துன்ப காலங்களில் சந்தோஷம் காத்திடுங்கள்
‘யெகோவாவை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக.’—சங். 5:11.
1, 2. (அ) இன்று நமக்குத் துன்ப துயரத்தைத் தரும் சில காரியங்கள் யாவை? (ஆ) எல்லாருக்கும் வருகிற துன்ப துயரங்களைச் சகிப்பதோடு, வேறு எதையும் உண்மைக் கிறிஸ்தவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது?
உலக மக்கள் எதிர்ப்படும் துன்ப துயரங்கள் பலவற்றை யெகோவாவின் சாட்சிகளும் எதிர்ப்படுகிறார்கள். குற்றச்செயல்களுக்கும், போர்களுக்கும், அநியாயங்களுக்கும் அவர்களில் பலர் பலியாகிறார்கள். இயற்கைப் பேரழிவு, வறுமை, வியாதி, மரணம் ஆகியவை பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன. “நாம் அறிந்திருக்கிறபடி, இதுவரை படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று அப்போஸ்தலன் பவுல் மிகச் சரியாகவே எழுதினார். (ரோ. 8:22) நாம் அபூரணத்தின் பிடியிலும் அல்லாடிக்கொண்டிருக்கிறோம். ‘என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச் சுமையைப் போல என்னால் தாங்கக் கூடாத பாரமாயிற்று’ என்று தாவீது ராஜா சொன்னதைப் போலவே நாமும் ஒருவேளை சொல்லலாம்.—சங். 38:4.
2 உண்மைக் கிறிஸ்தவர்கள், பொதுவாக எல்லாருக்கும் வருகிற துன்ப துயரங்களைச் சகிப்பதோடு, அடையாளப்பூர்வ கழுமரத்தையும் சுமக்க வேண்டியிருக்கிறது. (லூக். 14:27) ஆம், இயேசுவையும் அவருடைய சீடர்களையும் போலவே நாம் வெறுப்பையும், துன்புறுத்தலையும் சகிக்க வேண்டியிருக்கிறது. (மத். 10:22, 23; யோவா. 15:20; 16:2) ஆகையால், புதிய உலகின் ஆசீர்வாதங்களுக்காக நாம் காத்திருக்கும் வேளையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குத் தீவிரமாய் முயல வேண்டும், சகிப்புத்தன்மையையும் காட்ட வேண்டும்.—மத். 7:13, 14; லூக். 13:24.
3. வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்தால்தான் கடவுளைப் பிரியப்படுத்த முடியுமென ஏன் நினைக்க வேண்டியதில்லை?
3 அப்படியானால், உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் சந்தோஷமாகவே இருக்கக் கூடாதா? முடிவு வரும்வரை துக்கத்திலும் துயரத்திலும்தான் வாடிக்கொண்டிருக்க வேண்டுமா? இல்லை. ஏனென்றால், யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறக் காத்திருக்கிற நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். உண்மைக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமானவர்கள் என்று பைபிள் அடிக்கடி சொல்கிறது. (ஏசாயா 65:13, 14-ஐ வாசியுங்கள்.) “உம்மை [யெகோவாவை] நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக” என்று சங்கீதம் 5:11 சொல்கிறது. ஆம், துன்ப துயரங்களின் மத்தியிலும் நம்மால் அதிக சந்தோஷமாக, மனநிம்மதியாக, திருப்தியாக வாழ முடியும். பிரச்சினைகள் மத்தியிலும் சந்தோஷமாய் இருக்க பைபிள் எப்படி உதவுகிறதென இப்போது சிந்திப்போம்.
யெகோவா—“சந்தோஷமுள்ள கடவுள்”
4. கடவுளால் படைக்கப்பட்டவர்கள் அவருடைய அதிகாரத்தை உதறித்தள்ளும்போது அவர் எவ்வாறு உணருகிறார்?
4 சர்வ வல்லவரான யெகோவாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். இந்த முழு பிரபஞ்சமும் அவருடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறது. அவருக்கு எந்தக் குறையும் இல்லை, யாருடைய உதவியும் தேவையில்லை. என்றாலும், அவருடைய பரலோக மகன்களில் ஒருவன் அவருக்கு எதிராகக் கலகம் செய்து சாத்தானாக மாறியபோது ஓரளவு ஏமாற்றம் அடைந்திருப்பார். அதுமட்டுமல்ல, அந்தக் கலகத்தில் பிற்பாடு இன்னும் சில தேவதூதர்கள் சேர்ந்துகொண்டதைப் பார்த்தபோதும் அவர் வேதனைப்பட்டிருப்பார். பூமியில் அவருடைய படைப்புகளிலேயே தலைசிறந்த படைப்புகளாய்த் திகழ்ந்த ஆதாம், ஏவாள் அவரை உதறித்தள்ளியபோது அவர் எவ்வளவு மனவேதனைப்பட்டிருப்பார் என்பதையும் யோசித்துப் பாருங்கள். அதுமுதல், அவர்களுடைய சந்ததியில் வந்த கோடிக்கணக்கான மக்களும் அவருடைய அதிகாரத்தை உதறித்தள்ளியிருக்கிறார்கள்.—ரோ. 3:23.
5. முக்கியமாக எது யெகோவாவை மிகவும் வருத்தப்படுத்துகிறது?
5 சாத்தானின் கலகம் தொடர்கதையாகவே இருக்கிறது. சுமார் 6,000 வருடங்களாக, அவனுடைய கலகத்தால் ஏற்பட்ட விளைவுகளை, அதாவது மனிதர்களிடையே காணப்படும் உருவ வழிபாடுகளை, வன்முறைச் செயல்களை, கொடூரக் கொலைகளை, வக்கிர ஆசைகளை யெகோவா கவனித்து வந்திருக்கிறார். (ஆதி. 6:5, 6, 11, 12) அதோடு, நிந்தனைகளையும் அபாண்டமான பொய்களையும் கேட்டிருக்கிறார். ஏன், சில சந்தர்ப்பங்களில் கடவுளுடைய சொந்த மக்களே அவருடைய மனதைப் புண்படுத்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: ‘எத்தனை தரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள். அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரைப் புண்படுத்தினார்கள்.’ (சங். 78:40, 41) தமது மக்கள் தம்மை உதறித்தள்ளும்போது யெகோவா கடும் வேதனையை அனுபவிக்கிறார். (எரே. 3:1-10) ஆம், கெட்ட காரியங்கள் நடக்கும்போது, யெகோவா மிகவும் வருத்தப்படுகிறார்.—ஏசாயா 63:9, 10-ஐ வாசியுங்கள்.
6. பிரச்சினைகள் தலைதூக்கும்போது யெகோவா என்ன செய்திருக்கிறார்?
6 ஆனால், வேதனைகளாலும் ஏமாற்றங்களாலும் யெகோவா முடங்கிவிடுவது கிடையாது. மாறாக, பிரச்சினைகள் தலைதூக்கிய சமயங்களில், அவற்றின் தீய விளைவுகளைக் குறைக்க அவர் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். தம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்காக நீண்டகால நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார். யெகோவா ஏற்கெனவே இப்படிப்பட்ட ஞானமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதால் தமது பேரரசாட்சியே சரியென நிரூபிக்கப்படுவதைக் காண ஆவலோடு காத்திருக்கிறார். அதனால், தம்முடைய மக்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களை எண்ணியும் அவர் சந்தோஷமாக இருக்கிறார். (சங். 104:31) ஆம், தம்மீது எத்தனையோ களங்கம் சுமத்தப்பட்டிருந்தாலும் யெகோவா ‘சந்தோஷமுள்ள கடவுளாகவே’ இருக்கிறார்.—1 தீ. 1:11; சங். 16:11.
7, 8. அசம்பாவிதங்கள் நிகழும்போது, நாம் எப்படி யெகோவாவைப் பின்பற்றலாம்?
7 பிரச்சினைகளைத் தீர்க்க யெகோவாவுக்கு இருக்கிற அதே திறமை நமக்கு இல்லை என்பது உண்மைதான். என்றாலும், துன்ப துயரங்கள் வரும்போது நாம் யெகோவாவைப் பின்பற்ற வேண்டும். அசம்பாவிதங்கள் நிகழும்போது, மனமுடைந்து போவது இயல்புதான், ஆனால், நாம் அதே நிலையில் இருந்துவிட வேண்டியதில்லை. யெகோவாவின் சாயலில் நாம் படைக்கப்பட்டிருப்பதால், சிந்திக்கும் திறனும் நடைமுறை ஞானமும் நமக்கு இருக்கிறது; இதனால் பிரச்சினைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும், தேவைப்படும்போது சரியான நடவடிக்கைகளை எடுக்கவும் நம்மால் முடிகிறது.
8 சில சூழ்நிலைகளை நம்மால் சரிசெய்யவே முடியாது. இந்த உண்மையை மனதில் வைத்திருந்தால் வாழ்க்கைப் பிரச்சினைகளை நம்மால் சமாளிக்க முடியும். அந்தப் பிரச்சினைகளையே நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுவோம், உண்மை வழிபாட்டில் நமக்குக் கிடைக்கும் பல சந்தோஷங்களையும் இழந்துவிடுவோம். ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதுமான நடவடிக்கைகளை எடுத்த பிறகு, அதைப் பற்றியே யோசிப்பதை நிறுத்திவிட்டு ஆக்கபூர்வமான காரியங்களில் மூழ்கிவிடுவது சிறந்தது. பைபிளிலுள்ள பின்வரும் பதிவுகள் இந்தக் குறிப்பையே சிறப்பித்துக் காட்டுகின்றன.
நியாயத்தன்மை அவசியம்
9. அன்னாள் எப்படி நியாயத்தன்மையோடு நடந்துகொண்டார்?
9 சாமுவேல் தீர்க்கதரிசியின் தாய் அன்னாளின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சாமுவேல் பிறப்பதற்குமுன் குழந்தை இல்லாத குறை அவர் மனதை வாட்டியது. அதனால் மற்றவர்களின் கேலிப் பேச்சுக்கும் குத்தலான பேச்சுக்கும் ஆளானார். சில சமயங்களில் அவர் மிகவும் துவண்டுபோய், சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்தார். (1 சா. 1:2-7) ஒருமுறை யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்றபோது அவர் ‘மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்.’ (1 சா. 1:10) அன்னாள் தனது உணர்ச்சிகளையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினார்; பிறகு, தலைமைக் குரு ஏலி அவரை அணுகி, “சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக” என்றார். (1 சா. 1:17) தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டதாக அன்னாள் அப்போது நிச்சயம் நினைத்திருப்பார். ஏனென்றால், குழந்தை இல்லாத குறையை அவராகவே தீர்ப்பதென்பது முடியாது, அல்லவா? எனவே, அங்கிருந்து ‘புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தார்; அப்புறம் அவர் துக்க முகமாயிருக்கவில்லை.’ இவ்வாறு, அன்னாள் நியாயத்தன்மையோடு நடந்துகொண்டார்.—1 சா. 1:18.
10. தன்னால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை எதிர்ப்பட்டபோது பவுல் எதார்த்தமான என்ன மனநிலையைக் காட்டினார்?
10 பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோது, அப்போஸ்தலன் பவுலும் இதே மனநிலையைக் காட்டினார். ஏதோவொரு உபாதையால் அவர் மிகவும் அவதிப்பட்டார். “உடலில் ஒரு முள்” என்று அதைக் குறிப்பிட்டார். (2 கொ. 12:7) அது, உடல் உபாதையாக இருந்திருந்தாலும் சரி மன உபாதையாக இருந்திருந்தாலும் சரி, அதைத் தீர்க்க பவுல் தன்னால் முடிந்தவரை முயன்றார், யெகோவாவிடம் ஜெபமும் செய்தார். எத்தனை முறை? மூன்று முறை. பவுல் மூன்றாவது முறை ஜெபம் செய்த பிறகு, ‘அந்த முள்ளை’ தாம் அற்புதமாக நீக்கப் போவதில்லை என்று யெகோவா அவருக்குத் தெரியப்படுத்தினார். இதை பவுல் ஏற்றுக்கொண்டு யெகோவாவின் சேவையில் முழுமையாகவும் மும்முரமாகவும் ஈடுபட ஆரம்பித்தார்.—2 கொரிந்தியர் 12:8-10-ஐ வாசியுங்கள்.
11. துன்ப துயரங்களைச் சமாளிப்பதற்கு ஜெபமும் மன்றாட்டும் நமக்கு எப்படி உதவலாம்?
11 நம்முடைய துன்ப துயரங்களைக் குறித்து யெகோவாவிடம் ஜெபம் செய்வதை நிறுத்திவிட வேண்டுமென்று இந்த உதாரணங்கள் காட்டுவதில்லை. (சங். 86:7) மாறாக, “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்றே பைபிள் பரிந்துரைக்கிறது. நாம் செய்கிற விண்ணப்பங்களுக்கும் மன்றாட்டுகளுக்கும் யெகோவா எப்படிப் பதிலளிக்கிறார்? “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்” என பைபிள் சொல்கிறது. (பிலி. 4:6, 7) ஆம், யெகோவா நம்முடைய பிரச்சினைகளை நீக்காவிட்டாலும், நம் மனதைப் பாதுகாப்பதன் மூலம் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். அந்தப் பிரச்சினையைப் பற்றி ஜெபம் செய்த பிறகு, நம் மனதில் இனம்புரியாத ஓர் அமைதி ஏற்படலாம்; கவலைகளிலேயே மூழ்கிவிடுவதால் வரும் ஆபத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் இன்பம் காணுங்கள்
12. சோகமாகவே இருப்பது ஏன் கெடுதலை விளைவிக்கும்?
12 “துன்பக் காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய்” என்று நீதிமொழிகள் 24:10 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. “மனத்துயரால் உள்ளம் உடையும்” என்று மற்றொரு நீதிமொழி சொல்கிறது. (நீதி. 15:13, பொது மொழிபெயர்ப்பு) கிறிஸ்தவர்கள் சிலர் சோகத்தில் மூழ்கிப்போய், தனிப்பட்ட விதமாக பைபிள் படிப்பதையும் அதைக் குறித்துத் தியானிப்பதையும் நிறுத்திவிடுகிறார்கள்; ஏனோதானோவென்று ஜெபம் செய்கிறார்கள், சக விசுவாசிகளிடமிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். ஆகையால், சோகமாகவே இருப்பது கெடுதலைத்தான் விளைவிக்கும்.—நீதி. 18:1, 14.
13. நாம் எந்தக் காரியங்களில் ஈடுபட்டால் சோகத்தைச் சமாளிக்கவும் சந்தோஷத்தைக் கண்டடையவும் முடியும்?
13 நம்பிக்கையான மனநிலையோ, நமக்குச் சந்தோஷத்தை அள்ளித் தருகிற காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” என்று தாவீது எழுதினார். (சங். 40:8) நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்ப்படும்போது, ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிடுகிற எண்ணம்கூட நம் மனதில் வரக் கூடாது. சொல்லப்போனால், சந்தோஷமளிக்கிற காரியங்களில் ஈடுபடுவதுதான் சோகத்திற்கு அருமருந்து. கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசித்து, அதிலுள்ளவற்றைக் கூர்ந்து கவனித்தால் மகிழ்ச்சி காணலாமென்று யெகோவா சொல்கிறார். (சங். 1:1, 2; யாக். 1:25) பைபிளை வாசிக்கும்போதும் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் நாம் ‘இனிய சொற்களை’ கேட்கிறோம்; இவை நம்மை ஊக்கப்படுத்துகின்றன, நம் இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன.—நீதி. 12:25; 16:24.
14. யெகோவா அளித்திருக்கும் என்ன வாக்குறுதி இப்போது நமக்கு சந்தோஷத்தைத் தருகிறது?
14 நாம் சந்தோஷமாக இருப்பதற்கு ஏராளமான ஏற்பாடுகளை யெகோவா செய்திருக்கிறார். நம்முடைய மீட்புக்காக அவர் அளித்திருக்கும் வாக்குறுதி சந்தோஷத்திற்கு முக்கியக் காரணமாய் இருக்கிறது. (சங். 13:5) இன்று நம் வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும்சரி, கடவுளை நாம் ஊக்கமாய்த் தேடினால், அவர் நமக்கு நிச்சயம் பலனளிப்பார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (பிரசங்கி 8:12-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட நம்பிக்கையை ஆபகூக் தீர்க்கதரிசி அழகாக விவரிக்கிறார்: ‘அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவ மரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.’—ஆப. 3:17, 18.
‘யெகோவாவைக் கடவுளாகக் கொண்டிருக்கிற மக்கள் சந்தோஷமானவர்கள்!’
15, 16. எதிர்காலத்தில் யெகோவா தரப்போகிற அருமையான வாழ்க்கைக்காகக் காத்திருக்கிற நாம் இப்போதே அனுபவிக்கும் நல்ல காரியங்கள் யாவை?
15 எதிர்காலத்தில் யெகோவா தரப்போகிற அருமையான வாழ்க்கைக்காக நாம் காத்திருக்கிறோம் என்றாலும், இக்காலத்தில் அவர் தருகிற நல்ல காரியங்களையெல்லாம் நாம் அனுபவிக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தம். “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 3:12, 13) எனவே, மற்றவர்களுக்கு நாம் ‘நன்மை செய்ய’ வேண்டும். பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறதென இயேசு சொன்னார். ஆகவே, நம்முடைய மணத்துணை, பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு நாம் செய்யும் அன்பான செயல்கள் பரம திருப்தியைத் தரும். (நீதி. 3:27) நம் சகோதர சகோதரிகளிடம் கனிவையும், உபசரிப்பையும், மன்னிப்பையும் காட்டுவதுகூடப் பேரளவான சந்தோஷத்தைத் தரும், யெகோவாவையும் பிரியப்படுத்தும். (கலா. 6:10; கொலோ. 3:12-14; 1 பே. 4:8, 9) அதோடு, சுய தியாக மனப்பான்மையோடு ஊழியம் செய்வதால் பலன்கள் கிடைப்பது நிச்சயம்.
16 பிரசங்கி 3:12, 13-ல் உள்ள வார்த்தைகள், சாப்பிடுவது குடிப்பது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களைக் குறிப்பிடுகின்றன. ஆகவே, துன்பங்களில் நாம் அல்லாடி வந்தாலும், யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் நல்ல நல்ல பொருள்களிலிருந்து சந்தோஷத்தைக் காணலாம். அதோடு, உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் சூரிய அஸ்தமனம், கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகள், குட்டிக் குட்டி மிருகங்களின் குறும்புகள், இயற்கையின் மற்ற விநோதங்கள் போன்ற காரியங்களை அனுபவித்து மகிழலாம்; இதற்குப் பணங்காசு தேவை இல்லை. என்றபோதிலும், நமக்குள் பிரமிப்பையும் குதூகலத்தையும் அவை ஏற்படுத்துகின்றன. அவற்றைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்கும்போது யெகோவாமீது நமக்கு அன்பு பெருக்கெடுக்கிறது. இந்த நல்ல காரியங்களையெல்லாம் தந்தவர் அவர்தானே!
17. துயரங்களிலிருந்து எது நமக்கு நிரந்தர விடுதலை அளிக்கும், இதற்கிடையே எது நமக்கு ஆறுதலை அளிக்கிறது?
17 கடவுள்மீது அன்பு காட்டுவது, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது, மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பது ஆகியவை அபூரணத்தின் காரணமாக நாம் படும் துயரங்களிலிருந்து காலப்போக்கில் நிரந்தர விடுதலை அளிக்கும்; அதோடு, நிரந்தர சந்தோஷத்திற்கு வழிவகுக்கும். (1 யோ. 5:3) தற்போது நம்மை வாட்டி வதைக்கும் காரியங்களெல்லாம் யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும் என்பதை அறிவது நமக்கு ஆறுதலளிக்கிறது. “உங்களது அன்புமாறா கருணையில் நான் சந்தோஷமும் ஆனந்தமும் அடைவேன், நீங்கள் என் துன்பத்தைப் பார்த்திருக்கிறீர்கள்; என் இக்கட்டுகளையும் அறிந்திருக்கிறீர்கள்” என்று தாவீது எழுதினார். (சங். 31:7, NW) யெகோவா அன்பினால் தூண்டப்பட்டு, துன்பங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.—சங். 34:19.
18. கடவுளுடைய மக்கள் ஏன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்?
18 யெகோவா அளித்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் காண நாம் காத்திருக்கிற இந்த வேளையில், சந்தோஷமுள்ள கடவுளாகிய அவரைப் பின்பற்றுவோமாக. துன்ப துயரங்களைக் கண்டு ஆன்மீக ரீதியில் முடங்கிவிடாதிருப்போமாக. பிரச்சினைகள் வரும்போது சிந்திக்கும் திறனும் நடைமுறை ஞானமும் நம்மை வழிநடத்துவதாக. நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், துன்ப துயரங்களால் ஏற்படுகிற தீய பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் யெகோவா நமக்கு உதவுவார். சரீர காரியங்களாகட்டும் ஆன்மீகக் காரியங்களாட்டும், கடவுள் தருகிற எல்லா நல்ல காரியங்களையும் நாம் அனுபவித்து மகிழ்வோமாக. அவரோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளும்போது நம்மால் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். ஏனென்றால், ‘யெகோவாவைக் கடவுளாகக் கொண்டிருக்கிற மக்கள் சந்தோஷமானவர்கள்!’—சங். 144:15, NW.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• துன்ப துயரங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்போது, நாம் எப்படி யெகோவாவைப் பின்பற்றலாம்?
• துன்ப துயரங்களைச் சமாளிக்க நியாயத்தன்மை நமக்கு எப்படி உதவும்?
• கஷ்ட காலங்களின்போது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நாம் எப்படிச் சந்தோஷத்தைக் காணலாம்?
[பக்கம் 16-ன் படங்கள்]
கெட்ட காரியங்கள் நடக்கும்போது யெகோவா மிகவும் வருத்தப்படுகிறார்
[படத்திற்கான நன்றி]
© G.M.B. Akash/Panos Pictures
[பக்கம் 18-ன் படங்கள்]
நாம் எப்போதும் சந்தோஷமாயிருக்க யெகோவா ஏராளமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்