பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என்பதில் ஒரு பாடம்
வெகு சிலரே யோபு அனுபவித்த எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியவர்களாக இருந்திருக்கின்றனர். குறுகிய காலத்திற்குள், அவர் தன்னுடைய செல்வத்தையும் பிழைப்புக்கான ஆதாரத்தையும் இழந்ததினாலும், அவருடைய எல்லா பிள்ளைகளின் அவலமான மரணத்தினாலும், கடைசியாக மிகவும் வேதனைதரும் நோயினாலும் உதவியற்றவரானார். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஒதுக்கிவைக்கப்பட்டவரை, அவருடைய மனைவி, “தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்,” என்பதாக துரிதப்படுத்தினாள்.—யோபு 2:9; 19:13, 14.
என்றபோதிலும், யோபு அதே போன்ற சோதனைகளை அனுபவிக்கும் எவருக்கும் ஈடிணையற்ற உற்சாகத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட கடுஞ்சோதனையினால் கிடைத்த உடன்பாடான பலன், தன்னல அக்கறைகளுக்கு மாறாக உண்மையான தேவபக்தியால் நாம் தூண்டப்பட்டு சோதனையை எதிர்ப்படுகையில் சகிப்புத்தன்மையானது யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதைக் காண்பிக்கிறது.—யோபு, அதிகாரங்கள் 1, 2; 42:10-17; நீதிமொழிகள் 27:11.
பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என்பதன் பேரில் பைபிள் பதிவும்கூட மதிப்புள்ள பாடங்களைக் கொண்டிருக்கிறது. சோதனைகளை எதிர்ப்படும் ஒருவருக்கு எவ்விதமாக புத்திசொல்லப்பட வேண்டும் மற்றும் எவ்விதமாக புத்திசொல்லப்படக்கூடாது என்பதன் பேரில் குறிப்பிடத்தக்க உதாரணங்களை அது அளிக்கிறது. மேலுமாக, இக்கட்டான சூழ்நிலைமைகளில் நாம் போராடிக்கொண்டிருப்பதைக் காண்கையில் சமநிலையான முறையில் செயல்படுவதற்கு யோபுவின் சொந்த அனுபவம் நமக்கு உதவிசெய்யக்கூடும்.
எதிர்மாறாக புத்திசொல்வதில் ஒரு பாடம்
‘யோபுவின் தேற்றரவாளர்கள்’ என்ற சொற்றொடர், இன்னலான ஒரு காலத்தில் அனுதாபப்படுவதற்குப் பதிலாக கடினமான நிலைமையை மோசமானதாக்கும் ஒரு நபரைக் குறிக்கும் அதே பொருளுடையதாக ஆகியிருக்கிறது. ஆனால் யோபுவின் மூன்று தோழர்களும் சரியாகவே தங்களுக்குச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் பெயரின் மத்தியிலும், அவர்களுடைய உள்நோக்கங்கள் முழுவதும் கெட்டதாக இருந்ததென நாம் ஊகித்துக்கொள்ளக் கூடாது. ஓரளவுக்கு தவறான அவர்களுடைய கருத்துக்களின்படி, யோபுவுக்கு அவர்கள் உதவிசெய்ய விரும்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் தவறினார்கள்? அவர்கள் யோபுவின் உத்தமத்தை முறித்துப்போட தீர்மானமாயிருந்த சாத்தானின் கருவிகளானது எப்படி?
சரி, அடிப்படையில் அவர்களுடைய எல்லா புத்திமதியும் உண்மையில் தப்பான அனுமானத்தை ஆதாரமாகக் கொண்டிருந்தது: பாவம் செய்கிறவர்களுக்கு மாத்திரமே துன்பம் வருகிறது. தன்னுடைய முதல் பேச்சில், எலிப்பாஸ் பின்வருமாறு சொன்னான்: “குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும். நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.” (யோபு 4:7, 8) எலிப்பாஸ் குற்றமில்லாதவர்கள் ஆபத்துக்கு எதிராக பாதுகாப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தவறாக நம்பிக்கொண்டிருந்தான். யோபு அத்தனை பிரச்சினைகளையும் துன்பத்தையும் அனுபவித்துக்கொண்டிருந்ததால், கடவுளுக்கு எதிராக அவர் பாவம் செய்திருக்கவேண்டும் என்பதாக அவன் வாதாடினான்.a பில்தாதும் சோப்பாரும்கூட அதேவிதமாகவே யோபு தன்னுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பவேண்டும் என்பதாக வற்புறுத்தினார்கள்.—யோபு 8:5, 6; 11:13-15.
தெய்வீக ஞானத்துக்குப் பதிலாக தனிப்பட்ட அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் யோபுவின் மூன்று தோழர்களும் அவரை மேலுமாக சோர்வடையச் செய்தனர். ‘கடவுள் தம்முடைய ஊழியர்களிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை,’ என்றும் யோபு நீதிமானாக இருந்தாரா இல்லையா என்பது யெகோவாவுக்கு உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்றும்கூட சொல்லும் அளவுக்கு எலிப்பாஸ் சென்றான். (யோபு 4:18; 22:2, 3) அதைவிட அதிக சோர்வுதரும்—அல்லது அதிக உண்மையற்ற—ஒரு குறிப்பைக் கற்பனைசெய்வது கடினமாக இருக்கிறது! இந்தத் தூஷணத்துக்காக யெகோவா எலிப்பாஸையும் அவனுடைய தோழர்களையும் பின்னால் கடிந்துகொண்டது ஆச்சரியமாயில்லை. “நீங்கள் என்னைக்குறித்து உண்மையைப் பேசவில்லை,” என்று அவர் சொன்னார். (யோபு 42:7, NW) ஆனால் மிகவும் தீங்குசெய்யும் வற்புறுத்தலான கருத்துக்கள் இன்னும் வரவிருந்தன.
எலிப்பாஸ் கடைசியாக அத்துமீறிய நிலைக்குச் சென்று நேரடியாக குற்றஞ்சாட்டினான். யோபு தான் குற்றமுள்ளவன் என்பதை ஒப்புக்கொள்ளும்படிச் செய்ய இயலாமல் போன காரணத்தால், யோபு செய்திருக்கவேண்டும் என்பதாக ஊகித்த பாவங்களை அவன் இட்டுக்கட்ட நாடினான். “உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?” என்று எலிப்பாஸ் கேட்டான். “முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர். விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம்கொடாமலும் போனீர்.” (யோபு 22:5-7) இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவையாக இருந்தன. யெகோவாதாமே யோபுவை “உத்தமனும் சன்மார்க்கனும்” என்பதாக விவரித்திருந்தார்.—யோபு 1:8.
யோபு தன்னுடைய சொந்த உத்தமத்தின்மீதான தாக்குதல்களுக்கு எவ்வாறு பிரதிபலித்தார்? அவை ஓரளவு அவரை கசப்பாகவும் சோர்வாகவும் ஆக்கியதை புரிந்துகொள்ளமுடிகிறது, ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதை நிரூபிக்க அவர் முன்னொருபோதும் இருந்ததையும்விட அதிக தீர்மானமுள்ளவராக ஆனார். உண்மையில் அவர் அவ்விதமாக தன்னை மெய்ப்பித்துக் காட்டுவதில் அவ்வளவு ஆழ்ந்துவிட்டதன் காரணமாக, தன்னுடைய சங்கடமான நிலைக்கு யெகோவாவைக் குற்றஞ்சாட்ட ஆரம்பித்தார். (யோபு 6:4; 9:16-18; 16:11, 12) உட்பட்டிருந்த உண்மையான விவாதங்கள் கவனிக்கப்படாமல் போய், உரையாடல் யோபு ஒரு நீதிமானாக இருந்தாரா இல்லையா என்பதைப் பற்றிய ஒரு பிரயோஜனமில்லாத வாதமாக மாறியது. புத்திமதி வழங்குவதற்கான இந்த நாசகரமான சந்திப்பிலிருந்து கிறிஸ்தவர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
1. ஒரு சகோதரரின் பிரச்சினைகள் அவருடைய சொந்த தவறுகளினால் ஏற்பட்டவை என்பதாக அன்புள்ள ஒரு கிறிஸ்தவன் ஆரம்பத்திலேயே ஊகம் செய்வது இல்லை. கடந்த காலத்தில் செய்யப்பட்ட தவறுகளை—உண்மையானவை அல்லது கற்பனை செய்யப்பட்டவை—கடுமையாக விமர்சிப்பது தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து செல்ல போராடிக்கொண்டிருக்கும் ஒரு நபரை முற்றிலும் சோர்வடையச்செய்துவிடக்கூடும். மனச்சோர்வுற்ற ஆத்துமா திட்டப்படுவதற்குப் பதிலாக ‘தேற்றப்பட வேண்டும்.’ (1 தெசலோனிக்கேயர் 5:14) கண்காணிகள் எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோப்பார் போன்ற “அலட்டுண்டாக்குகிற தேற்றரவாள”ராக இல்லாமல் “காற்றுக்கு ஒதுக்காக” இருக்கவேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்.—ஏசாயா 32:2; 16:2.
2. தெளிவான அத்தாட்சியில்லாமல் நாம் ஒருபோதும் குற்றஞ்சாட்டக்கூடாது. எலிப்பாஸுடையதைப் போன்று வதந்தி அல்லது அனுமானங்கள் கண்டிப்பதற்குச் சரியான காரணமாக இல்லை. உதாரணமாக ஒரு மூப்பர் தவறாக குற்றஞ்சாட்டுவாரேயானால், அவர் நம்பிக்கைக்குரிய தன்மையை இழந்து உணர்ச்சிப்பூர்வமான அழுத்தம் ஏற்பட காரணமாகிவிடலாம். இப்படிப்பட்ட தவறான முறையில் சொல்லப்பட்ட புத்திமதியைக் கேட்க வேண்டியிருந்ததைக் குறித்து யோபு எவ்வாறு உணர்ந்தார்? பின்வரும் வஞ்சப்புகழ்ச்சியான ஆச்சரியத்தோடு அவர் தன்னுடைய மனவேதனையை வெளியிட்டார்: “திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசை பண்ணினாய்?” (யோபு 26:2) அக்கறையுள்ள ஒரு கண்காணி பிரச்சினைகளை மோசமாக்காமல் ‘நெகிழ்ந்த கைகளை நிமிர்த்திவிடுவார்.’—எபிரெயர் 12:12.
3. புத்திமதி தனிப்பட்ட கருத்துக்களை அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். யோபுவின் தோழர்களுடைய விவாதங்கள் தவறானவையாகவும் அழிக்கக்கூடியவையாகவும் இருந்தன. யோபுவை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்வதற்குப் பதிலாக, அவரையும் அவருடைய பரலோக தந்தையையும் பிரித்துவைக்கும் ஒரு தடை இருப்பதாக நினைக்கும்படியாக அவர்கள் செய்தனர். (யோபு 19:2, 6, 8) மறுபட்சத்தில், பைபிளைத் திறமையாக உபயோகிப்பது, காரியங்களை நேராக்கி, மற்றவர்களைத் திடப்படுத்தி, உண்மையான ஆறுதலையும் அளிக்க முடியும்.—லூக்கா 24:32; ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16; 4:2.
யோபு புத்தகம் ஒருசில படுகுழிகளை அடையாளம் கண்டுகொள்வதற்குக் கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்வதோடு, திறம்பட்ட புத்திமதியை எவ்வாறு கொடுப்பது என்பதன் பேரில் பயனுள்ள ஒரு பாடத்தையும்கூட அளிக்கிறது.
புத்திமதியை எவ்வாறு கொடுப்பது
எலிகூவின் புத்திமதி யோபுவின் மூன்று தோழர்களுடையதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. பொருளடக்கத்திலும் எலிகூ யோபுவைக் கையாண்ட விதத்திலும், இரண்டிலுமே அது வித்தியாசமாக இருந்தது. அவர் ஒரு நியாயாதிபதியைப் போன்றில்லாமல், ஒரு நண்பரைப் போன்று அவர் பெயரைப் பயன்படுத்தி அவரிடமாக பேசினார். “யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். இதோ, உம்மைப் போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.” (யோபு 33:1, 6) யோபுவின் செம்மையான போக்கிற்காக அவரைப் பாராட்டுவதிலும்கூட எலிகூ விரைவாக செயல்பட்டார். “உம்முடைய நீதியில் நான் பிரியமாயிருக்கிறேன்,” என்று அவர் யோபுவுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டினார். (யோபு 33:32, NW) இப்படி தயவான முறையில் புத்திசொன்னதைத் தவிர, மற்ற காரணங்களுக்காகவும் எலிகூ வெற்றிகரமாயிருந்தார்.
மற்றவர்கள் பேசிமுடிக்கும் வரையாக பொறுமையோடு காத்திருந்தப் பின்னர், புத்திமதியைக் கொடுப்பதற்கு முன்னால் விவாதங்களை மேம்பட்ட விதத்தில் கிரகித்துக்கொள்ளக்கூடிய ஒரு நிலையில் இருந்தார். யோபு நீதிமான் என்பதாக அப்படியே வைத்துக்கொண்டாலும், யெகோவா அவரைத் தண்டிப்பாரா? “அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது,” என்பதாக எலிகூ உணர்ச்சி மிகுந்தவராய் கூறினார். ‘அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்கமாட்டார்.’—யோபு 34:10; 36:7.
யோபுவின் நீதியே உண்மையில் பிரதான விவாதமாக இருந்ததா? எலிகூ சமநிலையற்ற ஒரு நோக்குநிலையினிடமாக யோபுவின் கவனத்தைத் திருப்பினான். “என்னுடைய நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று” நீர் சொல்லியிருக்கிறீர் என்பதாக அவர் விளக்கினார். “நீர் வானத்தை அண்ணாந்துபார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.” (யோபு 35:2, 5) ஆகாயமண்டலங்கள் நம்மைவிட மிக அதிக உயரமாயிருப்பது போலவே, யெகோவாவின் வழிகளும் நம்முடைய வழிகளைவிட உயர்ந்தவை. காரியங்களை அவர் செய்யும் விதத்தைக்குறித்து நியாயந்தீர்க்கும் நிலையில் நாம் இல்லை. “ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்,” என்பதாக சொல்லி எலிகூ முடித்தார்.—யோபு 37:24; ஏசாயா 55:9.
எலிகூவின் சரியான புத்திமதி யெகோவாவிடமிருந்தே கூடுதலான போதனையைப் பெற்றுக்கொள்வதற்கு யோபுவுக்கு வழிவகுப்பதாக இருந்தது. உண்மையில், 37-ம் அதிகாரத்தில் ‘தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைப்’ பற்றிய எலிகூவின் மறுபார்வைக்கும், 38 முதல் 41 அதிகாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள யோபுவிடமாக யெகோவாவின் சொந்த வார்த்தைகளுக்குமிடையே குறிப்பிடத்தக்க இணைப்பொருத்தம் உள்ளது. தெளிவாகவே, எலிகூ காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து பார்த்தார். (யோபு 37:14) எலிகூவின் நேர்த்தியான முன்மாதிரியை கிறிஸ்தவர்கள் எவ்விதமாக பின்பற்றலாம்?
எலிகூவைப் போன்று குறிப்பாக கண்காணிகள் தாங்களும்கூட அபூரணர் என்பதை நினைவில் வைத்தவர்களாய், ஒற்றுணர்வுள்ளவர்களாயும் தயவுள்ளவர்களாயும் இருக்க விரும்புகின்றனர். புத்திமதியைக் கொடுப்பதற்குப் பதிலாக உண்மைகளை அறிந்துகொண்டு விவாதங்களைப் புரிந்துகொள்ளும்பொருட்டு கவனமாக செவிகொடுத்துக் கேட்பது அவர்களுக்கு நல்லது. (நீதிமொழிகள் 18:13) மேலுமாக, பைபிளையும் வேத ஆதாரமுள்ள பிரசுரங்களையும் பயன்படுத்துவதன் மூலம், யெகோவாவின் நோக்குநிலையே மேலோங்கியிருப்பதை அவர்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.—ரோமர் 3:4.
மூப்பர்களுக்கு இந்த நடைமுறையான பாடங்களை அளிப்பதை தவிர, பிரச்சினைகளை எவ்வாறு சமநிலையான முறையில் எதிர்ப்படலாம் என்பதை யோபு புத்தகம் நமக்குக் கற்பிக்கிறது.
கஷ்டமான சூழ்நிலைமைகளுக்கு எவ்விதமாக பிரதிபலிக்கக்கூடாது
தன்னுடைய துன்பத்தினால் உதவியற்றவராகி தன்னுடைய பொய்யான தேற்றரவாளர்களால் ஏமாற்றமடைந்து, யோபு மனக்கசப்படைந்து சோர்ந்துபோனார். ‘நான் பிறந்த நாள் அழிவதாக. என் ஆத்துமா ஜீவனை ஆரோசிக்கிறது,’ என்பதாக அவர் புலம்பினார். (யோபு 3:3; 10:1) குற்றவாளி சாத்தானே என்பதை அறியாதவராய், கடவுள் தனக்குப் பேராபத்துக்களைக் கொண்டுவருவதாக அவர் ஊகித்துக்கொண்டார். ஒரு நீதிமானாகிய அவர் துன்பப்படுவது அநியாயமாகத் தோன்றியது. (யோபு 23:10, 11; 27:2; 30:20, 21) இந்த மனநிலையானது மற்ற காரியங்களுக்கு அவரை குருடாக்கி, மனிதவர்க்கத்தோடு கடவுள் கொள்ளும் செயல்தொடர்புகளில் குற்றங்கண்டுபிடிக்க வழிநடத்தியது. யெகோவா இவ்விதமாக கேட்டார்: “நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?”—யோபு 40:8.
ஒருவேளை துன்பத்தை எதிர்ப்படுகையில் நம்முடைய உடனடியான பிரதிபலிப்பு, யோபு செய்ததுபோல இழப்புக்கு ஆளானவராக உணருவதே ஆகும். பொதுவான பிரதிபலிப்பு, ‘ஏன் நான் மட்டும் கஷ்டப்பட வேண்டும்? ஏன் என்னைவிட மிகவும் மோசமான மற்றவர்கள் ஒப்பிடுகையில் பிரச்சினைகளில்லாத வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்?’ என்பதாக இருக்கிறது. இவை எதிர்மறையான எண்ணங்களாகும், கடவுளுடைய வார்த்தையைத் தியானிப்பதன் மூலம் இவற்றை நாம் எதிர்த்து தடைசெய்திட முடியும்.
யோபுவைப் போலில்லாமல், உட்பட்டிருக்கும் பெரிய விவாதங்களைப் புரிந்துகொள்ள முடிகிற நிலையில் நாம் இருக்கிறோம். சாத்தான், “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரி”வதை நாம் அறிந்திருக்கிறோம். (1 பேதுரு 5:8) யோபு புத்தகம் வெளிப்படுத்துகிறபடி, பிசாசு நமக்குப் பிரச்சினைகளை உண்டுபண்ணுவதன் மூலம் நம்முடைய உத்தமத்தை முறித்துப்போடுவதற்கு மகிழ்ச்சியுள்ளவனாக இருப்பான். நாம் நல்ல காலங்களில் மட்டுமே யெகோவாவுக்குச் சாட்சிகளாயிருப்போம் என்ற அவனுடைய உரிமைபாராட்டலை நிரூபிக்க தீர்மானமுள்ளவனாய் இருக்கிறான். (யோபு 1:9-11; 2:3-5) யெகோவாவின் பேரரசாட்சியை உயர்த்தி இவ்விதமாக பிசாசை பொய்யனாக நிரூபிக்க நமக்குத் தைரியம் இருக்குமா?
சில வகையான துன்பம் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் பெரும்பாலும் தவிர்க்க முடியாது என்பதையே இயேசுவினுடைய உதாரணமும் எண்ணற்ற மற்ற உண்மையுள்ள ஊழியர்களின் உதாரணமும் காண்பிக்கின்றன. தம்மைப் பின்பற்ற விரும்பினால் சீஷர்கள் ‘தங்களுடைய வாதனையின் கழுமரத்தை எடுத்துக்கொண்டுவர’ மனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதாக இயேசு சொன்னார். (லூக்கா 9:23, NW) நம்முடைய சொந்த ‘வாதனையின் கழுமரம்’ யோபு அனுபவித்த இன்னல்களில் ஒன்றாக அல்லது பலவாக இருக்கலாம்—உடல் நலக்கேடு, அன்பானவர்களின் மரணம், மனச்சோர்வு, பொருளாதார கஷ்டம் அல்லது அவிசுவாசிகளிடமிருந்து எதிர்ப்பு. நாம் என்ன வகையான பிரச்சினையை எதிர்ப்பட்டாலும், அதற்கு ஒரு உடன்பாடான அம்சம் இருக்கிறது. நம்முடைய சூழ்நிலைமையை, நம்முடைய சகிப்புத்தன்மையையும் யெகோவாவிடம் அசைக்கமுடியாத நம்முடைய பற்றுறுதியையும் காண்பிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக கருதலாம்.—யாக்கோபு 1:2, 3.
அவ்விதமாகத்தான் இயேசுவின் அப்போஸ்தலர் பிரதிபலித்தார்கள். பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின் வெகு சீக்கிரத்தில் இயேசுவைப் பற்றி பிரசங்கித்ததற்காக அவர்கள் அடிக்கப்பட்டார்கள். உற்சாகம் இழந்துபோவதற்குப் பதிலாக, அவர்கள் “சந்தோஷமாய்” புறப்பட்டு தங்கள் வழியே போனார்கள். துன்பப்பட்டதற்காக அவர்கள் சந்தோஷமாயிருக்கவில்லை, ஆனால் “அவருடைய [கிறிஸ்துவினுடைய] நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்” அவர்கள் சந்தோஷமாயிருந்தார்கள்.—அப்போஸ்தலர் 5:40, 41.
நிச்சயமாகவே, நமக்கு நேரிடும் எல்லா கஷ்டங்களும் யெகோவாவை சேவிப்பதன் காரணமாகவே வருவது கிடையாது. நம்முடைய பிரச்சினைகள் நாமாகவே ஏற்படுத்திக்கொண்டவையாக இருக்கலாம்—குறைந்தபட்சம் ஓரளவாவது அப்படியிருக்கலாம். அல்லது ஒருவேளை, நம்முடைய சொந்த தவறினால் அல்லாமல், பிரச்சினை நம்முடைய ஆவிக்குரிய சமநிலையைப் பாதித்திருக்கிறது. நிலைமை என்னவாக இருந்தாலும், யோபுவினுடையதைப் போன்ற ஒரு தாழ்மையான சிந்தை, தவறுகள் எங்கே ஏற்பட்டன என்பதைப் பகுத்துணர நமக்கு உதவிசெய்யும். யோபு பின்வருமாறு யெகோவாவிடம் ஒப்புக்கொண்டார்: “நான் அறியாததையும் அலப்பினேன்.” (யோபு 42:3) இப்படியாக தன்னுடைய பிழைகளை உணர்ந்துகொள்ளும் ஒருவர் எதிர்காலத்தில் அதிகமாக இதேபோன்ற கஷ்டங்களைத் தவிர்க்கக்கூடிய நிலையில் இருக்கிறார். நீதிமொழி சொல்கிறபடியே, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்.”—நீதிமொழிகள் 22:3.
அதிக முக்கியமாக, நம்முடைய பிரச்சினைகள் என்றுமாக நீடிப்பவை அல்ல என்பதை யோபு புத்தகம் நமக்கு நினைப்பூட்டுகிறது. பைபிள் சொல்கிறது: “பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” (யாக்கோபு 5:11) யெகோவா இன்று தம்முடைய ஊழியர்களின் உண்மைத்தவறாமைக்கும் அதேபோன்று வெகுமதியளிப்பார் என்பதாக நாம் நிச்சயமாயிருக்கலாம்.
எல்லா வகையான பிரச்சினைகளும்—“முந்தினவைகள்”—ஒழிந்துபோக இருக்கும் காலத்தையும்கூட நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 21:4) அந்த நாள் துவங்கும் வரையாக, யோபு புத்தகம் பிரச்சினைகளை ஞானத்தோடும் மனோ பலத்தோடும் கையாளுவதற்கு நமக்கு உதவக்கூடிய மதிப்புமிக்க வழிகாட்டியாக இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்,” என்பதாக பைபிள் சொல்கிறபோதிலும், ஒரு நபரின் துன்பம் தெய்வ தண்டனையாக இருக்கவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. (கலாத்தியர் 6:7) சாத்தான் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், நீதிமான்கள் பொல்லாதவர்களைவிட அடிக்கடி அநேக பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். (1 யோவான் 5:19) “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்,” என்பதாக இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 10:22) நோயும் மற்ற வகையான இன்னல்களும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர் எவருக்கும் ஏற்படலாம்.—சங்கீதம் 41:3; 73:3-5; பிலிப்பியர் 2:25-27.
[பக்கம் 28-ன் படம்]
“உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.” இவ்விதமாக எலிகூ கடவுளுடைய வழிகள் மனிதனுடைய வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாக இருப்பதைப் புரிந்துகொள்ள யோபுவுக்கு உதவிசெய்தார்