-
யார் சொல்வதை நம்ப வேண்டும்?விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
யார் சொல்வதை நம்ப வேண்டும்?
“எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.”—எபிரெயர் 3:4.
பைபிளின் இந்தக் கருத்து நியாயமானதுதான் என நீங்கள் நினைக்கிறீர்களா? இது எழுதப்பட்டு கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இக்காலப்பகுதியில் மனிதர் விஞ்ஞானத் துறையில் விறுவிறுவென முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, இயற்கையில் தெரிகிற வடிவமைப்பை வைத்து, இதையெல்லாம் வடிவமைத்துப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என இன்னும் யாராவது நம்பிக்கொண்டிருக்கிறார்களா?
விஞ்ஞானத்தில் வளர்ச்சி கண்டிருக்கும் நாடுகளில் வாழும் அநேகரும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறாரென நம்புவதாக கூறுகிறார்கள். இது குறித்து நியூஸ்வீக் பத்திரிகை 2005-ம் ஆண்டில் ஒரு சுற்றாய்வு நடத்தியது. அதன்படி, ஐக்கிய மாகாணங்களில் 80 சதவீதத்தினர், “இந்தப் பிரபஞ்சத்தை கடவுள்தான் படைத்தார் என்பதை நம்புகிறார்கள்” என்று தெரியவருகிறது. படிக்காதவர்கள்தான் இப்படி நம்புகிறார்களா? விஞ்ஞானிகள் யாராவது கடவுளை நம்புகிறார்களா? இது சம்பந்தமாக நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை 1997-ல் ஒரு சுற்றாய்வு நடத்தியது. இதில் கலந்துகொண்ட உயிரியலாளர்கள், இயற்பியலாளர்கள், கணிதவியலாளர்கள் ஆகியோரில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் கடவுள் இருப்பதை தாங்கள் நம்புவதாக தெரிவித்தார்கள். அதுமட்டுமா, அவர் தங்கள் ஜெபங்களைக் கேட்டு, அதற்குப் பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.
என்றாலும், மற்ற விஞ்ஞானிகள் இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான டாக்டர் ஹர்பர்ட் ஏ. ஹாப்ட்மன், சமீபத்தில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் இது சம்பந்தமாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்; அதாவது, இயற்கைக்கு அப்பாற்பட்டதை நம்புவது, அதிலும் முக்கியமாக கடவுளை நம்புவது உண்மையான அறிவியலுக்கு முரணானது என தெரிவித்தார். “இந்த நம்பிக்கை மனிதகுலத்திற்கு கேடு விளைவிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் வடிவமைப்பைப் பார்க்கையில் நிச்சயம் ஒரு வடிவமைப்பாளர் இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடவுளை நம்பும் விஞ்ஞானிகள்கூட இந்த உண்மையைக் கற்பிக்கத் தயங்குகிறார்கள். ஏன்? ஸ்மித்சோனியன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த புதைபடிவ உயிரியல் வல்லுநரான டக்லஸ் எச். எர்வின் இதற்கான காரணம் ஒன்றைத் தெரிவிக்கிறார்: “அற்புதங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இது அறிவியலின் நியதிகளில் ஒன்று.”
நீங்கள் எதைச் சிந்திப்பது, எதை நம்புவது என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க விரும்புகிறீர்களா? அல்லது அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்த்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர விரும்புகிறீர்களா? சமீப கால அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி பின்வரும் பக்கங்களில் வாசிக்கும்போது படைப்பாளர் ஒருவர் இருப்பதை நம்புவது அறிவுப்பூர்வமானதுதானா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
அத்தாட்சிகளை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்
[பக்கம் 3-ன் பெட்டி]
யெகோவாவின் சாட்சிகள் படைப்புவாதிகளா?
பைபிளில் உள்ள ஆதியாகமம் என்ற புத்தகம் படைப்பு பற்றிச் சொல்கிறது. அந்தப் பதிவு உண்மை என்றே யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். அதற்காக, யெகோவாவின் சாட்சிகளை படைப்புவாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது. ஏன்? முதலாவதாக, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பிரபஞ்சமும், பூமியும் அதிலுள்ள எல்லா உயிரினங்களும் ஆறே நாட்களில்—ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்ற கணக்கில்—படைக்கப்பட்டதாக அநேக படைப்புவாதிகள் நம்புகிறார்கள். ஆனால், பைபிள் இப்படிக் கற்பிப்பதில்லை.a இரண்டாவதாக, பைபிள் கற்பிக்காத அநேக கோட்பாடுகளை படைப்புவாதிகள் நம்புகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளோ கடவுளுடைய வார்த்தை கற்பிப்பதை மட்டுமே நம்புகிறார்கள்.
அதுமட்டுமின்றி, சில நாடுகளில் “படைப்புவாதி” என்ற வார்த்தை அரசியலில் மும்முரமாக ஈடுபடும் அடிப்படைவாத அமைப்பினரைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. தங்களுடைய மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு சட்டங்களையும் போதனைகளையும் வகுத்து அவற்றைப் பின்பற்றும்படி அரசியல்வாதிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் ஆகியோரை வற்புறுத்த இவர்கள் முயலுகிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளோ அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை. சட்டங்களை வகுக்கவும், அமல்படுத்தவும் அரசாங்கங்களுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் மதிக்கிறார்கள். (ரோமர் 13:1-7) அதேசமயத்தில், கிறிஸ்தவர்கள் “உலகத்தின் பாகமானவர்கள் அல்ல” என்று இயேசு குறிப்பிட்டதையும் அவர்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். (யோவான் 17:14-16, NW) கடவுள் அளித்திருக்கும் நெறிமுறைகளின்படி வாழ்வதால் வரும் நன்மைகளைப் பற்றிக் கற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு உதவுகிறார்கள்; இதற்காக அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள். அடிப்படைவாதிகளோ, பைபிள் நெறிமுறைகளைப் பின்பற்றும்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்துகிற பொதுச் சட்டங்களை இயற்ற முயலுகிறார்கள்; அவர்களை யெகோவாவின் சாட்சிகள் ஆதரிப்பதில்லை. இவ்விதமாக கிறிஸ்தவ நடுநிலை தவறாமல் நடந்துகொள்கிறார்கள்.—யோவான் 18:36.
[அடிக்குறிப்பு]
a தயவுசெய்து, இந்த இதழில் பக்கம் 18-ல் உள்ள “பைபிளின் கருத்து: அறிவியலும் ஆதியாகமமும் முரண்படுகின்றனவா?” என்ற கட்டுரையைக் காண்க.
-
-
இயற்கை எதைக் கற்பிக்கிறது?விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
இயற்கை எதைக் கற்பிக்கிறது?
“நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும். ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும். அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.” —யோபு 12:7, 8.
சமீபத்திய ஆண்டுகளில் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும், தாவரங்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நிறைய விஷயங்களைக் கற்றிருக்கிறார்கள். அவற்றின் வடிவமைப்பை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் புதிய பொருள்களை உருவாக்குகிறார்கள். அதுமட்டுமின்றி ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகளின் செயல்பாட்டில் முன்னேற்றமும் செய்கிறார்கள். இத்துறை, பையோமிமெடிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்வரும் உதாரணங்களைக் குறித்துச் சிந்திக்கையில், ‘இந்த வடிவமைப்புகளுக்கான பாராட்டு அனைத்தும் யாருக்கு உரியது?’ என்ற கேள்வியை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
திமிங்கலத்தின் துடுப்புகள் கற்பிப்பதென்ன?
விமானங்களை வடிவமைப்போர், திமில் முதுகுத் திமிங்கலங்களிடம் (humpback whale) இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒன்றா, இரண்டா, நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். முழு வளர்ச்சியடைந்த திமிங்கலத்தின் எடை சுமார் 30 டன்; அதாவது முழு லோடு ஏற்றப்பட்ட லாரியின் எடைக்குச் சமமாகும். இதற்கு ஓரளவு விறைப்பான உடலும், பெரிய இறக்கைகள் போன்ற துடுப்புகளும் இருக்கின்றன. 12 மீட்டர் நீளத்திற்கு இது வளர்கிறது. தண்ணீருக்கடியில் படு வேகமாக நீந்துகிறது. உதாரணமாக, நண்டு, நத்தை போன்றவற்றையோ மீனையோ பார்த்துவிட்டால் இது என்ன செய்யும், தெரியுமா? தண்ணீருக்கடியில் சிறிய வட்டமாகச் சுழன்று சுழன்று நீந்திக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி வரும். அச்சமயத்தில் நீர்க் குமிழிகளை வெளியிடும். இப்படி வட்ட வடிவில் சேர்ந்துவிடும் நீர்க் குமிழிகள் ஒரு வலை போல இருக்கின்றன. இந்த வட்டத்தின் குறுக்களவு குறைந்தபட்சம் 1.5 மீட்டர் இருக்கும். இந்த நீர்க்குமிழி வலைக்குள் சிக்குபவற்றை திமிங்கலம் லபக்கென்று விழுங்கிவிடும்.
இதன் உடலோ விறைப்பாக இருக்கும். அப்படியிருந்தும், அத்தனைச் சிறிய வட்டத்திற்குள் சுழன்று சுழன்று அவற்றால் நீந்த முடிவதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அசந்து போனார்கள். இவற்றின் துடுப்புகளின் வடிவமைப்புதான் அதற்குக் காரணம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்தத் துடுப்புகளின் முன்புறத்திலுள்ள விளிம்புப் பகுதி, விமானத்தின் இறக்கைகள்போல வழுவழுப்பானவை அல்ல. மாறாக, ரம்பப் பற்கள் போன்ற அமைப்பைக் கொண்டவை. அவற்றை ட்யூபர்கில்ஸ் என்று அழைக்கிறார்கள்.
திமிங்கலம் தண்ணீரில் வேகமாக நீந்தும்போது, மேல்நோக்கி எழும்ப ட்யூபர்கில்ஸ் உதவுகிறது. அதோடு, தண்ணீரின் எதிர்ப்பு விசையைக் குறைக்கிறது. எப்படி? இயற்கை சரித்திரம் என்ற ஆங்கில பத்திரிகை இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. ட்யூபர்கில்ஸ், திமிங்கலத்தின் துடுப்புகளுக்கு மேல் தண்ணீரை வேகமாகச் சுழல வைக்கிறது. திமிங்கலம் செங்குத்தாக மேலே எழும்புகையிலும் இவ்வாறே நடக்கிறது. துடுப்புகளின் முன்புற விளிம்புகள் வழுவழுப்பாக இருந்தால் திமிங்கலத்தால் இவ்வளவு வேகமாக சுழன்று சுழன்று மேலே எழும்ப முடியாது. காரணம், துடுப்புகளின் பின்னால் தண்ணீர் சுழல்வதால் திமிங்கலம் மேலே எழும்பாதபடி அது தடுத்துவிடும்.
இந்தக் கண்டுபிடிப்பு நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? இதை அடிப்படையாக வைத்து விமானங்களை வடிவமைக்கையில் விமான இறக்கைகளோடு இணைக்கப்பட்டிருக்கும் அகல் தொங்கல் பகுதிகளும் (wing flaps) காற்றின் வேகத்தை மாற்றத் தேவைப்படும் மற்ற கருவிகளும் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இப்படிப்பட்ட இறக்கைகள் பாதுகாப்பானவை, பராமரிக்க எளிதானவை. சீக்கிரத்திலேயே ஒருநாள் “திமில் முதுகு திமிங்கலத்தின் துடுப்புகளில் இருக்கும் பற்கள் போன்ற அமைப்பை ஒவ்வொரு விமானத்திலும் காணமுடியும்” என்று பயோமெகானிக்ஸ் வல்லுநர் ஜான் லாங் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கடற்காக்கைகளின் இறக்கைகளை காப்பியடித்தல்
ஏற்கெனவே பறவைகளின் இறக்கைகளை காப்பியடித்துத்தான் விமானத்தின் இறக்கைகளை வடிவமைத்திருக்கிறார்கள். என்றாலும், சமீப நாட்களில் பொறியாளர்கள் இவ்விஷயத்தில் இன்னுமதிகமாக பறவைகளை காப்பியடிக்கத் தொடங்கியுள்ளனர். “ப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானத்தைத் தயாரித்துள்ளனர். அது ஒரு கடற்காக்கையைப் போலவே வட்டமிட்டு, சர்ரென்று கீழிறங்கி, அதே வேகத்தில் மேலெழும்பும் திறனைக் கொண்டது” என்று நியு சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது.
கடற்காக்கைகள் அவற்றின் இறக்கைகளை முன் பகுதியிலும் தோள்பட்டைப் பகுதியிலும் மடக்க முடிவதால், அவற்றால் வான்வெளியில் பல்வேறு சாகசங்கள் புரிய முடிகிறது. கடற்காக்கைகளின் இறக்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட “மேற்சொல்லப்பட்ட விமானம் 24 அங்குல நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள மோட்டார் இதன் இறக்கைகளை அசையச் செய்யும் உலோகத் துண்டுகளை இயக்குகிறது” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. இப்படிப் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட இறக்கைகளின் உதவியோடு இச்சிறிய விமானத்தால் உயரமான கட்டடங்களுக்கு இடையே வட்டமிடவும், தலைகுப்புற டைவ் அடிக்கவும் முடிகிறது. அமெரிக்க விமானப் படை இதுபோன்ற விமானத்தைத் தயாரிக்க ஆர்வம் காட்டுகிறது. பெருநகரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரசாயன, உயிரியல் ஆயுதங்களைத் தேடுவதற்கு இவற்றைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.
பல்லியின் பாதத்தை காப்பியடித்தல்
நிலவாழ் உயிரினங்களிடமிருந்தும் மனிதர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. உதாரணமாக, பல்லியால் சுவர்களில் ஏறவும், மேற்கூரையில் தலைகீழாக நடக்கவும் முடியும். பல்லிக்கு இருக்கிற இந்தத் திறன், பைபிள் காலங்களில்கூட நன்கு அறியப்பட்டிருந்தது. (நீதிமொழிகள் 30:28, NW) புவியீர்ப்பு விசையை எதிர்த்துச் செயல்பட அவற்றால் எப்படி முடிகிறது?
பல்லியின் பாதமெங்கும் நுண்ணிய கொக்கி போன்ற அமைப்புகள் உள்ளன. இவற்றின் உதவியால்தான் வழுவழுப்பான தளங்களில்கூட அவற்றால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்க முடிகிறது. இப்படி நிற்பதற்காக, அவற்றின் பாதத்தில் பிசின் எதுவும் சுரப்பதில்லை. மாறாக, நுட்பமான மூலக்கூறு விசையே அவற்றுக்கு உதவுகிறது. பல்லியின் பாதங்களிலும் சுவற்றிலும் இருக்கிற மூலக்கூறுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன. வான்டர் வால்ஸ் விசை என்றழைக்கப்படும் வலுக்குறைவான ஈர்ப்பு விசையின் காரணமாகவே இது சாத்தியமாகிறது. பொதுவாக, இந்த விசையைவிட புவியீர்ப்புச் சக்தி அதிக வலிமையானது. அதனால்தான் நம் கைகளைச் சுவற்றில் வைத்து நம்மால் ஏற முடியாமல் போகிறது. ஆனால், ஏராளமான இந்த நுண்கொக்கிகள் காரணமாக, பல்லியின் பாதம் சுவற்றில் படும் பரப்பளவு அதிகமாகிறது. ஆயிரக்கணக்கான இந்த நுண்கொக்கிகளால் உண்டாகும் வான்டர் வால்ஸ் விசை, இந்தச் சிறிய பல்லி சுவற்றோடு ஒட்டிக்கொள்ளத் தேவையான விசையை உண்டாக்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்பால் ஏதேனும் பிரயோஜனமுண்டா? பல்லியின் பாதங்களை காப்பியடித்து உருவாக்கப்படுகிற செயற்கைப் பொருட்கள் வெல்க்ரோவிற்குப் பதிலாக பயன்படுத்தப்படலாம். வெல்க்ரோவும்கூட இயற்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு பொருள்தான்.a பல்லியினுடைய பாதத்தின் வடிவமைப்பை அடிப்படையாக வைத்து செயற்கையாக ஒருவித டேப் தயாரிக்கப்பட்டது. அதைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்கள் “மருத்துவத்தில்” பெருமளவு பயனுள்ளவையாக இருக்கும். “குறிப்பாக, ரசாயன பிசின்கள் பயன்படுத்தப்பட முடியாத சந்தர்ப்பத்தில் இவற்றைப் பயன்படுத்தலாம்” என்று ஓர் ஆராய்ச்சியாளர் சொன்னதாக தி இகானமிஸ்ட் பத்திரிகை தெரிவிக்கிறது.
பாராட்டு யாருக்கு உரியது?
தேளைப் போன்று நடக்கும் எட்டுக் கால் ரோபாட் ஒன்றை “நாஸா” விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகிறார்கள். பின்லாந்து நாட்டுப் பொறியாளர்கள் ஆறு கால் கொண்ட ட்ராக்டர் ஒன்றை ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்கள். ஒரு ராட்சஸ பூச்சியைப் போலவே இந்த ட்ராக்டர் வழியில் இருக்கும் தடைகள் மீதெல்லாம் ஏறிச் செல்லும் திறனுடையது. மற்ற ஆராய்ச்சியாளர்கள், ஊசியிலை மரக் கூம்புகள் திறந்து மூடும் முறையை அடிப்படையாக வைத்து சில துணி வகைகளை வடிவமைத்துள்ளனர். பாக்ஸ் மீனின் வழுக்கிச்செல்லும் அமைப்பைப் பார்த்து அதைப் போன்ற வண்டிகளை ஒரு கார் உற்பத்தியாளர் உருவாக்கி வருகிறார். லேசான, அதேசமயத்தில் உறுதியான உடல் கவசத்தை உருவாக்குவதற்காக சில ஆராய்ச்சியாளர்கள் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய அபலோன் நத்தைகளின் ஓடுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு, அபாரமான ஐடியாக்களை இயற்கை அள்ளித் தந்துள்ளது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான உயிரியல் அமைப்பு பற்றிய விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது தகவல் வங்கியில் சேகரித்து வைத்துள்ளனர். விஞ்ஞானிகள், “வடிவமைப்பதில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இயற்கை அளிக்கும் பதில்களை” இதிலிருந்து தேடிக் கண்டுபிடிக்கலாம் என்பதாக தி இகானமிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. இந்தத் தகவல் வங்கியில் இருக்கும் இயற்கை அமைப்புகள், “உயிரியல் காப்புரிமைகள்” என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, புதியதோர் ஐடியாவை அல்லது கருவியை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யும் நபரோ நிறுவனமோ தான் காப்புரிமையைப் பெற முடியும். உயிரியல் காப்புரிமை வங்கி பற்றி தி இகானமிஸ்ட் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “இயற்கையிலிருந்து பெற்றுக்கொண்ட அபாரமான ஐடியாக்களை ‘உயிரியல் காப்புரிமைகள்’ என்று அழைப்பதன் மூலம் இயற்கைதான் உண்மையான காப்புரிமையாளர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தவே செய்திருக்கிறார்கள்.”
இயற்கைக்கு இத்தனை அற்புதமான ஐடியாக்கள் எங்கிருந்து வந்தன? இத்தனை அருமையான வடிவமைப்புகள் அனைத்தும் லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்த பரிணாமத்தின் மூலமாய் வந்ததாக அநேக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், மற்ற ஆராய்ச்சியாளர்கள் வேறு விதமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நுண்ணுயிரியல் வல்லுநரான மைக்கேல் பீஹீ 2005-ல், த நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் இவ்வாறு எழுதினார்: “[இயற்கையில்] தெளிவாகக் காணப்படும் வடிவமைப்பு, நம்பத்தக்க எளிய கருத்தைத் தெரிவிக்கிறது: ஆங்கில பழமொழி ஒன்று கூறுவது போல, அது பார்ப்பதற்கு வாத்து மாதிரியே இருந்தால், வாத்து மாதிரியே நடந்தால், வாத்து மாதிரியே கத்தினால், அது வாத்துதான் என தாராளமாக முடிவு செய்யலாம்; அதாவது, அதை மறுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில்.” அவரது முடிவு? “ஒரு பொருளைப் பார்க்கையில் அது வடிவமைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியும்போது, அந்த உண்மையை மறுப்பது நியாயமல்ல.”
பாதுகாப்பான, செயல்திறன் கொண்ட விமான இறக்கையை வடிவமைக்கும் பொறியாளர் அதற்கான பாராட்டைப் பெறத் தகுந்தவர். பலவிதத்தில் பயன்படக்கூடிய பேண்டேஜையோ, சௌகரியமான துணிவகையையோ, அதிகத் திறன் கொண்ட மோட்டார் வாகனத்தையோ வடிவமைப்பவரும் அதற்காகப் பாராட்டைப் பெறத் தகுந்தவர். ஆனால் வேறொருவரது ஐடியாவை காப்பியடித்துவிட்டு, தானே அதைக் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடுபவர் நிச்சயம் ஒரு குற்றவாளியாகவே கருதப்படுவார்.
திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய கருவிகளை வடிவமைக்கையில் அரைகுறையாகத்தான் இயற்கையை காப்பியடிக்கிறார்கள். இருந்தாலும், வடிவமைப்பதில் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் வடிவமைத்த புத்திக்கூர்மையுள்ள படைப்பாளரை கௌரவிப்பதற்குப் பதிலாக, புத்திக்கூர்மையற்ற பரிணாமத்தை அவர்கள் ஆதரிப்பது நியாயமாகுமா? ஓர் ஐடியாவை காப்பியடிக்கவே புத்திக்கூர்மையுள்ள நபர் தேவைப்படும்போது, ஒரிஜினல் ஐடியா மட்டும் தானாக எப்படி வந்திருக்கும்? அப்படியானால், யாரை அதிகமாகப் பாராட்ட வேண்டும், எல்லாவற்றையும் வடிவமைத்த படைப்பாளரையா? அல்லது அதை காப்பியடிக்கும் மனிதர்களையா?
நியாயமான முடிவு
இயற்கையிலுள்ள பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் கவனித்தபிறகு, ஆழ்ந்து யோசிக்கும் மக்கள் சங்கீதக்காரன் கூறிய பின்வரும் வார்த்தைகளை ஒத்துக்கொள்கிறார்கள்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 104:24) பைபிள் எழுத்தாளரான பவுலும் இதை ஒத்துக்கொண்டார். அவர் இவ்வாறு கூறினார்: “காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.”—ரோமர் 1:19, 20.
என்றாலும், பைபிளை மதிக்கிற, கடவுளை நம்புகிற உண்மையுள்ள ஆட்கள் அநேகர், பரிணாமத்தைப் பயன்படுத்தி இயற்கையிலுள்ள அற்புதங்களை கடவுள் படைத்திருக்க வேண்டும் என்பதாக வாதிடுகிறார்கள். இதைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?
[அடிக்குறிப்பு]
a வெல்க்ரோ என்பது, கொக்கி-வளைய அமைப்புடைய டேப் ஆகும். புர்டாக் செடியின் விதைகளைப் பார்த்து இது வடிவமைக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
இயற்கையில் இத்தனை அற்புதமான ஐடியாக்கள் எப்படி வந்தன?
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
இயற்கையின் காப்புரிமையாளர் யார்?
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
ஓர் ஐடியாவை காப்பியடிக்கவே புத்திக்கூர்மையுள்ள நபர் தேவைப்படும்போது, ஒரிஜினல் ஐடியா மட்டும் தானாக எப்படி வந்திருக்கும்?
சாகசங்கள் புரியும் இந்த விமானம் கடற்காக்கையின் இறக்கையைப் பார்த்து வடிவமைக்கப்பட்டது
பல்லியின் பாதத்தில் அழுக்கு படிவதில்லை, பாதத்தடங்கள் ஏற்படுவதில்லை, டெஃப்லானைத் தவிர எல்லா பரப்புகளிலும் ஒட்டிக்கொள்ளும், பாதங்களை வைப்பதும் எடுப்பதும் இதற்கு வெகு சுலபம். இதை காப்பியடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள்
பாக்ஸ் மீனின் வழுக்கிச்செல்லும் அமைப்பு, வண்டியை வடிவமைப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தது
[படங்களுக்கான நன்றி]
விமானம்: Kristen Bartlett/ University of Florida; பல்லியின் பாதம்: Breck P. Kent; பாக்ஸ் மீனும் காரும்: Mercedes-Benz USA
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
இயல்புணர்வால் ஞானமுள்ள பயணிகள்
அநேக உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கையில் வழியை எப்படிக் கண்டுபிடிக்கின்றன? அவை ‘இயல்புணர்வால் ஞானமுள்ளவையாக இருப்பதாலேயே.’ (நீதிமொழிகள் 30:24, 25, NW) இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
◼ எறும்புகளின் போக்குவரத்து உணவைத் தேடிச் செல்லும் எறும்புகள் தங்கள் புற்றுக்குச் சரியாக வந்து சேருவது எப்படி? அவை மோப்பத் தடங்களை விட்டுச் செல்கின்றன. அதுமட்டுமின்றி தங்கள் ‘வீட்டிற்கு’ சரியாகச் சென்று சேருவதற்காக சில எறும்புகள் வடிவ கணித அடிப்படையில் பாதைகளை அமைப்பதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். உதாரணமாக, ஃபாரோ எறும்புகள் “தங்கள் புற்றிலிருந்து செல்கையில், 50 டிகிரியிலிருந்து 60 டிகிரி வரையான கோணத்தில் பிரியும் பாதைகளை வழிநெடுக அமைக்கின்றன” என்று நியு சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. இந்த வடிவத்தில் என்ன விசேஷம்? ஓர் எறும்பு தன் புற்றுக்குத் திரும்பி வரும்போது, பாதை எங்கெல்லாம் இரண்டாகப் பிரிகிறதோ, அங்கெல்லாம் குறைவான கோணத்தில் அமைந்துள்ள பாதையிலேயே பயணிக்கிறது. இவ்வாறாக பத்திரமாய் வீடுபோய்ச் சேருகிறது. அதற்கு இருக்கும் இயல்புணர்வாலேயே இவ்வாறு செய்கிறது. “வடிவ கணிதத்தின் அடிப்படையில் எறும்புகள் பாதைகளைப் பிரிக்கின்றன. இதுபோன்ற பாதைகள் அவை திறம்பட்ட விதத்தில் பயணிக்க உதவுகின்றன. அதுவும், எறும்புகள் எதிரெதிராகப் பயணிக்கையில் இவை ரொம்பவே உதவியாக இருக்கின்றன. எறும்புகள் தவறான திசையில் சென்று சக்தியை விரயமாக்குவதை இவை தடுக்கின்றன” என்றும் அந்தக் கட்டுரை சொல்கிறது.
◼ பறவை திசைமானிகள் அநேக பறவைகள் நீண்ட தூரத்திற்குத் துல்லியமாக பயணிக்கின்றன. எல்லாவித சீதோஷண நிலையிலும் அவை பயணிக்கின்றன. இது எப்படிச் சாத்தியமாகிறது? பறவைகளால் பூமியின் காந்தப்புலத்தை உணரமுடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். என்றாலும், “பூமியின் காந்தப்புல கோடுகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன, அவை எப்போதும் நிஜ வடக்குத் திசை நோக்கியே இருப்பதில்லை” என்று சயன்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. இப்படியிருக்க, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் சரியான திசையை எப்படிக் கண்டுபிடிக்கின்றன? பறவைகள் ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து அதன்படி தங்களுக்குள் இருக்கும் திசைமானியைச் சரிசெய்து கொள்வதுபோல் தெரிகிறது. சூரியனின் அஸ்தமன நிலை அட்சரேகையையும் பருவ காலத்தையும் பொறுத்து மாறுபடுகிறது. ஆகவே, இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பயணிப்பதற்கு, பறவைகளுக்குள் இருக்கும் “உயிரியல் கடிகாரம் பருவகாலத்தைச் சரியாகத் தெரிவிக்கிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் நினைப்பதாகவும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.
வடிவ கணிதத்தை எறும்புகளுக்கு சொல்லிக் கொடுத்தது யார்? திசைமானியையும், உயிரியல் கடிகாரத்தையும், அவற்றின் தகவல்களைப் புரிந்துகொள்ள உதவும் மூளையையும் பறவைகளுக்குக் கொடுத்தது யார்? புத்திக்கூர்மையற்ற பரிணாமமா? அல்லது புத்திக்கூர்மையுள்ள படைப்பாளரா?
[படத்திற்கான நன்றி]
© E.J.H. Robinson 2004
-
-
படைப்பில் கடவுள் பரிணாமத்தை பயன்படுத்தினாரா?விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
படைப்பில் கடவுள் பரிணாமத்தை பயன்படுத்தினாரா?
“கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.
சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை உலகெங்கும் பரவியபோது, பல “கிறிஸ்தவ” அமைப்புகள் கடவுள் நம்பிக்கையையும் பரிணாமக் கொள்கையையும் ஒன்றிணைக்க வழிதேடின.
இன்றும்கூட நிலைமை மாறவில்லை. ஏதோவொரு விதத்தில் பரிணாமத்தைப் பயன்படுத்தியே உயிரினங்களைக் கடவுள் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள பிரபல “கிறிஸ்தவ” அமைப்புகள் தயாராக இருப்பதுபோலவே தெரிகிறது. இதையே சிலர் வேறு விதமாகக் கற்பிக்கிறார்கள். அதாவது, உயிரற்ற ரசாயனங்களில் இருந்து படிப்படியாக உயிர் தோன்றி, காலப்போக்கில் மனிதர்கள் உருவாகிவிடும் விதத்தில்தான் கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை புரோகிராம் செய்திருந்தார் என்பதாக அவர்கள் சொல்கிறார்கள். இவ்வாறாக, படைப்பிற்கும் பரிணாமத்திற்கும் முடிச்சுப் போடும் இந்தக் கோட்பாட்டை நம்புவோர், உயிரினங்கள் உருவாகும் இந்த வேலை ஆரம்பித்த பிறகு கடவுள் அதில் தலையிடவில்லை என்பதாகச் சொல்கிறார்கள். மற்றவர்களோ, பரிணாமத்தின் மூலமாக பெரும்பாலான தாவரங்களும் விலங்கினங்களும் உருவாக கடவுள் அனுமதித்தார்; ஆனால், அதன் படிப்படியான முன்னேற்றத்தில் அவ்வப்போது தலையிட்டு உதவியும் செய்தார் என்பதாக நினைக்கிறார்கள்.
பரிணாமமும் படைப்பும் இணைய முடியுமா?
பரிணாமக் கொள்கை பைபிள் போதனைகளோடு உண்மையிலேயே ஒத்துப்போகிறதா? பரிணாமம் உண்மையென்றால், முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட்டது பற்றி பைபிள் குறிப்பிடுவது ஏதோவொரு நன்னெறிக் கதையாக அல்லவா இருக்கும். அதை உண்மைச் சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியாதே! (ஆதியாகமம் 1:26, 27; 2:18-24) இந்த பைபிள் பதிவை இயேசு வெறுமனே கதையாகத்தான் கருதினாரா? “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று இயேசு கூறினார்.—மத்தேயு 19:4-6.
ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் படைப்பைக் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை இயேசு இச்சந்தர்ப்பத்தில் மேற்கோள் காட்டினார். முதல் திருமணத்தைப் பற்றிய பைபிள் பதிவை ஒரு கட்டுக்கதையாக அவர் கருதியிருந்தால், திருமணத்தின் புனிதத்தன்மையைப் பற்றிய அவருடைய போதனைக்கு ஆதாரமாக அதைக் குறிப்பிட்டிருப்பாரா? நிச்சயம் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஆதியாகமப் பதிவு ஒரு நிஜ சம்பவம் என்பதை இயேசு அறிந்திருந்ததால்தான் அதை மேற்கோள் காட்டிப் பேசினார்.—யோவான் 17:17.
படைப்பைக் குறித்து ஆதியாகமம் சொல்வதை இயேசுவின் சீஷர்களும் நம்பினர். உதாரணமாக, லூக்காவின் சுவிசேஷத்தில் இயேசுவின் வம்சாவளி ஆதாம் வரையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (லூக்கா 3:23-38) ஆதாம் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்திருந்தால், இந்த வம்சாவளிப் பட்டியலில் கற்பனைப் பெயர்கள் எப்போது நுழைந்தன? இந்த வம்சாவளியின் ஆணிவேரான ஆதாமே கற்பனைக் கதாபாத்திரம் என்றால், தாமே தாவீதின் வம்சத்தில் வந்த மேசியா என இயேசு சொன்னதற்கு நிரூபணமாக இருக்கிற அந்தப் பட்டியலை எப்படி நம்ப முடியும்? (மத்தேயு 1:1) சுவிசேஷ எழுத்தாளராகிய லூக்கா, தான் ‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததாக’ கூறியிருக்கிறார். படைப்பைக் குறித்து ஆதியாகமம் சொல்வதை அவர் நிச்சயமாகவே நம்பினார்.—லூக்கா 1:3.
இயேசுமீது அப்போஸ்தலன் பவுலுக்கு இருந்த விசுவாசம் ஆதியாகமப் பதிவின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையோடு தொடர்புடையதாக இருந்தது. அவர் இவ்வாறு எழுதினார்: “மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:21, 22) ஆதாமின் மூலமாகவே “பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது”; ஆதாம் மனிதவர்க்கத்தின் மூதாதை என்பது கற்பனை என்றால், அவனிடமிருந்து சுதந்தரித்த பாவத்தை நீக்க இயேசு சாக வேண்டிய அவசியமே இருந்திருக்காதே!—ரோமர் 5:12; 6:23.
படைப்பைக் குறித்து ஆதியாகமம் சொல்வதை நம்பவில்லையென்றால், நம்முடைய கிறிஸ்தவ விசுவாசமே ஆட்டங்கண்டுவிடும். பரிணாமக் கொள்கையும் கிறிஸ்துவின் போதனைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இவ்விரண்டையுமே இணைக்க முயன்றால் நம்முடைய விசுவாசம் பலவீனமாகி, தவறான “போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு” அலையத் தொடங்கிவிடும்.—எபேசியர் 4:14.
உறுதியான அஸ்திவாரத்தின் அடிப்படையில் விசுவாசம்
பைபிள் பல நூற்றாண்டுகளாகவே விமர்சனத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறது. எனினும், அதிலுள்ள தகவல்கள் உண்மை என்பது திரும்பத் திரும்ப நிரூபணமாகியிருக்கிறது. சரித்திரம், உடல்நலம், அறிவியல் ஆகியவை சம்பந்தமாக அது தரும் தகவல்கள் உண்மையானவை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனித உறவுகள் சம்பந்தமாக அது தரும் ஆலோசனைகள் நம்பகமானவை, எக்காலத்துக்கும் பொருந்துபவை. மனித தத்துவங்களும், கோட்பாடுகளும் பசும் புல்லைப் போல தழைத்து வளர்ந்தாலும் காலப்போக்கில் உலர்ந்துவிடும். ஆனால் கடவுளின் வார்த்தையோ “என்றென்றைக்கும் நிற்கும்.”—ஏசாயா 40:8.
பரிணாமக் கொள்கை என்பது விஞ்ஞானத்தோடு தொடர்புடையது மட்டுமே அல்ல. இது மனிதர்களுடைய தத்துவ போதனைகளில் ஒன்று. இந்தப் போதகம் மலர்ந்து, பல பத்தாண்டுகளாக தழைத்து வந்தது. என்றாலும், சமீப ஆண்டுகளில், டார்வினின் பரிணாமக் கோட்பாடு படிப்படியாக பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஏனெனில், இயற்கையில் உள்ள வடிவமைப்பை நிரூபிக்கும் ஆதாரங்களை மறுப்பதற்கு பரிணாமத்தை ஆதரிக்கும் வல்லுநர்கள் பல்வேறு விளக்கங்களைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப் பற்றி இன்னுமதிகமாக ஆராயும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். இப்பத்திரிகையில் உள்ள மற்ற கட்டுரைகளையும் படிப்பதன்மூலம் நீங்கள் அதைச் செய்யலாம். அதோடு, இதே பக்கத்திலும் 32-வது பக்கத்திலும் காட்டப்பட்டுள்ள மற்ற பிரசுரங்களையும் நீங்கள் வாசித்துப் பார்க்கலாம்.
இவ்விஷயத்தைக் குறித்து ஆராய்ந்த பிறகு, கடந்த காலத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடும் விஷயங்கள் உண்மையானவை என்ற நம்பிக்கை உங்களுக்கு உறுதிப்படும். மிக முக்கியமாக, எதிர்காலத்தைக் குறித்து பைபிள் அளிக்கும் வாக்குறுதிகள் உண்மையானவை என்பதில் உங்கள் நம்பிக்கை பலப்படும். (எபிரெயர் 11:1) “வானத்தையும் பூமியையும் . . . உண்டாக்கின” யெகோவாவைத் துதிக்கவும் நீங்கள் தூண்டப்படுவீர்கள்.—சங்கீதம் 146:6.
கூடுதலாக வாசிக்க
பைபிளை நம்புவதற்கான சில ஆதாரங்களைக் குறித்து இந்தச் சிற்றேடு சொல்கிறது
அறிவியல் அளிக்கும் கூடுதலான ஆதாரங்களை ஆராய்ந்து பாருங்கள், அக்கறையுள்ள கடவுள் ஏன் இந்தளவு கஷ்டத்தை அனுமதிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
“பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?” என்ற கேள்விக்கு இப்புத்தகத்தின் மூன்றாம் அதிகாரம் பதிலளிக்கிறது
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
படைப்பைப் பற்றிய ஆதியாகமப் பதிவை இயேசு நம்பினார். அவர் கட்டுக்கதையையா நம்பினார்?
[பக்கம் 9-ன் பெட்டி]
பரிணாமம் என்பது என்ன?
“பரிணாமம்” என்பதற்கு, “ஒரு குறிப்பிட்ட திசையில் ஏற்படும் மாற்றம்” என்று ஓர் அர்த்தம் உள்ளது. என்றாலும் அந்த வார்த்தைக்கு இன்னும் பல அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, உயிரற்ற பொருட்களில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றத்தைக் குறிக்க, அதாவது இந்தப் பிரபஞ்சம் உருவான விதத்தைக் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, உயிருள்ளவற்றில் ஏற்படும் சிறு மாற்றங்களைக் குறிக்க, அதாவது தாவரங்களும் விலங்குகளும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்வதைக் குறிக்கவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் ஒரு புறமிருக்க, உயிரற்ற ரசாயனங்களில் இருந்து உயிர் தோன்றி, இனவிருத்தி செய்யும் செல்களாக மாறி, மெதுமெதுவாக அதிக சிக்கலான உயிரினங்களாக மாறியதாகச் சொல்லப்படும் கோட்பாட்டை விளக்க இவ்வார்த்தை மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உருவான உயிரினங்களில் மனிதனே அதிக புத்திக்கூர்மையுள்ளவன் எனச் சொல்லப்படுகிறது. இந்த அர்த்தத்தில்தான் “பரிணாமம்” என்ற வார்த்தை இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
விண்வெளியின் ஃபோட்டோ: J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA
-
-
உயிர்வேதியியல் வல்லுநருடன் ஒரு சந்திப்புவிழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
உயிர்வேதியியல் வல்லுநருடன் ஒரு சந்திப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த பென்ஸில்வேனியாவிலுள்ள லேஹி பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறை பேராசிரியராக மைக்கேல் ஜே. பீஹீ பணியாற்றி வருகிறார். டார்வினின் விளங்கா கோட்பாடு—பரிணாமத்திற்கு எதிராக உயிர்வேதியியல் விடுக்கும் சவால் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை இவர் 1996-ல் வெளியிட்டார். விழித்தெழு! பத்திரிகையின் மே 8, 1997 வெளியீட்டில் “நாம் எப்படித் தோன்றினோம்?—தற்செயலாகவா வடிவமைக்கப்பட்டதாலா?” என்ற தொடர்கட்டுரைகளில் பீஹீயின் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது. டார்வினின் விளங்கா கோட்பாடு புத்தகம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்துவந்த பத்து ஆண்டுகளின்போது பீஹீயின் விவாதங்கள் தவறென நிரூபிப்பதற்காகப் பரிணாமத்தை ஆதரிக்கும் விஞ்ஞானிகள் போராடியிருக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்கரான பீஹீயின் மத நம்பிக்கைகள் காரணமாக அவரால் விஞ்ஞான ரீதியில் சரியாக முடிவெடுக்க முடியாமல் போய்விட்டது என்பதாக அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். வேறு சிலர் அவருடைய நியாய விவாதம் விஞ்ஞானப்பூர்வமற்றது எனக் கூறினார்கள். பேராசிரியர் பீஹீயின் கருத்துகள் இவ்வளவு சர்ச்சைகளை எழுப்பியிருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விழித்தெழு! அவரைப் பேட்டி கண்டது.
விழித்தெழு!: உயிர்கள் புத்திக்கூர்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு அத்தாட்சி இருப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
பேராசிரியர் பீஹீ: சிக்கலான வேலைகளைச் செய்யும் நோக்கத்துடன் வெவ்வேறு பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கிற எதையாவது பார்க்கையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். தினந்தோறும் நாம் பயன்படுத்துகிற எந்திரங்களாகிய புல் அறுக்கும் எந்திரம், கார், அதைவிட இன்னும் எளிய கருவிகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். எலிப்பொறியை ஓர் உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன். அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என நீங்கள் உடனே சொல்லிவிடுவீர்கள். எதை வைத்து? எலியைப் பிடிக்கும் வேலையைச் செய்யும் விதத்திலேயே அதன் ஒவ்வொரு பாகமும் அமைக்கப்பட்டிருப்பதால் அப்படிச் சொல்வீர்கள்.
உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்காக அவற்றின் மிகச் சிறிய பாகங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை விளக்குமளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியிருக்கிறது. உயிரினங்களில் உள்ள மூலக்கூறுகளும்கூட சிக்கல்வாய்ந்த பலதரப்பட்ட வேலைகளைச் செய்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உதாரணமாக, உயிருள்ள செல்களில் சிறுசிறு மூலக்கூறு “வண்டிகள்” இருக்கின்றன; அவை செல்லின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு பொருள்களை எடுத்துச் செல்கின்றன. மிகச் சிறிய மூலக்கூறு “கைகாட்டி மரங்களும்” இருக்கின்றன; இவை, “வண்டிகள்” எந்தத் திசையில் திரும்ப வேண்டுமென்று சிக்னல் தருகின்றன. சில செல்களில் “மோட்டார்” பொருத்தப்பட்டுள்ளது. இது திரவத்தின் வழியாக செல்களை உந்தித் தள்ளுகிறது. இதுபோன்ற மிகச் சிக்கலான அமைப்பைக் கொண்ட வேறெந்த கருவியை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்குத்தானே எல்லாரும் வருவார்கள். இதுவே சரியான விளக்கமாக இருக்க முடியும், டார்வினின் பரிணாமக் கோட்பாடு உண்மையென்று அடித்துச் சொல்லப்பட்டாலும்கூட. ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு பொருளைப் பார்த்தாலும் அது நிச்சயம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே நாம் எப்போதும் வருகிறோம். ஆகவே, இந்த மூலக்கூறு அமைப்புகளும் புத்திக்கூர்மையுள்ள ஒருவரால் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என நாம் நினைப்பது சரியே.
விழித்தெழு!: புத்திக்கூர்மைக்கு அத்தாட்சியான வடிவமைப்பைப் பற்றிய உங்கள் முடிவுகளை உங்களுடைய சகாக்களில் பெரும்பாலோர் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?
பேராசிரியர் பீஹீ: விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் என் முடிவுகளை ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், இயற்கையிலுள்ள பொருள்கள் புத்திக்கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்து விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது, அது, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது என அவர்கள் நினைக்கிறார்கள். இந்த முடிவு அநேகரது மனத்தை நெருடச் செய்திருக்கிறது. என்றாலும், அத்தாட்சிகள் காட்டுகிற முடிவையே விஞ்ஞானிகள் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை, இந்த முடிவுக்கு இத்தனை வலுவான அத்தாட்சிகள் இருந்தும், படைப்பாளர் இருப்பதை ஒத்துக்கொண்டால் தார்மீகக் கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் இதை நம்பாதிருப்பது சுத்தக் கோழைத்தனம்.
விழித்தெழு!: இயற்கையில் உள்ளவை புத்திக்கூர்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது அறியாமைக்கு அடையாளம் என்பதாக விமர்சகர்கள் சொல்வதற்கு நீங்கள் எவ்வாறு பதில் அளிக்கிறீர்கள்?
பேராசிரியர் பீஹீ: இயற்கையில் காணப்படும் பொருள்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்ற முடிவுக்கு வருவது அறியாமைக்கு அடையாளம் அல்ல. அறியாதவற்றின் பேரில் அல்லாமல், அறிந்தவற்றின் பேரிலேயே நாம் அந்த முடிவுக்கு வருகிறோம். 150 வருடங்களுக்கு முன்பு டார்வின் உயிரினத் தோற்றம் என்ற தனது புத்தகத்தை வெளியிட்டபோது உயிர் இந்தளவு சிக்கல் வாய்ந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. செல், கடல் சேற்றிலிருந்து திடீரென்று உருவாகுமளவுக்கு சிக்கலின்றி இருப்பதாக விஞ்ஞானிகள் நினைத்தார்கள். ஆனால், அதற்குப் பின்னரே செல்கள் படுசிக்கல் வாய்ந்தவை என்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், 21-ம் நூற்றாண்டின் எந்திர அமைப்புகளைவிட படுசிக்கல் வாய்ந்தவையாக இருப்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிக்கலான அமைப்பு ஒரு நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கான அத்தாட்சியை அளிக்கிறது.
விழித்தெழு!: நீங்கள் குறிப்பிட்ட சிக்கலான மூலக்கூறு அமைப்பை, இயற்கைத் தெரிவின் மூலமாகப் பரிணாமம் உருவாக்கியிருக்கலாம் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ அத்தாட்சி ஏதாவது இருக்கிறதா?
பேராசிரியர் பீஹீ: விஞ்ஞானப் புத்தகங்களில் தேடிப்பார்த்தால், சிக்கல்வாய்ந்த மிகச்சிறிய அத்தகைய மூலக்கூறுகள் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் வந்ததை பரிசோதனை மூலமாகவோ விளக்கமான விஞ்ஞான மாதிரியின் மூலமாகவோ நிரூபிக்க எவருமே தீவிர முயற்சி எடுக்கவில்லை என்பது தெரியவரும். இத்தனைக்கும், என்னுடைய புத்தகத்தை நான் வெளியிட்டதை அடுத்துவந்த பத்து வருடங்களில், தேசிய விஞ்ஞான கல்வி அமைப்பு, அமெரிக்க அறிவியல் முன்னேற்ற சங்கம் போன்ற அநேக விஞ்ஞான நிறுவனங்கள், புத்திக்கூர்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு உயிர் அத்தாட்சி அளிக்கிறது என்ற கருத்தை முறியடிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் உடனே செய்யும்படி அவற்றின் அங்கத்தினர்களைக் கேட்டுக்கொண்டன.
விழித்தெழு!: குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்குகளில் சில அம்சங்கள் நன்றாக வடிவமைக்கப்படவில்லை என்று வாதாடுபவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள்?
பேராசிரியர் பீஹீ: உயிரினத்தில் குறிப்பிட்ட ஓர் அம்சம் இருப்பதற்கான காரணத்தை நாம் அறியாதிருக்கலாம்; அதற்காக, அந்த அம்சமே வீணானது என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, பயனற்றவையாகத் தோன்றும் எச்ச உறுப்புகள் மனித உடலிலும் மற்ற உயிரினங்களின் உடலிலும் காணப்படுவதால், அவை சரியாக வடிவமைக்கப்படவில்லை என ஒருகாலத்தில் நினைக்கப்பட்டது. உதாரணத்திற்கு, குடல்வாலும் நாவடிச்சதையும் (tonsils) அப்படிப்பட்ட உறுப்புகளாகவே ஒருகாலத்தில் கருதப்பட்டதால் அவை பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டன. ஆனால், அவை சரிவர வளர்ச்சியடையாத உறுப்புகள் அல்ல, மாறாக, நோய் எதிர்ப்பு அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்புகள் என்ற உண்மை பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரினங்கள் வளர்ச்சியடைகையில் சில மாற்றங்கள் தற்செயலாக நிகழ்வது உண்மையே. என்னுடைய கார் நெளிந்திருப்பதாலோ, அதன் டயர் பஞ்சராகியிருப்பதாலோ, காரை அல்லது அதன் டயரை யாரும் வடிவமைக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா? அதேபோல், உயிரியலில் சில காரியங்கள் தற்செயலாக நிகழ்வதை வைத்து உயிர்களில் காணப்படும் சிக்கல்வாய்ந்த செல்கள் தானாகவே வந்துவிட்டன என்று சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொல்வது கொஞ்சம்கூட அறிவுப்பூர்வமானதல்ல.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
“என்னைப் பொறுத்தவரை, இந்த முடிவுக்கு இத்தனை வலுவான அத்தாட்சிகள் இருந்தும், படைப்பாளர் இருப்பதை ஒத்துக்கொண்டால் தார்மீகக் கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் இதை நம்பாதிருப்பது சுத்தக் கோழைத்தனம்”
-
-
பரிணாமக் கோட்பாடு உண்மையா?விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
பரிணாமக் கோட்பாடு உண்மையா?
“சூரியன் வெப்பத்தைத் தருவது எப்படி நிஜமோ அதேபோல் பரிணாமத்தின் மூலமாக உயிர் தோன்றியதும் நிஜம்” என்று அடித்துச் சொல்கிறார் பேராசிரியர் ரிச்சர்டு டாகன்ஸ், இவர் பிரபல பரிணாம விஞ்ஞானி. ஆம், சூரியன் வெப்பத்தைத் தருகிறது என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன, நாமும் கண்ணாரக் காண்கிறோம். அவ்வாறே பரிணாமக் கோட்பாடும் உண்மையென ஆராய்ச்சிகளோ, நேரடி அத்தாட்சிகளோ நிரூபித்திருக்கின்றனவா?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண்பதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். கால ஓட்டத்தில் உயிரினங்களின் சந்ததிகளில் சிறிதளவு மாற்றம் நிகழலாம் என்பதாக அநேக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதை “அடுத்தடுத்து நிகழும் சிறு சிறு மாற்றங்களால் உருவாகும் சந்ததி” என்று சார்ல்ஸ் டார்வின் அழைத்தார். இப்படிப்பட்ட மாற்றங்கள் நேரடியாகவும் தெரிகின்றன, ஆராய்ச்சிகளும் நிரூபிக்கின்றன. தாவரங்களையோ விலங்குகளையோ இனவிருத்தி செய்பவர்களும்கூட இந்த மாற்றத்தை திறமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.a இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்வது உண்மையென நாம் ஏற்றுக்கொள்ளலாம். விஞ்ஞானிகளோ இதனை “மைக்ரோ எவல்யூஷன்,” அதாவது சிறிய பரிணாமம் என்கிறார்கள். இந்தப் பெயரிலிருந்தே அநேக விஞ்ஞானிகளின் நம்பிக்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, இந்தச் சிறிய மாற்றங்கள்தான் “மேக்ரோ எவல்யூஷன்” என்ற பெரிய மாற்றங்கள் நடந்திருப்பதற்கு அத்தாட்சி என அவர்கள் நம்புகிறார்கள். “மேக்ரோ எவல்யூஷன்” நடந்திருப்பதற்கு நேரடிச் சான்றே இல்லை.
காணக்கூடிய அத்தகைய மாற்றங்களுக்கும் ஒருபடி மேல் சென்றுவிட்டார் டார்வின். அவர் எழுதிய உயிரினத் தோற்றம் என்ற பிரசித்திபெற்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக உருவாகவில்லை, உயிரினங்களின் ஒரு சிறு தொகுதியிலிருந்துதான் மற்ற எல்லா உயிரினங்களும் தோன்றின.” காலங்கள் செல்லச் செல்ல சாதாரண உயிரின வகைகள் என்று அழைக்கப்படுகிற, முதன்முதல் தோன்றிய இந்தச் “சிறு உயிரினத் தொகுதியில் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்ததால்” கோடிக்கணக்கான வித்தியாசமான உயிரினங்கள் பூமியில் தோன்றின என்பதாக டார்வின் கூறினார். இந்தச் சிறிய மாற்றங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மீன்கள் ஊர்வனவாகவும், மனிதக் குரங்குகள் மனிதர்களாகவும் மாறுவதற்குத் தேவையான பெரிய மாற்றங்களை நிகழ்த்தின என்கிறார்கள் பரிணாமவாதிகள். இப்படி நடந்ததாகச் சொல்லப்படுகிற பெரிய மாற்றங்களை “மேக்ரோ எவல்யூஷன்” என்று அழைக்கிறார்கள். அநேகருக்கு இது அறிவுப்பூர்வமானதாகத் தோன்றுகிறது. ‘இனங்களுக்குள்ளேயே சிறிய மாற்றங்கள் நிகழ்வது சாத்தியம் என்றால், காலப்போக்கில் பரிணாமத்தின் வாயிலாக ஏன் பெரிய மாற்றங்களும் நிகழக்கூடாது?’ என்று அவர்கள் கேட்கிறார்கள்.b
மேக்ரோ எவல்யூஷன், மூன்று முக்கிய ஊகங்களின் பேரில் சார்ந்திருக்கிறது:
1. திடீர் மாற்றங்கள்: புதிய இனங்களை உருவாக்குவதற்குத் தேவையான மூலப் பொருள்களைத் தருகின்றன.c
2. இயற்கைத் தெரிவு: புதிய இனங்கள் உருவாக வழிசெய்கிறது.
3. புதைபடிவ பதிவு: தாவரங்களிலும் விலங்குகளிலும் மேக்ரோ எவல்யூஷன் நிகழ்ந்ததை நிரூபிக்கிறது.
மேக்ரோ எவல்யூஷன் உண்மை என நம்புவதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறதா, என்ன?
திடீர் மாற்றம் புதிய இனங்களை உருவாக்குமா?
ஒரு தாவரத்தைப் பற்றிய அல்லது விலங்கைப் பற்றிய பல விவரங்கள் அவற்றின் மரபியல் தொகுப்பில் அடங்கியுள்ளன. இந்த மரபியல் தொகுப்பு, ஒவ்வொரு செல்லின் நியூக்ளியஸிலும் இருக்கிறது.d மரபியல் தொகுப்பில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களால் தாவர மற்றும் விலங்குகளின் சந்ததிகளில் வேறுபாடுகள் தோன்றலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நோபல் பரிசு பெற்றவரும் திடீர் மாற்ற மரபியல் ஆராய்ச்சியை ஆரம்பித்து வைத்தவருமான ஹர்மன் ஜே. மல்லர் என்பவர் 1946-ல் இவ்வாறு கூறினார்: “பல அரிய, சிறிய மாற்றங்களையெல்லாம் ஒன்றிணைத்து, புதிய தாவர, விலங்கினங்களைச் செயற்கையாக மனிதர்களால் உருவாக்க முடிகிறது. இதேபோன்ற மாற்றங்கள்தான், இயற்கைத் தெரிவின் உதவியோடு, பரிணாமம் நடைபெறுவதற்கே காரணமாக இருக்கின்றன.”
திடீர் மாற்றத்தின் மூலம் தாவரத்திலோ விலங்கிலோ புதிய இனத்தை மாத்திரமல்ல புதிய குடும்பத்தையே உருவாக்க முடியும் என்பதுதான் மேக்ரோ எவல்யூஷனின் கொள்கை. இந்த ஆணித்தரமான விவாதத்தை நிரூபிப்பதற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா? மரபியல் துறையில் 100 வருடங்களாக நடத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகள் என்ன காட்டுகின்றன என்பதைப் பார்ப்போம்.
இயற்கைத் தெரிவினால் திடீர் மாற்றங்கள் மூலம் புதிய இனத் தாவரங்கள் உருவாக முடியுமென்றால், மனிதர்களே திடீர் மாற்றங்களைத் தெரிவு செய்து மேம்பட்ட, புதிய இனத் தாவரங்களை நிச்சயம் உருவாக்க முடியும் என்ற கருத்தை 1930-களின் இறுதியில் விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். “பல உயிரியலாளர்களும், முக்கியமாக மரபியலாளர்களும் இனத்தைப் பெருக்குபவர்களும் சந்தோஷத்தில் மிதந்தார்கள்” என்று வால்ஃப்-பக்காஹார்ட் லான்னிக் என்ற விஞ்ஞானி விழித்தெழு!-விற்கு அளித்த பேட்டியின்போது கூறினார். இவர் ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் ப்லாங்க் என்ற தாவர இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிகிறார். அவர்கள் அந்தளவு சந்தோஷப்பட்டதற்கு என்ன காரணம்? தாவரங்களின் மரபியலில் நிகழும் திடீர் மாற்றங்களைப் பற்றி சுமார் 28 வருடங்களாக ஆய்வு நடத்திய பின்னர் லான்னிக் இவ்வாறு சொன்னார்: “தாவரங்களையும் விலங்குகளையும் இனவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்தி வந்த பாரம்பரிய முறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். சாதகமான திடீர் மாற்றங்களைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்து தூண்டிவிடுவதன் மூலம் புதிய, மேம்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் உருவாக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள்.”e
அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெவ்வேறு இன தாவரங்களையும் விலங்குகளையும் சீக்கிரமாய் உருவாக்குவதற்காக ஏராளமான நிதி உதவியுடன் ஆராய்ச்சிகளில் இறங்கினார்கள். அவர்களுடைய தீவிரமான ஆராய்ச்சி 40-க்கும் அதிகமான வருடங்களுக்கு நீடித்தது. ஆராய்ச்சியின் முடிவுகள் என்ன? ஆராய்ச்சியாளர், பேட்டர் வான் ஸெங்புஷ் கூறுவதாவது: “எக்கச்சக்கமாக பணம் செலவழித்தும், கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதன் மூலமாக திறம்பட்ட இனங்களை உருவாக்குவதற்கு செய்யப்பட்ட முயற்சி பெரும் தோல்வியைத் தழுவியது.” லான்னிக் இவ்வாறு கூறினார்: “1980-க்குள் உலகமுழுவதிலுமுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கைகளும் சந்தோஷங்களும் பறிபோயின. மேற்கத்திய நாடுகளில் இயங்கிவந்த திடீர் மாற்ற இனவிருத்தி ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. திடீர் மாற்றத்திற்கு உள்ளான கிட்டத்தட்ட எல்லா இனங்களுமே இயற்கையான இனங்களைவிட பலவீனமாக இருந்தன அல்லது இறந்துவிட்டன.”f
திடீர் மாற்றங்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட 100 வருட ஆராய்ச்சியிலிருந்து, அதிலும் முக்கியமாக திடீர் மாற்ற இனவிருத்தி சம்பந்தமாக நடத்தப்பட்ட 70 ஆண்டு ஆராய்ச்சியிலிருந்து, திடீர் மாற்றம் மூலம் புதிய இனங்களை உருவாக்க முடியுமா முடியாதா என்பது பற்றி விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்த பிறகு லான்னிக் இந்த முடிவுக்கு வந்தார்: “திடீர் மாற்றத்தின் மூலம் ஓர் உயிரினத்தின் [தாவரமோ விலங்கோ] ஒரிஜினல் இனத்தை மற்றொரு புதிய இனமாக மாற்றவே முடியாது.” 20-வது நூற்றாண்டில் நடத்தப்பட்ட திடீர் மாற்றம் சம்பந்தப்பட்ட எல்லா ஆராய்ச்சிகளின் முடிவுகளுடனும், சாத்தியக்கூறு தொடர்பான விதிகளுடனும் லான்னிக் கண்டறிந்த முடிவு ஒத்துப்போகிறது. ஆக, “ரிகரன்ட் வேரியேஷன் விதிப்படி, மரபியல் ரீதியில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட இனங்களுக்கு உள்ள வரைமுறைகளை திடீர் மாற்றங்கள் மூலமாக மீறவோ, நீக்கவோ முடியாது.”
மேலே சொல்லப்பட்டுள்ளவற்றின் முக்கியத்துவத்தை இப்போது ஆராயலாம். பயிற்சி பெற்ற திறமையான விஞ்ஞானிகளாகிய அறிவுஜீவிகளால், திடீர் மாற்றங்களைச் செயற்கையாகத் தூண்டிவிடுவதன் மூலமோ சாதகமான திடீர் மாற்றங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ புதிய இனங்களை உருவாக்க முடியவில்லையென்றால், அறிவுஜீவியின் தலையீடு எதுவும் இல்லாமல் தானாகவே புதியதோர் இனம் உருவாக முடியுமா, என்ன? திடீர் மாற்றங்களால் ஒரிஜினல் இனத்தை புதியதோர் இனமாக உருவாக்க முடியாது என்பதாகவே ஆராய்ச்சிகள் காட்டுகையில் மேக்ரோ எவல்யூஷன் எப்படி நிகழ்ந்திருக்கும்?
இயற்கைத் தெரிவு புதிய இனத்தை உருவாக்குமா?
டார்வின் வகுத்த இயற்கைத் தெரிவு என்ற கோட்பாட்டின்படி, இயற்கைச் சூழலோடு மிக நன்கு ஒத்துப்போகும் உயிரினங்கள் தப்பிப்பிழைக்கும், ஆனால், இயற்கைச் சூழலோடு ஒத்துப்போகாத உயிரினங்கள் காலப்போக்கில் மடிந்துவிடும். நவீன பரிணாமவாதிகளின்படி, உயிரினங்கள் பரவி தனித்தனியாகப் பிரிந்துவிடும்போது இயற்கைத் தெரிவு நிகழ்கிறது. புதிய சூழலுக்குப் பொருத்தமான திடீர் மாற்றத்தை இந்த உயிரினங்கள் தெரிவு செய்கின்றன. இதன் விளைவாக, பிரிந்துபோன இந்த இனங்கள் காலப்போக்கில் முற்றிலும் புதிய இனங்களாக உருவெடுத்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
மேலே பார்த்தபடி, திடீர் மாற்றங்களால் முற்றிலும் புதிய ஒரு தாவர இனத்தையோ விலங்கினத்தையோ உருவாக்க முடியாது என்பதை ஆராய்ச்சிகள் தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன. இருந்தாலும், இயற்கைத் தெரிவு அதற்குச் சாதகமான திடீர் மாற்றங்களைப் பயன்படுத்தி புதிய இனத்தை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் எந்த ஆதாரத்தை வைத்துச் சொல்கிறார்கள்? 1999-ல் ஐ.மா. தேசிய விஞ்ஞான கல்வி அமைப்பு (NAS) வெளியிட்ட ஒரு பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “ஸ்பீஸியேஷனுக்கு [புதிய இனங்கள் பரிணமித்ததற்கு] ஒரு சிறந்த உதாரணம், காலாபகஸ் தீவில் டார்வின் இருந்தபோது அவர் ஆராய்ச்சி செய்யப் பயன்படுத்திய 13 வித்தியாசமான இனங்களைச் சேர்ந்த ஃபின்ச் குருவிகள்; இந்தக் குருவி டார்வின் ஃபின்ச் என தற்போது அழைக்கப்படுகிறது.”
1970-களில் பீட்டர் கிராண்ட், ரோஸ்மேரி கிராண்ட் ஆகியோரின் தலைமையிலான ஓர் ஆராய்ச்சிக் குழுவினர் இந்த ஃபின்ச் குருவிகளை ஆராய்ந்தார்கள். சிறிய அலகைக் கொண்டிருந்த ஃபின்ச்சுகளைவிட சற்றுப் பெரிய அலகைக் கொண்டிருந்த ஃபின்ச்சுகள் ஒரு வருடம் முழுவதும் நிலவிய வறட்சியை எளிதில் தாக்குப்பிடித்ததாக அவர்கள் கண்டுபிடித்தார்கள். இந்தப் பறவையின் அலகினுடைய அளவையும் வடிவையும் வைத்தே இவற்றின் 13 வித்தியாசமான இனங்களை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டியிருந்ததால் அந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. “பத்து வருடங்களுக்கு ஒரு முறை வறட்சி ஏற்பட்டால் 200 வருடங்களுக்கு ஒரு முறைதான் புதிய ஃபின்ச் இனம் உருவாகும் என்று கிராண்ட் தம்பதியினர் கணக்கிட்டுள்ளனர்” என்றும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.
என்றாலும், முக்கியமான அதேசமயம் ஏற்கமுடியாத சில உண்மைகளை அந்தப் பத்திரிகை சொல்லாமலே மறைத்துள்ளது. பின்வந்த வருடங்களில் சிறிய அலகை உடைய ஃபின்ச்சுகள் மீண்டும் அதிகரித்துவிட்டன. எனவே, பீட்டர் கிராண்ட்டும் லைல் கிப்ஸ் என்ற பட்டதாரியும் “இயற்கைத் தெரிவில் ஒரு திருப்பத்தைத் தாங்கள் கண்டிருப்பதாக” 1987-ல் நேச்சர் எனும் விஞ்ஞான பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். 1991-ல் கிராண்ட் இவ்விதமாக எழுதினார்: சீதோஷணத்துக்கு ஏற்றவாறு, “இயற்கைத் தெரிவுக்கு உட்பட்ட உயிரினங்களில்” “பெரிய அலகை உடையவை செழித்தோங்கின, அல்லது சிறிய அலகை உடையவை செழித்தோங்கின.” ஃபின்ச்சின் வித்தியாசமான இனங்களில் சில ஒன்றுக்குள் ஒன்று இணைசேர்ந்தன, இப்படி உருவாகிய இனங்கள் ஒரிஜினல் ஃபின்ச்சுகளைவிட நன்றாக இருந்தன. இயற்கையில் நடக்கும் மாற்றங்களையும் நன்றாகச் சமாளித்தன. இரு இனங்களை சேர்ந்த ஃபின்ச் குருவிகள் ஒன்றுக்குள் ஒன்று மறுபடியும் மறுபடியுமாக இணைசேர்ந்தால் 200 வருடங்களுக்குள் அந்த இரண்டு வித்தியாசமான “இனங்கள்” சேர்ந்து ஒரு புதிய இனமாக உருவாகிவிடும் என்ற முடிவுக்கு பீட்டர் கிராண்ட்டும் ரோஸ்மேரி கிராண்ட்டும் வந்தார்கள்.
1966-ல் பரிணாம உயிரியல் அறிஞரான ஜார்ஜ் கிறிஸ்டஃபர் வில்லியம்ஸ் இவ்வாறு எழுதினார்: “முதன்முதலில் இயற்கைத் தெரிவுக் கோட்பாடு, பரிணாமம் உண்மை என்பதற்கு விளக்கம் அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதைக் குறித்து வருந்துகிறேன். சொல்லப்போனால், அந்தக் கோட்பாடு முக்கியமாக சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் அவற்றை மாற்றியமைத்துக்கொள்வது சம்பந்தமாக விளக்கம் அளிப்பதற்கே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.” வில்லியம் சொல்வது சரியாக இருந்தால், இயற்கைச் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள இயற்கைத் தெரிவு உதவலாம்; ஆனால், “புதியதோர் உயிரினத்தை அவை உருவாக்குவது இல்லை” என்று பரிணாமக் கோட்பாட்டாளரான ஜெஃப்ரி ஷுவார்ட்ஸ் 1999-ல் எழுதினார்.
ஆகவே, டார்வினின் ஃபின்ச்சுகள் வேறொரு “புதிய இனமாக” மாறிவிடவில்லை, மாறாக, அவை ஃபின்ச்சுகளாகவே இருக்கின்றன. அவை ஒன்றுக்குள் ஒன்று இணைசேருகின்றன என்ற உண்மை, பரிணாமவாதிகள் எதை இனம் என்று வரையறுக்கிறார்கள் என்பதையே சந்தேகிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, பெயர்பெற்ற விஞ்ஞான நிறுவனங்கள்கூட உண்மைகளை மறைப்பதை இந்தப் பறவைகளின் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சி வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
புதைபடிவ பதிவுகள் மேக்ரோ எவல்யூஷன் உண்மையென நிரூபிக்கிறதா?
மேக்ரோ எவல்யூஷன் உண்மை என நிரூபிப்பதற்கு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதைபடிவங்களே போதுமானது என NAS பத்திரிகை வாசகர்களை நினைக்க வைக்கிறது. அது சொல்வதாவது: “மீனிலிருந்து நில-நீர்வாழ் பிராணிகள் பரிணமித்திருப்பதற்கும், நில-நீர்வாழ் பிராணிகளிலிருந்து ஊரும் பிராணிகள் பரிணமித்திருப்பதற்கும், ஊரும் பிராணிகளிலிருந்து பாலூட்டிகள் பரிணமித்திருப்பதற்கும், அதோடு, வழிவழியாக வந்திருக்கும் உயிரினங்களுக்கும் இடையே நிறைய வகை உயிரினங்கள் இருந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன; ஆனால் ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு உயிரினமாக மாறியது எப்போது என்பதைத்தான் திட்டவட்டமாகச் சொல்ல முடிவதில்லை.”
இந்தக் கூற்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது, ஏன்? “ஒரு பரிணாமப் படத்திலுள்ள ஒவ்வொரு 1000 பரிணாம ஃப்ரேம்களிலும் 999 ஃப்ரேம்கள் கட்டிங் ரூமில் காணாமல் போய்விட்டால்” எப்படி இருக்குமோ, அப்படியே புதைபடிவ பதிவும் இருப்பதாக 2004-ல் நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகை குறிப்பிட்டது. 1000-ல் ஒன்று என்ற கணக்கில் மீந்திருக்கும் ஃப்ரேம்கள் மேக்ரோ எவல்யூஷன் நிகழ்ந்தது உண்மையென நிரூபிக்கின்றனவா? புதைபடிவ பதிவுகள் உண்மையில் என்ன காட்டுகின்றன? நெடுங்காலமாக “அநேக உயிரினங்களில் பரிணாம மாற்றங்கள் நிகழவில்லை” என்றே புதைபடிவ பதிவுகள் காட்டுவதாக தீவிர பரிணாமவாதியான நைல்ஸ் எல்ட்ரெட்ஜ் ஒத்துக்கொள்கிறார்.
இன்றைய தினம்வரை உலக முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் 20 கோடி பெரிய பெரிய புதைபடிவங்களையும் கோடிக்கணக்கான சிறிய சிறிய புதைபடிவங்களையும் தோண்டியெடுத்து பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விலாவரியான இந்த நீண்ட பட்டியல்கள் காட்டுகிறபடி முக்கிய இனத்தைச் சேர்ந்த விலங்குகள் திடீரெனத் தோன்றி எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்துவிட்டன; ஆனால், அநேக இனங்களோ திடீரென எப்படித் தோன்றினவோ அப்படியே மறைந்துவிட்டதை அநேக ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். புதைபடிவ பதிவுகளை ஆராய்ச்சி செய்த பிறகு உயிரியலாளரான ஜோனத்தான் வெல்ஸ் இவ்வாறு எழுதினார்: “இனம், பிரிவு, வகுப்பு, ஆகிய ஒவ்வொரு நிலையிலுமே, உயிரினங்கள் ஒரே மூதாதையிலிருந்து தோன்றின என்ற கருத்தும், சுற்றுச்சூழல் காரணமாக அவை ஒவ்வொன்றும் வெவ்வேறாக மாறிவிட்டன என்ற கருத்தும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புதைபடிவ ஆராய்ச்சியிலிருந்தும் நுட்பமான மூலக்கூறுகளிலிருந்தும் பார்த்தால் அந்தக் கோட்பாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை.”
பரிணாமம்—உண்மையா, கட்டுக்கதையா?
புகழ்பெற்ற பல பரிணாமவாதிகள் மேக்ரோ எவல்யூஷன் உண்மை என்பதாக ஏன் அடித்துக் கூறுகிறார்கள்? ரிச்சர்டு டாகன்ஸ் சொன்னவை தவறு என்று கூறிய பிறகு பிரபல பரிணாமவாதியான ரிச்சர்டு லவான்டன், பகுத்தறிவோடு ஒத்துப்போகாத விஞ்ஞானப்பூர்வ கூற்றுகளை ஏற்றுக்கொள்ள விஞ்ஞானிகளில் அநேகர் துளியும் தயங்குவதில்லை. காரணம், “நாங்கள் இயற்பொருள் வாதத்திற்கு (materialism) ஏற்கெனவே எங்களை அர்ப்பணித்திருக்கிறோம்” என்று எழுதினார்.g புத்தியுள்ள ஒரு படைப்பாளர் இருக்கிறாரா என்பதைக் குறித்துச் சிந்திக்கக்கூட அநேக விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். லவான்டன் எழுதியபடி, “விஞ்ஞானத்தில் படைப்பாளருக்கு சிறிதும் இடம் கிடையாது.”
இந்த விஷயத்தைக் குறித்து சமூகவியலாளரான ராட்னி ஸ்டார் சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒரு விஞ்ஞான மனிதனாக இருக்க வேண்டுமென்றால் மதத்தை ஓரங்கட்டிவிட வேண்டும் என்ற கருத்து 200 வருடங்களாக பரப்பப்பட்டு வந்திருக்கிறது.” ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில், “மதப் பற்றுள்ள மக்கள் [கடவுளைப் பற்றி] வாயே திறப்பதில்லை. [அப்படிப்பட்டவர்களை] கடவுள் நம்பிக்கையற்ற ஆட்கள் பாரபட்சமாக நடத்துகிறார்கள்” என்றும் அவர் கூறினார். ஸ்டார்க் சொல்கிறபடி பார்த்தால், “உயர்ந்த பதவியில் இருக்கும் [விஞ்ஞானிகள் மத்தியில்] மதப்பற்று இல்லாதவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.”
மேக்ரோ எவல்யூஷன் உண்மை என்று நீங்கள் நம்ப விரும்பினால், அறியொணாமைக் கொள்கைவாதிகள் அல்லது நாத்திகர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளை விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவற்றுடன் கலக்க மாட்டார்கள் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். நூறு கோடிக்கணக்கான திடீர் மாற்றங்களைக் குறித்து கடந்த நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்திருக்கிறது. திடீர் மாற்றத்தால் எந்தவொரு குறிப்பிட்ட இனமும் முற்றிலும் புதிய இனமாக மாறிவிடவில்லை என்பதையே அந்த ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. உண்மை இப்படியிருக்க, திடீர் மாற்றங்களும், இயற்கைக் தெரிவும்தான் சிக்கலான உயிர் அமைப்புகள் அனைத்தையும் உருவாக்கின என்பதை நீங்கள் நம்பவேண்டும். தாவர மற்றும் விலங்குகளில் முக்கிய இனங்கள் திடீரென தோன்றின, அவை வேறு இனங்களாக மாறவில்லை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவை அப்படியே இருந்தன என்பதைப் புதைபடிவ சான்றுகள் தெள்ளத்தெளிவாக காட்டுகிறபோதிலும் எல்லா உயிரினங்களும் ஒரேவொரு உயிரினத்திலிருந்து படிப்படியாகத் தோன்றியதாகவே நீங்கள் நம்ப வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையாகத் தோன்றுகிறதா? அல்லது, கட்டுக்கதையாகத் தோன்றுகிறதா?
[அடிக்குறிப்புகள்]
a நாய் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிட்ட சில நாய் இனங்களைத் தேர்ந்தெடுத்து இணைசேர வைக்கிறார்கள். இந்த நாய்களைவிட இவற்றின் சந்ததி குட்டையான கால்களுடனும் நீளமான ரோமத்துடனும் பிறப்பதற்காக இவ்வாறு செய்யலாம். ஆனால், ஜீன்களில் ஏற்படும் குறைபாடுகளாலேயே இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணத்திற்கு, குள்ள ஜாதி நாய்கள் அவ்வாறு இருப்பதற்குக் காரணம் அவற்றின் குறுத்தெலும்பு வளர்ச்சி குன்றியிருப்பதாலேயே.
b இந்தக் கட்டுரையில் “இனங்கள்” என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பைபிளின் ஆதியாகமப் புத்தகத்தில் இனம் என்ற வார்த்தைக்குப் பதிலாக அதைவிட விரிவான பதம், அதாவது, “ஜாதி” என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புது இனம் பரிணமித்திருப்பதாய் பொதுவாக விஞ்ஞானிகள் சொல்லிக்கொள்கிற போதெல்லாம் அவை ஆதியாகமப் புத்தகம் சொல்கிற ‘ஜாதியில்’ ஏற்பட்டுள்ள ஒரு சிறிய மாற்றமாகவே இருக்கிறது.
c “உயிரினங்கள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன” என்ற பெட்டியைக் காண்க.
d உயிரினத்தின் தோற்றத்தையும், செயல்பாட்டையும் தீர்மானிப்பதில் செல்லின் சைட்டோபிளாசமும், அதன் சவ்வுகளும் அதோடு மற்ற பாகங்களும்கூட பங்காற்றுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
e இந்தக் கட்டுரையில் லான்னிக் சொல்லியிருப்பது அவருடைய சொந்த கருத்துக்களே. மாக்ஸ் ப்லாங்க் தாவர இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தின் கருத்தல்ல.
f திடீர் மாற்றங்கள் சம்பந்தமாக ஆராய்ச்சி நடத்தியதில் மாறுபட்ட வகைகள் குறைந்துகொண்டே வந்தன, ஒரிஜினல் வகைகளோ பெருகிக்கொண்டே வந்தன. இந்த நிகழ்விலிருந்து “ரிகரன்ட் வேரியேஷன் விதி”யை (Law of Recurrent Variation) லான்னிக் கண்டுபிடித்தார். அதுமட்டுமின்றி திடீர் மாற்றத்திற்கு உட்பட்ட தாவரங்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான தாவரங்கள் கூடுதலான ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன, அவற்றிலும் ஒரு சதவிகிதத்திற்குக் குறைவான தாவரங்களே வணிகரீதியில் பயன்படுத்தப்படத் தகுந்தவையாகக் காணப்பட்டன. விலங்குகளில் செய்யப்பட்ட திடீர் மாற்றங்கள் அதைவிட மோசமாக இருந்தன. கடைசியில் அந்த முறை முற்றிலும் கைவிடப்பட்டது.
g இயற்பொருள் வாதம், என்பது, சடப்பொருள் மட்டுமே உண்மையானது; உயிர் உட்பட பிரபஞ்சத்திலுள்ள மற்ற எல்லாமே மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியின் தலையீடு இல்லாமல் தோன்றியது என்ற கோட்பாடாகும்.
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
“திடீர் மாற்றத்தின் மூலம் ஓர் உயிரினத்தின் [தாவரமோ விலங்கோ] ஒரிஜினல் இனத்தை மற்றொரு புதிய இனமாக மாற்றவே முடியாது”
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
ஓர் உயிரினம் மாறுபடும் சீதோஷணங்களுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும் என்பதற்கு டார்வினின் ஃபின்ச் சிறந்த உதாரணம்
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
புதைபடிவ பதிவின்படி விலங்குகளின் எல்லா முக்கிய பிரிவுகளும் திடீரென தோன்றி அப்படியே வருடக்கணக்கில் மாறாமலேயே இருந்தன
[பக்கம் 14-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உயிரினங்கள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன
குறிப்பிட்ட இனங்கள் முதல் பெரும்பிரிவுகள் வரை படிப்படியாகப் பல தொகுதிகளாக உயிரினங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.h உதாரணத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்களின் வகைப்பாடுகளையும் பழ ஈக்களின் வகைப்பாடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
மனிதர்கள் பழ ஈக்கள்
இனம் ஸேப்பியன்கள் மெலனோகாஸ்டர்
பொதுவினம் மனிதர்கள் ட்ரோசோஃபிலா
குடும்பம் மனிதப்போலி ட்ரோசோஃபைலிட்ஸ்
வரிசை முதல்நிலை உயிரிகள் டிப்டீரா
வகுப்பு பாலூட்டிகள் பூச்சிகள்
தொகுதி முதுகுத்தண்டு உடையவை கணுக்காலிகள்
பெரும்பிரிவு விலங்குகள் விலங்குகள்
[அடிக்குறிப்பு]
h குறிப்பு: தாவரங்களும் விலங்குகளும் “அந்த அந்த இனத்தின்படியே” சந்ததியைப் பிறப்பிக்கும் என்பதாக ஆதியாகமம் முதலாவது அதிகாரம் சொல்கிறது. (ஆதியாகமம் 1:12, 21, 24, 25, பொ.மொ.) இவ்வாறு பைபிளில் பயன்படுத்தப்படும் ‘இனம்’ என்பது, ஒரு விஞ்ஞானப் பதம் அல்ல; எனவே, ‘இனம்’ என்ற பைபிள் பதத்திற்கும் “இனம்” என்ற விஞ்ஞானப் பதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
[படத்திற்கான நன்றி]
ஜோனத்தான் வெல்ஸ் எழுதிய பரிணாமப் படங்கள்—விஞ்ஞானப்பூர்வமானதா கட்டுக்கதையா? பரிணாமத்தைப் பற்றி நாம் கற்பிக்கும் அநேக விஷயங்கள் தவறானவையாக இருப்பது ஏன்? (ஆங்கிலம்) என்ற புத்தகத்திலிருந்து இந்த அட்டவணை எடுக்கப்பட்டிருக்கிறது.
[பக்கம் 15-ன் படங்கள்]
திடீர் மாற்றத்திற்குள்ளான பழ ஈ (மேலே), அரைகுறையான நிலையில், ஆனால் இன்னும் பழ ஈதான்
[படத்திற்கான நன்றி]
© Dr. Jeremy Burgess/Photo Researchers, Inc.
[பக்கம் 15-ன் படங்கள்]
தாவரங்களில் திடீர் மாற்றத்தால் உருவான மாறுபட்ட வகைகள் குறைந்துகொண்டே வந்தன, ஒரிஜினல் வகைகளோ பெருகிக்கொண்டே வந்தன (திடீர் மாற்றத்திற்குள்ளான தாவரத்தின் பெரிய பூக்கள்)
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
From a Photograph by Mrs. J. M. Cameron/ U.S. National Archives photo
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
ஃபின்ச் தலைகள்: © Dr. Jeremy Burgess/ Photo Researchers, Inc.
[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]
டைனோசர்: © Pat Canova/Index Stock Imagery; புதைபடிவங்கள்: GOH CHAI HIN/AFP/Getty Images
-
-
அறிவியலும் ஆதியாகமமும் முரண்படுகின்றனவா?விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
பைபிளின் கருத்து
அறிவியலும் ஆதியாகமமும் முரண்படுகின்றனவா?
படைப்பு பற்றிய பைபிள் பதிவை அறிவியல் தவறென நிரூபித்துவிட்டதாக அநேகர் அடித்துச் சொல்கின்றனர். ஆனால், உண்மையான முரண்பாடு அறிவியலுக்கும் பைபிளுக்கும் இடையே அல்ல; மாறாக அறிவியலுக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அடிப்படைவாதிகளின் கருத்துக்களுக்கும் இடையேதான். ஏனெனில், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் 24 மணிநேரம் கொண்ட ஆறு நாட்களில் இந்தப் பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் படைக்கப்பட்டுவிட்டதாக பைபிள் கூறுகிறது என்று அடிப்படைவாத தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தவறாக கூறுகிறார்கள்.
என்றாலும், இதுபோன்ற கருத்துகளை பைபிள் ஆதரிப்பதில்லை. அப்படி ஆதரித்திருந்தால், கடந்த நூறாண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பைபிளின் உண்மைத்தன்மையின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். பைபிளைக் கவனமாகப் படிக்கும்போது, நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுடன் அது எவ்விதத்திலும் முரண்படுவதில்லை என்பது தெரியவருகிறது. அதனாலேயே, அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் படைப்புவாதிகளும் சொல்வதை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை. இது தொடர்பாக பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதை பின்வரும் குறிப்புகள் காட்டுகின்றன.
“ஆரம்பம்” எப்போது?
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்ற எளிமையான, வலிமையான வார்த்தைகளோடு ஆதியாகமப் புத்தகம் ஆரம்பமாகிறது. (ஆதியாகமம் 1:1) வானத்தையும் பூமியையும் படைத்த பிறகே, மூன்றாம் வசனத்திலிருந்து சொல்லப்பட்டுள்ள படைப்பு வேலைகள் ஆரம்பமாயின என்பதை இந்த வசனம் விளக்குவதாக பைபிள் அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இத்தகவல் மிக முக்கியமானது. பைபிளின் ஆரம்ப வார்த்தைகளின்படி, படைப்பு நாட்கள் தொடங்குவதற்கு கோடானுகோடி வருடங்களுக்கு முன்பே இப்பிரபஞ்சமும் அதிலுள்ள நமது கிரகமாகிய பூமியும் படைக்கப்பட்டிருந்தன.
பூமி சுமார் 400 கோடி ஆண்டுகள் பழமையானது என்று நில இயல் வல்லுநர்கள் கணித்துள்ளார்கள்; இப்பிரபஞ்சம் 1500 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என வானவியல் வல்லுநர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்புகள்—எதிர்காலத்தில் இவ்விஷயத்தைக் குறித்து கிடைக்கவிருக்கும் துல்லியமான தகவல்கள்—ஆதியாகமம் 1:1-டன் முரண்படுகின்றனவா? இல்லை. ‘வானம், பூமி’ ஆகியவற்றின் உண்மையான வயதை பைபிள் குறிப்பிடுகிறதில்லை. இவ்விஷயத்தில் பைபிளின் கருத்து தவறென அறிவியல் நிரூபிக்கவில்லை.
படைப்பு நாட்கள் எவ்வளவு நீண்டவை?
படைப்பு நாட்கள் எவ்வளவு நீண்டவை? ஒவ்வொன்றும் 24 மணிநேரங்களைக் கொண்டவையா? ஆதியாகமத்தை எழுதியவரான மோசே ஆறு படைப்பு நாட்களுக்குப் பின்வந்த நாளை வாராந்தர ஓய்வு நாளுக்கு மாதிரியாய் இருந்ததாகப் பிற்பாடு குறிப்பிட்டார்; ஆகவே ஒவ்வொரு படைப்பு நாளும் 24 மணிநேரத்தை கொண்டவை என்று சிலர் வாதிடுகிறார்கள். (யாத்திராகமம் 20:11) ஆதியாகமத்திலுள்ள வார்த்தைகள் இதை ஆதரிக்கிறதா?
நிச்சயமாகவே இல்லை. “நாள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை 24 மணிநேர காலப்பகுதியை மட்டுமே குறிப்பதில்லை; பல்வேறு கால அளவுகளைக் குறிப்பிட அது பயன்படுத்தப்படலாம் என்பதுதான் உண்மை. உதாரணமாக, கடவுளின் படைப்பு வேலைகளை மோசே சுருக்கமாக சொல்லும்போது, ஆறு படைப்பு நாட்களையும் சேர்த்து ஒரே நாளாக குறிப்பிடுகிறார். (ஆதியாகமம் 2:4) கூடுதலாக, முதல் சிருஷ்டிப்பு நாளில், “தேவன் வெளிச்சத்துக்குப் பகல் (“நாள்”, NW) என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்.” (ஆதியாகமம் 1:5) இங்கே, 24 மணிநேரம் கொண்ட காலத்தின் ஒரு பகுதியை “நாள்” என்கிற வார்த்தை குறிக்கிறது. நிச்சயமாகவே, ஒவ்வொரு படைப்பு நாளும் 24 மணிநேரம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்ற ஊகத்திற்கு எந்தவித வேதப்பூர்வ அத்தாட்சியும் இல்லை.
அப்படியென்றால், படைப்பின் நாட்கள் எவ்வளவு நீண்டவை? படைப்பில் நீண்ட காலம் உட்பட்டிருந்ததை ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
படிப்படியாக நிகழும் படைப்புகள்
மோசே தன்னுடைய பதிவை எபிரெயு மொழியில் எழுதினார்; பூமியிலிருந்து பார்க்கும் ஒரு நபரின் கண்ணோட்டத்திலிருந்து எழுதினார். இந்த இரண்டு உண்மைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதோடு, படைப்பின் காலங்கள், அல்லது “நாட்கள்” தொடங்கும் முன்னே இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டிருந்தது என்ற தகவலையும் கருத்தில் கொள்ள வேண்டும். படைப்பைப் பற்றி ஆதியாகமம் சொல்வது குறித்து எழும்பும் விவாதங்களை தீர்க்க இத்தகவல்கள் உதவும். எப்படி?
ஆதியாகமப் பதிவை கவனமாக ஆராயும்போது ஒரு ‘நாளில்’ ஆரம்பமாகும் நிகழ்வுகள் ஒன்று அல்லது அதற்குமதிகமான நாட்களிலும் தொடர்வது தெளிவாகிறது. உதாரணமாக, முதல் படைப்பு “நாள்” தொடங்கும் முன், ஏற்கனவே இருந்த சூரியனிலிருந்து வந்த வெளிச்சம் பூமியை அடையாதபடி ஏதோவொன்று தடுத்தது, ஒருவேளை அடர்த்தியான மேகமாக இருக்கலாம். (யோபு 38:9) முதல் “நாளில்” அந்தத் தடை விலகத் தொடங்கியது, இதன் விளைவாக, காற்றுமண்டலத்தை ஊடுருவி மங்கலான வெளிச்சம் பரவியது.a
இரண்டாம் “நாளில்,” காற்றுமண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவானது; இவ்வாறாக, மேலேயுள்ள அடர்ந்த மேகத்திற்கும் கீழேயுள்ள சமுத்திரத்திற்கும் இடையில் வெட்டவெளி உண்டாகிறது. நான்காம் “நாளில்” காற்றுமண்டலம் படிப்படியாக தெளிவாகியிருந்தது. அதனால், “வானம் என்கிற ஆகாயவிரிவிலே” இருந்த சூரியனும் சந்திரனும் கண்ணுக்குப் புலப்பட்டன. (ஆதியாகமம் 1:14-16) வேறு வார்த்தைகளில் சொன்னால், பூமியில் இருக்கும் ஒரு நபரால் சூரியனையும் சந்திரனையும் பார்க்க முடிந்தது. இந்த சம்பவங்கள் படிப்படியாக நிகழ்ந்தன.
காற்றுமண்டலம் தொடர்ந்து தெளிவாகி வந்தபோது, ஐந்தாம் “நாளில்” பூச்சிகள், மெல்லிய சிறகுடைய ஜீவராசிகள் உட்பட எல்லாவித பறக்கும் இனங்களும் தோன்ற ஆரம்பித்தன என்று ஆதியாகம விவரப்பதிவு சொல்கிறது. என்றாலும், ஆறாவது “நாளில்” ‘வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவித பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கும்’ வேலையை கடவுள் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததாக பைபிள் சுட்டிக்காட்டுகிறது.—ஆதியாகமம் 2:19.
படைப்பு “நாளில்,” அல்லது படைப்பு காலத்தில் நடந்த பெரிய சம்பவங்கள் சட்டென நடந்திருக்க முடியாது, படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்பது பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளிலிருந்து தெரியவருகிறது; ஒரு “நாளில்” உருவாக ஆரம்பித்த சில படைப்பு வேலைகள் முடிவடைய கூடுதலாக சில ‘நாட்கள்’ தேவைப்பட்டிருக்கலாம்.
அந்தந்த இனத்தின்படியே
தாவரங்களும் விலங்குகளும் படிப்படியாகத் தோன்றின என்பதை கவனித்தோம். அப்படியானால், பலவகையான உயிரினங்களை உருவாக்குவதற்கு கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தினார் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. எல்லா அடிப்படை தாவர ‘இனங்களையும்’ மிருக ‘இனங்களையும்’ கடவுள்தான் படைத்தார் என்று பைபிள் பதிவு தெளிவாகச் சொல்கிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:11, 12, 20-25, பொது மொழிபெயர்ப்பு) தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் ஆரம்ப ‘இனங்கள்’ சுற்றுச்சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனோடு வடிவமைக்கப்பட்டிருந்தனவா? ஓர் ‘இனத்திற்கு’ இருக்கும் வரம்புகளை எது நிர்ணயிக்கிறது? இக்கேள்விகளுக்கு பைபிள் எந்த நேரடி பதிலையும் கொடுப்பதில்லை. என்றாலும், உயிரினங்கள் ‘அவ்வவற்றின் இனத்தின்படி திரள்திரளாய்‘ படைக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:21, பொ.மொ.) ஓர் ‘இனம்’ எந்தளவுக்கு மாறுதலுக்கு உட்படலாம் என்பதில் சில வரம்புகள் இருப்பதை இவ்வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். எண்ணிலடங்கா ஆண்டுகள் ஆகியும் தாவரங்கள் விலங்குகளின் அடிப்படை இனங்களில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதற்கு புதைபடிவ பதிவும் நவீன ஆராய்ச்சியும் சான்றளிக்கின்றன.
பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் உட்பட இப்பிரபஞ்சம் முழுவதும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அதுவும் ஒருசில நாட்களிலேயே படைக்கப்பட்டன என்று அடிப்படைவாதிகள்தான் கூறுகின்றனர். இந்தக் கருத்தை ஆதியாகமம் கற்பிப்பதில்லை. மாறாக, இந்தப் பிரபஞ்சமும், பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் படைக்கப்பட்டது பற்றி ஆதியாகமம் கொடுக்கும் தகவல்கள் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இசைவாகவே இருக்கின்றன.
கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று பைபிள் கூறுவதை பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுடைய தத்துவ நம்பிக்கைகளே அதற்குக் காரணம். படைப்பைப் பற்றி கூறும் பைபிள் புத்தகமாகிய ஆதியாகமம் மிகப் பழமையானது. அதை எழுதியவரான மோசே, இப்பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததையும், நீண்ட காலப்பகுதியில் உயிரினங்கள் படிப்படியாக உருவானதையும் பற்றி எழுதியிருக்கிறார். விஞ்ஞானப்பூர்வமாக துல்லியமாய் இருக்கும் இந்த விவரங்கள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே மோசேக்கு எப்படிக் கிடைத்தன? இதற்கு ஒரேவொரு நியாயமான பதில்தான் இருக்கிறது. இந்த வானத்தையும் பூமியையும் படைக்க வல்லமையும் ஞானமும் உள்ள ஒருவரால் மட்டுமே மோசேக்கு இந்த விஞ்ஞான உண்மைகளை தெரிவிக்க முடிந்திருக்கும். இது பைபிள் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்ற உண்மைக்கு வலுவான அத்தாட்சியைக் கொடுக்கிறது, அல்லவா?—2 தீமோத்தேயு 3:16.
நீங்கள் யோசித்ததுண்டா?
◼ எவ்வளவு காலத்திற்குமுன் கடவுள் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார்?—ஆதியாகமம் 1:1.
◼ பூமி 24 மணிநேரம்கொண்ட ஆறு நாட்களில் படைக்கப்பட்டதா?—ஆதியாகமம் 2:4.
◼ பூமியின் ஆரம்பம் பற்றிய மோசேயின் கருத்துகள் விஞ்ஞானரீதியில் துல்லியமாக இருப்பதற்குக் காரணம் என்ன?—2 தீமோத்தேயு 3:16.
[அடிக்குறிப்பு]
a முதல் “நாளில்” நடந்ததைப் பற்றிய விவரிப்பில், வெளிச்சம் என்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை ஆர் என்பதாகும். இது பொதுவான கருத்தில் வெளிச்சத்தைக் குறிக்கிறது; ஆனால் நான்காம் “நாளில்” மாஆர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இது வெளிச்சத்தின் ஊற்றுமூலத்தைக் குறிக்கிறது.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஒருசில நாட்களுக்குள் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டுவிட்டதாக ஆதியாகமம் கற்பிப்பதில்லை
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” —ஆதியாகமம் 1:1
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
பிரபஞ்சம்: IAC/RGO/David Malin Images
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]
NASA photo
-
-
படைப்பாளர் இருப்பதை நாங்கள் ஏன் நம்புகிறோம்விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
படைப்பாளர் இருப்பதை நாங்கள் ஏன் நம்புகிறோம்
புத்திக்கூர்மைக்கு அத்தாட்சியான வடிவமைப்புகள் இயற்கையில் காணப்படுவதை வெவ்வேறு விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலரும் கவனித்திருக்கிறார்கள். பூமியிலுள்ள உயிர்களின் சிக்கலான வடிவமைப்பு தற்செயலாக உருவாகிவிட்டதாய் நம்புவது நியாயமற்றதென அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை அநேக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் நம்புகிறார்கள்.
அவர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகளாய் ஆகியிருக்கிறார்கள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளே இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைத்து உருவாக்கியவர் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்? இதை அறிய, அவர்களில் சிலரை விழித்தெழு! பேட்டி கண்டது. அவர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இதோ:a
“உயிர்களில் புத்திக்கு எட்டாத சிக்கலான வடிவமைப்புகள்”
◼ வால்ஃப்-பக்காஹார்ட் லான்னிக்
பின்னணிக் குறிப்பு: தாவரங்களின் மரபியலில் திடீர்மாற்றம் நிகழ்வது சம்பந்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சியில் கடந்த 28 வருடங்களாக ஈடுபட்டிருக்கிறேன். அதில் 21 வருடங்களை ஜெர்மனியின் கோலாங் நகரிலுள்ள மாக்ஸ் ப்லாங்க் தாவர இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் செலவிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராகவும் சேவை செய்து வந்திருக்கிறேன்.
மரபியல் துறையில் செயல்முறையாக ஆராய்ச்சி செய்ததிலிருந்தும், உடலியல், வடிவ அமைப்பியல் போன்ற உயிரியல் பாடங்களில் நான் கற்ற விஷயங்களிலிருந்தும், உயிர்களில் புத்திக்கு எட்டாத சிக்கலான வடிவமைப்புகள் ஏராளமாக இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். மிகச் சிறிய உயிரினங்களும் புத்திக்கூர்மையாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற என் நம்பிக்கையை இந்த ஆராய்ச்சிகள் வலுப்படுத்தியிருக்கின்றன.
உயிர்களின் சிக்கலான வடிவமைப்பை விஞ்ஞானிகள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். ஆனால், வியப்பூட்டும் இத்தகைய உண்மைகளை பரிணாமக் கோட்பாட்டிற்குச் சாதகமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், படைப்பு பற்றிய பைபிளின் கருத்துக்கு எதிராக எழுப்பப்படும் விவாதங்களை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்க்கையில் அவை வெற்றிபெறுவதில்லை. இப்படிப்பட்ட விவாதங்களின் பேரில் பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்திருக்கிறேன். பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் மிகத் துல்லியமாக இயற்றப்பட்டிருப்பதைச் சிந்தித்த பிறகும், உயிருள்ள பொருள்களை மிகக் கவனமாக ஆராய்ச்சி செய்த பிறகும், படைப்பாளர் ஒருவர் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை.
‘காரணம் இல்லாமல் காரியம் இல்லை’
◼ பைரன் லியான் மிடோஸ்
பின்னணிக் குறிப்பு: அமெரிக்காவில் வசிக்கும் நான், ஐ.மா. தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனத்தில் லேசர் இயற்பியல் துறையில் வேலை செய்கிறேன். பூகோள சீதோஷணம், வானிலை, மற்ற கிரக நிகழ்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் திறனை முன்னேற்றுவிக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். வர்ஜீனியா பகுதியிலுள்ள கில்மார்னக் டவுனில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பராக இருக்கிறேன்.
நான் பெரும்பாலும் இயற்பியல் கொள்கைகள் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்கிறேன். சில காரியங்கள் எப்படி நடைபெறுகின்றன, ஏன் நடைபெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயலுகிறேன். இயற்கையில் நான் காணக்கூடிய ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால் காரணம் இருக்கிறது என்பதை என் ஆராய்ச்சித் துறை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இயற்கையில் உள்ள எல்லாவற்றுக்கும் காரணர் கடவுளே என்பதை ஏற்றுக்கொள்வது விஞ்ஞானப்பூர்வமாக சரியென்றே நம்புகிறேன். இயற்கை விதிகள் அந்தளவு நிலையாக இருப்பதால் அவற்றை ஒருவர் ஒழுங்கமைத்திருக்கிறார், படைத்திருக்கிறார் என்பதை நான் நம்பியே ஆகவேண்டும்.
இதுவே சரியான முடிவென்பது இத்தனை தெளிவாகத் தெரிகையில், விஞ்ஞானிகள் பலர் ஏன் பரிணாமக் கோட்பாட்டை நம்புகிறார்கள்? ஒருவேளை இந்தப் பரிணாமக் கோட்பாட்டாளர்கள் தங்களது ஆராய்ச்சியில் கிடைக்கிற தகவல்களை, ஏற்கெனவே எடுத்துவிட்ட ஆதாரமற்ற முடிவுகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாலா? விஞ்ஞானிகள் இப்படிச் செய்வது சகஜம்தான். ஆனால் அப்படிப்பட்ட தகவல்கள் என்னதான் நம்பத்தக்கவையாக இருந்தாலும் சரி, அவை உண்மை என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. உதாரணத்திற்கு, லேசர் இயற்பியலில் ஆராய்ச்சி செய்யும் ஒருவர், ஒலி அலைகளைப் போலவே ஒளியும் அலை வடிவில் இருப்பதாக அடித்துக் கூறலாம்; ஒளி பொதுவாக அலையைப் போலவே இயங்குவதால் அவர் அவ்வாறு கூறலாம். என்றாலும், அவருடைய முடிவு திருத்தமானதாக இருக்காது. ஏனென்றால், ஃபோட்டான்கள் எனப்படும் துணுக்குகளாகவும் ஒளி இயங்குவதாக அத்தாட்சி காட்டுகிறது. அவ்வாறே, பரிணாமக் கோட்பாட்டை உண்மையென வலியுறுத்துபவர்கள் அரைகுறை அத்தாட்சியின் பேரிலேயே முடிவெடுக்கிறார்கள்; அதுமட்டுமின்றி அத்தாட்சிகள்மீது தங்களுடைய ஆதாரமற்ற முடிவுகள் செல்வாக்கு செலுத்த இடம்கொடுத்துவிடுகிறார்கள்.
பரிணாமக் கோட்பாட்டு “வல்லுநர்கள்” மத்தியிலேயே கருத்துவேறுபாடுகள் நிலவுகையில் மக்கள் இவ்வளவு சுலபமாக அந்தக் கோட்பாட்டை நம்பிவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணமாக, வல்லுநர்களில் சிலர் 2-ஐயும் 2-ஐயும் கூட்டினால் 4 வரும் என்று சொல்ல, வேறு சில வல்லுநர்களோ, 3 அல்லது ஒருவேளை 6 என்று சொல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இப்படி ஆளாளுக்கொரு பதிலைச் சொன்னால் அடிப்படைக் கணிதம் நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
“எதுவும் தானாக வந்துவிடாது”
◼ கென்னத் லாய்டு டானாக்கா
பின்னணிக் குறிப்பு: நான் நில இயல் துறையில் ஆராய்ச்சி செய்துவருகிறேன். தற்சமயம் அரிஜோனா மாகாணத்தைச் சேர்ந்த ஃப்ளாக்ஸ்டாஃப் நகரிலுள்ள ஐ.மா. நில இயல் சர்வே நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விண்கோள நில இயலிலும், நில இயல் சம்பந்தப்பட்ட பிற துறைகளிலும் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். நான் எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும், செவ்வாய்க் கிரகத்தின் நில வரைபடங்களும் அங்கீகாரம் பெற்ற விஞ்ஞானப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பைபிளை வாசிக்க மற்றவர்களை ஊக்கப்படுத்துவதற்கு, யெகோவாவின் சாட்சியாகிய நான் ஒவ்வொரு மாதமும் சுமார் 70 மணிநேரம் செலவிடுகிறேன்.
நான் படித்துவந்த காலத்தில் பரிணாமக் கோட்பாடு உண்மையென சொல்லித்தரப்பட்டது. ஆனால், இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்குத் தேவைப்பட்டிருக்கும் பேரளவான ஆற்றல், சக்திவாய்ந்த ஒரு படைப்பாளரிடமிருந்து வராமல் தானாக வந்திருக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதுவும் தானாக வந்துவிடாது. படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரத்தை பைபிளிலேயே கண்டிருக்கிறேன். நில இயல் சம்பந்தப்பட்ட ஏராளமான விஞ்ஞான உண்மைகளை பைபிளில் காணமுடிகிறது. அவற்றில் சில, பூமி உருண்டையாக இருக்கிறது, ‘அந்தரத்தில் தொங்குகிறது,’ என்பவையே. (யோபு 26:7; ஏசாயா 40:22) மனிதர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே இந்த உண்மைகள் பைபிளில் எழுதப்பட்டுவிட்டன.
நாம் படைக்கப்பட்டிருக்கும் விதத்தைக் குறித்து யோசித்துப் பாருங்கள். புலனறிவு, நம்மைப் பற்றிய விழிப்புணர்வு, அறிவுத் திறன், பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறன், உணர்ச்சிகள் ஆகியவை நமக்கு உள்ளன. குறிப்பாக, நம்மால் அன்பை உணர முடியும், அதற்கு நன்றியுணர்வைக் காட்ட முடியும், மற்றவர்களிடம் அன்பு காட்டவும் முடியும். மனிதர்களிடம் அற்புதமான இந்தக் குணங்கள் எப்படி வந்தன என்பதை பரிணாமக் கோட்பாட்டால் விளக்க முடியாது.
‘பரிணாமக் கோட்பாட்டை ஆதரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தகவல்கள் எந்தளவு உண்மையானவை, நம்பகமானவை?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இது சம்பந்தமாக நில இயல் ஆராய்ச்சிகளில் கிடைத்த தகவல்கள் முற்றுப் பெறாதவையாகவும் சிக்கல் வாய்ந்தவையாகவும் குழப்பம் தருபவையாகவும் உள்ளன. பரிணாமம் எப்படி நடந்திருக்கலாம் என்பதை விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி ஆய்வுக்கூடங்களில் செய்துகாட்ட பரிணாமக் கோட்பாட்டாளர்கள் முயன்றபோது தோல்வியையே தழுவினார்கள். தகவல்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தாலும், அவர்களுடைய கண்டுபிடிப்புகளுக்கு சுயநல நோக்கத்துடனேயே விளக்கம் அளிக்கிறார்கள். இப்படித் தகவல்கள் அரைகுறையாக இருக்கும்போதோ முரண்பாடாக இருக்கும்போதோ விஞ்ஞானிகள் தங்கள் சொந்த கருத்துகளை நுழைத்துவிடுகிறார்கள். விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தொழிலும் சுயமதிப்பு சம்பந்தப்பட்ட அவர்களுடைய கண்ணோட்டமுமே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஒரு விஞ்ஞானியாகவும் பைபிள் மாணாக்கனாகவும், நான் தெள்ளத்தெளிவான விளக்கத்தைப் பெறுவதற்காக, நிரூபிக்கப்பட்டிருக்கிற நிஜங்களுடனும் ஆராய்ச்சிகளின் முடிவுகளுடனும் முரண்படாத, கலப்படமற்ற உண்மை எதுவென்று தேடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவதே நியாயமாகத் தோன்றுகிறது.
“செல்லில் தெளிவாகக் காணப்படும் வடிவமைப்பு”
◼ பௌலா கின்ச்சாலோ
பின்னணிக் குறிப்பு: செல் மற்றும் மூலக்கூறு உயிரியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்துவந்திருக்கிறேன். தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜியா மாகாணத்திலுள்ள அட்லாண்டா நகரில் எமரி பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறேன். அதோடு, ரஷ்ய மொழி பேசும் ஏரியாவிலுள்ள மக்களுக்கு பைபிளைக் கற்பிக்கும் வாலண்டியராகவும் இருக்கிறேன்.
மூலக்கூறு உயிரியல் சம்பந்தமாக நான் படித்தபோது, செல்லைப் பற்றியும் அதன் பாகங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கே நான்கு வருடங்களைச் செலவிட்டேன். டிஎன்ஏ, ஆர்என்ஏ, புரதங்கள், வளர்சிதை மாற்றப் பாதைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிக்கப் படிக்க, அவற்றின் சிக்கலான தன்மை, ஒழுங்கமைப்பு, துல்லியம் ஆகியவற்றைக் கண்டு மலைத்துப் போனேன். செல்லைப் பற்றி இதுவரை தெரிந்த தகவல்களே இப்படி மலைக்க வைக்கிறதே, தெரியாத தகவல்கள் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். நான் கடவுளை நம்புவதற்கு ஒரு காரணம், செல்லில் தெளிவாகக் காணப்படும் வடிவமைப்பு ஆகும்.
பைபிளை நான் படித்ததிலிருந்து படைப்பாளரின் பெயர் யெகோவா என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர் புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளர் மட்டுமல்ல, என்மீது அக்கறை காட்டும் ஓர் அன்பான கரிசனையுள்ள தகப்பனும்கூட என்பதை உளமார நம்புகிறேன். வாழ்க்கையின் நோக்கத்தை பைபிள் விளக்குகிறது; அதோடு, சந்தோஷமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் தருகிறது.
பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி பள்ளியில் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள் எதை நம்புவது என்று தெரியாமல் திணறலாம். இது அவர்களுக்கு ஒரு குழப்பமான காலப்பகுதியாகவும் இருக்கலாம். அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், இது அவர்களுடைய விசுவாசத்திற்கு வந்த சோதனைதான். ஆனால் இந்தப் பரிட்சையில் அவர்கள் வெற்றிகாண முடியும். எப்படி? நம்மைச் சுற்றி இயற்கையில் காணப்படுகிற பொருட்களை ஆராய்வது ஒரு வழி. அத்துடன், படைப்பாளரைப் பற்றியும் அவருடைய பண்புகள் பற்றியும் அதிகமதிகமாகத் தெரிந்துகொள்வது இன்னொரு வழி. நான் இதையே செய்திருக்கிறேன். அதனால் படைப்பு பற்றி பைபிள் சொல்கிற தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை, மெய் விஞ்ஞானத்துடன் அவை முரண்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
“அற்புதமான எளிய விதிகள்”
◼ என்ரிக் ஹெர்னான்டெஸ் லேமஸ்
பின்னணிக் குறிப்பு: யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நான் முழு நேர ஊழியம் செய்துவருகிறேன். மெக்சிகோ தேசிய பல்கலைக்கழகத்தில், கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சியும் செய்கிறேன். இயற்கையில் நிகழும் புவிஈர்ப்பு சார்ந்த வெப்ப இயக்கவியல் சம்பந்தப்பட்ட விபத்திற்கு (gravothermal catastrophe), அதாவது, விண்மீன் விரிவடைவதற்கு (star growth), வெப்ப இயக்கவியலின் அடிப்படையில் விளக்கம் அளிக்கும் வேலையைத் தற்போது செய்துவருகிறேன். டிஎன்ஏ-யின் சிக்கலான அமைப்பு பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறேன்.
உயிர் மிகமிக சிக்கலான வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் அது தற்செயலாக வந்திருக்கவே முடியாது. உதாரணமாக டிஎன்ஏ மூலக்கூறில் உள்ள கணக்கிலடங்கா தகவல்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கணித அடிப்படையில், ஒரேவொரு குரோமோசோம் குருட்டாம்போக்கில் உருவாவதற்கான சாத்தியக்கூறு, ஒன்பது லட்சக் கோடியில் ஒன்றுக்கும் குறைவானதே; இவ்வாறு நடக்கவே முடியாது என்பதால் இதை அசாத்தியமானதாகவே கருதலாம். அறிவுத்திறனற்ற ஆற்றல்களால் ஒரேவொரு குரோமோசோமைக்கூட உருவாக்க முடியாது, அப்படியிருக்க, உயிருள்ள பொருள்களிலுள்ள வியக்கவைக்கும் சிக்கலான வடிவமைப்பு அனைத்தையும் உருவாக்க முடியுமென்று நம்புவது முட்டாள்தனம் என்றே நினைக்கிறேன்.
அதோடு, பருப்பொருளின் வெகு சிக்கல்வாய்ந்த செயல்கள் குறித்து நான் ஆராய்ச்சி செய்தபோது, மிகமிக நுண்ணிய பொருளும் சரி, விண்வெளியிலுள்ள இராட்சத விண்மீன்கூட்டங்களும் சரி, அவற்றின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிற அற்புதமான எளிய விதிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. என்னைப் பொறுத்தமட்டில் இந்த விதிகள் உன்னதமான ஒரு கணித மேதையின் கைவண்ணமாக மட்டுமே அல்லாமல் உன்னதமான ஓவியரின் கையெழுத்தாகவும் இருக்கிறது.
நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைக் கேட்டு மக்கள் பெரும்பாலும் ஆச்சரியப்படுகிறார்கள். என்னால் எப்படி கடவுள்மீது நம்பிக்கை வைக்க முடிகிறது என்று சில சமயங்களில் கேட்டே விடுகிறார்கள். ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது; ஏனெனில் முக்கால்வாசி மதங்கள், அவற்றின் உறுப்பினர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்படும் விஷயங்களுக்கான நிரூபணத்தைக் கேட்கும்படியோ, தங்கள் நம்பிக்கைகளை பரிசோதித்துப் பார்க்கும்படியோ அவர்களை ஊக்குவிப்பதில்லை. என்றாலும், நம்முடைய ‘சிந்திக்கும் திறனை’ பயன்படுத்த பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (நீதிமொழிகள் 3:21, NW) இயற்கையில் காணப்படுபவை புத்திக்கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பதற்கான எல்லா அத்தாட்சிகளும், பைபிள் அத்தாட்சியும் சேர்ந்து கடவுள் இருக்கிறார் என்பதை மட்டுமல்ல அவர் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்பதையும் நம்ப வைக்கின்றன.
[அடிக்குறிப்பு]
a அந்த விஞ்ஞானிகளுடைய கருத்துகள், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் கருத்துகளாக இருக்குமென்று சொல்ல முடியாது.
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
பின்னணியில் செவ்வாய்க் கிரகம்: Courtesy USGS Astrogeology Research Program, http://astrogeology.usgs.gov
-
-
தாவரங்களில் வியத்தகு வடிவமைப்புகள்விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
தாவரங்களில் வியத்தகு வடிவமைப்புகள்
தாவரங்களில் பல, சுருள் வடிவமைப்பைக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? உதாரணத்திற்கு அன்னாசிப் பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இப்பழத்தைச் சுற்றியுள்ள செதில் போன்ற தோலில், சுருள் வடிவமைப்பைக் காணலாம். பழத்தை உற்றுப் பார்த்தால், ஒரு பக்கத்தில் 8 சுருள் வடிவமைப்புகளும் இன்னொரு பக்கத்தில் 5 அல்லது 13 சுருள் வடிவமைப்புகளும் இருக்கலாம். (1-வது படத்தைக் காண்க.) சூரியகாந்திப் பூவிலுள்ள விதைகள், சுருள் வடிவில் அமைந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதில் 55, 89 அல்லது அதற்கும் அதிகமான சுருள்கள் ஒன்றின் மேலொன்று குறுக்காக செல்கின்றன. ஏன், காலிஃபிளவரில்கூட சுருள் வடிவமைப்புகள் காணப்படுகின்றன. இப்படியாக, நீங்கள் சுருள் வடிவமைப்புகளைக் கவனிக்கப் பழகிவிட்டால் மார்க்கெட்டில் இருக்கும் காய்கறிகளிலும் பழங்களிலும் சுருள் வடிவம் தெரிகிறதா என்று ஆர்வமாகப் பார்ப்பீர்கள்! தாவரங்கள் இப்படி வளருவதற்கு என்ன காரணம்? அவற்றிலுள்ள சுருள்களின் எண்ணிக்கைக்கு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா?
தாவரங்களின் வளர்ச்சி
பெரும்பாலான தாவரங்களில், ஆக்குத்திசு (meristem) எனப்படும் மிகச்சிறிய வளர்ச்சி மையத்திலிருந்துதான் தண்டுகள், இலைகள், பூக்கள் போன்ற உறுப்புகள் புதிதாகத் தோன்றுகின்றன. இவ்வுறுப்புகளை, ‘தோற்றுவி’ (primordium) என்று அழைக்கிறோம். ஆக்குத்திசுவிலிருந்து வளரும் இவை ஒவ்வொன்றும் ஒரு புதிய திசையில் வளர்கின்றன. அதாவது, முந்தைய உறுப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளர்கின்றன.a (2-வது படத்தைக் காண்க.) அநேக தாவரங்களில் ஒவ்வொரு புதிய உறுப்பும் இப்படியொரு விசேஷ கோணத்தில் வளர்ந்து, கடைசியில் சுருள் வடிவத்தை உருவாக்குகிறது. அது என்ன விசேஷ கோணம்?
பின்வரும் சிக்கலைக் கவனியுங்கள்: நீங்களே ஒரு செடியை வடிவமைக்க முயற்சி செய்கிறீர்கள் என கற்பனை செய்துகொள்ளுங்கள். புதிய உறுப்புகள், வளர்ச்சி மையத்தைச் சுற்றி கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் கச்சிதமாக வளர வேண்டும், அதற்கேற்றபடி நீங்கள் வடிவமைக்க வேண்டும். முந்தைய உறுப்புக்கும் புதிதாக வளரும் உறுப்புக்கும் இடைப்பட்ட கோணம், ஒரு முழு சுற்றில் (360 டிகிரி) ஐந்தில் இரண்டு பாகமாய் இருக்கும்படியாக அமைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி அமைக்கையில், அடுத்தடுத்த சுற்றுகளில் புதிதாகத் தோன்றும் ஒவ்வொரு ஐந்தாவது உறுப்பும் ஏற்கெனவே ஓர் உறுப்பு வளர்ந்திருக்கும் அதே இடத்தில், அதே திசையில் முளைக்கிறது. இவ்வாறு, ஏற்கெனவே உறுப்புகள் இருக்கும் இடத்திலேயே புதிய உறுப்புகள் அடுக்கடுக்காக முளைக்க ஆரம்பித்துவிடுவதால், ஒவ்வொரு அடுக்குக்கும் இடையே நிறைய இடம் காலியாக இருக்கும். (3-வது படத்தைக் காண்க.) இதற்குக் காரணம் என்ன? புதிய உறுப்புகளுக்கு இடைப்பட்ட கோணம், ஒரு சுற்றின் எளிய பின்னமாக (simple fraction) இருப்பதே. இதனால் இவை நெருக்கமாக வளராமல், இடைவெளி விட்டு ஒன்றன்மேல் ஒன்றாக வளர்கின்றன. ஆனால், ஒரேவொரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே அவை இடைவெளி இல்லாமல் கச்சிதமாக வளர்கின்றன. இந்தக் கோணமே, “கோல்டன் ஆங்கிள்,” அதாவது மிகச் சிறந்த கோணம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோணம், கிட்டத்தட்ட 137.5 டிகிரி ஆகும். (5-வது படத்தைக் காண்க.) இந்தக் கோணத்தின் தனித்துவம் என்ன?
இந்தக் கோணத்தை ஒரு சுற்றின் எளிய பின்னமாக எழுத முடியாது, இதுவே இதன் தனித்துவம். 5/8 என்ற பின்னம், இந்தக் கோணத்திற்கு வெகு நெருக்கமாக இருக்கிறது என்றால் 8/13 என்ற பின்னம் அதைவிட நெருக்கமாக இருக்கிறது. 13/21 அதைவிட இன்னும் நெருக்கமாக இருக்கிறது. ஆனால், ஒரு சுற்றின் எந்த எளிய பின்னமும் இந்தக் கோணத்திற்கு இணையாக இல்லை. ஆக, செடியின் ஒரு புதிய பகுதி மிகச் சரியாக இந்தக் கோணத்தில் தோன்றினால்தான், இன்னொரு புதிய பகுதி அதே இடத்திலிருந்து தோன்றாது. (4-வது படத்தைக் காண்க.) எனவேதான், செடியின் வளர்ச்சி மையத்திலிருந்து எல்லா திசையிலும் சமச்சீராகப் பிரிந்து செல்லும் உறுப்புகள் வட்ட வடிவில் இல்லாமல் சுருள் வடிவில் அமைந்துவிடுகின்றன.
கம்ப்யூட்டர் சிமுலேஷன் மென்பொருளைப் பயன்படுத்தி இதை ஆராய்ந்தபோது, தாவரங்களின் வளர்ச்சி மையத்திலிருந்து தோன்றும் உறுப்புகளுக்கு இடையிலான கோணம் மிகத் துல்லியமாக ‘கோல்டன் ஆங்கிளாக’ அமைந்தபோது மட்டுமே சுருள் வடிவம் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கோணத்திலிருந்து 0.1 டிகிரி விலகிச் சென்றபோதும்கூட சுருள் வடிவம் உருவாகவில்லை.—5-வது படத்தைக் காண்க.
ஒரு பூவில் எத்தனை இதழ்கள்?
‘கோல்டன் ஆங்கிளின்’ அடிப்படையில் வளரும் தாவரங்களிலுள்ள சுருள்களின் எண்ணிக்கை பொதுவாக ஃபிபோநாட்சி எண் என அழைக்கப்படுகிற எண்களில் ஒன்றாகவே இருக்கிறது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லியனார்டோ ஃபிபோநாட்சி என்ற இத்தாலிய கணிதவியலாளரே இந்த வரிசைமுறையை முதன்முதலில் கண்டுபிடித்தார். இந்த வரிசையில் 1-ஐ அடுத்து வருகிற ஒவ்வொரு எண்ணும் அதற்கு முன்பு இருக்கும் இரண்டு எண்களின் கூட்டுத் தொகையாக இருக்கிறது. அதாவது 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, என்று தொடருகிறது.
சுருள் வடிவமைப்பைக் கொண்ட தாவரங்களிலுள்ள பூக்களுடைய இதழ்களின் எண்ணிக்கை பெரும்பாலும் ஃபிபோநாட்சி வரிசைமுறையிலுள்ள எண்களில் ஒன்றாகவே இருக்கிறது. சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, ‘பட்டர்கப்’ பூக்களில் 5 இதழ்களும், ‘பிளட்ரூட்’ பூக்களில் 8 இதழ்களும், ‘ஃபயர்வீட்’ பூக்களில் 13 இதழ்களும், ‘ஆஸ்டர்’ பூவில் 21 இதழ்களும், ‘ஆக்ஸ்-ஐ டெய்ஸி’ பூவில் 34 இதழ்களும், மிகெல்மாஸ் டெய்ஸி பூவில் 55 அல்லது 89 இதழ்களும் இருப்பதாகத் தெரிகிறது. (6-வது படத்தைக் காண்க.) காய்களிலும் பழங்களிலும் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்களின் எண்ணிக்கையும்கூட பொதுவாக ஃபிபோநாட்சி எண்களில் ஒன்றாகவே இருக்கும். உதாரணத்திற்கு வாழைப் பழத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கவனித்தால், அதில் 5 பகுதிகளைக் கொண்ட வடிவத்தைக் காணலாம்.
‘அவர் சகலத்தையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்’
‘கோல்டன் ஆங்கிளில்’ வளருகிற தாவரங்கள் நம் கண்களுக்கு விருந்தளிப்பதை கலைஞர்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டார்கள். செடிகளின் புதிய உறுப்புகள் வியக்கவைக்கும் விதத்தில், முக்கியமாக இந்தக் குறிப்பிட்ட கோணத்தில் வளருவது எப்படி? புத்திக்கூர்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிற ஏராளமான உயிருள்ள பொருட்களுக்கு இது ஒரேவொரு எடுத்துக்காட்டுதான் என்ற முடிவுக்கே பலரும் வருகிறார்கள்.
உயிருள்ள பொருள்களில் காணப்படும் இப்படிப்பட்ட அழகழகான வடிவமைப்புகளையும் அவற்றை ரசிக்கும் நமது திறனையும் குறித்து அநேகர் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். நம் சந்தோஷத்தை மனதில்கொண்டு அவற்றையெல்லாம் உருவாக்கின படைப்பாளரின் கைவண்ணத்தை இத்தகைய வடிவமைப்புகளில் காண்கிறார்கள். அந்தப் படைப்பாளரைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.”—பிரசங்கி 3:11.
[அடிக்குறிப்பு]
a சூரியகாந்திப் பூவின் நடுவில் காணப்படும் விதைகள் முதலில் சின்னஞ்சிறு மலர்களாகத் தோன்றி பின்னர் விதைகளாக முதிர்ச்சியடைகின்றன; இவை சுருள் வடிவில் அமைந்திருக்கின்றன. இந்தச் சுருள் வடிவம், பூவின் மையத்திலிருந்து ஆரம்பிக்காமல் விளிம்பிலிருந்து ஆரம்பிப்பது அசாதாரணமான அமைப்பாக உள்ளது.
[பக்கம் 24, 25-ன் படம்]
படம் 1
(பிரசுரத்தைப் பார்க்கவும்)
படம் 2
(பிரசுரத்தைப் பார்க்கவும்)
படம் 3
(பிரசுரத்தைப் பார்க்கவும்)
படம் 4
(பிரசுரத்தைப் பார்க்கவும்)
படம் 5
(பிரசுரத்தைப் பார்க்கவும்)
படம் 6
(பிரசுரத்தைப் பார்க்கவும்)
[பக்கம் 24-ன் படம்]
குளோஸ்-அப்பில் ஆக்குத்திசு
[படத்திற்கான நன்றி]
R. Rutishauser, University of Zurich, Switzerland
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
வெள்ளைப் பூ: Thomas G. Barnes @ USDA-NRCS PLANTS Database
-
-
படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது?விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
இளைஞர் கேட்கின்றனர் . . .
படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது?
“வகுப்பறையில் பரிணாமத்தைப் பற்றிய பாடம் நடத்தப்பட்டது, அது என்னுடைய நம்பிக்கைக்கு முற்றிலும் முரணாக இருந்தது. பரிணாமம் ஒரு விஞ்ஞான உண்மை என்பதாக அவர்கள் சொன்னார்கள். அதைக்கேட்டு ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்.”—ரையன், 18.
“அப்பொழுது எனக்கு 12 வயது, என் டீச்சர் ஒரு தீவிர பரிணாமவாதியாக இருந்தார். அவருடைய காரில் டார்வின் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார் என்றால் பாருங்களேன்! அதனால் படைப்பில் எனக்குள்ள நம்பிக்கையைப்பற்றிப் பேச ரொம்பவே தயக்கமாக இருந்தது.”—டைலர், 19.
“நம்முடைய அடுத்த பாடம் பரிணாமத்தைப் பற்றியது என்று சமூக அறிவியல் டீச்சர் சொன்னபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நான் எதை நம்புகிறேன் என்பதை வகுப்பறையில் சொல்லியே தீரவேண்டும் என்பதை அறிந்திருந்தேன்.” —ராகெல், 14.
பரிணாமத்தைப் பற்றிய பாடம் வகுப்பில் நடத்தப்படும்போது ரையன், டைலர், ராகெல் போல நீங்களும் டென்ஷனாகலாம். கடவுளே ‘சகலத்தையும் சிருஷ்டித்தார்’ என்பதை நீங்கள் நம்புகிறீர்கள். (வெளிப்படுத்துதல் 4:11) இயற்கை புத்திக்கூர்மையாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவதற்கு உங்களைச் சுற்றிலும் ஏராளமான அத்தாட்சிகள் இருப்பதையும் கவனிக்கிறீர்கள். ஆனால், பாடப்புத்தகங்களோ பரிணாமத்தின் மூலமாக நாம் வந்தோம் என சொல்கின்றன. உங்கள் ஆசிரியரும் அதுதான் சரி என்கிறார். ‘எல்லாம் தெரிந்த ஆட்களோடு’ விவாதிப்பதற்கு நான் யார்? கடவுளைப்பற்றி . . . பேச ஆரம்பித்தால் கூடப்படிக்கும் பிள்ளைகள் என்ன சொல்வார்கள்? என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?
இக்கேள்விகளை நினைத்தாலே உங்களுக்கு பயமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! நிறைய ஆட்கள் படைப்பை நம்புகிறார்கள். உண்மையை சொல்லப்போனால், நிறைய விஞ்ஞானிகளே பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல, அநேக ஆசிரியர்களும் பரிணாமத்தை நம்புவதில்லை. ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு ஐந்து மாணவர்களில் நான்குபேர் பாடப்புத்தகங்கள் சொல்வதுபற்றி கவலைப்படாமல் படைப்பாளர் இருப்பதை நம்புகிறார்களே!
இருந்தாலும், ‘படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்து பேசுவது?’ என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் பயந்து நடுங்குகிறவர்களாக இருந்தாலும் தைரியமாயிருங்கள், உங்களால் நம்பிக்கையோடு பேச முடியும். என்றாலும், அதற்கு முன் நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டியது அவசியம்.
உங்கள் நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
நீங்கள் கிறிஸ்தவப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறவரா? அப்படியானால், அப்பா, அம்மா படைப்பை பற்றி உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பதால் மட்டுமே நீங்கள் அதை நம்பிக்கொண்டிருக்கலாம். நீங்கள் இப்பொழுது வளர்ந்து வருகிறீர்கள். ஆகவே, உங்களுடைய நம்பிக்கைகளுக்கு உறுதியான ஆதாரத்தைக்கொண்டு “பகுத்தறியும் திறனோடு” கடவுளை வணங்க விரும்புகிறீர்கள். (ரோமர் 12:1, NW) ‘எல்லாவற்றையும் சோதித்துப்பார்க்கும்படி’ முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களை பவுல் ஊக்கப்படுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:21) படைப்பில் உங்களுக்கிருக்கும் நம்பிக்கையை நீங்கள் எவ்வாறு சோதித்துப்பார்க்கலாம்?
கடவுளைப்பற்றி பவுல் என்ன எழுதினார் என்பதை முதலில் கவனியுங்கள்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.” (ரோமர் 1:20) இந்த வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டு, மனித உடல், பூமி, பரந்துவிரிந்த பிரபஞ்சம், ஆழ்கடல் ஆகியவற்றை உன்னிப்பாய் கவனியுங்கள். ஆர்வமூட்டும் பூச்சிகள், வசீகரிக்கும் தாவரங்கள், வியப்பூட்டும் விலங்குகள் என உங்கள் மனதை கொள்ளையடிக்கும் இயற்கையின் அற்புதங்களை ஆராயுங்கள். பிறகு, உங்களுடைய “பகுத்தறியும் திறனைப்” பயன்படுத்தி பின்வரும் கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள், ‘படைப்பாளர் இருக்கிறார் என்று என்னை நம்பவைப்பது எது?’
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க சாம் என்ற 14 வயது பையன் மனித உடலை உதாரணமாக காட்டுகிறான். அவனுடைய கருத்து இதோ: “அது நுணுக்கமானது, சிக்கலானது, அதிலிருக்கும் எல்லா பாகங்களும் மிகவும் அருமையாய் ஒன்றுசேர்ந்து வேலை செய்கின்றன. மனித உடல் பரிணாமத்தால் வந்திருக்கவே முடியாது!” இதை 16 வயது ஹாலி ஒப்புக்கொள்கிறாள். அவள், இப்படி சொன்னாள்: “எனக்கு சர்க்கரை வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, உடல் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. உதாரணமாக, வயிற்றின் பின்பகுதியில் பதுங்கியிருக்கும் சின்னஞ்சிறு உறுப்பான கணையத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். இரத்தத்தையும் மற்ற உறுப்புகளையும் தொடர்ந்து செயல்பட வைப்பதற்காக இது செய்யும் வேலையைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன்.”
மற்ற இளைஞர்களோ இந்தக் கேள்வியை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள். உதாரணமாக, 19 வயது ஜாரட் இப்படிச் சொல்கிறான்: “கடவுளை வணங்கும் திறனோடும், தேவையோடும் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். அதோடு, அழகை ரசிக்கும் திறனும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும், நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு மாபெரும் அத்தாட்சியாக இருக்கின்றன. நாம் உயிர்வாழ இவையெல்லாம் தேவையில்லை என பரிணாமம் நம்மை நம்ப வைக்க முயலுகிறது. வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழவேண்டும் என்று விரும்புகிற ஒருவரால் நாம் இங்கு வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற விளக்கம்தான் எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.” ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட டைலர் இதேபோன்ற முடிவுக்குத்தான் வந்தான். “உயிர் இந்தப் பூமியில் தொடர்வதற்காக தாவரங்கள் செய்யும் வேலைகளையும் திணறவைக்கும் அவற்றின் சிக்கலான அமைப்பையும் சிந்தித்துப்பார்த்தது படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்று என்னை நம்பவைத்தது.”
நீங்கள் படைப்பைக் குறித்து கவனமாக யோசித்துப் பார்த்து, உங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருந்தால் இவ்விஷயத்தைப் பற்றி பேசுவது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆகவே, சாம், ஹாலி, ஜாரட், டைலர் ஆகியோரைப்போல கடவுளின் அதிசயமான கைவண்ணங்களைப்பற்றி ஆராய கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள். பிறகு, அவை உங்களிடம் “சொல்வதை” கவனித்துக் “கேளுங்கள்.” கடவுள் இருக்கிறார் என்று மட்டுமல்ல, அவருடைய குணங்களும் “உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, . . . தெளிவாய்க் காணப்படும்” என்ற முடிவுக்கு அப்போஸ்தலன் பவுல் வந்தார். இந்த முடிவுக்கே நீங்களும் வருவீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.a
பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
கடவுளுடைய படைப்புகளை உன்னிப்பாக கவனிப்பது மட்டுமின்றி, பைபிள் இதைப்பற்றி உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதையும் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் படைப்பை பற்றி நீங்கள் தைரியமாக பேச முடியும். பைபிள் நேரடியாக சொல்லாத காரியங்களைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. சில உதாரணங்களை கவனிப்போம்.
◼ இந்தப் பூமியும் சூரிய மண்டலமும் கோடிக்கணக்கான வருடங்களாக இருக்கின்றன என்று என்னுடைய அறிவியல் பாடப்புத்தகம் சொல்கிறது. பூமி, சூரிய மண்டலம் ஆகியவற்றின் வயதைப்பற்றி பைபிள் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், உண்மையில் முதலாம் படைப்பு “நாள்” ஆரம்பிப்பதற்கு முன்னால் கோடானகோடி வருடங்களாக இப்பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்ற கருத்து பைபிள் பதிவோடு ஒத்துப்போகிறது.—ஆதியாகமம் 1:1, 2.
◼ வெறுமனே ஆறு நாட்களில் இந்தப் பூமி படைக்கப்பட்டிருக்க முடியாது என்று என்னுடைய ஆசிரியர் சொல்கிறார். வெறும் 24 மணிநேரம்கொண்ட ஆறு சிருஷ்டிப்பு “நாட்களில்” பூமி படைக்கப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை. கூடுதல் தகவலுக்கு, இந்தப் பத்திரிகையின் 18-20 பக்கங்களைப் பார்க்கவும்.
◼ காலப்போக்கில் விலங்குகளும் மனிதர்களும் மாறியிருக்கிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்களை வகுப்பில் கலந்து பேசியிருக்கிறார்கள். ஜீவராசிகளை “அவ்வவற்றின் இனத்தின்படி” கடவுள் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:20, 21, பொது மொழிபெயர்ப்பு) உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தோன்றியது என்ற கருத்தை பைபிள் ஆதரிப்பதில்லை. கடவுள் ஒரேவொரு அணுவைப் படைத்துவிட்டு, அதிலிருந்து மற்ற உயிரினங்கள் பரிணமிக்கும்படி செய்தார் என்ற கருத்தையும் பைபிள் கற்பிப்பதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு “இனமும்” நிறைய ரகங்களை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ‘இனத்திற்குள்ளும்’ மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தை பைபிள் நிராகரிப்பதில்லை.
உங்களுடைய நம்பிக்கைகளில் உறுதியாயிருங்கள்!
நீங்கள் படைப்பை நம்புவதால் வெட்கப்பட வேண்டியதில்லை. புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளரால் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நம்புவது முற்றிலும் நியாயமானது, அறிவியல்பூர்வமானது என்பதையே அத்தாட்சிகள் காட்டுகின்றன. உண்மையை சொல்லப்போனால், படைப்பு அல்ல, பரிணாமம்தான் அறிவுப்பூர்வமான ஆதாரம் இல்லாத கோட்பாடு, அற்புதமான விஷயங்களை எல்லாம் அற்புதம் செய்பவர் இல்லாமலே வந்துவிட்டன என்று நம்பும்படி மக்களுக்கு கற்பிக்கிறது. உண்மையில், இந்த விழித்தெழு! பத்திரிகையின் மற்ற கட்டுரைகளை படித்தபிறகு, இருக்கும் அத்தாட்சிகள் படைப்பையே ஆதரிக்கின்றன என்பதை நீங்கள் நம்புவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. உங்களுடைய பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி இந்த விஷயத்தை கவனமாக ஆராய்ந்தபிறகு வகுப்பறையில் படைப்பைப்பற்றி தைரியமாக உங்களால் பேச முடியும்.
அதைத்தான் முன்னாள் குறிப்பிடப்பட்ட ராகெலும் செய்தாள். அவள் இப்படிச் சொல்கிறாள்: “என் நம்பிக்கைகளைப்பற்றி பேசாமல் இருக்கக்கூடாது என்பதை உணர எனக்கு ஒருசில நாட்கள் ஆனது. உயிர் எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தை டீச்சருக்குக் கொடுத்தேன்; எதையெல்லாம் அவருக்குக் காட்ட வேண்டுமென நினைத்தேனோ அங்கெல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, அது பரிணாமத்தைப்பற்றி முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்ததாக அவர் கூறினார்; பரிணாமத்தைப்பற்றி இனி சொல்லிக் கொடுக்கும்போது அதிலுள்ள தகவல்களை கவனத்தில் கொள்ளப்போவதாகவும் சொன்னார்!”
www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்
சிந்திப்பதற்கு
◼ படைப்பில் உங்களுக்கிருக்கும் நம்பிக்கையை பள்ளியில் சுலபமாக வெளிப்படுத்த என்னென்ன வழிகள் உள்ளன?
◼ எல்லாவற்றையும் படைத்தவருக்கு உங்கள் போற்றுதலை எவ்வாறு காட்டலாம்?—அப்போஸ்தலர் 17:26, 27.
[அடிக்குறிப்பு]
a உயிர் எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? மற்றும் உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) போன்ற புத்தகங்களில் உள்ள தகவல்களை மறுபார்வை செய்வதன்மூலம் அநேக இளைஞர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இவ்விரு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.
[பக்கம் 27-ன் பெட்டி]
“அத்தாட்சிகள் ஏராளம்”
“படைப்பாளரை நம்பும்படி சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிற ஓர் இளைஞனுக்கு பரிணாமத்தை நம்பும்படி பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அந்த இளைஞனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?” இந்தக் கேள்வி நுண்ணுயிரியல் வல்லுநராக இருக்கும் யெகோவாவின் சாட்சி ஒருவரிடம் கேட்கப்பட்டது. அவருடைய பதில் இதோ: “கடவுள் இருக்கிறார் என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுங்கள்—ஏதோ அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்காக படைப்பை நம்புவதைக் காட்டிலும் அத்தாட்சிகளை நீங்களே ஆராய்ந்து பார்த்து முடிவை எடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பாக இச்சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். சில சமயங்களில் பரிணாமத்தை ‘நிரூபிக்கும்படி’ ஆசிரியர்களிடம் கேட்டபோது, அவர்களால் நிரூபிக்க முடியவில்லை; அந்தக் கோட்பாடு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதனாலேயே அதை நம்புகிறார்கள் என்று அப்போது புரிந்துகொள்கிறார்கள். படைப்பாளரை நம்பும் உங்களுக்கும் இது நடக்க வாய்ப்புண்டு. அதனால் கடவுள் உண்மையில் இருக்கிறார் என்று உங்களுக்கு நீங்களே நிரூபித்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அத்தாட்சிகள் ஏராளம். அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமல்ல.”
[பக்கம் 28-ன் பெட்டி/படங்கள்]
உங்களை நம்பச் செய்வது எது?
படைப்பாளர் இருக்கிறார் என்று உங்களை நம்பச் செய்யும் மூன்று விஷயங்களை கீழே பட்டியலிடுங்கள்:
1. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
2. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
3. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
-
-
நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியமா?விழித்தெழு!—2006 | செப்டம்பர்
-
-
நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியமா?
வாழ்க்கைக்கு நோக்கம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை பரிணாமம் உண்மையாக இருந்தால் சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்த பின்வரும் கூற்று நிஜமாகிவிடும்: “வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. இதைத்தான் பரிணாமம் நமக்குக் கற்பிக்கிறது.”
அந்தக் கூற்றைக் குறித்துச் சற்று சிந்திக்கலாம். வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையென்றால், ஏதோ உயிரோடிருக்கும்வரை நல்லதைச் செய்துவிட்டு, உங்கள் மரபியல் பண்புகளை உங்கள் சந்ததிக்குக் கடத்திவிட்டு கடைசியில் இறப்பதே வாழ்க்கை என ஆகிவிடலாம். அப்படி இறந்த பின்னர் ஒன்றுமே இல்லாமல் போய்விடலாம். அப்படியென்றால், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும் பகுத்தறியவும் தியானிக்கவும் வல்ல மூளை தற்செயலாக உருவாகிவிட்டதா?
அதுமட்டுமல்ல, பரிணாமத்தை நம்புகிற அநேகர் கடவுள் இல்லை என்கிறார்கள், அல்லது கடவுள் இருந்தாலும் மனித விவகாரங்களில் அவர் தலையிடுவதில்லை என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அரசியல்வாதிகள், கல்விமான்கள், மதத்தலைவர்கள் ஆகியோரின் கைகளில்தான் நம் எதிர்காலம் இருக்கும். இத்தனை வருடங்களாக இவர்களால் குழப்பமும், சண்டைசச்சரவுகளும், ஊழலுமே ஏற்பட்டிருக்கின்றன. கடவுள் தலையிடப்போவதில்லை என்பது உண்மையானால், இந்நிலைமைகள் தொடர்கதையாவது உறுதி. ஒருவேளை, பரிணாமம் உண்மையாக இருந்தால், “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற அர்த்தமற்ற நம்பிக்கையில் வாழ்வது சரியாகவே தோன்றும்.—1 கொரிந்தியர் 15:31.
மேற்குறிப்பிடப்பட்ட கருத்துகளையோ, அவற்றுக்கு அடிப்படையாக இருக்கிற பரிணாமக் கோட்பாட்டையோ, யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நீங்கள் தாராளமாக நம்பலாம். பைபிள் சொல்வதையே அவர்கள் உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள். (யோவான் 17:17) எனவே, நாம் உருவான விதத்தைப் பற்றி பின்வருமாறு பைபிள் சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்: “ஜீவஊற்று உம்மிடத்தில் [கடவுளிடத்தில்] இருக்கிறது.” (சங்கீதம் 36:9) அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை.
நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கவே இருக்கிறது. நம் படைப்பாளர், தம்முடைய விருப்பத்திற்கு இசைய வாழ விரும்புகிற அனைவருக்கும் ஒரு நல்ல நோக்கத்தை வைத்திருக்கிறார். (பிரசங்கி 12:13) அந்த நோக்கம், குழப்பங்களோ, சண்டைகளோ, ஊழல்களோ இல்லாத ஏன், சாவுகூட இல்லாத ஒரு வாழ்வை உட்படுத்துகிறது. (ஏசாயா 2:4; 25:6-8) கடவுளுடைய விருப்பத்தை அறிந்துகொண்டு அதன்படி நடப்பதே வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும், வேறு எதுவும் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரமுடியாது என்பதற்கு உலக முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் சான்றளிக்கிறார்கள்!—யோவான் 17:3.
நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். ஏனென்றால், அது உங்களது இன்றைய மகிழ்ச்சியான வாழ்க்கையை மாத்திரமல்ல, எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிக்கும். ஆனால் தெரிவு உங்கள் கையில். நாம் இயற்கையில் காண்பவை அனைத்தும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு அத்தாட்சிகள் ஏராளமாக உள்ளன. இத்தகைய வடிவமைப்புகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத ஒரு கோட்பாட்டை நீங்கள் நம்புவீர்களா? அல்லது, பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் புத்திக்கூர்மையுள்ள ஒரு வடிவமைப்பாளருடைய, அதாவது, ‘சகலத்தையும் சிருஷ்டித்த’ யெகோவா தேவனுடைய கைவண்ணம் என்று பைபிள் சொல்வதை நம்புவீர்களா?—வெளிப்படுத்துதல் 4:11.
-