உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lr அதி. 1 பக். 10-15
  • இயேசு எந்த விதத்தில் பெரிய போதகர்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு எந்த விதத்தில் பெரிய போதகர்?
  • பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இதே தகவல்
  • இயேசு, பெரிய போதகர்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • இயேசு கிறிஸ்து யார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • இயேசுவின் சீஷரானவர்கள்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • பெரிய போதகர் மற்றவர்களுக்காக வேலை செய்தார்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
மேலும் பார்க்க
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
lr அதி. 1 பக். 10-15

அதிகாரம் 1

இயேசு எந்த விதத்தில் பெரிய போதகர்?

இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்னால் மிகவும் முக்கியமான ஒருவர் பிறந்தார். இதுவரை அவரைப் போல் யாருமே வாழ்ந்தது இல்லை. அவருடைய காலத்தில் ப்ளேனும் இல்லை, காரும் இல்லை. டிவி, கம்ப்யூட்டர், இன்டர்நெட் எதுவுமே இல்லை.

அவருடைய பெயர்தான் இயேசு. வேறு யாருக்குமே அவரைப் போல அத்தனை அறிவு இருந்ததில்லை. யாருமே அவரைப் போல பிரமாதமாகக் கற்றுக்கொடுத்ததும் இல்லை. பெரிய பெரிய விஷயங்களைக்கூட மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லிக் கொடுத்தார்.

இயேசு எங்கெல்லாம் ஆட்களைப் பார்த்தாரோ அங்கெல்லாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். கடற்கரையிலும் படகுகளிலும் வீடுகளிலும் அவர்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லித் தந்தார். நடந்து போகும் போதுகூட அவர்களிடம் எதையாவது சொல்லிக் கொண்டேதான் போனார். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அந்தக் காலத்தில் கார் இல்லை. பஸ்ஸோ ரயிலோகூட இல்லை. அதனால் இயேசு நடந்தேபோய் எல்லாருக்கும் கற்றுக்கொடுத்தார்.

நாம் மற்றவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் மிகவும் முக்கியமான விஷயங்களை இயேசுவிடமிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். அவர்தான் பெரிய போதகர். அவர் சொன்ன நிறைய விஷயங்கள் பைபிளில் இருக்கிறது. பைபிளைப் படிக்கும்போதும் அதைக் கேட்கும்போதும் இயேசுவே நம்மிடம் நேரில் பேசுவதுபோல் இருக்கும்.

இயேசு ஏன் பெரிய போதகராக இருந்தார் தெரியுமா? ஒரு காரணம், அவரும் இன்னொரு போதகரிடமிருந்து கற்றுக்கொண்டார். கவனமாகக் கேட்பது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று அவருக்கு தெரியும். ஆனால் யாரிடமிருந்து அவர் கற்றுக்கொண்டார்? அவருடைய போதகர் யார்? உனக்குத் தெரியுமா?— அவருடைய போதகர் அவருடைய அப்பாதான். இயேசுவின் அப்பா யார் தெரியுமா? கடவுள்தான்.

இயேசு இந்தப் பூமிக்கு ஒரு மனிதனாக வருவதற்கு முன்பே பரலோகத்தில் கடவுளோடு வாழ்ந்து வந்தார். வேறு எந்த மனிதனும், பூமியில் பிறப்பதற்கு முன் பரலோகத்தில் வாழ்ந்தது இல்லை. ஆகவே மற்ற மனிதர்களிலிருந்து இயேசு ரொம்ப வித்தியாசமானவர். அவர் பரலோகத்தில் இருந்தபோது, அப்பா பேச்சுக்குக் கீழ்ப்படிந்து நல்ல பிள்ளையாக இருந்தார்; அவர் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டு நடந்தார். அதனால்தான் அவருடைய அப்பா கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களையும் அவரால் மனிதர்களுக்கு சொல்லித்தர முடிந்தது. நீயும் இயேசுவைப் போலவே நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்றால், உன் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும், சரியா?

இயேசு பெரிய போதகராக இருந்ததற்கு இன்னொரு காரணம், அவர் மனிதர்கள்மேல் பாசம் வைத்திருந்தார். கடவுளைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்யவும் விருப்பப்பட்டார். இயேசுவுக்கு பெரியவர்களை பிடித்திருந்தது, சின்னஞ்சிறு பிள்ளைகளையும் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சின்னப் பிள்ளைகளும் இயேசு கூடவே இருக்க ஆசைப்பட்டார்கள், ஏனென்றால் அவர்களோடு அவர் நன்றாக பேசினார், அது மட்டுமல்ல, அவர்கள் பேசுவதையும் கேட்டார்.

Jesus surrounded by children

சின்னப் பிள்ளைகள் ஏன் இயேசு கூடவே இருக்க ஆசைப்பட்டார்கள்?

ஒருநாள் என்ன நடந்தது தெரியுமா? சிலர் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆனால் சின்னப் பிள்ளைகளிடம் பேசுவதற்கெல்லாம் இயேசுவுக்கு நேரமில்லை என்று அவருடைய நண்பர்கள் நினைத்துவிட்டார்கள். அதனால் அங்கிருந்து போய்விடும்படி அவர்களிடம் சொன்னார்கள். ஆனால் இயேசு உடனே என்ன சொன்னார் தெரியுமா?— ‘சின்னப் பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று சொன்னார். இதிலிருந்து என்ன தெரிகிறது? சின்னப் பிள்ளைகள் தன்னிடம் வர வேண்டும் என்று இயேசு விரும்பியது தெரிகிறது இல்லையா? இயேசுவுக்கு எக்கச்சக்கமான அறிவு இருந்தது, அதுவும் அவர் சாதாரணமானவர் இல்லை, ரொம்ப முக்கியமானவர். இருந்தாலும் குட்டிப் பிள்ளைகளோடு நேரம் செலவிட்டு அவர்களுக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார்.—மாற்கு 10:13, 14.

இயேசு ஏன் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார், அவர்கள் பேசியதை ஏன் கேட்டார் என்றெல்லாம் உனக்குத் தெரியுமா? இதற்கு ஒரு காரணம், பரலோகத்திலிருக்கும் தன்னுடைய அப்பாவைப் பற்றி, அதாவது கடவுளைப் பற்றி அவர்களுக்கு சொல்லித்தந்து அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அதேபோல, நீ எப்படி மற்றவர்களை சந்தோஷப்படுத்த முடியும் என்று நினைக்கிறாய்?— கடவுளைப் பற்றி படிக்கும் விஷயங்களை மற்றவர்களுக்கு சொன்னால் நீயும் அவர்களை சந்தோஷப்படுத்த முடியும்.

இன்னொரு சந்தர்ப்பத்தில், இயேசு ஒரு சிறு பிள்ளையைக் காட்டி தன் நண்பர்களுக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். அந்தப் பிள்ளையை தன் நண்பர்களின் நடுவில் நிற்க வைத்தார். பிறகு, பெரியவர்களான அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு இனிமேல் அந்தப் பிள்ளையைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்.

A young child stands beside Jesus

வளர்ந்த பிள்ளைகளும் பெரியவர்களும் சின்னப் பிள்ளைகளிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

ஆனால் எந்த விதத்தில் பிள்ளையைப் போல் நடந்துகொள்ள வேண்டுமென்று இயேசு சொன்னார்? வளர்ந்த பிள்ளைகளும் சரி பெரியவர்களும் சரி, எப்படி சின்னப் பிள்ளைகளைப் போலாக வேண்டும் என்று உனக்குத் தெரியுமா?— சின்னப் பிள்ளைகளுக்கு பெரியவர்களைப் போல் நிறைய விஷயங்கள் தெரியாது, அதனால் அவற்றை கற்றுக்கொள்ள ஆர்வத்தோடு இருப்பார்கள். ஆகவே சிறு பிள்ளைகள்போல் தன் நண்பர்களும் மனத்தாழ்மையோடு கேட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொன்னார். உண்மையில் நாம் எல்லாருமே மற்றவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதேசமயத்தில், இயேசு என்ன கற்றுக்கொடுக்கிறார் என்பதுதான் முக்கியம், நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும்.—மத்தேயு 18:1-5.

இயேசு பெரிய போதகராக இருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்கள் ஆர்வமாகக் கேட்கும் விதத்தில் அவருக்கு பேசத் தெரிந்திருந்தது. விஷயங்களை அவர்கள் சுலபமாக புரிந்துகொள்ளும் விதத்தில் அவர் சாதாரண வார்த்தைகளில் பேசினார், தெளிவாக விளக்கிச் சொன்னார். கடவுளைப் பற்றி மனிதர்களுக்கு புரிய வைப்பதற்காக பறவைகளைப் பற்றியும், பூக்களைப் பற்றியும், அவர்களுக்கு தெரிந்த மற்ற சாதாரண பொருட்களைப் பற்றியும் பேசினார்.

ஒருநாள் இயேசு ஒரு மலைப்பகுதியில் இருந்தபோது நிறைய பேர் அவரைப் பார்க்க வந்தார்கள். இயேசு அங்கே உட்கார்ந்து, அவர்களுக்கு பிரசங்கித்தார், அதாவது ஒரு பேச்சு கொடுத்தார். அதைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். அந்தப் பேச்சைத்தான் மலைப்பிரசங்கம் என்று சொல்கிறோம். அப்போது அவர் இப்படி சொன்னார்: ‘மேலே பறக்கிற பறவைகளைப் பாருங்கள். அவை விதை விதைக்கிறதில்லை. வீடுகளில் உணவை சேர்த்து வைப்பதும் இல்லை. ஆனால் பரலோகத்தில் உள்ள கடவுள் அவற்றிற்கு உணவு தருகிறார். அந்தப் பறவைகளை விட நீங்கள் உயர்ந்தவர்கள் அல்லவா?’

Jesus directs people’s attention to the birds in the sky

பறவைகளைப் பற்றியும் பூக்களைப் பற்றியும் இயேசு பேசியபோது என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தார்?

இப்படி பறவைகளைப் பற்றி மட்டுமல்ல, பூக்களைப் பற்றியும் இயேசு பேசினார். ‘பூக்களைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேலை செய்யாமலேயே அவை பூக்கின்றன. பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன! பெரிய பணக்காரராகிய சாலொமோன் ராஜாகூட இந்தப் பூக்களைப் போல் அழகாக உடை அணியவில்லை. ஆகவே பூக்களையே கடவுள் கவனித்துக் கொள்கிறார் என்றால், உங்களை கவனிக்காமல் இருந்துவிடுவாரா?’ என்று அவர் சொன்னார்.—மத்தேயு 6:25-33.

இந்த உதாரணங்களிலிருந்து இயேசு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தார் என்று உனக்குப் புரிகிறதா?— சாப்பாட்டிற்கு என்ன செய்வோம், துணிமணிக்கு எங்கே போவோம் என்றெல்லாம் நினைத்து நாம் கவலைப்படக் கூடாது என்று கற்றுக்கொடுத்தார். இதெல்லாம் நமக்கு தேவை என்று கடவுளுக்கே தெரியும் என்று சொன்னார். அதேசமயத்தில் சாப்பாட்டிற்காகவும் துணிமணிக்காகவும் நாம் வேலையே செய்ய வேண்டியதில்லை என்று அவர் சொல்லவில்லை. கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றுதான் அவர் சொன்னார். நாம் அப்படி செய்தால், சாப்பிடுவதற்கு சாப்பாடும் போட்டுக்கொள்வதற்கு துணிமணியும் நமக்கு கிடைக்க கடவுள் வழிசெய்வார். இதை உன்னால் நம்ப முடிகிறதா?—

இயேசு பேசி முடித்தவுடன் அங்கிருந்தவர்களுக்கு எப்படி இருந்தது தெரியுமா?— பிரமாதமாக கற்றுக் கொடுக்கிறாரே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனதாக பைபிள் சொல்கிறது. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவர் சொன்ன விஷயங்கள், சரியானதை செய்ய அந்த ஜனங்களுக்கு உதவின.—மத்தேயு 7:29.

ஆகவே இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது மிக மிக முக்கியம். எப்படி அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று உனக்குத் தெரியுமா?— அவர் சொன்ன விஷயங்களெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அது எந்தப் புத்தகம் சொல் பார்க்கலாம்— அதுதான் பரிசுத்த பைபிள். ஆகவே பைபிளில் உள்ள விஷயங்களைப் படித்து அதன்படி நடந்தால் நாம் இயேசு சொல்வதைக் கேட்கிறோம் என்று அர்த்தம். அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமென்று கடவுளே நமக்குச் சொல்லியிருக்கிறார். அந்த அருமையான சம்பவத்தை பற்றி பைபிள் சொல்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

ஒருநாள் இயேசு தன்னுடைய நண்பர்கள் மூன்று பேரை ஒரு மலைமேல் கூட்டிக்கொண்டு போனார். அவர்களுடைய பெயர் யாக்கோபு, யோவான், பேதுரு. அவர்களைப் பற்றி நிறைய விஷயங்களை பிறகு படிப்போம்; ஏனென்றால் அவர்கள் மூன்று பேருமே இயேசுவின் நெருங்கிய நண்பர்கள். அவர்களை இயேசு மலைமேல் கூட்டிக்கொண்டு போனபோது, இயேசுவின் முகம் பளபளவென்று ஜொலிக்க ஆரம்பித்தது. இந்தப் படத்தில் தெரிகிற மாதிரி, அவர் போட்டிருந்த துணியும் பிரகாசமாக மின்னியது.

The transfiguration with Jesus, Peter, James, and John

‘இதுதான் என் மகன் . . . இவர் சொல்வதைக் கேளுங்கள்’

அதன் பிறகு இயேசுவும் அவரது நண்பர்களும் வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டார்கள். ‘இதுதான் என்னுடைய அன்பு மகன், எனக்கு பிரியமான மகன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்’ என்று அந்தக் குரல் சொன்னது. (மத்தேயு 17:1-5) அது யாருடைய குரல் என்று நினைக்கிறாய்?— அது கடவுளுடைய குரல்! ஆமாம், இயேசு சொல்வதை கேட்க வேண்டுமென்று கடவுளே அவர்களிடம் சொன்னார்.

இப்போது நம்முடைய விஷயத்திற்கு வரலாம். நாம் கடவுள் சொல்வதையும் பெரிய போதகரான அவரது மகன் சொல்வதையும் கேட்டு நடப்போமா?— அவர்கள் சொல்வதை நாம் எல்லாருமே கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும். இதை எப்படி செய்யலாம் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?—

கடவுளுடைய மகனாகிய இயேசுவைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களைப் படிப்பதன் மூலம் நாம் அவர் சொல்வதைக் கேட்கலாம். பெரிய போதகரான அவர் எவ்வளவோ அருமையான விஷயங்களை நமக்கு சொல்ல விரும்புகிறார். பைபிளில் எழுதப்பட்டிருக்கும் இந்த விஷயங்களைப் படித்தால் கண்டிப்பாக உனக்கு பிடித்துவிடும். கற்றுக்கொள்கிற நல்ல நல்ல விஷயங்களை நண்பர்களிடம் சொன்னால் உனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கும்.

இயேசு சொல்வதைக் கேட்டால் இன்னும் என்னென்ன பயன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள, பைபிளைத் திறந்து இந்த வசனங்களைப் பார்க்கலாமா? யோவான் 3:16; 8:28-30; அப்போஸ்தலர் 4:12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்