இளைஞர்களே உங்கள் ஆன்மீக இலக்குகள் என்ன?
1 அர்த்தமுள்ள வேலை... அடையக்கூடிய இலக்குகள்... இவை இரண்டும் நம் சந்தோஷத்திற்கு மிகமிக முக்கியம் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். (ஆதியாகமம் 1:28 மற்றும் 2:15, 19-ஐ பாருங்கள்.) இன்று, யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற அர்த்தமுள்ள வேலை... பிரசங்கிக்கிற மற்றும் போதிக்கிற வேலையாகும். நாம் அடையக்கூடிய முக்கியமான இலக்கு... பூஞ்சோலை பூமியில் முடிவில்லா வாழ்வாகும். இதற்கிடையே, படிப்படியாக அடையக்கூடிய ஆன்மீக இலக்குகளை நாம் வைக்க வேண்டும்; அப்போதுதான், வேண்டாத காரியங்களில் நம் சக்தியையும் வளங்களையும் வீணடிக்க மாட்டோம்.—1 கொ. 9:26.
2 இளைஞர்கள் எட்டக்கூடிய இலக்குகள்: இளைஞர்கள் தங்கள் திறனுக்கேற்ப ஆன்மீக இலக்குகளை வைத்து, அவற்றை அடைய முயல வேண்டும். (1 தீ. 4:15) சில பிஞ்சுகள், படிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்பே பைபிள் புத்தகங்களின் பெயர்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். குடும்ப வழிபாட்டின் மூலம், பிள்ளைகள் கூட்டங்களுக்குத் தயார் செய்யக் கற்றுக்கொள்கிறார்கள்; இவ்வாறு, அர்த்தமுள்ள பதில்களைச் சொல்வதற்கான இலக்கையும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேருவதற்கான இலக்கையும் அடைகிறார்கள். பிள்ளைகள் பெற்றோரோடு சேர்ந்து ஊழியத்திற்குச் செல்லும்போது சாட்சி கொடுக்கக் கற்றுக்கொள்கிறார்கள்; இப்படியாக, ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாவதற்கான தங்கள் இலக்கை நோக்கி முன்னேறுகிறார்கள். அர்ப்பணம் செய்வதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் இலக்கு வைக்கும்படி பெற்றோர்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.
3 இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற பிள்ளைப் பருவத்திலேயே கடும்முயற்சி எடுங்கள். இயேசு சிறு வயதில், 12-வது வயதில், ஆன்மீக விஷயங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசினார். (லூக். 2:42-49, 52) ஆகையால், தனிப்பட்ட படிப்பில் ஈடுபட, தினமும் பைபிளை வாசிக்க, கூட்டத்திலும் ஊழியத்திலும் தவறாமல் கலந்துகொள்ள, முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களோடு கூட்டுறவுகொள்ள எனப் பயனளிக்கும் ஆன்மீக இலக்குகளை வைக்கும்போது இயேசுவைப் போலவே கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்கு உங்களால் திறம்பட போதிக்க முடியும்.