குடும்ப அங்கத்தினர்கள் எப்படி முழு ஒத்துழைப்பு தரலாம்—பைபிள் படிப்பில்
1 சத்தியம், குடும்ப வாழ்க்கைக்கு நிஜமான அர்த்தத்தையும் நோக்கத்தையும் அள்ளித் தரும் என்பது உண்மைதான்; ஆனாலும், அவை தானாகக் கிடைத்துவிடாது. ஆன்மீக ரீதியில் குடும்பத்தைப் பலப்படுத்த நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில் வெற்றிகாண குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே சேர்ந்து உழைப்பது மிகவும் அவசியம். குடும்பமாகப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதில் குடும்பத்திலுள்ள எல்லோரும் எப்படி ஒத்துழைக்கலாம் என்பதை இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும்.
2 தினமும் பைபிளை வாசிப்பதன் மூலம்: “அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப் பண்ணுகிறான்” என நீதிமொழிகள் 24:5 சொல்கிறது. பைபிளைத் தவறாமல் வாசிக்கும்போது கிடைக்கும் அறிவு, சாத்தானுடைய தாக்குதல்களை மேற்கொள்வதற்கான மனபலத்தைத் தருகிறது. (சங். 1:1, 2) நீங்கள் குடும்பமாக ஒன்றுசேர்ந்து தினமும் பைபிளை வாசிக்கிறீர்களா? நம் ராஜ்ய ஊழியத்தில் ஒவ்வொரு வாரத்திற்கான அட்டவணையிலும் பைபிள் வாசிப்புப் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் பத்து நிமிடம் செலவிட்டால் போதும் அதைப் படித்து முடித்துவிடலாம். அதற்கென்று வசதியான நேரத்தை ஒதுக்குங்கள்; உதாரணத்திற்கு, காலை உணவுக்கு முன்போ, இரவு உணவுக்குப் பிறகோ, தூங்கச் செல்வதற்கு முன்போ நேரம் ஒதுக்குங்கள். அந்தச் சமயத்தில், பைபிளை வாசிப்பதோடு தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்திலிருந்து அந்த நாளுக்கான வசனத்தையும் கலந்தாலோசியுங்கள். இதை உங்கள் அன்றாட வாழ்க்கையின் பாகமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
3 வாரம் தவறாமல் குடும்ப வழிபாடு செய்வதன் மூலம்: குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொரு வாரமும் ஆவலோடு எதிர்பார்க்கும் அளவுக்கு குடும்ப வழிபாடு இருக்க வேண்டும். ஒவ்வொரு அங்கத்தினரும் குடும்பப் படிப்பில் ஆர்வத்துடன் பங்குகொள்ள வேண்டும். எதைப் படிப்பது, எந்த நாள், எந்தச் சமயம், எவ்வளவு நேரம் என்பதையெல்லாம் குடும்பத்தின் தேவையை மனதில் வைத்து குடும்பத் தலைவர் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் குடும்பப் படிப்புக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். சிறுசிறு விஷயங்கள் அதைத் தடைசெய்யாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.—பிலி. 1:10, 11.
4 குடும்பத் தலைவர் ஒருவருக்கு வீட்டிலிருக்கும்போதுகூட தொழில் சம்பந்தமாக அடிக்கடி ஃபோன் வந்துகொண்டிருக்கும்; அதனால், குடும்ப வழிபாட்டின்போது ஃபோனை அவர் டிஸ்கனெக்ட் செய்துவிடுவார். வாடிக்கையாளர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால், அவர்களையும் அந்தப் படிப்பில் கலந்துகொள்ள அழைப்பார் அல்லது படிப்பு முடியும்வரை காத்திருக்கச் சொல்வார். குடும்ப வழிபாட்டுக்கு எந்தத் தடங்கலும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்வார். இதைப் பார்த்த அவரது பிள்ளைகள் குடும்ப வழிபாட்டின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்டார்கள். அவருடைய தொழிலும் செழித்தது.
5 ஆன்மீகக் காரியங்களில் குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் ஒத்துழைப்பது எவ்வளவாய் சந்தோஷம் அளிக்கிறது! குடும்ப பைபிள் படிப்பில் முழுமையாய்ப் பங்கேற்க உள்ளப்பூர்வமாக முயலும்போது யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் பெறுவோம்.—சங். 1:3.