‘கேட்கும் விதத்தைக் குறித்து கவனமாக இருங்கள்’
செவிகொடுத்துக் கேட்பது, கற்றுக்கொள்வதில் உட்பட்டிருக்கும் முக்கிய அம்சம். தப்பிப்பிழைப்பதற்கான ஒருவரது எதிர்பார்ப்பையும் அது பாதிக்கலாம். யெகோவா, தமது மக்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்கையில் மோசேயிடம் அறிவுரைகளை வழங்கினார். அதன்படி, தலைப்பிள்ளையை தூதன் கொல்லாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மோசே இஸ்ரவேலின் மூப்பர்களிடம் தெரிவித்தார். (யாத். 12:21-23) மூப்பர்கள் அந்தத் தகவலை ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரிவித்தனர். இது வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. மக்கள் கவனமாக செவிகொடுத்துக் கேட்க வேண்டியிருந்தது. அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? “யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் செய்தார்கள். அவர்கள் அப்படியே செய்தார்கள்” என பைபிள் குறிப்பிடுகிறது. (யாத். 12:28, 50, 51, NW) அதன் காரணமாக இஸ்ரவேலர் வியத்தகு விதத்தில் விடுதலையைப் பெற்றார்கள்.
இன்று, இன்னும் மகத்தான விடுதலைக்காக யெகோவா நம்மை தயார்படுத்தி வருகிறார். நிச்சயமாகவே, அவர் தரும் அறிவுரையை கூர்ந்து கவனிப்பது தகும். அப்படிப்பட்ட அறிவுரை சபை கூட்டங்களில் வழங்கப்படுகிறது. அக்கூட்டங்களிலிருந்து நீங்கள் முழுமையாக பயனடைகிறீர்களா? இது, எவ்வளவு நன்றாக செவிகொடுத்துக் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்ததே.
கூட்டங்களில் வழங்கப்படும் அறிவுரையின் முக்கிய குறிப்புகளை ஞாபகம் வைக்கிறீர்களா? வாராவாரம், அந்த அறிவுரையை உங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு வழிதேடுவது உங்கள் பழக்கமா?
உங்கள் இருதயத்தை தயார்படுத்துங்கள்
கிறிஸ்தவ கூட்டங்களில் வழங்கப்படும் அறிவுரையிலிருந்து முழுமையாக பயனடைய நம் இருதயத்தை தயார்படுத்த வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை, யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. யோசபாத் உண்மை வணக்கத்தின் சார்பாக தைரியமான நிலைநிற்கை எடுத்தார். அவர் “மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றி,” யெகோவாவின் சட்டங்களை யூதாவின் சகல நகரத்தாருக்கும் கற்பிக்க பிரபுக்களையும் லேவியர்களையும் ஆசாரியர்களையும் நியமித்தார். இருந்தாலும், “மேடைகள் தகர்க்கப்படவில்லை.” (2 நா. 17:6-9; 20:33) பொய்க் கடவுட்களின் வணக்கமும் புறமத மேடைகளில் யெகோவாவிற்கு செலுத்தப்பட்ட தகாத வணக்கமும் அந்தளவு வேரூன்றிப் போயிருந்ததால், அவை முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
மக்களுக்கு அறிவுரை அளிக்க யோசபாத் செய்த ஏற்பாடு ஏன் நிரந்தர பலனளிக்கவில்லை? “ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள் [“தயார்படுத்தாதிருந்தார்கள்,” NW]” என்கிறது பதிவு. சொன்னவற்றை அவர்கள் கேட்டார்கள், ஆனால் அதன்படி நடக்கத் தவறினார்கள். எருசலேமிலிருந்த ஆலயத்திற்குச் சென்று பலிகள் செலுத்துவதை அசௌகரியமாக அவர்கள் கருதியிருக்கலாம். எப்படியிருந்தாலும், அவர்கள் இருதயம் விசுவாசத்தினால் தூண்டப்படவில்லை.
விட்டுவந்த சாத்தானுடைய உலகின் வழிகளுக்கே நாம் மீண்டும் திரும்பாதிருக்க, யெகோவா இன்று அளிக்கும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளும்படி நம் இருதயத்தைத் தயார்படுத்த வேண்டும். எப்படி? ஒரு முக்கிய வழி, ஜெபம் செய்வது. தெய்வீக அறிவுரையை நன்றியுணர்வோடு ஏற்றுக்கொள்ளும் மனதை தரும்படி கேட்டு நாம் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும். (சங். 27:4; 95:2) நம் சகோதரர்களின் முயற்சிகளைப் போற்ற இது உதவும். அவர்கள் அபூரணர்கள் என்றாலும், யெகோவா தம் மக்களுக்கு அறிவுரை வழங்குவதில் தங்களைப் பயன்படுத்திக் கொள்ளும்படிக்குத் தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள். நன்றியுணர்வை கேட்டு ஜெபம் செய்வது, புதுப் புது விஷயங்களை கற்றுக்கொள்வதற்காக மட்டுமல்ல, ஏற்கெனவே கற்ற விஷயங்களின்பேரில் போற்றுதலை அதிகரிக்க வாய்ப்பளிப்பதற்காகவும் யெகோவாவிற்கு நன்றி செலுத்த நம்மைத் தூண்டும். கடவுளுடைய சித்தத்தை முழுமையாக செய்ய வேண்டுமென்ற ஆவல்கொண்டவர்களாக இவ்வாறு ஜெபிப்போமாக: “கர்த்தாவே [“யெகோவாவே,” NW] உமது வழியை எனக்குப் போதியும், . . . நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.”—சங். 86:11.
கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்
கூர்ந்து கேட்கவிடாமல் தடுக்கும் இடையூறுகள் அநேகம் இருக்கின்றன. கவலைகள் பல நம் மனதில் வட்டமிடலாம். சபைக்கு வெளியிலோ உள்ளேயோ எழும் ஏதேனும் சத்தத்தால் அல்லது நடமாட்டத்தால் நம் கவனம் சிதறலாம். அசௌகரியத்தின் காரணமாகவும் கவனிப்பது கடினமாக இருக்கலாம். முக்கியமாக, சிறு பிள்ளைகளோடு வருவோருக்கு கவனிப்பது மிகவும் கடினம். நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனிக்க எது நமக்கு உதவும்?
கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பேச்சாளர்மீதே கண்களை பதிய வையுங்கள்; அது கவனிக்க உதவியாக இருக்கும். பைபிள் வசனத்தை அவர் சொல்லும்போது, அது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் திறந்து பார்த்து, அவருடன் சேர்ந்து வாசியுங்கள். ஒவ்வொரு சின்ன சத்தத்திற்கும் அசைவிற்கும் உடனடியாக திரும்பிப் பார்க்க மனம் தூண்டினாலும் அதை கட்டுப்படுத்துங்கள். கண்கள் துருதுருவென அங்குமிங்கும் அலைபாய்ந்து மனதை பல காட்சிகளால் நிரப்பி கவனத்தை திசைதிருப்பினால், பேச்சின் பெரும்பகுதியை தவறவிட்டுவிடுவீர்கள்.
ஏதேனும் ‘கவலைகளால்’ நிகழ்ச்சியை கூர்ந்து கவனிப்பது கடினமாக இருக்கையில், மனதிற்கும் இருதயத்திற்கும் நிம்மதி கொடுத்து கவனிக்க உதவுமாறு யெகோவாவிடம் ஜெபியுங்கள். (சங். 94:19, NW; பிலி. 4:6, 7) தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் ஜெபியுங்கள். (மத். 7:7, 8) சபைக் கூட்டங்கள் யெகோவாவின் ஏற்பாடாகும். அவற்றிலிருந்து நீங்கள் பயனடைய வேண்டுமென்றே அவர் விரும்புகிறார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.—1 யோ. 5:14, 15.
பேச்சுக்களைக் கேட்பது
பேச்சுக்களில் உங்களுக்குப் பிடித்த குறிப்புகளை ஒருவேளை நீங்கள் ஞாபகம் வைத்திருப்பீர்கள். இருந்தாலும், பேச்சிலுள்ள சிறந்த குறிப்புகளை நினைவில் வைப்பதோடு கேட்கும் கடமை முடிந்துவிடாது. பேச்சை பயணத்திற்கு ஒப்பிடலாம். போகும் வழியில் பார்த்து ரசிக்க அநேக அழகிய காட்சிகள் இருக்கலாம், ஆனால் போய் சேர வேண்டிய இடம்தான் முக்கியமானது. அதுவே அடைய வேண்டிய இலக்கு. ஒரு குறிப்பிட்ட முடிவை எட்டும்படி அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்போரை உந்துவிக்க பேச்சாளர் முயல்வார்.
யோசுவா இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கொடுத்த பேச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இது யோசுவா 24:1-15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுற்றுவட்டார தேசங்களின் விக்கிரகாராதனையிலிருந்து முற்று முழுக்க விலகி, உண்மை வணக்கத்தின் சார்பாக உறுதியான நிலைநிற்கை எடுக்கும்படி அத்தேசத்தாரை தூண்டுவிப்பதே யோசுவாவின் குறிக்கோள். அது ஏன் அவ்வளவு முக்கியமாக இருந்தது? பொய் வணக்கம் பரவலாக இருந்ததன் காரணமாக யெகோவாவிற்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையை இழக்கும் அபாயத்தில் தேசத்தார் இருந்தனர். யோசுவாவின் மன்றாட்டை கேட்ட மக்கள், “வேறே தேவர்களைச் சேவிக்கும்படி யெகோவாவை விட்டு விலகுவது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. . . . நாங்களும் யெகோவாவைச் சேவிப்போம்” என்றனர். சொன்னபடியே யெகோவாவைச் சேவித்தனர்!—யோசு. 24:16, 18, 31, தி.மொ.
பேச்சைக் கேட்கும்போது அதன் குறிக்கோளை உணர்ந்துகொள்ள முயலுங்கள். பேச்சாளர் சொல்லும் குறிப்புகள் எவ்வாறு அந்தக் குறிக்கோளை அடைய உதவுகின்றன என்பதை கவனியுங்கள். சொல்லப்படும் விஷயங்கள் உங்கள் பங்கில் எதைத் தேவைப்படுத்துகின்றன என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
கலந்தாலோசிப்புகளின்போது கவனித்துக் கேட்பது
காவற்கோபுர படிப்பின்போதும், சபை புத்தகப் படிப்பின்போதும், சிலசமயம் ஊழியக் கூட்டத்தின்போதும் பைபிள் சார்ந்த பிரசுரங்களிலிருந்து கேள்வி-பதில் கலந்தாலோசிப்புகள் நடத்தப்படுகின்றன.
கலந்தாலோசிப்புகளைக் கேட்பது, சில அம்சங்களில், உரையாடலில் பங்குகொள்வதைப் போன்றது. முழுமையாக பயன் பெற, கூர்ந்து கேளுங்கள். எந்தக் கோணத்தில் கலந்தாலோசிப்பு நடைபெறுகிறது என்பதை கவனியுங்கள். நடத்துனர் எவ்வாறு மையப் பொருளையும் முக்கிய குறிப்புகளையும் வலியுறுத்துகிறார் என்பதை கவனியுங்கள். அவரது கேள்விகளுக்கு மனதிற்குள் பதில் சொல்லிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் சொல்லும் விளக்கங்களையும் நடைமுறை குறிப்புகளையும் கவனித்துக் கேளுங்கள். மற்றவர்கள் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது சாதாரண விஷயம்கூட புதிய கோணத்தில் தெரியலாம். விசுவாசத்தை வெளிக்காட்டும் குறிப்புகளை நீங்களும் சொல்லி, கருத்துப் பரிமாற்றத்திற்கு பங்களியுங்கள்.—ரோ. 1:12, NW.
கட்டுரையை முன்கூட்டியே படித்தால், கலந்தாலோசிப்பில் ஒன்றிவிட முடியும், மற்றவர்கள் சொல்லும் குறிப்புகளையும் கவனித்துக் கேட்க முடியும். சூழ்நிலையால் கட்டுரையை முழுமையாக தயாரிக்க முடியாதிருக்கும்போது, கூட்டத்திற்கு முன்பாக அதை மேலோட்டமாக வாசிக்கவாவது சில நிமிடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இது, கலந்தாலோசிப்பின்போது அதிகத்தைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவும்.
அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் செவிகொடுப்பது
சபைக் கூட்டங்களைவிட அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் இன்னுமதிக இடையூறுகளுக்கு வாய்ப்பிருப்பதால் கவனிப்பது கடினமாகலாம். இதனால் கூர்ந்து கேட்பது பெரிய சவாலாகிவிடுகிறது. என்ன செய்தால் உதவியாக இருக்கும்?
இரவு நன்கு ஓய்வெடுப்பது மிக அவசியம். ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு, மையப் பொருளை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பேச்சின் தலைப்பையும் பார்த்து, அப்பேச்சில் என்ன சொல்லப்படும் என்று எதிர்பார்க்க முயலுங்கள். பைபிளை நன்கு பயன்படுத்துங்கள். முக்கிய குறிப்புகளை சுருக்கமாக எழுதி வைப்பது, பேச்சுக்களில் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுவதாக அநேகர் கண்டிருக்கின்றனர். உங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் கடைப்பிடிக்க திட்டமிடும் அறிவுரைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாள் மாநாட்டு மன்றத்திற்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சில குறிப்புகளை கலந்து பேசுங்கள். இது குறிப்புகளை மனதில் பதிக்க உதவும்.
செவிகொடுக்க பிள்ளைகளை பயிற்றுவிப்பது
கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளை—சிறு குழந்தைகளையும்கூட—சபைக் கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் அழைத்து வருவதன் மூலம் ‘இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக’ வளர அவர்களுக்கு உதவலாம். (2 தீ. 3:15) ஒவ்வொரு பிள்ளையின் இயல்பும், தொடர்ந்தாற்போல் கவனிக்கும் திறமையும் வேறுபடுவதால் கூர்ந்து கேட்க கற்றுக்கொடுப்பதற்கு விவேகம் தேவை. பின்வரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.
வீட்டில் அவ்வப்போது சிறுபிள்ளைகளை அமைதியாக உட்கார வைத்து, நம் கிறிஸ்தவ பிரசுரங்களைக் கொடுத்து, வாசிக்க அல்லது படம்பார்க்க சொல்லுங்கள். கூட்டங்களின்போது தொல்லைப்படுத்தாமலிருக்க அவர்களுக்கு விளையாட்டு சாமான்களைக் கொடுக்காதீர்கள். இஸ்ரவேலரின் காலத்தைப் போலவே இன்றும் பிள்ளைகள் ‘கேட்டு கற்றுக்கொள்ளவே’ கூட்டங்களுக்கு வருகிறார்கள். (உபா. 31:12) சில பெற்றோர், முடிந்தால் மிகச் சிறிய பிள்ளைகளுக்குக்கூட கலந்தாலோசிக்கப்படும் பிரசுரங்களை கையில் கொடுத்து உட்கார வைக்கிறார்கள். பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன், கலந்தாலோசிப்புகளின்போது பதில் சொல்வதற்கு தயாரிக்க உதவுங்கள்.
யெகோவாவிற்கு செவிகொடுத்துக் கேட்பதற்கும் அவருக்கு கீழ்ப்படிவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை வேதவாக்கியங்கள் காட்டுகின்றன. இது மோசே இஸ்ரவேல் தேசத்திற்கு சொன்ன வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது: ‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் . . . நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக.’ (உபா. 30:19, 20) இன்று, யெகோவா அளிக்கும் போதனைக்கு செவிகொடுத்து, கீழ்ப்படிதலோடு அதைக் கடைப்பிடித்தால் மட்டுமே அவருடைய அங்கீகாரத்தையும் நித்திய ஜீவன் என்ற ஆசீர்வாதத்தையும் பெற முடியும். ஆகவே ‘கேட்கும் விதத்தைக் குறித்து கவனமாக இருங்கள்’ என்ற இயேசுவின் அறிவுரையைப் பின்பற்றுவது எவ்வளவு அவசியம்!—லூக். 8:18.