மீட்கும்பொருளிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு உதவுங்கள்
கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்பு—ஏப்ரல் 12
1 “தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.” (2 கொ. 9:15) இந்த வார்த்தைகள், தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் காட்டியிருக்கும் நற்குணத்திற்கும் அன்புள்ள தயவுக்கும் நாம் எந்தளவு நன்றியுடன் இருக்கிறோம் என்பதை விவரிக்கின்றன. முக்கியமாய், கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்காக ஏப்ரல் 12-ம் தேதி நாம் கூடி வரும்போது இந்த நன்றியுணர்வை இன்னும் தெளிவாக வெளிக்காட்டுவோம்.
2 ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் ஊழியர்களோடுகூட வேறே ஆட்கள் சுமார் ஒரு கோடி பேர் நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கிறிஸ்துவின் தியாகபலிக்கு ஓரளவு நன்றியைக் காட்டுகிறார்கள். இருப்பினும், அந்த மீட்கும்பொருளிலிருந்து பயனடைவதற்கு அதன்மீது அவர்கள் விசுவாசம் வைக்க வேண்டும். (யோவா. 3:16, 36) அத்தகைய விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? இந்த நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் தனிப்பட்ட விதத்தில் பைபிளைப் படிக்கும்படியும் வாராந்தர சபை கூட்டங்களில் கலந்துகொள்ளும்படியும் அவர்களை உற்சாகப்படுத்தலாம். பின்வரும் ஆலோசனைகளைச் சிந்தியுங்கள்.
3 பைபிள் படிப்புகள்: ஆர்வம் காட்டும் ஆட்களை நினைவுநாள் ஆசரிப்புக்கு அழைக்கும்போது, அவர்களுடன் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து நீங்கள் ஏன் பைபிள் படிப்பை ஆரம்பிக்கக் கூடாது? நினைவுநாள் ஆசரிப்பைப் பற்றி பக்கங்கள் 206-8-ல், “கர்த்தருடைய இராப்போஜனம்—கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு” என்ற தலைப்பின் கீழ் காணப்படும் தகவலை அவருக்கு விளக்குங்கள். ஓரிரு முறை அந்த நபரை சந்தித்து பேசுவதன் மூலம் இதை நீங்கள் செய்ய முடியும், ஒருவேளை வீட்டு வாசலிலேயே பைபிள் படிப்பு ஆரம்பித்துவிடலாம். அதன் பிறகு, “மீட்கும்பொருள்—கடவுள் தந்த மாபெரும் பரிசு” என்ற அதிகாரம் 5-ஐக் கலந்தாலோசிக்க அந்த நபர் விரும்பலாம். முறையாக பைபிள் படிப்பை நடத்த ஆரம்பித்தவுடன் துவக்கத்திலுள்ள முதல் நான்கு அதிகாரங்களையும் கலந்தாலோசியுங்கள்.
4 இந்த முறையைப் பயன்படுத்தி யாருக்கெல்லாம் பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்? ஒருவேளை உங்களுடன் வேலை செய்பவர்களோ பள்ளித்தோழர்களோ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களோ இந்த முறையில் பைபிளைக் கலந்தாலோசிக்க ஒப்புக்கொள்ளலாம். சத்தியத்தில் இல்லாத உங்கள் உறவினர்களை மறந்துவிடாதீர்கள். சபையிலுள்ள சகோதரிகளின் கணவர்கள் சத்தியத்தில் இல்லாதிருந்தால் அவர்களை சகோதரர்கள் போய் பார்க்கலாம். அதோடு, ஒருசமயம் சபைக்கு தவறாமல் வந்துகொண்டிருந்தவர்களை நினைவுநாள் ஆசரிப்புக்கு வரும்படி அழைக்க நாம் விசேஷ முயற்சி எடுக்கலாம். (லூக். 15:3-7) இவர்கள் எல்லாரும் மீட்கும்பொருளிலிருந்து பயனடையும்படி உதவுவோமாக.
5 சபை கூட்டங்கள்: அநேக பைபிள் மாணாக்கர்களுக்கும் ஆர்வம் காட்டும் மற்றவர்களுக்கும் நினைவுநாள் ஆசரிப்புதான் அவர்கள் கலந்துகொள்ளும் முதல் கூட்டமாக இருக்கிறது. எனினும், சபையில் நடைபெறும் மற்ற கூட்டங்களிலும் கலந்துகொண்டு பயனடையும்படி அவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம்? ஏப்ரல் 2005 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8 பின்வரும் ஆலோசனைகளைத் தருகிறது: “அடுத்த வார பொதுப் பேச்சின் தலைப்பைச் சொல்லுங்கள். காவற்கோபுர படிப்பிலும் சபை புத்தகப் படிப்பிலும் கலந்தாலோசிக்கப்படும் விஷயங்களைக் காட்டுங்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் ஊழியக் கூட்டத்தையும் பற்றி விவரியுங்கள். பள்ளியில் உங்களுக்குப் பேச்சு நியமிக்கப்படும்போது அதை அவர்களுடன் சேர்ந்து பழகிப் பாருங்கள். கூட்டங்களில் கேட்ட சிறந்த குறிப்புகளைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். நம் பிரசுரங்களில் உள்ள படங்களைக் காட்டி கூட்டங்கள் எப்படி நடக்கின்றன என்பதை அவர்கள் கண்முன் நிறுத்த முயலுங்கள். படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலிருந்தே கூட்டங்களுக்கு வரும்படி அழையுங்கள்.”
6 பைபிள் படிப்பில் தவறாமல் கலந்துகொண்டு, எல்லா சபை கூட்டங்களுக்கும் வருகிற நல்மனமுள்ளவர்கள், சீக்கிரத்தில் ஆன்மீக ரீதியில் முன்னேறுகிறார்கள். எனவே, இந்த ஆன்மீக ஏற்பாடுகளிலிருந்தும் கடவுளுடைய மிகச் சிறந்த பரிசாகிய மீட்கும்பொருளிலிருந்தும் பயனடையும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்துவோமாக.
[கேள்விகள்]
1. மீட்கும்பொருளுக்கு நம்முடைய நன்றியுணர்வை வெளிக்காட்டுவதற்கான ஒரு வழி எது?
2. யெகோவாவின் ஊழியர்களோடுகூட வேறு யாரும் நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்கிறார்கள், மீட்கும்பொருளிலிருந்து பயனடைவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
3. நினைவுநாள் ஆசரிப்பிற்கு வரும்படி அழைப்பவர்களிடம் நாம் எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடியும்?
4. இந்த நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் யாருக்கெல்லாம் பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்?
5. வாராந்தர சபை கூட்டங்களுக்கு வரும்படி பைபிள் மாணாக்கர்களையும் ஆர்வம் காட்டும் மற்றவர்களையும் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
6. நல்மனமுள்ளவர்கள் மீட்கும்பொருளிலிருந்து பயனடைவதற்கு என்ன இரண்டு வழிகளில் நாம் உதவலாம்?