படிப்புக் கட்டுரை 45
பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களே, சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள்!
“ கண்ணீரோடு விதைக்கிறவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு அறுப்பார்கள்.”—சங். 126:5.
என்ன கற்றுக்கொள்வோம்?
முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் என்றும் எப்படிச் சந்தோஷத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.
1-2. முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? (நீதிமொழிகள் 19:17) (படங்களையும் பாருங்கள்.)
“எனக்குக் கல்யாணம் ஆகி 32 வருஷங்களுக்குமேல் ஆகிறது. என் மனைவி பார்க்கின்சன்ஸ் வியாதியால் கஷ்டப்படுகிறாள். உடலை அசைப்பதே அவளுக்குக் கஷ்டம். கடந்த ஐந்து வருஷமாக நான்தான் அவளைக் கவனித்துக்கொண்டு இருக்கிறேன். என் மனைவியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளைக் கவனித்துக்கொள்வதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். மருத்துவமனையில் பயன்படுத்தும் கட்டிலைத்தான் அவளுக்காக வீட்டில் பயன்படுத்துகிறோம். ராத்திரியில் அதில் அவள் தூங்கும்போது, நானும் பக்கத்திலேயே படுத்துக்கொள்வேன். நாங்கள் தூங்கும்போது ஒருவர் கையை ஒருவர் பிடித்திருப்போம்” என்று கொரியாவில் வாழ்கிற ஜீன்-யல் என்ற சகோதரர் சொல்கிறார்.
2 நீங்கள் நேசிக்கிற ஒருவருக்கு உடம்பு முடியாததால் அவரைக் கவனித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அவர் ஒருவேளை உங்கள் பெற்றோராக, துணையாக, குழந்தையாக அல்லது நண்பராக இருக்கலாம். நீங்கள் அவர்மேல் அன்பு வைத்திருப்பதால் அவரைச் சந்தோஷமாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்களுக்குக் கடவுள்பக்தி இருப்பதைக் காட்டுகிறீர்கள். (1 தீ. 5:4, 8; யாக். 1:27) ஆனாலும், மற்றவர்களுடைய கண்ணில்படாத நிறைய கஷ்டங்கள் உங்களுக்கும் இருக்கலாம். உங்கள் கஷ்டங்களை யாரும் புரிந்துகொள்ளாத மாதிரி உங்களுக்குத் தோன்றலாம். நீங்கள் வெளியே சிரித்துக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் அழுதுகொண்டு இருக்கலாம். (சங். 6:6) இவையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், யெகோவாவுக்குத் தெரியும். (யாத்திராகமம் 3:7-ஐ ஒப்பிடுங்கள்.) நீங்கள் சிந்துகிற கண்ணீரையும் நீங்கள் செய்கிற தியாகங்களையும் அவர் பெரிதாக நினைக்கிறார். (சங். 56:8; 126:5) உங்களுடைய அன்பானவர்களுக்காக நீங்கள் செய்கிற ஒவ்வொன்றையும் அவர் கவனிக்கிறார். அதற்காக அவரே உங்களுக்குக் கடன்பட்டிருப்பதாக நினைக்கிறார்; உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 19:17-ஐ வாசியுங்கள்.
நீங்கள் நேசிக்கும் ஒருவரைக் கவனித்துக்கொண்டிருக்கிறீர்களா? (பாரா 2)
3. தேராகுவைக் கவனித்துக்கொள்வது ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஏன் சவாலாக இருந்திருக்கலாம்?
3 முடியாதவர்களைக் கவனித்துக்கொண்ட நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. ஆபிரகாம், சாராளை எடுத்துக்கொள்ளுங்கள். ஊர் என்ற நகரத்தைவிட்டு கிளம்பும்போது அவர்களுடைய அப்பா தேராகுக்கு கிட்டத்தட்ட 200 வயது. இருந்தாலும், அவர் அவர்களோடு சேர்ந்து கிளம்பி வந்தார். அவர்கள் கிட்டத்தட்ட 960 கிலோமீட்டர் (600 மைல்) பயணம் செய்து ஆரான் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். (ஆதி. 11:31, 32) ஆபிரகாமும் சாராளும் தேராகுவை நேசித்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை; இருந்தாலும், அவரைக் கவனித்துக்கொள்வது, அதுவும் பயணத்தின்போது கவனித்துக்கொள்வது, எவ்வளவு சவாலாக இருந்திருக்கும்! அவர்கள் ஒருவேளை ஒட்டகத்தின் மேல் அல்லது கழுதையின் மேல் பயணம் செய்திருக்கலாம். வயதான தேராகுக்கு அது ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கும். அவரைக் கவனித்துக்கொள்வது ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் சிலசமயம் களைப்பாக இருந்திருக்கும். அது அவர்களுடைய சக்தியையெல்லாம் உறிஞ்சிருக்கும். ஆனாலும், தேராகுவைக் கவனித்துக்கொள்வதற்கான சக்தியை யெகோவா ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் கொடுத்தார். அவர்களுக்குப் பலம் கொடுத்த யெகோவா கண்டிப்பாக உங்களுக்கும் பலம் கொடுப்பார்.—சங். 55:22.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
4 நீங்கள் சந்தோஷமுள்ள நபராக இருந்தால் மற்றவர்களைக் கவனித்துக்கொள்வது உங்களுக்கு ஓரளவு சுலபமாக இருக்கும். (நீதி. 15:13) வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்! (யாக். 1:2, 3) சரி, சந்தோஷமாக இருக்க என்ன செய்யலாம்? ஒரு வழி, யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டும். சந்தோஷமாக இருக்க காரணங்களைக் கண்டுபிடிக்க உதவ சொல்லி தொடர்ந்து அவரிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில், சந்தோஷமாக இருக்க உதவும் வேறுசில வழிகளைப் பற்றிப் பார்ப்போம். அதோடு, அன்பானவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம் என்றும் பார்ப்போம். முதலில், மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் சந்தோஷமாக இருப்பது ஏன் முக்கியம் என்பதைப் பற்றியும், சந்தோஷத்தை அவர்கள் இழக்க எவையெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
சந்தோஷமாக இருப்பது ஏன் கஷ்டமாக இருக்கலாம்
5. மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்கள் சந்தோஷத்தை ஏன் இழந்துவிடக் கூடாது?
5 மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்கள் சந்தோஷத்தை இழந்துவிட்டால், களைத்துப்போய்விட வாய்ப்பிருக்கிறது. (நீதி. 24:10) அவர்கள் அப்படிக் களைத்துப்போய்விட்டால், யாரைக் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்களிடம் முன்புபோல் அன்பு காட்டாமல் அல்லது உதவி செய்யாமல் இருந்துவிடலாம். சரி, அவர்கள் தங்கள் சந்தோஷத்தை இழக்க எவையெல்லாம் காரணமாக இருக்கலாம்?
6. மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிற சிலர் ஏன் களைத்துப்போய்விடலாம்?
6 களைத்துப்போவது. லேயா என்ற சகோதரி சொல்கிறார்: “மற்றவர்களைக் கவனித்துக்கொள்ளும்போது நாம் ரொம்பவே களைத்துப்போய்விடுவோம்; எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் நாளில்கூட அப்படி உணரலாம். ஒவ்வொரு நாள் முடியும்போது, எனக்குத் தெம்பே இருக்காது. சிலசமயத்தில், எனக்கு வந்த மெசேஜ்களுக்குப் பதில் அனுப்பக்கூட தோன்றாது; அந்தளவு களைப்பாக இருக்கும்.” வேறு சிலருக்கு, போதுமான ஓய்வு கிடைப்பதில்லை. மனஅமைதிக்காக எதையாவது செய்ய நினைத்தாலும் அதை அவர்களால் செய்ய முடிவதில்லை. ஐனிஸ் என்ற ஒரு சகோதரி சொல்கிறார்: “எனக்குப் போதுமான அளவு தூக்கம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்து என் மாமியாரைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். நானும் என் கணவரும் ஜாலியாக விடுமுறைக்குப் போய் பல வருஷங்கள் ஆகிவிட்டது.” 24 மணிநேரமும் ஒருவரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறவர்களால் விசேஷங்களுக்கோ மற்ற நிகழ்ச்சிகளுக்கோ போக முடிவதில்லை; அமைப்பிலிருந்து கிடைக்கும் சில நியமிப்புகளைக்கூட செய்ய முடிவதில்லை. இதனால் அவர்கள் ரொம்ப தனிமையாகவும், சூழ்நிலை கைதிகள் போலவும் உணரலாம்.
7. மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிற சிலர் ஏன் குற்ற உணர்விலும் வேதனையிலும் போராடலாம்?
7 குற்ற உணர்வோடும் வேதனையோடும் போராடுவது. ஜெசிகா என்ற சகோதரி சொல்கிறார்: “சில நேரத்தில் என்னால் சில விஷயங்களைச் செய்ய முடியாமல் போகும். ஒருவேளை, நான் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டால் என் மனசு குத்த ஆரம்பித்துவிடும்; சுயநலமாக நடந்துகொண்டேனோ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்.” சிலர், தங்கள் சூழ்நிலையை நினைத்தும் நொந்துபோகிறார்கள். வேறு சிலர், தங்கள் அன்பானவர்களுக்குப் போதுமான அளவு உதவவில்லை என்று நினைத்துக் கவலைப்படுகிறார்கள். இன்னும் சிலர், விரக்தியில் எதையாவது பேசி அன்பானவருடைய மனதைக் காயப்படுத்தியதால், குற்ற உணர்ச்சியில் தவிக்கலாம். (யாக். 3:2) ஒருகாலத்தில் ஓடியாடி சுறுசுறுப்பாக இருந்தவர் இப்போது உடம்பு முடியாமல் இருப்பதை நினைத்தும் சிலர் கவலைப்படுகிறார்கள். பார்பரா என்ற சகோதரி சொல்கிறார்: “என் அன்பான தோழியின் நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகிக்கொண்டே போவதைப் பார்க்கும்போது என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.”
8. மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நன்றி சொல்லும்போது அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு அனுபவத்தைச் சொல்லுங்கள்.
8 நன்றியோ பாராட்டோ கிடைக்காதபோது. பெரும்பாலான சமயங்களில், கவனித்துக்கொள்கிறவர்களின் கடின உழைப்புக்கும் அவர்கள் செய்கிற தியாகங்களுக்கும் பாராட்டு கிடைப்பதில்லை. அவர்களைப் பாராட்டுவதற்காகச் சொல்லப்படும் சில வார்த்தைகள்கூட அவர்களை உச்சிகுளிர வைக்கும். (1 தெ. 5:18) மெலிசா என்ற சகோதரி சொல்கிறார்: “சிலசமயத்தில் எனக்கு ரொம்ப வெறுப்பாக இருக்கும்; கண்ணில் கண்ணீர் வடியும். ஆனால், ‘நீ எனக்காக செய்கிற எல்லாவற்றுக்கும் ரொம்ப நன்றி’ என்று நான் கவனித்துக்கொள்கிறவர்கள் என்னிடம் சொன்னால், அது என்னைத் தூக்கி நிறுத்துவதுபோல் இருக்கும்! அந்த வார்த்தைகள், அடுத்த நாள் சுறுசுறுப்பாக எழுந்து, அவர்களை ஆசையாகக் கவனித்துக்கொள்ள என்னைத் தூண்டும்.” பாராட்டு கிடைக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அமாது என்ற சகோதரர் சொல்கிறார். அவரும் அவருடைய மனைவியும் ஒரு சின்னப் பிள்ளையைக் கவனித்துவருகிறார்கள். அவள், அவருடைய மனைவியின் கூடப்பிறந்தவருடைய மகள். அவள் வலிப்பு நோயால் அவதிப்படுகிறாள். சகோதரர் அமாது சொல்கிறார்: “அவளுக்காக நாங்கள் எவ்வளவு தியாகம் செய்கிறோம் என்பதை அவளால் முழுசாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவள் எங்களுக்கு நன்றி சொல்லும்போது எங்கள் மனதில் சந்தோஷம் பொங்கி வரும். அவளுக்குத் தெரிந்த விதத்தில், ‘ஐ லவ் யூ’ என்று எழுதிக்கொடுப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.”
எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம்
9. மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் எப்படி அடக்கத்தோடு நடந்துகொள்ளலாம்?
9 அடக்கத்தோடு உங்கள் வரம்புகளைப் புரிந்துகொள்ளுங்கள். (நீதி. 11:2) பொதுவாகவே, நினைத்ததை எல்லாம் செய்ய நமக்கு நேரமும் சக்தியும் இருக்காது. அதனால், உங்களால் எதைச் செய்ய முடியும், செய்ய முடியாது என்பதை முன்பே முடிவு செய்யுங்கள். சில விஷயங்களுக்கு முடியாது என்று சொல்ல பழகுங்கள்; அதில் தவறில்லை. அப்படிச் செய்யும்போது நீங்கள் அடக்கமான நபராக இருப்பீர்கள். ஒருவேளை, மற்றவர்கள் உங்களுக்கு உதவ முன்வந்தால் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஜே என்ற சகோதரர் சொல்கிறார்: “ஒரு நேரத்தில் நம்மால் குறிப்பிட்ட வேலைகளை மட்டும்தான் செய்ய முடியும். நம் வரம்புகளைப் புரிந்துகொண்டு, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொள்ளாமல் இருந்தால் நம்முடைய சந்தோஷத்தை இழக்காமல் இருப்போம்.”
10. முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், புரிந்து நடந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம்? (நீதிமொழிகள் 19:11)
10 புரிந்து நடந்துகொள்ளுங்கள். (நீதிமொழிகள் 19:11-ஐ வாசியுங்கள்.) புரிந்து நடந்துகொள்கிற ஒருவர், கோபம் வரும் சூழ்நிலைகளில்கூட நிதானமாக இருப்பார். யாராவது வித்தியாசமாக நடந்துகொண்டால், அந்த நபர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார். தீராத வியாதியால், சிலர் கன்னாபின்னா-என்று பேசிவிடலாம் அல்லது நடந்துவிடலாம். (பிர. 7:7) உதாரணத்துக்கு, ஒரு நபர் பொதுவாக அன்பானவராகவும், யோசித்து நடந்துகொள்கிறவராகவும் இருப்பார். ஆனால் வியாதியின் காரணமாக, தொட்டதுக்கெல்லாம் வாக்குவாதம் செய்கிறவராக, சண்டை போடுகிறவராக மாறியிருக்கலாம். அல்லது, எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக்கொண்டு... மற்றவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டு... என்ன செய்தாலும் திருப்தியே ஆகாமல்... இருக்கலாம். தீராத வியாதியோடு இருப்பவரை நீங்கள் கவனித்துக்கொண்டு இருந்தால், முதலில் அவருடைய வியாதியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அப்படித் தெரிந்துகொண்டால், அந்த வியாதியால்தான் அப்படி நடந்துகொள்கிறார், உண்மையிலேயே அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.—நீதி. 14:29.
11. மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் என்ன முக்கியமான விஷயத்துக்காகத் தினமும் நேரத்தை ஒதுக்க வேண்டும்? (சங்கீதம் 132:3-5)
11 யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்த நேரம் ஒதுக்குங்கள். சிலசமயத்தில், ‘மிக முக்கியமான காரியங்களை’ செய்ய மற்ற விஷயங்களிலிருந்து நாம் நேரத்தை வாங்க வேண்டியிருக்கும். (பிலி. 1:10) அப்படிப்பட்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றுதான், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்துவது. தாவீது ராஜாகூட யெகோவாவுடைய வணக்கத்துக்குத்தான் முதலிடம் கொடுத்தார். (சங்கீதம் 132:3-5-ஐ வாசியுங்கள்.) நீங்களும் ஒவ்வொரு நாளும் பைபிளைப் படிப்பதற்கும் ஜெபம் செய்வதற்கும் நேரம் ஒதுக்குங்கள். இது ரொம்ப முக்கியம். அலீஷா என்ற சகோதரி சொல்கிறார்: “ஜெபம் பண்ணுவதாலும், சங்கீதங்களைப் படித்து அதிலிருக்கும் ஆறுதலான வார்த்தைகளை ஆழமாக யோசிப்பதாலும் என்னால் சந்தோஷத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. ஜெபம்தான் என்னுடைய உயிர்நாடி! ‘நிதானமாக இருக்க உதவுங்கள்’ என்று ஒவ்வொரு நாளும் நிறைய தடவை நான் யெகோவாவிடம் கேட்பேன்.”
12. மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்துக்காகவும் நேரம் செலவு செய்வது ஏன் ரொம்ப முக்கியம்?
12 உங்கள் ஆரோக்கியத்துக்காக நேரம் ஒதுக்குங்கள். பிஸியாக இருக்கும் ஆட்களுக்கு, அதுவும் மற்றவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு, தொடர்ந்து ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், கடைக்குப் போய் சத்தான பொருள்களை வாங்கி, சமைத்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் உங்களுடைய மனநலத்துக்கும் உடல்நலத்துக்கும் ரொம்ப முக்கியம். அதனால், கொஞ்ச நேரம் மட்டுமே உங்களுக்கு இருந்தால்கூட ஆரோக்கியமான சாப்பாட்டைச் சாப்பிடுங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். (எபே. 5:15, 16) போதுமான அளவு தூங்குங்கள். (பிர. 4:6) நன்றாகத் தூங்கினால் மூளையில் இருக்கிற நச்சுப்பொருள்கள் நீங்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. பேனர் ஹெல்த் என்ற மருத்துவ நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரை இப்படிச் சொல்கிறது: “போதுமான அளவு தூக்கம் கிடைத்தால், மனதில் இருக்கும் பதட்டம் குறையும். கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்கவும் முடியும்.” பொழுதுபோக்குக்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள். (பிர. 8:15) ஒருவரைக் கவனித்துக்கொள்ளும் ஒரு சகோதரி தனக்கு எது சந்தோஷத்தைத் தருகிறது என்று சொல்கிறார்: “சீதோஷ்ணநிலை நன்றாக இருந்தால், வெளியே போய் இளம் வெயிலை அனுபவித்துவிட்டு வருவேன். மாதத்தில் ஒரு தடவையாவது என் தோழி ஒருவரோடு சேர்ந்து ஜாலியாக நேரம் செலவு செய்ய திட்டம்போடுவேன்.”
13. வாய்விட்டுச் சிரிப்பது ஏன் நல்லது? (நீதிமொழிகள் 17:22)
13 நகைச்சுவை உணர்வோடு இருங்கள். (நீதிமொழிகள் 17:22-ஐ வாசியுங்கள்; பிர. 3:1, 4) வாய்விட்டுச் சிரிப்பது நம் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது. மற்றவர்களைக் கவனித்துக்கொள்ளும்போது, பொதுவாக நாம் நினைத்த மாதிரி விஷயங்கள் நடக்காமல் போகலாம். அப்போது நமக்கு எரிச்சல் வரலாம். இதுபோன்ற சமயங்களில், நகைச்சுவை உணர்வோடு இருந்தால் சூழ்நிலையை நல்லபடியாகச் சமாளிக்க முடியும். நீங்கள் கவனித்துக்கொள்ளும் நபரோடு சேர்ந்து சந்தோஷமாகச் சிரித்து நேரம் செலவு செய்தால், உங்கள் இருவர் இடையில் இருக்கும் பந்தம் பலமாகும்.
14. நம்பகமான நண்பரிடம் பேசுவது உங்களுக்கு எப்படி உதவும்?
14 நம்பகமான நண்பரிடம் பேசுங்கள். சந்தோஷமாக இருக்க என்னதான் முயற்சி எடுத்தாலும், சிலசமயம் நீங்கள் உடைந்துபோக வாய்ப்பிருக்கிறது. அந்த மாதிரி சமயங்களில், உங்கள் மனதில் ஓடுவதை ஒரு நல்ல நண்பரிடம் சொல்லுங்கள். ஆனால் அந்த நண்பர், நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களைக் குற்றப்படுத்தாதவராக அல்லது உணர்ச்சிவசப்படாதவராக இருப்பது நல்லது. (நீதி. 17:17) உங்கள் நண்பர் காதுகொடுத்து கேட்கும்போது... ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லும்போது... உங்களுக்குள் சந்தோஷம் மலரும்.—நீதி. 12:25.
15. எதிர்கால நம்பிக்கையைப் பற்றி யோசிப்பது எப்படிச் சந்தோஷத்தைத் தரும்?
15 நீங்கள் கவனித்துக்கொள்கிறவரோடு சேர்ந்து புதிய உலகத்தில் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிற வேலை தற்காலிகமானதுதான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (2 கொ. 4:16-18) ஆரம்பத்தில், யெகோவா மனிதர்களைப் படைத்தபோது, இப்படி ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கத்தில் இல்லை. ‘உண்மையான வாழ்க்கை’ இனிமேல்தான் நமக்கு வரப்போகிறது. (1 தீ. 6:19) அதனால், நீங்களும் நீங்கள் கவனித்துக்கொள்கிறவரும் புதிய உலகத்தில் என்னவெல்லாம் செய்வீர்கள் என்பதைப் பற்றிப் பேசுங்கள். (ஏசா. 33:24; 65:21) ஹெதர் என்ற சகோதரி அதைத்தான் செய்கிறார். “‘சீக்கிரத்திலேயே நாம் ஒன்றாகச் சேர்ந்து துணி தைக்கப் போகிறோம், ஓடியாட போகிறோம், சைக்கிள் ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் நான் கவனித்துக்கொள்கிறவர்களிடம் சொல்வேன். ‘உயிர்த்தெழுந்து வருகிற நண்பர்களுக்காக நாம் பிரெட் செய்வோம், ஒன்றாகச் சேர்ந்து சமைப்போம்’ என்றுகூட சொல்வேன். யெகோவா தந்த இந்த நம்பிக்கைக்காக நாங்கள் அவருக்கு நன்றி சொல்கிறோம்” என்று சொல்கிறார்.
மற்றவர்கள் எப்படி உதவலாம்
16. முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு சபையில் இருக்கிறவர்கள் எப்படி உதவலாம்? (படத்தையும் பாருங்கள்.)
16 அவர்களுக்கென்று கொஞ்சம் நேரம் கிடைக்க உதவுங்கள். முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குச் சபையில் இருக்கிற நாம் உதவலாம். இப்படிச் செய்யும்போது, அவர்களாலும் கொஞ்சம் ஓய்வெடுக்க முடியும். அவர்களுடைய சொந்த வேலைகளையும் செய்துகொள்ள முடியும். (கலா. 6:2) இப்படி வாராவாரம் உதவுவதற்காக சில பிரஸ்தாபிகள் அட்டவணை போட்டிருக்கிறார்கள். நட்டாலியா என்ற சகோதரி, தன்னுடைய கணவரைக் கவனித்துக்கொண்டு வருகிறார். பக்கவாதம் வந்ததால், அவரால் நடக்க முடியாது. நட்டாலியா சொல்கிறார்: “எங்கள் சபையில் இருக்கிற ஒரு சகோதரர், வாரத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை வந்து, என் கணவரோடு நேரம் செலவு செய்வார். அவர்கள் இரண்டு பேரும் ஊழியம் செய்வார்கள், நிறைய பேசுவார்கள், படம்கூட பார்ப்பார்கள். அந்தத் தருணங்கள் என் கணவருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். எனக்கும் கொஞ்சம் ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். கொஞ்ச தூரம் காத்தாட நடப்பேன், எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வேன்.” சிலசமயங்களில், உடம்பு முடியாதவரை நீங்கள் ஒரு ராத்திரி கவனித்துக்கொண்டால், அவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு அந்த ராத்திரி நல்ல தூக்கம் கிடைக்கும்.
முடியாதவரைக் கவனித்துக்கொண்டிருக்கும் ஒருவர் உங்கள் சபையில் இருந்தால், நீங்கள் எப்படி அவருக்கு உதவலாம்? (பாரா 16)a
17. உடம்பு முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குக் கூட்டங்களில் நாம் எப்படி உதவலாம்?
17 கூட்டங்களில் அவர்களுக்கு உதவுங்கள். உடம்பு முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களால் கூட்டங்களில், வட்டார மாநாடுகளில், மண்டல மாநாடுகளில் நிகழ்ச்சியைச் சரியாகக் கவனிக்க முடியாமல் போகலாம். அதனால் சபையில் இருக்கிறவர்கள், கொஞ்ச நேரத்துக்கோ முழு கூட்டத்துக்கோ, உடம்பு முடியாதவரோடு உட்கார்ந்துகொண்டால் அவரைக் கவனித்துக்கொள்கிறவரால் கூட்டத்திலிருந்து நன்மையடைய முடியும். ஒருவேளை, உடம்பு முடியாதவர்கள் வீட்டைவிட்டே வர முடியாத சூழ்நிலையில் இருந்தால், நாம் அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்களோடு சேர்ந்து வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாகக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். அப்படிச் செய்தால், கவனித்துக்கொள்கிறவரால் கூட்டத்துக்கு நேரில் போக முடியும்.
18. உடம்பு முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்காக நாம் வேறென்ன செய்யலாம்?
18 பாராட்டுங்கள், ஜெபம் செய்யுங்கள். முடியாதவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களை உற்சாகப்படுத்த மூப்பர்கள் நேரம் ஒதுக்குவது ரொம்ப முக்கியம். (நீதி. 27:23) சபையில் இருக்கிற நாம் எல்லாருமே அவர்களைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும்; அதைத் தவறாமல் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, யெகோவா அவர்களுக்குத் தொடர்ந்து பலம் தரவும், அவர்கள் சந்தோஷத்தை இழக்காமல் இருக்க உதவவும் நாம் ஜெபம் செய்யலாம்.—2 கொ. 1:11.
19. நாம் எதற்காக ஆசையாகக் காத்திருக்கிறோம்?
19 நாம் வேதனையில் சிந்தும் கண்ணீரை யெகோவா சீக்கிரத்தில் துடைக்கப் போகிறார். அப்போது, வியாதியோ மரணமோ இருக்கவே இருக்காது. (வெளி. 21:3, 4) “நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள்.” (ஏசா. 35:5, 6) வயதானதால் வருகிற கஷ்டங்களும் உடம்பு முடியாதவர்களைக் கவனித்துக்கொள்வதால் வருகிற சவால்களும் ‘முன்பு பட்ட கஷ்டங்களாக’ இருக்கும். அது ‘யாருடைய மனதுக்கும் [ஞாபகமே] வராது.’ (ஏசா. 65:17) இந்த வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கும் இந்தச் சமயத்தில்கூட, யெகோவா நம்மைக் கைவிடவே மாட்டார். பலத்துக்காக நாம் தொடர்ந்து அவரையே நம்பியிருந்தால் ‘பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்கு’ அவர் உதவி செய்வார்.—கொலோ. 1:11.
பாட்டு 155 எங்கள் சந்தோஷம் நீரே
a பட விளக்கம்: இரண்டு இளம் சகோதரிகள், வயதான ஒரு சகோதரியைப் பார்த்துக்கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். அதனால், அந்த வயதான சகோதரியைக் கவனித்துக்கொள்பவரால் கொஞ்ச நேரம் வெளியே போக முடிகிறது.