ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
அன்புள்ள சக வணக்கத்தாருக்கு:
இது நமக்குப் பரவசமூட்டுகிற ஒரு காலம்! எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை நாம் அனுபவித்து வருகிறோம்! நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுக்கு எப்போதையும்விட இப்போது மாபெரும் சாட்சி கொடுக்கப்படுகிறது. அருமையான சகோதர சகோதரிகளாகிய உங்களுடன் இந்த வேலையில் “தோளோடு தோள் சேர்ந்து” உழைப்பதில் நாங்கள் அகமகிழ்கிறோம்.—செப். 3:9, NW; யோவா. 14:12.
ஒருபக்கம் நாம் யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவை செய்து வந்தாலும்கூட இன்னொரு பக்கம் பயங்கரமான கஷ்டங்களை எதிர்ப்பட்டுத்தான் வருகிறோம். கடந்த ஊழிய ஆண்டில், உயிருக்கு உலைவைக்கிற இயற்கைச் சேதங்கள், பூமியதிர்ச்சிகள், வெள்ளப்பெருக்குகள், சூறாவளிகள் ஆகியவற்றால் உங்களில் சிலர் மிகவும் துன்பப்பட்டிருக்கிறீர்கள். (மத். 24:7) முதுமையாலும் நோயாலும் வருகிற பலவீனங்களால் உங்களில் அநேகர் அன்றாடம் அவதிப்படுகிறீர்கள். நாம் எல்லாருமே ‘பிரசவ வேதனை போன்ற வேதனைகளை’ சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. (மத். 24:8, அடிக்குறிப்பு) ஆர்மீனியா, எரிட்ரியா, தென் கொரியா போன்ற அநேக நாடுகளில், நம் சகோதரர்கள் பலர் தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.—மத். 24:9.
இத்தகைய கஷ்டங்களின் மத்தியிலும் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள நமக்கு எது உதவியிருக்கிறது? 2010-க்கான வருடாந்தர வசனம் ஒரு முக்கியமான குறிப்பை நமக்கு நினைப்பூட்டியது: ‘அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.’ (1 கொ. 13:7, 8) ஆம், ஒருவருக்கொருவர் வைத்திருக்கிற அன்பும், யெகோவாமீது வைத்திருக்கிற அன்பும்தான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள நமக்கு உதவியிருக்கின்றன.
மிகப் பெரிய அளவில் நாம் இடைவிடாமல் செய்துவருகிற பிரசங்க வேலையைப் பார்த்து கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டுகிற அநேகர் பிரமித்துப்போயிருக்கிறார்கள். நம்முடைய நம்பிக்கைகளையும் போதனைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, “இந்த வேலையை நாங்களும் செய்ய வேண்டும்; ஆனால், நீங்கள் மட்டும்தான் செய்துவருகிறீர்கள்!” என்று சொல்லி சிலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். விடாமல் தொடர்ந்து பிரசங்க வேலையைச் செய்துவர யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு எது உதவியிருக்கிறது? அன்புதான்! ஆம், ஒருவரும் அழிந்துபோகக் கூடாதென்று நம்முடைய பரலோகத் தகப்பன் விரும்புவதைப் போலவே நாமும் விரும்புகிறோம். (2 பே. 3:9) கடந்த ஊழிய ஆண்டில், புதிய உச்சநிலையாக 75,08,050 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்திருந்தார்கள்; எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் என்பதையே இது காட்டுகிறது. அன்பினால் தூண்டப்பட்டு மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியில் மனமுவந்து உதவுகிற இந்த வேலையை நாம் சுறுசுறுப்பாகச் செய்துவருகிறோம்; இதுபோன்ற அமைப்பு வேறு ஏதாவது இருக்கிறதா?
‘கடைசிநாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்’ என்று ஏசாயா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருவதைப் பார்ப்பது நமக்கு அதிக உற்சாகத்தைத் தருகிறது, அல்லவா? (ஏசா. 2:2-4) கடந்த ஊழிய ஆண்டில் ஞானஸ்நானம் எடுத்த 2,94,368 பேரும்கூட, இவ்வாறு யெகோவாவின் ஆலயத்திற்கு ஓடிவருகிற திரளான மக்கள் கூட்டத்தில் அடங்குவர். இந்த அருமையான சகோதர சகோதரிகளை அமைப்பிற்குள் வருக, வருகவென்று வரவேற்கிறோம். பிசாசாகிய சாத்தானின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட அவர்களுக்கு நாம் தொடர்ந்து உதவ வேண்டும்; இதற்கு கிறிஸ்தவ அன்பு நம்மைத் தூண்டுவதாக!—1 பே. 5:8, 9.
மார்ச் 30, 2010, செவ்வாய் அன்று நினைவுநாள் அனுசரிப்புக்காக 1,87,06,895 பேர் வந்திருந்தார்கள்; இதுவரை வந்ததிலேயே இதுதான் உச்சக்கட்ட எண்ணிக்கை. இன்னும் லட்சக்கணக்கானோர் நம் வழிபாட்டில் சேர்ந்துகொள்ள வாய்ப்பு இருப்பதையே இது காட்டுகிறது. இந்தப் பொல்லாத உலகை யெகோவா இன்னும் விட்டுவைத்திருப்பதற்கு நாம் அதிக சந்தோஷமுள்ளவர்களாக இருக்கலாம், அல்லவா? அதுவரை சகித்திருக்க அன்பே நமக்கு உதவுகிறது.—2 தெ. 3:5.
2010-ஆம் ஆண்டில், “யெகோவாவிடம் நெருங்கியிருங்கள்!” என்ற தலைப்பில் உலகெங்கும் நடைபெற்ற மாவட்ட மாநாடுகள், பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுடன் உள்ள நம் பந்தத்தைப் பலப்படுத்தின. ‘யெகோவாவைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது’ என்று சங்கீதக்காரன் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை! (சங். 144:15) எதிர்காலத்தில் என்ன சம்பவித்தாலும் சரி, யெகோவா நம் பக்கம் இருந்தால் எதைக் குறித்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை. (சங். 23:4) விரைவில், யெகோவா தம்முடைய மகன் மூலமாக ‘பிசாசின் செயல்களை ஒழிப்பார்.’ (1 யோ. 3:8) சொல்லப்போனால், அந்த நாள் எப்போது வருமென்று நாம் ஏங்குகிறோம்! அதுவரை, சுறுசுறுப்பாய் ஈடுபட நமக்கு அதிகமான வேலை இருக்கிறது.—1 கொ. 15:58.
‘நாங்கள் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்’ உங்களை நினைக்கிறோம் என்பதை இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். (ரோ. 1:9) ‘எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருப்பீர்களாக! அதேசமயத்தில், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிற நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்காக ஆவலோடு காத்திருப்பீர்களாக!’—யூ. 21.
உங்கள் எல்லாரையும் நாங்கள் நெஞ்சார நேசிக்கிறோம்!
உங்கள் சகோதரர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு