உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w22 ஜூன் பக். 26-28
  • அன்பும் கருணையும் நெஞ்சில் நிறையட்டும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பும் கருணையும் நெஞ்சில் நிறையட்டும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உங்கள் நாவில் “அன்பின் சட்டம்”
  • அன்பான செயல்கள் மற்றவர்களின் மனதைத் தூண்டும்
  • கடவுளைப் போலவே அன்பும் கருணையும் காட்டக் கற்றுக்கொள்ளுங்கள்
  • நாம் யாரிடம் அன்பாகவும் கருணையாகவும் நடந்துகொள்ள வேண்டும்?
  • பகைமை நிறைந்த உலகில் தயவு காட்ட பிரயாசப்படுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • கருணை​—சொல்லிலும் செயலிலும் காட்டப்படுகிற குணம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • கடவுளுடைய மக்கள் தயவை நேசிக்க வேண்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
w22 ஜூன் பக். 26-28
படங்களின் தொகுப்பு: 1. ஒரு இளம் சகோதரர் வயதான ஒரு சகோதரருக்கு பை நிறைய மளிகைப் பொருள்களைக் கொடுக்கிறார். 2. குடிமாறிப்போகும் ஒரு குடும்பத்துக்கு சாமான்களைக் கட்டிவைக்க ஒரு தம்பதி உதவுகிறார்கள். 3. இன்னொரு தம்பதி, ஒரு வயதான சகோதரியின் வீட்டுக்கு முன்னால் கிடக்கும் காய்ந்த இலைகளைக் கூட்டி சுத்தம் செய்கிறார்கள்.

அன்பும் கருணையும் நெஞ்சில் நிறையட்டும்

“சகோதர சகோதரிகள் காட்டுன அன்புதான் மத்த எல்லாத்தயும்விட என் மனச ரொம்ப தொட்டுச்சு” என்று லீசா சொல்கிறார்.a சத்தியத்திடம் அவரைக் கவர்ந்தது இந்த விஷயம்தான். ஆன் என்ற சகோதரியின் அனுபவமும் அதுதான். “யெகோவாவின் சாட்சிகள் சொல்லிக்கொடுத்த விஷயங்களவிட அவங்க காட்டுன அன்புதான் என்னை அவங்ககிட்ட சுண்டியிழுத்துச்சு” என்று அவர் சொல்கிறார். இந்த இரண்டு சகோதரிகளும் இப்போது பைபிளை வாசிக்கிறார்கள். அதைப் பற்றி ஆழமாக யோசிக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் செய்வதற்கு அவர்களைத் தூண்டியதே சகோதர சகோதரிகள் காட்டிய அன்புதான்.

மற்றவர்கள் மனதைத் தொடும் விதமாக நாம் எப்படி அன்பையும் கருணையையும் காட்டலாம்? நம்முடைய சொல்லிலும் செயலிலும் அதைக் காட்டலாம். இந்த இரண்டு விதங்களைப் பற்றி நாம் இப்போது விவரமாகப் பார்க்கலாம். அதோடு, யாரிடம் நாம் அன்பும் கருணையும் காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

உங்கள் நாவில் “அன்பின் சட்டம்”

திறமைசாலியான மனைவியைப் பற்றி நீதிமொழிகள் 31-ஆம் அதிகாரம் விவரிக்கும்போது, அவளுடைய நாவில் “அன்பின் சட்டம்” இருக்கும் என்று சொல்கிறது. (நீதி. 31:26) இந்த ‘சட்டத்தை’ மனதில் வைத்துதான் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை அவள் முடிவு செய்கிறாள். அப்பாக்களின் நாவிலும் இந்த “சட்டம்” இருப்பது ரொம்ப முக்கியம். கடுகடுவென்று பேசினால் பிள்ளைகளுடைய மனம் நொந்துபோய்விடும் என்று பொதுவாக எல்லா பெற்றோர்களுக்குமே தெரியும். பெற்றோர் அன்பாகப் பேசாமல் அதட்டிப் பேசிக்கொண்டே இருந்தால் பிள்ளைகள் அதைக் காதிலேயே வாங்க மாட்டார்கள். பிள்ளைகள் அம்மா-அப்பா பேச்சைக் கேட்டு நடக்க வேண்டுமென்றால் அவர்களிடம் அம்மா-அப்பா அன்பாகவும் கனிவாகவும் பேச வேண்டும்.

நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, எப்படி அன்பாகப் பேசக் கற்றுக்கொள்ளலாம்? நீதிமொழிகள் 31:26-ன் முதல் பாகத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. “அவளுடைய வாய் ஞானத்தை உதிர்க்கிறது” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், நாம் என்ன வார்த்தைகளை, எந்தத் தொனியில் சொல்லப்போகிறோம் என்பதை ஞானமாக தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். ‘நான் சொல்லப்போற விஷயம் கோபத்த கிளறுமா, இல்லனா கோபத்த தணிக்குமா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது. (நீதி. 15:1) அப்படியென்றால், நாம் பேசுவதற்கு முன்பு யோசிப்பது ரொம்ப முக்கியம்.

“யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்” என்று இன்னொரு நீதிமொழி சொல்கிறது. (நீதி. 12:18) நாம் என்ன சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்லப்போகிறோம் என்பது மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை மனதில் வைத்திருந்தால் நாம் ரொம்பக் கவனமாகப் பேசுவோம். ‘அன்பின் சட்டத்தின்படி’ நாம் பேசினோம் என்றால் நாம் பேசுகிற வார்த்தைகளும் சரி, நாம் பேசும் விதமும் சரி, மற்றவர்களுடைய மனதை நோகடிக்காது. (எபே. 4:31, 32) நாம் மற்றவர்களைப் பற்றித் தப்பாக யோசிக்க மாட்டோம். அவர்கள் மனதைக் காயப்படுத்துகிற விதமாகப் பேச மாட்டோம். அதற்குப் பதிலாக, அவர்கள் மனதுக்கு இதமாக இருக்கும் விதமாக, தட்டிக் கொடுக்கும் விதமாக, அன்பாகப் பேசுவோம். இந்த விஷயத்தில் யெகோவா ஒரு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார். எலியா தீர்க்கதரிசி பயந்துபோய் இருந்தபோது அவரை யெகோவா தைரியப்படுத்தினார். யெகோவாவின் தூதர் ‘அமைதியான, மென்மையான குரலில்’ பேசினார் என்று பைபிள் சொல்கிறது. (1 ரா. 19:12) ஆனால், நாம் அன்புள்ளவர்களாக இருப்பதற்கு அன்பாகப் பேசினால் மட்டும் போதாது, அன்பான செயல்களை செய்யவும் வேண்டும். எப்படி?

அன்பான செயல்கள் மற்றவர்களின் மனதைத் தூண்டும்

அன்பையும் கருணையையும் பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் நாம் காட்டும்போது யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்ற முடியும். (எபே. 4:32; 5:1, 2) யெகோவாவின் சாட்சிகள் காட்டிய அன்பையும் கருணையையும் பற்றி முன்பு நாம் பார்த்த லீசா சொல்கிறார். “திடீர்னு நாங்க வீட்ட காலி பண்ண வேண்டிய சூழ்நிலை வந்துச்சு. அப்போ சபையில இருந்த ரெண்டு தம்பதிதான் அவங்க வேலைக்கு லீவ் போட்டுட்டு வந்து எங்களோட சாமான்கள எல்லாம் கட்டிவெக்க உதவி பண்ணுனாங்க. இத்தனைக்கும் அந்த சமயத்துல நான் பைபிள் படிப்ப ஆரம்பிக்ககூட இல்ல” என்று லீசா சொல்கிறார். இப்படி சாட்சிகள் காட்டிய அன்பும் கருணையும்தான் சத்தியத்தை இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு லீசாவைத் தூண்டியது.

ஆரம்பத்தில் நாம் பார்த்த ஆன் என்ற சகோதரியும் யெகோவாவின் சாட்சிகள் தனக்குக் காட்டிய அன்புக்காகவும் கருணைக்காகவும் ரொம்ப நன்றியோடு இருக்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “பொதுவா உலகத்துல யாரும் அன்பு காட்டறதில்ல. அதனால, எல்லார் மேலயும் நான் சந்தேகப்பட்டேன். மத்தவங்கள நம்பறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. யெகோவாவின் சாட்சிகள சந்திச்சப்போ அவங்களையும் நான் சந்தேகப்பட்டேன். அவங்க எதுக்காக என்மேல அக்கறை காட்டுறாங்கன்னு யோசிச்சேன். ஆனா, எனக்கு பைபிள சொல்லிக்கொடுத்தவங்க என்மேல உண்மையான அன்ப காட்டுனாங்க. அதனால, அவங்கமேல எனக்கு நம்பிக்கை வந்துச்சு. அதுக்கு அப்பறம்தான் படிச்ச விஷயங்கள பத்தி நான் ரொம்ப கவனமா யோசிச்சு பாக்க ஆரம்பிச்சேன்.”

சபையில் இருந்தவர்கள் காட்டிய அன்பையும் கருணையும் பார்த்தபோதுதான் சத்தியத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை லீசாவுக்கும் ஆனுக்கும் வந்தது. அந்தளவுக்கு அது அவர்களுடைய மனதைத் தொட்டது, மூடியிருந்த அவர்களுடைய இதயக் கதவைத் திறந்துவிட்டது.

கடவுளைப் போலவே அன்பும் கருணையும் காட்டக் கற்றுக்கொள்ளுங்கள்

சில கலாச்சாரங்களில் மற்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதும் அவர்களிடம் அன்பாகப் பேசுவதும் ஒரு பழக்கமாகவே இருக்கிறது. வேறு சிலருக்கு இது அவர்களுடைய சுபாவமாக இருக்கிறது. இது எல்லாமே பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால், கலாச்சாரத்தாலோ சுபாவத்தாலோ மட்டும் நாம் அன்பும் கருணையும் காட்டினோம் என்றால், கடவுளைப்போல் அன்பும் கருணையும் காட்டுகிறோம் என்று சொல்ல முடியாது.—அப்போஸ்தலர் 28:2-ஐ ஒப்பிடவும்.

ஏனென்றால், அப்படிப்பட்ட உண்மையான அன்பும் கருணையும், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள். (கலா. 5:22, 23) அதனால், கடவுளுடைய சக்தி நம் யோசனைகளையும் செயல்களையும் செதுக்கி சீராக்குவதற்கு நாம் அனுமதிக்கிறபோதுதான் இந்தக் குணங்களை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். அப்போது, யெகோவாவையும் இயேசுவையும்போல் அன்பும் கருணையும் காட்ட முடியும். அதோடு, கிறிஸ்தவர்களாகிய நாம் யெகோவாமேல் மட்டுமல்ல, மற்றவர்கள்மேலும் அன்பு வைத்திருக்கிறோம். அதனால், அவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டுகிறோம். இந்த அன்பாலும் அக்கறையாலும் கருணை நம்முடைய மனதிலிருந்து சுரக்கிறது, யெகோவாவுக்குப் பிரியமான சக்திவாய்ந்த குணமாகவும் இருக்கிறது.

நாம் யாரிடம் அன்பாகவும் கருணையாகவும் நடந்துகொள்ள வேண்டும்?

நமக்குத் தெரிந்தவர்களிடம் அல்லது நம்மிடம் அன்பாக நடந்துகொள்பவர்களிடம் நாமும் அன்போடும் நன்றியோடும் நடந்துகொள்வது சுலபம்தான். (2 சா. 2:6; கொலோ. 3:15) ஆனால், ஒருவர் நம்முடைய அன்புக்குத் தகுதியே இல்லாதவர் என்று நாம் நினைக்கும்போது என்ன செய்யலாம்?

இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அளவில்லாத கருணை காட்டுவதில் யெகோவாதான் தலைசிறந்த உதாரணம். இந்தக் குணத்தைக் காட்டுவதைப் பற்றி அவருடைய வார்த்தை ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. “அளவற்ற கருணை” என்ற வார்த்தைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் நிறைய தடவை வருகின்றன. கடவுள் எப்படி நம்மேல் கருணை காட்டுகிறார்?

இதுவரை பூமியில் வாழ்ந்திருக்கிற கோடிக்கணக்கான மனிதர்களுக்கு யெகோவா கருணை காட்டியிருக்கிறார். உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களுக்கு அவர் கொடுத்துவருகிறார். (மத். 5:45) சொல்லப்போனால், யெகோவாவைப் பற்றி மனிதர்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பே அவர் அவர்களுக்குக் கருணை காட்டியிருக்கிறார். (எபே. 2:4, 5, 8) உதாரணத்துக்கு, எல்லா மனிதர்களுக்காகவும் தன்னுடைய ஒரே மகனையே மீட்புவிலையாகக் கொடுத்தார். ‘அவருடைய அளவற்ற கருணையால்தான்’ இந்த மீட்புவிலையை யெகோவா கொடுத்ததாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபே. 1:7) அதுமட்டுமல்ல, நாம் தவறுகள் செய்து யெகோவாவின் மனதை நோகடித்தாலும் அவர் தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறார், நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அவருடைய அறிவுரைகளும் வார்த்தைகளும் “[மழைத்] தூறல்போல்” இருக்கின்றன. (உபா. 32:2) அவர் காட்டுகிற அன்புக்கும் கருணைக்கும் நம்மால் கைமாறு செய்யவே முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவர் நம்மேல் அன்பும் கருணையும் காட்டவில்லை என்றால் நமக்கு எதிர்கால நம்பிக்கையே கிடைத்திருக்காது.—1 பேதுரு 1:13-ஐ ஒப்பிடவும்.

கண்டிப்பாகவே, யெகோவா காட்டுகிற அன்பும் கருணையும் நம்முடைய மனதைக் கவருகிறது, அவரைப் போலவே நடந்துகொள்ள நம்மைத் தூண்டுகிறது. அதனால், ஒருசிலரிடம் மட்டும் நாம் அன்பும் கருணையும் காட்டாமல் யெகோவாவைப் போலவே எல்லாரிடமும் எல்லா சமயத்திலும் இந்தக் குணங்களைக் காட்ட வேண்டும். (1 தெ. 5:15) நாம் எப்போதும் அன்பாகவும் கருணையாகவும் நடந்துகொள்ளும்போது, குளிருக்கு இதமாக இருக்கிற நெருப்பைப்போல் இருப்போம். நம்முடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள், சபையில் இருக்கிறவர்கள், கூட வேலை பார்க்கிறவர்கள், கூட படிக்கிறவர்கள், அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் என்று எல்லாருக்குமே நாம் ஆறுதலாக இருக்க முடியும்.

நீங்கள் அன்பாகப் பேசுவதும் நடந்துகொள்வதும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ சபையில் இருப்பவர்களுக்கோ எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, உங்கள் சபையில் இருக்கிற யாருக்காவது, வீட்டை சுத்தம் செய்வதற்கும் தோட்டத்தைப் பராமரிப்பதற்கும் உதவி தேவைப்படலாம். இல்லையென்றால், கடைக்குப் போய்விட்டு வரவோ மற்ற வேலைகளுக்கோ உதவி தேவைப்படலாம். அதுமட்டுமல்ல, ஊழியத்தில் நீங்கள் சந்திக்கிற யாருக்காவதுகூட உதவி தேவைப்படலாம். அவர்களுக்கும் நீங்கள் ஏதாவது ஒரு விதத்தில் உதவ முடியுமா?

நாம் யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள வேண்டுமென்றால், நம் வார்த்தைகளும் செயல்களும் எப்போதுமே ‘அன்பின் சட்டத்தின்’ அடிப்படையில் இருக்க வேண்டும்.

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்