“சபை நடுவில்” யெகோவாவை துதியுங்கள்
தம்முடைய மக்களை ஆவிக்குரிய விதத்தில் ஆரோக்கியமாய் வைப்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுதான் கிறிஸ்தவ கூட்டங்கள். கூட்டங்களுக்கு ஒழுங்காக வருவதால் யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு போற்றுதலை காட்டுகிறோம். அதுமட்டுமா, நம் சகோதரர்களை ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவவும்’ நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது; ஒருவரிடம் ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட இது முக்கிய வழியாகும். (எபிரெயர் 10:24; யோவான் 13:35) ஆனால், கூட்டங்களில் நம் சகோதரர்களை எப்படி ஏவலாம்?
வெளிப்படையாக அறிக்கை செய்யுங்கள்
அரசனாகிய தாவீது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதிப்பேன். மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்.” “மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.” “மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன்.”—சங்கீதம் 22:22, 25; 35:18; 40:9.
அப்போஸ்தலன் பவுலின் காலத்திலிருந்த கிறிஸ்தவர்களும் வணக்கத்திற்காக ஒன்றுகூடி வந்தபோது, யெகோவாவின் பேரில் தங்களுக்கிருந்த விசுவாசத்தை பற்றியும் அவருடைய மகிமையை பற்றியும் இந்த விதமாகவே அறிக்கை செய்தார்கள். இவ்வாறு, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவினார்கள். தாவீதுக்கும் பவுலுக்கும் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து நம்முடைய காலத்தில், யெகோவாவின் “நாளானது சமீபித்து வருகிறதை” நாம் உண்மையில் காண்கிறோம். (எபிரெயர் 10:24, 25) சாத்தானின் ஒழுங்குமுறை தள்ளாடிக் கொண்டே அழிவை நோக்கி செல்கிறது, பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. முன்பு இருந்ததைவிட இப்போது நமக்கு “சகிப்புத்தன்மை அவசியமாயிருக்கிறது.” (எபிரெயர் 10:36, NW) நம் சகோதரர்களை தவிர வேறு யாரால் சகித்திருக்கும்படி நம்மை உற்சாகப்படுத்த முடியும்?
முற்காலங்களில் இருந்ததைப் போலவே இன்றும், விசுவாசிகள் ஒவ்வொருவரும் “சபை நடுவில்” தங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்ய ஏற்பாடுகள் உள்ளன. சபை கூட்டங்களில் சபையாரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பம் அனைவருக்கும் இருப்பது அதில் ஒரு வழியாகும். பதில் சொல்வதில் அப்படி என்ன நன்மை இருக்கப்போகிறது என்று எண்ணி விடாதீர்கள். உதாரணமாக, பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது அல்லது தவிர்ப்பது என்பதை விளக்கும் பதில்கள், பைபிள் நியமங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நம் சகோதரர்களின் தீர்மானத்தை பலப்படுத்தும். மேற்கோள் காட்டப்படாமல் வெறுமனே குறிப்பிடப்பட்ட வசனங்களை விளக்கும் பதில்கள் அல்லது தனிப்பட்ட ஆராய்ச்சியில் கண்டறிந்த விஷயங்களை சேர்த்து சொல்லும் பதில்கள், இன்னும் நல்ல படிப்பு பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலை மற்றவர்களில் தூண்டலாம்.
கூட்டங்களில் பதில் சொல்வதால் நாமும் பயனடைவோம் மற்றவர்களும் பயனடைவார்கள் என்பதை அறிவது, கூச்ச சுபாவத்தை ஒதுக்கித்தள்ள யெகோவாவின் சாட்சிகள் அனைவரையும் தூண்ட வேண்டும். மூப்பர்களும் உதவி ஊழியர்களும் கூட்டங்களில் பதில் சொல்ல வேண்டியது அதிமுக்கியம். ஏனெனில், கூட்டங்களுக்கு வருவதிலும் பதில் சொல்வதிலும் முன்னின்று வழிநடத்தும்படி அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், கிறிஸ்தவ சேவையின் இந்த அம்சம் கடினமாய் இருப்பதாக ஒருவர் நினைத்தால் அவர் எவ்வாறு முன்னேற்றம் செய்யலாம்?
முன்னேறுவதற்கு ஆலோசனைகள்
இது, யெகோவாவின் வணக்கத்தில் ஒரு பாகம் என்பதை நினைவில் வையுங்கள். ஜெர்மனியில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ சகோதரி தனது பதில்களை எவ்வாறு கருதுகிறார் என விளக்குகிறார்: “கடவுளுடைய மக்கள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி கூறுவதை தடுக்க சாத்தான் எடுக்கும் முயற்சிகளுக்கு நான் கொடுக்கும் பதிலடிகளே இவை.” அதே சபையைச் சேர்ந்த புதிதாக முழுக்காட்டப்பட்ட ஒரு சகோதரர், “பதில் சொல்வதைப் பற்றி நான் அடிக்கடி ஜெபிப்பேன்” என்று கூறுகிறார்.
நன்கு தயாரியுங்கள். விஷயத்தை முன்கூட்டியே படித்து வர தவறினால் பதில் சொல்வது கடினமாக இருக்கும், அவ்வாறு சொல்லும் பதில்களும் மற்றவர்களுக்கு அவ்வளவாக பயனளிக்காது. தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகம் பக்கம் 70-ல், சபை கூட்டங்களில் பதில் சொல்வது பற்றிய ஆலோசனைகள் உள்ளன.a
ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு பதிலாவது சொல்ல வேண்டும் என்ற இலக்கை வையுங்கள். அப்படியென்றால், நீங்கள் பல பதில்களை தயாரித்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் பல முறை கைகளை உயர்த்தினால், கூட்டத்தை நடத்துபவர் பதில் சொல்லும்படி உங்களிடம் கேட்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். எந்தெந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராய் இருக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே அவரிடம் சொல்லிவிடவும் நீங்கள் விரும்பலாம். புதிதாக பதில்சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால் இது அதிக உதவியாக இருக்கலாம். “மகா சபையிலே” பதில் சொல்வதற்காக கைகளை உயர்த்துவது கடினமாக இருக்கலாம் என்பதால், பதில் சொல்வதற்காக நீங்கள் தயாரித்து வந்திருக்கும் பாரா சிந்திக்கப்படுகிறது என்பதையும் நடத்துபவர் நீங்கள் கையை உயர்த்தியிருக்கிறீர்களா என பார்ப்பார் என்பதையும் அறிந்திருப்பது பதில்சொல்ல உங்களை உற்சாகப்படுத்தலாம்.
ஆரம்பத்திலேயே பதில் சொல்லுங்கள். கடினமான ஒரு வேலையை வெறுமனே தள்ளிப்போடுவதால் அது சுலபமாகிவிடாது. கூட்டத்தின் ஆரம்பத்திலேயே பதில் சொல்வது உதவியாக இருக்கலாம். எப்படியெனில், தடைகளை தாண்டி அந்த முதல் பதிலை சொல்லிவிட்டால் போதும், இரண்டாவது அல்லது மூன்றாவது பதில்களை சொல்வது எவ்வளவு சுலபம் என்பதைக் கண்டு நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
பொருத்தமான இடத்தில் அமருங்கள். ராஜ்ய மன்றத்தின் முன் வரிசைகளில் அமர்ந்தால் பதில் சொல்வது சுலபமாய் இருப்பதாக சிலர் காண்கிறார்கள். அங்கே அமர்ந்தால் கவனச்சிதறல்களும் குறையும், கூட்டத்தை நடத்துபவர் உங்கள் கையை கவனியாமல் போவதற்கான வாய்ப்புகளும் குறையும். அவ்வாறு முன்வரிசையில் அமர நினைத்தால் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் சப்தமாக பேச வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். முக்கியமாக, உங்கள் சபையில் பதில் சொல்பவர்களுக்கு மைக் தரப்படாவிட்டால் இது மிகவும் அவசியமாகும்.
கவனமாக கேளுங்கள். வேறு ஒருவர் கூறி முடித்த பதிலையே நீங்களும் சொல்லாமலிருக்க இது உங்களுக்கு உதவும். மேலுமாக, மற்றவர்கள் கூறும் பதில்கள் ஒரு வேதவசனத்தை அல்லது அதோடு சம்பந்தப்பட்ட கூடுதலான தகவலை உங்களுக்கு நினைப்பூட்டலாம். எப்போதாவது ஒருமுறை சிறிய அனுபவம் ஒன்றை கூறுவது, கலந்துபேசும் பொருளை நன்றாக விளக்கலாம். அப்படிப்பட்ட பதில்கள் மிகவும் பிரயோஜனமானவை.
சொந்த வார்த்தைகளில் பதில்சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். படிக்கும் பிரசுரத்திலிருந்து பதிலை வாசித்தால் சரியான பதிலை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்; பதில்கள் சொல்ல ஆரம்பிப்பதற்கு இது ஒரு நல்ல வழியும்கூட. ஆனால், உங்கள் சொந்த வார்த்தைகளில் பதில்சொல்லும் அளவிற்கு முன்னேறினால் அந்த விஷயத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதை காண்பிக்கும். நம் பிரசுரங்களில் உள்ள அதே வார்த்தைகளை வாசிக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் பிரசுரங்கள் கூறுவதை யெகோவாவின் சாட்சிகள் அப்படியே ஒப்பிப்பது கிடையாது.
சம்பந்தப்பட்ட பதில்களையே கூறுங்கள். பொருளோடு சம்பந்தப்படாத அல்லது சிந்திக்கப்படும் முக்கிய விஷயங்களிலிருந்து கவனத்தை திசைதிருப்புகிற பதில்கள் பொருத்தமற்றவை. அதாவது, உங்கள் பதில்கள் கலந்துபேசப்படும் விஷயத்தோடு தொடர்புடையவையாக இருக்க வேண்டும். அப்போதுதான், சிந்திக்கப்படுகிற விஷயத்தைப் பற்றிய கட்டியெழுப்பும் ஆவிக்குரிய கலந்துரையாடல் உங்கள் பதிலால் இன்னும் அதிகம் மெருகூட்டப்படும்.
உற்சாகப்படுத்த முயலுங்கள். பதில்சொல்வதன் ஒரு முக்கிய நோக்கம் மற்றவர்களை உற்சாகப்படுத்துவது என்பதால் அவர்களை உற்சாகமிழக்க வைக்கும் விஷயங்களை சொல்லாமலிருக்க முயல்வது சிறந்தது. அதுமட்டுமல்ல, மற்றவர்கள் சொல்வதற்கு எதையுமே விட்டு வைக்காமல் முழு பாராவையும் உங்கள் பதிலில் சொல்லிவிடாதீர்கள். நீளமான அல்லது சிக்கலான பதில்கள் கூறினால், சொல்லப்பட்டதன் அர்த்தம் தெளிவாக இருக்காது. ரத்தினச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் பதில்கள் சொல்வது அதிக பயனுள்ளது; தாங்கள் தயாரித்த சுருக்கமான பதில்களைக் கூற புதியவர்களையும் அது உற்சாகப்படுத்தும்.
கூட்டங்களை நடத்துபவர்களின் பங்கு
உற்சாகப்படுத்துவது என்று வருகையில், கூட்டத்தை நடத்துபவருக்கு அதிக பொறுப்பு உள்ளது. கவனமாக செவிகொடுப்பதன் மூலம் சொல்லப்படும் ஒவ்வொரு பதிலிலும் அவர் உண்மையான அக்கறை காட்டுகிறார். அதோடு, வேறு காரியங்களில் மூழ்கிவிடுவதற்கு மாறாக பதில் சொல்பவரை கண்ணியத்தோடு பார்க்கிறார். அவர் கவனமாக கேட்காததன் விளைவாக, சொல்லப்பட்டதையே தேவையின்றி திரும்ப சொல்வது அல்லது பதில்சொல்லி முடித்த கேள்வியையே மறுபடியும் கேட்பது எவ்வளவு பொருத்தமற்றதாக இருக்கும்!
கூட்டத்தை நடத்துபவர், சொல்லி முடித்த பதிலையே கொஞ்சம் வித்தியாசமான வார்த்தைகளில் திரும்பத் திரும்ப சொல்லும் பழக்கமுள்ளவராக இருந்தால் அதுவும் உற்சாகமிழக்க செய்யலாம். ஏனெனில், சொல்லப்பட்ட பதில் ஏதோவொரு விதத்தில் குறைவுபடுகிறது என்ற கருத்தையே அது கொடுக்கும். மறுபட்சத்தில், விசேஷித்த ஒரு குறிப்பைப் பற்றி மேலும் கலந்துபேச உதவும் வண்ணம் பதில்களை வரவழைப்பது எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருக்கும்! ‘இதை நம்முடைய சபையில் எவ்வாறு பொருத்தலாம்?’ அல்லது ‘பாராவிலுள்ள எந்த வசனம் இப்போது சொன்ன குறிப்பை ஆதரிக்கிறது?’ போன்ற கேள்விகள் உற்சாகமூட்டும் பதில்களை வரவழைக்கும். இதனால் சபைக்கு அதிக நன்மை கிடைக்கும்.
புதியவர்கள் அல்லது கூச்ச சுபாவமுடையவர்கள் பதில் சொல்கையில் அவர்களை பாராட்ட மறந்துவிடக் கூடாது. தர்மசங்கடமான சூழ்நிலை எழக்கூடும் என்பதால் படிப்பு முடிந்த பிறகு அவர்களை தனியாக சந்தித்து இதை செய்யலாம். பொருத்தமான சமயத்தில் ஆலோசனைகளை வழங்கவும் இது கண்காணிக்கு வாய்ப்பை அளிக்கும்.
அன்றாடம் பேசுகையிலும்கூட ஒருவரே அதிகம் பேசிக்கொண்டிருந்தால் மற்றவர்கள் வாயை திறக்கமாட்டார்கள். தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என அவர்கள் உணருவார்கள். அப்படியே அவர்கள் செவிகொடுத்தாலும் அரைமனதோடுதான் கேட்பார்கள். நடத்துபவர் அதிக குறிப்புகளை சொல்வதன் மூலம் அவரே அதிகம் பேசிக்கொண்டிருந்தாலும் அதேபோல் நடக்கலாம். என்றாலும், கூடியிருப்போரை பதில்சொல்ல வைக்கவும் அந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்க வைக்கவும் நடத்துபவர் அவ்வப்போது கூடுதலான கேள்விகளை கேட்கலாம். அப்படிப்பட்ட கேள்விகளை ஏராளமாக கேட்பது நல்லதல்ல.
நடத்துபவர், கையை உயர்த்துகிற முதல் நபரிடம் கேட்டுவிடமாட்டார். அவ்வாறு செய்தால், தங்கள் கருத்துக்களை ஒழுங்குபடுத்த கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்பவர்களுக்கு அதிக ஏமாற்றமளிக்கலாம். கொஞ்ச நேரம் காத்திருப்பதன் மூலம், பதில்சொல்லாத ஒருவருக்கு பதிலளிக்க வாய்ப்பு கொடுப்பார். சிறுவர்களுக்கு புரிந்துகொள்ள கடினமாயிருக்கும் விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி அவர்களிடம் கேட்கமாட்டார். இவ்வாறு பகுத்துணர்வை காட்டுவார்.
ஒருவர் தவறான பதிலை சொல்லிவிட்டால் என்ன செய்வது? பதில்சொன்னவர் சங்கோஜப்படும்படி நடத்துபவர் எதுவும் செய்துவிடக்கூடாது. தவறான பதிலாக இருந்தாலும் அதில் எப்போதுமே கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து சரியான விஷயத்தை சாதுரியமாக தெரிவுசெய்வது, கேள்வியை வேறு விதமாக கேட்பது அல்லது மற்றொரு கேள்வியை கேட்பது ஆகியவற்றின் மூலம் தேவையின்றி தர்மசங்கடத்தை ஏற்படுத்தாமல் நடத்துபவர் சரியான பதிலை வரவழைக்கலாம்.
பதில்சொல்வதை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக, ‘வேறு யாராவது பதில்சொல்ல விரும்புகிறீர்களா?’ போன்ற பொதுவான கேள்விகள் கேட்பதை தவிர்ப்பது நல்லது. ‘இன்னும் பதில் சொல்லாதவர்கள் யார்? இதுதான் உங்களுக்கு கடைசி சந்தர்ப்பம்!’ என்ற கேள்வி நல்ல நோக்கத்தோடு கேட்கப்படலாம், ஆனால் ஒருவர் மனந்திறந்து பதில்சொல்ல அது அவரை உற்சாகப்படுத்தாது. படிப்பின் ஆரம்பத்திலேயே பதில் சொல்லவில்லை என்பதற்காக சகோதரர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தக்கூடாது. மாறாக, அவர்கள் அறிந்ததை பகிர்ந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்த வேண்டும். ஏனெனில், அவ்வாறு பகிர்ந்துகொள்வது அன்பின் வெளிக்காட்டாகும். அதுமட்டுமல்ல, பதில்சொல்லும்படி ஒருவரிடம் கேட்டுவிட்டு, “அவருக்கு பின் இன்னார் சொல்லும் பதில்களை கேட்கலாம்” என்று சொல்வதையும் நடத்துபவர் தவிர்ப்பது நல்லது. முதலில் சொல்லப்படும் பதிலை கேட்ட பிறகே மற்றொரு பதில் தேவையா என்பதை நடத்துபவர் தீர்மானிக்க வேண்டும்.
பதில்சொல்வது ஒரு சிலாக்கியமே
கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வது ஆவிக்குரிய கருத்தில் கட்டாயமானது; அதில் பதில்சொல்வது ஒரு சிலாக்கியமே. “சபை நடுவில்” யெகோவாவை துதிப்பதற்கான இந்த விசேஷித்த அம்சத்தில் நாம் எவ்வளவு அதிகமாக பங்குகொள்கிறோமோ அவ்வளவு அதிகமாக தாவீதின் முன்மாதிரியை கடைப்பிடிக்கிறோம், பவுலின் ஆலோசனையையும் பின்பற்றுகிறோம். கூட்டங்களில் பங்குகொள்கையில், நம் சகோதரர்களை நேசிப்பதையும் யெகோவாவின் பெரிய சபையின் பாகமாக இருப்பதையும் நிரூபிக்கிறோம். “நாளானது சமீபித்து வருகிறதை” பார்க்கையில் வேறு யார் மத்தியில்தான் இருக்க விரும்புவோம்?—எபிரெயர் 10:25.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்தது.
[பக்கம் 20-ன் படங்கள்]
கிறிஸ்தவ கூட்டங்களில் செவிகொடுப்பதும் பதில் சொல்வதும் முக்கியம்
[பக்கம் 21-ன் படம்]
சொல்லப்படும் ஒவ்வொரு பதிலிலும் நடத்துபவர் உண்மையான அக்கறை காட்டுகிறார்