படிப்பு 19
பைபிளை எடுத்துப் பார்க்க உற்சாகப்படுத்துதல்
அனைவரது கவனத்தையும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் மீது திருப்புவதே நம்முடைய ஆசை. அந்தப் பரிசுத்த புத்தகமே நாம் பிரசங்கிக்கும் செய்திக்கு அடிப்படையாக விளங்குகிறது. நாம் எதையும் சுயமாக சொல்லாமல் கடவுளுடைய வார்த்தையிலிருந்தே சொல்கிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றே விரும்புகிறோம். மக்கள் பைபிளில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வெளி ஊழியத்தில். வெளி ஊழியத்திற்காக தயாரிக்கும்போது, செவிசாய்க்கும் மனமுள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு எப்பொழுதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வசனங்களை தேர்ந்தெடுங்கள். பைபிள் பிரசுரங்களைப் பற்றி ஓரளவு சுருக்கமாக பேச திட்டமிடும்போதும்கூட, பொருத்தமான ஒரு பைபிள் வசனத்தை வாசிப்பது பெரும்பாலும் பயனுள்ளது. செம்மறியாடு போன்ற மக்களை வழிநடத்துவதற்கு, நாம் தனிப்பட்ட விதமாக சொல்லும் எதையும்விட பைபிளே அதிக வல்லமை வாய்ந்தது. பைபிளிலிருந்து வாசிக்க முடியாத சந்தர்ப்பங்களில், அதிலிருந்து மேற்கோள் காட்டி பேசலாம். முதல் நூற்றாண்டில், வேதாகமத்தின் நகல்கள் பரவலாக கிடைக்கவில்லை. இருந்தாலும், இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் வேதாகமத்திலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டி பேசினார்கள். வேதவசனங்களை மனப்பாடம் செய்வதற்கு நாமும் முயற்சியெடுத்து, ஊழியத்தில் பொருத்தமான சமயத்தில் அவற்றை பயன்படுத்த வேண்டும்; சிலசமயங்களில் அவற்றை வெறுமனே மேற்கோளாகவாவது காண்பிக்க வேண்டும்.
பைபிளிலிருந்து வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால், நீங்கள் வாசிக்கும்போது வீட்டுக்காரரும் பார்ப்பதற்கு ஏற்றவாறு அதை பிடித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாசிக்கும்போது வீட்டுக்காரரும் தன்னுடைய சொந்த பைபிளில் பார்த்து வந்தால், வாசிக்கும் விஷயத்திற்கு நன்கு பிரதிபலிப்பார்.
ஆனால், பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்ப்பதில் வரம்பை மீறியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். அவர்களுடைய மொழிபெயர்ப்பு, பைபிளின் மூல மொழிகளில் எழுதப்பட்ட விஷயங்களுக்கு எல்லா விதங்களிலும் இசைவாக இருக்காது. நவீன பைபிள் மொழிபெயர்ப்புகள் பல, கடவுளுடைய தனிப்பட்ட பெயரை நீக்கியிருக்கின்றன. மரித்தோருடைய நிலைமையைக் குறித்து மூலமொழியில் சொல்லப்பட்டிருப்பதை தெளிவற்றதாக்கியிருக்கின்றன. இந்தப் பூமியை குறித்ததில் கடவுளுடைய நோக்கத்தை மறைத்திருக்கின்றன. இப்படி செய்யப்பட்டிருக்கும் கலப்படத்தை ஒருவரிடம் எடுத்துக் காட்டுவதற்கு, நீங்கள் வெவ்வேறு பைபிள்களிலிருந்து அல்லது அதே மொழியிலுள்ள பழைய மொழிபெயர்ப்புகளிலிருந்து முக்கிய வசனங்களை ஒப்பிட்டுக் காட்ட வேண்டியதாக இருக்கலாம். பல்வேறு பொருள்களின் பேரில், அடிக்கடி பயன்படுத்தப்படும் வசனங்களின் முக்கிய வார்த்தைகளை பல்வகை மொழிபெயர்ப்புகள் எவ்வாறு மொழிபெயர்த்திருக்கின்றன என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதற்கு வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் உதவுகிறது. சத்தியத்தை நேசிக்கிற எவரும் உண்மையான தகவல்களுக்காக நன்றியுணர்வை காண்பிப்பார்.
சபை கூட்டங்களில். சபை கூட்டங்களில் பைபிளை பயன்படுத்துவதற்கு அனைவரையும் உற்சாகப்படுத்த வேண்டும். இது பல வழிகளில் நன்மை தருகிறது. சிந்திக்கப்படும் விஷயத்தின் மீது சபையாருடைய கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது. பேச்சாளரின் வாய்மொழி போதனை கண் வழியாகவும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. பைபிளே நம்முடைய நம்பிக்கைகளுக்கு ஊற்றுமூலம் என்பதையும் ஆர்வம் காட்டுகிற புதியவர்களுடைய மனதில் பதிய வைக்கிறது.
நீங்கள் வாசிப்பதை சபையார் தங்களுடைய பைபிளில் உண்மையிலேயே பார்க்கிறார்களா என்பது நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தையே பேரளவு சார்ந்திருக்கிறது. பைபிளை திறந்து பார்க்கும்படி நேரடியாக கேட்டுக்கொள்வது மிகச் சிறந்த வழிகளில் ஒன்று.
வலியுறுத்துவதற்காக எந்த வசனங்களை பைபிளில் பார்க்கும்படி சபையாரை உற்சாகப்படுத்தலாம் என்பதை பேச்சாளராகிய நீங்களே தீர்மானிக்க வேண்டும். உங்களுடைய முக்கிய குறிப்புகளை விரிவாக்குவதற்கு உதவும் வசனங்களை வாசிப்பது மிகச் சிறந்தது. பிற்பாடு, நேரம் அனுமதிக்கிறபடி, உங்களுடைய விவாதத்திற்கு வலிமை சேர்க்கும் வேறு சில வசனங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஆனால் பொதுவாக, வெறுமனே ஒரு வசனத்தை குறிப்பிடுவதோ அல்லது அதை எடுத்துப் பார்க்கும்படி சபையாரை கேட்டுக்கொள்வதோ போதாது. சபையார் தங்களுடைய பைபிளிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துப் பார்ப்பதற்கு முன்பே நீங்கள் அதை வாசித்துவிட்டு அடுத்த வசனத்திற்குத் தாவினால் அவர்கள் சீக்கிரத்தில் உற்சாகமிழந்து பைபிளைத் திறந்து பார்ப்பதையே நிறுத்திவிடுவார்கள். ஆகவே கூர்ந்து கவனியுங்கள். வசனத்தை பெரும்பாலோர் கண்டுபிடித்த பிறகு அதை வாசியுங்கள்.
முன்னதாகவே யோசியுங்கள். ஒரு வசனத்தை வாசிப்பதற்குப் போதுமான நேரத்திற்கு முன்பே அதை குறிப்பிடுங்கள். அந்த வசனத்தை சபையார் கண்டுபிடிப்பதற்கு காத்திருப்பதால் ஆகும் நேரத்தை இது குறைக்கும். வசனங்களை சபையார் எடுத்துப் பார்க்க நேரம் அனுமதிக்கையில் நீங்கள் தகவலை குறைத்துக்கொள்ள வேண்டியதாயிருக்கும் என்றாலும், அதனால் வரும் நன்மைகளை கருத்தில் கொள்கையில் அதுவே சாலச் சிறந்தது.