தத்தை—யெகோவாவைப் பற்றி அது என்ன தெரிவிக்கிறது, அதை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பயன்தரும் விதத்தில் கடைப்பிடிக்கலாம், மற்றவர்களுக்கு உதவ எவ்வாறு அதைப் பயன்படுத்தலாம் என்பவற்றை—சிந்தித்துப் பார்க்க நேரமெடுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்